பிரதமரின் வழிகாட்டுதலின்படி, அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும்/ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள், தங்களது பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக 2015 மார்ச் மாதத்தில் அனுபவ் இணையதளம் (ANUBHAV Awards) என்ற ஆன்லைன் தளத்தை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை [Department of Pension and Pensioners Welfare (DOPPW)] அறிமுகப்படுத்தியது. ஓய்வு பெற்றவர்கள் குறிப்புகளை விட்டுச் செல்லும் இந்தக் கலாச்சாரம் எதிர்காலத்தில் நல்லாட்சி மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கு அடித்தளமாக மாறும் என்று கருதப்படுகிறது. 2026-ம் ஆண்டுக்கான அனுபவ் விருதுகள் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் பங்கேற்க, ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள் ஓய்வு பெறுவதற்கு 8 மாதங்களுக்கு முன்பும், ஓய்வு பெற்ற 3 வருடத்திற்குப் பிறகும் தங்கள் அனுபவங்கள் குறித்த கருத்துகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள்/துறைகளின் மதிப்பீட்டிற்குப் பிறகு கட்டுரைகள் வெளியிடப்படும். வெளியிடப்பட்ட கட்டுரைகள் அனுபவ் விருதுகள் மற்றும் ஜூரி சான்றிதழ்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும். அனுபவ் விருதுகள் திட்டம் 2026 இன் கீழ், ஏப்ரில் 1 2025 முதல் மார்ச் 31 2026 வரை 'அனுபவ் இணையதளத்தில்' (Anubhav Portal) வெளியிடப்பட்ட அனைத்து அனுபவ கட்டுரைகளும் 05 அனுபவ் விருதுகள் மற்றும் 10 ஜூரி சான்றிதழ்களுக்கு பரிசீலிக்கப்படும். 2016 முதல் 2024 வரை இதுவரை 59 அனுபவ் விருதுகள் மற்றும் 19 ஜூரி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்