பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மூங்கிலில் சேதம் விளைவிக்கும் பூச்சிகள்

மூங்கில் சாகுபடியில் சேதம் விளைவிக்கும் பூச்சிகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மூங்கில் மரங்களில், ஏறத்தாழ 200 வகை பூச்சிகள் சேதம் விளைவிக்கின்றன. இவைகளில் பத்துக்கும் குறைவான பூச்சிகளே முக்கியமானதாக கருதப்படுகின்றன. இவ்வகைப்பூச்சிகள் நாற்றங்காலில் நடவு செய்த மூங்கில் மற்றும் வெட்டப்பட்ட மூங்கில் ஆகியவற்றில் சேதம் விளைவிக்கின்றன.

நாற்றங்கால் பூச்சிகள்

 • கரையான்கள் : கரையான்கள் வளரும் வேர்களைக் கடிப்பதால் மூங்கில் நாற்றுகள் வாடிவிடும்.
 • வெள்ளைப்புழு : மண்ணிற்கடியில் இருக்கும் இவ்வண்டினப் புழுக்கள், கிழங்குப்பகுதிகளை கடிப்பதால் நாற்றுகள் வாடிக் காய்ந்து விடும்.
 • வெட்டுக்கிளிகள் : வெட்டுக்கிளிகள் இளம், வளர்ந்த பருவங்களில் இலைகளைக் கடித்து சேதம் விளைவிக்கின்றன.
 • நடவு மூங்கில் பூச்சிகள் : ஏறத்தாழ 150 பூச்சிகளில் தீவிரமான பூச்சிகள் என்பது இலை மடக்குப்புழு, ஹிஸ் பின் துளைப்பான், மூங்கில் அசுவிணி மற்றும் தூர் கூன் வண்டு போன்றவைகளாகும். மேலும் நாற்றங்காலில் காணப்படும் வெள்ளைப் புழுக்களும், கரையான்களும் நட்ட மூங்கில்களைத் தாக்குகின்றன.
 • மடக்குப்புழு : இப்புழுக்கள் இளநிலைக் காலங்களில் இலைகளைத் துளைத்தும், சற்றே வளர்ந்த பின் நீளவாக்கில் மடக்கியும் இலைகளைத் தின்று விடுகின்றன. வட மாநிலங்களில், இப்புழுக்கள் மழைக்காலங்களில் குறுகிய காலத்தில் அதிக அளவில் பெருக்கமடைந்து சேதம் விளைவிக்கின்றன.
 • ஹிஸ்பின் துளைப்பான் : கிழக்காசிய நாடுகளில் இப்பூச்சிகள் அதிக சேதத்தை விளைவிக்கின்றன. மழைக்காலங்களில் இலை சோகை இடுக்குகளில் இடப்படும் முட்டைகள் பொறித்தவுடன், மூங்கில் கணுக்களின் மேற்பரப்பை சுரண்டிவிடும். சோகைகள் உதிர்ந்தவுடன், கணுக்களில் துளையிட்டு குடைந்து உட்செல்லும். வளர்ந்த வண்டுகள் இலைத்துளிர்களைத் தின்று வாழும். இதனால் மூங்கில் வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.
 • மூங்கில் அசுவிணி :  அசுவிணியானது, வளரும் நுனி குருத்துக்களில் அதிக எண்ணிக்கையில் பெருக்கமடைந்து, சாற்றை உறிஞ்சுவதால் குருத்துக்கள் வாடி செடிகள் மடிந்துவிடும். மேலும் இப்பூச்சிகள் சுரக்கும் சர்க்கரை துளிகள் மரங்களில் படியும் இடங்களில் கருநிறப் பூசணங்கள் படர்ந்து ஒளிச்சேர்க்கை தடைபடும்.
 • தூர்கூன் வண்டு ; இவ்வகை வண்டுகள் நுனி குருத்துக்களை கடிப்பதால், மூங்கில் வளர்ச்சி குன்றிவிடும். மேலும், இவை இளம் கனிகளில் சிறு துவாரமிட்டு முட்டைகளை இடுகின்றன. பொறித்த புழுக்கள் மூங்கில் களிகளினுள் மேலும், கீழும் குடைந்து சேதம் ஏற்படுத்துகின்றன. இப்பகுதிகள் மரத்துகள்களாலும், புழுக்களின் எச்சத்தாலும் நிரப்பப்படுகின்றன. காற்று, மழை மற்றும் மரங்கொத்தி பறவைகளின் தாக்கத்தால் ஒடிந்து விடுகின்றன. இத்தாக்கத்தால் மிகச் சிறுத்த மூங்கில்கள் துளிர்த்து மூங்கில் வராமல் தடுத்து விடுகின்றன.
 • நாற்றங்காலை சேதப்படுத்தும் வெட்டுக் கிளிகள், கரையான் , வெள்ளைப்புழுக்கள், நட்ட மரங்களிலும் சேதம் ஏற்படுத்துகின்றன.

வெட்டிய மற்றும் சேமிப்பு மூங்கில் பூச்சிகள்

ஏறத்தாழ 45 இனப்பூச்சிகளின் சேதம் வெட்டிய மூங்கிலில் காணப்படுகின்றன. இவைகளில் போஸ்டிரிக்சிட் வண்டுகள் முக்கியமானவை. இவ்வகை பூச்சிகள் அதிக ஈரப்பதம் உள்ள மூங்கில்களைத் தாக்குகின்றன.

விதையை தாக்கும் பூச்சிகள்

இரண்டு முக்கிய பூச்சிகள் விதைகளைத் தாக்குகின்றன.  விதை நாவாய் பூச்சிகள் மிகவும் கவர்ச்சியான மஞ்சள் வண்ணங்களில் காணப்படும். வளர்ந்த, இளம் பூச்சிகள் பூக்கும் பருவத்திலேயே தாக்குதலைத் தொடங்கிவிடும். முற்றி சிதறிய தானியங்களிலுள்ள சாற்றை உறிஞ்சிவிடும். அடுத்து சேமிப்பு, தானிய புழுக்கள் விதைக்கு ஒரு புழு வீதம் அதிக சேதத்தை விளைவிக்கின்றன. இவ்விரு வகைப் பூச்சிகளினால் மூங்கில் விதை முளைப்புத் திறன் குன்றிவிடும்.

பூச்சி கட்டுப்பாட்டு முறைகள்

 • மண்ணிற்கு அடியில் இருக்கும் கரையான், வெள்ளைப் புழுக்களை திம்மட் குருணை பூச்சி கொல்லியை 10 சதுர நாற்றங்காலுக்கு 200 கிராம் வீதம் மேற்பரப்பில் தூவியோ அல்லது குளோர்பைரிபாஸ் (20 சதம்) 100 மில்லியை தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.
 • இலை தின்னும் பூச்சிகளான இலை மடக்குப்புழு மற்றும் வெட்டுக்கிளி போன்றவற்றைக் கட்டுப்படுத்த அங்கக பாஸ்பரஸ் பூச்சி கொல்லியான குளோர்பைரிபாஸ் ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. என்ற அளவில் கைத்தெளிப்பானால் தெளிக்கலாம்.
 • சாற்றை உறிஞ்சும் அசுவிணி போன்ற பிற பூச்சிகளைக் கட்டுப்படுத்த டைமீத்தோயேட் அல்லது பாஸ்பாமிடான் அல்லது மோனோகுரோட்டாபாஸ் ஒரு லிட்டர் நீருக்கு 1.00 மி.லி. என்ற அளவில் கைத்தெளிப்பானால் தெளிக்கலாம்.
 • மூங்கில் துளைப்பான்களை தவிர்க்க திறம்பட சாகுபடி முறைகளைக் கையாளுதல் அவசியம். நெருக்கமான நடவும், துப்புரவற்ற சாகுபடியும் மூங்கிலைத் துளைக்கும் பூச்சிகளின் தாக்குதலை அதிகரிக்கிறது. எனவே, தகுந்த இடைவெளியில் மூங்கிலை நடவு செய்து தக்க தருணத்தில் அறுவடை மேற்கொள்ள வேண்டும். தாக்குண்ட, மெலிந்த, நலிந்த மூங்கில் தூர்களை அகற்றி அழித்துவிட வேண்டும்.
 • வெட்டிய மூங்கில்களை 0.1 சத விட்டேன் கரைசலிலோ அல்லது 3.0 சத போரிக் அமிலம் மற்றும் போராக்ஸ் (1:2) கலவைக் கரைசலில் தோய்ப்பதன் மூலமாகவோ கூன்வண்டு மற்றும் பிற துளைப்பான்களைத் தவிர்க்கலாம்.
 • முழுமூங்கில்களையும், மூங்கில் தப்பைகளையும் 1.0 சத சோடியம் பென்டாகுளோரோனேட் அல்லது சோடியம் பென்டா குளோரோபினேட் + பாரிக் அமிலம் + போராக்ஸ் கரைசலில் நேர்த்தி செய்யலாம். வசதிப்படும் இடங்களில் அதிக வெப்பம் அடுத்து கடுங்குளிர் நிலைக்கு மாறிமாறி நேர்த்தி செய்வதால் கரைசல்கள் விரைவில் மூங்கில் களிகளுக்குள் உறிஞ்ச ஏதுவாகிறது.
 • பூச்சி கொல்லிகளில் செயற்கை பைரித்திராய்ட் வகையான பெர்மத்திரின் அல்லது சைப்பர்மெத்தரின் லிட்டருக்கு 1 மி.லி. என்ற அளவில் நேர்த்தி செய்வதும் நல்ல பலனை அளிக்கும். இவ்வாறு பூச்சி கொல்லிகள் கொண்டு நேர்த்தி செய்யும் வேளையில் ஒட்டுத் திரவமான டிரைட்டான் ஒரு லிட்டர் நீருக்கு 1 மி.லி. என்ற அளவில் சேர்ப்பதால் நேர்த்தி கரைசல் மூங்கிலில் நன்கு ஒட்டிக் கொள்ளும்.
 • பூக்கும் தருணத்தில் காணப்படும் நாவாய் பூச்சிகளை ஊடுருவி பாயும் பூச்சி கொல்லிகளான டைமீத்தோயேட் அல்லது மீத்தைல் டெமட்டான் லிட்டருக்கு 1 மி.லி. என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
 • விதைகளில் காணப்படும் தானியப் புழுக்களை, சேமித்த விதைகளை திரவ புகையூட்டு வேதிமங்களான கார்பன்-டை-சல்பைடு அல்லது மீத்தைல் புரோமைடு அல்லது எத்தலீன் புரோமைடு 100 கிலோ விதைக்கு 2-3 மி.லி. என்ற அளவில் புகையூட்டு நேர்த்தி செய்து கட்டுப்படுத்தலாம்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

2.93548387097
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top