பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நகரீயம் - ஓர் கண்ணோட்டம்

நகரீயம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

பெருவாரியான பொதுத்துறை வர்த்தக ரீதியிலான நிறுவனங்கள் தமது பணியாளர்களுக்கென நகரீயங்கள் (Township) நிறுவியுள்ளன. பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த முதலீட்டில் பதினோரு விழுக்காடு நகரீயங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளன. கிராமப்புற பகுதிகளில் அல்லது அருகாமையிலுள்ள நகரப்பகுதிகளில் இந்நகரியங்கள் நிறுவப்பட்டன.

நகரீயங்களின் முக்கிய அம்சங்களாவன

 1. நகரீயங்கள் முழுமையாகத் திட்டமிடப்பட்டவை.
 2. நகராட்சி அமைப்புகளால் பொதுவாக வழங்கப்படுவதை விட உயர்தரத்திலான குடியியல் பணிகளையும் இவை வழங்கி பராமரிக்கின்றன.
 3. மக்களுக்கு பலவகையிலான வேலை மற்றும் பிற வாய்ப்புகளை வழங்க ஒரு நகரீயம் வசதிகளைப் பெற்றுள்ளது. எனவே பெரும் அளவிலான மக்கள் அதை நாடிச் செல்கின்றனர்.

நகரிய உள்ளாட்சி அரசாங்கம் தொழில்நிறுவனத்தின் இயல்பான நிர்வாகப் பொறுப்பாக அனுசரிக்கப்படுகின்றது. நெய்வேலி போன்ற சில நகரங்களில், தொழில் நிறுவனங்களால் நியமனம் செய்யப்படும் நிர்வாக அலுவலர்கள் உள்ளனர். இந்நிர்வாக அலுவலர்களுக்கு அவைத்தலைவர்கள், பொறியாளர்கள் மற்றும் பலர் உதவி செய்கின்றனர். நகராட்சியைப் போலன்றி, நகரியங்கள் அதிகார உயர்தன்மையைக் கொண்டுள்ளன. குடியியல் நிர்வாகத்தில் அரசியல் தலையீட்டின் அச்சத்தின் காரணமாக, நகரியம் மக்களாட்சி அமைப்பு எதனையும் கொண்டிருக்கவில்லை. மேலும், நகரீயங்களின் குடியிருப்பாளர்கள் தற்போதுள்ள ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் குறித்து மனநிறைவைப் பெற்றவர்களாக உள்ளனர்.

இராணுவக் கூட வாரியங்கள் (Contonment Boards)

மைய அரசின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளாகும். அவை பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. 1924 ஆம் ஆண்டின் இராணுவக் கூட்டங்கள் பற்றிய சட்டத்தின் கீழ் இராணுவக் கூடவாரியங்கள் அமைக்கப்படுகின்றன. இராணுவப் படைகள் நிறுத்தப்படுவதற்கென அல்லது தங்குவதற்கென ஒரு நகரத்தில் உள்ள இடமே இராணுவக் கூடமாகும். இராணுவக் கூடப்பகுதியின் உள் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கென்று இராணுவக் கூட வாரியம் அமைக்கப்படுகிறது.

இராணுவக் கூட வாரியத்தின் தலைவர் நிலையக் கட்டுப்பாட்டு அல்லது கட்டளை அதிகாரி ஆவார். அவருக்கு வாரியத்தில் விருப்பவாக்குச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி, தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்கு பதவி வகிக்கின்றார். பதவியின் நிமித்தமான உறுப்பினர் தனது அதிகாரப் பூர்வமான பதவி வகிக்கும் காலம் வரை பதவியில் நீடிக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் தமக்கென்று ஒரு துணைத்தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். அவர் மூன்று ஆண்டுகளுக்குப் பதவி வகிக்கின்றார்.

நகராட்சிப் பணிகள் இராணுவக் கூட வாரியத்திடம் ஒப்படைக்கப்படுகின்றன. நகராட்சி மன்றத்தில் காணப்பெறுவதைப் போன்று இப்பணிகள் கட்டாயமானவை, தன் விருப்பமானவை என பாகுபாடு செய்யப்பட்டுள்ளன. வாரியத்தின் வருவாய் ஆதாரங்கள் வரிசார்ந்த வருவாய், வரிசாராத வருவாய் என்று பிரிக்கப்பட்டுள்ளன. மைய அரசாங்கத்தின் முன் அனுமதியுடன் எத்தகைய வரியையும் வாரியம் விதிக்கலாம். நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரி வாரியத்தினால் தயாரிக்கப்படும் நிதிநிலை அறிக்கையை அனுமதிக்கின்றார். இராணுவக்கூட வாரியங்களின் நிலைப்பாடு, தனிப்பட்ட அமைப்புகள் ஆகியவை பொருத்தமற்றதாய் உள்ளன. எனவே காலப்போக்கில் அவை அண்டை நகராட்சி அமைப்புகளின் உறுப்புகளாக இடம்பெறலாம்.

நகர எல்லைப் பகுதி குழுக்கள்

அசாம், கேரளா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், மேற்கு வங்களாம், ஜம்மு காஷ்மீர், இமாசலப்பிரதேசம் ஆகியவற்றில் உருவாக்கப்பட்டுள்ளன. நகர எல்லைப் பகுதி குழுக்கள் மாநில அரசாங்கத்தினால் இயற்றப்படும் தனிப்பட்ட சட்டங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. நகர எல்லைப் பகுதிக்குழுவின் மீது மாவட்ட ஆட்சியாளர் அதிகப்படியான கட்டுபாட்டினையும் அதிகாரத்தையும் கொண்டுள்ளார். நகர எல்லைப் பகுதிக் குழுவின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் அல்லது அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்படுகின்றனர். அல்லது ஒரு பங்கினர் தேர்ந்தெடுக்கப்பட்டோராகவும் மற்றொரு பங்கினர் நியமனம் செய்யப்பட்டோராகவும் உள்ளனர். இக்குழுவிற்குத் தெருவிளக்கு, வடிகால் மற்றும் துப்புரவு போன்ற கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பணிகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் இக்குழுக்கள் நகரப் பஞ்சாயத்திற்குள் உட்படுத்திக் கொள்ளப்படலாம்.

எல்லைப்பகுதி குழுக்கள் (Notified Area Committee)

இக்குழுக்கள் பீகார், குஜராத், அரியானா, மத்தியப்பிரதேசம், கர்நாடகம், ஜம்மு காஷ்மீர், உத்திரபிரதேசம் மற்றும் இமாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளன. ஒரு நகராட்சி அமையப் பெறுவதற்குரிய தேவையான நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாத ஒரு எல்லைப்பகுதிக்கென குறிப்பிட்ட எல்லைப் பகுதிக்குழு அமைக்கப்படுகின்றது. மேம்பாட்டினைப் பெற்றுவரும் புதியதோர் நகரகத்திற்கும் அது அமைக்கப்படுகின்றது. இக்குழுவின் அமைப்பு அதிகாரப்பூர்வமான அரசிதழில் அரசாங்கத்தினால் அறிவிப்பு செய்யப்படுகின்றது. எனவே தான் அது அறிவிப்பு செய்யப்பட்டுள்ள எல்லைப் பகுதிக்குழு என அழைக்கப்படுகின்றது. இக்குழு மாநில நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் செயல்படுகின்றது. ஆனால் அதிகாரப்பூர்வமான அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது அறிவிக்கப்பட்டுள்ள நகராட்சிச் சட்ட ஏற்பாடுகள் மட்டுமே அதற்கு பொருத்தமானவையாய் இருக்கும்.

அறிவிக்கப்பட்ட எல்லைப்பகுதிக்குழு நகராட்சி மன்றத்தின் அதிகாரங்கள் அனைத்தையும் பெற்றிருக்கின்றது. ஆனால் நகராட்சி மன்றத்தைப் போலன்றி, அது ஒரு நியமன அமைப்பாகும். இக்குழுவின் தலைவரும் உறுப்பினர்களும் மாநில அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்படுகின்றனர்.

மாவட்ட பஞ்சாயத்துக்கள்

மாவட்ட பஞ்சாயத்து என்பது பஞ்சாயத்து இராச்சிய கட்டுமானத்தின் மேல்மட்ட அடுக்காகும். இது மாவட்டம் முழுவதும் அதிகார எல்லையைக் கொண்டுள்ளது. எனினும், நகராட்சியில் சேர்க்கப்பட்டுள்ள மாவட்டப்பகுதிகள், அல்லது நகரப் பஞ்சாயத்து அல்லாத தொழில் நகரியம் அல்லது மாநகரப் பொறுப்புகள் கீழ் உள்ள பகுதிகள் அல்லது இராணுவக் கூட வாரியம் போன்றவை அதனுள் அடங்காது. மாவட்டப் பஞ்சாயத்து பின்வருவோரை உறுப்பினரர்களாய்க் கொண்டுள்ளது.

 1. மாவட்ட பஞ்சாயத்து வட்டங்களிலிருந்து நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், மாவட்டப் பஞ்சாயத்து எல்லையில் உள்ள ஏறத்தாழ 50,000 மக்களுக்கென ஒவ்வொரு வட்டமும் அமைக்கப்படுகின்றது. ஒவ்வொரு வட்டத்திலிருந்தும் ஒரே ஒரு உறுப்பினர் நேரிடையாகத் தேர்ந்தெடுக்ப்படுகின்றார். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்ட பஞ்சாயத்தின் உறுப்பினராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட முடியாது.
 2. மாவட்ட பஞ்சாயத்து பகுதியின் மக்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள்.
 3. மாவட்டத்திற்குள் ஓர் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ள மாநிலங்களின் அவை உறுப்பினர்.
 4. பஞ்சாயத்து ஒன்றியத் தலைவர்களிடமிருந்து ஐந்தில் ஒரு பங்கினர் மாவட்டப் பஞ்சாயத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அ,இ,ஈ ஆகியவற்றின் கீழ்வரும் உறுப்பினர்கள் மாவட்டப்பஞ்சாயத்தின் நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். ஆனால் வாக்களிக்க முடியாது.

தாழ்த்தப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு மாவட்ட பஞ்சாயத்துப் பகுதியில் உள்ள மொத்த மக்கட்தொகையில் அவர்களின் எண்ணிக்கை பெற்றுள்ள விகிதாசாரத்திற்கேற்ப இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. தாழ்த்தப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆகியோரைச் சேர்ந்த பெண்டிர்களையும் உட்கொண்ட வகையில், மகளிர்களுக்கென மூன்றில் ஒரு பங்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஒரு வாக்காளருக்குரிய வயது தகுதி 18 ஆகும். மாவட்ட பஞ்சாயத்திற்கு நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஒரு உறுப்பினருக்கு வயதுத் தகுதி 21 ஆகும். ஆனால், அவ்விருசாராருடைய பெயர்களும் சம்பந்தப்பட்ட வாக்காளர்பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். மைய, மாநில அரசாங்கங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பணிபுரிவோர், மாவட்டப் பஞ்சாயத்தின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படவும் அல்லது எப்பதவியையும் வகிக்கவும் தகுதியற்றவர்கள் ஆவர்.

மாவட்டப் பஞ்சாயத்தின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும். அது முன்கூட்டிக் கலைக்கப்படுமாயின், ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படவேண்டும். ஏனைய அனைத்துப் பிரதிநிதித்துவ அமைப்புகளுக்கு உள்ளதைப் போன்று, சட்டத்தின் கீழ் தகுதிக் கேடான எந்த நபரும் மாவட்டப் பஞ்சாயத்தில் வாக்களராக அல்லது உறுப்பினராக இருத்தல் முடியாது. தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஒவ்வொரு மாவட்டப் பஞ்சாயத்தும் ஒரு தலைவரையும், துணைத்தலைவரையும் பெற்றுள்ளது. அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களால், தமக்குள்ளிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தகுதி இழக்கப்பட்டாலன்றி அல்லது பதவியிலிருந்து நீக்கப்பட்டாலன்றி, அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் பதவியில் இருப்பர். வழங்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளையும் அவர்கள் அனுபவிக்கின்றனர்.

தலைவரின் பணிகள்

மாவட்டபஞ்சாயத்தின் அரசியல் ரீதியான தலைமை நிர்வாகி அதன் தலைவர் ஆவார். அதன்படி, மாவட்ட பஞ்சாயத்தின் கூட்டங்களைக் கூட்டுவித்துத் தலைமை தாங்கி, அதன் செயல் நடவடிக்கைகளை நடத்துகின்றார். அவர் பஞ்சாயத்து சமிதிகள் மற்றும் பஞ்சாயத்துகள் செயல்படுவதை ஆய்வு செய்து, தனது அறிக்கையை மாவட்டப் பஞ்சாயத்திற்குச் சமர்ப்பிக்கின்றார். மாவட்டப் பஞ்சாயத்தின் செயலாளரின் வேலைப்பாட்டின் மீது தனது கருத்தினை எழுதுகிறார். இது மாவட்ட ஆட்சியாளரால் எழுதப்பெறும் மந்தன அறிக்கையோடு இணைக்கப்படுகிறது. தமது பணிகளுள் எதனையும் துணைத்தலைவருக்கு அவர் ஒப்படைவு செய்யலாம்.

நெருக்கடியான சமயத்தின் போது, மாவட்டப்பஞ்சாயத்துத் தொடர்பான எப்பணியினையும் நிறைவேற்ற அவர் உத்தரவிடமுடியும். ஆனால் மாவட்டப் பஞ்சாயத்தின் அடுத்த கூட்டத்தில் அத்தகைய செயலை, அவர் அறிக்கை அறிவிப்புச் செய்யவேண்டும். மாவட்டப் பஞ்சாயத்தின் பதிவுகள் அல்லது ஆவணங்கள் அனைத்தையும் பார்வையிட அவர் அதிகாரம் பெற்றுள்ளார். இவ்வாறு, ஒரு தலைவர் மற்றும் ஒரு மேற்பார்வையாளர் ஆகியோரின் பங்குப்பணியினை தன்னுடன் இணைத்துக் கொண்டவராக மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர் உள்ளார். அரசாங்கத்திற்கும் மாவட்டப் பஞ்சாயத்திற்கும் இடையே அவர் தகவல் தொடர்பு பாலமாக அமைந்துள்ளார்.

மாவட்டப் பஞ்சாயத்து அல்லது ஜில்லா பரிஷத்தின் அதிகாரங்களும் பணிகளும்

மாநிலச் சட்டமன்றத்தால் இயற்றப்பட்டுள்ள சட்டத்தில் கூறப்பட்டுள்ளன. மாவட்டப் பஞ்சாயத்து ஓர் ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை புரியும் பங்குப் பணியினை ஆற்ற வேண்டியுள்ளது அவை வருமாறு.

 1. பஞ்சாயத்து சமிதிகளின் நிதிநிலை அறிக்கைகளை ஆராய்ந்து ஒப்புதல் அளிக்கிறது.
 2. தமது பணிகளைத் திறமையுடன் மேற்கொள்ளுமாறு பஞ்சாயத்து சமிதிகளுக்கு அது உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றது.
 3. பஞ்சாயத்து சமிதிகளால் தயாரிக்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்களை அது ஒருங்கிணைக்கின்றது.
 4. மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் சம்பந்தமாக அது மாநில அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்குகின்றது.
 5. மாவட்டத்தின் உள்ளூர் ஆணையுரிமை படைத்த நிறுவனங்களின் பணிகள் குறித்து அது புள்ளி விவரங்களைச் சேகரிக்கின்றது.
 6. மாவட்டத்தின் உள்ள பஞ்சாயத்து சமிதிகளுக்கென மாநில அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதிகளை அது பகிர்ந்தளிக்கின்றது.
 7. மாவட்டத்தின் பஞ்சாயத்துக்கள், பஞ்சாயத்து சமிதிகள் ஆகியவற்றிற்குச் செய்யப்படவேண்டிய பணி ஒதுக்கம் மீது அது மாநில அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குகின்றது.
 8. தனக்கு கீழ் அமைந்துள்ள பஞ்சாயத்து இராச்சிய அடுக்கு முறை அமைப்புகளுக்கிடையிலான நல் உறவுகளை ஒழுங்கு முறைபடுத்துகின்றது.
 9. மாநில அரசாங்கத்தினால் அளிக்கப்படும் எல்லா அதிகாரங்களையும் அது செயல்படுத்துகின்றது. நிலைக்குழுக்கள் ஜில்லா பரிஷத் அல்லது மாவட்டப் பஞ்சாயத்து தனது நிலைக்குழுக்களின் வாயிலாகப்பணியாற்றுகிறது.

இந்நிலைக் குழுக்கள் பின்வரும் செயல்பாடுகளுக்கென அமைக்கப்பட்டுள்ளன.

 1. சமூக மேம்பாடு அல்லது முன்னேற்றம்
 2. விவசாயம், கூட்டுறவு, பாசனம் மற்றும் கால்நடைப் பராமரிப்பு.
 3. குடிசை, கிராம மற்றும் சிறிய அளவிலான தொழில்கள்.
 4. கல்வி மற்றும் சமுதாயப் பொதுநலன்.
 5. நிதி மற்றும் வரிவிதிப்பு.
 6. பொதுச்சுகாதாரம்.

இக்குழுக்களின் தலைவர்களும் உறுப்பினர்களும் தம்மால் தமக்குள்ளிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாவட்டப் பஞ்சாயத்தின் தலைவர் ஒரு குழுவின் உறுப்பினராய் இருப்பாராயின், அவரே அதன் தலைவராக இருத்தல் வேண்டும்.

வருவாய் ஆதாரங்கள்

பொதுவாகக் கூற வேண்டுமாயின், தனதுசெயலாக்கப் பணிகளைச் சந்திக்கும் பொருட்டு, ஒரு மாவட்டப் பஞ்சாயத்து பின்வரும் வருவாய் ஆதாரங்களைப் பெற்றுள்ளது.

 1. தொழில், வர்த்தகம் மற்றும் வாழ்க்கைப் பணி மீது விதிக்கப்படும் வரி.
 2. பொதுக்கேளிக்கைகள் மற்றும் நீர் மீது விதிக்கப்படும் வரி.
 3. பயணிகள் மீதான வரி.
 4. மாநில அரசாங்கம் வழங்கும் மானியங்கள் மற்றும் கடன்கள்.
 5. பணியாளர் குழாம் மற்றும் சீரமைப்பு பற்றி மானியங்களும் நில வருவாயும்.
 6. திட்டம் மற்றும் வட்டாரம் குறித்த மானியங்கள்.
 7. இறைச்சி விற்பனையாளர்கள் செலுத்தும் உரிமக் கட்டணம்.
 8. சந்தையில் விற்பனையாகும் கால்நடைகள் மற்றும் பொருள்கள் மீது விதிக்கப்படும் வரி.
 9. தனது சொத்திலிருந்து வரும் வருமானம். ஒவ்வொரு மாவட்ட பஞ்சாயத்திற்கென, மாவட்டப் பஞ்சாயத்து நிதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பின்வரும் இனங்கள் மாவட்டப் பஞ்சாயத்து நிதியினுள் செலுத்தப்படுகின்றன.

 1. மாநிலத்தின் திரண்ட நிதிக்குவிப்பிலிருந்து மாவட்டப் பஞ்சாயத்தின் நிதிக்கென்று ஒதுக்கம் செய்யப்பட்ட தொகை.
 2. அரசாங்கத்தினால் வகை செய்யப்பெறும் அனைத்து மானியங்கள், ஈட்டுத்தொகைகள், கடன்கள் மற்றும் பங்களிப்புகள்.
 3. மாவட்டப் பஞ்சாயத்தின் நிலங்கள் அல்லது மற்ற சொத்து மூலம் பெறப்படும் வாடகை அல்லது குத்தகைத் தொகை.
 4. தனிநபர்களிடமிருந்து அல்லது நிறுவனங்களிடமிருந்து மாற்றம் செய்யப்படும் அல்லது மானியங்களாய்ப் பெறப்படும், அனைத்து வட்டிகள், இலாபங்கள் மற்றும் நன்கொடையால் திரண்டுள்ள பிற வருமானங்கள்.
 5. மாவட்டப் பஞ்சாயத்தினால் விற்பனை செய்யப்பட்ட நிலம் மற்றும் சொத்துக்களின் மூலம் வரும் அனைத்து வருமானங்கள்.
 6. மாவட்டப் பஞ்சாயத்தினால் விதிக்கப்பெறும் அல்லது அதற்குச் செலுத்தப்படும் அனைத்துக் கட்டணங்கள் மற்றும் தண்டனைத்தொகைகள். ஒவ்வொரு மாவட்டப் பஞ்சாயத்து நிதிக்கும், தன்னால் தீர்மானிக்கப்பட்ட அளவில், மானியம் ஒன்றினை அரசாங்கம் வழங்குதல் வேண்டும். தலைமை நிர்வாக அலுவலர் ஒவ்வொரு மாவட்ட பஞ்சாயத்திற்கும் ஒரு தலைமை நிர்வாக அலுவலர் அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்படுகின்றார். பல்வேறு மாநிலங்களில் அவருடைய பதவிப் பெயர் மாறுபடுவதாய் உள்ளது. தமிழ்நாட்டில் இந்த அலுவலர் கிராம வளர்ச்சி இணை இயக்குனருக்குண்டான நிலையினை வகிக்கின்றார். தலைமை நிர்வாக அலுவலரின் ஆட்சேர்ப்பு முறை, ஊதியம் மற்றும் படிகள், ஒழுங்கு மற்றும் நடத்தை மற்றும் பணிவரையறைகள் யாவும் அரசாங்கத்தினால் ஒழுங்குமுறைப் படுத்தப்படுகின்றன.

மாவட்டப் பஞ்சாயத்தின் தலைமை நிர்வாக அலுவலரின் பணிகள், அதிகாரங்கள் மற்றும் கடமைகள்.

 1. தலைமை நிர்வாக அலுவலர் மாநிலச் சட்டமன்றத்தால் தன் மீது சுமத்தியுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் செயல்படுத்துகின்றார்.
 2. மாவட்டப் பஞ்சாயத்துப் பணிகள் அனைத்தின் செயலாக்கத்தை அவர் மேற்பார்வையும் கட்டுப்பாடும் செய்கின்றார்.
 3. மாவட்டப் பஞ்சாயத்து மற்றும் அதன் குழுக்களின் கூட்டங்களில் கலந்து கொள்ளவும், அவைகளில் எந்த ஒரு தீர்மானத்தை முன் வைக்கவும் அவர் உரிமை பெற்றுள்ளார்.
 4. மாவட்டப் பஞ்சாயத்தின் தீர்மானங்களை அவர் செயல்படுத்த வேண்டும்.
 5. மாவட்டப் பஞ்சாயத்தின் தீர்மானங்களின் செயலாக்கம் பற்றியும் வரி வசூலிப்பு பற்றியும் கால அறிக்கைகளை அவர் வழங்குதல் வேண்டும்.
 6. மாவட்டப் பஞ்சாயத்தின் அலுவலர்களையும் பணியாட்களையும் அவர் கட்டுப்பாடு செய்கின்றார்.
 7. மாவட்டப் பஞ்சாயத்தின் உத்தரவுகளையும் கட்டளைகளையும் அவர் செயல்படுத்துகின்றார்.
 8. மாவட்டப் பஞ்சாயத்தின் எந்த ஒர் அலுவலருக்கும் அல்லது பணியாளர்களுக்கும், எழுத்து மூலமான உத்தரவினால், தனது பணிகளுள் எதனையும் அவர் ஒப்படைவு செய்யலாம்.

பஞ்சாயத்து யூனியன் / ஊராட்சி ஒன்றியம்

பஞ்சாயத்து இராச்சிய முறையமைப்பில் நடு அடுக்காகப் பஞ்சாயத்து சமிதி அமைந்துள்ளது. அது ஒரு இடைநிலையான அடுக்காகவும் கருதப்படுகிறது. பஞ்சாயத்து யூனியன் அல்லது ஊராட்சி ஒன்றியம் என அது பலவகையாகப் பெயரிடப்பட்டுள்ளது.

அமைப்பும் அளவும்

தேசிய விரிவாக்கக் குறிக்கோளாக அமையப் பெறும் பஞ்சாயத்து வளர்ச்சிக்கு வட்டாரத்துடன் பொதுவாக முடிவதைலில் பஞ்சாயத்து சமிதியின் என்று அமைந்துள்ளது. ஒரு பஞ்சாயத்து ஒன்றியம் 112 கிராமங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பஞ்சாயத்து ஒன்றியத்தின் நிர்வாகம், பஞ்சாயத்து ஒன்றிய மன்றத்திடம் வழங்கப்படவேண்டும்.

 1. பஞ்சாயத்து ஒன்றியம் உள்ள வட்டாரங்களிலிருந்து நேரிடையாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு உறுப்பினர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.
 2. பஞ்சாயத்து ஒன்றியப் பகுதியைச் சேர்ந்த (மக்களவை) உறுப்பினர்கள் மற்றும் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள்.
 3. பஞ்சாயத்து ஒன்றியத்தின் வாக்காளார்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள மாநிலங்கள் அவை உறுப்பினர்கள்.
 4. பஞ்சாயத்து ஒன்றிய மன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மொத்த எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கு என்ற வகையில் கிராமப் பஞ்சாயத்து அவையில் இடம்பெறுகின்றார். பஞ்சாயத்து ஒன்றியப் பகுதியில் உள்ள கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் தமக்குள் இவ்வுறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.

தலைவர் மற்றும் துணைத்தலைவர்

பஞ்சாயத்து சமிதியின் தலைவர் பிரமுகர், பிரதான் என்று பல மாநிலங்களில் பெயரிடப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அவர் சேர்மன் (தலைவர்) என்று அழைக்கப்பட்படுகிறார். இவரைத் தவிர்த்து ஒரு துணைத்தலைவரும் இருக்கிறார். அவர் பஞ்சாயத்து ஒன்றியத்தின் உறுப்பினர்களால் தமக்குள்ளேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார். தகுதி இழக்கப்பட்டாலன்றி (அ) பதவியிலிருந்து நீக்கப்பட்டாலன்றி அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பதவி வகிக்கின்றனர். பஞ்சாயத்து ஒன்றியமன்றத்தினால் தடை செய்யப்பட்டாலன்றி எழுத்து மூலமாக உத்தரவின் மூலம், தலைவர் அவருக்குண்டான எப்பணிகளையும் துணைத்தலைவருக்கு ஒப்படைவு செய்யலாம். எனினும் தலைவர் பதவி காலியாக இருக்கும் போது தலைவருக்குண்டான பணிகளைத் துணைத்தலைவர் ஆற்ற வேண்டும். தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகிய இரு பதவிகளும் காலியாக இருக்குமாயின் வட்டார வருவாய் அதிகாரி (Revenue Divisional Officer) பஞ்சாயத்து ஒன்றிய மன்றத்தின் அலுவல் சார்பான உறுப்பினராகவும் தலைவராகவும் இருப்பார்.

தலைவரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்

பஞ்சாயத்து யூனியனின் தலைவர் அரசியல் ரீதியான செயலாக்கத் தலைவராவார். அவருடைய அதிகாரங்களும் பணிகளும் பின்வருவனவாகும்.

 1. பஞ்சாயத்து சமிதியின் கூட்டங்களைக் கூட்டித் தலைமை தாங்குவதோடு அதன் செயல்முறைகளை அவர் நடத்துகின்றார்.
 2. பஞ்சாயத்து சமிதி மற்றும் அதன் நிலைக்குழு ஆகியவற்றின் முடிவுகள் மற்றும் தீர்மானங்களை செயல்படுத்தும் போது வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அவருடைய பணியாளர்கள் மீது கட்டுப்பாட்டினை அவர் செலுத்துகின்றார்.
 3. திட்டங்களை தீட்டுவதிலும் உற்பத்திச் செயல்திட்டங்களை செயல்படுத்துவதிலும் பஞ்சாயத்துக்களை ஊக்குவித்து அவைகளுக்கு வழித்துணையாக அவர் திகழ்கிறார்.
 4. பஞ்சாயத்து ஒன்றிய மன்றத்தின் ஆவணங்கள் மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல் பரிமாற்றம் அனைத்தும் தலைவரின் மூலமாக மேற்கொள்ளப்படவேண்டும்.
 5. ஒன்றியம் மற்றும் அரசாங்கம் ஆகியவற்றை அதிகாரப்பூர்வமாக பார்வையிட அதிகாரம் பெற்றுள்ளார்.
 6. எந்த ஒரு முக்கியமான வேலையையும் உடனடியாக செயல்படுத்துவதற்கு அவர் உத்தரவுகளையும் பிறப்பிக்கலாம்.
 7. தான் ஒரு உறுப்பினராகத் திகழும் பட்சத்தில் அலுவல் சார்பு முறையில் நிலைக்குழுவின் தலைவராக அவர் திகழ்கின்றார்.

பஞ்சாயத்து ஒன்றியத்தின் முறைமையின் முக்கியமான அமைப்பாக பஞ்சாயத்து சமிதி திகழ்கிறது. அது சமூக மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த தலையாயச் செயலாக்க அமைப்பாக உள்ளது. தனக்கென குறிப்பிட்ட வகையில் ஒதுக்கப்படும் பொறுப்புகளை செயல்படுத்துவதில் மாநில அரசாங்கத்தின் ஒரு முகவராக அது செயல்படுகின்றது. தனது அதிகார எல்லகைக்குள் அமைந்துள்ள கிராம பஞ்சாயத்துக்களின் மீது பஞ்சாயத்து சமிதி கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை ஆகியவற்றை செலுத்துகின்றது. அனைவருக்கும் தேவையான தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவியை வழங்குகின்றது. இறுதியில் தனது எல்லைக்குள் உள்ள பஞ்சாயத்தின் நிதிநிலை அறிக்கைகளை ஆராய்ந்து அனுமதிக்கும் பொதுப்படையான அதிகாரத்தையும் பெற்றுள்ளது.

பஞ்சாயத்து சமிதியின் பணிகள்

பஞ்சாயத்து சமிதியின் பணிகள் இருவகைப்படும். அவை குடியியல் வசதிகள் மேம்படச் செய்வது மற்றும் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றதலும் ஆகும்.

குடியியல் பொறுத்தமட்டில் பஞ்சாயத்து சமிதி பின்வரும் பொறுப்புகளைப் பெற்றுள்ளது.

 1. கிராமப் பஞ்சாயத்துச் சாலைகளைத் தவிர்த்து சமிதியின் அதிகார எல்லைக்குள் சாலைகள் அமைத்துப் பராமரித்தல்.
 2. குடிநீர் வழங்கல்.
 3. வடிகால் குழாய்களை பராமரித்தல்.
 4. தாய் சேய் நல இல்லங்களையும் ஆரம்ப சுகாதார மையங்களையும் நிறுவுதல்.
 5. மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகளை ஏற்படுத்துதல்.
 6. ஆரம்ப மற்றும் ஆதாரப் பள்ளிகளுக்கான ஏற்பாடு செய்து முதியோர் கல்வி மையங்களை நிறுவுதல்.
 7. ஊட்டுப்பாதைகளாக உள்ள கிராமச் சாலைகளுக்குத் துணைபுரிதல்.
 8. நூலகங்களை நிறுவுதல்.
 9. இளைஞர் அமைப்புகள், மகளிர், உழவர் குடிமக்கள் போன்றவைகளை நிறுவுதல்.
 10. கலாச்சார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளித்தல்.

தனது எல்லைக்குள் சமூக வளர்ச்சி திட்டங்களைப் பஞ்சாயத்து சமிதி நிறைவேற்றுகின்றது. அதன் பணிகள்,

 1. சமூக மேம்பாட்டின் கீழ் அனைத்து திட்டங்களையும் செயலாக்குதல்.
 2. வீரிய வித்துக்களைப் பெருக்கி, வினியோகித்தல்.
 3. தேர்ச்சியான உரங்களைச் சேகரித்தல், வினியோகித்தல், பிரபலமாக்குதல்.
 4. மண்வளம், நிலத்தை மேம்படுத்துதல்.
 5. வேளாண்மைக்கான கடன் வழங்குதல்.
 6. கிணறுகளை வெட்டியும், குளங்களைப் பழுதுபார்த்தும் பாசன வசதிகளைச் செய்து கொடுத்தல்.
 7. மரங்களை நடுதல், மரங்களை வளர்த்தல்.
  1. தேர்ச்சி வாய்ந்த இனவிருத்தி ஆடுகள், மாடுகள், பறவைகள் வளர்ப்பு அறிமுகம் செய்தல்.
  2. தேர்ச்சி வாய்ந்த கால்நடை தீவனத்தை அறிமுகம் செய்தல்.
  3. கால்நடைகளுக்கு வியாதி வராமல் தடுத்தல் மற்றும் உரிய நிவாரணம் அளித்தல்.
  4. பால்பண்ணை அமைத்தல், பால் வினியோகம் செய்தல்.
  5. கூட்டுறவுச் சங்கங்களை துவங்கி மேம்படுத்துதல்.
  6. மீன் காப்பகங்களைப் பராமரித்தல்.
  7. குடிசை, கிராம மற்றும் சிறிய அளவிலான தொழில்களை மேம்படுத்துதல்.
  8. உற்பத்தி மற்றும் பயிற்சி மையங்களை நிறுவிப் பராமரித்தல். நிலைக்குழுக்கள் பஞ்சாயத்து சமிதி நிலைக்குழுக்களை அமைத்துக் கொண்டு தனது பணிகளை ஆற்றுகின்றது.

இக்குழுக்கள் சட்டமுறையிலான அமைப்புகளாகும். கீழ்க்காணும் பணிகளையாற்றும் பொருட்டு ஐந்து குழுக்கள் உள்ளன.

அ. நிதி மற்றும் வரி விதிப்பு.

ஆ. வேளாண்மை உற்பத்தி கால்நடைப் பராமரிப்பு மற்றும் பாசனம்.

இ. கல்வி மற்றும் மாதர் நலன் உள்ளிட்ட சமுதாய பொதுநலன்.

ஈ. பொதுச் சுகாதாரம் மற்றும் துப்புரவு.

உ. தகவல், தொடர்பு மற்றும் கூட்டுறவு.

நிலைக்குழுவின் உறுப்பினர்கள் பஞ்சாயத்து சமிதியின் உறுப்பினர்களாகத் தமக்குள்ளிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பஞ்சாயத்து சமிதியின் தலைவர் நிதி மற்றும் வரிவிதிப்புக் குழுவின் தலைவராவார். பஞ்சாயத்து சமிதியினால் தமக்கு ஒப்படைவு செய்யப்படும் அதிகாரங்களை இக்குழுக்கள் செயல்படுத்துகின்றன. வட்டார வளர்ச்சி அலுவலர் நிலைக்குழுக்களின் செயலாளராகப் பணி புரிகின்றார்.

வருவாய் ஆதாரங்கள்

பொதுவாக ஒரு பஞ்சாயத்து சமிதி பின்வரும் வருவாய் ஆதாரகளைக் கொண்டுள்ளது.

 1. பஞ்சாயத்து சமிதி விதிக்கும் வரிகள், கட்டணங்கள், ஆகியவற்றில் கிடைக்கும் வருமானங்கள்.
 2. ஜில்லா பரிஷத் (அ) மாவட்டப் பஞ்சாயத்திலிருந்து பெறப்படும் நில வருவாய் மற்றும் உள்ளூர் தீர்வைப் பங்குத்தொகை.
 3. மாநில அரசாங்கத்திடமிருந்து பெறப்படும் மானியங்கள்.
 4. மாநில அரசாங்கத்திடமிருந்து பெறப்படும் கடன் தொகைகள்.
 5. பஞ்சாயத்து சமிதியினால் அனுமதிக்கப்படும் பொதுப் பணித்துறையில் சந்தைகள், இன்ன பலவற்றின் குத்தகைகளிலிருந்து கிடைக்கும் வருமானம்.
 6. மாவட்ட பஞ்சாயத்தின் வாயிலாக (அ) மாவட்டப் பஞ்சாயத்திலிருந்து பெறப்படும் தற்காலிக மானியங்கள்.
 7. பங்களிப்புகள் மற்றும் நன்கொடைத் தொகைகள்.
 8. செயலாக்க செயலி என்ற வகையில் பஞ்சாயத்து சமிதிக்கு அரசாங்கத்தினால் மாற்றம் செய்யப்படும் திட்டங்களிலிருந்து வரும் நிதிகள்.

இவைகளுடன் பல்வேறு வருவாய் ஆதாரங்கள் பஞ்சாயத்து சமிதி பெற்றுள்ளது. 1994 ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் பஞ்சாயத்துக்கள் சட்டப்படி ஒவ்வொரு பஞ்சாயத்து ஒன்றியத்துக்கும் பஞ்சாயத்து ஒன்றிய பொது நிதி என்றும் பஞ்சாயத்து (கல்வி) நிதி ஒன்றும் அமைக்கப்படவேண்டும். சட்டத்தில் குறிப்பிட்டவாறு பொது நிதி 27 இனங்களில் கிடைக்கப்பெறும் தொகைகளைக் கொண்டுள்ளன. மற்ற மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்து சமிதிகளும் பஞ்சாயத்து சமிதி நிதி வைப்புகளைக் கொண்டுள்ளன.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
2.95238095238
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top