தெற்கு மத்திய ரயில்வேயில் முதன்முறையாக கவாச் 4.0 தொழில்நுட்பம் தெற்கு மத்திய ரயில்வேயில் முதன்முறையாக கவாச் 4.0 (KAVACH 4.0) தொழில்நுட்பத்தை இந்திய ரயில்வே செயல்படுத்தியுள்ளது. இதன்மூலம் ரயில்வே பாதுகாப்பில் இந்திய ரயில்வே ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஹைதராபாத் பிரிவின் மல்காஜ்கிரி – காமாரெட்டி வழித்தடத்தில் 108 வழித்தட கிலோ மீட்டர் தொலைவிற்கு கவாச் 3.2 தொழில்நுட்பத்திலிருந்து 4.0 தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தெற்கு மத்திய ரயில்வேயின் 1,465 வழித்தட கிலோ மீட்டர்களில் கவாச் 3.2 தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தியதன் மூலம் பெறப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் அதன் புதிய பதிப்பில் கூடுதல் தொழில்நுட்ப மேம்பாடுகள் இணைக்கப்பட்டுள்ளன. கவாச் 4.0 தொழில்நுட்பம் மேம்பட்ட பாதுகாப்பு, நவீன தொழில்நுட்பம், அதிக நம்பகத்தன்மை, பாதுகாப்பான ரயில் இயக்கம் ஆகியவற்றை உறுதி செய்கிறது. அத்துடன் இதை இந்திய ரயில்வே முழுவதும் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கவாச் என்பது பாதுகாப்பை மேம்படுத்த உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பாகும். இந்த அமைப்பு, ரயில்களை நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்புகளுக்குள் இயக்க லோகோ பைலட்டுக்கு உதவுகிறது. அத்துடன் லோகோ பைலட் அதன்படி செயல்பட தவறினால் தேவைப்படும் போது ரயிலைத் தாமாகவே நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அபாயகரமான நிலையில் சிக்னலை மீறிச் செல்வதைத் தடுக்கவும், நெருக்கடியான சூழ்நிலைகளில் ரயில் வேகத்தைக் கட்டுப்படுத்தவும், மோதல்களின் அபாயத்தைக் குறைக்கவும் கவாச் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலையின் போதும் ரயில்களைப் பாதுகாப்பாக இயக்குவதற்கு இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2313758®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் அலுவலகம்