பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள் / இந்திய வேளாண்மையின் வரலாறு மற்றும் எழுச்சி
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்திய வேளாண்மையின் வரலாறு மற்றும் எழுச்சி

இந்திய வேளாண்மையின் வரலாறு மற்றும் எழுச்சி பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

உணவளிக்கும் உழவுத்தொழில் உயர்வு செய்யும் தொண்டாக தொன்றுதொட்டே எண்ணப்படும் கருத்தாகும். நாடு உய்வதும், உயர்வதும், பொருளாதாரம் நிலைப்பெற்று உறுதிப்படுவதும் வேளாண்மையின் வளர்ச்சியைப் பொருத்ததேயாகும். வேளாண்மை என்பதை ஒரு கலை, அறிவியல் மற்றும் வியாபாரம் என்று வர்ணிக்கலாம். உலகின் நாகரீக தோற்றம் வேளாண்மையில் இருந்தே தொடங்கியது. மேலும் வேளாண் அறிவியலே இன்றைய நவீனகால அறிவியலின் தாய் என வர்ணிக்கப்படுகிறது. உலகில் உள்ள கோடிக்கணக்கான தாவர இனங்களிலிருந்து, மனிதன் மற்றும் மனிதனைச் சார்ந்த விலங்குகளுக்காக குறிப்பிட்ட சில தாவர இனங்களைத் தேர்ந்தெடுத்து சாகுபடி செய்யும் தொழிலுக்கு வேளாண்மை அல்லது விவசாயம் என்று பெயர்.

மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகளுக்காக போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இக்கால கட்டத்தைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

கற்காலம்

கற்காலத்தில் மனிதன் காடுகள் மற்றும் குகைகளில் வாழ்ந்து, மிருகங்களின் இறைச்சி மற்றும் தாவர பாகங்களை உண்டு நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வந்தான். இக்காலகட்டத்தில் மனிதன் கரடுமுரடான கற்களை ஆயுதமாகப் பயன்படுத்தினான். மேலும் தீயைக் கண்டுபிடித்து அதனைப் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டான்.

புதிய கற்காலம்

இக்காலகட்டத்தை வேளாண்மையின் தொடக்க காலம் எனக் கூறலாம். இக்கால மனிதன் காட்டு ரக நெல், கோதுமை, பார்லி போன்ற பயிர்களை பயிரிட்டும், ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற விலங்குகளை உடன் வளர்க்கவும் ஆரம்பித்தான். மேலும் இக்கால கட்டத்தில் இடம் விட்டு இடம் பெயரும் நாடோடி வாழ்க்கை மற்றும் உணவு சேமித்தலை நிறுத்தி, தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்ததுடன், வேளாண்மை சார்ந்த நிரந்தர குடியிருப்புக்களையும் ஏற்படுத்திக் கொண்டான். புதிய கற்காலத்திலும் மனிதன் தொடர்ந்து கற்களால் ஆன ஆயுதங்களையே பயன்படுத்தி வந்தான். எனினும், அவற்றின் அமைப்பு, வடிவம், கூர்மை மற்றும் மெருகு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருந்தான். இக்காலகட்டத்தில் மனிதன் சக்கரங்களைக் கண்டுபிடித்தான். அது, மனிதன் மற்றும் அவனைச் சார்ந்த பொருட்களின் போக்குவரத்திற்கு வழிவகை செய்தது. சக்கரங்கள் கண்டுபிடிப்பு மனிதகுல வரலாற்றின் முக்கிய மைல்கல்’ ஆக கருதப்படுகிறது. புதிய கற்கால மனிதன் தனது உணவுப் பழக்கவழக்கத்தை மாற்றிக்கொண்டதுடன் பருத்தி, பஞ்சு மற்றும் கம்பளியாலான ஆடைகளை உடுத்தவும் அறிந்திருந்தான்.

உலோக காலம்

இது தாமிரம், செம்பு மற்றும் இரும்பு போன்ற உலோகங்களைப் பயன்படுத்தி வேளாண் கருவிகளையும், ஆயுதங்களையும் தயார் செய்து மனிதன் பயன்படுத்திய காலம் ஆகும். இக்காலகட்டத்தில் உழவு செய்தல், விதை ஊன்றுதல், மண் பற்றிய அறிவு போன்றவை வேளாண்மையில் ஏற்பட்ட முன்னேற்றங்களாகும். மேலும், மனிதனின் பண்பாடு மற்றும் நாகரீகம் பெரும் வளர்ச்சியை எட்டியது.

கற்காலத்தில் தொடங்கிய வேளாண் தொழில், இந்தியாவைப் பொருத்தமட்டில் ஒரு தொழிலாக அல்லாமல் மனிதனின் வாழ்க்கை முறையாகவே கருதப்பட்டது, இந்தியாவில் வேளாண் தொழிலுக்கு அளிக்கப்பட்டு வந்த முக்கியத்துவத்தினை கெளடில்யரின் அர்த்தசாஸ்திரம், பண்டைய தமிழ் நூல்களான தொல்காப்பியம், திருக்குறள் மற்றும் கந்தபுராணம் போன்றவற்றின் மூலமாகவும் அறியமுடிகிறது.

அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தரமான விதை, இடுபொருட்கள் விநியோகம், நீர்ப்பாசன வசதி செய்தல், வானிலை முன்னறிவிப்பு, விற்பனை நுட்பங்கள், சேமிப்பு முறைகள் மற்றும் உயிரியல் முறை பயிர்பாதுகாப்பு போன்றவை தற்கால வேளாண்மைக்கும் பொருந்துவதாகவே உள்ளது.

உம்.1 கோதுமையில் தோன்றும் கருந்துரு (SMUT) நோயைத் தவிர்க்க ஏழு இரவுகள் விதைகளை பணியில் வைத்து நேர்த்தி செய்தல் 2. பூச்சி மற்றும் பூசணத் தாக்குதலைத் தவிர்க்க, கரும்பின் வெட்டப்பட்ட பாகங்களில் நெய் மற்றும் தேன் கலந்த கலவையினைப் பூசுதல்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என பண்டைய தமிழகத்தின் நிலவகைப்பாட்டையும், வருடத்தின் ஆறு பருவங்களையும், அக்காலத்தில் பயிரிடப்பட்ட பயிர்களையும் தொல்காப்பியம் எனும் நூல் விளக்குகிறது. கந்தபுராணத்தில், தானிய வயலுக்கு பறவை விரட்ட சென்ற மன்னன் மகள் வள்ளியை முருகக்கடவுள் மணந்த கதையிலும் வேளாண்மை பற்றிய குறிப்பு உள்ளது. தமிழகத்தில் சோழர் ஆட்சிக்காலத்தில் பாசன மேம்பாட்டிற்காக காவிரியின் கரைகளை கரிகால்சோழன் எனும் மன்னன் உயர்த்தியதுடன், காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டி வேளாண் தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்தான்.

“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை’

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்’

என்ற குறட்பாக்களில் உழவுத்தொழிலின் சிறப்பையும், அவசியத்தையும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர இந்தியாவில் வேளாண் வளர்ச்சி

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் வேளாண் தொழிலின் வளர்ச்சிக்காகவும், அது தன்னிறைவு நிலையை எட்டவும் கீழ்க்காணும் திட்டங்களை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துத் தொழிற்சாலைகள் அமைத்தல், பாசனம் மற்றும் மின்சார உற்பத்தி சார்ந்த பல்நோக்குத் திட்டங்களை ஏற்படுத்துதல், வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை நாடு முழுவதும் அமைத்தல்

எனினும் பெருகிவரும் மக்கட்தொகைக்கு உணவு உற்பத்தி போதுமானதாக இல்லை. அதனால் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலையில் உணவுப்பொருள், பால் மற்றும் மீன்வளம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டியதாயிற்று. இதனை கருத்தில் கொண்டு நம் நாட்டில் ஐந்தாண்டுத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன.

ஐந்தாண்டுத்திட்டங்கள்

இந்தியப் பொருளாதாரம், திட்டக்குழுவால் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தி, கண்காணிக்கப்படும் ஐந்தாண்டுத் திட்டங்களைப் பொறுத்தே அமைகிறது. 1951 - 56ல் நடைமுறைப்படுத்தப்பட்ட முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கம் வறுமையைப் போக்குவதே ஆகும். மேலும் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் விவசாயத்திற்கும், அணைகள் மற்றும் நீர்ப்பாசன வசதிகளுக்கான முதலீட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 1961-66 வரையிலான மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் நெல் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது. நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1969-74) பதினான்கு இந்திய வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. மேலும் விவசாய முன்னேற்றத்திற்கான பசுமைப்புரட்சியும் இக்கால கட்டத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது. 2002 - 07 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட பதினோராம் ஐந்தாண்டுத்திட்டத்தில் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) நான்கு சதம் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

பசுமைப்புரட்சி (1967 - 1978)

உணவுப் பொருட்களின் உற்பத்தியை அதிகப்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டம் பசுமைப் புரட்சியாகும். 1943-ஆம் வருடத்தில் வங்காளத்தில் ஏற்பட்ட உணவுப் பஞ்சம் பசுமைப் புரட்சி ஏற்பட காரணமாய் அமைந்தது. மேம்படுத்தப்பட்ட வேளாண் தொழில்நுட்பங்கள், உயர் விளைச்சல் தரும் இரகங்கள், புதிய வீரிய ஒட்டு இரகங்களின் கண்டுபிடிப்பு ஆகியவற்றின் மூலமாக மக்களின் உணவுத் தேவையைபூர்த்தி செய்து தன்னிறைவு அடைவதே பசுமைப் புரட்சியின் நோக்கமாகும். இதனால் குறிப்பாக நெல் மற்றும் கோதுமையின் உற்பத்தி பன்மடங்கு உயர்த்தப்பட்டது. வேளாண் விளைநிலங்களை அதிகரித்தல், தீவிர சாகுபடித்திட்டம், வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி போன்றவை பசுமைப்புரட்சியின் வெற்றிக்குத் துணைபுரிந்தன. டாக்டர்.சி.சுப்பிரமணியம் மற்றும் டாக்டர்.மா.சு.சுவாமிநாதன் போன்றவர்கள் பசுமைப்புரட்சிக்கு அடிகோலியவர்கள் ஆவர். டாக்டர். மா. சு. சுவாமிநாதன் பசுமைப்புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகின்றார். பசுமைப் புரட்சியின் விளைவாக உணவுப் பொருள் உற்பத்தி நான்கு மடங்கு வரை அதிகரித்தது.

வெண்மை புரட்சி

பால் மற்றும் பால்பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டது. உயர் உற்பத்தி தரும் கறவை இனங்களான ஹோல்ஸ்டின் ப்ரீசன், ஜெர்சி போன்றவை இறக்குமதி செய்யப்பட்டு பால் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்கள் வெண்மை புரட்சிக்கு வித்திட்டவராவார். இதனால் பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தி நான்கு மடங்கு வரை அதிகரித்தது.

நீலப்புரட்சி (1973-2002)

கடல்வாழ் உணவுப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க ஏற்படுத்தப்பட்ட திட்டமே நீலப்புரட்சியாகும். இதன் விளைவாக சுமார் ஏழு மடங்கு வரை மீன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.

மஞ்சள் புரட்சி (1986 - 1990)

எண்ணெய் வித்துப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தலே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். வீரிய ஒட்டு இரக விதைகள் மற்றும் திருந்திய சாகுபடி முறைகள் மூலமாக எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடி ஐந்து மடங்கு வரை அதிகரிக்கப்பட்டது.

மேலும் காய்கறி மற்றும் பழங்களின் உற்பத்தியை அதிகரிக்க தங்கப் புரட்சி (Golden Revolution) என்ற திட்டம் வகுக்கப்பட்டது. இந்திய வேளாண் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR) பசி, வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினை அகற்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்த வானவில் புரட்சி (Rainbow Revolution) என்ற தொலைநோக்குத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது.இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் நம்நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதுடன், தேவைக்கு அதிக அளவு உற்பத்தி செய்து ஏற்றுமதிக்கும் வழிவகை செய்வதாகும்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் 16.07.1929 அன்று ஏற்படுத்தப்பட்டு புதுடில்லியை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் நாடெங்கிலும் 45 பல்கலைக்கழகங்கள் மற்றும் 97 கல்வி நிறுவனங்களுடன் தோட்டக்கலை, கால்நடை அறிவியல், மீன் வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் அறிவியலின் கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஒருங்கிணைத்து, வழிநடத்தி, கட்டுப்படுத்தும் தலைமைப் பொறுப்பை வகிக்கிறது. இந்நிறுவனம் உலகில் மிகப்பெரிய அமைப்பாகும். இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி நாட்டின் உணவுப் பொருள் உற்பத்திக்கு வழிவகுத்தது. அதனால் 1950 - 51க்கு பிறகு உணவுப் பொருள் உற்பத்தி நான்கு மடங்கும், தோட்டக்கலைப் பயிர் உற்பத்தி ஆறு மடங்கும், மீன் உற்பத்தி ஒன்பது மடங்கும், பால் மற்று பால் பொருட்களின் உற்பத்தி ஆறுமடங்கும் மற்றும் முட்டை உற்பத்தி 14 மடங்கும் அதிகரித்துள்ளது.

சாதனைகள்

  • உயர் விளைச்சல் தரக்கூடிய நெல், கோதுமை சாகுபடியால் நாடு சுதந்திரம் அடைந்தபோது 50 மில்லியன் டன்களாக இருந்த உணவு உற்பத்தி பசுமைப் புரட்சியின் மூலம் 1968ம் ஆண்டு 198 மில்லியன் டன்களாக உயர்ந்தது. மேலும் 2007 - 08ம் ஆண்டில் மிக அதிக அளவாக 227.32 மில்லியன் டன்கள் உற்பத்தியை எட்டி உணவு தானிய உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்தது.
  • வெண்மைப் புரட்சியால் நாடு சுதந்திரம் அடைந்த தருணத்தில் 17 மில்லியன் டன்களாக இருந்த பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தி 1992-93 ஆம் வருடத்தில் 69 மில்லியன் டன்களாகவும், 2001-02 ஆம் வருடத்தில் 88 மில்லியன் டன்களாகவும் உயர்த்தப்பட்டது.
  • நீலப்புரட்சி 1951ஆம் வருடத்தில் 0.75 மில்லியன் டன்களாக இருந்த மீன் உற்பத்தியை 1997 ஆம் ஆண்டு 5.4 மில்லியன் டன்களாக உயரச் செய்தது.
  • இதனால் உலகின் நன்னீர் மீன் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தை அடைந்தது.
  • சுதந்திரத்தின் பொழுது ஐந்து மில்லியன் டன்களாக இருந்த எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி 25 மில்லியன் டன்களாக மஞ்சள் புரட்சியின் மூலம் அதிகரிக்கப்பட்டது.
  • வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த பொருட்களை பொருத்தவரையில் இந்தியா உலக அளவில் இரண்டாவது பெரும் உற்பத்தியாளராக உள்ளது.
  • மேலும் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (GDP) 2008-09 ஆம் ஆண்டில் 18சதம் பங்களிப்பைக் கொடுத்துள்ளது. முந்திரி, தேங்காய், தேயிலை, இஞ்சி, மஞ்சள் மற்றும் குறுமிளகு உற்பத்தியில் இந்தியா உலகளவில் முதலிடம் வகிக்கிறது.
  • கோதுமை, நெல், கரும்பு, நிலக்கடலை மற்றும் மீன் உற்பத்தியில் உலக அளவில் இரண்டாம் இடத்தை பெற்று இந்தியா சாதனை படைத்துள்ளது. உலக அளவில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது (281 மில்லியன்).
  • மேலும் பால் மற்றும் பால்பொருட்கள் உற்பத்தியிலும் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் ஏற்பட்ட பசுமைப் புரட்சியின் விளைவாக நிலத்தின் உற்பத்தி திறன் சுமார் 30 சதத்திற்கு மேல் அதிகரிப்பு செய்யப்பட்டது. இதனால் எளிதில் தன்னிறைவு நிலை எட்டப்பட்டது.

உயர் விளைச்சல் இரகங்களின் பயன்பாடு 7 சதத்திலிருந்து சராசரியாக 22 சதமாக உயர்த்தப்பட்டது. இது கோதுமை, நெல் மற்றும் தானியப் பயிர்களின் உற்பத்தியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நாட்டில் ஏற்படுத்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் (Agricultural Universities), இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR) மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்களின் ஆராய்ச்சி மற்றும் கல்வியின் மூலமாக வேளாண் தொழில் வளர்ச்சி, விளைபொருள் உற்பத்தி அதிகரித்தது. மேலும் இந்நிலையங்கள் கொடுக்கும் ஏற்றுமதி குறித்த தகவல்களால் நாடு முன்னேற்றப் பாதையில் செல்வதுடன் உணவு பதப்படுத்துதல், உயர் விளைச்சல் இரகங்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்பினை அளித்து தனிமனித வருமானத்தை உயர்த்தியுள்ளது. நமது முன்னோர்கள் அனுபவ அறிவைப் பயன்படுத்தி பயிர் சாகுபடி மேற்கொண்டனர். ஆனால் வளர்ந்து வரும் மக்கட்தொகைப் பெருக்கத்திற்கு அனுபவ அறிவு மட்டும் போதாது; விஞ்ஞான தொழில் நுட்பங்களையும் சேர்த்து பயிர் உற்பத்தியில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், "படிப்பவன் உழவேண்டும் உழுபவன் படிக்க வேண்டும்’ என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் கூற்றுப்படி உழவுத்தொழிலில் ஈடுபட்டு வரும் அனைவரும் புதிய வேளாண் தொழில்நுட்பங்களை அறிந்து பயன்படுத்தி நாட்டு முன்னேற்றத்தில் பங்குபெற வேண்டும்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

2.83333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top