போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி நாடெங்கிலும் உள்ள பட்டியலின வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தரமான கல்வி மற்றும் சம வாய்ப்புகளை உறுதி செய்யும் நோக்கில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் பல்வேறு முன்முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆண்டுதோறும் 5,000 தகுதியுள்ள மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி வழங்குவதற்காக 'பிசிக்ஸ் வாலா' (Physics Wallah - PW) அறக்கட்டளையுடன் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பட்டியலின வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் 'பிஎம் கேர்ஸ்' திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகள் என இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் பயன்பெறுவர். குடிமைப் பணிகள் தேர்வு, பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் மற்றும் வங்கித் தேர்வுகள் போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி பெரும் உதவியாக இருக்கும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு நேரடி மற்றும் பதிவு செய்யப்பட்ட வகுப்புகள், மாதிரித் தேர்வுகள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் வழிகாட்டுதல் ஆலோசனைகள் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். தகுதியான பயனாளிகள் பிரத்யேக இணையதளம் வழியாகத் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சமூக உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதும், உயர்தரப் பயிற்சி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுமே இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்