பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மூங்கில் - பயன்பாடு மற்றும் வகைகள்

மூங்கிலின் பயன்பாடுகள் மற்றும் அதன் வகைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மூங்கிலானது ஒரு புல் வகையாகும். கடல்மட்டத்திலிருந்து 1000 மீட்டர் வரை வளரும். பெரும் பாலும் ஐரோப்பாவை தவிர வெப்பமண்டலப் பகுதி மற்றும் ஏறத்தாழ வெப்பமண்டல நிலை சார்ந்த பகுதிகளிலும் இயற்கையாகவே காணப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவின் பாரம்பரிய பயிராகும். இங்கு மூங்கில் இல்லாத நாடுகளை காணமுடியாது. மூங்கிலின் முக்கிய பயன்களை கருத்தில் கொண்டு இதற்கு “மூங்கில் பண்பு வளம்”, “பச்சைத்தங்கம்”, “ஏழைகளின் மரத் துண்டு”, “மக்களின் நண்பன்” மற்றும் “சவப் பெட்டி மரத் துண்டிற்கான பிறப்பிடம்” என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. மூங்கிலானது விவசாயிகளுக்கு இலாபம் தரும் மரப்பயிராக சிறப்புமிக்க தனித்துவம் பெற்றுள்ளது.

கீழ்க்கண்ட காரணங்களால் மூங்கில் பயிரிட ஏற்றதாக உள்ளது.

  1. மூங்கில் வேகமாக வளரக்கூடிய மரத்தாவரமாகும். ஐந்து வருடங்களுக்குள் அறுவடை முதிர்ச்சி அடையக் கூடியது.
  2. கணு நாற்று முறைகள் இருந்தாலும், திசு வளர்ப்பு முறை முக்கியத்துவம் பெற்று வருகிறது.
  3. இளம் பருவ மூங்கிலைக் காட்டிலும், முதிர்ந்த மூங்கில்கள் கட்டுமானப் பணிகளுக்கு முதன்மைத்துவம் பெற்றுள்ளன.
  4. மூங்கிலானது மிகவும் துரிதமாக வளரும் பண்பைக் கொண்டிருந்தாலும், யூக்கலிப்டஸ் தாவரத்துடன் ஒப்பிடும் போது இது “சுற்றுச்சூழலின்” நண்பனாக உள்ளது.

தொழிற்சாலை மற்றும் கிராமப்புறங்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கும், மண் அரிப்பைத் தடுத்து மண்வளத்தைக் காப்பதற்காகவும் தேசிய காடு வளர்ப்பில் மூங்கில் அதிகளவு பயிரிடப்படுகிறது. காகிதக் கூழ் மற்றும் காகித ஆலைகளைத் தவிர, கிராமப்புற மக்கள் மூங்கிலை முதன்மைப் பொருளாக உபயோகிக்கிறார்கள். மேலும் கிராமப்புற மகளிர்க்கும், மூங்கிலானது அதனைப் பதனப்படுத்தும் தொழிலில் வேலைவாய்ப்பை வழங்குகிறது.

மூங்கிலானது, கைவினைப் பொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கும், குடிசைத் தொழில் புரிபவர்களுக்கும் காடுகளில் வசிப்பவர்களின் பிழைப்பிற்கும் பெரும் உதவி புரிகிறது.

மூங்கிலை பயன்படுத்தும் நிலைகள்

காகிதக் கூழ்

இந்தியாவிலும், சீனாவிலும் மூங்கிலானது காகிதக் கூழ் தயாரிப்பதற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. காகிதக் கூழ் மற்றும் காகித ஆலைகளின் தேவை மற்றும் தொன்றுதொட்டு மூங்கில் உபயோகிப்பவர்களின் தேவை அதிகரிப்பதாலும், மூங்கிலின் தேவை அதிகரித்து அதன் விலையும் உயர்கிறது. இது மூங்கிலையே அன்றாட வாழ்க்கைக்கு நம்பி வாழும் கிராமம் மற்றும் நகர்புற மக்களை பெரிதும் பாதிக்கிறது.

கைவினைப் பொருட்கள் மற்றும் ஃபர்னிச்சர்கள்

மேசை, பாய்கள், மூங்கில் தட்டுகள் மற்றும் பலகைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மூங்கிலையே மூலப்பொருளாகக் கொண்டுள்ளன. தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ள 7500 தொகுதிகளிலும், 3,00,000 பெண்கள் பகுதி நேரம் மற்றும் முழுநேர வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள். இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், தாய்வான், ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் மூங்கில் சார்ந்த குடிசைத் தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன.

கட்டுமானம்

வீடுகட்டுவதற்கு மரத்திற்குப் பதிலாக மூங்கில் அதிகமாக உபயோகப்படுகிறது. வரைச்சட்டமானது தேவையான அளவுள்ள மூங்கிலாலும், தரைகள், வெளிப்புற சுவர்கள் மற்றும் உட்புறம் போன்றவை பிளவுபட்ட மற்றும் தட்டையான கணுக்கள் கொண்டும் பாய்போல் பின்னப்படுகின்றன. கட்டிடமெழுப்ப சாரங் கட்டுவதற்கும், ஏணிகள், பாலங்கள், கால் வாய்ப் பாலம், வேலிகள், நிலைக்கால்கள் போன்றவைகள் செய்வதற்கும் உபயோகப்படுகின்றன. மேலும் எல்லாவிதமான படகுகள் மற்றும் கட்டுமரத் தோணிகளிலும் பயன் படுத்தப்படுகின்றன.

உணவு

இளங்குருத்துக்கள் தண்ணீரில் ஊறவைத்து வேக வைக்கப்பட்டு பொரியல் மற்றும் ஊறுகாய் தயாரிக்கப் பயன்படுகின்றன. இந்த குருத்துக்களின் சாறானது ஹைட் ரோசயனிக் அமிலம் மற்றும் புழுக்களைக் கொல்லும் குணங்களைக் கொண்டுள்ளது. மூங்கில் குருத்துக்களை சார்ந்த உணவுத் தொழிற்சாலைகள் துரிதமாக வளர்ந்து வருகின்றன. சில இடங்களில், அரிசியைக் காட்டிலும் மூங்கில் குருத்துக்களுக்கு அதிக விலை உள்ளது. உதாரணமாக, தாய்லாந்து நாடானது ஜப்பானின் 18 சதவீத பெட்டியில் அடைத்து பாதுகாக்கப்பட்ட மூங்கில் குருத்து தேவையைப் பூர்த்தி செய்ய ஏற்றுமதி செய்வதன் மூலம் 30,000,000 அமெரிக்கன் டாலர்களைப் பெறுகிறது.

மருந்து

டபாசீர் அல்லது பேன்ஸ் லோசன் என்னும் மணற்சத்தடங்கிய சாறானது அனேக இரக மூங்கில் கணுக்களில் உள்ளது. இது 2 செ.மீ. அடர்வில் இருக்கும். இது பள்ளமான இடைக் கணுக்களில் எப்பொழுதாவது தண்ணீர் கலந்த திரவம் போல் தென்படுவதாகும். டபாசீர் என்பது ஆஸ்துமா, இருமல் மற்றும் பெண்களின் உபாதைகளைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது.

தீவனம்

கால்நடைகள், குதிரைகள் மற்றும் யானைகளுக்கு மூங்கில் இலைகள் மிகச்சிறந்த தீவனமாக உள்ளது.

மூங்கிலின் பரப்பீடு

மொத்த மூங்கில் தாவரங்கள் 75 வகையான இனங்கள் மற்றும் 1250 வகைப்பிரிவுகளில் குறிக்கப்படுகிறது. இந்தியாவில் 10.03 மில்லியன் எக்டர் நிலப்பரப்பில் 23 இனங்களில் அடங்கும் 125 உள்நாடு மற்றும் வேற்று நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மூங்கில் வகைப்பிரிவுகள் உள்ளன. இது நம் நாட்டின் மொத்த காடுகள் பரப்பளவில் 12.8 சதமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரத்திற்கு, இலையுதிர் மற்றும் இலையுதிரா காடுகளை உள்ளடக்கியதாகும். இவற்றில் 50 சதத்திற்கும் மேல் அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற கிழக்கிந்திய நாடுகளில் உள்ளது. மேலும், அந்தமான் தீவுகள், மத்திய பிரதேசத்திலுள்ள பாஸ்டர் பகுதி மற்றும் மேற்குமலைத் தொடர்ச்சிகளிலும் மூங்கில்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.

தமிழ்நாட்டில் மூங்கிலின் பரப்பீடு

மூங்கிலானது சேர்வராய மலைகள், கொல்லி மலைகள், கல்வராயன் மலைகள், சத்தியமங்கலம், முதுமலை, இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் - பொள்ளாச்சி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டில், மேற்குத் தொடர்ச்சி மலையில் பேம்பூஸா அருண்டீநேசி (அதிகளவு மழை 9500மி.மீ.) மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலையில் டென்ரோகலாமஸ் ஸ்டிரிக்டஸ் (குறைந்தளவு மழை 1500மி.மீ.) போன்ற இரண்டு வகைப்பிரிவுகளே உள்ளன. இவ்வகையான முள் மூங்கில்கள் வேலைப்பளுவை அதிகப்படுத்துவதால், விவசாயிகள் இவற்றை பயிரிட தயங்குகிறார் கள். தமிழ்நாட்டில் 1991-ம் வருடம் மற்றும் அதைத் தொடர்ந்து 1995-ம் வருடங்களில் முள்ளில்லா மூங்கிலை அறிமுகப்படுத்தியதில் தமிழ் நாடு வனத் துறை முன்னோடியாகத் திகழ்கிறது.

தமிழ்நாட்டில் மூங்கில் வளர்ப்பதற்கான வாய்ப்புகள்

27.75 இலட்சம் எக்டர் மொத்த பரப்பளவும் இலாபகரமான மரங்கள் மற்றும் மூங்கில் சாகுபடி செய்ய உகந்ததாக உள்ளது. இந்த நிலங்கள் தமிழ் நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ளன. விவசாயிகள் மூங்கிலை இலாபகரமான மர சாகுபடிக்கு மாற்றுப்பயிராக பயிரிட அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.தமிழ்நாடு வனத் துறையின் ஆராய்ச்சிக் குழு நாற்றங்கால் தொழில் நுட்பங்களையும் உள்ளடக்கி மூங்கில் சாகுபடி தொழில்நுட்பங்களை சேகரித்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில மூங்கில் வகைகளை ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் விவசாயப் பண்ணை நிலங்களில் சோதனை மூலம் பயிரிட்டதில், பயிரிட்ட மூன்றாம் ஆண்டிற்குப் பிறகு ஒரு வருடத்தற்கு 10 முதல் 15 முற்றிய கழிகள் கிடைப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வனத்துறையின் ஆராய்ச்சிக் குழுக்கள் மூலம் நிர்ணயிக்கப்பட்ட சாகுபடி குறிப்புகளை விவசாயிகள் பின் பற்றினால், பயிரிட்ட நான் காம் வருடத்திலிருந்து குறைந்தபட்ச இலாபமாக ரூ.20,000 முதல் ரூ.30,000 / ஏக்கர் / வருடம் கிடைக்குமென்று உறுதி செய்துள்ளது.

மூங்கில் வகைகள்

பேம்பூஸா பல்குவா

உயர்ந்த கொத்தான (Caespitose) மூங்கிலாகும். தண்டுகள் 16-23மீ. உயரமும், 8-15 செ.மீ. விட்டமும், கீழிருந்து கிளைத் து, 20-45 செ.மீ. நீளமுள்ள இடைக்கணுக்களை உடையது. இது நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம், பீகார் மற்றும் கிழக்கு உத்திரப்பிரதேசத்திலும் காணப்படுகிறது. இது தமிழ்நாடு வனத்துறையின் ஆராய்ச்சி குழு மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு, பல்வேறு தட்ப வெப்ப நிலைகளுக்கேற்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. இது தண்டு மற்றும் கிளை பதியம் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. 100 பிபிஎம் (100ppm) நாப்தலின் அசிட்டிக் அமிலத்லை (NAA) தண்டில் தெளிப்பதால், அதிக குருத்துக்கள் மற்றும் வேர்கள் உருவாகின்றன. தொடர்ந்து பூக்கும் தன்மை உடையது. இவ்வகை மூங்கில்கள் மிகவும் உறுதியாக இருப்பதால் கட்டுமானப் பணிகளுக்கு மிகச்சிறந்ததாகும். இது நீரில் நன்கு அமிழ்த்தப்பட்டு பக்குவப்படுத்தப்பட்டால் உறுதியான சாரங்கள் அமைக்க ஏற்றது. திரிபுராவில் அகர்பத்தி குச்சிகள் செய்யப் பயன்படுகிறது. இந்தியாவில், விரைவாக வளரும் ஐந்து உள்நாட்டு மூங்கில் இனங்களில் ஒன்றாகும்.

பேம்பூஸா நியூட்டன்ஸ்

இது நடுத்தர அளவு நேர்த்தியான மூங்கில் வகையாகும். இது 6-10 மீ. உயரம் மற்றும் 4-7 செ.மீ. விட்டமுள்ள தண்டுகள், இலகுவான கொத்துக்கள், கீழே கிளைகள் இல்லாமல் அதிக மேல் நோக்கிய கிளைகள் மற்றும் 25-45 செ.மீ. நீளமுள்ள இடைக்கணுக்களை கொண்டது. வட மேற்கு இந்தியா, பீகார், ஒரிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் பயிரிடப்படுகிறது. தமிழ் நாட்டிற்கு உகந்தது. மணற்பாங்கான ஈரப்பதம் கொண்ட வண்டல் மண்ணிலிருந்து களிமண்பாங்கான வண்டல் மண்ணுடைய மலை சரிவுகள் மற்றும் சமநிலை மேட்டு நிலங்களுக்கு ஏற்றது. தேராடூனில் விவசாயிகள் இதனை செடியினத்தின் அடிக்கன்று (Offsets) மூலம் பயிரிடுகிறார்கள். தொடர்ந்து பூக்கும் தன்மை உடையது. இவ்வகை மூங்கில் அழகிற்காக வளர்க்கப்படுகிறது. இந்திய காகித தொழிற்சாலைக் கேற்ற 6 வகைகளில் இதுவும் ஒன்றாகும். இதன் தண்டுகள், உறுதியாகவும், நேராகவும், கம்பங்கள் செய்ய ஏற்றதாகவும் உள்ளது.

பேம்பூஸா டுல்டா

இலையுதிரா அல்லது இலையுதிர் மற்றும் முடிச்சினை உடைய தொடர்ந்து பூக்கும் தன்மை கொண்ட மூங்கில் வகையாகும். தண்டுகள் 7-23 மீ. உயரம் மற்றும் 5-10 செ.மீ. விட்டமும் உடையது. இடைக்கணுக்கள் 40-70 செ.மீ. நீளம் கொண்டது. அஸ்ஸாம், பீகார், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, மற்றும் திரிபுரா போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.

தமிழ் நாட்டில் தமிழ் நாடு வனத்துறையின் மூலம் எல்லா வகையான தட்ப வெப்ப மண்டலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. நீர் நிலைகள் உள்ள அதிக ஈரப்பதம் கொண்ட சமநிலை வண்டல் நிலங்களில் பயிரிட உகந்தது. ஜூலை மாதத்தில் நேப்தலின் அசிட்டிக் அமிலம் (NAA) + கைநெட்ரின் (Kinetrin) அல்லது இண்டோல் அசிட்டிக் அமிலம் (IAA) + கைநெட்ரின் கரைசலை ஒரு வருட இரண்டு கணுக்கள் உடைய தண்டுப் பதியன் கள் மீது தெளிப்பதால் அதிகளவு குருத் துக் கள் மற்றும் வேர் கள் உருவாகிறது. இந்த மூங்கிலின் விதைகளை சிலிக்கா கூழைத் தடவி உலர்த்துக் கருவியில் 18 மாதங்கள் சேமித்து வைக்கும் போது விதைகளின் வாழக்கூடிய தன்மை 35 நாட்களாகும். விதை முளைப்புத்திறன் 48 சதமாகும். பொதுவாக வீடுகளுக்கு மேற்கூரையாகவும், சாரங்கட்டுவதற்கும் பயன்படுகின்றன. காகிதக் கூழ் மற்றும் காகிதம் தயாரிக்கப் பயன்படுகின்றன. திரிபுராவில் பொம்மைகள், பாய்கள், திரைச்சீலைகள், சுவர் தட்டுக்கள், சுவர் தொங்கல்கள், கூடைகள், தொப்பிகள் போன்ற பல பொருட்கள் செய்யப் பயன்படுகின்றன. தாய்லாந்தில் உள்ள முக்கியமான இரண்டு வகையான உணவு மூங்கில்களில் இதுவும் ஒன்றாகும்.

பேம்பூஸா வல்காரீஸ் (பச்சை மூங்கில்)

நடுநிலை அளவுள்ள, அடர்த்தி குறைந்த குடுமிகள் கொண்ட மூங்கிலாகும். தண்டுகள் 8-20 மீ. உயரமும், 5-10 செ.மீ. விட்டமும் கொண்டது. இடைக்கணுக்கள் 45 செ.மீ. வரை நீளமானது. இந்தியாவில் வடகிழக்கு மற்றும் பல்வேறு பகுதிகளில் காணப்படுகிறது. தமிழ்நாடு வனத்துறையின் ஆராய்ச்சி குழுவின் மூலம் எல்லா பகுதிகளிலும் நன்கு விளையக் கூடியதாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஈரப்பதமுள்ள கொல்லைப்புறங்கள், விளைநிலங்களின் ஓரங்கள், ஆற்று வளைவுகள் மற்றும் மலையடிவாரங்களுக்கு ஏற்றது. தொட்டிகள் அல்லது நாற்றங்கால் படுக்கைகளில் வளர்க்கப்பட்ட ஒன்று அல்லது இரண்டு வருட நாற்றுகள், முதலில் சேகரித்த இரண்டு அரை இடைக்கணுக்கள் உடைய ஒரு கணு கொண்ட தண்டுப் பதியன்கள் மற்றும் ஒன்று முதல் இரண்டு வருட தண்டுக் கிளை பதியன் கள் போன்றவை பயிரிட உகந்ததாகும். ஆகஸ்ட் மாதத்தில் இண்டோல் அசிட்டிக் அமிலம் (IAA) + கைநெட்ரின் (Kinetrin) தெளிக்கப்பட்ட ஒரு வருட இரண்டு கணுக்கள் உடைய தண்டுப் பதியன்கள் நல்ல விளைவுகளைக் கொடுக்கும். சிதறலான, தொடர்ச்சியற்ற பூக்கும் தன்மை உடையது. இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் காகிதம் செய்வதற்கும், சாரங்கட்டுதல், கட்டுமானம் மற்றும் கம்பங்கள் செய்வதற்கும் உபயோகப்படுகின்றன. மணிப்பூரில் வேலிகள் அமைப்பதற்கும் பயன்படுகின்றன.

ஆதாரம் : முனைவர் ஜி.குமரவேலு, I.F.S. கூடுதல் முதன்மை சிறப்பு வனப்பாதுகாவலர், தமிழ்நாடு வனத்துறை, சென்னை - 600 015

Filed under:
3.04651162791
தா. சந்திரன் . Mar 27, 2019 10:31 AM

மூங்கில் வகைகளைக் குறித்து இந்த வலைத்தளத்தின் வழி மிக மிக சிறப்பான தகவல்களைத் தெரிந்து கொண்டேன். எழுதிய ஆசிரியருக்கு நன்றி. எனினும் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள மூங்கில் வகைகளின் படங்களை இணைத்திருந்தால் பயனுள்ளதாக அமையும்.பத்து மூங்கில் மரங்களை எங்களுடைய நிலத்தின் வேலிப்பகுதியில் வளர்த்திருக்கிறோம் . ஆசிரியரின் விளக்கங்களைப் படித்து அவை பேம்பூசா நியூட்டன்சு வகையாக இருக்கலாமோ என எண்ணுகிறேன். எனவே படங்களைப் பார்த்து மூங்கில் வகைகளை அறிய உதவியாக அமையும் .நன்றி.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top