অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

தொடக்கக் கல்வியின் நிலை

தொடக்கக் கல்வியின் நிலை

முன்னுரை

பண்டைய உலகில் கல்வி ஒரு தனிநபரின் நாட்டமாக இருந்தது. இடைக்காலத்தில் கல்வி ஒரு தனிமனிதனின் சமூக பொருளாதாரத் தகுதியாப் போற்றப்பட்டது. நவீன காலத்தில் தொடக்கத்தில் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அந்நாடு செய்யும் முதலீடாகச் செயல்பட்டது. இக்காலக்கட்டத்தில் தொடக்கக் கல்வி ஒரு நபரின் தற்காப்பு, வாழ்வாதார உத்தரவாதமாகவும் ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளந்தறியும் குறியீடாகவும், அதன் எதிர் காலத்தை உலக நாடுகளுடன் ஒப்பிட்டுக் கணிப்பு செய்யும் அளவு கோளாகவும், தர வேறுபாட்டுக் காரணியாகவும் கொள்ளப்பட்டுள்ளதை நாம் காணமுடிகிறது.

வாழ்வாதாரக் காப்புச் சின்னமாகவும், ஜீவாதார உரிமையாகவும் கல்வி உலக அரங்கில் போற்றப்படுகிறது. எண்ணெழுத்தறிவு இல்லாதவர்களின் நல்வாழ்வையும், உரிமைகளையும் காத்துத்தர இனி அரசாங்கச் சட்டத்தாலும் கூட இயலாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மக்களாட்சி நாட்டில் ஒரு குடிமகன் தன் இறையாண்மையைக் காத்துப்பயன்படுத்திக் கொள்ளவும், குடியுரிமைகளை அடைந்தனுபவிக்கவும், தான் ஒரு நல்லாட்சி அரசைத் தெரிவு செய்து தன்னைத் தானே ஆண்டுகொள்ளவும் கல்வி இன்றியமையாததோர் அடிப்படைத் தகுதியாகும். கல்வியின் பன்முக அவசியத்தைப் பாரதம் பன்னெடுங்காலத்திற்கு முன்பே உணர்ந்திருந்தது எனினும் வாய்ப்புச் சமத்துவமும் உரிமையும், அரசர்களின் படையெடுப்பால் அவ்வப்போது இடர்பாடுகளுக்குள்ளாயின என்பது ஒரு கசப்பான உண்மையே.

"நவீன பாரதத்தின் விடிவெள்ளி” என்று போற்றப்படும் ராஜாராம் மோகன் "கல்வி ஒன்றால் தான் இந்நாட்டு மக்களுக்கு நல்லதோர் எதிர்காலத்தை உருவாக்கித் தரமுடியும். நாட்டு விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் கல்வி தான் வழிகோலும்” என முழங்கினார்.

சுதேசி இயக்கக் காலத்தில் சிலரேனும் பெற்றிருந்த கல்விதான் இத்தாய் மண்ணின் விடுதலை வேட்கையைத் தூண்டி விடுதலைப்போர் வீரர்களின் கேடயமாகப் பயன்பட்டு அந்நியரை அஞ்சவைத்த ஒற்றுமையுணர்வின் நுணுக்கமாகவும், விடுதலை நாளை விரைவில் கண்டிட முழுமுதற் காரணியாகவும் செயல்பட்டது. அதே உணர்வின் உந்துதலுடன்தான் இந்தியா விடுதலை பெற்றபின், தன்னாட்சி செலுத்தும் குடியரசாகிட 1950-ல் சட்டத் திட்டங்களை வகுத்தாக்கி ஏற்ற போதும் இன்னும் பத்தே ஆண்டுகளில் இந்தியர் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி வாய்ப்பைத் தந்தாக வேண்டுமென வழிகாட்டு நெறிமுறைகளில் அழுத்தந்திருத்தமாக எழுதிச் சட்டமாக இயற்றியது. அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வியை நாட்டின் குறிக்கோளாக்கித் தன் அரசியலமைப்புச் சட்டத்திலேயே பட்டயமாக்கி முயன்றுவரும் பெருமை பாரதத்திற்கே சேரும்.

ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் கல்வியால், தொழில் விருத்தியால், வாணிபத்தால், காலனி ஆதிக்கத்தால் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை செல்வ வளம் கொழிக்குமாறு செய்து கொண்ட அதே காலக்கட்டத்தில் நம் அன்னை பாரதம் சுமார் மூன்றரை நூற்றாண்டுகள் பொருளாதாரச் சுரண்டலுக்கும், அரசியல் சூழ்ச்சிகளுக்கும் ஆளாகித் தன் முப்பது கோடி மக்களுக்கும் தரவேண்டிய கல்விக் கண் திறப்பு; கல்வி விழிப்புணர்வு; அறியாமை நீக்கும் மருந்து ஆகிய, மனித வள மேம்பாட்டுக் காரணியின் தாக்கம் பல்வேறு நிலைகளில் கிடைக்காமல் போனது. இதனை வலிந்து சரிகட்டவே இந்திய அரசியலமைப்புச் சட்டத் திட்டம் கல்விக்குக் காலவரையரையிட்ட முன்னேற்றத்தை அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. இந்நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரக் கல்வியைத் தான் அளிக்க வேண்டிய பொறுப்பை ஒரு போதும் நேரடியாக ஏற்றுக் கொண்டு திட்டமிட்டுச் செயலாற்றாமலேயே சுமார் 250 ஆண்டுகால மேலாதிக்கத்தையும், கிட்டத்தட்ட நூறாண்டுக் கால வல்லாட்சியையும் இங்கிலாந்து இந்தியாவில் செலுத்தியது. இக்காலம் பாரத வரலாற்றில் முன்னேற்றம் குன்றிய, சுரண்டல் காலமாகவே கழிந்தது.

அனைவருக்கும் தொடக்கக் கல்வி - சுதந்திர இந்தியாவின் முயற்சிகள்

பரந்து விரிந்த இந்தியாவின் கல்வி நோக்கங்களை நிறைவேற்றிட 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29-ஆம் நாள் மத்தியக் கல்வி அமைச்சகம் தன் பணியைத் தொடங்கியது. பல்வேறு பெயர், பொறுப்பு மாற்றங்களுடன் இன்று அது 1986-ல் செப்டம்பர் 26-ல் நிறுவப்பட்ட இந்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் நான்கு துறைகளுள் ஒன்றாகச் செயல்பட்டு வருகின்றது.

இந்தியாவின் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களிலும் கல்வியின் அவசியமும் தாக்கமும் பிணைந்து அமைந்துள்ளன. 1951-52-ல் 644.6 மில்லியன் ரூபாயாக இருந்த மத்திய, மாநில அரசுகளின் கல்வி ஒதுக்கீட்டுத் தொகை, 1995-96-ல் ரூ. 3,00,000/- மில்லியனாக 45 ஆண்டுகளில் 465 மடங்குகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் காலத்தில் நாட்டில் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் பல திட்டமிடப்பட்டு கனரகத் தொழில்களும், அடிப்படைத் தொழில்களும் பேரளவில் வளர்ச்சிபெற்றன. இத்திட்ட காலத்தில் ஆதாரக் கல்வி முறை மாற்றம் பெற்றது. தாக்கம் இடைநிலை, உயர்நிலைக் கல்வி வளர்ச்சியின் பால் செலுத்தப்பட்டது. 1960 களில் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலால் கல்வி முன்னேற்றமும் சிறிது பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவர் வருகை விகிதமும் வீழ்ச்சி அடைந்தது.

மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் (1961-62 to 1965-66) 6-11 வயதுடைய குழந்தைகளனைவரையும் பள்ளியில் சேர்க்க வசதி வாய்ப்புக்களைப் பரவலாக்க முற்பட்டது.

நான்காவது ஐந்தாண்டு திட்டம் (1969 - 74) தொடக்கக் கல்வியின் விரிவாக்கத்துக்கு முன்னுரிமை அளித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கிய ஊரகப் பகுதிகளிலும் பின் தங்கிய சமுதாயப் பிரிவினர்க்கும் கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர முற்பட்டது. ஆசிரியர் கல்விக்கும் விரிவாக்கம் வழங்கியது.

ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம் (1974-1978) கல்வி பெறும் வாய்ப்பைச் சமத்துவமாக்கி சமூக நீதியை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்துவதாய் அமைந்தது. கல்வியினால் கிடைக்கக் கூடிய வேலைவாய்ப்பு - வேலைவாப்பிற்குகந்த கல்வி பற்றி சிந்தித்தது.

ஆறாவது ஐந்தாண்டுத்திட்டம் (1980-85) வயது வந்தோர்களுக்கு முன்னுரிமை அளித்து, வயதுவந்தோர் எழுத்தறிவைப் பரவலாக்க முற்பட்டது அனைவருக்கும் கல்விக்கான இணைப்புத் திட்டங்கள் பல வழங்கப்பட்டன.

ஏழாவது ஐந்தாண்டுத்திட்டம் (1985-90) கல்விக்கட்டமைப்புகளை நெறிப்படுத்தி நாட்டின் சமூக பொருளாதாரத்தை உலக அரங்கின் நிலைகளுக்கு ஈடுகொடுத்து முன்னேற்றும் நோக்கோடு அமைந்தது. அனைவருக்கும் கல்வி 15-35 வயதினரிடம் காணப்பட்ட எழுத்தறிவின்மையை அடியோடு நீக்குதல், தொழிற் கல்வி வளர்ச்சி முதலியனவற்றை வலியுறுத்தியது.

தேசியக் கல்விக் கொள்கை (NPE) (1986)

1985 ஜனவரி மாதம் இந்திய அரசு கல்வி முறையை மேம்படுத்துவதற்கான தன்னுடைய விருப்பத்தை வெளியிட்டது. 1986 மே மாதம் “தேசியக் கல்வி கொள்கை 1986” என்ற கொள்கை செயல்திட்டத்தையும் ஆவணத்தையும் (Programme of Action) மத்திய அரசு வெளியிட்டது. இது 12 பகுதிகளை உள்ளடக்கியது. தொடக்கக் கல்வியுடன் தொடர்புடைய சில பிரிவுகளைக் காண்போம்.

பகுதி 1: அறிமுகம் - இதில் “1986 தேசியக் கல்வி கொள்கை ” பற்றிய பகுப்பாய்வும் கல்வியைப் பற்றிய அக்கறையும் இடம் பெற்றுள்ளது.

பகுதி 2: கல்வியின் பங்கு - தேசிய மேம்பாட்டிற்குக் கல்வி முக்கியமானது. இன்றைக்கும், எதிர் காலத்திற்கும் கல்வி முக்கிய முதலீடு எனவும் இது எடுத்துரைக்கிறது.

பகுதி 3: தேசிய கல்வி முறை 10 + 2 + 3 கல்வி முறை. தேசிய கலைத் திட்ட வடிவமைப்பு. பன்னாட்டு உணர்வு மற்றும் அமைதிக் கல்வி . கல்வியில் அனைவருக்கும் சமவாய்ப்பு. குறைந்த பட்சக் கற்றல் இலக்குகள் (MLL). உயர்கல்வி மற்றும் தொழில் கல்வியில் பக்கவாட்டு நிலைப் பெயர்வுக்கு (Lateral entry) வசதி. UGC, AICTE, ICA, IMC, NCERT, NIEPA, NAC போன்ற தேசிய நிறுவனங்களின் செயல் தரம் உயர்த்தல். கல்வியைப் பொதுப்பட்டியலில் வைத்தல் என்பவற்றை உள்ளடக்கியதாகும்.

பகுதி 4: கல்வியில் சம வாய்ப்பு பாகுபாடுகளைக் களைதல். பெண் மேம்பாட்டிற்கான செயல் திட்டம். பெண்களின் எழுத்தறிவின்மையை நீக்குதல். தாழ்த்தப்பட்டோருக்கான கல்வியை பிற இனத்தவருடன் சமமாக வழங்குதல். பழங்குடி மக்களுக்கான கல்வி வாய்ப்பு. சிறுபான்மையினருக்கான கல்வி. கல்வியில் சிறப்புத் தேவையுள்ள குழந்தைகளுக்கான கல்வி. வயது வந்தோர் கல்வி போன்றவற்றைப் பற்றியதாகும்.

பகுதி 5: கல்வியின் பல நிலைகளில் சீரமைப்பு செய்தல். 14 வயது வரையுள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், தக்கவைத்தல், தரத்தை உயர்த்தல். குழந்தை மையக்கல்வி முறை, தொழில் கல்வி தன்னாட்சிக் கல்லூரிகள், தன்னாட்சித் துறைகள் ஏற்படுத்தல், திறந்தவெளிக் கல்வி முறை ஆகியவற்றை விவரிக்கிறது.

செயல்திட்ட நடவடிக்கைகள் (Programme of Action) 1992

இந்திய அரசு, கல்வியின் தற்போதைய நிலையை மதிப்பிடவும், தேசியக் கல்விக் கொள்கையைத் திறம்பட நடைமுறைப்படுத்தவும், தேசியக் கல்விக் கொள்கையின் ஒவ்வொரு பகுதிக்கும் உரிய விரிவான நிதி ஆதாரங்களை உரிய முறையில் செலவிடவும், 23 சிறப்புப் பணிக்குழுக்களை (Task Forces) அமைத்தது. தேசியக் கல்வி கொள்கையின் 12 பகுதிகளுக்கான, 23 சிறப்பு பணிக்குழுக்களில் சிறந்த கல்வியாளர்கள், வல்லுநர்கள், மத்திய, மாநில அரசின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.

இருபத்து மூன்று சிறப்புப் பணிக்குழுக்கள் (Task Forces)

1. திட்டத்தைச் செயல்படுத்துதல்

2. பள்ளிக் கல்வியின் பாடப்பொருள் மற்றும் செயல்முறைகள்.

3. பெண்களுக்கான கல்வியில் சம வாய்ப்பு.

4. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற பின்தங்கிய வகுப்பினருக்கான கல்வி.

5. சிறுபான்மையினருக்கான கல்வி.

6. சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான கல்வி

7. வயது வந்தோர் மற்றும் தொடக்கக் கல்வி

8. முன் மழலைப் பருவக் கல்வி.

9. தொடக்கக்கல்வி –

10. இடைநிலைக் கல்வி மற்றும் நவோதயா வித்யாலயா.

11. தொழிற்கல்வி

12. உயர்கல்வி

13. திறந்த வெளிப்பல்கலைக் கழகம் மற்றும் தொலை வழிக் கல்வி.

14. தொழில் நுட்பக் கல்வி மற்றும் மேலாண்மை .

15. ஆய்வு மேம்பாடு.

16. தொலைத் தொடர்புச் சாதனங்கள் மற்றும் கல்வித் தொழில் நுட்பவியல்

17. வாழ்வியல் நோக்கிற்கான கல்வி,

18. பண்பாட்டுத் தொலை நோக்கு மற்றும் மொழிக் கொள்கையை நிறைவேற்றுதல்.

19. உடற்கல்வி மற்றும் யோகா.

20. மதிப்பீட்டு வழிமுறை, மற்றும் தேர்வு முறை மாற்றம்

21. ஆசிரியர் பயிற்சி.

22. கல்வி மேலாண்மை .

23. ஊரகப் பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்கள்.

தேசியக் கல்வி கொள்கையின் செயல் திட்ட ஆவணம் 7 உட்பிரிவுகளை உள்ளடக்கியது.

இன்றைய உலகம் வெகுவாக மாறிவருகிறது, பல்வேறு ஊடகங்களின் வழியாகத் தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணமாக உள்ளன. இத்தகவல்கள் குழந்தைகளின் உலகத்தையும் விட்டு வைப்பதில்லை. இவ்வாறு பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு வகையான தகவல்களும்; அறிவு சார் செய்திகளும் தொடர்ந்து கிடைப்பதை குழந்தைகளும் பெற்றுப் பயனடைய வேண்டும். உதாரணமாக கிராமத்துக் குழந்தைகளுக்கு உரையாடல், வானொலி, சுவரொட்டி, தொலைக்காட்சி, சினிமா போன்றவற்றைக் கேட்பதன் பார்ப்பதன் வழி இச்செய்திகள் கிடைக்கின்றன. நகரத்துக் குழந்தைகள் மேற்குறிப்பிட்டவையோடு கணினி மற்றும் இணையதள வசதிகள் மூலமாக அநேகச் செய்திகளைப் பெறுகிறார்கள்.

தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள குழந்தைகளிடம் ஆர்வம் ஊட்டப்பட வேண்டும். குழந்தை தானே கற்றுக் கொள்வதற்கான திறமையைப் பெற்றிருக்க வேண்டும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு 21-ம் நூற்றாண்டில் தொடக்க கல்வியின் கொள்கைகள் எவை என்பது பற்றியும் கல்வியின் நான்கு முக்கிய அம்சங்கள் எவை என்பது பற்றியும் இனி பார்ப்போம்.

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் தொடக்கக் கல்வியின் நோக்கங்கள்

தற்போதைய சூழ்நிலைகளின் தேவைகளைத் தன்னம்பிக்கையுடன் கையாளுகின்ற திறமையைக் குழந்தையிடம் வளர்ப்போமாயின் எதிர்காலத்தில் வரும் பிரச்சனைகளை அவர்கள் எளிதில் எதிர்கொள்வார்கள். அறிவு, திறமை, தேவையான மனப்பாங்கு மற்றும் நன்னெறிப் பண்புகளை வளர்ப்பதன் மூலம் குழந்தைகளிடம் தேவையான தன்னம்பிக்கையை வளர்க்க முடியும். ஆக இதுவே இந்த நூற்றாண்டின் கொள்கை எனக் கொள்ளலாம். இவற்றைச் சுருக்கமாக 'கல்வியின் நான்கு தூண்கள்' அல்லது முக்கிய அம்சங்கள் என அழைப்பர்.

கல்வியின் நான்கு தூண்கள்

*தொடர்ந்து அறிவைப் பெருக்கிக் கொள்ளும் திறனைப் பெறுதல்

• அறிந்தனவற்றைச் செயல்படுத்தும் திறனைப் பெறுதல்.

• பிறரோடு சேர்ந்து வாழும் திறனைப் பெறுதல்

*தன் திறமைகளை அறிந்து, அவற்றிற்கேற்ப வாழும் திறனைப் பெறுதல் என்பனவாகும்.

தொடர்ந்து அறிவைப் பெருக்கிக் கொள்ளும் திறனைப் பெறுதல்

குழந்தை எழுத்தறிவு, எண்ணறிவு, சிக்கலுக்குத் தீர்வு காணல், ஆய்வு மனப்பான்மையுடன் சிந்தித்து மேலும் சில அடிப்படை அறிவுகள் ஆகிய திறமைகளைப் பெற்று அன்றாட வாழ்க்கைச் சூழ்நிலையில் பொருத்தமுடன் அவற்றைக் கையாளும் திறமையை அவசியம் பெற வேண்டும்.

அறிந்தனவற்றைச் செயல்படுத்தும் திறனைப் பெறுதல்

அறிந்து கொள்ளும் திறமை மட்டும் குழந்தைக்கு போதுமானதல்ல. தான் அறிந்து கொண்டவற்றைச் செய்து பார்க்கப் போதுமான திறனையும் சரியான மனப்பான்மையையும் பெற்றிருக்க வேண்டும். அதாவது குழந்தை செய்து கற்கும் திறமையைப் பெற்றிருக்க வேண்டும். கைகள் நன்கு பழக்கப்படுவதோடு வேலையைப் பற்றிய நல்லெண்ணம் உருவாகும். தங்கள் கைகளாலே பொருட்கள் செய்வதனால் குழந்தைகளிடம் தன்னம்பிக்கையையும், தனித்தன்மை உணர்வுகளையும் வளர்க்கலாம்.

பிறரோடு சேர்ந்து வாழும் திறனைப் பெறுதல்

தனித்தன்மையும், தன்னம்பிக்கையும் உடையதாகக் குழந்தை வளர வேண்டும் என்பது முக்கியம் என்ற போதிலும் வேகமாக மாறிவரும் உலகச் சூழலுக்கு இது போதுமானதாயிராது. குழந்தை அன்றாடம் பலரைச் சந்திக்கிறது. பல அனுபவங்களைப் பெறுகிறது. இத்தகைய சூழ்நிலைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையையும், பாராட்டும், பொறுத்துக் கொள்ளும் மனப்பாங்குகளையும் பெற வைக்கிறது. மற்றவர்களோடு விளையாட, வேலை செய்ய, சேர்ந்து வாழத் தேவையான திறன்களைப் பெற வைக்கிறது. அதே நேரத்தில் குழந்தை தன்னுடைய சமூகச் சூழ்நிலை, பண்பாடு, வலிமை அல்லது குறைபாடு ஆகியவைகளை அறிந்து வைத்திருக்க தேவைப்படுகிறது. இவ்வாறாகக் குழந்தைப் பிறரோடு சேர்ந்து வாழும் திறனைப் பெறவியலும்.

தன் திறமைகளை அறிந்து அவற்றிற்கேற்ப வாழும் திறனைப் பெறுதல்

மேற்கண்ட மூன்று அம்சங்களும் கற்றலின் நான்காவது அம்சமாகிய எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான திறனைப் பெறவைக்கின்றன. குழந்தையின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சி என்ற இலக்கிற்குத் தொடர்புடையதாக இது இருக்கிறது.

*மக்களோடு தொடர்பு கொள்ளும் திறனும் தன்னம்பிக்கை உணர்வும்

*தன்னம்பிக்கையும் தனித்தன்மை உணர்வும்

*அடிப்படை நன்னெறிப் பண்புகள் பற்றிய உணர்வு

*அன்றாடச் சூழ்நிலையில் தானே முடிவெடுக்கும் திறன்

*கற்பனை செய்தல், படைத்தல் மற்றும் அழகுணர்தல் போன்ற திறன்கள்

* தன்னைச் சுற்றியுள்ள உலகோடு ஒத்து வாழும் திறன்.

ஆகவே தொடக்கக்கல்வி மேற்குறிப்பிட்ட நான்கு சிறப்பம்சங்களையும் அடைய ஆதாரமாக அமைய வேண்டும்.

தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு (NCF 2005)

இந்தியா, மிக நீண்ட வரலாற்றையும், மிகச் சிறந்த பண்பாட்டையும், ஜனநாயகப் பண்புகளையும், சமத்துவ நோக்கையும் கொண்ட சுதந்திர நாடு. சுதந்திரத்திற்கு பின் நாம் பின்பற்றி வரும் கல்வி முறையை ஆய்வு செய்யும்போது, நமது கல்வி நடைமுறை மனநிறைவளிப்பதாக இல்லை.

*நமது பள்ளி முறை நெகிழ்வற்ற தன்மையுடன் இருப்பதால் மாற்றங்களைக் கொண்டுவரத் தடையாக உள்ளது.

*கற்றல் தனிமைப்படுத்தப்பட்ட செயலாக இருப்பதால், குழந்தைகள் தங்கள் வாழ்க்கையை, பெற்ற அறிவோடு தொடர்புபடுத்திப் பார்க்க இயலாமல் உள்ளது.

*ஆக்கப் பூர்வமான சிந்தனைகளுக்கும், அகநோக்குச் சிந்தனைகளுக்கும் பள்ளிகள் ஊக்கம் தருவதில்லை .

*கல்வியின் பெயரால் பள்ளியில் எதைக் கொடுக்கின்றோமோ அது புதிய அறிவை உருவாக்கும் மனிதத் திறன்களை முடக்கி விடுகின்றது.

*குழந்தைகளின் நிகழ்காலத்தைக் கருத்தில் கொள்ளாது எதிர் காலம் மையப் படுத்தப்படுவதால் தேசநலன், சமூகநலன், குழந்தைகள் நலன் பாதிக்கப்படுகின்றது.

தேசியக் கல்விக்கொள்கை 1986, பல்வேறு நிலைகளில் திறமைகள் இனம் காணப்பட்டு, மதிப்புகள் வளர்க்கப்பட வேண்டும் என பரிந்துரைத்த போதிலும் கல்வி, தேர்வை மையமாக வைத்து, செய்திகளின் சுமையைப் பாடநூல்களில் மேன்மேலும் சேர்த்துக் கொண்டே போகும் போக்கு நீடித்து வந்ததாலும், 2000-இல் நடைபெற்ற கலைத்திட்ட வடிவமைப்புப் பரிசீலனை விரக்தி அடையச் செய்யும் நிலையில் இருந்ததாலும், இந்த நூற்றாண்டில் பள்ளிக் கல்வியின் எதிர்காலத் தேவையை முன்வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாலும் “தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு 2005 “உருவாக்கப்பட்டது. இதன் வழிகாட்டும் கொள்கைகள் :

*பள்ளிக்கு வெளியில் உள்ள வாழ்க்கையுடன் அறிவைத் தொடர்புபடுத்துவது.

*கற்றல் மனப்பாடம் செய்யும் முறையிலிருந்து மாறி வர வேண்டும் என்பதை உறுதிப்படுத்துதல்.

*பாடப்புத்தகத்தை மையப்படுத்தாமல், குழந்தைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை மையப்படுத்தி, கலைத் திட்டத்தை செழுமைப்படுத்துதல்.

*தேர்வு முறைகளை நெகிழ்வுடையதாக்கி, ஒருங்கிணைந்த வகையில் வகுப்பறை வாழ்வோடு இணைத்தல்.

*நாட்டின் மக்களாட்சிப் பன்முகத் தன்மையைப் புறம் தள்ளாமல் தனித்துவத்தை வளர்த்தல்.

கல்வியைப் பொறுத்தவரை பல்வேறு மாநிலங்களில், பல சமூகப் பிரிவுகளில் வாழும் அனைத்து குழந்தைகளுக்கும் அளிக்கப்படும் கல்வி, ஒப்பிடக் கூடிய தரத்தில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. "இந்தியக் கல்வி முறையில் சமத்துவம், தரம், அளவு ஆகிய மூன்றும் புரிந்துகொள்ள இயலாத மாய முக்கோணத்தின் மூன்று பங்கங்களாக உள்ளன” என J.P. நாயக் கூறியுள்ளார்.

கல்வியின் நோக்கங்கள்

* தற்காலப் பிரச்சனைகளில் குழந்தைகள் மூழ்கிவிடாது இருக்க வழிகாட்டுதல்.

*மக்களாட்சி மதிப்புகளான சமத்துவம், நீதி, சுதந்திரம், மதச் சார்பின்மை போன்றவற்றை உருவாக்கத் தேவையான அனுபவங்களை அளித்தல்.

* உலகைப் பற்றிய புரிதலோடும், அறிவோடும், பிறர் நலன் மீதும், அவர்களின் உணர்வுகள் மீதும் அக்கறை கொள்ள வழிகாட்டல்.

*புதிய சூழலை நெகிழ்வோடும், படைப்பாற்றல் திறனோடும் எதிர்கொள்ளப் பயிற்சியளித்தல்.

*அழகை ஆராதிப்பதும், கலையைப் போற்றுவதும், கலை இலக்கியப் படைப்பாற்றலும், வாழும் இடச்சூழல் பற்றிய அறிவும் பெற வகை செய்தல்.

ஆசிரியர் பயிற்சிக்கான தொலைநோக்கு

*பள்ளிச் செயல் முறைகளிலிருந்து தாமாகவே எழும் தேவைகளுக்கு எற்ப, ஆசியர் பயிற்சி மாறவேண்டும்.

*தையரி மூட்டுதல், ஆதரவு அளித்தல், மாணவர்கள் தம் திறமைகளை உணரச் செய்தல், மனிதநலத்தை வளர்த்தல், சிறந்த குடிமகனாக வாழ நல்லியல்புகளை வளர்த்தல் போன்ற கடமைகள் உள்ளவராக ஆசிரியரை உருவாக்குதல்.

*கற்பவரின் தனிப்பட்ட தேவைகளுக்கும், மாறிவரும் சமூகத் தேவைக்கும் ஈடுகொடுக்கும் வகையிலும், கலைத்திட்டம் புதுப்பித்தலுக்குச் சுயச்சிந்தனையோடு தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் வகையில் ஆசிரியரை உருவாக்குதல்.

தேர்வுச் சீர்த்திருத்தங்கள்

தற்போது பாட நூல்களிலிருந்து கேட்கப்படும் வினாவிடை அடிப்படையிலான கேள்வித் தாள்களை மாற்றும் வகையில் மறு சீரமைப்பு செய்யவேண்டுமென சுமையின்றி கற்றல் பற்றிய யஷ்பால் அறிக்கை வலியுறுத்தியுள்ளது. கிராமப் புறங்களில் மிக அதிகமான குழந்தைகள், குறிப்பாக பொருளாதார சமூக நீதியில் பின்தங்கியுள்ள குழந்தைகள், தேர்ச்சிபெறாமல் இருப்பதை ஆய்ந்து தேர்வு மற்றும் மதிப்பீட்டு முறையில் முழுமையாக மாற்றம் செய்யப்பட வேண்டும். மிகவும் வெளிப்படையானதாக இந்தியத் தேர்வு முறை மாற்றப்பட வேண்டியது அவசியம் ஆகும்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate