பொருள் தனியாள் வணிக முறை என்பது தொழிலமைப்புகளின் மிகப் பழமையான வடிவமாகும். இத்தொழிலை அமைப்பது எளியது, சுலபமானது. உலகளவில் அனைத்து நாடுகளிலும் தனியாள் வணிக அமைப்பு செயல்படுவதைக் காணலாம். இத்தகைய தொழில் அமைப்புகள் தற்காலத்தில்கூட, அதனுடைய பயன்பாடு மறையாமல் பெரும்பான்மை தொழில் முனைவோரால் நடத்தப்பட்டு வருகிறது. தனியாள் வணிகம் என்பது ஒரே ஒரு நபரின் முதலுடன், அந்நபரின் அனுபவம் மற்றும் தொழில் திறனைக் கொண்டு, முழுப் பொறுப்பினையும் அந்நபரே ஏற்று நடத்தும் வணிகம் ஆகும். தொழிலுக்குத் தேவையான முதலை கடனாகப் பெறுவதுடன், தேவைப்பட்டால், நிர்வாகத்தில் துணைபுரிய வேறு சில பணியாளர்களையும் வேலைக்கமர்த்திக் கொள்வார். வியாபாரத்தை அவரே நிர்வகிப்பதால், அதில் கிடைக்கும் இலாப நட்டம் அவரையே சாரும். இவ்வகையான சில தொழில்களைத் துவங்க ஒரே ஒரு சட்ட நடைமுறை யாதெனில் உள்ளாட்சியிடமிருந்தோ அல்லது நகராட்சியிடமிருந்தோ உரிமம் பெற வேண்டியிருக்கும். இவ்விதி ஒருசில வணிகத்திற்கு மட்டும் பொருந்தும். இவ்வகையான தொழில் அமைப்பை தனி உரிமையம் அல்லது ஒருநபர் அமைப்பு எனலாம். தனியாள் வணிகத்தில் முதலிட்டு அதனை நிர்வகிக்கும் நபர் தனியாள் வணிகர் அல்லது தனியாள் உரிமையாளர் என அழைக்கப்படுகிறார் வரைவிலக்கணம் பி.கே. கோஷ் மற்றும் ஒய்.கே. பூஷன் ஆகியோரின் கூற்றுப்படி, "தன் சொந்த மூலதனத்தை முதலீடு செய்து, தன் சொந்த திறனையும் நுண்ணறிவையும் பயன்படுத்தி, வியாபாரத்தின் லாப நட்டங்களை தானே ஏற்றுக்கொள்ளும் ஒரு அமைப்பே தனி ஆள் நிறுவனம் ஆகும்.” "தனி நபரால், தனி நபருக்கென்று அமைக்கப்பட்டு இயங்கும் ஒரு வணிகம் தனி ஆள் வணிகம்” என்று முனைவர் ஒ.ஆர். கிருஷ்ணசாமி அவர்கள் வரையறுக்கிறார். "தனி நபர் ஒருவர் அவருடைய மூலதனத்தை முதலீடு செய்து, சொந்தத்திறனையும் நுண்ணறிவையும் வியாபார நடவடிக்கைகளை நிர்வகிக்க பயன்படுத்தி, லாபம் முழுவதையும் அனுபவித்து நட்டத்திற்கும் பொறுப்பேற்கும் ஒரு வியாபார அமைப்பே தனியாள் வணிகமாகும்;” என்று தொழில் மற்றும் வணிக்கலைக் களஞ்சியம் வரைவிலக்கணம் அளித்துள்ளது. வீலர் அவர்கள்,” தனி ஒரு மனிதருக்குச் சொந்தமானதும், கட்டுப்பாட்டுக்குட்பட்டதுமான ஒரு வியாபார அமைப்பை, தனியாள் அவர் தன் சொத்தை வியாபார வெற்றி அல்லது தோல்வி என்ற துணிகரச் செயலுக்குப் பயன்படுத்தி இலாபத்தை பெறுகிறார்” என்று விளக்குகிறார். ஜேம்ஸ் ஸ்டீபன்சன் அவர்களின் கூற்றுப்படி, "தனக்காக தானே வியாபாரத்தை நடத்தும் ஒரு நபர் தனி வணிகர் ஆவார். அவர், வியாபாரத்தில் இடும் முதலுக்கு உரிமையாளர் மட்டுமின்றி அமைப்பாளராகவும், மேலாளராகவும் செயல்பட்டு வியாபாரத்தில் கிடைக்கும் இலாபத்தை எடுத்துக்கொண்டு நட்டத்திற்கும் பொறுப்பாகிறார்”. தனி நபர் நிறுவனத்தின் குணாதிசயங்கள் தனியாள் வணிகத்தின் குணாதிசயங்கள் பின்வருமாறு. தனி நபர் உரிமையும் கட்டுப்பாடும் ஒரு தனி நபரால் நடத்தக்கூடிய வியாபார அமைப்பு தனியாள் வணிகமாகும். அவரே இதன் உரிமையாளர். அவர் ஒருவரே தனி உரிமையாளராகவும் மற்றும் வணிகத்தின் தலைவராகவும், யாருடைய குறுக்கீடும் இல்லாமல் சுதந்திரமாக வணிக நடவடிக்கையை மேற்கொள்கிறார். எனவே தனியாள் வணிக அமைப்பில் உரிமையும், கட்டுப்பாடும் தனி நபர் வசமே உள்ளது. மூலதனம் தனியாள் வணிகத் தொழிலமைப்பில் ஒரு நபர் மட்டுமே முதலீடு செய்கிறார். தொழிலுக்குத் தேவையான முதலை, தன் சொந்த சேமிப்பிலிருந்து செலுத்துகிறார். அவர் நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ, நிதி நிறுவனங்களிடமோ கடன் பெற்றும் முதலீடு செய்யலாம். வரையறாப் பொறுப்பு தனியாள் வணிகத்தில் உரிமையாளரின் பொறுப்பு வரையறுக்கப்படாதது. இவ்வரையறாப் பொறுப்பினால் தனி வணிகர் தன் வியாபாரக் கடன்களை செலுத்த தொழிலின் சொத்துக்கள் போதுமானதாக இல்லாவிடில், தன் சொந்த சொத்துக்களிலிருந்தும் கடனீந்தோருக்கு செலுத்த வேண்டும். கடனீந்தோர் உரிமையாளரின் பிற சொத்துக்களையும் பறிமுதல் செய்ய உரிமை பெறுகின்றனர். இலாப நட்டம் வியாபாரத்திலிருந்து கிடைக்கும் முழு இலாபத்தையும் அனுபவிக்கும் உரிமை தனிநபருக்கே உரியது. இத்தனியாள் வணிகர் இலாபத்தை பிறருடன் பங்கிட்டுக் கொள்ளத் தேவையில்லை. அதுபோலவே நட்டம் ஏற்படுமாயின், அம் முழு நட்டத்தையும் தனி நபரே ஏற்கவேண்டும். எனவே, இலாபமும், நட்டமும் அவரையே சாரும். சட்டத் தனித்துவம் இன்மை தனியாள் வியாபாரத்தில் தனியாள் வணிகமும் வியாபாரமும் ஒன்றாகக் கருதப்படுகின்றன. கூட்டுப்பங்கு நிறுமத்தைப் போல் உரிமையும் நிர்வாகமும் பிரிக்கப்படவில்லை. உரிமையும் நிர்வாகமும் ஒன்றாகவே கருதப்படுகிறது. யார் உரிமையாளரோ அவரே நிர்வாகத்தையும் மேற்கொள்கிறார். தனிச்சட்டம் இல்லை கூட்டாண்மையை ஒழுங்குபடுத்த இந்தியக் கூட்டாண்மைச் சட்டம், கூட்டுப்பங்கு நிறுமத்தை ஒழுங்குபடுத்த இந்திய நிறுமச் சட்டம், கூட்டுறவு சங்கங்களை ஒழுங்குபடுத்த இந்திய கூட்டுறவுச் சட்டம் இருப்பதைப்போல தனி வணிகத்தை ஒழுங்குபடுத்த தனியாக சட்டம் ஏதுமில்லை . பதிவு கூட்டாண்மை, நிறுமம் முதலிய அமைப்புகள் அவைகளுக்கான சட்டத்தின்படி பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் தனி வணிகர் தன் தொழிலைப் பதிவு செய்ய வேண்டியதில்லை. பணம் படைத்த எவரும் தனி வணிகத்தைத் தொடங்கலாம். சிலவகைத் தொழில்களை மேற்கொள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சியிடமிருந்து உரிமம் பெற வேண்டியிருக்கும். வாழ்வு கூட்டுப்பங்கு நிறுமங்களைப் போல் தனியாள் வணிகத்திற்கு நீடித்த வாழ்வு கிடையாது. தனியாள் உரிமையரின் வாழ்வைப் பாதிக்கும் எதுவும் அவருடைய தொழிலையும் பாதிக்கும். அவருடைய இறப்பு அல்லது வியாபாரம் செய்யும் திறமையை இழத்தல் அல்லது அவருக்கு வாரிசு இல்லாமை முதலியன தனியாள் வணிகத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும். எளிமை தனியாள் வணிகத்தைத் தொடங்கலும், கலைத்தலும் எளிது. தனியாள் வணிகத்தைக் கலைக்க சட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டியதில்லை. இதற்கு சிறிய அளவு முயற்சியே போதுமானது. உள்ளூர் வியாபாரம் பெரும்பான்மையான தனியாள் வணிகம் குறிப்பிட்ட தெரு, வட்டாரம் அல்லது கிராம் அளவிலேயே நடைபெறுகின்றன. சிலவகைத் தனியாள் வணிகங்கள் கிளைகளுடன் பல்வேறு இடங்களில் நடைபெறுகின்றன. சுய வேலைவாய்ப்பு தனியாள் வணிகர் பெரும்பாலும் தனது சொந்த உழைப்பையே வியாபாரத்தில் பயன்படுத்துகிறார். இவர் தேவைப்பட்டால் சில பணியாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறார் அல்லது குடும்ப அங்கத்தினர்களைத் துணையாகக் கொண்டு வியாபார நடவடிக்கையை மேற்கொள்கிறார். குறைந்த முதல் தனியாள் வணிகத்தை துவங்க மிகவும் குறைந்த முதலே போதுமானது. ஆனால், கூட்டாண்மை நிறுவனத்தையோ அல்லது கூட்டுப்பங்கு நிறுமத்தையோ தொடங்க அதிக அளவு முதல் தேவைப்படுகிறது. நன்மைகள் உலகிலேயே தனி நபர் கட்டுப்பாடு சிறந்தது வில்லியம் பேசட் அவர்கள், “உலகிலேயே தனி நபர் கட்டுப்பாடுதான் சிறந்தது என்றும் சிறிய தொழிலாக இருந்தால் மட்டுமே ஒருவர் அவ்வியாபார நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்பார்வை செய்ய இயலும்” என்று கூறுகிறார். தனிநபர் கட்டுப்பாட்டுக்கு சாதகமானவை எளிமையானது மற்றும் விரைவாக அமைத்தல் நேரடி கட்டுப்பாடு முயற்சி மற்றும் பலன் இணைதல் வியாபார இரகசியங்களைக் காத்தல் நுகர்வோரிடம் நெருங்கிய தொடர்பு இலாபம் முழுவதையும் அனுபவித்தல் சிக்கன மேலாண்மை சட்ட சிக்கல் இன்மை பணியாளரிடம் நேரடித் தொடர்பு சமுதாய விருப்பம் எளிதான அமைப்பு தொழிலமைப்பு வடிவங்களில் தனியாள் வணிகத்தை மட்டுமே சட்டச் சிக்கல்கள் ஏதுமின்றித் துவக்கலாம். ஒப்பந்தம், பதிவு முதலியன தனியாள் வணிகத்திற்குத் தேவையில்லை. எனவே தொழில் தொடங்க ஆர்வமுடையவர் எவரும் மிகக் குறுகிய காலத்திற்குள் இத்தொழிலைத் துவங்க முடியும். நேரடி ஊக்குவிப்பு வியாபாரத்தில் இலாபம் முழுவதும் தனிஆள் வணிகரையே சேர்கிறது. அதில் வேறு எவரும் பங்கு கோர முடியாது. அவர் தன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய இது உரிய ஊக்குவிப்பாக அமைகிறது. நெகிழ்வுத் தன்மை தனியாள் வணிகம் என்பது முழு அளவில் நெகிழ்வுத் தன்மையுடன் செயல்படக்கூடிய வணிக அமைப்பாகும். பொதுவாக தனியாள் வணிக அமைப்புகள் சிறியளவில் செயல்பட்டு வருகின்றன. தான் நடத்தி வரும் வணிகத்தை மாற்ற வேண்டும் என்றால் அதிக செலவினங்கள் இல்லாமல் மாற்றிக்கொள்ளலாம். இவ்வகைத் தொழில் அமைப்பில் தனி வணிகர் ஒருவரே உரிமையாளர் என்பதால் சந்தை நிலவரத்திற்கேற்பவும், வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்பவும் தன் வியாபார தன்மைகளை மாற்றிக்கொள்ளலாம். வியாபார இரகசியங்களைக் காத்தல் வியாபார வெற்றிக்கு வியாபார இரகசியங்களைக் காத்தல் மிகவும் இன்றியமையாததாகும். இதற்குத் தனியாள் வணிக முறை பெரிதும் உகந்தது. ஏனெனில், தன் வியாபார முடிவுகளை தனியாள் வணிகர் யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை. வியாபார கணக்குகளையும் மற்றும் தொழில் சார்ந்த உண்மைகளையும் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் தனியாள் வணிகத்தில் இல்லை விரைவான முடிவு தனியாள் வணிகர் ஒருவர், தானே உரிமையாளராகவும் இருப்பதால், முடிவு எடுக்கும் முன்பு அவர் வேறு எவரையும் கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியமில்லை. எனவே அவர் விரைவான முடிவு எடுத்து அதை காலதாமதமின்றி செயல்படுத்தவும் முடியும். இந்நன்மை கூட்டாண்மை மற்றும் கூட்டுப்பங்கு நிறுமங்களில் இல்லை. அதிக வெகுமதி தனியாள் வணிகர் தன் வியாபாரத்தை சரிவர கவனிக்கத் தவறினால் நட்டம் ஏற்பட்டுவிடும். இந்நட்டவச்சம் தனியாள் வணிகரின் கடின உழைப்பிற்குத் தூண்டுகோலாய் அமைகிறது. கடின உழைப்பு, கவனமான அணுகுமுறை, பொருளாதார சிக்கனம் ஆகியன நன்மைகளை தனிவணிகருக்கு வழங்குகிறது. திறன்மிகு கட்டுப்பாடு தனியாள் வணிகத்தில், உரிமையாளர் ஒருவர் மட்டுமே இருப்பதால். தொழில் நடவடிக்கைகளை நன்றாகத் திட்டமிட்டுச் செயல்படுத்த முடியும். இது வியாபார நடவடிக்கைகள் மீது அவர் மேற்கொள்ளும் கட்டுப்பாட்டின் திறனை அதிகரிக்க உதவும். மேலும் கொள்முதல், விற்பனை தொடர்பான முடிவுகளை தனி ஒருவரே மேற்கொள்வதால் ஏற்கெனவே திட்டமிட்டபடி மாற்றம் ஏதுமில்லாமல் வியாபாரத்தை தன் கட்டுப்பாட்டில் நடத்த வழி வகுக்கிறது. அதிகளவு விற்பனை தனியாள் வணிகரே வியாபாரத்தை நிர்வகிப்பதால் தன் வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்பு வைத்துக் கொள்கிறார். எனவே அவர், தன் வாடிக்கையாளர்களையும், அவர்களின் விருப்பு வெறுப்புகளையும் நன்கறிவார். இது பொருளின் தரம், வடிவம் முதலியனவற்றை வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப வழங்க உதவுகிறது. இதனால் விற்பனை அதிகரித்து வியாபாரத்தின் நற்பெயர் உயர்கிறது. வியாபாரத்தை எளிதாக நடத்துதல் தனியாள் வணிகம் சிறிய அளவிலான வியாபார நிறுவனமாதலால் தனவணிகர் தனக்கு அறிமுகமான ஒரு சிலரை பணியாளராக நியமிக்கிறார். மேலும் இப்பணியாளர்களிடம் நேரடித் தொடர்பு உள்ளதால் அவர்களைப் பற்றியும், அவர்களின் பிரச்சனைகளைப் பற்றியும் நன்கு தெரிந்து அவர்கள் திருப்தியடையும் வகையில் அவற்றிற்கு தீர்வு காண்பார். இவ்வாறு தனியாள் வணிகர் மற்றும் அவர் பணியாளர்களிடையே ஒரு சுமுக உறவு நிலவுதல், வேலை நிறுத்தம், வேலைக்கு வராமை போன்ற இடர்பாடுகள் இன்றி வியாபாரம் சுமூகமாக நடைபெற உதவுகிறது. சிக்கன மேலாண்மை தனியாள் வணிகத்தில் தனி ஒருவரே உரிமையாளராகவும், மேலாளராகவும் மற்றும் கட்டுப்பாட்டாளராகவும் செயல்படுவதால் ஊதியம் பெறும் மேலாளர், மற்றும் தொழில் நுட்பம் அறிந்த நபர்களை இவர் வேலைக்கு அமர்த்திக் கொள்வதில்லை. இவ்வாறு வியாபார நடவடிக்கைகள் அனைத்தையும் அவரே முன் நின்று செய்வதால் நிர்வாகச் செலவு குறைகிறது. அதிக நிதி தர மதிப்பீடு (Higher credit rating) தனியாள் வணிகரின் பொறுப்பு வரையறுக்கப்படாதது. தன் வியாபாரக் கடன்களைச் செலுத்த தன் தொழிலின் சொத்துக்கள் போதாத பட்சத்தில், தன் சொந்த சொத்துக்களிலிருந்து கடனீந்தோருக்குச் செலுத்த வேண்டும். இதனால் தனியாள் வணிகருக்கு பலர் கடன் தர முன்வருவர். இதனால் சரக்கீந்தோர் மற்றும் வங்கிகளிடமிருந்து அதிகக் கடன் பெறும் வாய்ப்பு தனியாள் வணிகருக்கு ஏற்படுகிறது. சுய வேலைவாய்ப்பு தனி வணிக அமைப்பு குறைந்த மூலதனமுடைய பல நபர்களுக்கு தொழில் தொடங்க வாய்ப்பளிக்கிறது. சுதந்திரமாக வாழ விரும்பும் மனிதருக்கும் மற்றவர்களிடம் அடிமைத் தொழில் செய்ய விரும்பாத நபர்களுக்கும் சுயதொழில் தொடங்க தனியாள் வணிகம் வாய்ப்பளிக்கிறது. ஆளுமை வளர்ச்சி (Personality develoment) தன்னம்பிக்கை, தொழில் தொடங்கும் முயற்சி, பொறுப்புணர்ச்சி, சுதந்திரமாக முடிவெடுத்தல் போன்ற சிறந்த பண்புகள் வளர தனி வணிக அமைப்பு வகை செய்கிறது. பொருளாதார வளங்கள் சமமாக பகிர்ந்தளிப்பு அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கி சுயவளர்ச்சிக்கு தனியாள் வணிகம் உதவுகிறது. தொழில் பரவலாக்கத்தை ஊக்கப்படுத்துவதுடன் ஒருவரிடமே அனைத்து செல்வமும் குவிதலை தனி வணிக அமைப்பு தடுக்கிறது. எளிமையான கலைப்பு தனியாள் வணிகத்தை கலைப்பது மிகவும் எளிது.. தனியாள் வணிகர் தான் விரும்பியபோது அவரது வணிக அமைப்பினை எவ்வித சட்டமுறை சிக்கலும் இல்லாமல் கலைக்கலாம். சிறந்த ஒருங்கிணைப்பு இவ்வகை வணிக அமைப்புகள் சிறிய அளவில் குறைந்த முதலுடன் செயல்படுவதால், தனியாள் வணிகம் தனது வணிக நடவடிக்கைகளை சிறந்த முறையில் ஒருங்கிணைப்பு செய்யமுடியும். தனி நபர் கட்டுப்பாட்டின் குறைபாடுகள் தனி நபர் கட்டுப்பாட்டில் பல்வேறு நன்மைகள் காணப்படினும் சில குறைபாடுகள் இவ்வமைப்பில் உண்டு. வியாபார நடவடிக்கைகள் அனைத்தையும் தனி நபர் ஒருவரால் மட்டுமே மேற்கொள்ள இயலாது. "தனிவணிகம் எப்போதும் ஆபத்தானது என்று தனிவணிகர் நினைக்கிறார். அவருக்கு உண்மையிலேயே எது தெரியாது என்பதும் அவருக்குத் தெரியும்”. என்று வில்லியம் பேசட் அவர்கள் கூறுகிறார். கீழ்வருவன தனி நபர் கட்டுப்பாட்டின் குறைகள் ஆகும். அளவான முதல் அளவான மேலாண் திறன் வரையறாப் பொறுப்பு பேரளவு தொழில் செய்ய இயலாமை இடர்பாடுள்ள முடிவுகள் நிலையற்ற தன்மை நிதித் தடை தனியாள் வணிக உரிமையாளர் தன்னுடைய சொந்த மூலதனத்தையும் மற்றவர்கள் வழங்கும் கடனையும் மட்டுமே நம்பி இருக்கிறார். தனி நபரிடம் உள்ள நிதி ஆதாரங்கள் வியாபாரப் பெருக்கத்திற்கேற்ப போதுமானதாக இராது என்பது வெளிப்படையானது. நிதித் தடை தனி வணிகத்திற்கு பெரும் குறையாக உள்ளது. எனவே தனி வணிகம் சிறிய அளவிலேயே எப்போதும் நடைபெறுகிறது. வரையறுக்கப்பட்ட மேலாண்மைத் திறன் ஒரு தனியாள் வணிக உரிமையாளரின் மேலாண்மைத் திறமைக்கும் எல்லை உண்டு. வியாபார நடவடிக்கைகளாகிய கொள்முதல், விற்பனை மற்றும் கணக்கியல் அனைத்திலும் தனி வணிகர் வல்லுநராக திகழ இயலாது. தொழில் நுட்பம் தெரிந்த வல்லுநரை பணியில் அமர்த்த இவரது நிதி நிலையும் இடம் தராது. வியாபார வளர்ச்சிக்குக் குறைந்த மேலாண்மைத் திறன் இடையூறாக அமைகிறது. வரையறாப் பொறுப்பு தனி வணிகரின் வரையறாப் பொறுப்பு அவருடைய ஆர்வத்தை பாதிப்பதாகவும், வியாபாரத்தில் நவீன எண்ணங்களைப் புகுத்தத் தடையாகவும் உள்ளது. குறுகிய வாழ்வு தனியாள் வணிக உரிமையாளரின் வாழ்வைப் பாதிக்கும் எதுவும் அவருடைய தொழிலையும் பாதிக்கும். நீண்ட கால நோய், அவருடைய இறப்பு ஆகியவை வியாபார நடவடிக்கைகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும். அவருடைய வாரிசுதாரர் ஆர்வத்துடனும் திறமையுடனும் வணிகத்தை நடத்தினால்தான் வணிகம் தொடர்ந்து செழிக்கும். இல்லையேல், அவருக்குப் பின், வியாபாரமும் முற்று பெறும். இவ்வாறு தனியாள் வணிகம் திடீர் என முடிவுக்கு வருவது நுகர்வோருக்கும், சமுதாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அவசர முடிவு பலருடன் தீர விவாதித்து, பின்னர் எடுக்கும் முடிவானது தனி ஒரு நபர் எடுக்கும் முடிவை விட சிறப்பாக இருக்கும். தனி நபர் முடிவை விட இரு நபர் முடிவே மேலானது எனக்கூறலாம். தனியாள் வணிகத்தில் அவசரத்தில் தவறான முடிவு எடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகமுண்டு. ஏனெனில், பலருடன் விவாதிக்காமல் தனியாள் ஒருவரே முடிவு எடுக்கிறார். இது தவறான முடிவாக அமைய வாய்ப்பு உள்ளது. ஆதலால் அவசர முடிவுகள் தொழிலில் நட்டத்தை ஏற்படுத்தும். சிறப்பு தேர்ச்சியின்மை (Non - Specialisation) கொள்முதல், விற்பனை, கணக்குப் பதிவியல், நிதி திரட்டுதல், விளம்பரம் செய்தல் போன்ற தொழிலின் அனைத்துப் பணிகளையும் தனி வணிகர் ஒருவரே மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. பல மரம் கண்ட தச்சன், ஒரு மரத்தையும் வெட்டமாட்டான் என்ற பழமொழி தனியாள் வணிகத்திற்குப் பொருந்தும். மூலதனம் குறைவாக இருப்பதால், பல்வேறு தொழில் துறைகளில் வல்லுநராய் விளங்குவோரை வேலைக்கமர்த்த இயலாது. எனவே சிறப்புத் தேர்ச்சியின் பயனை தனியாள் வணிகத்தில் அடைய இயலாது. குறைந்த அளவு வியாபாரம் முதல் மற்றும் திறமை குறைவாக இருப்பதால், தனி வணிகர்கள் தங்களது வணிக அமைப்புகளை சிறியதாகவே அமைத்துக் கொள்கின்றனர். இதனால் பேரளவு உற்பத்தியின் பயன்களை தனிவணிகர்களால் பெற இயலாது. கலந்து ஆலோசனையின்மை தனி வணிகர் சில முக்கிய முடிவுகளை எடுக்கும்போது குடும்ப அங்கத்தினரைத் தவிர, பிறரை கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுக்கிறார். அவரது முடிவு தவறானதாகிவிட்டால், இது பெரும் நட்டத்தில் முடிவடையும். நிலையற்ற தன்மை தனி வணிக அமைப்பின் வாழ்வு உறுதியற்றது, மற்றும் நிலையற்றது. நுகர்வோரின் நுகரும் தன்மையில் ஏற்படும் விருப்பு வெறுப்பு மற்றும் தொழில் நுட்ப மாற்றம் ஆகியவற்றைப் பொறுத்தே தனி வணிகரின் வியாபாரம் அமையும். அவ்வாறு தனியாள் வணிகம் நவீன வளர்ச்சிக்கேற்றவாறு தன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாவிட்டால் அவர் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். முழு நட்ட அபாயம் தனியாள் வணிகர் ஒரு நபராக இருப்பதால் தொழிலில் ஏற்படும் மொத்த நட்டத்தையும் அவர் ஒருவரே ஏற்க வேண்டும். தனியாள் வணிகத்திற்கு ஏற்ற தொழில்கள் தனியாள் வணிகத்திற்கு பொருத்தமான தொழில்கள் பின்வருவனவாகும் குறைந்த மூலதனமே தேவைப்படும் தொழில்கள் எ.கா. இனிப்பு கடை, அடுமனைகள்(Bakeries), பெட்டிக்கடை முதலியவை. விரைந்து முடிவெடுத்தல் முக்கியமானதாக கருதப்படும்போது. எ.கா. பங்குதாரர்கள், மருத்துவர்கள் முதலியவை. குறைந்த இடர்பாடுகள் உள்ள தொழில்கள், எ.கா. ஊர்தி பழுது பார்க்கும் தொழில், சில்லறை விற்பனை நிலையங்கள் முதலியவை. வாடிக்கையாளர்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப தனிக் கவனம் செலுத்த வேண்டிய தொழில்கள் எ.கா. அழகு நிலையங்கள், தையலகம் போன்றவைகள் உள்ளூர் தேவை, பருவ கால தேவை மற்றும் தற்காலிக தேவை உடைய தொழில்கள் எ.கா. சிறு வியாபாரம், சலவை நிலையம், பழ விற்பனையாளர்கள் முதலியவை. சமுதாயத்தில் தனியாள் வணிகரின் பங்கு நுகர்வோர்கள் மன்னர்களாக மதிக்கப்படுகிறார்கள். இவர்கள் வியாபாரத்தின் வெற்றியை நிர்ணயிக்கிறார்கள். வியாபாரிகள், நுகர்வோரின் தேவைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை பூர்த்தி செய்கின்றனர். நுகர்வோருக்குத் தேவையான சரக்குகள், சேவைகள் ஆகியவற்றைப் பூர்த்தி செய்வதில் தனி வணிகர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அன்றாடம் நுகர்வோருக்குத் தேவையான உணவு வகைகள், துணி வகைகள், எழுது பொருட்கள், சலவை, மளிகைப் பொருட்கள், புத்தகங்கள், செய்தித் தாள்கள், மருந்துப் பொருட்கள் முதலியன தனியாள் வணிகரால் அளிக்கப்படுகிறது. இவ்வகை பொருட்களை வழங்கும் தனி வணிகர்கள் சமுதாயத்தால் மதிப்படுகிறார்கள். மேலும் பேரளவு தொழில்கள் நிறைந்த உலகில் தனியாள் வணிக அமைப்பு தனக்கென தனி இடத்தைப் பெற்று உள்ளது. எனவே இவ்வகையான தொழில் அமைப்புகள் சமுதாயத்தாலும் விரும்பப்படுகிறது. சமுதாயத்திற்கு சேவை செய்வதில் தனி வணிகரின் பங்கு முக்கியமானது. கீழ்க்கண்ட வழிகளில் தனி வணிகர்கள் சமுதாயத்திற்கு தங்கள் பங்களிப்பை வழங்குகிறார்கள். வேலையில்லா பிரச்சனைக்குத் தீர்வு தனியாள் வணிகம் குறைந்த கல்வியறிவு உடையவருக்கும் கல்வியறிவு அற்றவருக்கும் வேலை வாய்ப்பு அளிக்கிறது. சமுதாயத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்குவதில் தனி வணிகம் பெரும் பங்கு வகிக்கிறது. முதலீட்டிற்கான வாய்ப்பு தனி வணிகம் சிறு முதலீட்டாளர்கள் குறைந்த முதலுடன் தொழில் தொடங்க வாய்ப்பளிக்கிறது. இது சிறு முதலீட்டாளர்களின் சேமிப்புகளை உற்பத்திக்குப் பயன்படுத்த உதவுகிறது. குறைந்த விலையில் பொருட்களை அளித்தல் நிர்வாகச் செலவு குறைவாக உள்ளதால் தனி வணிகர் பொருட்களின் மீதான அதிக பட்ச விலையை விட குறைவான விலைக்கு பொருட்களை விற்பனை செய்கிறார். சிறு உற்பத்தியாளருக்கு உதவுதல் உள்ளூர் உற்பத்தியாளரிடமிருந்து பெரும்பான்மையான பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உள்ளூர் சிறு உற்பத்தியாளர்கள் தனி வணிகரால் பயன்பெறுகின்றனர். தரமான பொருட்களை அளித்தல் தற்காலத்தில் தனி வணிகர் தன் வியாபார நன்மதிப்பைக் காக்க உயர்ந்த தரமான பொருட்களை விற்பனை செய்கிறார். விற்ற பொருட்களில் குறையிருப்பின் அதைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறார். இது மக்கள் நலம் உயர்த்துவதில் உத்திரவாதம் அளிக்கிறது. தர்ம சிந்தனையுடைய நடவடிக்கைகள் தனி வணிகர்கள் தங்களுக்குள் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டு கண் பரிசோதனை முகாம்கள், பூங்காக்களைப் பராமரித்தல், பாதையில் தடுப்புகளை ஏற்படுத்துதல், பள்ளிகளுக்கு அறைகலன்களை வழங்குதல் போன்ற பல்வேறு சமுதாய முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். வருமானம் மற்றும் வளங்களைச் சமமாகப் பகிர்ந்தளித்தல் பலர் வியாபார உலகில் தனியாள் வணிகராக ஈடுபட வாய்ப்பளிப்பதால் வருமானம் மற்றும் வளங்களைச் சமமாகப் பகிர்ந்தளிக்க உதவுகிறது. நுகர்வோருக்கு உதவுதல் தனியாள் வணிகர்கள் நுகர்வோர் வீட்டு வாசலிலேயே பொருட்களை கிடைக்கச் செய்கிறார்கள். இதனால் நுகர்வோரின் நேரமும், உழைப்பும் மிச்சப்படுத்தப்படுகிறது. முடிவுரை தனி ஒரு மனிதரால் வியாபார நடவடிக்கைகள் அனைத்தையும் திறமையாக மேற்பார்வை செய்ய இயலும் என்றால் தனி நபர் கட்டுப்பாடே, லாபத்தின் அடிப்படையிலும், திறமையின் அடிப்படையிலும் சிறந்தது எனக் கூறலாம். ஆதாரம்: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்