অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

நெற்பயிர் சாகுபடிச்சூழல்கள்

நெற்பயிர் சாகுபடிச்சூழல்கள்

அறிமுகம்

நெற்பயிர் சாகுபடி பயிர் விளையும் நிலத்தின் மண் வகை, கிட்டும் நீர் மற்றும் பொதுவான பருவக்காற்று, மழை ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் பின்பற்றப்படும் முதன்மை நெல் சாகுபடி சூழல்கள் :

 1. நன்செய்முறை - (சேற்றுமுறை)
 2. மானாவாரி முறை - (புழுதி முறை)
 3. பகுதி பாசன சாகுபடி முறை

சேற்றுமுறையை பாசன நெல் என்றும் கூறுவர். இந்த அமைப்பில் ஈர (பாசன) நிலையில் "விதைமுதல் விதை வரை" என்ற முறையில் பயிர் வளர்கின்றது. நிலத்தை மீண்டும் மீண்டும் நன்கு உழுது, 5-7 செ.மீ நிலையான நீர் தேங்கிய நிலைக்கு கொண்டு வருதல். மெல்லிய நீர் தேங்கிய நிலையை அடைந்த பின் நிலத்தை சமன்படுத்தல் வேண்டும். பின் நாற்றை நடுவதோ அல்லது முளை வந்த விதையை ஊன்றுதலோ அல்லது வீசி விதைத்தலோ செய்யலாம். பாசன நீர் இருக்கும் இடத்தில் இந்த முறையில் விளைச்சல் செய்யலாம். இப்பாசனப்பயிர் மொத்த நெல் உற்பத்தியில் 55 சதவிகிதம் பங்கு வகிக்கிறது

நன்செய் அமைப்பில் பின்பற்றப்படும் முறைகள் பின்வருமாறு

 • திருந்திய நெல் சாகுபடி முறை
 • நஞ்சையில் சேற்றுவயலில் நேரடி விதைப்பு

திருந்திய நெல் சாகுபடி முறை

பயிர், மண், நீர் மற்றும் வேர் வளர்ச்சியை துாண்டும் ஊட்டச்சத்துக்கள் ஆகியவற்றின் மேலாண்மையை மாற்றுவதன் மூலம் பாசன நெல்லின் உற்பத்தி அதிகரிக்கிறது. திருந்திய நெல் சாகுபடி ஒரு தொழில்நுட்பம் அல்ல ஏனெனில் அதிக அனுபவத்தினால் இன்னும் பருவத்திற்கு பருவம் விரிவுபட்டும், முன்னேறிக் கொண்டும் உள்ளது. இந்த அணுகுமுறையில் பல விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பலர் அவர்களுடைய அறிவு மற்றும் உள்ளுணர்வைப் பயன்படுத்தி நெல் உற்பத்தியை மிகவும் பயன் விளைவிக்கும் தன்மையுடனும், நிலையாகவும் மாற்றி வருகின்றனர்.

திருந்திய நெல் சாகுபடியின் முக்கிய படிநிலைகள்

 • நாற்றங்கால் பரப்பு மற்றும் விதையளவு
 • நாற்றுக்களின் வயது
 • சதுர நடவு
 • நீர் மேலாண்மை
 • எந்திர களைக்கருவியை உபயோகித்தல்

நாற்றங்கால் பரப்பு மற்றும் விதையளவு

 • 1 எக்டர் நடுவதற்கு 7-8 கிலோ விதை மட்டுமே போதுமானது.
 • ஒரு எக்டருக்கு 100 சதுர மீட்டர் அளவு நாற்றங்கால் தயாரித்தல்.
 • மேட்டுப்பாத்திக்கு 1 x 5 மீ என்ற அளவில் 1 எக்டருக்கு 20 பாத்திகள் அமைத்தல்.
 • மேட்டுப் பாத்திகளில் பாலிதீன் தாள் பரப்ப வேண்டும். இதன் மேல் 4 செ.மீ அளவு வரை மண்ணால் நிரப்ப வேண்டும்.
 • நாற்றங்கால் பாத்தியில் 5 சதுர மீட்டருக்கு 375 கிராம் அளவு விதையை சீராகத் துாவ வேண்டும்.
 • பூவாளி கொண்டு நீர் தெளிப்பது நன்று.
 • பின்பு விதைப்பாத்திகளை தென்னை நார்க்கழிவு அல்லது வைக்கோலால் மூட வேண்டும்.

நாற்றுக்களின் வயது

 • 14 நாட்களான இளநாற்றுகளையே (3 இலைப் பருவம்) நடவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • நாற்றங்கால் பாத்திகளில் போதுமான அளவு கரிம எரு கொடுத்திருந்தால் நாற்று வளர்ச்சி நன்றாக இருக்கும்.

நீர் நிர்வாகம்

 • செம்மை நெல் சாகுபடியில் நீர் நிர்வாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் நெல் வயலில் வேர்களுக்கு காற்றுச்சூழல் வசதியைத் தருவது முக்கியமானது.
 • முனை முறிந்த வேர்களைக் கொண்ட செடியால் கீழ் அடி மண்டலத்தின் எஞ்சிய மண் ஈரத்தை பெற முடியாது. பெரிய மற்றும் நல்ல செயல் பண்புகள் கொண்ட வேரால் தான் ஈரப்பதத்தினை தக்க வைத்துக் கொள்ள முடியும். இதனால் அதன் வளர்ச்சியையும், உற்பத்தியையும் பாதுகாக்கலாம்.
 • எனவே மண்ணில் ஈரத்தன்மையும், உலர்த்தன்மையும் மாறி மாறி நிலவ வேண்டும்.
 • நீர் மறைய நீர் கட்டுதல் முதல் 10 நாட்களில் மிக முக்கியம்.
 • மயிர்க்கோடு வெடிப்பு உருவான பிறகு 2.5 செ.மீ ஆழத்திற்கு, கதிர் வெளியே தோன்றும் வரை, நீர்ப் பாசனம் தர வேண்டும்.
 • கதிர் வெளியே தோன்றிய பிறகு 5 செ.மீ அளவிற்கு நீர் பாய்ச்சி கட்டிய நீர் மறைந்த உடன் மீண்டும் நீர் பாய்ச்ச வேண்டும்

எந்திர (கோனோ) களைக்கருவியை உபயோகிக்கும் முறை

 • சதுர நடவு, களைக்கருவியை இரண்டு திசைகளில் எளிதாக உபயோகிக்க உதவுகிறது. இதனால் களையைக் கட்டுப்படுத்த முடிகிறது. செம்மை நெல்லில், நடவு நட்ட நாளிலிருந்து 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் மீண்டும் களைக்கருவியைப் பயன்படுத்தி களை எடுக்க வேண்டும்.
 • ஒரு ஏக்கர் களை எடுக்க மூன்று தொழிலாளர்கள் போதுமானது.
 • களைகள் நசுக்கப்பட்டு, பின், மட்குதல் ஏற்படும்போது அதன் ஊட்டச்சத்துக்கள் மண்ணினுள் செல்கிறது.
 • மண்ணில் பயனுள்ள இயல்பு வேதிச் செயல் மற்றும் உயிரியல் வளம் அதிகமாக இருப்பதால் அதனை அடிக்கடி கிளர வேண்டும்.
 • வேர் களைதல் துார்களை அழுத்துவதால், துார்களில் வெடிப்பு ஏற்படுகிறது.
 • களைக்கருவியை உபயோகிக்க, நீர் அளவை கண்காணித்து வர வேண்டும். விடுபட்ட களைகளை கைக்களை மூலம் எடுக்கலாம். இதனால் களை எடுப்பதற்கான செலவு 52.5 சதவிகிதம் குறைகிறது

திருந்திய நெல் சாகுபடி முறை செயல்பாடுகள்

 • திருந்திய நெல் சாகுபடி முறையின் கொள்கைகள் கீழ்கண்ட செயல்பாடுகளின் மூலம் பூர்த்திச் செய்யப்படுகிறது

பருவம்

 • போதுமான நீர் பாசன வசதியுடன் கூடிய வறண்ட பருவம் மிகவும் ஏற்றது.
 • பெருமழை பொழியும் பரப்புகளில் இம்முறை சாகுபடி கடினமானது. (தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை)

இரகங்கள்

ஒட்டு இரகங்கள் மற்றும் அதிக துார் பிடிக்கும் இரகங்கள்.

விதையளவு

 • ஒரு குழிக்கு ஒரு நாற்று வீதம் ஒரு எக்டருக்கு 7- 8 கிலோ விதை தேவைப்படும்.

நாற்றங்கால் நிர்வாகம்

 • தேவையான நாற்றங்கால் பரப்பு - 100 சதுர மீட்டர்/எக்டர் (அல்லது) 2.5 செண்ட்/எக்டர் - 1 செண்ட்/ஏக்கர்.
 • நல்ல மக்கிய தரம் வாய்ந்த தொழுஉரம் இடுதல்.
 • ஒரு எக்டரில் பயிரிட 1 x 5 மீ அளவு மேட்டுப்பாத்தி 20 பாத்திகள் தேவைப்படுகிறது.
 • பொடியாக்கிய டைஅமோனியம் பாஸ்பேட், 95 கிராம்/மேட்டுப்பாத்தி என்ற விதத்தில் மொத்தமாக 1.9 கிலோ தேவைப்படும்.
 • அவ்வாறு உயர்த்தப்பட்ட பாத்திகளில் பாலிதீன் தாள் பரப்ப வேண்டும். பழைய பாலிதீன் சாக்குகளையும் பயன்படுத்தலாம்.
 • அதன்மீது 4 செ.மீ வரை மண் பரப்பிட வேண்டும்.
 • சூடோமோனாஸ் 10 கிராம்/கிலோ (விதை) என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
 • 1 கிலோ விதைக்கு 75 கிராம் அசோபாஸ் என்ற உயிர் உரம் இட வேண்டும்.
 • ஒவ்வொரு 5 சதுர மீ நாற்றங்கால் பாத்திக்கும் 375 கிராம் விதை என்ற அளவில் சீராக பரப்ப வேண்டும்.
 • பூவாளியில் தண்ணீர் ஊற்றுதல் ஏற்றது.
 • பின்பு அந்த நாற்றங்கால் பாத்திகளை தென்னை நார்க்கழிவு அல்லது வைக்கோல் மூலம் மூடவேண்டும்

நடவு வயல் தயாரித்தல்

 • நடவு நிலம் தயாரிப்பிற்கு, கோடைக்காலத்தில் நிலத்தை நன்கு உழுது நீர் தேவையை சிக்கனப்படுத்த வேண்டும்.
 • நிலம் உழுவதற்கு 1 (அ) 2 நாட்கள் முன்னதாகவே நிலத்திற்கு நீர் பாய்ச்ச வேண்டும். நிலத்தின் மேற்பரப்பு வரை தண்ணீர் நிரம்பியிருக்க வேண்டும்.
 • சேற்றுழவு செய்யப்படும்போது 2.5 செ.மீ ஆழம் வரை நீர் இருக்க வேண்டும்.
 • செம்மை நெல் சாகுபடியில் நிலத்தை சமன்படுத்துதல் முக்கியமானது. வயல் வடிகாலும் முக்கியமானதாகும்.

நடவு செய்தல்

 • நாற்றை முழு வேரோடு மண்ணுடன் எடுத்து உடனே நடவு செய்ய வேண்டும்.
 • 14 நாட்கள் ஆன நாற்றுகளையே நடவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் நாற்றுக்கு மூன்று இலைகள் இருக்கும்.
 • நாற்றங்கால் பாத்தி போதுமான கரிம எரு கொண்டு தயாரித்திருந்தால், நாற்றுகள் நல்ல வளர்ச்சியுடன் இருக்கும்.

பயிர் இடைவெளி

 • போதுமான வளங்களை பயிர் எடுத்துக் கொள்ள 25 x 25 செ.மீ சதுர நடவு போதுமானதாக உள்ளது.
 • அடையாளக்கருவியில் அடையாளமிட்டிருக்கும் அக்கோடுகள் சந்திக்கும் இடத்தில் ஒரு நாற்று என்ற அளவில் நடவு செய்ய வேண்டும்.
 • நாற்றை ரொம்ப ஆழமாக நடுதல் கூடாது.

உர மேலாண்மை

 • 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கு எரு, அல்லது 6.25 டன்/எக்டர் பசுந்தாள் உரம் இடுதல் வேண்டும்.
 • கரிம எரு தேவையான ஊட்டப் பொருள்களைத் தருவதால் செம்மை நெல் சாகுபடியில் அதிகமாக உபயோப்படுத்துகிறோம். கரிம எரு கார்பன் சத்துக்கு ஆதாரமாகி மண்வாழ் நுண்ணுயிரிகளுக்கும் தேவையான ஏற்ற நிலைமையை அளிக்கிறது.
 • மண் பரிசோதனைப் பரிந்துரைப்படி செயற்கை உரம் அளிக்க வேண்டும்.
 • இலை வண்ண அட்டையைக் கொண்டு தழைச்சத்து அளிக்க வேண்டும்.
 • மண் பரிசோதனை வழி உர மேலாண்மையைக் கொண்டு மணிச்சத்து, சாம்பல்சத்து, அளிக்க வேண்டும்.
 • அதன் தேவையைப்பொருத்து மேலுரத்துடன் வேதிச் செயற்கை உரம் கலந்து அளிக்கலாம்.

நீர் மேலாண்மை

செம்மை நெல் சாகுபடியில் நீர் மேலாண்மை முக்கியமானது. காற்றோட்ட சூழ்நிலையை உருவாக்குவதில் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. மயிர்க்கோடு போன்ற சிறு கீறல்கள் ஏற்படும் தருணம் 2.5 செ.மீ ஆழம் வரை நீர் பாய்ச்ச வேண்டும். இதனை பூங்கதிர்கள் உருவாகும் பயிர்ப்பருவம் வரை பின்பற்ற வேண்டும். கட்டிய நீர் மறைந்த உடன் மீண்டும் நீர் கட்ட வேண்டும். நடவிலிருந்து அறுவடை வரை 40-50 சதவிகிதம் தண்ணீர் சேமிப்பு ஏற்படுகிறது. நிலத்தடி நீர் பயன்படுத்தும் விவசாயிகள் தண்ணீர், அதன் நேரம், மின்சார சேமிப்பு ஆகியவற்றை உணர்வார்கள்.

 • மண்ணை ஈரமாக வைக்க முறையாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மண் பூரித ஈரமாக ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • தழைப்பருவத்தில் போதுமான காற்றோட்டம் கிடைக்க, ஈரப்படுத்துதல் மற்றும் உலர்த்தலை மாற்றி மாற்றி இடைவெளி விட்டு செய்ய வேண்டும்.
 • இலை வளர்ச்சி பருவத்திற்குப் பின் சீராக நீர் பாய்ச்ச வேண்டும்.
 • எந்நிலையிலும் தண்ணீர் தேக்கம் இருக்கக் கூடாது.

திருந்திய நெல் சாகுபடி முறையின் நன்மைகள்

 • விதைத் தேவையில் சேமிப்பு- அகலமான இடைவெளியில் ஒற்றை நாற்று மட்டுமே நடுவதால் ஒரு எக்டருக்கு 7-8 கிலோ விதை போதுமானது. குறிப்பாக வீரிய ஒட்டு விதை விலை அதிகமாக இருப்பதால் இம்முறையில் சாகுபடி செய்யும்போது செலவு குறையும்.
 • நாற்றங்கால் பரப்பு குறைதல்
 • நாற்றங்கால் கால அளவு குறைதல்
 • துார்கள் அதிகமாகுதல்- ஒரு செடிக்கு 30 துார்கள் என்பது எளிதில் கிடைக்கக்கூடியது
 • அதிகமான வேர் வளர்ச்சி- வழக்கமான நெல் சாகுபடியைவிட திருந்திய நெல் சாகுபடியில் பயிர்ச் செடியைப் பிடுங்குவதற்கு அதிக வேகம் தரவேண்டும்.
 • மேம்பட்ட தானிய நிரப்பு- எண்ணிக்கையிலும், எடையிலும் அதிகமாக கதிர்கள் கிடைக்கும்.
 • நீர் சேமிப்பு- தழை வளர்ச்சியின் போது நன்கு நீர் பாய்ச்சி மண்ணை ஈரமாக வைத்தல் வேண்டும். ஆனால் இனப்பெருக்கப் பருவத்தில் குறைந்த அளவு நீரே போதுமானது. வழக்கமான முறையைவிட திருந்திய நெல்லில் 35-40 சதவிகிதம் நீர் சேமிக்கப்படுகிறது.
 • குறைவான சாய்தல்- இம்முறை நெற்பயிருக்கு சிறந்த வளரும் சூழ்நிலையை அளிக்கிறது. இதனால் பலமான துார்கள், அதிக அளவு வேர் வளர்ச்சி ஏற்படுகின்றது. சாய்தல் தன்மையை எதிர்க்கும் சக்தி கொண்டது.
 • பூச்சிகள் மற்றும் நோய்களின் குறைவான தாக்கம் - திருந்திய நெல் சாகுபடியில் பயிர்கள் நன்கு பலமாக இருப்பதால் பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குதல் குறைவாக உள்ளது.
 • வேதிச் செயற்கை உரம் குறைப்பு- திருந்திய நெல் சாகுபடியில் வேதிச் செயற்கை உரம் அதிக மகசூலைத் தருவதாயினும், ஏழை விவசாயிகள் இன்றும் எளிதில் கிடைக்கும், கரிம எருவையே பயன்படுத்துகின்றனர். இதனால் வெளியில் இருந்து வாங்கும் இடுபொருள் செலவு குறைந்து, அதிக மகசூலையும் பெற முடிகிறது.
 • தானிய மகசூல் அதிகரிப்பு - வழக்கமான முறையை விட செம்மை நெல் சாகுபடியில் மகசூல் அதிகமாக கிடைக்கிறது. செலவைப் பொருத்து நிகர வரவு 83 முதல் 206 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.
 • வயலில் எலிகள் சேதம் குறைகிறது .
 • அதிக நிகர லாபம்

திருந்திய நெல் சாகுபடி மேற்கொள்ளுதலில் உள்ள இடர்ப்பாடுகள்

 • முறையான நீர்க்கட்டுப்பாடு முறைகளை பின்பற்ற வேண்டும்
 • ஆரம்பத்தில் அதிக தொழிலாளர்கள் தேவைப்படும்
 • நாற்று நடுவதற்கு தனித்திறமை தேவைப்படும்
 • வழக்கமான முறையை விட இம்முறையில் களை அச்சுறுத்தல் அதிகமாய் காணப்படும்.
 • இம்முறையில் உழைப்பு மிகுதியாக தேவைப்படுவதால் அதிகமான பரப்பளவில் பயிரிட முடியாது.
 • விவசாயிகள் பாரம்பரிய மன அமைப்பே கொண்டுள்ளனர்
 • தொழில் நுட்பம் பற்றிய விழிப்புணர்வு குறைவு
 • அடையாளமிடும் கருவி, களைக்கருவி ஆகிய சாதனங்கள் எளிதில் கிடைக்காது
 • நடவு நடும் தொழிலாளர்களிடையே ஒத்துழைப்பின்மை

பயிர் வளர்ச்சியில் மாற்றங்கள்

 • உயர் தாவர வளர்ச்சி
 • அதிக வேர் வளர்ச்சி
 • அதிக துார்கள்
 • ஒரு சதுர மீட்டருக்கு அதிக எண்ணிக்கையிலான பூங்கொத்து உற்பத்தி
 • ஒரு பூங்கொத்துக்கு அதிக அளவிலான நெல்மணிகள்
 • ஒரு கதிரில் அதிக சதவிகிதத்தில் தானிய நிரப்பு
 • சாயாத்தன்மை
 • அறுவடை வரை இலைப் பசுமை
 • வறட்சிப் பருவத்தில் எதிர்க்கும் சக்தி
 • அதிக ஊட்டச்சத்து உபயோகிப்பு
 • அதிக உயிர் வேதிச் செயல்
 • அதிக மணிகள் மற்றும் வைக்கோல் மகசூல்.
 • ஆலையில் அரைக்கும் நெல்லின் அதிக செய்பொருள் விளைவு.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate