நோக்கம்

ஊரகப் பகுதிகளிலுள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளான, புதிய கட்டடங்கள், சமையல் அறை, குடிநீர் வசதி, கழிப்பறைகள் ஆகியவைகளை ஏற்படுத்துதல் மற்றும் தேவைப்படும் இடங்களில் பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

பணிகள் தேர்வு செய்தல்

மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட குழுக்கள் மூலம் பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு பணிகள் தேர்வு செய்யப்படும்.

நிதி ஒதுக்கீடு

2014-15 ஆம் ஆண்டுக்கு இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 100 கோடி ஆகும்.

எடுக்கப்படும் பணிகள் பள்ளிக் கட்டடங்கள்

ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப புதிய பள்ளிக் கட்டடங்கள் அனைத்தும் தட்டு ஓடு பதித்த கான்கிரீட் கூரைகளுடன் தண்ணீர் கசியாத வகையில் கட்டப்படும்.

புதிய பள்ளிக் கட்டடங்கள் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள காலி இடத்தில் அமைக்கப்படும்.

பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு காலி இடம் இல்லாத நிலையில், ஏற்கனவே உள்ள கான்கிரீட் கட்டடத்தின் உறுதித் தன்மையை சரி பார்த்து அதன் மேல் தளத்தில் புதிய கட்டடம் அமைக்கப்படும்.

ஏற்கனவே உள்ள பழுதடைந்த பள்ளிக் கட்டடங்கள் சீரமைக்கப்படும்.

சமையல் அறை

சமையல் அறை இல்லாத ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் புதிய சமையல் அறைகள் கட்டப்படும். தேவையின் அடிப்படையில் பழுது பார்த்தல் / புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்படும்.

ஏற்கனவே உள்ள சமையல் அறை கட்டடத்தில் மதிய உணவுத் திட்டத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளும் கூடுதல் அறைகளும் தேவையின் அடிப்படையில் எடுத்துக்கொள்ளப்படும்.

குடிநீர் வசதி

ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் ஏற்கெனவே உள்ள குடிநீர் வசதி அமைப்புகள் பழுதடைந்து இருப்பின் அவை பழுது நீக்கிச் சீரமைக்கப்படும்.

குடிநீர்க் குழாய் நீட்டிப்பு பணிகள், தேவைப்படும் இடங்களில் ஊராட்சியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளிலிருந்து புதிய குடிநீர் இணைப்புகள் தேவைப்படும் இடங்களில் ஏற்படுத்தப்படும்.

அவசியமான இடங்களில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்படும்.

கழிப்பறை வசதிகள்

அனைத்து ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியாக, போதுமான அளவில் கழிப்பறைகள் கட்டப்படும்.

நடுநிலைப் பள்ளிகளில் மாணவிகளின் வசதிக்காக எரியூட்டிகள் அமைக்கப்படும்.

முழு சுகாதாரத் திட்டத்தின் கீழ் புதிய கழிப்பறைகள் அமைக்க போதிய நிதி இல்லையெனில், இத்திட்டத்தின் கீழ் புதிய கழிப்பறைகள் கட்டித் தரப்படும்.

இதர பணிகள்

தேவைகளுக்கேற்ப பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் மற்றும் மிதிவண்டி நிறுத்தம் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படும்.

பேரூராட்சிகள் மற்றும் மூன்றாம் நிலை நகராட்சி பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள்:

மாநில அளவில்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், சென்னை-15

மாவட்ட அளவில்: மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை

வட்டார அளவில்: வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி)

ஆதாரம்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்