பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தேசிய மூங்கில் கூட்டமைப்பு - ஒரு பார்வை

தேசிய மூங்கில் கூட்டமைப்பு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

ஏழைகளின் மரம் அல்லது மக்களின் நண்பன் என்று அழைக்கப்படும் மூங்கிலானது வேகமாக வளரக்கூடிய தாவரமாகும். இது ஆசியா, ஆப்ரிக்கா, கரிபியன் மற்றும் இலத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவலாக காணப்படுகிறது. இந்திய காடுகளின் பரப்பளவில் 12.8 சதவிகிதம் (8.96 மில்லியன் எக்டர்) மூங்கில் காடுகள் ஆகும். உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பலகோடி மக்களின் அன்றாட தொழில் மூங்கில் தாவரத்தையே சார்ந்துள்ளது. பழங்காலத்திலிருந்து மனித கலாச்சாரத்தில் மூங்கில் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. பல்வேறு வகையான மூங்கில் இனங்கள் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் அதிகமாக வளர்ந்து வருகின்றன. இவ்வகை மூங்கில்கள் கிராம மற்றும் நகர்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, காற்றில் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவைக் குறைத்து, சுற்றுப்புறச்சூழல் மாசுபடுதலைத் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

தேசிய மூங்கில் கூட்டமைப்பு (National Bamboo Mission)

இந்தியாவில் நிலவி வரும் ஒழுங்கற்ற சந்தை நிலவரத்தினையும் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் தொழிற்நுட்ப பற்றாக்குறையினையும் நிவர்த்தி செய்வதற்காக இந்தியத் திட்டக்குழுவின் பரிந்துரைப்படி தேசிய மூங்கில் குழு உருவாக்கப்பட்டது.

நோக்கம்

  • தகுதியான இடங்களில் அதிகளவில் மூங்கில் காடுகளை உருவாக்குதல்
  • மூங்கில் மற்றும் மூங்கில் சார்ந்த பொருட்களுக்கு சரியான விற்பனை சந்தைகளை ஏற்படுத்துதல்
  • மூங்கில் உற்பத்தியாளர்களை ஒன்று சேர்த்து மூங்கில் வளர்ப்பு மற்றும் உற்பத்தி அளவை அதிகப்படுத்துதல்
  • கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் மூங்கில் சார்ந்த தொழிற்சாலைகளை ஏற்படுத்தி வேலை வாய்ப்பை அதிகப்படுத்துதல் குழுவின் அமைப்பு இந்தத் தேசிய மூங்கில் கூட்டமைப்பானது மூன்றடுக்காக செயல்பட்டு வருகிறது.

தேசிய உயர்மட்ட அமைப்பு

மத்திய விவசாயத்துறை அமைச்சர் இதன் தலைவர் ஆவார். இதர மத்திய அமைச்சர்களான வனத்துறை, அறிவியல் மற்றும் தொழிற் நுட்ப துறை, ஜவுளித்துறை, வர்த்தகத்துறை, கிராமப்புற மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், நகர்புற மேம்பாட்டுத்துறை, வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டுத் துறை, சிறுதொழில் துறை, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் வனத்துறை, விவசாயம் மற்றும் தோட்டக்கலை துறை அமைச்சர்கள் திட்டக்குழுவின் உறுப்பினர்களாக செயல்பட்டு வருகின்றனர். இக்குழுவானது வருடத்திற்கு ஒருமுறை ஒன்று கூடி நடப்பு பணிகளை கலந்து ஆலோசித்து தக்க பரிந்துரைகளை வழங்கிவருகிறது.

தேசிய நடைமுறை குழு

மத்திய விவசாயத்துறை செயலாளர் இதன் தலைவர் ஆகவும் மூங்கில் சார்ந்த தொழிற்துறைகளின் செயலாளர்கள் இதன் உறுப்பினர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர். இவ்வுறுப்பினர்கள் அனைவரும் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஒன்று கூடி நடப்புப் பணிகளை ஆராய்ந்து புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவார்கள். இதன் மூலம் ஒரே மாதிரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது தடுக்கப்படுகிறது.

தேசிய மூங்கில் கூடம் (National Bamboo Cell)

விவசாய கூட்டமைப்புத் துறை (Department of Agricultural Co-operation) இயக்குநர் இக்குழுவின் தலைவர் ஆவார். இது பல்வேறு நிதி அமைப்புகளை ஒன்று சேர்த்து புதிய திட்டங்களுக்கான நிதியுதவியை வழங்கிவருகிறது.

வேளாண் பண்ணைக்காடுகளில் மூங்கில்

இந்தியாவில் மரம் மற்றும் விறகு பயன்பாட்டிற்கு சராசரியாக ஒரு வருடத்தில் 1.5 மில்லியன் எக்டர் அளவுள்ள காடுகள் அழிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையைத் தடுப்பதில் மூங்கில் சார்ந்த பண்ணைக்காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனெனில் இது தரம் குறைந்த நிலங்களிலும் வேகமாக வளர்ந்து மண் அரிப்பினை தடுத்து நிலத்தின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவதன் மூலம் வளமான விளைச்சலையும் தருகிறது.

மூங்கில் - இயற்கையின் அற்புதம்

மூங்கிலின் மேற்பகுதியான தாவர கிளைகள் சுற்றுப்புற மாசுபாட்டைக் குறைப்பதிலும், மண்ணிற்கு அடியிலுள்ள வேர்ப்பகுதி மண் அரிப்பைத் தடுப்பதிலும் பெரும்பங்கு வகிக்கின்றன. மேலும் மூங்கிலானது எஃகைவிட ஆறுமடங்கு வளமை வாய்ந்தது. எனவே, இது, பயோஸ்டீல் (Bio-steel) என்று அழைக்கப்படுகிறது. மூங்கில் 47% கார் பன் -டை- ஆக்ஸைடு உட் கொண்டு 35% ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. அதாவது ஒரு வருடத்தில் 12.17 டன் கார்பன்-டை-ஆக்ஸைடை ஒரு ஏக்கர் மூங்கில் காடு எடுத்துக் கொள்கிறது. பழங்காலத்தில் மலைப்பகுதி மக்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்ட மூங்கிலானது தற்போது அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மூங்கில் காடுகள் 5-6 வருடங்களிலிருந்து 30 வருடங்கள் வரை வருடாந்திர மகசூலைத் தருகிறது. இதனால் பொருளாதார ரீதியாக மற்ற மரங்களைவிட அதிக வருமானத்தை மிகக் குறைந்த காலத்திலேயே மூங்கில் ஈட்டித்தருகிறது.

எனவே, தேசிய மூங்கில் கூட்டமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றுவதன் மூலம், நம் நாட்டில் அதிக அளவில் மூங்கில் வளர்க்கப்படும். அதன் மூலம் நேரடி நன்மைகளாக மூங்கிலின் பல்வேறு பயன்களைப் பெறுவதோடு, மறைமுக நன்மைகளான வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவைகளையும் பெறமுடியும் என்பது திண்ணம்.

ஆதாரம் : முனைவர் மா.கோவிந்தராவ் மற்றும் முனைவர் க.குமரன் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம் - 641 301

2.93548387097
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top