தேசிய மகளிர் ஆணையம் பெண்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான முதன்மை சட்டப்பூர்வ அமைப்பாக தேசிய மகளிர் ஆணையம் செயல்படுகிறது. பெண்களின் நல்வாழ்வுக்காகவும் அவர்களுக்கு அதிகாரமளிக்கவும் குரல் கொடுக்கும் இந்த தளம், வரதட்சணை கொடுமை, சம வேலைவாய்ப்பு வாய்ப்புகள், தொழிலாளர் சுரண்டல் போன்ற பல்வேறு முக்கிய விவகாரங்களை கையாள்கிறது. ஒவ்வொரு ஆண்டும் குடும்ப வன்முறை சார்ந்த பல்வேறு புகார்கள் ஆணையத்திற்கு வருகின்றன. இத்தகைய பாதிப்புகள் பெண்களின் மன ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதால் அவர்களுக்கு தொழில்முறை உளவியல் ஆதரவு தேவைப்படுகிறது. பெண்களுக்கான உதவி எண் 14490 துயரத்திலுள்ள பெண்களுக்கு உதவும் நோக்கில், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் ‘14490’ என்ற டிஜிட்டல் புகார் பதிவு முறை கொண்ட உதவி எண்ணை தேசிய மகளிர் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. இந்த இலவச எண், எளிதில் நினைவில் கொள்ளும் வகையிலான ஆணையத்தின் தற்போதைய 7827170170 என்ற உதவி எண்ணுடன் இணைக்கப்பட்ட ஒரு குறியீடாகும். 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு பெண்ணும் இந்த உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார்களைப் பதிவு செய்து உடனடி உதவியைப் பெற முடியும். வல்லுநர்களின் ஆலோசனையும் வழிகாட்டுதலும் முன்னணி மனநல ஆலோசனை நிறுவனங்களைச் சேர்ந்த பயிற்சி பெற்ற உளவியல் ஆலோசகர்கள் இதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது உதவி தேவைப்படுபவர்களுக்கு கனிவான வழிகாட்டுதலை உறுதி செய்கிறது. பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பெண்கள் டிஜிட்டல் முறையில் புகார்களைப் பதிவு செய்து பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் மூலம் ஆலோசனைகளைப் பெறுவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். உளவியல் ஆலோசனைகளை வழங்குவதுடன் காவல்துறை, மருத்துவமனைகள், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த அவசரகால மையம், பாதுகாப்பு அலுவலர் போன்ற தொடர்புடைய அமைப்புகளுக்குப் பரிந்துரை செய்வதையும் இது எளிதாக்குகிறது. தகுந்த ஆதரவுக்கான சேவைகள், அரசின் திட்டங்கள் குறித்த தகவல்களையும் இது வழங்குகிறது. டிஜிட்டல் சேவை இந்த மகளிர் உதவி எண் பொதுச் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் இந்தியா இயக்க கொள்கைகளையும் உள்ளடக்கியுள்ளது. இது புகார்களைப் பதிவு செய்வதற்கான ஒரு டிஜிட்டல் மையமாகத் திகழ்கிறது. செயல்படும் முறை தேசிய அளவிலான இந்த உதவி எண் அவசரக் காலங்களில் தேவைப்படும் ஆதரவை வழங்குகிறது. தேசிய மகளிர் ஆணையம் புகார்களை ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றுகிறது. புகார்கள் ஆணையத்தின் அதிகார வரம்பிற்குள் வருகிறதா என்பதைத் தீர்மானிக்க அவை முதலில் தீவிரமாகப் பரிசீலிக்கப்படுகின்றன. ஆணையத்தின் விதிகளின் கீழ் வரும் புகார்கள் பதிவு செய்யப்பட்டு அவற்றுக்கு ஒரு தனித்துவமான வழக்கு எண் வழங்கப்படுகிறது. அதிகார வரம்பிற்குள் வராத புகார்கள் மனுதாரருக்குத் தெரிவிக்கப்பட்ட பின்னர் முடித்து வைக்கப்படுகின்றன. வழக்கின் தன்மையைப் பொறுத்து, பதிவு செய்யப்பட்ட புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றன. புகார்தாரர்களின் குறைகளைத் தீர்க்க காவல்துறை விசாரணையை விரைவுபடுத்துதல், சட்ட விதிகளின் சரியாக பின்பற்றப்படுவதைக் கண்காணித்தல், சமரசம் அல்லது ஆலோசனை மூலம் சிக்கல்களைத் தீர்த்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கடுமையான குற்றங்களுக்கு இந்த ஆணையம் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து வழக்கின் பல்வேறு அம்சங்களை மேலும் விரிவாக ஆராய்கிறது. பெறப்படும் புகார்களின் பகுப்பாய்வு, பெண்களுக்கு எதிரான குற்றங்களின் தன்மைகளையும் போக்குகளையும் பற்றி அறிய உதவுகிறது. இதன் மூலம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கையாளும் அமைப்புகளின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிய முடியும். நாட்டின் அனைத்துப் பகுதியைச் சேர்ந்த பெண்களின் பாதுகாப்பையும் பலப்படுத்துவதில் இந்த உதவி எண் முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280625®=3&lang=1 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்