நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், பெண்களின் ஒட்டுமொத்த நலனை வலுப்படுத்தும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு ஏதுவாகவும், தேசிய மகளிர் ஆணையத்தின் 24 மணி நேர உதவி எண்ணை (7827170170) மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நல அமைச்சர் தொடங்கி வைத்தார். வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களை காவல்துறை, மருத்துவமனைகள், மாவட்ட சட்டச் சேவை ஆணையகம், உளவியல் சேவைகள் போன்ற தகுந்த அதிகாரிகளுடன் இணைப்பதே இந்த இணைய வழி உதவி எண்ணின் நோக்கமாகும். காணொலி வாயிலாக இந்த சேவையை தொடங்கி வைத்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நல அமைச்சர், எப்போதெல்லாம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்களோ, அப்போதெல்லாம் அரசும் ஆணையமும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் என்ற செய்தியை இந்த மின்னணு உதவி எண் வழங்குவதாக குறிப்பிட்டார். மேலும் பாதிப்புக்கு உள்ளான பெண்களுக்கு உதவுவதற்கு தேசிய மகளிர் ஆணையமும் பெண்கள் மற்றும் குழந்தை நல அமைச்சகமும் நீண்ட நாட்களாக இணைந்து பணியாற்றுவதாக அவர் தெரிவித்தார். பயிற்சி பெற்ற நிபுணர்கள், இந்த உதவி எண்ணில் பணி புரிவார்கள். தில்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து இயங்கும் இந்த உதவி எண்ணை, 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதிலான பெண்கள் அல்லது மகளிர் தொடர்பு கொள்ளலாம். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிட்டல் இந்தியா நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து இந்த மின்னணு உதவி எண் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்