துடிப்பான கிராமங்கள் திட்டம் துடிப்பான கிராமங்கள் திட்டம் (Vibrant Villages Programme), இந்தியாவின் எல்லைக் கிராமங்களின் வளர்ச்சியை அதிகரித்துள்ளன. இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக ரூ.11,639 கோடி ஒருங்கிணைந்த செலவில் செயல்படுத்தப்படுகிறது. இது இந்தியாவின் சர்வதேச தரைப் பகுதி எல்லைகளிலுள்ள கிராமங்களில் சாலை இணைப்பு, மின்சாரம், தொலைத்தொடர்பு, சுகாதாரம், கல்வி, வாழ்வாதார வாய்ப்புகள் ஆகியவற்றை விரிவுபடுத்துகிறது. துடிப்பான, செழிப்பான எல்லைச் சமூகங்களை உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு, நிலையான பொருளாதார வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. எல்லைப்புற கிராமங்கள் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது இந்தியா, ஏழு அண்டை நாடுகளுடன் 15,000 கிலோமீட்டருக்கும் அதிகமான சர்வதேச நில எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இதில் மிக நீளமான பகுதியாக, பங்களாதேஷுடனான எல்லை 4,096.7 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சீனா 3,488 கிலோமீட்டர், பாகிஸ்தான் 3,323 கிலோமீட்டர் எல்லையைக் கொண்டுள்ளன. இந்தியாவுடன் மீதமுள்ள எல்லையை நேபாளம், மியான்மர், பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் கொண்டுள்ளன. கடினமான நிலப்பரப்பு, பலவீனமான இணைப்பு வசதிகள், குறைந்த உள்கட்டமைப்பு, குறைவான வாழ்வாதார வாய்ப்புகள் ஆகியவற்றால் பல எல்லைக் கிராமங்கள் பல ஆண்டுகளாகத் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன. இந்தச் சவால்கள் மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு வழிவகுத்து, பல எல்லைப் பகுதிகளில் மக்கள்தொகையைக் குறைத்தன. இந்த நீண்டகாலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில், 2023- ல் துடிப்பான கிராமங்கள் திட்டம் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் எல்லைக் கிராமங்களின் முழுமையான வளர்ச்சியை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வடக்கு எல்லைக் கிராமங்களில் தொடங்கி, அரசு இத்திட்டத்தை முழு நில எல்லைப் பகுதிக்கும் கட்டம் கட்டமாக விரிவுபடுத்தியுள்ளது. இரண்டு கட்டங்கள், ஒரே பணி இந்தியாவின் முழு சர்வதேச தரை எல்லையையும் உள்ளடக்கிய வகையில் இரண்டு கட்டங்களாக 'துடிப்பான கிராமங்கள் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த இரண்டு கட்டங்களும் இணைந்து, ரூ. 11,639 கோடி செலவில் 2616 -க்கும் மேற்பட்ட கிராமங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. முதல் கட்டம் மாநிலங்களுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட ஒரு மத்திய அரசின் நிதியுதவித் திட்டமாகும். இரண்டாம் கட்டம் என்பது மத்திய அரசால் முழுமையாக நிதியளிக்கப்படும் ஒரு மத்திய துறைத் திட்டமாகும். திட்டத்தின் தாக்கம் இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, எல்லைக் கிராமங்களில் அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. 2026 ஜூலை நிலவரப்படி, மத்திய உள்துறை அமைச்சகம் ரூ. 3,020.32 கோடி ஒதுக்கீட்டில் இத்திட்டத்தின் கீழ் 1,248 திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. துடிப்பான கிராமங்கள் திட்டம் என்பது, இந்தியாவின் எல்லைப்புற சமூகங்கள் நாட்டின் முன்னேற்றத்தில் முழுமையாகப் பங்கு கொள்வதற்கான திட்டமாகும். மேம்பட்ட உள்கட்டமைப்பு, நிலையான வாழ்வாதாரங்கள், அரசுத் திட்டங்களின் ஒருங்கிணைப்பு ஆகியவை பல வாய்ப்புகளை உருவாக்குகின்றன. அதே நேரத்தில், எல்லைப்புறச் சுற்றுலாவும் உள்ளூர் தொழில்முனைவும் இப்பகுதியின் ஆற்றலை அதிகரிக்கின்றன. இந்தக் கிராமங்கள் மேலும் துடிப்பானவையாகவும், செழிப்பானவையாகவும், தன்னிறைவு பெற்றவையாகவும் மாறும்போது, அவை இந்தியாவின் எல்லைகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி, 2047-ம் ஆண்டிற்குள் பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும். மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2307094®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்