அறிமுகம்

ஏழை மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக மத்திய அரசு, வருமானம் ஈட்டக்கூடிய சொத்துக்களில் உருவாக்கி, அதன் மூலம் ஏழை மக்களின் வறுமையை ஒழிக்கும் நோக்கத்துடன் கடந்த காலங்களில் பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியது. ஏழைக் குடும்பங்களை சமூக ஒருங்கிணைப்பு அணுகுமுறையின் மூலம் சுய உதவிக் குழுக்களாக ஒருங்கிணைத்து செயல்படும் வகையில், “பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்பு திட்டத்தை (SGSY)' உருவாக்கி செயல்படுத்தியது. எனினும் வறுமை ஒழிப்பு என்ற அரசின் உன்னத நோக்கம் முழுமைப் பெறவில்லை. இதனைக் கருத்திற் கொண்டு, மத்திய அரசு “பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்பு திட்டத்தை’ மறுசீரமைத்து “தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (National Rural Livelihood Mission)” என்ற பெயரில் தேசிய அளவில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தொலைநோக்கு கொள்கைகள், மாநில மக்களின் தேவைக்கேற்பவும், ஏழை மக்களின் நிறைவேற்றப்படாத தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையிலும், இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும், வட்டாரங்களிலும், ஊராட்சிப் பகுதிகளிலும் முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

குறிக்கோள்

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஏழைமக்களையும், மிகவும் ஏழைகளையும் மக்கள் பங்கேற்புடன் அடையாளம் கண்டறிந்து அவர்களை சுய உதவிக் குழுக்களாக ஒருங்கிணைத்தல். ஊரக ஏழைகளுக்காக வலுவான, உயிரோட்டத்துடன் கூடிய மக்கள் அமைப்புகளை உருவாக்கி, அவற்றை நிலைத்த தன்மையுடன் செயல்பட வைத்தல். இலாபம் பெறக்கூடிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதன் மூலம் குடும்ப வருமானத்தை உயரச் செய்து, வறுமையிலிருந்து விடுவித்தல், வாழ்க்கைத் தரத்தின் நிலையை மேம்படுத்தி அவர்களுடைய சுய மரியாதையை ஊக்குவித்தல்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மக்களுக்காக மக்களே முன்நின்று நடத்தும் இயக்கமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வியக்கத்தின் செயல்பாடு, கிராமத்தில் உள்ள ஏழை மக்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் (அவர்களாகவே) வறுமையை அகற்றும் நோக்குடன் திட்டமிட்டு செயல்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் வாழ்வாதாரத்தை அடிப்படையாக கொண்ட இயக்கமாகும். எனவே, இத்திட்டத்தின் செயல்பாடு ஒதுக்கீட்டு அணுகுமுறையில் இருந்து வேறுபடும். இலக்குகளையும், இயக்க கோட்பாடுகளையும் மையமாகக் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் சேவைகள் வழங்கும் அமைப்பாக செயல்படும். தொடர்ச்சியான திறன்வளர்ப்பு பயிற்சிகள் மூலம் அவர்களுடைய திறமைகளையும், திறன்களையும் மேம்படுத்தி பலதரப்பட்ட இணைப்புகளை ஏற்படுத்தி, ஏழைகளுக்கு தேவையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கி தரப்படும்.

ஏழைகள் வறுமையிலிருந்து விடுபடுவதை இலக்கு நிர்ணயித்து கண்காணிக்கப்படும்.

நோக்கம்

31 மாவட்டங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களை மக்கள் பங்கேற்புடன் கண்டறிந்து, 5 முதல் 7 வருடங்களில் அவர்களை வறுமையிலிருந்து விடுபடச் செய்யும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாடு மாநில தேசியவாழ்வாதார இயக்கம் செயல்படும்.“ஊரக ஏழை மக்களுக்கான வலுவான, உயிரோட்டத்துடன் சேவை அமைப்புகளை உருவாக்கி வாழ்வாதாரத்தை உயர்த்தி, நிதி உதவியுடன் பல்வேறு இதர சேவைகளையும் முறையாகப் பெற வழிவகை செய்து குடும்ப வருமானத்தைப் பெருக்குவதே" இவ்வியக்கத்தின் நோக்கம் ஆகும். இந்நோக்கத்தினை மையமாகக் கொண்டு ஏழை மக்களுக்கான அமைப்புகளை உருவாக்கி அவற்றின் மூலமாக ஏழை மக்களுக்கு எளிதாக நிதி ஆதாரங்கள் உட்பட வாழ்வாதாரத்திற்குத் தேவையான உதவிகள், பொதுவான சேவைகள் ஆகியவற்றை மகளிர் அமைப்புகள் மூலமாக வழங்கி ஏழை மக்களுக்குரிய அடிப்படை உரிமைகளை பெறுவதற்கு இவ்வியக்கம் வழிவகுக்கும்.

வழிநடத்தும் கொள்கைகள்

ஏழைகளிடம் இயற்கையாகவே வறுமையிலிருந்து விடுபடுவதற்குத் தேவையான திறமையும் மனோதிடமும் உள்ளன.

சமூக ஒருங்கிணைப்புடன் ஏழை மக்களுக்கான அமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் ஏழைகளை ஏழ்மை நிலையிலிருந்து விடுவித்து அவர்களது திறமைகளை வெளிக்கொணர இயலும்,

சமூகத்தை ஒருங்கிணைத்து, ஏழைமக்களுக்கான சேவை அமைப்புகளையும் வலுப்படுத்தி, ஏழைகளின் திறமைகளையும், திறன்களையும் வெளிக்கொணர்வதன் மூலம், ஏழைகள் ஏழ்மை நிலையில் இருந்து விடுபட இயலும்.

தகவல் பரவலாக்கத்தை எளிதாக்குதல், சுயதிறன் வளர்த்தல், திறன் மேம்பாடு பயிற்சிகள் அளித்தல், கடன் பெறுவதை எளிதாக்குதல், தொழில் தொடங்கவும் அதனைச் சீராக தொடர்ந்து நடத்தவும் தேவையான உதவிகளை வழங்குதல் ஆகியவற்றின் மூலம் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இயலும்.

மகளிர் பொருளாதார மேம்பாடு, அவர்களுடைய வாழ்க்கை முறையை குடும்ப அளவில் உயர்த்துவதுடன், சமுதாயத்திலும் அவர்களுடைய நிலையை, நேரடியாக மேம்படுத்தி, சமூக அங்கீகாரம் கிடைத்திட வழிவகுப்பதுடன், ஒரு ஒருமித்த “வாழ்க்கை நடைமுறை மாற்றத்திற்கான” தாக்கத்தையும் ஏற்படுத்தும்.

அடிப்படைக் கோட்பாடுகள்

ஏழை மக்களை இலக்காகக் கொண்டு அவர்களில் அட்டவணை வகுப்பினர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், முதியோர், நலிவுற்றோர், ஆதரவற்றோர் ஆகியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு முன்னுரிமை அளித்தல்

திட்டமிடல், செயலாக்கம், கண்காணிப்பு, மேலாண்மை ஆகிய செயல்பாடுகளில் ஏழை மக்களை ஈடுபடுத்துவது,

ஏழைகளுக்கான அமைப்புகளின் நடவடிக்கைகளில் ஒளிவுமறைவின்மையும், பொறுப்புடைமையையும் உறுதி செய்தல்

அத்துடன், மக்கள் நிறுவனங்கள் தற்சார்புடனும், நிலைத்த தன்மையுடனும் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்தல்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் செயல்பாட்டுக் கட்டமைப்பு அனைத்து நிலைகளிலும் மனிதவள மேம்பாடு அடைவதென்பதை மையமாகக் கொண்ட தனிப்பட்ட அமைப்புகளை, அடையாளம் கண்டறிந்து ஏழை மக்களிடையே, அவர்களே முன்வந்து சமுதாய நிறுவன அமைப்புகளை உருவாக்கி, அவர்களே நிர்வகிக்கும் வகையில் செயல்படுத்துவதை, இவ்வியக்கம் குறிக்கோளாக கொண்டுள்ளது. சுய உதவிக் குழுக்களாகவும், கூட்டமைப்புகளாகவும், தொழில் சார்ந்த தொகுப்புகளாகவும் செயல்படும் இந்நிறுவன அமைப்புகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் போன்ற அரசு திட்டங்கள், பல்வேறு நிதி உதவிகளுடன் கூடிய தொழில் நுட்ப சேவைகளை வழங்கும் வங்கிகளின் மூலம் எளிதாகப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கும். இவ்வியக்கம் பல்வேறு சேவைகளும், சந்தை வாய்ப்புகளும் அதற்கு உரியவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வதுடன் ஒட்டு மொத்த மேம்பாட்டினை அடையவும் வழி வகை செய்கிறது.

இயக்க அணுகுமுறைகள்

இயக்கத்தை செயல்படுத்தும் அனைத்து கிராமங்களிலும் கீழ்க்கண்ட அணுகுமுறைகளை மேற்கொள்ளுதல்.

முழுமையான சமூக ஒருங்கிணைப்புடன் கூடிய சமூக உள்ளாக்கம்.

ஏழைகளுக்கான மக்கள் அமைப்புகளை உருவாக்குதல்

நிதி உள்ளாக்கம்

பொருளாதாரச் செயல்பாடுகள் மூலம் ஏழைகளுக்கு நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்குதல்

திறன் மற்றும் வேலை வாய்ப்பு (திறனுக்கேற்ற வேலை வாய்ப்புகள்)

சேவைகள் உரியவர்களை சென்றடைவதை உறுதி செய்தல் (சமூக வல்லுநர்களுடன் சமூகத்தின்பால் பற்று கொண்டு மக்களின் மேம்பாட்டிற்கான நடவடிக்கையில் ஈடுபடுபவர்களின் மூலமாக)

அரசின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து, நிதி ஆதாரங்களை பெருக்குதல்

முக்கிய அம்சங்கள்

சமூக உள்ளாக்கம் முழுமையான சமூக ஒருங்கிணைப்பு

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு மகளிரை சுய உதவிக் குழு மூலம் ஒருங்கிணைத்தல்.

ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள செயல்பாட்டிலுள்ள சுய உதவிக் குழுக்களை வலுப்படுத்துதல்.

மிகவும் ஏழைகள், அட்டவணை வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், நலிவுற்றோர் ஆகியோரை கண்டறிந்து ஒருங்கிணைத்தல்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கிராம அளவு முதல் மாவட்ட அளவு வரையிலான சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்புகளை உருவாக்குதலை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படும். இக்கூட்டமைப்புகள், உறுப்பினர்களின் செயல்பாடுகளை வலுப்படுத்துவதோடு, அவர்களுக்கு தொடர்ச்சியான வழிகாட்டுதலையும் வழங்கும். இக்கூட்டமைப்புகள் நிலைத்த தன்மையுடன் ஆற்றல் வாய்ந்தவைகளாக விளங்க அவ்வமைப்புகளுக்கு தேவையான நிதி இணைப்புகளும் ஏற்படுத்தப்படும்.

நிதி உள்ளாக்கம்

சுய உதவிக் குழுக்களிலும், கூட்டமைப்புகளிலும் அதன் அனைத்து உறுப்பினர்கள்/பயனாளிகள், வங்கிகளில் சேமிப்புக் கணக்கை தொடர்ந்து செயலாக்கத்தில் இருப்பதை உறுதி செய்து, சேமிப்பு மற்றும் சிக்கன நடவடிக்கைகளை ஊக்குவித்து, கடன் இணைப்புகளையும் இதர காப்பீட்டுச் சேவைகளையும் கிடைக்க வழி வகை செய்வதன் மூலம் முழுமையான நிதி உள்ளாக்கத்தினை உறுதி செய்ய இயலும்.

முழுமையான நிதி உள்ளாக்க இலக்கினை அடைய, சுய உதவிக் குழுக்களுக்கு, பல்வேறு வங்கிகள் மூலம் கடன் இணைப்புகள் கீழ்க்கண்ட காரணங்களுக்காக ஏற்படுத்தப்படும்.

உணவு, சுகாதாரம், கல்வி போன்ற அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அதிக வட்டிக்கு வாங்கிய கடனை திரும்ப செலுத்த, 0 வருமானம் ஈட்டுவதற்கான சொத்துக்களை உருவாக்க, தொழில் மூலதனத்திற்காக இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சமுதாய அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி,அதனை அவர்கள் தக்க வகையில் பயன்படுத்தி, வங்கிகளிலிருந்து கூடுதல் கடன் பெறும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அதே நேரத்தில், வங்கிகளும் பிற நிதி நிறுவனங்களும் கூட்டாண்மையுடன் ஊரக பகுதிகளில் கடன் இணைப்பை மேம்படுத்தும் பணியை இவ்வியக்கம் செயல்படுத்தும்.

வாழ்வாதாரம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வாழ்வாதார நடவடிக்கைகளை, கீழ்கண்ட நான்கு நிலைகளில் செயல்படுத்தும்.

நலிவுற்றோரை மேம்படுத்துதல்

தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் நலிவுற்றோரை மேம்படுத்தும் நோக்கத்துடன், நலிவுற்றோருக்கான உரிமைகள் பெறுதல், உணவு பாதுகாப்பு, சுகாதார மேம்பாடு மற்றும் பாதுகாப்பு, கடன் சீரமைப்பு, காப்பீடு, ஓய்வூதியம், திறன் பரிமாற்றம், எழுத்தறிவுடன் கூடிய வாழ்க்கை திறன் உயர்வு ஆகியவற்றின் மூலம் கடன் சுமை, உணவு பற்றாக்குறை, உடல் நலமின்மை போன்ற குறைகள் களையப்படும்.

விவசாயம், கால்நடைகள், பண்ணைக் காடுகள், சிறு வனப் பொருட்கள் சேகரிப்பு போன்ற வாழ்வாதார வாய்ப்புகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாது உற்பத்திக்கான தொடர்இணைப்புகள், தகவல் பரிமாற்ற சேவைகள் அதிக அளவில் சமுதாய வல்லுநர்களின் பங்கேற்பு ஆகியவற்றை வழங்குவதன் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரத்தின் நிலைப்புத்தன்மை மேம்படுத்தப்படும்.

மேலும், மகிளர் கிசான் சாசக்தி பரியோஜனா (MKSP) என்ற புதிய திட்டத்தினை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்டக்கூறின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்துவதன் மூலம், ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பெண் விவசாயிகள், குறிப்பாக குறு, சிறு விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மேம்படுத்தப்படும்.

சுய வேலை வாய்ப்பு குறுந்தொழில் மேம்பாடு

இதற்காக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கம் தற்போது செயல்பாட்டில் உள்ள ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனங்களை (RSETIs) விரிவாக்கம் செய்வதுடன், திறன் மேம்பாட்டு தொழில் பயிற்சிகளை வழங்கவும் சிறு தொழில்களுக்கான கடன் இணைப்புகளை உருவாக்கவும் அதிக முதலீடு செய்யும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போன்ற (பல) பயிற்சி நிறுவனங்கள் செயல்படுவதோடல்லாமல், அவற்றின் மூலம் வறுமைக் கோட்டிற்கும் கீழே வாழும்

குடும்பங்களின் இளைஞர்களுக்கும் அடிப்படை திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.

திறன் சார்ந்த உழைப்பூதிய வேலை வாய்ப்பு - தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தற்போது நடைமுறையில் உள்ள திறன் மேம்பாட்டுடன் கூடிய வேலைவாய்ப்பு திட்டங்களை மேம்படுத்தி, ஊரக ஏழை இளைஞர்கள் நிலையான உழைப்பூதியத்தைப் பெற்று வறுமையிலிருந்து விடுபட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

தனிப்பட்ட செயலாக்க அமைப்பு

திட்ட செயலாக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட தனிப்பட்ட செயலாக்க அமைப்பை அனைத்து நிலைகளிலும் உருவாக்க இவ்வியக்கம் கீழ்கண்டவாறு செயல்படும்.

மாநில மேலாண்மை அலகினை உருவாக்கி, பல்வேறு துறை வல்லுநர்களை பணிகளில் ஈடுபடுத்துதல்.

மாவட்டங்களிலும், வட்டாரங்களிலும் பகுதி அளவில் வல்லுநர்களையும், பணியாளர்களையும் நியமித்தல்.

தகுதி வாய்ந்த வல்லுநர்களை வெளிச் சந்தையில் இருந்தும், அரசு துறைகளிலிருந்தும் பணியில் அமர்த்துதல்.

திறன் வளர்ப்புடன் கூடிய பயிற்சி திட்டச் செயலாக்க பணியாளர்கள், மக்களமைப்புகள் சார்ந்தவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்குதல்.

மக்கள் அமைப்புகள் தங்களுக்கு தேவையான நடவடிக்கைகளை, தாங்களாகவே பொறுப்பேற்று நடத்த வழிவகை செய்ய வேண்டுதல்.

ஒருங்கிணைப்பும், கூட்டமைப்பும்

பல்வேறு ஊரக வறுமை ஒழிப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்தல்

பல்வேறு ஊரக வறுமை ஒழிப்புத் திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் ஏழைகளுக்கான பல்வேறு வாழ்வாதார சேவைகளை ஒரு மித்த செயல்பாட்டு அமைப்பின் கீழ் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்கான இடையூறுகளையும் அதற்குண்டாகும் செலவுகளையும் குறைத்து வாழ்வாதார சேவைகளை மேம்படுத்துதல்.

சமூக பாதுகாப்புத் திட்டங்களான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS), உணவு பாதுகாப்பு, சமூக காப்பீடு மற்றும் ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை ஏழைகளின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்காக செயல்படுத்தி அவர்களை நலிவுற்ற நிலையிலிருந்து விடுபடச் செய்ய சமூக ஒருங்கிணைப்பு மேற்கொள்ளுதல்.

ஊராட்சி அமைப்புகளுடன் இணைப்பை ஏற்படுத்துதல்:

மக்கள் அமைப்புகளும் ஊராட்சி அமைப்புகளும் புரிதலுடன், தெளிவான ஆரோக்கியமான நல்லுறவுடன் செயல்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்தல்.

மக்கள் அமைப்புகள் சீரான இடைவெளியில், ஊராட்சி அமைப்புகளுடன் கருத்து பரிமாற்றம் மேற்கொள்ளுதல், தேவையான தகவல் பரிமாற்றம் செய்தல் கிராம சபையின் செயல்பாடுகளில் பங்கேற்றல் ஆகியவற்றை ஊக்குவிப்பது.

மேலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமும், ஊராட்சி அமைப்புகளும் உதவிக் குழுக்களுடன் அவற்றின் கூட்டமைப்புகளின் முக்கியத்துவத்தை அறிந்து ஏழைகளின் வறுமை ஒழிப்புத் திட்டங்களை செயல்படுத்த அவர்களுடன் இணைந்து கிராம மேம்பாட்டுத் திட்டங்களை வடிவமைக்க உறுதுணையாக இருப்பதற்கான அமைப்பினை ஏற்படுத்துதல்.

பல்வேறு திட்ட பங்காளர்களுடன் கூட்டாண்மை ஏற்படுத்துதல்:

இதன் மூலம், நிதி உள்ளாக்கத்திற்காக வங்கிகளையும், சந்தை இணைப்பிற்காக பல்வேறு தனியார் நிறுவனங்களையும், மக்கள் அமைப்புகளையும் திட்ட பங்காளர்களுடன் இணைத்து ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்தி தகவல் பரிமாற்றத்துடன் கூடிய பகிர்வு நடவடிக்கைகளுக்கு வழிவகை செய்து மக்கள் அமைப்புகள் சிறப்பாக செயல்பட முயற்சிகள் மேற்கொள்வதை உறுதி செய்தல்.

எதிர்பார்க்கக்கூடிய முக்கிய விளைவுகள்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் செயல்பாடுகள் மூலம், கீழ்க்கண்ட முக்கிய நல்விளைவுகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திறமையாகவும், உணர்வுபூர்வமாகவும், சுயமாகவே செயல்படும் திட்ட செயலாக்க அமைப்பினை உருவாக்கி, ஊரக அடித்தட்டு அமைப்புகளை வலுப்படுத்துதல்,

தகுதியுள்ள ஏழை மக்கள் அனைவரும் அவர்களுக்கான மக்கள் அமைப்புகளில் உறுப்பினராக இருத்தல்

தொகுப்பு நிதி நிலையை உயர்த்தி, அதன் மூலம் மக்கள் அமைப்புகள் நியாயமான வட்டியில் வங்கிக் கடன் பெறுவதற்கு வழி வகைகள் அமைத்தல்,

பல்வேறு திட்டங்களின் நிதி ஒதுக்கீடுகளையும் , இதர சேவைகளையும் ஒருங்கிணைத்து அதன் பயன்களை தகுதியுள்ள ஏழை மக்கள் பெற்று மேம்பாடு அடைதல்.

வருமானம் ஈட்டக்கூடிய சொத்துக்களில் முதலீடு செய்வதன் மூலம் ஏழை மக்களின் வாழ்வாதார பெருக்கம், உயரிய வருமானம் பெறுதல்,

நாணயப் புழக்கத்தில் ஏற்றம் ஆகியவற்றை உறுதி செய்தல்.

இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி சுய தொழில் புரிவோர், உழைப்பூதிய வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரித்தல்.

வேலையின்றி தவிக்கும் ஏழை மக்களின் எண்ணிக்கையை குறைத்தல் போன்றன.

திட்டப்பகுதிகள்

தமிழ்நாட்டிலுள்ள 31 மாவட்டங்களில் (சென்னை நீங்கலாக) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வியக்கம் புதுவாழ்வு திட்டம் செயல்படும் 120 வட்டாரங்களை தவிர்த்து மற்ற 265 வட்டாரங்களில் மூன்று கட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றுள் திருச்சி, ஈரோடு, நீலகிரி மற்றும் தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 16 வட்டாரங்களில் திட்ட கருத்தாக்க நிரூபணமாக (proof of concept) உலக வங்கி நிதியுதவியுடன் தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம் (NRLP) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கடைபிடிக்கப்படும் சமுதாய முதலீட்டு நிதி பணியாளர் அமைப்பு மற்றும் ஏழைகளுக்கான இதர ஆதரவுகள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பின்பற்றப்படுகிறது.

உயர்நிலை அதிகாரம் பெற்ற குழு

மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் உயர்நிலை அதிகாரம் பெற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு கொள்கை வடிவிலான வழிகாட்டுதல் மற்றும் திட்டச் செயல்பாடுகளை கண்காணித்தல் போன்ற பணிகளை இக்குழு மேற்கொண்டு வருகிறது. முதன்மைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அவர்களின் தலைமையில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரை முதன்மைச் செயல் அலுவலராக கொண்டு இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது. மாநில, மாவட்ட வட்டார மற்றும் பகுதி அளவில் பிரத்யோகமான நிர்வாக அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையம்