அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்குத் உதவித் தொகை தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்தோறும் ரூபாய் 7,500/- ஓய்வூதியத்துடன் மருத்துவப்படி ரூபாய் 500/- என மொத்தம் ரூ.8000/- மற்றும் தமிழ்நாடு முழுவதும் கட்டணமின்றிப் பயணம் மேற்கொள்ளும் பொருட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கட்டணமில்லாப் பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் காத்த தகைமைக்காக உதவித்தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னர், அவரின் வாழ்விணையர் / திருமணமாகாத மகள் / விதவை மகளுக்கு வாழ்நாள் முழுவதும் ரூ.2500/- மற்றும் மருத்துவப் படி ரூ.500/- என அத்திருத்தொண்டு தொடர்கிறது. 2025-2026ஆம் நிதியாண்டு முதல் பயனாளிகளின் தெரிவு எண்ணிக்கை ஆண்டுக்கு 100 லிருந்து 150 ஆக உயர்த்தி வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது. அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் அகவை முதிர்ந்த தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து ஆண்டு தோறும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மகளிர் உரிமைத் தொகை, சமூகநல பாதுகாப்பு உதவித்தொகை போன்ற தமிழ்நாடு அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பிக்கத் தகுதிகள் விண்ணப்பிக்கும் ஆண்டில் சனவரித் திங்கள் முதல் நாளிலோ அதற்கு முன்போ 58 வயது நிறைவடைந்திருக்கவேண்டும். (ஆதார் அட்டை வயதுச் சான்றாக கணக்கில் கொள்ளப்படும்) ஆண்டு வருவாய் ரூ.1,20,000/-க்குள் இருக்க வேண்டும். (வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று இணைக்கப்பட வேண்டும்). தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு. தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்று இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் (ஸ்மார்ட் கார்டு), மரபுரிமையர் (கணவன் / மனைவி) இருப்பின் அவரது ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்பப்படிவத்தினை இணையவழியாக பதிவேற்றம் செய்யலாம். தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் (www.tamilvalarchithurai.tn.gov.in) கட்டணமில்லாமல் பதிவு செய்யலாம். இணையவழியாக பதிவேற்றம் செய்யப்பட்ட பின் அசல் விண்ணப்பப்படிவம், அசல் ஆவணங்கள் மற்றும் எழுதிய நூல்கள் படிகளுடன் நேரடியாக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டாட்சியர் அலுவலகங்களிலுள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் / உதவி இயக்குநர் வழியாக அனுப்புதல் வேண்டும். நேரடியாகத் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு அனுப்புதல் கூடாது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அந்தந்த மாவட்டங்களில் மாவட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மண்டில, மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் / மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகங்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் மதுரை மாவட்டத்தில் உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தின் வாயிலாக மட்டுமே அனுப்பப்பெற வேண்டும். மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகங்கள் வழியாக அல்லாது. நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படா. சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டும் நிறைவு செய்யப் பெற்ற விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரடியாக அனுப்பலாம். இயக்குநர்தமிழ் வளர்ச்சி இயக்ககம்தமிழ்ச்சாலைஎழுமூர், சென்னை 600008 நிறைவு செய்யப்பெற்ற விண்ணப்பங்கள் 17.11.2025-க்குள் அந்தந்த மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகங்ளுக்கு வந்து சேர வேண்டும். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை 9