சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் சுய உதவி குழுக்கள் அமைத்து தனியாகவோ அல்லது சேர்ந்தோ சிறு வியாபாரம் அல்லது தொழில் செய்து தங்களது வருமானத்தை பெருக்கி அதன் மூலம் அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக இத்திட்டம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் 02.01.2004 முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

எந்தெந்த சிறுதொழில்களுக்கு வணிகக் கடன் வழங்கப்படுகிறது?

வருமான பெருக்கத்திற்காக கிராம / நகர்ப்புறங்களில் மேற்கொள்ளும் எந்தவித சிறு தொழில்கள் / சிறு வியாபாரங்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது. உதாரணமாக, காய்கறிக் கடை, மீன் வியாபாரம், தையல் கடை, வியாபாரம், பலகாரக் கடை மற்றும் பிற கைத்தொழில்கள்.

இச்சிறு வணிகக்கடன் பெறுவதற்கான தகுதிகள் என்ன?

அ. விண்ணப்பதாரர் இசுலாமியர், கிறித்தவர், புத்த மதத்தினர், சீக்கியர் மற்றும் பாரசீகியர் இதில் ஏதாவது ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
ஆ. சிறுபான்மை சுய உதவி குழுவில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். அக்குழு குறைந்தது 6 மாத காலம் சேமித்தல் மற்றும் கடன் அளித்தல் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
இ. குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறத்தில் வசிப்பவர் எனில் ரூ. 54500 மற்றும் கிராமப்புறம் எனில் ரூ. 39500க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஒரு குழு சிறுபான்மை சுய உதவி குழுவாக கருதப்பட என்ன தகுதிகள் இருக்க வேண்டும்?

அ. சுய உதவி குழுவில் குறைந்தபட்சம் 10 மற்றும் அதிகபட்சம் 20 நபர்கள் இருக்க வேண்டும்.
ஆ. உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 75 விழுக்காடு நபர்கள் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
இ. சில சமயம் (in exceptional cases), உறுப்பினர்களில் 60 விழுக்காட்டினர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்து மீதமுள்ள 40 விழுக்காடு உறுப்பினர்கள் பிற்பட்டோர் / ஆதி திராவிடர் / பழங்குடியினர் / கணவனை இழந்தவர் / ஊனமுற்றோராக இருப்பின் அக்குழுவும் சிறுபான்மை சுய உதவி குழுவாகக் கருதப்படும்.

இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் கடன் தொகை எவ்வளவு?

இத்திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 25000 கடன் அளிக்கப்படும்.

சிறுகடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு ?

சிறுகடனுக்கு ஆண்டு வட்டி விகிதம் 4 விழுக்காடு மட்டுமே ஆகும்.

கடன் வழங்குவதில் பெண்களுக்கு ஏதும் முன்னுரிமை உண்டா?

ஆம். பெண்கள் சுய உதவி குழுக்களுக்கும் மற்றும் ஆண், பெண் இருவரும் உறுப்பினராக இருக்கும் சுய உதவி குழுக்களில் பெண் உறுப்பினருக்கும், சிறுகடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

சிறுகடன் பெற சுய உதவி குழு வங்கி சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டுமா?

ஆம். இச்சிறுகடன் டாம்கோ நிறுவனத்தால் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படுவதால் சுய உதவி குழுக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சேமிப்புக் கணக்கு இருக்க வேண்டும். வங்கிக் கணக்கு இல்லாத குழுக்கள் கூட்டுறவு வங்கியில் புதியதாக சேமிப்பு கணக்கு துவக்கலாம்.

கடன் தொகையினை எவ்வளவு காலத்தில் திரும்பச் செலுத்த வேண்டும்?

கடன் தொகைக்கு ஏற்ப 12 (அ) 24 (அ) 36 மாத தவணைகளில் கடன் தொகையை திரும்பச் செலுத்தலாம்.

சிறுகடன் வழங்கும் முறை என்ன?

விண்ணப்பத்தினை கட்டணம் ஏதுமின்றி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (பி.ப.) மற்றும் சிறுபான்மை நல அலுவலரின் அலுவலகத்தில் / கூட்டுறவு வங்கிகளில் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை கூட்டுறவு வங்கிகளிடம் சமர்ப்பிக்கலாம்.

மத்திய கூட்டுறவு / நகர கூட்டுறவு வங்கி சுய உதவி குழுவின் நிலையான தன்மை, கடனைத் திரும்பச் செலுத்தும் திறமை (Credit Rating) போன்றவற்றை உறுதி செய்து வங்கியின் பரிந்துரை (படிவம் - அ) மற்றும் அதனுடன் மாவட்ட ஆய்வு மற்றும் தேர்வு குழுவின் ஒப்புதல் ஆகியவற்றை பெற்று டாம்கோ நிறுவனத்திடம் சமர்ப்பிக்கும்.

இதனடிப்படையில் டாம்கோ தகுந்த ஆணையை பிறப்பித்து சிறுகடன் தொகையை கூட்டுறவு வங்கிக்கு வழங்கும். கூட்டுறவு வங்கி அதிகபட்சம் 30 நாட்களுக்குள் இக்கடனை சுய உதவி குழுவுக்கு வழங்க வேண்டும். சுய உதவி குழு இக்கடனை பெற்று உறுப்பினருக்கு வழங்கும். கடன் தொகையை உறுப்பினர்களிடம் பெற்று குறித்த தேதியில் வங்கிக்கு செலுத்த வேண்டியது சுய உதவி குழுவின் பொறுப்பாகும்.

மறுநிதி உதவி சிறுகடன் என்றால் என்ன?

ஏற்கனவே பிற திட்டங்கள் எவற்றிலாவது கடன் பெற்று கடன் நிலுவையில் உள்ள சிறுபான்மை குழுக்கள் இந்த சிறுகடன் திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது. ஆனால் இக்கடன் நிலுவைத் தொகையை டாம்கோ சிறுகடனில் பிடித்தம் செய்திட உத்திரவாதம் அளித்தால் இத்திட்டத்தின் கீழ் டாம்கோ வழங்கும் சிறுகடன் உதவியைப் பெறலாம். டாம்கோ நிறுவனம் வங்கிக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை அளித்துவிடும்.