அறிமுகம் உடல் குறைபாடு இருந்தாலும் உள்ளத்தில் உறுதியுடன் இருக்கும் மாற்றுத் திறனாளிகள் தங்களது சுய முயற்சியால் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக நிதியுதவி, தொழில் பயிற்சி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இட ஒதுக்கீடு போன்றவற்றை அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு என்னென்ன சலுகைகள் வழங்குகிறது. அவற்றை எவ்வாறு பெறுவது என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் துறை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? அந்தந்த மாவட்டத்தில் இயங்கி வரும் சமூகநலத் துறையின் ஓர் அங்கமாக ஊனமுற்றோர் துறை செயல்பட்டு வந்தது. 1995 ஆம் ஆண்டு ஊனமுற்றோர் துறை தனியாகப் பிரிக்கப்பட்டது. இத்துறை 2010 ஆம் ஆண்டில் ‘மாற்றுத் திறனாளிகள் துறை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாற்றுத் திறனாளிகள் துறை செயல்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகள் பிரிவுகள் மாற்றுத் திறனாளிகள் 8 பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றனர்: கை, கால் பாதிக்கப்பட்டவர்கள் காது கேளாதோர் வாய் பேச முடியாதோர் பார்வையற்றோர் மனவளர்ச்சி குன்றியோர் மூளை முடக்குவாதம் புற உலகு சிந்தனையற்றோர் (ஆட்டிசம்) பல்வகை ஊனம் தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் உடல் குறைபாட்டில் அளவு நிர்ணயம் உடலில் 40 சதவீதம் உடல் குறைபாடு இருந்தால் அவர்கள் மாற்றுத் திறனாளிகள் என குறிப்பிடப்படுகின்றனர். அவர்கள் பேருந்து, ரயிலில் பயணம் செய்வதற்கான சலுகை அட்டை, தேசிய அடையாள அட்டை போன்ற அரசின் சலுகைகளைப் பெற தகுதி உடையவர்கள். அரசு வழங்கும் சலுகையில் இட ஒதுக்கீடு அரசின் அனைத்து சலுகைகளையும் மாற்றுத் திறனாளிகள் பெற முடிவதுடன், அவர்களுக்கு அனைத்து சலுகையிலும் 3 சதவீதம் இட ஒதுக்கீடு உண்டு. அதன்படி அரசின் சலுகையில் 3 சதவீதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டாயம் வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் சான்றிதழ் அரசு உதவிகள் பெறுவதற்கான அடிப்படை ஆவணமான அடையாள அட்டை 40% அதற்குமேல் குறைபாடு உடையவர்களுக்கு வழங்கப்படுகிறது இதற்கான மருத்துவச்சான்றிதழ் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள், மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பணிபுரியும் சான்றளிக்கக்கூடிய அதிகார முடைய மருத்துவர்களால் 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்கப்படுகிறது. தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளி அடையாள அட்டை (UDID) ஒன்றிய அரசால் மாற்றுத்திறனாளிகளுக்கானஅடையாள அட்டை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ளமாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து UDID இணைய தளத்தில் பதிவுசெய்து மாற்றுத்திறனாளிகளுக்கான மின்னணு முறையில் மருத்துவ சான்றிதழ் மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் ஆறு வயதிற்குட்பட்ட செவி, அறிவுசார், பார்வை, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டமாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஆரம்பநிலையிலேயே அவர்களது உடல் குறைபாட்டினை கண்டறிந்து உரிய பயிற்சிகள் முலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. அனைத்து மையங்களிலும் மறுவாழ்வு பயிற்சி, இணை உணவு வழங்கப்படுவதுடன் இலவச பேருந்து சலுகைமற்றும் கல்விச்சுற்றுலா, ஆகிய சலுகைகள் வழங்கப்படுகின்றன. கல்வி பார்வை மாற்றுத்திறன், செவி மாற்றுத்திறன், அறிவுசார் மாற்றுத்திறன் மற்றும் இயக்கத்திறன் குறையுடையோருக்கு விடுதி வசதியுடன் கூடிய சிறப்புக் கல்வி மற்றும் தொழிற் கல்வி அளிக்கப்படுகிறது . ஆண்டுக் கொருமுறை நான்கு இணைச் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் கட்டணமின்றி வழங்கப்படுகிறது. வருடாந்திர உதவித் தொகை (ரூபாயில்) 1-5-ஆம் வகுப்பு வரை - 2,000/- 6- 8-ஆம் வகுப்புவரை - 6,000/- 9-12 ஆம் வகுப்பு வரை- 8,000/- பட்டப்படிப்பு - 12,000/- தொழிற்கல்வி மற்றும் முதுகலை பட்டம் - 14,000/- உதவி உபகரணங்கள் தசைச்சிதைவு நோய் மற்றும் முதுகுத் தண்டுவட பாதிப்பால், கைகள் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட (Tetraplegic / Quadriplegic) மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலி (Battery Operated Wheel Chair) வழங்கும் திட்டம் - பிற வகையினால் கை மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் நீயோ போல்ட் போன்ற உபகரணங்கள் பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தி 600 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலிகள் வழங்குதல். மற்ற உதவிகள் மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் மேற்கொள்வதற்காக செயல்படுத்தப்படும் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் (Motorised Sewing Machines) வழங்கும் திட்டம் - 40 சதவிகிதத்திற்கு மேல் பாதிப்பிற்குட்பட்ட மூளை முடக்குவாதம், தசைச்சிதைவு நோய், புற உலக சிந்தனையற்ற / மதிஇறுக்கம் உடைய 2000 மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களது பெற்றோர்கள் / பாதுகாவலர்கள் பயன்பெறும் வகையில் திட்டத்தினை விரிவுபடுத்துதல். தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர்களின் மகன் மகள் திருமண உதவித்தொகை - 2025-2026-ஆம் நிதியாண்டு முதல் ரூ.5000- ஆக உயர்த்தி வழங்குதல் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர்களின் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்காக வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை 2025-2026-ஆம் நிதியாண்டு முதல் ரூ.30,000-ஆக உயர்த்தி வழங்குதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளை முதல் மூன்று முறை எழுதியும் தேர்ச்சி பெறாத 50 வயதினை கடந்த மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்தல் ஆதாரம்: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை