திட்டத்தை பற்றிய விளக்கம் மத்திய அரசு புதிதாக ஏற்படுத்தியுள்ள திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தினால், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (NSDC) மூலமாக இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கும் முன்னோடித் திட்டம் இதுவாகும். இத்திட்டத்தின் கீழ் சுமார் 24 லட்சம் இளைஞர்கள் பயன் பெறுவார்கள். தேசிய திறன் தகுதி கட்டமைப்பு (NSQF) மற்றும் தொழில் துறையின் நிர்ணயித்துள்ள தரத்திற்கு திறன் பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெறுவோரின் திறன்களை மூன்றாம் தரப்பினரைக் கொண்டு மதிப்பிட்டு வெகுமதியும் அளிக்கப்படும். ஒவ்வொரு திறன் பயிற்சியாளருக்கும் ரூ. 8000 அளவிற்கு வெகுமதிகள் கிடைக்கும். தகுதியானவர்கள் இத்திட்டத்தின் நோக்கத்திற்கு ஏற்ப, இந்திய குடிமகனான கீழ்காணும் நிபந்தனைகள் நிறைவு செய்கிறவர் திறன் பயிற்சி வெகுமதியை பெறலாம்: தகுதியுள்ள ஒரு துறையில் தகுதியுள்ள ஒரு பயிற்றுநரிடம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெறுகிறவர்கள். திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களின் மேம்பாட்டுத் திறனை சான்றளிக்கப்பட்ட மதிப்பிடும் நிறுவனங்கள் ஓராண்டு காலத்திற்குள் மதிப்பிட்டு சான்று பெறுகிறவர்கள். இத்திட்டம் செயல்படும் காலத்தில் ஒருவருக்கு ஒரு முறை மட்டும் வெகுமதி கிடைக்கும். சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளருக்கு பணப் பரிமாற்றம் செயல்முறை திறன் பயிற்சி பெறுகிறவர் தனக்கு விருப்பமான திறனுக்காக ஒரு பயிற்சி மையத்தில், ஒரு பயிற்று நபரிடம் பதிவு செய்யது கொள்ள வேண்டும். திறன் பயிற்சி பெறுகிறவர் தனக்கு பயிற்றுவிக்கும் நபரிடம் தக்க பயிற்சிகளிக்க ஏதுவாக தன்னைப் பற்றிய முழு விபரங்களையும் அளிக்க வேண்டும். பயிற்சி முடிவில் பயிற்சி மையத்தில் தன்னை மதிப்பீட்டுக்கு உட்படுத்த வேண்டும். வெற்றிகரமாக மதிப்பீட்டை முடித்த பின் பயிற்றுநர் தரும் சான்றிதழை பெற வேண்டும். பயிற்சி முடித்து மதிப்பீட்டு சான்றிதழ் பெற்றவர்களின் ஆதார் எண் சரி பார்க்கப்பட்டு தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் வெகுமதி பணத்தைத் தரும். இது பற்றி மேலும் விபரங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அழைப்பு மையத்தை 088000-55555 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது pmproy@nsdc.india.org என்ற மின்னஞ்சல் முகவரியில் எழுதி பெறலாம். நிதி ஒதுக்கீடு பதினான்கு லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதற்காக ரூ. 1120 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏதேனும் திறன் பயிற்சி பெற்றவர்களுக்கு சிறப்பான கவனம் செலுத்தப்படும். அதற்கென ரூ. 220 கோடி செலவிடப்படும். திறன் பயிற்சி அளிக்கப்படுவது பற்றிய விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்தவும், கவனத்தை ஒருமுகப்படுத்தவும் ரூ. 67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசுகள், முனிசிபல் கழகங்கள், பஞ்சாயத்துராஜ் அமைப்புகள், சமுதாய சங்கங்கள் ஆகியவற்றின் பங்களிப்போடு உள்ளுர் அளவில் திறன் மேளாக்கள் நடத்தி, இளைஞர்கள் திறன் பயிற்சிக்கு ஈர்க்கப்படுவார்கள். திறன் பயிற்சி அளிக்கும் பயிற்றுநர்களுக்கும் ஆதரவு அளிப்பதும் இத்திட்டத்தில் முக்கிய கவனம் பெறும். பயிற்சி பெற்றவர்களுக்கு தக்க வேலை கிடைப்பதற்கும் உதவி செய்யப்படும். இவற்றுக்காக ரூ. 67 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திறன் தேவையை மதிப்பிடுதல் 2013 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை நம் நாட்டில் தேசிய திறன் மேம்பாட்டு கழகம் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ள திறன் இடைவெளிகளை நிரப்புகின்ற வகையில் திறன் பயிற்சிகள் அளிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். எத்தகைய திறன் பெற்ற தொழிலாளர்கள் தேவை என்று அறிந்து கொள்ள மத்திய – மாநில அரசுகளின் அமைச்சகங்களும் தொழில் துறையினருடனும் வணிகத் துறையினருடனும் கலந்தாலோசிக்கப்படும். எத்தகைய திறன் தேவைப்படுகிறது என்று அனைத்து தரப்பினரும் தமது தேவைகளை தெரிவிக்க ஏதுவாக விரைவிலேயே ஒரு பொதுவான தளம் ஏற்படுத்தப்படும். அண்மையில் இந்திய அரசு தொடங்கியுள்ள இந்தியாவில் தயாரிப்போம், டிஜிட்டல் இந்தியா, தேசிய சூரிய சக்தி இயக்கம், தூய்மை பாரத இயக்கம் போன்ற திட்டங்களுக்கு தேவைப்படும் திறன்களை உருவாக்குவதாகவும் பயிற்சிகள் அமையும். தொழிலாளர் சந்தையில் முதன்முதலாக அடியெடுத்து வைக்கும் இளைஞர்களை – குறிப்பாக, 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு படிப்புகளை பாதியில் நிறுத்தி விடும் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதாக இத்திட்டம் இருக்கும். திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தை செயல்படுத்துதல் தேசிய மேம்பாட்டு திறன் மேம்பாடு கழகத்தின் பயிற்சி பங்காளர்கள் மூலமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இக்கழகத்தில் தற்போது 187 பயிற்சி பங்காளர்கள் உள்ளனர். 2300க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் உள்ளன. இதைத் தவிர மத்திய / மாநில அரசுகளின் இணைவு பெற்ற பயிற்சி மையங்களும். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்க பயன்படுத்திக் கொள்ளப்படும். பயிற்சி அளிக்கும் மையங்கள் யாவும், இத்திட்டத்தின் கீழ் தகுதி பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவு செய்ய வேண்டும். திறன் பயிற்சிக்காக மேம்பட்ட பாடத்திட்டங்கள், சீரிய பயிற்சி முறைகள், சிறப்பான பயிற்றுநர்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மென்திறன், தனிமனித ஆளுமை வளர்ச்சி, தூய்மையை பேணுகின்ற நன்னடத்தை, சிறந்த பணிப் பண்பாடு போன்றவையும் பயிற்சிகளில் இடம்பெறும். அளிக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை மாநில அரசுகளும், மண்டல திறன் கவுன்சில்களும் உன்னிப்பாக கண்காணிக்கும். PMKVY ஆதாரம்: www.pmkvyofficial.org