பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நுகர்வோர் மற்றும் அங்காடி

நுகர்வோர் மற்றும் அங்காடி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

நுகர்வோர் நடத்தை தன்னுடைய விருப்பங்களையும், தேவைகளையும் திருப்திகரமாக பூர்த்தி செய்துக் கொள்ளத் தேவையான பொருட்களையும், பிற சேவைகளையும் பயன்படுத்துவோர் நுகர்வோர் எனப்படுவர். வாங்குதல் என்பது பணத்தைக் கொடுத்து அதற்குப் பதிலாக பொருட்களையும், பிற சேவைகளையும் பெற்றுக் கொள்ளுதலாகும். பயனுள்ள முறையில் வாங்குவதின் மூலம், குடும்பத்தினரின் மன மகிழ்ச்சி, ஆரோக்கியம் கூடுவதுடன் வாழ்க்கைத் தரமும் மேம்படுவதற்கு உறுதியளிக்கின்றது. போதுமான அளவில் வருமானம் ஈட்டும் குடும்பங்களிலும் குடும்ப அங்கத்தினர்கள் அதிருப்தியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பதை இன்றும் பார்க்கலாம். ஏனென்றால் அவர்களுக்குப் பயனுள்ள முறையில் திட்டமிட்டுப் பொருட்களை வாங்கி நுகர்வது எப்படி என்று தெரியாதது தான் காரணம்.

சந்தைகளின் வகைகள்

பெரும்பான்மையான நுகர்வோர் திருப்திகரமான முறையில் பொருட்களை வாங்குவதில்லை. இதற்கு காரணம் நுகர்வோரிடமுள்ள திறமைக் குறைவேயாகும். புத்திசாலித் தனமாக பொருட்களை வாங்குவதற்கு நுகர்வோர் தாங்கள், என்ன பொருள் வாங்க வேண்டும்? எப்பொழுது வாங்க வேண்டும்? எங்கே, எவ்வளவு வாங்க வேண்டும்? என்பதை முன் கூட்டியே தீர்மானித்தல் அவசியம். சந்தைகளைக் கீழ்கண்டவாறு பிரிக்கலாம்

பொருட்களை விற்பனை செய்யும் இடத்தின் அடிப்படையில் - உள்ளூர் சந்தை, தேசிய சந்தை மற்றும் சர்வதேச சந்தை பொருட்களை விற்பனை செய்யும் அடிப்படையில் – பருத்தி சந்தை, தங்க சந்தை பரிமாற்றத்தின் அடிப்படையில் - உடனே பணம் செலுத்தி பொருட்களை பெறும் சந்தை, தவணை முறை சந்தை காலத்தின் அடிப்படையில் - நீண்ட, குறுகிய கால சந்தைகள் பொருட்களின் தன்மை அடிப்படையில் – நுகர்வோர் பொருட்கள் சந்தை, தொழிற்சாலை பொருட்கள் சந்தை. பொருட்களின் தன்மை மற்றும் விற்பனையின் அளவின் அடிப்படையில் - மொத்த விற்பனை சந்தை, சில்லறை விற்பனை சந்தை பொருட்களின் வகைகள் நுகர்வோர் பொருட்கள் வாங்கும் பழக்கத்தின் அடிப்படையில் பொருட்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

வசதியான பொருட்கள்

இந்த வகை பொருட்கள் அடிக்கடி, குறைந்த அளவில் அருகில் இருக்கக் கூடிய கடையில் வாங்குவது, உதாரணம்: செய்தித்தாள், சோப்பு, உணவு பொருட்கள் முதலியவையாகும்.

கடையில் வாங்கும் பொருட்கள்

கடையில் வாங்கக் கூடிய பொருட்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவை அலங்காரப் பொருட்கள் மற்றும் உபயோக முள்ளப் பொருட்கள். இந்த வகை பொருட்களை அவசரமாக வாங்காமல் பல கடைகள் பார்த்து, நிதானித்து, வாங்குபவரின் வசதிக்கேற்ப பெறலாம். இதற்கு அதிகமான சில்லறை விற்பனை சந்தை தேவையில்லை.  உதாரணம்: தட்டுமுட்டு சாமான்கள், நகைகள் முதலியவை.

தனிப்பட்ட பொருட்கள்

இந்த வகை பொருட்களை வாங்குவதற்கு தனித்தன்மையும், அதிக திறமையும் தேவை. இப்பொருட்கள் தனிப்பட்ட கடைகளில் மட்டுமே கிடைக்கும். உதாரணம்: வானொலி, தொலைக்காட்சி, வாகனம் முதலியன.

வாங்குதலில் தீர்மானங்கள்

பொருட்களை வாங்குவதற்கு முன் ஒருவரின் தேவை என்ன? பல சரக்கு பொருட்களா? பழங்களா? காய்கறிகளா? பாலா? மருந்தா? அல்லது தனிப்பட்ட அழகு சாதனங்களா? என்பதை கண்டறிய வேண்டும். திட்டமிடுதல் அவசியமில்லாத பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பதற்கு உதவுகிறது.

பிறகு எவ்வளவு பொருட்கள் வாங்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இது பொருட்கள் வீணாவதை தவிர்ப்பதற்கு உதவுகிறது. பொருட்களை வாங்கும் முன் அவற்றை மதிப்பீடு செய்து பார்க்க வேண்டும். அதாவது உற்பத்தி குறி, அடையாள சீட்டு, விலை, அளவு மற்றும் ஐ.எஸ்.ஐ (I.S.I.) அக்மார்க் (Agmark) குறியீடுகளை மதிப்பீடு செய்ய வேண்டும். இது நுகர்வோர் குறைந்த விலையில் நல்ல தரமான பொருட்களை வாங்க உதவுகிறது.

குடும்ப நபர்களின் தேவைகளை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட வருவாய்க்குள் திட்டமிடுதல் வேண்டும். இது பொருட்கள் வாங்கும் இடங்களை தீர்மானிக்கிறது. தினந்தோறும் தேவைப்படுகின்ற காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்களை கூட்டுறவு அங்காடியில் வாங்கலாம். இங்கு பொருட்கள் சுத்தமானதாகவும், தரமுள்ளதாகவும் மலிவாகவும் கிடைக்கும். அதிக அளவில் தேவைப்படுகின்ற மளிகைப் பொருட்களை மொத்த அங்காடிகளில் வாங்கலாம். மொத்த அங்காடிகளின் பொருட்கள் மொத்த விலையில் மலிவாக கிடைக்கும் அளவும் சரியாக இருக்கும். நம்பிக்கைக்குத் தகுந்த கடைகளிலேயே எப்போதும் வாங்குதல் வேண்டும். வாடிக்கையாக வாங்கும் கடைகளில் கடைக்காரர் நல்லமுறையில் கவனிப்பதுடன், தரமானப் பொருட்களையும் கொடுப்பார்கள். மேலும் பேரம் பேசி பொருட்களின் விலைகளை குறைக்கவும் வழியுள்ளது.

எந்த நேரத்தில் வாங்குவது?

கடைகளில் அதிக கூட்டமில்லாத நேரந்தான் பொருட்கள் வாங்க தகுந்த நேரமாகும். முற்பகல் அல்லது பிற்பகல் நேரத்தில் கடையில் கூட்டம் குறைவாக இருக்கும். அந்நேரத்தில்தான், பரபரப்பில்லாமல் சாமான்கள் ஒவ்வொன்றையும் கவனமாகப் பார்த்து விவரசீட்டிலுள்ள விவரங்களறிந்து சிறப்பாக வாங்க முடியும். மற்றும் மெதுவாக எல்லா கடைகளிலும் என்னென்ன புதிய பொருள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும். பொருட்களின் அளவை குறைத்தோ அல்லது மாற்றிக் கொடுத்தோ விற்பனையாளர் நுகர்வோரை ஏமாற்ற இயலாது. கூட்டம் அதிகமாக இருக்கும் காலை நேரங்களிலும், மாலை நேரங்களிலும் கடைக்குச் செல்வதை தவிர்த்தல் நல்லது. காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் முதலியவற்றை காலையில் வாங்க வேண்டும்.

அந்தந்த பருவகாலங்களில் மலிவாக கிடைக்கும் உணவுப் பொருட்களை வாங்குதல் வேண்டும். சிலவகையான பழங்கள், காய்கறிகள் அதிகமாக விளையும் பருவகாலங்களில் அவை மலிவாக இருப்பதுடன், புத்தம் புதியதாகவும் இருக்கும். சில உலர்ந்த உணவுப்பொருட்கள் பல நாட்கள் வரை கெடாமலிருக்கும். ஆதலால் அரிசி, மிளகாய் மற்றும் பருப்பு வகைகளை மலிவாக கிடைக்கும் சித்திரை, வைகாசி மாதங்களில் மொத்த வியாபார அங்காடியில் அதிக அளவில் வாங்கி 3 அல்லது 6 மாதம் அல்லது 1 வருடத்திற்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். பருவமில்லாத விற்பனை காலச் சலுகைகளைப் பயன்படுத்தி சில பொருட்களை வாங்கி பணத்தை மிச்சப்படுத்தலாம். உதாரணம்: கோடைக் காலங்களில் மின்சார குளிர்பதன பெட்டியின் விலை அதிகமாக இருக்கும். மழைக் காலங்களில் அதன் விலை குறைக்கப்பட்டு சலுகை விலையில் கிடைக்கலாம். ஆகவே இச்சலுகைகளைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்கிப் பணத்தை மிச்சப்படுத்தலாம். இது பொருட்களை பணம் கொடுத்தோ அல்லது தவணை முறையிலோ வாங்குவதை குறிக்கும்.

பணம் கொடுத்து எப்போதும் பொருட்களை வாங்க வேண்டும். அதுதான் இலாபகரமானதாகும். அப்போதே மொத்த பணத்தையும் கொடுத்து வாங்குவதால் தரமான பொருட்களை பரிசீலனை செய்து மலிவாக வாங்கலாம். ஆனால் அதிக விலையுள்ள நுகர்வோர் பொருட்களான தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்பதன பெட்டி, மாவு அரைக்கும் இயந்திரம், மிக்ஸி, மின்சார அடுப்பு, கார் போன்ற பொருட்களை மொத்த பணம் கொடுத்து, வாங்க முடியாத குறைந்த வருமானம் உள்ளவர்கள் இவற்றை தவணை முறையில் வாங்கலாம். இதனால் அதிக விலையுள்ள பொருட்களை நுகர்வதற்கு இது வழிவகுக்கின்றது. ஆனால் தவணை முறையில் பொருட்களின் விலையுடன் அதற்குறிய வட்டியும் சேர்ந்து கணக்கிடப்படுவதால் அசல் விலையை விட சிறிது கூடுதலான தொகை கட்டும்படியான நிலை இருக்கும். முதலில் பொருட்களின் விலையில் மூன்றில் ஒரு பங்கு பணத்தை செலுத்தி விட்டு, மிச்ச தொகையை எளிய தவணைகளில் 3, 6 அல்லது 10 மாதங்களில் திருப்பி செலுத்தலாம். மிகவும் அவசியம் என்றாலொழிய தவணை முறையில் வாங்குவதை தவிர்த்தல் வேண்டும். இதனால் அனாவசியமாக கடன் படுவதையும், பணம் விரயமாவதையும் தவிர்க்கலாம்.

இது பொருட்களின் வாங்கும் அளவைக் குறிக்கும். எளிதில் கெடக்கூடிய பால், முட்டை, மாமிசம், காய்கறி, பழங்கள் போன்ற பொருட்களை தேவையான அளவில் தினந்தோறும் வாங்கிப் பயன்படுத்தலாம். புத்தம் புதிய காய்கறி மற்றும் பழங்கள், சுவை மிகுந்ததாயும், சத்துள்ளதாகவும் இருக்கும். குளிர்பதன பெட்டி, ஜனதா குளிர்பெட்டி வைத்திருப்பவர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தேவையான காய்கறி, மற்றும் பழங்களை வாங்கி சேமித்து வைத்துக் கொள்ளலாம். இதில் முட்டைகளை 1 வாரத்திற்குமேல் கெடாமல் வைத்துக் கொள்ளலாம். உலர்ந்த பொருட்கள் வெகு நாட்கள் கெடாமலிருக்கும். ஆகவே அரிசி, புளி, மிளகாய் மற்றும் பருப்பு வகைகளை விலை மலிவாக கிடைக்கும் சித்திரை, வைகாசி மாதங்களில் மொத்த வியாபார அங்காடிகளில், தேவைக்கேற்ப அதிக அளவில் வாங்கி 6 மாதங்கள் அல்லது 1 வருடத்திற்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். இதனால் உணவிற்காக செலவழிக்கும் மொத்த தொகையில் பத்து சதவீத பணத்தை மிச்சப்படுத்தலாம்.

நுகர்வோர்க்கு வழிகாட்டுதல்

ஒவ்வொரு நுகர்வோரும் தனக்குக் கிடைத்த தகவல்களை கொண்டு தங்களுக்கு வேண்டிய பொருட்களை தேர்ந்தெடுக்கின்றார்கள். இருந்தாலும் நுகர்வோர்கள் தயாரிப்பாளர்களை போலவோ அல்லது விற்பனையாளர்களைப் போலவோ பொருட்களைப் பற்றிய அத்தனை தகவல்களையும் அறிந்திருக்க இயலாது. ஆகவே அவர்கள் தங்கள் தேவைகளை தெரிந்து அதற்கேற்ற வகையில் பொருட்களை வாங்கி நுகர்வதற்குரிய திறமையை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும். அப்போது தான் நுகர்வோர் சந்தையில் பொருட்கள் வாங்கும்போது வியாபாரிகள் தம்மை ஏமாற்றாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். இவ்விஷயத்தில் நுகர்வோர் கல்வி மிகுந்த துணைப்புரிகின்றது. இக்கல்வி நுகர்வோர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் நுகர்வோராக இருப்பதினால் நமக்கு நுகர்வோர் கல்விப் பற்றி அறிந்துக் கொள்வதற்கு உரிமை உள்ளது. ஏனென்றால் நுகர்வோர் கல்வியின் மூலம் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறந்த நுகர்வோராக இருக்கும் தன்மையை பெறுகின்றார்கள்.

நுகர்வோர் கல்வியின் பயன்கள்

  • இக்கல்வியினால் ஒவ்வொரு நுகர்வோருக்கும், பொருட்களையும், பிற சேவைகளையும் திறமையான முறையில் வாங்கி நுகரும் திறமை வளர்கின்றது.
  • முக்கியமான தேவைகளை விருப்பங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்ற திறமையை நுகர்வோருக்குத் தருகின்றது.
  • நுகர்வோர் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்புச் சட்டங்கள், தர நிர்ணயங்கள் குறித்து விவரங்களை அளிக்கின்றது.
  • ஒவ்வொரு நுகர்வோரையும் பாதுகாப்பான, நம்பத்தகுந்த தரமான பொருட்களை நியாய விலையில் கேட்டுப் பெற தயார்படுத்துகிறது. மக்களிடையே அவர் தம் உரிமை மற்றும் கடமைகளைக் கூறி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

நுகர்வோரின் தனி உரிமைகள்

  • பாதுகாப்பு உரிமை - நுகர்வோர் ஒவ்வொருவருக்கும் தங்கள் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கின்ற பொருட்களிடமிருந்தும், உயிரைப் போக்குகின்ற பொருட்களிடமிருந்தும் பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு.
  • நுகர்வோர் ஒவ்வொருவருக்கும் தாங்கள் வாங்கும் பொருட்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள உரிமை உண்டு.
  • நுகர்வோர் ஒவ்வொருவருக்கும் தங்கள் தேவைக்கேற்பவும், விருப்பத்திற்கேற்பவும் பொருட்களைப் பலதரங்களில், நிறங்களில், வடிவங்களில், அளவில், குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளும் உரிமை உண்டு.
  • நுகர்வோர் ஒவ்வொருவரின் மனக்குறைகளும் விற்பனையாளரால் கேட்கப்பட வேண்டும். வாங்கிய பொருட்கள் உடனே பழுதுப்பட்டாலோ, தவறானப் பொருட்கள் தரப்பட்டாலோ அதற்கு நஷ்ட ஈடு பெற ஒவ்வொரு நுகர்வோருக்கும் உரிமை உண்டு.

நுகர்வோர் ஒவ்வொருவருக்கும் சுத்தமான பாதுகாப்பான சுற்றுப்புறத்தில் வாழும் உரிமை உண்டு.

நுகர்வோரின் கடமைகள்

திட்டமிட்டு, தங்கள் தேவைக்கேற்றபடி பொருட்களை வாங்க வேண்டும்.

  • ஒவ்வொருவரும் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய தேவையானப் பொருட்களைச் சுதந்திரமாக வாங்கி செயல் படவேண்டும்.
  • விளம்பரங்களினால் தூண்டப்பட்டும், மற்றவர் சொல்வதற்காகவோ வாங்கக் கூடாது. தாங்களே தீர்மானம் செய்தல் வேண்டும். பொருட்களை வாங்குவதற்கு முன் அப்பொருட்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் அறிந்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
  • விலை உயர்ந்தப் பொருட்களை வாங்கும் முன்னர், பொருட்களுக்கு உத்திரவாதம் கொடுக்கப்பட்டுள்ளதா என்று தெரிந்து வாங்க வேண்டும். அவசரப்பட்டு எதனையும் வாங்குதல் கூடாது. முக்கியமான பொருட்களுக்குப் பஞ்சம் ஏற்படும்போது தங்கள் தேவைக்கு மேல் வாங்கி, வியாபாரிகள் பொருட்களைப் பதுக்கி வைப்பதற்கு மறைமுகமாக ஊக்குவிக்கக் கூடாது. தேவையில்லாத வீட்டுக் குப்பைகளை அகற்றும் போது தன் வசிப்பிடத்தின் சுற்றுப்புறத்தை அசுத்தம் செய்யாமல் சுத்தமாக வைத்திருத்தல் நுகர்வோர் ஒவ்வொருவரின் கடமையாகும்.

நுகர்வோர் பாதுகாப்பு

வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் மொத்த உற்பத்தியின் மூலமாக வீட்டு உபயோக கருவிகள், ஆடைகள், நகைகள், விளையாட்டுப் பொருட்கள், அழகு சாதனங்கள், பக்குவப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற பல்வேறு பொருட்கள் தினந்தோறும் அங்காடியில் விற்பனைக்கு வருகின்றன. இதனால் நுகர்வோர், எந்தப் பொருளை வாங்குவது, எந்தெந்த வழிகளில் பொருட்களைப் பயன்படுத்தி பயனடைவது என்பது போன்ற பல விவரங்களை தீர்மானிக்க முடியாமல் குழம்புகின்றார்கள். மிகைப்படுத்திய விளம்பரங்கள், கண்ணை கவரும் வண்ணப் பெட்டிகளில் பொருட்களைக் கட்டுதல், மற்றும் மக்கள் சாதன தொடர்புகள் இவற்றின் மூலம் தயாரிப்பாளர்கள் தங்கள் பொருட்களை நுகர்வோரிடத்தில் தள்ளிவிடுவதே இக்குழப்பங்களுக்கெல்லாம் காரணங்களாகும்.

எல்லாத் தயாரிப்பாளர்களும், விற்பனையாளர்களும் நேர்மை ஆனவர்கள் என்று சொல்ல இயலாது. அதிகமாக இலாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை எண்ணம் கொண்டச் சில தயாரிப்பாளர்கள் கலப்படப் பொருட்களையும் தரமற்ற பொருட்களையும் அங்காடிகளில் விற்று நுகர்வோர்களை ஏமாற்றுகின்றார்கள். ஒட்டு மொத்தமாக கூறுவதென்றால் தற்சமயம் இந்தியாவில் இருக்கின்ற நுகர்வோர்கள் பேராசைப் பிடித்த நேர்மையற்ற வியாபாரிகளின் பிடியில் பொருளாதார ரீதியில் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே நுகர்வோர் அனைவருக்கும் அவர்தம் உரிமைகளைப் பற்றி கல்விப் புகட்டி, ஏமாற்றுகின்ற வியாபாரிகள் பிடியிலிருந்து அவர்களை விடுவிப்பதும், அரசாங்கம் மற்றும் தன்னார்வ கூட்டமைப்புகளின் நிறுவனங்கள் உதவிக் கொண்டு நுகர்வோரைப் பாதுகாப்பதும் மிகவும் அத்தியாவசியமாகும்.

இந்திய அரசாங்கம் நுகர்வோர் நலனைக் காப்பதற்காக பல சட்டங்களை இயற்றியுள்ளது. அவற்றில் முக்கியமான சில சட்டங்கள் பின்வருமாறு.

உணவு கலப்பட கட்டுப்பாடு சட்டம் (P.H.A)

இது 1954 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எல்லா பொருட்களுக்கும் குறைந்தளவு தரத்தை நிர்ணயித்து ஜூன் 1995 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. எந்த உணவுப் பொருளாவது நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு தரம் கூட இல்லாமலிருந்தால் அந்த உணவுப் பொருள் கலப்படமானது என்று உணவு கலப்பட கட்டுப்பாட்டுச் சட்டம் அறிவித்தது. அக்மார்க் சட்டம் (1937) இந்திய அரசாங்கம் விவசாயப் பொருட்களின் தரத்தை நிர்ணயிக்க அக்மார்க் குறியீட்டை சந்தை ஆய்வு துறையால் ஆரம்பித்தது. அக்மார்க் முத்திரையை உணவுப் பொருட்களான, எண்ணெய் வித்துக்கள், நெய், வெண்ணெய், முட்டை, பருப்பு வகைகள், தானியங்கள், சாப்பாட்டு எண்ணெய், வேர்கள் முதலிய பொருட்களுக்கு நிர்ணயித்தது. இதனால் நுகர்வோர் தரமான உணவுப் பொருட்களை தேர்ந்தெடுக்க உதவுகிறது.

ஐ.எஸ்.ஐ. (1947)

இந்திய தர நிறுவனமானது பலதரப்பட்ட உணவின் தரத்தைக் நிர்ணயித்து அதற்கான சான்றிதழை ISI முத்திரை மூலம் வியாபாரிகளுக்குக் கொடுக்கிறது. உணவுப் பொருட்களான காய்கறி, பழம் மற்றும் மாமிச உணவு பொருட்கள், மசாலாப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், தானியங்கள், மற்றும் சோயா பொருட்கள், இனிப்புகள், பானங்கள், அச்சிட்ட தாள்கள் முதலிய பொருட்களின் தரத்தை கட்டுப்படுத்த இந்திய தர நிறுவனம் உதவுகிறது. இந்த சான்றிதழ்களால் நுகர்வோருக்கு பொருட்கள், குறைந்த விலையிலும், சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் கிடைக்கின்றது.

மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் (1940)

தரக்குறைவான மருந்துகள் மற்றும் அழகு பொருட்களிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க இந்த சட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதாவது மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தியாகுமிடம் மற்றும் சந்தைகளில் தரக்குறைவான பொருட்கள் விற்பனையாகாத வண்ணம் இச்சட்டம் பாதுகாக்கிறது. மாநில அரசாங்கத்தால் அங்கீகாரம் பெற்ற பிறகு தான் மருந்துகளை விற்பனை செய்யவோ, சேமிக்கவோ வேண்டும்.

அத்தியாவசியமான பொருட்கள் சட்டம் (1955)

அத்தியாவசியமான உணவுப் பொருட்களான கால்நடை, உணவு, கரி, இரும்பு, எஃகு, காகிதம், பருத்தி மற்றும் கம்பளி துணிகள், பெட்ரோலிய பொருட்கள், மருந்துகள், உணவுகள் மற்றும் சணல், பருத்தி மூலப் பொருட்கள் முதலியவற்றின் உற்பத்தி, பாதுகாப்பு, விநியோகம் ஆகியவற்றை சரிவரச் செய்வதற்கு மத்திய, மாநில அரசாங்கம் இந்த சட்டத்தில் உரிமையளித்துள்ளது.

எடைகள் மற்றும் அளவீடுகளின் தரத்தைக் கட்டுப்படுத்தும் சட்டம் (1976)

எடை மற்றும் அளவீடுகளில் சர்வதேச அளவு முறையை செயல்படுத்தியுள்ளது. அளவீட்டிற்குப் பயன்படுத்தப்படும் எடை மற்றும் அளவுகளை வரையறுத்தல். நிறைவேற்றவும் போராட, நுகர்வோர் எடுத்துக் கொள்ளும் ஒரு கூட்டு முயற்சியே நுகர்வோர் இயக்கமாகும். அங்காடிகள் நல்ல முறையில் இயங்க வேண்டும் என்பதே நுகர்வோர் இயக்கத்தின் இலட்சியமாகும்.

நுகர்வோர் இயக்கத்தின் குறிக்கோள்கள்

  • அங்காடிகளில் பொருட்களை வாங்கும் நுகர்வோருக்கும் பொருள் விற்பனையாளருக்குமிடையே சுமுகமான நல்லுறவை வளர்ப்பது.
  • நேர்மையற்ற வியாபார முறைகளிலிருந்து நுகர்வோரைக் காப்பாற்றுவது.
  • நுகர்வோரின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பது.
  • உற்பத்தி செய்வதற்கு முன்பே உபகரணத்தின் மாதிரியை காண்பித்து அங்கீகாரம் பெற வேண்டும்.
  • முத்திரையில்லாமல் அல்லது சரிபார்க்காமல் இருக்கும் அளவீடுகள் எந்நிலையிலும் சரியானதல்ல.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் (COPRA - 1986)

நுகர்வோர் முன்னேற்றத்திற்கு அடிக்கல்லாக இருப்பது இந்த சட்டமாகும். உற்பத்தியான பொருளில் ஏதாவது நஷ்டம் ஏற்பட்டால் நுகர்வோர் நஷ்ட ஈடு பெற்றுக் கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு.

நுகர்வோர் இயக்கம்

  • இன்றைய சமுதாய அமைப்பில் நுகர்வோர் அரசர்களாகவும் அரசிகளாகவும் வர்ணிக்கப்படுகின்றார்கள். ஆனால் நடைமுறையில் பார்த்தால் நுகர்வோரின் நிலை மிகவும் வருத்தப்படத்தக்க நிலையிலுள்ளது.
  • பல வழிகளிலும் அவர்கள் வியாபாரிகளால் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள். உணவில் கலப்படம், மருந்துப் பொருட்களில் கலப்படம், போலி மருந்து, தரம் குறைந்த உணவு, தவறான வணிகச் சின்னத்தைப் பயன்படுத்துதல் பொருட்களின் எடைக் குறைவு, பொய்யான, மிகைப்படுத்திய விளம்பர முறைகள், கள்ள வியாபார முறைகள் ஆகியவற்றை பின்பற்றி வியாபாரிகள் நுகர்வோர்களை ஏமாற்றி வருகின்றனர்.
  • இவற்றையெல்லாம் அறிந்தும் ஒன்றும் செய்ய இயலாதவர்களாய் நுகர்வோர் உள்ளனர். வியாபாரிகளின் அதிகப் பேராசையும், ஏமாற்று வித்தைகளும் நுகர்வோரிடத்து ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. வியாபாரிகளினால் ஏற்பட்ட ஏமாற்றமும் அதனால் ஏற்படும் அதிருப்தியும் நுகர்வோர் இயக்கம் தோன்றுவதற்கு அடிப்படை காரணமாகும்.
  • நுகர்வோரின் பிரச்சனைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வது.
  • அரசாங்கத்தினை அடிக்கடி அணுகி நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை இயற்றுவதற்கு வழிவகுப்பது.
  • நேர்மையற்ற வியாபார முறைகளை எதிர்த்துப் போராட நுகர்வோரை ஒன்றாக இணைப்பது.
  • எந்தெந்த வழிகளில் நுகர்வோர் வியாபாரிகளால் ஏமாற்றப் படுகிறார்கள் என்ற தகவல்களைத் தெரிவித்து நுகர்வோரிடத்து ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது.

நுகர்வோர் கல்வியில், பல்சுவை நிகழ்ச்சிகள் மூலமாக எந்தெந்த முறைகளில் வியாபாரிகள் மக்களை ஏமாற்றுகின்றார்கள் என்ற தகவல்களைக் கூறி நுகர்வோரை எச்சரிக்கை செய்வது. நுகர்வோர் இயக்கம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேள்விப்படாத ஒன்றாயிருந்து தற்பொழுது இவ்வியக்கம் நியாயமற்ற வியாபார முறைகளை எதிர்த்து அங்காடிகளில் தங்கள் உரிமைகளை நிலை நாட்டவும், விருப்பங்களை ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் இதன் வளர்ச்சி மிக மெதுவாகவே இருக்கின்றது.

நுகர்வோர் இயக்கத்தின் மந்தமான வளர்ச்சிக்கு காரணங்கள்

நுகர்வோரிடத்தில் பொதுவான விழிப்புணர்ச்சி இன்மை

  • வறுமை
  • படிப்பறிவின்மை
  • அறியாமை
  • விழிப்புணர்ச்சியைத் தூண்டக் கூடிய அளவில் போதுமான நுகர்வோர் கல்வியின்மை
  • மக்கள் தொகைப் பெருக்கம்
  • நியாயமற்ற வியாபார முறைகளை எதிர்ப்பதில் நுகர்வோரின் மெத்தனமான மனப்போக்கு,

நுகர்வோர் சங்கத்தின் பங்கு

  • தன்னார்வ நுகர்வோர் இயக்கங்களின் சேவை நாட்டிற்கு மிகவும் தேவையான ஒன்று.
  • நுகர்வோருக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன
  • நுகர்வோர் கல்வி மூலம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
  • சிறந்த முறையில் பொருட்களை வாங்கும் அறிவுரைகளை வலியுறுத்துகின்றன.
  • பொருட்களின் பாதுகாப்புக் குறித்து விவரங்கள் தெரிவிக் கின்றன.
  • தொலைக்காட்சி, வானொலி, கண்காட்சி இவைகளின் மூலமாக நுகர்வோர் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள், நிறுவனங்கள் குறித்து தகவல் தெரிவித்து அவர்களுக்கு விழிப்புணர்ச்சியை உண்டு பண்ணுகின்றன.

இந்திய நுகர்வோர் வழிகாட்டும் சங்கம் (Consumer Guidance Society of India) (CGST)

இந்தியாவிலிருக்கின்ற நுகர்வோர் இயக்கங்களில் முன்னணியிலிருக்கின்ற சங்கங்களில் இதுவும் ஒன்றாகும். இது ஒரு தன்னார்வ, சுயலாபமற்ற, அரசியல் சார்பற்ற அமைப்பாக 1966-ஆம் ஆண்டு ஒன்பது இல்லத்தலைவிகள் மற்றும் சில சமூக ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கம் இந்தியாவிலிருக்கின்ற அனைத்து நுகர்வோர்களையும் இப்பலம் பொருந்திய இயக்கத்தில் ஒருங்கிணைப்பதேயாகும்.

இன்று முன்னணியிலிருக்கின்ற இச்சங்கத்தின் அங்கத்தினர்கள் பல்வேறு மத்திய, மாநில அமைப்புகளில் தங்கள் பிரதிநிதிகளை நியமித்துள்ளனர். இச்சங்கம் நுகர்வோருக்குப் பலவழிகளிலும் தொண்டு செய்து வருகின்றது. அவை பின்வருமாறு.

நுகர்வோர் கொடுக்கும் குற்றச்சாட்டுகளைத் தீர்த்து வைத்து ஆவன செய்வதில் ஆர்வம் காட்டுகின்றது. இச்சங்கத்தின் 'கீமத்' என்ற பத்திரிகையின் மூலம் நுகர்வோரின் நல வாழ்விற்குத் தேவையான பயனுள்ள பல தகவல்களை வெளியிட்டு நுகர்வோரிடத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

நுகர்வோர் மன்றம்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமானது (1986) நுகர்வோர்களின் உரிமைகளுக்கு சிறந்த பாதுகாப்பு அளிக்கிறது. விற்பனையாளருக்கும், நுகர்வோருக்குமிடையில் தகராறு ஏற்படின் நுகர்வோர் குறைதீர்ப்பு மன்றம் மற்றும் ஆணையத்தின் மூலம் குறைபாடுகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்ளலாம்.

நுகர்வோர் குறைதீர்ப்பு மன்றம் மற்றும் ஆணையத்தை அணுகும் முன்பு உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளரிடம் குறைகளை தெரியப்படுத்தி அதற்குரிய நிவாரணத்தை கேட்பது மிகவும் சிறந்தது.

குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நீதித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட மன்றங்கள் மூன்று வகைகளில் உள்ளன. அவைகளாவன.

  • புகார் செய்பவரின் பெயர் மற்றும் முகவரி
  • பிரதிவாதியின் பெயர் மற்றும் முகவரி
  • புகாரின் விவரங்கள்

புகார் செய்பவர் கோரும் நஷ்ட ஈடு : மாவட்ட மன்றம் மற்றும் மாநில ஆணையம் வழங்கும் தீர்ப்புகள் திருப்திகரமாக இல்லையென்றால் நஷ்ட ஈடு கோரும் மதிப்பு குறைவாக இருந்தாலும் மாநில மற்றும் தேசிய ஆணயங்களில் முறையீடு செய்யலாம்.

குழு விவாதம் - ஒவ்வொரு குழுவும் குடும்பத்தில் காணப்படும் பிரச்சனையை கண்டறிந்து அதற்குத் தேவையான தீர்வை கண்டறிய செய்தல், மாட்டு சாண வாயுவினால் ஏற்படுத்தப்பட்டுள்ள அடுப்பைப் பார்வையிடல், பல்வேறுபட்ட வேலையை எளிதாக்கும் உபகரணங்களை கடைக்குச் சென்று பார்வையிடல், வேலையை எளிதாக்கும் உபகரணங்களை பற்றி சந்தையில் கண்டறிதல், வேலையை எளிதாக்கும் உபகரணங்கள் வேலை செய்யும் விதத்தை செய்து காட்டல், பல்வேறு வருவாய் உள்ளவர்களுக்கு வரவு செலவுத் திட்டம் அமைத்தல், பயனற்ற பொருட்களிலிருந்து பல்வேறு பொருட்கள் தயார் செய்ய கற்றுக்கொள்ளுதல்

  • மாவட்ட நுகர்வோர் குறைத் தீர்ப்பு மன்றத்தில் ரூபாய் 5 லட்சம் வரையுள்ள நஷ்ட ஈடு மனுக்களுக்கு தீர்வு காணப்படுகின்றது.
  • மாநில நுகர்வோர் குறைதீர்ப்பாயத்தில் ரூ. 20 லட்சம் வரை நஷ்ட ஈடு கோரும் மனுக்கள் மீது தீர்வு காணப்படுகின்றது.
  • தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பாயத்தில் ரூ. 20 லட்சத்திற்கு மேலான நஷ்ட ஈடு மனுக்கள் மீது தீர்வு காணப்படுகின்றது.
  • மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மன்றம், மாநில அரசால் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
  • மாவட்ட மன்றம் மூன்று நபர்களைக் கொண்டுள்ளது. அவர்களில் ஒருவர் மாவட்ட நீதிபதியாவதற்குரிய தகுதியுடையவராகவும், மற்றொருவர் சமூக தொண்டாற்றும் பெண்மணியாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு நபரும் 65 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். அவர்களின் பதவிகாலம் ஐந்து ஆண்டுகளாகும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
3.20833333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top