பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண்மையும் சுற்றுச்சூழலும் / பருவ நிலை மாற்றத்தின் தாக்கமும் நீடித்த வேளாண்மையும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பருவ நிலை மாற்றத்தின் தாக்கமும் நீடித்த வேளாண்மையும்

பருவ நிலை மாற்றத்தின் தாக்கமும் நீடித்த வேளாண்மையும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

பருவநிலை மாற்றத்திற்கேற்ப மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள்

நம் நாட்டில் சராசரி வெப்பநிலையில் ஏற்படக்கூடிய அதிகரிப்பும், கடல் நிர் மட்டம் அதிகரிப்பதும் கவலை அளிக்கக்கூடிய குறிப்பிடத்தகுந்த நிகழ்வுகளாகும். சாதகமற்ற பருவநிலை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளிலிருந்து பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பருவமழை நன்றாகப் பெய்யக்கூடிய காலங்களில் உற்பத்தியை அதிகப்படுத்திக்கொள்வதற்கும், பாதகமான பருவநிலை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை மட்டுப்படுத்திக் கொள்வதற்குமான உத்திகளை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும். வெப்பநிலை அதிகரிப்பு, மழை குறைவு, அளவுக்கு அதிகமான மழை ஆகியவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பொதுவானவை என்ற போதிலும் இவைகளுக்கேற்ப தகவமைத்துக் கொள்வதற்கும், பாதிப்புகளை மட்டுப்படுத்துவதற்குமான செயல்திட்டங்கள் அந்தந்த இடம் சார்ந்ததாக இருக்க வேண்டும். பருவநிலை மாற்ற ஆபத்துக்களை சமாளிக்கும் நிர்வாக மையங்களை ஊராட்சி அளவில் அமைத்து மக்களுக்கு பயிற்சி தரவேண்டும்.

பருவநிலை மாற்றங்களைத் தாங்கி வளரக் கூடிய தினை, சாமை போன்ற சிறுதானியப் பயிர்களைப் பாதுகாப்பதும் அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதும் அவசரமாக நடவடிக்கை தேவைப்படும் ஒரு பகுதியாகும். சிறு தானியங்களும், அதிகமாகப் பயன்படுத்திக்கொள்ளப்படாத பயிர்களும் வறட்சியையும், வெப்பத்தையும் தாங்கிக் கொண்டு வளரக்கூடியவை. அதிக ஊட்டச்சத்தினை தரக்கூடியவை. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு (கிருஷி விஞ்ஞான கேந்திரா) போன்ற அமைப்புகள் பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளக்கூடிய முறைகளை வடிவமைத்துக் கொள்ளக்கூடிய விவசாய முறைகளை வடி வமைத்துத்தரவேண்டும். பயிற்சி பெற்ற உள்ளூர் மக்கள் மூலம் இந்த முறைகளை பிரபலப்படுத்த வேண்டும். மாற்றங்கள் தேவைப்படுகிற வேளாண் செயல்பாடுகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. உதாரணமாக, அரிசி, கோதுமை போன்ற பயிர் வகைகளில் பயிரினப் பெருக்க வல்லுநர்கள் (Breeders) தங்கள் கவனத்தை ஒரு போக விளைச்சல் என்ற நிலையில் இருந்து மாற்றி ஒவ்வொரு நாளும் உற்பத்தி என்ற நிலைக்கு செலுத்த வேண்டும். பயிர்கள் விளையக்கூடிய கால அளவு குறுகிப்போய்விட நேரிடலாம் என்பதால் இந்த முறை அவசியமாகிறது. உருளைக்கிழங்கு உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இது சாத்தியமானதற்குக் காரணம் செடியின் சாறை உறிஞ்சக்கூடிய அசுவினி பூச்சிகள் இல்லாத பருவத்தில் உருளைக்கிழங்கு விதைக்கரனைகளை உற்பத்தி செய்வித்ததுதான். சராசரி வெப்பநிலை உயருமானால் இத்தகைய வாய்ப்பும் பறிபோய்விடும். அது மாதிரி சந்தர்ப்பங்களில் பாரம்பரிய முறையில் உருவாக்கப்படும் இனப்பெருக்க விதைகளைக் கொண்டுதான் உருளைக்கிழங்கை விளைவிக்க முடியும். இது போன்ற பிரச்சனைகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் வலுப்படுத்த வேண்டும்.

நீர் மட்டம்

வெள்ள நீரின் மட்டத்தைத் தாண்டியும் வளரக்கூடிய நெற் பயிர்கள் உருவாக்குவதற்கான மரபணுக்கள் அதிர்ஷ்டவசமாக நம்மிடம் இருக்கின்றன. இத்தகைய நீள் வளர்ச்சி மரபணுக்கள் கொண்ட நெற்பயிர்களை வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளில் அறிமுகப்படுத்த வேண்டும். நம் நாட்டில் 7500 கிலோ மீட்டர் நீள கடற்கரை ஒரப்பகுதி இருக்கிறது. இதுதவிர அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவுகள் போன்ற தீவுக் கூட்டங்களும் இருக்கின்றன. இத்தகைய பகுதிகள் நமக்கு ஒரு சவால். இந்தப் பகுதிகளில் இருக்கும் சதுப்பு நிலக் காடுகளைப் பாதுகாக்கவும், அவற்றின் பரப்பளவை அதிகரிக்கவும் வேண்டும். சதுப்பு நிலங்கள் உயிரிக்கவசமாக செயல்பட்டு வருகின்றன. உலகத்தில் இருக்கக் கூடிய தண்ணீரில் ஏறத்தாழ 97 விழுக்காடு தண்ணீர் கடல் நீராகும்.

கேரளாவின் குட்டநாடு பகுதியில் உள்ள விவசாயிகள் கடல் நீர் மட்டத்திற்கும் கீழாக உள்ள பகுதிகளில் நெற்பயிரை வளர்க்கும் நிறைவான நுட்பங்களை 150 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுள்ளனர். நீரின் உப்புத்தன்மையை மேலாண்மை செய்வது, உப்பு நீரிலும் வளரக்கூடிய போன்ற வகைகளைப் பயிரிடுவது ஆகியவை இந்த நுட்பங்களில் அடங்கும்.

கடல் நீர் மட்ட உயர்வின் இன்னொரு பாதிப்பு, கடலோரமாக வாழ்ந்துவரும் மக்களுக்கான மாற்று வசிப்பிடங்களைத் தேடுவதாக இருக்கும். இத்தகைய பருவநிலை அகதிகள் வாழ்வதற்கு பொருத்தமான மாற்று இடங்களை வழங்குவதற்கு நாம் திட்டமிடத் துவங்க வேண்டும். உவர் நீர்ப் பயிர்களை அழியாமல் காப்பாற்றவும், பருவநிலை மாற்றங்களைத் தாங்கி வளரக்கூடிய பயிர்களை வளர்க்கும் வேளாண் முறைகளை வடிவமைப்பதற்கும், பயிரினப் பெருக்கத்தில் ஈடுபட்டிருக்கும் வல்லுநர்களுக்கு இத்தகைய நுட்பங்களை கிடைத்திடும்படி செய்யவும் மரபணுப்பூங்கா ஒன்றை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் தமிழ்நாட்டில் வேதாரண்யத்தில் உருவாக்கி உள்ளது.

பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம்

பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதில் வேளாண்மையும் பங்களிப்பு செய்யவேண்டிய தேவை இருக்கிறது. உள்ளூர்ப் பகுதிகளில் இருக்கும் பருவநிலை பாதிப்பு வேளாண்மை மையங்களில் அங்கு வசிக்கும் மக்களையும் இணைத்துக்கொண்டு பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பருவநிலை மாற்றங்களினால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் பெண்களே என்பதால் இதில் பெண்கள் ஈடுபடுத்துவது குறிப்பாக அவசியம். குடிநீர் சேகரித்தல், விறகு சேகரித்தல், தீவனங்கள் சேகரித்தல் போன்ற செயல்களில் இது அவசியம் தேவைப்படுகிறது. எனவே, பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதற்கான திட்டங்கள் அனைத்துமே பெண்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

பாதிப்புகளை மட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் காடுகள் அழிக்கப்படுவதை குறைத்தல், மக்களை மையப்படுத்தி மரங்களை நடுதல் போன்றவை அடங்கும். இவை வளிமண்டலத்தில் கரிக்காற்று (Co2) அதிகமாக சேர்வதைத் தடுத்து நிறுத்தக்கூடியவை. மற்றொரு பசுமை இல்ல வாயுவான மீதேன் சாண எரிவாயுக் கலங்களை அதிகரிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளப்படலாம். வளி மண்டலத்தில் மீதேன் சேர்வதை இது தடுப்பதோடுகூட விவசாயிகளுக்கு பொருளையும், உரத்தையும் வழங்கிடும். உரங்களைப் பயன்படுத்துவதால் நைட்ரஸ் வாயுக்கள் வெளியேறுகின்றன. வேம்பு பூசப்பட்ட யூரியாவை பயன்படுத்துவதன் மூலம் இதன் வெளியேற்றத்தைக் குறைக்க முடியும். சாண எரிவாயுக் கலங்களை அமைப்பது, ஒவ்வொரு பண்ணையிலும் உரச்செடிகளை சிலவற்றை வளர்ப்பது, பண்ணைக் குட்டைகள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளை அந்தந்தப் பகுதிகளிலேயே மேற்கொள்வதன் மூலம் குறைவான அளவில் கரிக்காற்றை வெளியேற்றுவதில் உண்மையில் உதவமுடியும்.

மீன்பிடித்தொழில் தொழில்நுட்ப மாற்றங்கள்

பருவநிலைமாற்ற பாதிப்பு மேலாண்மையை உள்ளூர் அளவில் செய்யக்கூடிய நிர்வாகிகள் ஆடவரும், மகளிருமாக இருக்க வேண்டும். சிறு அளவில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு கடற்கரையில் இருந்து வெவ்வேறு தூரங்களில் அலைகளின் உயரம் எவ்வளவு இருக்கும், எங்கெங்கு மீன்கள் இருக்கின்றன என்பவை பற்றிய தகவல்களை அலைபேசி மூலம் தரலாம். அலைபேசி, இணையம் போன்றவை மீனவர்களுக்கு துணை செய்யும். இதுபோன்ற நடவடிக்கைகள் தோற்றத்தை மாற்றும் அளவுக்கு மாற்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும். சிறுசிறு அளவுகளில் மீன்பிடித் தொழில் செய்துவரும் மீனவர்கள் டிசம்பர் 26, 2004 சுனாமிக்குப் பிறகு மிகவும் பயந்துபோய் இருந்தனர். ஆனால் இப்போது மிகுந்த தன்னம்பிக்கையோடு இவர்கள் சிறு சிறு படகுகளில் மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர்.

பருவநிலை மாற்றமே நீடித்த வேளாண்மைக்கான ஆயுதம்

தகவமைத்துக் கொள்ளுதல், பாதிப்புகளை மட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் இப்போதே நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் போனால் பருவநிலை மாற்றம் பெரும் பேரழிவாக இருக்கக்கூடும். வெப்ப நிலையில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள், மழைப்பொழிவு, கடல்நீர் மட்டம் ஆகியவற்றில் மாற்றங்கள் நேரிடக்கூடிய சாத்தியங்கள் போன்றவற்றிற்கான முன்னெச்சரிக்கையுடன் கூடிய எதிர்பார்ப்பு நடவடிக்கைகள் வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த உதவிடும். சிறுசிறு அளவுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாயம், மீன்பிடிப்பு போன்றவற்றில் தொழில்நுட்ப மாற்றங்கள் வரும்போது அவை ஆதாயங்களைத் தரும். பருவநிலை மாற்றமானது விவசாய உற்பத்திப் பொருள்களின் விலைகளில் ஒயாத மாற்றங்களை ஏற்படுத்தி விலைகளை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. உணவு தானியங்களை வாங்கக்கூடிய கட்டுப் படியாகும் விலையில் இறக்குமதி செய்து கொள்வது எதிர்காலத்தில் மிகவும் கடினமான காரியமாக இருக்கும். ஆகவே, எதிர்காலம் என்பது துப்பாக்கிகளை வைத்திருக்கும் தேசங்களுக்கானது அல்ல. தானியங்களை வைத்திருக்கும் தேசங்களுக்கே எதிர்காலம் உரியது. பருவநிலை மாற்றம் போன்ற பெரும் துன்பங்களை நீடித்த வேளாண்மைக்கான ஆயுதமாக மாற்றிக்கொள்வதற்கான அசாதாரணமான ஒரு வாய்ப்பு இப்போது இருக்கிறது.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

3.08823529412
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top