பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தேசிய அக்கறைகளும், கல்வியும்

கல்விக்குப் புனராக்கமும், புத்தாக்கமும் தரவும், அக்கல்வியின் வாயிலாகத் தேசிய அக்கறைகளைப் பேணி பல நலன்களைச் செப்பம் செய்து கொள்ளவும் திட்டங்கள் தீட்டப்பட்டன. அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

முன்னுரை

இந்தியா விடுதலை பெற்று சுதந்திரமும் (Independent) சமயச்சார்பின்மையும் கொண்ட (Secular), சமதர்ம (Socialist) கோட்பாட்டைப்பின்பற்றும் இறையாண்மைக் (Sovereign) குடியரசாக மலர்ந்தது. சுதந்திர உணர்வுடன் பாரத சமுதாயம் பல்திற வளர் மாற்றங்களைக் கண்டது. கல்விக்குப் புனராக்கமும், புத்தாக்கமும் தரவும், அக்கல்வியின் வாயிலாகத் தேசிய அக்கறைகளைப் பேணி பல நலன்களைச் செப்பம் செய்து கொள்ளவும் திட்டங்கள் தீட்டப்பட்டன.

வாழும் வகையை, வாழும் முறையை, வாழ்க்கையில் பிடிப்பை, பற்றைப், பண்பாட்டைப் படிப்பிப்பதாகக் கல்வி அமைந்திட வழிவகைகள் செய்யப்பட்டன. கல்விக்கு பொருளியல் தற்சார்பும் தன்னிறைவும் மட்டும் நோக்கமல்ல. உண்மை, நேர்மை, அருள் உள்ளம் ஆன்ம மலர்ச்சி முதலியவற்றிற்கு மக்களைப் பயிற்றுவிக்கும் இலட்சிய நோக்குடையதாகக் கல்விச் சீர்த்திருத்தங்கள் அமைந்தன. மக்களாட்சி முறையில் குடிமக்களுக்கு அறிவும், பயிற்சியும் பற்றுறுதியும் வளர்ப்பது முதன்மை நோக்கமாகும். ஒவ்வொரு குழந்தையும் மக்களாட்சி முறையில் உயர்ந்த கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்திடவும், எல்லார்க்கும் எல்லா உரிமைகளையும் நிறைவேற்றித் தரவும், கடமைத் திணவு, உரிமைக் காப்பு முதலிய விழுமிய மக்களாட்சிப் பெற்றிமைகள் மாணவர்களிடம் பூக்கவும் ஆவன செய்தவதாய் அமையுமாறும் கல்வி புகட்டப்பட்டது.

தேசத்தின் எதிர்காலத்தில் அக்கறை கொள்ளவும், தம்முடைய அடிப்படையான உரிமைகளையும், கடமைகளையும் புரிந்து கொண்டு பின்பற்றவும், ஒவ்வொரு குடிமகனையும் சமமாக நடத்தவும், நம்முடைய பண்பாட்டுக் கூறுகளைப் பேணி மதிக்கவும், தேச ஒருமைப்பாட்டை வளர்க்கவும், சமதர்ம சமுதாயத்தைப் போற்றிப் பாதுகாக்கவும் ஏற்ற கல்வி திட்டமிடப்பட்டது. விட்டுக் கொடுத்து வாழவும், தொழில்திறமையைக் குழந்தைகள் பெறவும், பெண்களின் திறன்களுக்கு ஆற்றலூட்டம் தந்து மேம்படுத்தி கல்வியால் சமவாய்ப்புக்கள் பெறச் செய்யவும், சிறப்புத் தேவையுள்ள குழந்தைகள், வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட பிரிவினர் (diasadvantageous group) கல்வி வாய்ப்புக்களைப் பெறவும் பன்னாட்டு உணர்வை வளர்க்கவும், சுற்றுச் சூழல் கல்வியைப் புரிந்து, உணர்ந்து சூழலைக் காக்கவும் திறனை வளர்த்துக் கொள்ளுமாறு செய்யவும், குழந்தை உரிமைகள், மனித உரிமைகளை உணர்ந்து போற்றவும், குழந்தைகளை தேசத்தின் மீது அக்கறை கொள்ளச் செய்யவும், கல்வி திட்டமிடப்பட்டது.

சமயச்சார்பின்மை

நம் தாய்நாடு சமதர்ம, இறையாண்மையுடைய சமயச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு ஆகும். சமயச்சார்ப்பின்மையின் சிறப்புக் கூறுகளாக பின்வருவனவற்றைக் கூறலாம்.

 • நாட்டின் குடிமக்களும் ஆட்சியாளர்களும் தத்தம் சமயத்தைப் பின்பற்றியொழுக முழு உரிமை பெற்றவர்கள்.
 • தாம் சார்ந்துள்ள சமயம் காரணமாக ஆட்சியாளர்கள் மக்களிடையே வேற்றுமை பாராட்டலாகாது.
 • சமயத்தின் அடிப்படையில் நாட்டின் பொதுச் சட்டங்களை இயற்றுதல் கூடாது.
 • ஒரு குறிப்பிட்ட சமயத்தின் வழிபாடுகள், தத்துவக் கோட்பாடுகள் நெறிமுறைகள் ஆகியவற்றை அரசு தழுவி முன் நின்று பிற மதத்தைச் சார்ந்தவர்களை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்துதல் கூடாது.
 • பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் எந்த ஒரு மதத்தின் மீதும் நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ, சட்டம் மூலமாகவோ, தாக்கம் ஏற்படுத்துவது மூலமாகவோ அல்லது வற்புறுத்துதல் மூலமாகவோ அரசின் தலையீடு இருக்கக் கூடாது.
 • வாய்ப்புகள் அளித்தல், அரசுப்பங்கு அளித்தல் ஆகியவற்றில் அரசு எல்லா சமயத்தினருக்கும் ஒத்த உரிமைகளை வழங்க வேண்டும்.
 • எந்த ஒரு சமயத்தினரும் தத்தம் சமயக் கோட்பாடுகள், தத்துவக் கோட்பாடுகள், கருத்துக்கள், வழிபாடுகள், சமயச் சடங்குகள் ஒழுக்க நியதிகள் ஆகியவற்றைப் பின்பற்றுவதில் அரசின் குறுக்கீடு ஒரு போதும் இருக்கக் கூடாது. ஆயினும் நாட்டின் பொதுச் சட்டம் ஒழுங்கு முதலியன மீறப்படும் போது, அவற்றை நிலைநாட்ட அரசுக்கு முழு உரிமை உண்டு.
 • அரசுக்கென தனியே வழிபாட்டு முறைகள் ஏதும் இல்லை.

சமயச்சார்பின்மை என்ற சொல்லிற்கு நமது முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர்.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களின் கூற்றுப்படி சமயச்சார்பின்மை என்பதற்குப் பொருள் சமயங்கள் கூடாது என்பதன்று. நாம் எல்லாக் கோட்பாடுகளையும் மதங்களையும் மிகவும் மதிக்கின்றோம் என்பதே ஆகும். மகாத்மா காந்தியும், மற்ற சமயக்கோட்பாடுகளையும் என்னுடைய சமயக்கோட்பாடுகள் போன்றே மதிக்கிறேன் என சமயச்சார்பின்மையை வலியுறுத்திக் கூறுகிறார். மேலும் நாம் ஏற்றுக் கொண்டுள்ள சமயச் சார்பின்மை என்பது சமயத்தை அறவே புறக்கணிக்க வேண்டுமென்பது இல்லை ஆனால் அனைத்து சமயங்களையும் மதிக்கிறோம் என்பதாகும்.

கல்வி ஒரு மனிதனைச் சுதந்திரமான சிந்தனையாளனாகவும், திறந்த மனமுடையவனாகவும் வளரச் செய்கிறது. பகுத்தறியும் தன்மை என்பது மதத்திற்கு எதிரானதாக இருத்தல் கூடாது. சரியா தவறா என்று ஆராய்ந்து பார்க்க இயலாத மத உண்மைகளை நம்பள்ளிகளில் கற்பிக்கக் கூடாது. அனைத்து மதங்களிலும் அடங்கி இருக்கும் நல்ல பண்பு நலன்களை மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டுவது அவசியம்.

அனைத்து மதங்களையும் சமமாகப் பார்க்கும் தன்மையான ‘சமய நடுநிலைமையை’ மாணவர்களிடையே வளர்த்தல் வேண்டும். மாணவர்கள் ஒரு பக்கமே சார்ந்த சார்பெண்ணங்களைக் கொண்டிருத்தல் கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட பாட இணைச் செயல்களின் வாயிலாக மாணவர்களின் சமயப்பற்றை நெறிப்படுத்தவியலும். இன்றைய நிலையில் இந்தியாவில் சமய நடுநிலமையே மிகவும் அவசியமானதாகும்.

சமயச்சார்பின்மை ஐந்து முக்கியப் பண்புகளை வலிவுயுறுத்துகிறது. அவையாவன அன்பு, உண்மை, சகிப்புத்தன்மை, அமைதி பிறரை மதிப்புடன் நடத்தும் பழக்கம் ஆகியனவாகும். சமயச் சார்பற்ற ஆட்சிமுறையை ஏற்றுக் கொண்ட நம் நாட்டில் எல்லா மதங்களையும், அவற்றின் நற்பண்புகளையும் எடுத்துரைக்கலாம். மேலும் அவற்றின் நல்ல அம்சங்களையெல்லாம் தெரிந்து கொண்டு அவற்றைப் பின்பற்றலாம்.

கல்வியும், தேசிய ஒருமைப்பாடும்

சாதி, சமூகம், சமயம், மொழி, நாடு ஆகியவற்றில் வேறுபட்டு இருப்பினும், அனைவரும் ஒன்று சமம் என்ற உணர்வும், தங்கள் இன்ப துன்பங்கள் மகிழ்ச்சி ஆகியவற்றைப் பரிமாறிக் கொள்பவர்களாகவும் தேச நலத்தில் அக்கறை உள்ளவர்களாகவும் இருப்பின் அந்நாடு எளிதில் ஒன்றுபட்டு விடும். இங்கு வாழும் மக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்பவராகவும், சகிப்புத் தன்மை உள்ளவர்களாகவும், அந்நாட்டு மக்களின் பண்பாடு, கலாச்சாராம், வாழும் முறை, மரபுகள் ஆகியவற்றை மதிப்பவர்களாகவும் இருப்பார்கள்; பொதுவான தேசியக் கொள்கைகள், நோக்கங்கள், அக்கறைகள் மற்றும் தேசத்தின் எதிர் காலத்தின் மீது நம்பிக்கையும் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பர்.

“குறுகிய வட்டம், குறுகிய எண்ணமோ குறிப்பிட்ட மாநிலம், சாதி அல்லது சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற எண்ணங்களோ இல்லாமல் பொதுவான குறிக்கோளை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை உணர வேண்டும். நேராக நிமிர்ந்து நின்று வானத்தை உற்று நோக்கி, நம் காலை முழுமையாகவும், ஆணித்தரமாகவும் நிலத்தில் ஊன்றி, இந்திய மக்களுக்கு ஒற்றுமையைக் கொண்டு வர முயற்சிகள் எடுக்க வேண்டும்’ எனப் பண்டித நேரு அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு என்பதன் பொருள்

“சமுதாயத்தின், சிறிய பெரியகுழுக்கள் இடையே உள்ள உணர்வுகளைத்தாண்டி, தன்னை மையமாகக் கொண்ட குறுகிய செயல்களை மறந்து, தேச ஒற்றுமையையும், கூட்டுறவு மனப்பான்மையையும் கொண்டு பணிகளை மேற்கொண்டு தேசத்தை வளர்ச்சியுறச் செய்வதையே தேசிய ஒருமைப்பாடு குறிக்கும்.

இந்தியக் கல்விக் குழு (1964-66)-வின் பார்வையில், தேசிய ஒருமைப்பாடு என்பது:

(i) தேசத்தின் எதிர்காலத்தில் நம்பிக்கை

(ii) மக்களின் வாழ்க்கைத் தரத்தை தொடர்ச்சியாக அதிகரிப்பது.

(iii) வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பது.

(iv) சமூக, பொருளாதார, அரசியல் வளர்ச்சிக்குச் சமமான வாய்ப்புக்கள் அளிப்பது.

(v) குடிமகன் என்ற முறையில் கடமையைச் செய்தல்

(vi) பாரபட்சமற்ற, நல்ல நிர்வாகம்

(vii) வேறுபட்ட சமூகத்தினரின் பண்பாட்டு மரபுகளை மதித்தல் மற்றும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல்.

தேச ஒருமைப்பாட்டின் முக்கியத்துவம்

அனைவரும் ஒன்றே என்ற உணர்வு, ஒரே நாடு என்ற எண்ணம் தேச வளர்ச்சிக்கு முக்கியம். நமது மக்களாட்சி முறையைச் செம்மையாக நிறைவேற்றுவதற்கு தேசிய ஒருமைப்பாடு இன்றியமையாத ஒன்றாகும் என சி.டி. தேஷ்முக் கூறியுள்ளார்.

“அரசியல் ஒருமைப்பாடு என்பதை ஒரு வரம்பிற்குள்தான் நாம் அடைந்திருக்கிறோம். ஆனால் ஆழமான ஒருமைப்பாட்டை இந்திய மக்களின் உணர்ச்சி, ஒருமைப்பாட்டை (Emotional Integration) அடைய-இறுக்கமான இணைப்பை ஏற்படுத்தி, வலிமைமிக்க ஒன்றுபட்ட தேசத்தை உருவாக்கி அதே சமயத்தில் வேறுபாடுகளையும் (Plurality) பாதுகாத்துப் பராமரித்து வருதல் வேண்டும்” என முன்னாள் பிரதமர் நேரு மிகத் தெளிவான ஆலோசனை வழங்கியுள்ளார்.

“தேச ஒற்றுமைக்காக மக்களின் உணர்வுகளை ஒன்று திரட்டுவதற்குத் தேவையான நடைமுறைகளை ஆலோசித்து நடவடிக்கைகளை எடுக்காவிடில், நம் மக்களின் எண்ணங்களில் வேண்டாத தன்மைகள் புகுந்துவிடும்” என நீதிபதி மகாஜன் எச்சரித்துள்ளார்.

தேச ஒற்றுமையை வளர்ப்பதில் காணப்படும் கடினத் தன்மைகள்

 • சமுதாயப் பிரிவினைகள்
 • சாதி முறைகள்
 • சமய வேற்றுமைகள்
 • குறிப்பிட்ட மாநிலத்தவர் என்ற உணர்வு
 • வட்டார எண்ணங்கள்
 • மொழிப்பாகுபாடுகள்
 • பொருளாதார ஏற்றத்தாழ்வு
 • தவறான கல்விக் கொள்கை
 • சமூக வேறுபாடுகள்
 • திடமான தலைமையின்மை

தேச ஒற்றுமையை வளர்ப்பதற்கான ஆலோசனைகள்

கலைத்திட்டத்தை மறுசீரமைப்பு செய்தல், பாட இணைச் செயல்களை வகுத்தளித்தல், பாடப் புத்தகங்கள் தயாரிப்பில் சீரமைப்பு, சமூக அறிவியல் பாடங்களைக் கற்பித்தலில் சிறப்புக் கவனம், பள்ளிக் குழந்தைகளுக்குச் சீருடை, தேசிய விழாக்கள் கொண்டாடுதல், உறுதி மொழி எடுத்தல், சிறப்புக் கூட்டங்கள், சிறப்பு உரைகள் ஏற்பாடு செய்தல், கருத்துப்பரிமாற்றம் / கல்விச்சுற்றுலா நாடகங்களின் வழிக் கருத்தேற்றம், பிற மாநிலங்களைப் பற்றிய அடிப்படை அறிவை வளர்த்தல், சமய மற்றும் ஒழுக்கக் கல்வி ஆசிரியர்கள், கல்விச் சுற்றுலா சமூக மற்றும் தேசப் பணி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல், சமுதாய வளர்ச்சி நிகழ்வுகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபாடுமிக்க பங்கேற்பு, சிறப்பான தேசியக் கல்விக் கொள்கை, தேச ஒருமைப்பாட்டை வளர்க்கும் பயிலரங்குகள் அமைத்தல், மாநிலங்களிடையே பேனா நண்பர்களை உருவாக்குதல், நாட்டுணர்வுமிக்க ஆசிரியர்களின் பங்கு அகில இந்திய இளைஞர்கள் குழுமம் உருவாக்குதல், அகில இந்திய அளவில் பரிசுகள் வழங்குதல். பாடத்திலுள்ள கருத்துக்களை மட்டும் போதிப்பதோடு விட்டுவிடாமல் தேச நலனும், ஒருமைப்பாடும் மாணவர்களின் மனதில் பதியும் வண்ணம், பாடத்தினிடையே இருக்கும் கருத்துக்களோடு ஒருமைப்பாட்டுக் கருத்துக்களையும் இணைத்தும் பிணைத்தும் தகுந்த உத்தியைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்றல் அனுபவங்களை வழங்குதல்.

தேசமுன்னேற்றத்திற்கு தேசிய ஒருமைப்பாடு மிகவும் அவசியமாகும். தேசிய ஒருமைப்பாட்டைக் கல்வியால் தான் வருங்காலத் தலைமுறையினரிடம் வளர்க்க முடியும். ஒற்றுமை, நாட்டுப்பற்று, நாட்டு நலம் பற்றிய உணர்வை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும். குடிமைப் பண்புகளையும், மக்களாட்சி விழுமியங்களையும் மாணவர்களிடம் வளர்ப்பது இன்றியமையாததாகும்.

மகளிரின் ஆற்றலூட்டம் (Women Empowerment) கல்வி பெற்ற பெண்கள் ஆற்றலூட்டம் பெற்றவர்களாகவும், செயல் முடுக்கம் வாய்ந்தவர்களாகவும், ஆக்கத்திறன் செறிந்தவர்களாகவும் ஆக்கப்பட்டு நாடு செழிக்க, நன்மைகள் கொழிக்கப் பல பணிகளையும் ஆற்றிவருவதும் கண்கூடு. “ஒற்றைக் குடும்பம் தனிலே பொருள் ஒங்க வளர்ப்பவன் தந்தை. மற்றைக் கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை” என்ற கவிதைக்கிணங்கவும், "எல்லா பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" என்ற திரைக்கவிதைக்கு இணங்கவும் இல்லம் அமைப்பதிலும், பிள்ளை வளர்ப்பதிலும் பெரும் பங்கு வகிப்பவர்கள் பெண்களே, எனவே பெண்களுக்களிக்கப்படும் கல்வியே பெரும்பயன் விளைவிக்கும் கல்வி ஆகும்.

மகளிர் முன்னேற்றம்

“பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்“ என்பது காந்தியடிகளின் கூற்று. உரிமை என்பது அனைவருக்கும் பொதுவானது. பெண்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள். பழங்காலந் தொட்டே பெண்களை பாரதம் நன்கு போற்றியும் மதித்தும் வந்துள்ளதெனக் காவியங்களும் இலக்கியங்களும் நமக்கு எடுத்தியம்புகின்றன. ஒரு சமூகத்தில் பெண்கள் பெற்றுள்ள தகுதிநிலையிலிருந்து அச்சமூகத்தின் நாகரீகத்தன்மையை புரிந்து கொள்ள முடியும்.

எந்த நாடு பெண்களை சமமாகக் கருதுகிறதோ அந்த நாடுதான் விரைந்து முன்னேறும் என்பது விவேகானந்தரின் வலியுறுத்தலாகும். நீண்டகாலப் போராட்டத்திற்குப் பிறகே மேலைநாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. ஆனால், புராண இதிகாச காலந்தொட்டே இப்பாரத பூமி கற்றறிந்த பெண்களை அரசுக்கட்டிலில் வீற்றிருக்கச் செய்தும், அவையில் தோன்றி கவிபாடச் செய்தும், அறங்கூறச் செய்தும் அவர்தம் ஆற்றலையும், ஆளுந்திறத்தையும் அரங்கேற்றிய பெண்ணிய நியாயமும், ஞானமும் தழைத்த நாடாகும்.

சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனப் பிரகடணத்தின்போதே பெண் பிரதிநிதித்துவத் தகுதியையும், வாக்குரிமையும் வழங்கிப்பூரிக்கும் அதிநாகரீக நாடாகும் என்பது குறித்து இந்தியர் யாவரும் பெருமை கொள்ளலாம். இருப்பினும் நம் நாட்டில் பெண்களின் நிலை கல்வியால் மேலும் மாண்புற வேண்டும். எனவே, ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு சம உரிமைகளும், வாய்ப்புகளும் அளிக்கப்படும் வகையில் பெண் கல்விக்குப் போதிய சிறப்புக் கவனம் செலுத்திநாட்டு நலம் பேண வேண்டும்.

பெண்ணுரிமை

பெண்கள் அனைவரும் தேர்ந்த, சரிநிகர்த்த மனிதர்களே என்பதனால் பெண்ணுரிமைகள் அனைத்தும் மனித உரிமைகளே, வேறல்ல. 1993-ஆம் ஆண்டு ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் நடைபெற்ற பன்னாட்டு மனித உரிமைகள் மாநாடு பெண்ணுரிமைகள் மனித உரிமைகளே என்பதைப் பறைசாற்றி உறுதிசெய்தது.

காந்தியடிகளின் பார்வையில் பெண்கள் பெண்களை ஆண்களைப் போன்றே எல்லாத் திறன்களும் நிறைந்தும் விஞ்சியும் நிற்கும் சக்தியின் உருவங்களாகவும், அறிவாற்றல் மிக்கவர்களாகவும் கருதியதால் பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் சமமான உரிமைகளும் சமமான வாய்ப்புகளும், வழங்கப்பட வேண்டுமெனப் பாடுபட்டார். பெண்களுக்கெதிராக இழைக்கப்படும் அநீதிகளைச் சட்ட ரீதியாகவும், மனமாற்றத்தின் வாயிலாகவும் நீக்க மகாத்மா காந்தி பெரிதும் விழைந்தார்.

மகளிர் கல்விக்கான தேசியக் குழு (1964)

1964 ஆம் ஆண்டு மைய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பெண்கள் கல்விக்கான தேசியக்குழுவில் அதன் தலைவர் முதலாய 27 உறுப்பினர்கள் செயல்படுகின்றனர். இக்குழுவின் முக்கியப் பணிகளாவன:

 • பெண்களுக்கு கல்வியளிப்பதில் ஏற்படும் பிரச்சினைகளை மைய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லுதல்.
 • பெண்களுக்குக் கல்வியளிப்பதில் அதன் முக்கியத்துவம், நோக்கங்கள், வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் போன்றவற்றிற்குத் தேவையான கொள்கைகளை வகுப்பதற்கு அரசுக்குப் பரிந்துரைத்தல்
 • தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
 • பெண்கல்வியின் அவசியத்தை சமுதாயம் உணர்வதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் வழிவகை மேற்கொள்ளல்.
 • நாட்டில் பெண் கல்வியின் அவசியத்தை அறியவும், மேலும் மேம்படச் செய்யவும் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளல்;
 • கருத்தரங்கங்கள் நடத்தவும் ஆவன செய்தல்.
 • பெண்கல்வியின் வளர்ச்சியை குறிப்பிட்ட கால இடைவெளியில் மதிப்பீடு செய்தல்.

பெண்களுக்கான உரிமைகள்

சமத்துவ உரிமை

ஐக்கிய நாடுகளின் உறுதிமொழியில் கூறப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும், சுதந்திரங்களும், இனம், நிறம், மொழி, மதம், பால் அரசியல் அல்லது பிற தகுதிகள் போன்றவற்றால் எவ்வித பாரபட்சமுமின்றி ஒவ்வொருவருக்கும் உண்டு.

உடல்நலம் பேணும் உரிமை

பெண்கள் ஒவ்வொருவரும் நோயுறுதல், வேலை செய்ய முடியாமை, விதவை நிலை, முதுமையடைதல் மற்றும் அவருடைய கட்டுப்பாட்டை மீறிய சூழ்நிலைகள் உருவாகும் போது எந்நிலையிலும் பாதிப்படையாமல் பாதுகாப்புப் பெறும் உரிமை பெண்களுக்கு உண்டு (பிரிவு 25. 1).

பாதுகாப்புடன் வாழ உரிமை

இளமைப் பருவமும், தாய்மையும், தனிக்கவனமும் தகுந்த உதவியும் பெறத் தகுதி பெற்றவை ஆகும். திருமணத்தின் மூலமோ அல்லது திருமணம் இன்றியோ பிறக்கின்ற எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே விதமான சமூகப்பாதுகாப்பு அளிக்கப்படும்.

ஆண், பெண் சம ஊதியம் பெற உரிமை

ஆண், பெண் என எவ்வித வேற்றுமையுமின்றி ஒரே வேலைக்கு ஒரே ஊதியம் பெற ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிமை உண்டு (பிரிவு 23.2)

விரும்பியவரைத் திருமணம் செய்து கொள்ள உரிமை

பெண்கள் தான் விரும்பியவரை திருமணம் செய்து கொள்ளவும், திருமணம் செய்து கொள்ளப் போகிற பெண்களின் சுதந்திரமானதும் முழுமையானதுமான சம்மதத்தின் பேரில்தான் திருமண வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்.

மகளிர் மீது காட்டப்படும் அனைத்து வகையிலான பாரபட்சங்களின் ஒழிப்பு உடன் படிக்கை

ஆண், பெண் இருபாலரும் சமமானவர்களே ஆவர். இவ்விரு பாலரிடையே உயர்ந்தவர், தாழ்ந்தவர் எனக் காணப்படும் பேதங்களையும், ஆண், பெண் எனும் இருபாலரின் மீதும் சமூகம் கொண்டுள்ள சார்பெண்ணங்களையும் மாற்றுவதற்கான நடைமுறைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மேற்கண்ட பிரகடனம் கூறுகிறது. (பிரிவு 5.1)

மகளிர் மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் அவர்கள் மீதான சுரண்டலுக்கு எதிராகவும் அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைளையும் அரசுகள் மேற்கொள்ளுதல் வேண்டும். (பிரிவு - 2)

சமூக, பொருளாதார வாழ்வில் பெண்களும், ஆண்களும் சமஉரிமை பெற்றவர்கள் ஆவார்கள். இந்நிலையில் பெண்களைப் பாகுபடுத்துகின்ற முறைகள் அனைத்தையும் போக்குவதற்கு அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். (பிரிவு 8)

கல்வி பெறுவதில் ஆண்களோடு, பெண்களும் சமஉரிமை பெறுவதற்கு எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுத்தல் வேண்டும். அனைத்துக் கல்வி நிலைகளிலும் அதாவது, ஆரம்பக்கல்வி, உயர்நிலைக்கல்வி, மேல்நிலைக்கல்வி, தொழிற்கல்வி மற்றும் உயர்கல்வி பெறுவதிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைளாவன:

பாடத்திட்டம், தேர்வு முறைகள், பள்ளிவளாகம், தரம் போன்ற அனைத்திலும் பெண்களுக்குப் பாகுபாடு காட்டுதல் கூடாது கல்வி பெறுவதற்கான உதவித்தொகை வழங்குவதில் பால்பாகுபாடு காட்டப்படுதல் கூடாது.

பள்ளியில் இடையில் நின்றுவிடும் பெண் குழந்தைகளின் மீது தனிக்கவனம் செலுத்தி, இடைநிற்போர் எண்ணிக்கையைக் குறைக்கத் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

விளையாட்டுத் துறையிலும் பெண்களுக்கு சமவாய்ப்புரிமை தரப்படுதல் வேண்டும். பெண்களின் குடும்ப நலன், ஆரோக்கிய வாழ்வைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உரிய ஆலோசனைகளையும், செய்திகளையும் தர முயற்சி மேற்கொள்ளுதல் வேண்டும். (பிரிவு 10)

பெண்களின் இன்றையநிலை

எழுத்தறிவின்மை, தொன்று தொட்டு வரும் நமது மூடப்பழக்க வழக்கங்கள், சமூகத்தில் பெண்களுக்கு விதிக்கப்பட்டு வந்த பற்பல தடைகள் ஆகியவற்றின் விளைவாகப் பெண்களின் வளர்ச்சி பெரிதும் பாதிப்படைந்துள்ளது. சட்டத்திட்டங்கள், பெண்களுக்கு சலுகைகளின் வாயிலாகப் பாதுகாப்பினைத் தந்தாலும் அவற்றைப்பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பெண்களால் அச்சலுகைகளை முழுமையாக அனுபவிக்க இயலவில்லை.

பெண்களுக்கு அரசு வழங்கியுள்ள காப்புரிமைச் சட்டங்கள்

 • வரதட்சணைத் தடுப்புச் சட்டம் - 1961.
 • விபச்சாரத் தடுப்புச் சட்டம் - 1956
 • பால்யத் திருமணத் தடுப்புச் சட்டங்கள்
 • மக்கள் குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம்
 • வன் கொடுமைத் தடுப்புச் சட்டம் - 1989

பெண்ணுரிமை மீறல்கள்

பெண்களின் உரிமையை நிலைநாட்டப் பன்னாட்டு அளவிலும் தேசிய அளவிலும் பல சட்டங்கள் இயற்றப்பட்ட போதிலும் உலகநாடுகள் அனைத்திலும் இன்றும் சதி, பால்ய விவாகம் (குழந்தைத் திருமணம்) பெண்சிசுக்கொலை, பலதாரமணம், வரதட்சணைக் கொடுமை, கட்டாயத் திருமணம், விதவை மறுமணத்திற்கு எதிர்ப்பு, பாலியல் பலாத்காரம், பெண்ணடிமை, ஆணாதிக்கம், கட்டாயக் கருக்கலைப்பு போன்றவை ஆங்காங்கே பரவலாக நடைபெற்றுக்கொண்டு வருகின்றன.

மகளிர் ஆண்டுகளைக் கொண்டாடுதல்

சர்வதேச மகளிர் ஆண்டு

பெண்கள் எவ்வித தாழ்வுகளுக்கும் உள்ளாகக் கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு 1975 ஆம் ஆண்டினை ஐக்கியநாடுகள் பொதுச்சபை சர்வதேசப் பெண்கள் ஆண்டாகப் பிரகடனம் செய்தது.

பன்னாட்டுப் பெண்கள் ஆற்றல் ஊட்ட ஆண்டு

பெண்களின் பொருளாதார மேம்பாடு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மிகவும் மேம்படுத்தும் என்பதால் 2001-ம் ஆண்டினை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை “பெண்கள் ஆற்றலூட்ட ஆண்டாக” அறிவித்தது.

இதனையொட்டிப் பெண்கள் நலனுக்கான பணி இல்லங்கள் ஆசிரியர்ப் பயிற்சிப் படிப்பு பணிபுரியும் பெண்கள் தங்கும் இல்லங்கள், மகளிர்க்கென மேம்பாட்டு ஆணையம், பெண்கள் வாழ்க்கைத்தரம் மேம்படுவதற்கு தொழிற்பயிற்சித்திட்டம், விதவை மறுமணம், ஏழ்மை நிலையிலுள்ளவர்களுக்கு தையல் இயந்திரம் வழங்குதல் போன்ற அரிய பல திட்டங்களை அரசும், சார்ந்த தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து செய்து வருவதால் தற்போது பெண்களின் நிலை மேம்பட்டு வருகிறது என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை. பெண்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வதற்குக் காரணம் அவர்கள் எழுத்தறிவின்மையும், அறியாமையும், வறுமையுமே ஆகும். எனவே, இம் மூன்றையும் போக்குவதற்கு மைய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியில் ஆராய்ச்சி மையம்

3.08
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top