அறிமுகம் தனியாள் வணிகத்திலுள்ள குறைகளை நீக்க ஏற்பட்டது தான் கூட்டு வணிக அமைப்பு. தனியாள் வணிகத்தில் முதல் மற்றும் மேலாண்மைத் திறன் ஆகியவை ஒரு வரம்புக்குட்பட்டது. தனி ஒரு நபரால் வியாபார நடவடிக்கைகள் அனைத்தையும் நேரடியாக கண்காணிக்க இயலாது. மேலும் வியாபார இடர்கள் அனைத்தையும் தனி நபரே ஏற்க வேண்டி உள்ளது. இச்சூழலில் மற்றவர்கள் துணையின் தேவை உணரப்பட்டது. எனவே அதிக நபர்கள் வியாபாரத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். இவ்வாறு அதிக நபர்களை இணைத்துக் கொண்டு நடத்தப்பட்ட வியாபாரம் கூட்டாண்மை எனப்படுகிறது. கூட்டாண்மை அமைப்பு இரு வழிகளில் ஏற்பட வாய்ப்புண்டு. முதலில், ஏற்கனவே ஒரு வியாபாரத்தை நடத்தி வரும் ஒரு தனி நபர் தனது வணிக அமைப்பை விரிவுபடுத்த மேலும் ஒரு சிலரை இணைத்து கூட்டாண்மை அமைப்பை உருவாக்கலாம். அடுத்து, இரண்டோ, அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நபர்களோ ஒரு ஒப்பந்தத்தின் முலம் இணைந்து 'கூட்டாண்மை அமைப்பை ஏற்படுத்தலாம். இங்கிலாந்தில் 1907-ஆம் ஆண்டு கூட்டாண்மை சட்டம் இயற்றப்பட்டு, கூட்டாண்மை அமைப்பு துவங்கப்பட்டது என்பதை சரித்திரம் வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் 1932-ம் ஆண்டு கூட்டாண்மைச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் இந்தியாவில் கூட்டாண்மை நிறுவனங்களின் தோற்றுவிப்பு, மேலாண்மை, கலைப்பு முதலியனவற்றை நெறிப்படுத்துகிறது. தற்காலத்தில் பல கூட்டாண்மை நிறுவனங்கள் இருப்பதை நாம் காணலாம். (எ.கா.) கூட்டாக சினிமா அரங்கு அமைத்தல், புத்தக கடை, நிதி நிறுவனங்கள் முதலியன. கூட்டாண்மையின் வரைவிலக்கணம் 1932-ஆம் ஆண்டு, இந்திய கூட்டாண்மைச் சட்டத்தின் 4-வது பிரிவின்படி, கூட்டு வணிகம் என்பது, "எல்லோரும் சேர்ந்தோ, அல்லது எல்லோருக்குமாக ஒருவரோ, நடத்தும் தொழிலின் இலாபத்தைப் பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொண்டவர்களிடையே நிலவும் உறவு” என்று கூறுகிறது. பேராசிரியர் எல் எச்.ஹேனேயின் கூற்றுப்படி, “தனிப்பட்ட இலாபங்களுக்காக, ஒரு வியாபாரத்தை நடத்த ஒப்புக்கொண்ட நபர்களுக்கிடையே நிலவும் உறவே கூட்டாண்மையாகும்” என்று இலக்கணம் வகுத்துள்ளார். முனைவர் வில்லியம்ஸ் ஸ்பிரிகில்ஸ் அவர்கள் “கூட்டாண்மையில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நபர்கள் அனைவரும் கூட்டாண்மை பொறுப்புகளுக்கு கடமைப்பட்டவர்கள். ஒவ்வொரு கூட்டாளியின் நடவடிக்கையும் மற்ற கூட்டாளிகளை கட்டுப்படுத்தும். மேலும் கூட்டாண்மையின் கடன்களை தீர்க்க கூட்டாளிகளின் சொத்துக்கள் எடுத்துக்கொள்ளப்படும்” என்கிறார். கிம்பால் மற்றும் கிம்பால் அவர்கள், “மனிதர்கள் குழுக்களாக இணைந்து முதல் அல்லது பணியினை இட்டு ஏதேனும் தொழில் மேற்கொண்டால் அது கூட்டாண்மை நிறுவனம் எனப்படும்” என்று கூறுகிறார்கள். “பொதுவாக எந்த தொழில் அமைப்புகளில் சட்டத்துக்குட்பட்ட தொழில் செய்து, இலாபத்தை ஒப்புக்கொண்டபடி பகிர்ந்து கொண்டு, எல்லோரும் சேர்ந்தோ அல்லது எல்லோருக்குமாக ஒருவரோ வியாபார அமைப்பை நிர்வகித்து நடத்திச் செல்வதே கூட்டாண்மை” என கூட்டாண்மைக்கு வரைவிலக்கணம் தரலாம். கூட்டாளி, நிறுவனம் மற்றும் நிறுவனப் பெயர் ஒரு கூட்டாண்மை அமைப்பில் ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினரும், 'கூட்டாளி' என்று அழைக்கப்படுகின்றனர். கூட்டாண்மையில் உள்ள அனைவரையும் ஒட்டுமொத்தமாக 'நிறுவனம்' என்றழைக்கின்றோம். எந்தப் பெயரில் தொழில் நடத்தப்படுகிறதோ அதுவே நிறுவனப் பெயர் ஆகும். கூட்டாண்மையின் சிறப்புக்கூறுகள் கூட்டாண்மையின் சிறப்புக்கூறுகள் பின்வருமாறு. உடன்பாடு கூட்டாளிகளிடையே ஏற்படும் உடன்பாட்டின் காரணமாக கூட்டாண்மை ஏற்படுத்தப்படுகிறது. உடன்பாடு எழுத்து வடிவிலோ அல்லது பேச்சுவடிவிலோ இருக்கலாம். எழுத்து வடிவத்தில் உள்ள உடன்பாடு, பிற்காலத்தில் கூட்டாளிகளுக்கிடையே எழும் கருத்து வேறுபாடுகளை தவிர்க்க உதவும். பல நபர்கள் கூட்டாண்மை என்பது இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நபர்களிடையே நிகழும் உறவுமுறையாகும். எனவே கூட்டாண்மையில் ஒன்றிற்கு மேற்பட்ட நபர்கள் இருக்க வேண்டும். கூட்டாண்மையின் குறைந்தபட்ச நபர்களின் எண்ணிக்கை இரண்டு. கூட்டாண்மையின் அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை, வங்கித் தொழிலாயின் பத்தும், பிற தொழிலாயின் இருபதும் ஆகும். ஒப்பந்த உறவு கூட்டாளிகளிடையே ஏற்படும் ஒப்பந்தத்தின் காரணமாகவே கூட்டாண்மை ஏற்படுத்தப்படுகிறது. இயற்கை உறவு, பரஸ்பர அன்பு மற்றும் பிரியம் காரணமாக கூட்டாண்மை உருவாகுவதில்லை. இந்திய கூட்டாண்மை சட்டத்தின்படி, கூட்டு வணிகம் ஒப்பந்தத்தால் ஏற்படுகிறது. இது சமூக நிலைமையிலிருந்து பிறப்பதல்ல. உடன்பாடு கொள்ள சட்டப்படி தகுதி உடையவர்கள் மட்டுமே கூட்டாளிகளாக இருக்க முடியும். பித்தர், நொடிப்பு நிலையம் போன்றோர் கூட்டாளியாக முடியாது. சட்டத்திற்குட்பட்ட தொழில் கூட்டாண்மை என்பது ஒரு தொழில் நடத்ததுவதற்கென அமைக்கப்பட்டதாகும். தொழில் என்பது எந்த ஒரு வியாபாரத்தையும், பணியையும், அலுவலையும் குறிக்கும். எடுத்துக்காட்டாக, ஜெனரல் ஸ்டோர்ஸ், தணிக்கையாளர்களின் கூட்டாண்மை, வழக்குரைஞர்களின் கூட்டாண்மை முதலியன. எத் தொழிலானாலும், அத்தொழில் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும். கள்ளக் கடத்தல் செய்ய உருவாகும் கூட்டாண்மை சட்டத்திற்கு புறம்பானதாகும். அத்தொழிலில் ஈடுபடும் கூட்டாளிகளின் உறவு கூட்டாண்மையாக ஏற்றுக்கொள்ள முடியாது. இலாபப்பங்கு கூட்டாண்மை வணிகத்தின் இலாபம் அல்லது நட்டத்தை உடன்பாட்டில் உள்ள விகிதாசாரப்படி கூட்டாளிகள் பிரித்துக் கொள்கிறார்கள். பொதுவாக கூட்டாளிகள் தாங்கள் செலுத்திய முதலின் அடிப்படையில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் ஒரு சில உடன்பாட்டில் ஒரு குறிப்பிட்ட கூட்டாளி நட்டத்தை ஏற்க வேண்டியதில்லை என்று கூட்டாளிகள் உடன்பட்டுக் கொள்ளலாம். ஆனால் எந்த விகிதமும் உடன்பாட்டில் இல்லையென்றால் இலாப நட்டத்தை சமமாக பங்கிட்டுக்கொள்கிறார்கள். முகமை உறவு கூட்டாண்மையின் கூட்டாளிகளுக்கிடையே முகவர் மற்றும் முதல்வர் என்ற உறவு உள்ளது. ஒவ்வொரு கூட்டாளியும் உரிமையாளராகவும், அதே சமயத்தில் முகவராகவும் செயல்படுகிறார்கள். அனைத்துக் கூட்டாளிகளும் இணைந்தோ அல்லது அனைத்துக் கூட்டாளிகளுக்கும் பதிலாக யாராவது ஒருவரோ, தொழிலை நடத்தலாம். எனவே கூட்டாண்மையை, முகமைக் கோட்பாட்டின் விரிவாக்கம் என்று வர்ணிக்கப்படுகிறது. வரையறாப் பொறுப்பு கூட்டாண்மையில் ஒவ்வொரு கூட்டாளியும் தொழிலின் கடன்களுக்கு வரையறாப் பொறுப்புடையவராகிறார். கூட்டாண்மையின் கடன்கள் முழுவதையும் திருப்பிச் செலுத்த கூட்டாண்மையின் சொத்துக்கள் போதுமானவையாக இல்லாவிட்டால், கூட்டாளிகள் தங்கள் சொந்த சொத்துக்களிலிருந்து கூட்டாண்மையின் கடன்களை அடைக்க வேண்டும். எனவே கூட்டாளியின் தொழில் கடனுக்கான பொறுப்பு அவர் கூட்டாண்மையில் இட்ட முதல் தொகை அளவிற்கு மட்டுமே வரையறுக்கப்படுவதில்லை. எனவே கூட்டாளிகளின் பொறுப்பு கூட்டு மற்றும் தனிப் பொறுப்பு ஆகும். கூட்டு மற்றும் தனிப் பொறுப்பு கூட்டாண்மையில், கூட்டாளிகளின் பொறுப்பு கூட்டு மற்றும் தனிப் பொறுப்பு ஆகும். அதாவது கடனீந்தோர் தங்களுக்கு சேரவேண்டிய மொத்த கடன் தொகையையும் அனைத்துக் கூட்டாளிகளின் தனிச் சொத்துக்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். இது கூட்டாளிகளின் கூட்டுப்பொறுப்பாகும். (அல்லது) கடனீந்தோர் தங்களுக்குச் சேரவேண்டிய கடன் தொகையை ஏதேனும் ஒரு கூட்டாளியின் தனிச்சொத்துக்கள் மீது வழக்குத் தொடுத்து பெற்றுக் கொள்ளலாம். இது கூட்டாளியின் தனிப் பொறுப்பாகும். தனியாள் தன்மையின்மை கூட்டாண்மை நிறுவனம் மற்றும் கூட்டாளிகள் இரண்டும் ஒன்றே. கூட்டாண்மையில் உள்ள கூட்டாளிகளை ஒட்டுமொத்தமாக நிறுவனம் என்றழைக்கின்றோம். கூட்டாளிகள் இல்லாமல் கூட்டாண்மையில்லை. கூட்டாளிகளின் உரிமையும் கடமையுமே நிறுவனத்தின் உரிமையும் கடமையும் ஆகும். மேலாண்மையும், கட்டுப்பாடும் கூட்டாளிகளிடம் உள்ளது. அவர்களே உரிமையாளரும் கூட. உட்கிடை ஆணையுரிமை. கூட்டாண்மையில், ஒவ்வொரு கூட்டாளியும் கூட்டாண்மை நிறுவனத்தின் முகவர்களாக கருதப்படுகிறார்கள். வியாபார நடவடிக்கைகளில் ஒரு கூட்டாளி நல்லெணத்துடனும் நிறுவனத்திற்காகவும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கூட்டாண்மையையும் மற்ற கூட்டாளிகளையும் கட்டுப்படுத்தும் உட்கிடை ஆணையுரிமை பெற்றிருக்கிறார். பூரண நல்லெண்ணம் கூட்டாளிகளிடையே நிலவும் நல்லெண்ணம், மற்றும் பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் கூட்டாண்மை ஏற்படுகிறது. எனவே ஒவ்வொரு கூட்டாளியும் மிகுந்த நேர்மையாகவும், பிற கூட்டாளிகளிடம் உண்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். உண்மையான கணக்கு மற்றும் தொழில் நடவடிக்கைகளின் விவரமனைத்தையும் கூட்டாளிகள் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும். எந்தக் கூட்டாளியும் இரகசியமாக இலாபம் ஈட்டக்கூடாது. கூட்டாளிகளிடையே தோன்றும் சந்தேகம் மற்றும் அவநம்பிக்கை முதலியன கூட்டாண்மையின் தோல்விக்கு வழிவகுக்கும். பங்கு மூலதன உரிமையை மாற்ற இயலாமை எக்கூட்டாளியும் பிற கூட்டாளிகள் அனைவரின் வெளிப்படையான ஒப்புதல் பெறாமல் தொழிலில் தனக்குள்ள உரிமையைப் பிறருக்கு மாற்றித் தரவோ, விற்கவோ முடியாது. ஏனெனில் ஒரு கூட்டாளி, தானே முகவராகவும் இருந்து கொண்டு, தன்னுடைய உரிமைகளை தன்னிச்சையாக மற்றவர்களுக்கு மாற்றித்தர இயலாது. பதிவு கூட்டாண்மைப் பதிவு இந்தியாவில் கட்டாயமில்லை. அது கூட்டாளிகளின் விருப்பத்திற்க்குட்பட்டது. அவர்கள் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம். கூட்டாண்மையை உருவாக்க இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நபர்களுக்கிடையே ஏற்படும் ஒப்பந்தமே போதுமானது. ஆனால் கூட்டாண்மைப் பதிவினால் சில நன்மைகள் ஏற்படுவதால் பதிவு செய்து கொள்வது சிறந்தது. தனியார் அமைப்பு - கூட்டாண்மை அமைப்பு – ஒப்பிடல் தனியாள் அமைப்பிற்கும் கூட்டாண்மை அமைப்பிற்கும் இடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை இங்கு காண்போம் ஒற்றுமைகள் அமைப்பு எளிமை - இரு தொழில்களையும் சட்டச் சிக்கல் ஏதுமின்றி எளிதில் அமைத்து விடலாம். நெகிழ்வுத் தன்மை - தேவைப்படின் தொழில்களை மாற்றிக் கொள்ள இரண்டு அமைப்புகளிலும் வாய்ப்புள்ளது. நீடித்த வாழ்வு இன்மை - கூட்டுப்பங்கு நிறுமத்தைப்போன்று, இவ்விரு அமைப்புகளுக்கும் நீடித்த வாழ்வு கிடையாது வரையறா பொறுப்பு - இரு அமைப்புகளிலும் உரிமையாளர்களின் பொறுப்பு வரையறுக்கப்படாதது தொழில் அளவு - இரண்டிலும் பேரளவு தொழில் இல்லை . அரசுக் கட்டுப்பாடு - இரண்டிலும் அரசுக்கட்டுப்பாடு இல்லை தணிக்கை - இரண்டிலும் கட்டாய தணிக்கையில்லை தனிக்கவனம் - உரிமையாளர்கள் தனிக்கவனம் செலுத்த இயலும் வாடிக்கையாளரிடம் நேரடித் தொடர்பு - இரண்டு அமைப்பிலும் வாடிக்கையாளருடன் நேரடித் தொடர்பு கிடைக்கிறது ஊழியர்களிடம் நெருங்கிய உறவு - இரு அமைப்புகளிலும் பணியாளர்களிடம் நெருங்கிய உறவு உள்ளது. உரிமையும், கட்டுப்பாடும் - இரண்டிலும் உரிமையும் கட்டுப்பாடும் சேர்ந்தே உள்ளது பதிவு - இரண்டு அமைப்பும் பதிவு செய்யப்பட வேண்டிய கட்டாயமில்லை கூட்டாண்மை அமைப்பின் நன்மைகள் கூட்டாண்மை அமைப்பின் நன்மைகளைக் காண்போம். அமைத்தல் எளிது கூட்டாண்மையை அமைப்பது எளிது. கூட்டுப்பங்கு நிறுமத்தில் சட்ட முறைப்படி பல ஆவணங்கள் தயார் செய்வதுபோல் கூட்டாண்மையில் இல்லை. கூட்டாண்மையைத் துவங்க கூட்டாளிகளிடையே ஒரு உடன்பாடே போதுமானது. பதிவு கட்டாயமில்லை கூட்டாண்மையை பதிவு செய்ய வேண்டிய கட்டாயமில்லை. அது கூட்டாளிகளின் விருப்பத்திற்க்குட்ப்பட்டது. அதிக நிதி ஆதாரங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் முதல் வழங்குவதால் தனிநபர் வணிகத்தைவிட அதிக முதல் திரட்ட வாய்ப்பு உள்ளது. மேலும் கூட்டாளிகளின் பொறுப்பு, கூட்டு மற்றும் தனித்தனி வரையறாப் பொறுப்பு. எனவே, கடன் பெறும் திறனும் அதிகமாவதால், அதிக முதல் திரட்டலாம். இதனால் வியாபாரத்தை பல மடங்கு விரிவு படுத்தலாம். கூடுதல் மேலாண்மை திறன் கூட்டாளிகளின் திறமைக்கேற்ப பணிகள் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எனவே பல்வேறு பணித்துறைகளையும் கூட்டாளிகள் மேற்பார்வையிட்டு கட்டுப்படுத்த முடியும். கூட்டாளிகளின் திறமை, மற்றும் தொழில் சார்ந்த அனுபவம் முதலியன வியாபார வளர்ச்சியை அதிகரித்து அதிக இலாபம் ஈட்ட வழி வகுக்கிறது. அதிக நிதி தர மதிப்பீடு (Higher Credit Rating) தனியாள் வணிகத்தைவிட கூட்டாண்மையில் கூட்டாளிகளின் வரையறாப்பொறுப்பினால் அதிக கடன் பெற வாய்ப்பு உள்ளது. மேலும் கூட்டாளிகள் நிதி நிறுவனங்களுக்கு அதிக பிணையங்களை அளித்து அதிக கடன் பெற வாய்ப்புள்ளது. விரைவான சிறந்த தொழில் முடிவுகள். கூட்டாண்மையில் பல கூட்டாளிகள் இருப்பதால் தொழில் பிரச்சனைகளை கலந்து ஆலோசித்து நல்ல முடிவுகளை எடுக்கமுடியும். எனவே ஒரு தீர்மானம் எடுக்கும் முன் எல்லாக் கூட்டாளிகளும் அப்பிரச்சனை பற்றி ஆராய்வர். ஆகையால் கூட்டாளிகளின் கூட்டறிவின் அடிப்படையில் சிறந்த முடிவுகள் அமையும். எனவே அவசரத்தில் தவறான முடிவுகள் எடுப்பது தவிர்க்கப்படுகிறது இடர்பாட்டில் பங்கேற்பு தனி நபர் வணிகத்தில் ஏற்படும் இடர்பாட்டை அவர் ஒருவரே ஏற்க வேண்டியுள்ளது. ஆனால் கூட்டாண்மையில் எல்லாக் கூட்டாளிகளும் தொழிலின் இடர்பாட்டை பகிர்ந்து கொள்கின்றனர். கூட்டாளிகள் தாங்கள் ஏற்றுக்கொள்ளும் இடரின் அளவு குறைக்கப்படுகிறது. இது வியாபார வளர்ச்சிக்கு உதவுகிறது. முயற்சிக்கும் பலனுக்கும் நேரடி தொடர்பு கூட்டாண்மையில் கூட்டாளிகள் எவ்வளவுக்கெவ்வளவு உழைப்பு நல்குகின்றனரோ அவ்வளவுக்கு இலாபம் அதிகரிக்கும். எனவே கூட்டாளிகள் கடினமாக உழைத்து அதிக இலாபத்தைப் பெறுகிறார்கள். சிறுபான்மையரின் நலன் பாதுகாத்தல் தொழில் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகள் அனைத்தும் கூட்டாளிகளின் ஒருமனதான உடன்பாட்டுக்குப் பின்னரே முடிவு செய்யப்படும். இதனால் சிறுபான்மைக் கூட்டாளிகளின் நலன்களைப் பெரும்பான்மைக் கூட்டாளிகள் புறக்கணிக்க முடியாது. இவ்வாறு சிறுபான்மையோர் நலனும் கூட்டாண்மையில் நன்கு பேணப்படுகிறது. நெகிழ்வுத்தன்மை கூட்டாளிகள் தாங்கள் விரும்பிய வண்ணம் தொழிலின் தன்மையை மாறும் தேவைக்கேற்றவாறு மாற்றிக் கொள்ளலாம். விலைக் கொள்கை, முதல், இலாப் பகிர்வு விகிதம் முதலியனவற்றை கூட்டாளிகள் தங்கள் இசைவின் பேரில் மாற்றிக் கொள்ளலாம். நேரடி மேற்பார்வை கூட்டாண்மையில் கூட்டாளிகள் நேரடியாக பங்கேற்பதால் தேவையற்ற செலவுகள் தவிர்க்கப்படுகிறது. பணியாளர்களிடம் நேரடி தொடர்பு உள்ளதால் அவர்களை ஊக்குவித்து அதிக உற்பத்திக்கு வழிவகுக்கிறார்கள். எனவே கூட்டுப்பங்கு நிறுமத்தைக் காட்டிலும் கூட்டாண்மையில் நிர்வாக செலவுகள் குறைக்கப்படுகிறது. எளிதான கலைப்பு கூட்டாளிகளின் நொடிப்பு நிலை, புத்தி ஸ்வாதீனமின்மை, இறப்பு முதலியவற்றால் கூட்டாண்மையை கலைக்க நேரிடும். விருப்ப முறிக் கூட்டாண்மையில் கூட்டாளி ஒருவர் மற்றக் கூட்டாளிக்கு அறிக்கை விடுத்து கூட்டாண்மையைக் கலைக்கலாம். சட்டப்படியான நடவடிக்கைகள் கூட்டாண்மைக் கலைப்பிற்கு அவசியம் இல்லை. சிறந்த மக்கள் தொடர்பு கூட்டாண்மை நிறுவனத்தில் அதிக கூட்டாளிகள் இருப்பதால் பணியாளர்கள், நுகர்வோர், அரசு மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் நேரடி தொடர்பு ஏற்படுவதற்கு உதவுகிறது. இதனால் வியாபாரத்தின் நற்பெயர் மேலும் உயருகிறது. குறைபாடுகள் கூட்டாண்மை அமைப்பின் குறைபாடுகள் பின்வருமாறு வரையறாப் பொறுப்பு கூட்டாளிகளின் பொறுப்பு வரையறுக்கப்படாதது. மேலும் அது கூட்டுப் பொறுப்பாகவும் தனித்தனிப் பொறுப்பாகவும் திகழ்கிறது. கூட்டாளி தான் செய்த தவற்றிற்காகவும், பிற கூட்டாளிகளின் தவறான மற்றும் நேர்மையற்ற செயல்களினாலும் ஏற்படும் இழப்பை ஏற்க வேண்டியுள்ளது. இவ்வரையறாப் பொறுப்பு பலரை கூட்டாண்மையில் கூட்டாளியாக சேரத் தடுக்கிறது. குறைவான நிதி வளங்கள் கூட்டாண்மையில் அதிக முதல் திரட்டும் வாய்ப்பு குறைவு. கூட்டாளிகளின் கடன் வாங்கும் திறனும் குறைவு. எனவே மிக அதிக அளவில் முதல் தேவைப்படும் தொழில்களுக்கு கூட்டாண்மைத்தொழில் அமைப்பு பொருந்தாது. உட்கிடை ஆணையுரிமையின் அபாயம் ஒரு கூட்டாளி தன் நடவடிக்கையின் மூலமாகப் பிற கூட்டாளிகளை சட்டப்படி கட்டுப்படுத்த முடியும். நேர்மையற்ற அல்லது திறமை குறைவான ஒரு கூட்டாளி தன் செய்கைகளால் பிறர்க்கு உட்கிடை ஆணை உரிமையால் தீங்கு இழைக்க முடியும். இதனால் ஒரு நேர்மையான கூட்டாளி கூட பிற கூட்டாளிகள் செய்யும் தவறுக்காக தன் சொந்த சொத்துக்களை இழக்கும் நிலை ஏற்படலாம். அவநம்பிக்கை கூட்டாளிகளிடையே ஏற்படும் நம்பிக்கையின்மை கூட்டாண்மைக் கலைப்பிற்கு ஒரு முக்கிய காரணம். கூட்டாளிகள் ஒற்றுமையாக இருப்பது கடினம். ஏனெனில் கூட்டாளிகளிடையே வேறுபட்ட கருத்தினால் ஒருமித்த கருத்து சில சமயங்களில் ஏற்படாது. கூட்டாளிகளுக்கிடையே ஏற்படும் நம்பிக்கையின்மை, தவறான கருத்து, சச்சரவு போன்றவை கூட்டாண்மை கலைப்பிற்கு வழிவகுக்கும். உரிமை மாற்ற தடை பிற கூட்டாளிகள் அனைவரின் வெளிப்படையான ஒப்புதல் பெறாமல் எக்கூட்டாளியும் தொழிலில் தனக்குள்ள உரிமையைப் பிறருக்கு மாற்றித் தர முடியாது. கூட்டாளி ஒருவர் தொழிலில் தனக்குரிய பங்கைத் திரும்பப் பெறவும் ஏனைய கூட்டாளிகளின் இசைவு தேவை. எனவே கூட்டாளிகள் இட்ட முதலீடுகள் நிரந்தரமானது மட்டுமில்லாமல் திரும்பப் பெறுவதும் கடினம். நீடித்த வாழ்வின்மை கூட்டாண்மையில் ஒரு கூட்டாளியின் மரணம், விலகல், நொடிப்பு போன்றவை கூட்டாண்மை அமைப்பை முடிவிற்கு கொண்டு வரும். ஒரு கூட்டாளிக்கு, வியாபாரத்தில் திருப்தி இல்லாமல் இருந்தால், அவர் வியாபாரத்தை கலைத்து விடலாம். நம்பிக்கையின்மை போன்றவை கூட கூட்டாண்மையை முடிவிற்கு கொண்டு வந்து விடும். கூட்டாண்மையின் பல்வேறு வகைகள் கூட்டாண்மையின் பல்வேறு பிரிவுகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது. கூட்டாண்மையின் வகைகள் பொதுக் கூட்டாண்மை (அனைத்து கூட்டாளிகளின் பொறுப்பு வரையறுக்கப்படாதது) வரையறுத்த கூட்டாண்மை (ஒரு கூட்டாளியின் பொறுப்பாவது வரையறுக்கப்படாதது) பொது அல்லது வரையறுக்கப்படாத கூட்டாண்மை ஒரு கூட்டாண்மையில் அனைத்து கூட்டாளிகளின் பொறுப்பு வரையறுக்கப்படாமல் இருந்தால் அதை வரையறுக்கப்படாத கூட்டாண்மை என்கிறோம். இந்தியாவில் இவ்வகையான கூட்டாண்மை தான் காணப்படுகிறது. பொதுக் கூட்டாண்மையை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை, விருப்பமுறிக் கூட்டாண்மை, குறிப்பிட்ட கூட்டாண்மை மற்றும் இணைவினை. அவைகளைப் பற்றிக் காண்போம். அ. விருப்ப முறிக் கூட்டாண்மை விருப்ப முறிக் கூட்டாண்மை என்பது கூட்டாண்மையின் காலத்தை குறிக்காமல் வியாபாரத்தை நடத்தி வருதலே ஆகும். கூட்டாண்மையின் வாழ்வு கூட்டாளிகளின் விருப்பத்தைப் பொறுத்து நீட்டிக்கப்படும். இதில் ஏதாவது ஒரு கூட்டாளி தான் விலகிக் கொள்ள விரும்புவதாக அறிக்கை கொடுத்தால் கூட்டாண்மை கலைக்கப்படலாம். ஆ. குறிப்பிட்ட கூட்டாண்மை இவ்வகையான கூட்டாண்மை குறிப்பிட்ட காலத்திற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட வணிக செயலை செய்து முடிப்பதற்கோ நிறுவப்பட்டதாகும். இக் கூட்டாண்மை குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் அல்லது குறிப்பிட்ட வணிக செயல் முடிந்தவுடன் முடிவுக்கு வந்துவிடும். எடுத்துக்காட்டாக, ஒரு கூட்டாண்மை ஒரு வருடத்திற்கு மட்டுமே என உருவாக்கப்பட்டால், அக்காலம் முடிந்த உடன், கூட்டாண்மை முடிவுக்கு வந்துவிடும். இ. இணைவினை இணைவினை என்பது தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட ஒரு கூட்டாண்மையாகும். இது குறிப்பிட்ட வணிக செயல் அல்லது வேலையை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்துக் கொடுக்க உருவாக்கப்படுவதாகும். ஒவ்வொரு கூட்டாளிக்கும் உட்கிடை முகமை என்ற உரிமையில்லை. அக்குறிப்பிட்ட வணிக செயலை முடிப்பதற்கு முன் எக்கூட்டாளியும் தன் பங்கினை விலக்கிக் கொள்ள இயலாது. எடுத்துக்காட்டாக, ஒரு கட்டிடம் கட்டுவதற்காக உருவாக்கப்பட்ட கூட்டாண்மை , அக்கட்டிடம் கட்டியவுடன் முடிவுக்கு வந்து விடும். வரையறுத்த கூட்டாண்மை ஒரு கூட்டாண்மையில் கூட்டாளிகளின் பொறுப்பு ரையறுக்கப்பட்டிருந்தால், அது வரையறுத்த கூட்டாண்மை எனப்படும். இந்தியாவில் வரையறுத்த கூட்டாண்மை உருவாக்க சட்டம் அனுமதி வழங்குவதில்லை. ஆனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இவ்வகை கூட்டாண்மை அனுமதிக்கப்படுகிறது. வரையறுத்த கூட்டாண்மையில் ஒரு கூட்டாளியின் பொறுப்பு கண்டிப்பாக வரையறா பொறுப்பாக இருக்க வேண்டும். மற்ற கூட்டாளிகளின் பொறுப்பு வரையறு பொறுப்பாகும். எனவே பொதுக்கூட்டாளி, மற்றும் வரையறு கூட்டாளி என இருவகை கூட்டாளிகள் வரையறுத்த கூட்டாண்மையில் உள்ளனர். கூட்டாளிகளின் வகைகள் உழைக்கும் கூட்டாளி முதலீடு செய்து தொழிலை நிர்வகிக்கும் பொறுப்பேற்றுள்ள கூட்டாளிக்கு உழைக்கும் கூட்டாளி அல்லது பணிபுரியும் கூட்டாளி அல்லது மேலாண்மை கூட்டாளி, அல்லது பொதுக் கூட்டாளி என்று பெயர். இவருடைய பொறுப்பு வரையறாப் பொறுப்பாகும். உறங்கும் கூட்டாளி அல்லது உழையா கூட்டாளி இவ்வகைக் கூட்டாளிகள் தொழிலில் முதலிடுவர். ஆனால் தொழில் நிர்வாகத்தில் பங்கு பெறுவதில்லை. இவ்வகை கூட்டாளிகள் உறங்கும் கூட்டாளிகள் அல்லது உழையா கூட்டாளிகள் அல்லது முதலிடும் கூட்டாளிகள் என அழைக்கப்படுவர். பெயரளவு கூட்டாளி அல்லது பாசாங்கு கூட்டாளி இக்கூட்டாளி தொழிலில் முதலிடுவதுமில்லை, நிர்வாகத்தில் பங்கேற்பதுமில்லை. இவர் கூட்டாளியாக தன் பெயரை பயன்படுத்த அனுமதித்து, அதன் மூலம் கூட்டாண்மையின் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள உதவுகிறார். இவருக்கு இலாபத்தில் பங்கு இல்லை. வியாபாரக் கடன்களுக்கு வெளியாரைப் பொறுத்தவரை இவரும் பொறுப்பாகிறார். இலாபத்தில் மட்டும் பங்கேற்கும் கூட்டாளி இக்கூட்டாளி இலாபத்தை மட்டும் பகிர்ந்து கொள்வார். நட்டத்தைப் பகிர்ந்து கொள்ள மாட்டார். இவர் நிர்வாகத்தில் பங்கு பெற முடியாது. ஆனால் மூன்றாம் நபருக்கு இவருடைய பொறுப்பு வரையறாப் பொறுப்பாகும். முரண்தடைக் கூட்டாளி (Partner by Estoppel) ஒரு தொழிலில் ஒருவர் உண்மையிலேயே கூட்டாளியாக இல்லாமலிருந்து, தன் நடத்தையின் மூலம் தானும் அத்தொழிலில் ஒரு கூட்டாளி என்று வெளியாரை நம்பசெய்த பின் தான் கூட்டாளி அல்ல என்று பின்னர் அவர் மறுத்துக்கூறமுடியாது. அவ்வாறு நம்பி நிறுவனத்திற்கு முன் பணம் அளிப்பவருக்கோ அல்லது நிறுவனத்தோடு ஒப்பந்தத்தில் ஈடுபடுவருக்கோ அவர் பொறுப்பாகிறார். அத்தகைய நபரே முரண்தடைக் கூட்டாளி என்றழைக்கப்படுகிறார். உரிமைப் போலிக் கூட்டாளி (Partner by Holding out) கூட்டாண்மையில் கூட்டாளி அல்லாத ஒருவர் கூட்டாளியென விவரிக்கப்படும்போது தான் அவ்வாறு கூட்டாளி அல்ல என அவர் மறுத்துரைக்க வேண்டும். அவர் ஏதும் சொல்லாது அமைதி காத்திட்டால் அவரைக் கூட்டாளியென நம்பி அக் கூட்டாண்மையுடன் வணிகம் செய்யும் நபர்களுக்கு அவர் பொறுப்பாகிறார். அத்தகைய நபரே உரிமைப் போலிக் கூட்டாளி எனப்படுகிறார். துணைக் கூட்டாளி (Sub- Partner) ஒரு கூட்டாளிக்கு கிடைக்கும் லாபத்தை இன்னொரு நபர் பங்கிட்டுக் கொண்டால் அந்நபர் துணைக்கூட்டாளி என்று அழைக்கப்படுகிறார். அத்துணைக்கூட்டாளிக்கு நிறுவனத்தில் எவ்வித உரிமையுமில்லை. நிறுவனக் கடன்களுக்கு இவர் பொறுப்பேற்பதுமில்லை இளவர் கூட்டாளி (Minor as partner) 18 வயதை பூர்த்தி செய்யாத நபரை இளவர் என்கிறோம். ஆனால் நீதி மன்றத்தால் ஒரு காப்பாளர் நியமிக்கப்பட்டிருந்தால் 21 வயது வரை அவர் இளவராக கருதப்படுகிறார். சட்டப்படி இளவர் ஒருவர் கூட்டாளியாக முடியாது. ஏனெனில் அவர் ஒப்பந்தத்தில் ஈடுபட தகுதி இல்லாதவர். ஆனால் அனைத்துக் கூட்டாளிகளும் ஒப்புக்கொண்டால் கூட்டாண்மையின் பயன்களுக்கு (Benefits) மட்டும் இளவர் கூட்டாளியாக சேர்த்துக்கொள்ளப்படுவர். கூட்டாண்மையில் இளவரின் நிலை பற்றி இரு தலைப்புகளில் கீழ்க்கண்டவாறு விவரிக்கலாம் அ. உரிமை வயது (Major) அடையுமுன் இளவரின் நிலை அவர் தொழிலின் சொத்திலும், இலாபத்திலும் ஒப்புக்கொண்டபடி பங்கு பெறும் உரிமையை பெறுகிறார். அவருக்கு நிறுவனக் கணக்குகளைப் பார்வையிட்டு, அவற்றின் நகல்(copy) எடுக்க உரிமை உண்டு. தொழிலின் சொத்துக்கள், இலாபத்தில் அவருக்குள்ள பங்கின் அளவிற்குத்தான் அவருக்குப் பொறுப்பு இருக்கும். அவருடைய முதலீட்டிற்கு மேல், தொழிலின் பொறுப்புகளுக்கு அவரோ அல்லது அவரது சொத்துக்களோ பொறுப்பாகாது. ஆ. உரிமை வயது அடைந்தபின் இளவரின் நிலை. உரிமை வயதடைந்தப்பின் கூட்டாளியாகத் தொடர்ந்திருக்க வேண்டுமா அல்லது கூட்டாண்மையிலிருந்து வெளியேற வேண்டுமா என்பதை ஆறு மாதத்திற்குள் இளவர் தீர்மானித்து அறிவிக்க வேண்டும். அவ்வாறு ஆறு மாதத்திற்குள் அறிவிக்காவிடில் கூட்டாண்மையில் இளவராகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட நாள் முதற்கொண்டு நிறுவனக் கடன்களுக்குப் பொறுப்பாவார். கூட்டாளியாக தொடர் விருப்பமில்லை என அறிவித்தால், அறிவிப்பு செய்த நாளிலிருந்து கூட்டாண்மையின் கடன்களுக்கு அவர் பொறுப்பாகமாட்டார். கூட்டாளிகளின் உரிமைகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் பொதுவாக, கூட்டாளிகளின் உரிமைகள், கடமைகள், மற்றும் பொறுப்புகள் கூட்டாண்மை உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும். கூட்டாண்மை உடன்பாட்டில் உரிமைகள், கடமைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லையென்றால் கூட்டாண்மை சட்டம் 1932-ன் விதிகள் கீழ்கண்ட உரிமைகள் மற்றும் கடமைகளுக்கு வகை செய்கிறது. கூட்டாளிகளின் உரிமைகள் ஒவ்வொரு கூட்டாளிக்கும் தொழிலை நடத்தவும் மேலாண்மையில் பங்கேற்கவும் உரிமை உண்டு. ஒவ்வொரு கூட்டாளிக்கும் நிறுவன தொடர்பான பிரச்சனைகளுக்கு தங்கள் கருத்தினை தெரிவிக்க உரிமையுண்டு. முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்னர் ஒவ்வொரு கூட்டாளிக்கும் தங்களை கலந்தாலோசிக்க வேண்டும் எனக்கோர் உரிமை உண்டு. ஒவ்வொரு கூட்டாளிக்கும் நிறுவன ஏடுகளையும், கணக்குகளையும் கண்காணித்து நகலெடுக்கும் உரிமை உண்டு. ஒவ்வொரு கூட்டாளிகளும் இலாபத்தில் சமமாக பங்கேற்கும் உரிமை உண்டு. இல்லையெனில் கூட்டாளிகள் ஒப்புக்கொண்டபடி பிரித்துக் கொள்ள உரிமை உண்டு. ஒவ்வொரு கூட்டாளிகளும் தொழிலுக்கு வழங்கிய கடன் மற்றும் முன்பணம் மீது 6 சதவிகிதம் வட்டி பெற உரிமை உண்டு. ஒவ்வொரு கூட்டாளியும் அன்றாட வியாபாரத்திற்கு தாம் செய்த செலவுக்கு ஈட்டுரிமை பெற உரிமை உண்டு. ஒவ்வொரு கூட்டாளிக்கும் தொழிலுக்காக நிறுவன சொத்துக்களை பயன்படுத்த உரிமை உண்டு. தங்களின் ஒப்புதல் இன்றி புதிய கூட்டாளிகளை நிறுவனத்தில் சேர்ப்பதைத் டுக்க உரிமையுண்டு. ஒவ்வொரு கூட்டாளிக்கும் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற உரிமை உண்டு. கூட்டாளியின் கடமைகள் கூட்டாளிகளின் கடமைகளை முழுமையான கடமைகள் என்றும் வரம்புக்குட்பட்ட கடமைகள் என்றும் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முழுமையான கடமைகள் முழுமையான கடமைகள் சட்டத்தால் நிரந்தரமாக கொடுக்கப்பட்டுள்ளது. இவை கூட்டாளிகளின் உடன்பாட்டால் மாற்ற முடியாதவை. அனைத்துக் கூட்டாண்மைக்கும் இது பொருந்தும். ஒவ்வொரு கூட்டாளியும் தங்களுடைய கடமைகளை கவன குறைவின்றியும், நாணயமாகவும், அனைத்து கூட்டாளிகளின் நலனுக்காகவும் நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொரு கூட்டாளியும் ஏனைய கூட்டாளிகளிடம் விசுவாசமாகவும், உண்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு கூட்டாளியும் தனக்கு ஒப்படைக்கப்பட்ட அதிகார வரம்புக்குள் செயல்படவேண்டும். ஒவ்வொரு கூட்டாளியும் வேறு வகையில் உடன்பாடு இல்லாத போது, நிறுவன நட்டத்தை சமமாக பகிர்ந்துகொள்ள கடமைப்பட்டவர். ஒவ்வொரு கூட்டாளியும் தொழில் நடவடிக்கையில் தான் அறிந்து செய்த தவறினால் ஏற்பட்ட நட்டத்துக்கு நிறுவனத்தை ஈட்டுறுதி செய்தல் வேண்டும். பிற கூட்டாளிகளின் இசைவில்லாமல், கூட்டாளி ஒருவர் நிறுவனத்திலுள்ள தன் பங்கினை பிறருக்கு மாற்றவோ அல்லது வழங்கவோ கூடாது ஒவ்வொரு கூட்டாளியும் நிறுவன தொழில் சார்ந்த கணக்குகளை உண்மையாகவும் சரியாகவும் வைத்திருக்க வேண்டும். கூட்டாண்மைத் தொழிலுக்கு எதிராக எத்தொழிலையும் போட்டியாக கூட்டாளி நடத்தக்கூடாது. ஒவ்வொரு கூட்டாளியும் நிறுவன சொத்துக்களை நிறுவன தொழிலுக்காகவும் மற்றும் நன்மைக்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். எக் கூட்டாளியும் கொள்முதல் மீதான தரகு அல்லது விற்பனை தரகு போன்ற இரகசிய இலாபங்களை ஈட்டக்கூடாது. வரம்புக்குட்பட்ட கடமைகள் சட்டம் வழங்கியுள்ள நிபந்தனைக்குட்பட்ட கடமைகளைக் கூட்டாளிகள் தங்கள் உடன்பாட்டால் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். கூட்டாளிகளின் பொறுப்புகள் ஒவ்வொரு கூட்டாளியும் நிறுவனத்தின் கடன்களுக்கு கூட்டாகவும் தனித்தனியாகவும் வரையறா பொறுப்பேற்கவேண்டும் கூட்டான்மையிலிருந்து விலகும் ஒரு கூட்டாளி தான் விலகும் முன் ஏற்பட்ட அனைத்துக் கடன்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும் ஒரு உள்வரும் கூட்டாளி, தான் கூட்டாண்மையில் சேர்ந்த பிறகு ஏற்படும் கடன்களுக்கு மட்டும் பொறுப்பேற்கிறார். கூட்டாளி ஒருவர் மரணம் அடைய நேரிடின், தான் இறப்பதற்கு முன் ஏற்பட்ட கடன்களுக்கு மட்டும் அவரது சட்டப் பிரதிநிதிகள் பொறுப்பாகிறார்கள். கூட்டாளி ஒருவர் இளவராக இருந்தால், அவர் நிறுவன கடன்களுக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பாக மாட்டார். அவரது இலாப் பங்கு மற்றும் நிறுவன சொத்துக்களில் அவரது பங்கு ஆகியவை மட்டும் நிறுவன கடன்களுக்கு பொறுப்பாகும். ஒவ்வொரு கூட்டாளியும் நிறுவனத்துக்கோ அல்லது பிற கூட்டாளிக்களுக்கோ தங்களுடைய கவனக்குறைவால் ஏற்படும் நட்டங்களை ஈடுசெய்ய வேண்டும். கூட்டாளிகளின் வெளிப்படை மற்றும் உட்கிடை ஆணையுரிமைகள் ஒரு கூட்டாளி தன் நடவடிக்கையினால் கூட்டான்மையை கட்டுப்படுத்தும் அதிகாரத்திற்கு ஆணையுரிமை என்று பெயர். இது வெளிப்படை ஆணையுரிமை என்றும் உட்கிடை ஆணையுரிமை என்றும் இரு வகைப்படும். வெளிப்படை ஆணையுரிமை (Express Authority) கூட்டாளிகளுக்கு ஒரு உடன்பாட்டின்படி உரிமைகள் வழங்கப்பட்டிருப்பின், அது வெளிப்படை ஆணையுரிமை எனப்படும். அவ்வாணையுரிமைக்குட்பட்டு அவர் மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களுக்கும் நிறுவனம் பொறுப்பாகும். உட்கிடை ஆணையுரிமை (Implied Authority) அவசர காலங்களில் கூட்டாண்மையின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு கூட்டாளிக்கு வழங்கப்படும் உரிமைக்கு உட்கிடை ஆணையுரிமை என்று பெயர். அவ்வாறு அக்கூட்டாளி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கூட்டாண்மையைக் கட்டுப்படுத்தும். கூட்டாண்மை ஒப்பந்தத்தில் ஒன்றும் சொல்லப்பட வில்லையென்றாலும் அல்லது ஒப்பந்தமே இல்லையென்றாலும் கூட இவ்வுரிமைகள் ஒவ்வொரு கூட்டாளிக்கும் உண்டு. கீழ்க்கண்ட பணிகளை நிறைவேற்ற ஒவ்வொரு கூட்டாளியும் உட்கிடை ஆணையுரிமையை பெற்றிருக்கின்றனர். நிறுவனத்திற்காக சரக்கு வாங்குதல், விற்றல் மற்றும் அடகு வைத்தல் (Pledge) நிறுவனத்திற்கு சேர வேண்டிய பணத்தைப் பெறுதல் மற்றும் அதற்கு ரசீது வழங்குதல் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுள்ள நபர்களின் கணக்குகளைத் தீர்த்தல் நிறுவனத்துக்குப் பணியாட்களை வேலைக்கமர்த்தல் நிறுவனத்திற்காக கடன் வாங்குதல், கடனைத் திருப்பி அடைத்தல் நிறுவனத்தின் பெயரில் மாற்றுமுறை ஆவணங்களைத் தயாரித்தல், உரிமையை மாற்றிக்கொடுத்தல் நிறுவனத்தின் பொருட்டு நிறுவனப் பெயரில் வங்கிக் கணக்கு செயற்படுத்துதல் (Operating bank Account) நிறுவனத்துக்காகச் சட்ட நடவடிக்கை எடுத்தல், நிறுவனத்தின் பொருட்டு அத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிர் வழக்காடல். (Defend) 4) கீழ்க்கண்ட செயல்களைச் செய்வதற்கு ஒரு கூட்டாளிக்கு உட்கிடை ஆணையுரிமையில்லை நிறுவனத்தின் தகராறை நடுவர் தீர்ப்புக்கு விட. (Arbitration) நிறுவனத்தின் வங்கி கணக்கைத் தன் பெயரில் தொடங்க. நிறுவனத்தின் கோரிக்கை (Claim) அல்லது கோரிக்கையின் ஒரு பகுதியை சமரசம் செய்துகொள்ள அல்லது விட்டுக்கொடுக்க. நிறுவனத்தின் பொருட்டு நடந்து வரும் ஒரு வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்ள. நிறுவனத்துக்கெதிரான வழக்கில் எப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள. நிறுவனத்திற்காக அசையாச் சொத்தினை (Immovable property) வாங்க. நிறுவனத்தின் சார்பாக அசையாச் சொத்தினை விற்க. நிறுவனத்திற்கு பதிலாக வேறொரு கூட்டாண்மையில் ஈடுபட.. கூட்டாண்மை ஒப்பாவணம் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நபர்களுக்கிடையே எழும் உடன்பாட்டின் காரணமாக உருவாக்கப்படுவதுதான் கூட்டாண்மை ஆகும். இந்தியாவில் இந்த உடன்பாடு பேச்சளவிலோ அல்லது எழுத்து வடிவத்திலோ இருக்கலாம். கூட்டாண்மை உடன்பாடு எழுத்து வடிவத்தில் இருந்தால், பிற்காலத்தில் தவறான கருத்துகளினால் ஏற்படும் தகராறுகளைத் தவிர்க்கலாம். கூட்டாண்மை பற்றிய விவரங்கள் மற்றும் நிபந்தனைகள் கூட்டாண்மை ஒப்பாவணத்தில் அடங்கியிருக்க வேண்டும். கூட்டாண்மை ஒப்பாவணத்தின் உள்ளடக்கம் கீழ்க்கண்ட செய்திகள் (Matters) ஒரு கூட்டாண்மை ஒப்பாவணத்தில் வழக்கமாகக் காணப்படும். 1. நிறுவனத்தின் பெயர் 2. ஒப்பந்த நாள் மற்றும் தொழில் புரியும் இடம் 3. அனைத்து கூட்டாளிகளின் பெயர் மற்றும் முகவரி 4. நிறுவனம் மேற்கொள்ள இருக்கும் தொழிலின் தன்மை 5. கூட்டாண்மையின் கால வரையறை 6. ஒவ்வொரு கூட்டாளியும் வழங்கிய முதல் தொகை 7. ஒவ்வொரு கூட்டாளியும் நிறுவனத்திலிருந்து எடுக்கும் தொகை 8. இலாப பகிர்வு விகிதம் 9. உழைக்கும் கூட்டாளிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஊதியம் 10. முதல் மற்றும் எடுப்பு மீது வட்டி 11. கூட்டாளிகள் சேரும்போது அல்லது விலகும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை 12. நிறுவனத்தைக் கலைக்கும் முறையும், அக்கலைப்பின்போது கணக்குகளைத் தீர்த்துக்கொள்ளும் வழிமுறையும் 13. கணக்கு ஏடுகளை பராமரித்தல் மற்றும் தணிக்கை (Audit) 14. கூட்டாளிகள் நிறுவனத்திற்குத் தந்திடும் கடன்கள் மற்றும் முன்பணம் ஆகியவற்றின் மீதான வட்டி. 15. கூட்டாளிகள் சேரும்பொழுது, விலகும்பொழுது அல்லது இறக்கும்பொழுது வாணிக நற்பெயரை (Goodwill) மதிப்பிடும் முறை. 16. கூட்டாளிகளிடையே உண்டாகும் தகராறுகளை தீர்க்க நடுவர் தீர்ப்பிற்கு (Arbitration) விடும் நடைமுறை. கூட்டாண்மை ஒப்பாவணத்தில் கண்டுள்ள செய்திகளை அனைத்துக் கூட்டாளிகளின் இசைவுடன் தான் மாற்ற முடியும். கூட்டாண்மை பதிவு இந்தியாவில் கூட்டாண்மை நிறுவன பதிவு கட்டாயமில்லை. இது கூட்டாளிகளின் விருப்பத்திற்குட்பட்டது. கூட்டாளிகள் விருப்பப்பட்டால், நிறுவன பதிவாளரிடம், அவர்கள் நிறுவனத்தை பதிவுசெய்து கொள்ளலாம் என இந்திய கூட்டாண்மைச் சட்டம் 1932 வகைசெய்கிறது. கூட்டாண்மை பதிவு செய்யும் முறையைக் கீழே காண்போம். கூட்டாண்மையை பதிவு செய்யும் முறை கூட்டாண்மை நிறுவனத்தை எப்பொழுது வேண்டுமானாலும் நிர்ணயிக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு கூட்டாளியும் அப்படிவத்தில் கையொப்பமிடவேண்டும். நிர்ணயிக்கப்பட்ட தொகையுடன் இப்படிவத்தை நிறுவன பதிவாளருக்கு அனுப்ப வேண்டும். கீழ்க்கண்ட விவரங்கள் அப்படிவத்தில் அடங்கியிருக்க வேண்டும். நிறுவனத்தின் பெயர் வணிகத்தின் தலைமை இடம் ஒவ்வொரு கூட்டாளியின் பெயரும் முகவரியும் ஒவ்வொரு கூட்டாளியும் கூட்டாண்மையில் சேர்ந்த நாள் நிறுவனம் தொழில் தொடங்கிய நாள் நிறுவனத்தின் கால வரையறை. நிறுவன பதிவாளர் படிவத்துடன் குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு நிறுவனங்களின் பதிவேட்டில் பதிவு செய்து கொள்வார். பதிவாளர் வழங்கும் சான்றிதழை பதிவுச்சான்றிதழ் என்றழைக்கிறோம். பதிவேட்டில் பதிவு செய்தவுடன் நிறுவனம் பதிவு செய்ததாகிவிடும். மேற்சொன்ன விவரங்களில் மாற்றம் ஏதேனும் ஏற்படின், நிறுவன பதிவாளரிடம் தெரிவித்தால், நிறுவன பதிவேட்டில் தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தி பதிவேட்டிலுள்ள விவரங்களை ஆய்வு செய்து கொள்ளலாம். பதிவு செய்யாமையின் விளைவுகள் இந்தியாவில் கூட்டாண்மை பதிவு கூட்டாளிகளின் விருப்பத்திற்கு உட்பட்டது. ஆனால் கூட்டாண்மை பதிவு செய்யாவிடில், அந்நிறுவனம் கீழ்க்கண்ட விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அவையாவன, நிறுவனத்திற்கு எதிராகவோ அல்லது ஏனைய கூட்டாளிகள் மீதோ, முன்னாள் கூட்டாளி உள்பட, கூட்டாண்மை உடன்பாட்டின் கீழ் அல்லது சட்டத்தின் கீழ் தனக்குள்ள ஒப்பந்த உரிமைகளை நிலைநாட்ட, பதிவுறா நிறுவனத்தின்(Unregistered Firm) ஒரு கூட்டாளி வழக்கு தொடர முடியாது. மூன்றாமவர்(Against third parties) மீது எந்த உரிமையியல் நீதி மன்றத்திலும் (Civil Court) பதிவுறா நிறுவனமொன்று தனக்கு சேரவேண்டிய பாக்கி பணத்தை பெற எவ்வழக்கையும் தொடர முடியாது. நிறுவனத்துக்கெதிராகவோ, கூட்டாளிகளுக்கெதிராகவோ மூன்றாமவர் எவரும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியாது. தனது கூட்டாளிகளை எதிர்த்து நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. பதிவு செய்யா நிறுவனம், மூன்றாம் நபருக்கு எதிராக தொகை ரூ.100க்கு மேல் திரும்பப் பெற, அதனுடைய உரிமையை செயல்படுத்த இயலாது. நிறுவனத்தைக் கலைக்கக் கோரி அல்லது கலைக்கப்பட்ட நிறுவனத்தின் சொத்துக்களை விற்று பணமாக்க அல்லது கலைப்பின் பொழுது கணக்குகளைத் தீர்த்துக்கொள்ள கூட்டாளியொருவர் வழக்குத் தொடுக்க முடியாது. நிறுவனத்தின் வியாபாரக் குறிகள் மற்றும் பதிப்புரிமைகளை வெளியாட்கள் பயன்படுத்தக் கூடாது எனத் தடுக்கும் உரிமையை கூட்டாண்மை இழக்கும். கூட்டாண்மை நிறுவனக் கலைப்பு கூட்டாண்மை நிறுவனக் கலைப்பு என்பது கூட்டாளிகளுக்கிடையே நிலவும் உறவை முடிவுக்கு கொண்டு வருதலைக் குறிக்கும். இதனை இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன, நிறுவனக் கலைப்பு (Dissolution of firm) நிறுவனக் கலைப்பு என்பது கூட்டாளிகளுக்கிடையே நிலவும் உறவு முறிந்து விடுதலாகும். நிறுவனக் கலைப்பினால் கூட்டாண்மைத் தொழில் முடிவுக்கு வந்துவிடும். அதன் சொத்துக்கள் விற்கப்பட்டு கடனீந்தோர் கணக்குகள் முடிக்கப்படும். இதன் பிறகு தொழில் தொடர்ந்து நடைபெறாது. எடுத்துக்காட்டாக, அ, ஆ, இ மூவரும் ஒரு தொழிலில் கூட்டாளிகள். மூவரும் மேற்கொண்டு தொழில் நடத்த விருப்பமின்றி கலைந்துபோகத் தீர்மானித்தால், அது நிறுவனக் கலைப்பாகிறது. கூட்டாண்மைக் கலைப்பு (Dissolution of partnership) கூட்டாண்மைக் கலைப்பு என்பது கூட்டாளிகளின் உடன்பாடு முடிவுக்கு வருவதாகும். கூட்டாளியின் நொடிப்பு நிலை, விலகல், கூட்டாண்மைக் காலம் முடிவு முதலியவற்றால் கூட்டாண்மைக் கலைப்பு நேரிடும். ஆனால் தொழில், கூட்டாண்மைக் கலைப்பிற்கு பிறகும் தொடர்ந்து நடைபெறலாம். எடுத்துக்காட்டாக, அ, ஆ, மற்றும் இ என்ற மூவரும் கூட்டாளிகள். இதில் அ என்பவர் விலகிக்கொண்டாலும், 'ஆ' மற்றும் 'இ' ஆகிய இருவரும் கூட்டாண்மையைத் தொடர்ந்து நடத்துவதாக ஒப்புக்கொண்டால், அது கூட்டாண்மை கலைப்பாகிறது. விருப்ப முறிக் கூட்டாண்மை அறிவிக்கையால் கலைப்பு (பிரிவு 43) விருப்பமுறிக் கூட்டாண்மையில் (Partnership-at-will) கூட்டாளி எவரேனும் நிறுவனத்தைக் கலைக்கும்படி பிற கூட்டாளிகளுக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தால் நிறுவனம் கலைக்கப்பட வேண்டும். நீதிமன்றத்தால் கலைப்பு (பிரிவு 44) நீதிமன்றத்தில் கூட்டாளி ஒருவர் கீழ்க்காணும் காரணங்களுக்காக வழக்கு தொடர்ந்து நிறுவனத்தைக் கலைக்கலாம். அ. கூட்டாளியின் மனச்சமநிலை இழப்பு (partners insanity) கூட்டாளிகளுள் எவரேனும் ஒருவர் பித்துநிலையடைந்தால் நீதிமன்றம் கலைப்பிற்கான ஆணையைப் பிறப்பிக்கலாம். ஆ. நிலையான திறமையின்மை (Permanent incapacity) கூட்டாளியொருவர் திறமையாக தொழில் செய்யும் நிலையை இழந்திருந்தால், நீதிமன்றம் கலைப்பதற்கான ஆணை பிறப்பிக்கும். இ. உடன்பாட்டை தொடர்ந்து மீறுகை (Persistent breach of agreement) கூட்டாண்மை உடன்பாட்டை ஒரு கூட்டாளி தொடர்ந்து மீறிக்கொண்டிருந்தால், அவருடன் கூட்டாண்மைத் தொழில் செய்வது இயலாதென ஏனைய கூட்டாளிகள் கருதினால், அவர்களுள் எவரேனும் ஒருவர் கூட்டாண்மையைக் கலைக்கக் கோரி நீதிமன்றத்தை அணுகலாம். ஈ. கூட்டாளியொருவரின் ஒழுக்கக் கேடு (Misconduct of partner) கூட்டாளிகளுள் ஒருவர் ஒழுக்கக்கேடான குற்றத்தை செய்திருப்பின், ஏனைய கூட்டாளிகளுள் ஒருவர் கலைப்புக் கோரி வழக்குத் தொடுக்கலாம். உ. உரிமை மாற்றம் (Transfer of share) கூட்டாளி ஒருவர் தொழிலில் தனக்குரிய உரிமை முழுவதையும் மூன்றாமவர்(third party) ஒருவருக்கு மாற்றிக்கொடுத்துவிட்டால், ஏனைய கூட்டாளிகள் கூட்டாண்மையைக் கலைக்கக் கோரி நீதிமன்றத்தை அணுகலாம். ஊ. நீதி, நேர்மை அடிப்படையில் (Just and equitable grounds) நிறுவனத்தைக் கலைத்திடப் போதிய அடிப்படை காரணமுள்ளது என்று நீதிமன்றம் கருதினால், கூட்டாண்மை கலைக்கப்படலாம். எடுத்துக்காட்டாக, அ, ஆ என்போர் ஒரு கூட்டாண்மையின் இரு கூட்டாளிகள். அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை எனில் நீதிமன்றம் நிறுவனத்தைக் கலைத்திட ஆணையிடலாம். ஆதாரம்: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்