கண்காட்சிகள்

ஒவ்வொரு ஆண்டும் தேசிய மற்றும் மாநில அளவில் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை பிரபலப்படுத்தவும், சந்தைப்படுத்தவும் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் விற்பனை கண்காட்சிகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

கல்லூரி சந்தை

இளைஞர்களிடையே சுய உதவி குழு பொருட்களை பிரபலப்படுத்தும் நோக்கத்தோடு விழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளின் போது கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் ‘கல்லூரி சந்தைகள்’ நடத்தப்படுகின்றன.

மதி பஜார்

தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் மின் வணிக சந்தையின் மூலம் சுய உதவி குழு உற்பத்தி பொருட்களின் விற்பனையை மேம்படுத்திட “மதி பஜார்” என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளம் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு பொருட்களை கொண்டு சேர்த்து, விற்பனை தொகையை இணையதளம் மூலம் செலுத்திடும் வசதியை ஏற்படுத்தி தருவதால் சுய உதவி குழுக்களின் கைவினை பொருட்களுக்கு நல்ல சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இம்மின் வணிக சந்தை முயற்சி சுய உதவி குழுக்களின் பொருட்களுக்கு உலகளவில் ஒரு அறிமுகத்தை ஏற்படுத்தி தரும். சர்வதேச அளவில் சுய உதவி குழு உற்பத்தி பொருட்களின் கண்காட்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

மாநில வழங்கல் மற்றும் விற்பனை சங்கம்

சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்தும் நோக்கத்தோடு, மாநில அளவில், மாநில வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் அமைக்கப்பட உள்ளது. மாவட்டங்களில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப, விற்பனை செய்திட மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மாநில அளவில் ஏற்படுத்தவுள்ள மாநில வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்துடன் ஒருங்கிணைத்து செயல்பட உள்ளது. சுய உதவி குழுக்கள் தங்களது பொருட்களின் விற்பனையை பெருக்க இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

மேலாளர், மாநில வழங்கல் மற்றும் விற்பனை சங்கம், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்

சுய உதவி குழுக்களுக்கான செயல்பாடுகள்

6,035.56 கோடி ரூபாய் வங்கி இணைப்பு கடனாக சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

22.45 கோடி ரூபாய் பெருங்கடனாக 112 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

32 மாவட்டங்களில் 152 கல்லூரி சந்தைகள் நடத்தப்பட்டு 3,232 சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டு 218.47 இலட்சம் ரூபாய் அளவில் சுய உதவி குழு உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சுய உதவி குழு உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திட மதி பஜார் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

10 பிளாஸ்டிக் மறுசுழற்சி மையங்கள் தலா ரூபாய் 3.75 இலட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு சுய உதவி குழுக்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

3 மாநில அளவிலான விற்பனை கண்காட்சிகள் நடத்தப்பட்டு ரூபாய் 188 இலட்சம் மதிப்பீட்டில் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

3,176 வங்கி முகவர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

சுய உதவி குழுக்களுக்கு அதிகமாக கடன் இணைப்பு வழங்கியமைக்காக இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பல்லவன் வங்கிக்கு மாநில அளவிலான சிறந்த வங்கியாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது.

100 விழுக்காடு உறுப்பினர்களுக்கு எழுத்தறிவு பெற்றமைக்காக 12 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு முழு எழுத்தறிவு பெற்ற ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

34,712 சுய உதவி குழுக்களில் உள்ள 4,67,638 உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்