கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பின் பணிகள் சுய உதவி குழுக்கள் தங்களுடைய வயதிற்கேற்ற வளர்ச்சி நிலையினை அடைந்து, சுயமாக செயல்படும் வரை குறிப்பிட்ட காலத்திற்கு உதவுதல் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் கடமையாகும். சுய உதவி குழுக்களை கண்காணிப்பது ஊராட்சி அளவிலான சுய உதவி குழுக்களின் கூட்டமைப்பின் பொறுப்பாகும். ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அமைக்கப்பட்டு (6 மாதங்கள் பூர்த்தி அடையும் வரை) தர மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படும் வரை சமூக சுய உதவி குழு பயிற்றுநர்கள் மூலமாக கிராம வறுமை ஒழிப்பு சங்கம் குழுக்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும். ஒவ்வொரு சமூக சுய உதவி குழு பயிற்றுநரும் புத்தக பராமரிப்பு மற்றும் குழுக் கூட்ட நடவடிக்கைகளுக்கு 10 முதல் 15 குழுக்களுக்கு உதவலாம். இவர்கள் துவக்க நிலையில் குழு கூட்டங்களில் பங்கேற்று குழு சிறப்பாக செயல்பட உறுதுணையாக இருத்தல் வேண்டும். கிராம வறுமை ஒழிப்பு சங்கம் சமூக சுய உதவி குழு பயிற்றுநருக்கான ஆய்வுக் கூட்டத்தினை குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு ஒரு முறை நடத்த வேண்டும். இந்த ஆய்வு கூட்டத்தில் சமூக சுய உதவி குழு பயிற்றுநர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், கூட்டமைப்பு மற்றும் திட்ட ஒருங்கிணைப்பு அணியினர் ஆகிய அனைவரும் இணைந்து குழுவின் வளர்ச்சி மற்றும் தேவை குறித்து ஆலோசிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் பகுதி அலுவலகத்தில் சமூக சுய உதவி குழு பயிற்றுநருக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற வேண்டும். அறிக்கை மூலம் கண்காணித்தல் ஒவ்வொரு குழுவும் தங்களின் மாதாந்திர முன்னேற்ற அறிக்கையினை தயார் செய்து குடியிருப்பு அளவிலான அமைப்பின் மூலம் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் / ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு பெறப்படும் அறிக்கையினை ஊராட்சியில் உள்ள கணினி வழி தகவல் தொகுப்பில் பதிவு செய்ய வேண்டும். இவ்வறிக்கை கிராம வறுமை ஒழிப்பு சங்கம் / ஊராட்சி அளவிலான கூட்டமைப்பால் தொகுக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும். இதனை அடிப்படையாகக் கொண்டு குழுக்களின் நிலையும், சமூக சுய உதவி குழு பயிற்றுநர்களின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்படும். கிராம வறுமை ஒழிப்பு சங்கம் / ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு தங்கள் ஊராட்சிக்குட்பட்ட குழுக்களின் முன்னேற்ற அறிக்கையினைத் திட்ட ஒருங்கிணைப்பு அணிக்கு வழங்கும். இந்த அறிக்கையினை ஆய்வு செய்வதன் மூலம் குழுக்களின் வளர்ச்சி கண்காணிக்கப்படும். குழுவை பராமரிப்பதற்கான நிதி குழு கண்காணிப்பு செலவினம் முதல் இரண்டு வருடங்களுக்கு கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் திறன் வளர்ப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும். இரண்டாண்டுகளுக்கு பின்பு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் கூட்டமைப்புப்பின் பொது நிதியின் மூலம் கண்காணிப்பு செலவீனம் மேற்கொள்ளப்படும். ஆதாரம்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்