ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் அண்டை வீட்டு கூட்டமைப்புகளை வலுப்படுத்துதல்

மகளிர் சுய உதவி குழுக்களின் இயக்கத்தை வலுப்படுத்தி நிலைத்த தன்மை உடையதாக்க ஊராட்சி அளவில் சுய உதவி குழு கூட்டமைப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.

கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு பயிற்சியளித்தல், ஆதார நிதி வழங்குதல் மற்றும் சிறந்த கூட்டமைப்புகளுக்கு விருது வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பினை வலுப்படுத்துகின்றன.

ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளை மறுசீரமைத்தல், திறன் வளர்த்தல் மற்றும் ஊக்கத்தொகை வழங்குதல்

பயன்களை பெறுவதற்கான தகுதிகளும் நிபந்தனைகளும்

மறுசீரமைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டதில் இருந்து ஆறு மாதங்கள் முடிந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு.

பங்கேற்பு, உள்ளாக்கம், நிர்வாகத் திறன், வெளிப்படைத் தன்மை, கடனை திருப்பி செலுத்துதல் மற்றும் சமூக நல முயற்சிகள் ஆகிய காரணிகளின் அடிப்படையில் தரம் மதிப்பீட்டில் தேர்வு பெற்ற ஊராட்சி அளவிலான கூட்டமைப்பாக இருக்க வேண்டும்.

திட்டத்தின் செயல்பாடு

சுய உதவி குழுக்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கும் குறைகளை வெளிப்படுத்துவதற்கும், ஒன்று கூடி தீர்வு காண்பதற்கும் ஒரு பங்கேற்பு களமாக கட்டமைப்புகள் அமைக்கப்படும்.

சுய உதவி குழுக்கள் சாதிக்க முடியாததை, அவை கூட்டமைப்பில் இணைந்து தங்களுடைய ஒட்டு மொத்த ஆற்றலையும் வளங்களையும் ஒருங்கிணைப்பதன் மூலமாக சாதிக்கலாம். பொருட்களை கொள்முதல் செய்வதிலும் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதிலும் கூட்டமைப்புகள் பயனுள்ள வகையில் செயலாற்றும்.

கூட்டமைப்புகள் தங்களது ஊராட்சிகளில் புதிய சுய உதவி குழுக்கள் அமைத்து பயிற்சிகள் வழங்கி அவற்றை வழி நடத்தி கண்காணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

சுய உதவி குழுக்களின் பொதுவான இலட்சியங்களை பிரதிபலிக்கின்ற வலுவான மற்றும் ஒற்றுமையான கூட்டமைப்புகள் அமைக்கப்படும்.

ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் ஒருங்கிணைந்த, வெளிப்படை தன்மை வாய்ந்த மக்கள் இயக்கமாக விளங்கவும், அவற்றை தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம், 1975ன் கீழ் பதிவு செய்து சட்ட அங்கீகாரம் வழங்கி அவற்றின் நிர்வாகத் திறன் மற்றும் நிலைத்த தன்மையை மேம்படச் செய்வதே கூட்டமைப்புகளை மறுசீரமைப்பதின் தலையாய நோக்கமாகும்.

வழங்கப்படும் பயிற்சிகள்

நிர்வாகிகளுக்கான நிர்வாகத் திறன் பயிற்சி

கள பயணத்துடன் மூன்று நாட்கள் உறைவிட பயிற்சி பயணப்படியுடன் வழங்கப்படுகிறது.

நிதி மேலாண்மை பயிற்சி

மூன்று நாட்கள் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் கணக்காளருக்கு உறைவிட பயிற்சியாக பயணப்படியுடன் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில் தொண்டு நிறுவனங்களாக அங்கீகரிக்கப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் நிர்வாகிகளுக்கான பயிற்சி

மூன்று நாட்கள் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் கணக்காளருக்கு உறைவிட பயிற்சியாக பயணப்படியுடன் வழங்கப்படுகிறது.

செயற்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி

மூன்று நாட்கள் பயிற்சி ஊராட்சி அளவிலேயே வழங்கப்படும். ஊக்குநர் மற்றும் பிரநிதிக்கான பயிற்சிகளில் வழங்கப்படுவது போல் உறுப்பினர் ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ. 67.50 செலவிடப்படும்.

குடியிருப்பு மன்ற நிர்வாகிகளுக்கான பயிற்சி

இரண்டு நாட்கள் பயிற்சி ஊராட்சி அளவிலேயே வழங்கப்படும். ஊக்குநர் மற்றும் பிரநிதிக்கான பயிற்சிகளில் வழங்கப்படுவது போல் உறுப்பினர் ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ. 67.50 செலவிடப்படும்.

வழங்கப்படும் உதவித் தொகை

தர மதிப்பீட்டில் தேர்வு பெற்ற ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் ஊக்க நிதியாக வழங்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

மாவட்ட திட்ட அலுவலர், மகளிர் திட்டம்

அண்டை வீட்டு கூட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் ஊக்கத் தொகை வழங்குதல்

பயன்களை பெறுவதற்கான தகுதிகளும் நிபந்தனைகளும்

நகர்ப்புறங்களில் அண்டை வீட்டு கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டதில் இருந்து ஆறு மாதங்கள் முடிந்த கூட்டமைப்புகள்

பங்கேற்பு, உள்ளாக்கம், நிர்வாகத் திறன், வெளிப்படைத் தன்மை, கடனை திருப்பி செலுத்துதல் மற்றும் சமூக நல முயற்சிகள் ஆகிய காரணிகளின் அடிப்படையில் தரம் மதிப்பீடு செய்யப்படுவதில் தேர்வு பெற்ற அண்டை வீட்டு கூட்டமைப்புகள் அளவிலான கூட்டமைப்பாக இருக்க வேண்டும்.

திட்டத்தின் செயல்பாடு

நகர்ப்புற ஏழை பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு ஒரு நிறுவன அமைப்பை அளிப்பதற்காக அண்டை வீட்டு கூட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

அண்டை வீட்டு கூட்டமைப்புகள், சட்ட ரீதியான அங்கீகாரம் பெறுவதற்கு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1975-ன் கீழ் பதிவு செய்யப்படும்.

வழங்கப்படும் உதவித் தொகை

தரமதிப்பீட்டில் தேர்வு பெற்ற அண்டை வீட்டு கூட்டமைப்புகளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் ஊக்க நிதியாக வழங்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

மாவட்ட திட்ட அலுவலர், மகளிர் திட்டம்

ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு பெருங்கடன்

பயன்களை பெறுவதற்கான தகுதிகளும் நிபந்தனைகளும்

தர மதிப்பீட்டில் தேர்வு பெற்ற ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள்

திட்டத்தின் செயல்பாடு

ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளால் வங்கிகளிலிருந்து கடன் பெற்று, உறுப்பினர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்படுகின்றன.

வழங்கப்படும் கடன் தொகை

கடன் விண்ணப்பம் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு, கடன் தேவை மற்றும் நுண்கடன் திட்டத்தின் அடிப்படையில் பெருங்கடனுக்கான தொகை நிர்ணயம் செய்யப்படும்.

பொதுவாக பெருங்கடன் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் உறுப்பினர் குழுக்களின் எண்ணிக்கை அடிப்படையில் ரூ. 20 இலட்சம் முதல் ரூ. 40 இலட்சம் வரை பெறப்பட்டு, உறுப்பினர் குழுக்களுக்கு அவர்களது தேவையின் அடிப்படையில் குடும்ப செலவுகள் அல்லது ஏதேனும் தொழில் செய்ய கடனாக வழங்கப்படும்.

இக்கடன்களுக்கு ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் 3.5 விழுக்காடு வட்டி கூடுதலாக வைத்து, 15 விழுக்காட்டிற்கு மிகாமல் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

மாவட்ட திட்ட அலுவலர், மகளிர் திட்டம்

ஆதாரம்: தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்