பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / இந்தியக் கல்விமுறை / பள்ளி மேலாண்மையின் குறிக்கோள்களும் நோக்கங்களும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பள்ளி மேலாண்மையின் குறிக்கோள்களும் நோக்கங்களும்

பள்ளி மேலாண்மையின் குறிக்கோள்களும் நோக்கங்களும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

பள்ளியின் நோக்கங்களையும் குறிக்கோள்களையும் சமுதாயம் நிர்ணயம் செய்கின்றது. பள்ளி மேலாண்மை, சமுதாயம் வரையறுத்த குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்குரிய பங்கு பணிகளை ஆற்ற வேண்டும். பள்ளிகளில் நிறைவேற்ற வேண்டிய செயல்களையும், நிகழ்வுகளையும் அறிமுகப்படுத்தி கல்வியின் தேவைகளைப் பின்வாங்காமல் செய்ய வேண்டும்.

பள்ளியில் வளங்கள்

பள்ளியில் வளங்கள் பயனற்ற வகையில் வீணாவதைக் களைய, உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைவுமிக்க பயன்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

சிக்கல்களை எளிதாக்க கால உணர்வு

கல்வித் தத்துவங்கள், கல்வி உளவியல், கல்வி நுட்பங்கள், கல்வி நோக்கங்கள், கலைத்திட்ட மற்றும் கலைத் திட்ட இணைச் செயல்கள், ஒழுங்கு, கட்டுப்பாடு, பணியாளர்கள் நியமனம், சேர்க்கை, வருகை, சான்றளித்தல், கோரிக்கையேற்றல், நிதிஆளுதல் கால அட்டவணை, விதிகள், வகுப்பறைக் கற்பித்தல், விளையாட்டு, வழிகாட்டல், மேற்பார்வை, தளவாடப்பொருட்கள், மக்களாட்சி முறையில் நிகழ்வுகள், மதிப்பீடு போன்ற பல பணிகள் பள்ளியில் உள்ளன. இவற்றை ஆலோசித்து, தகவு கருதி பகிர்ந்தளித்து எளிதாக்கிக் காலம் தாழாது விரும்பத்தக்க, முடிவுகளைப் பெற மேலாண்மை உதவுகின்றது.

ஆராய்ச்சிகள்

பள்ளி மேலாண்மையைச் சீரமைத்துக் கொள்ளவும், சரியான திசையில் செல்கிறோமா என்பதை உறுதிசெய்துகொள்ளவும், கல்வி ஆய்வுகள், ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன. காலம், உழைப்பு, வளங்கள், நிதி முதலியவற்றின் விரயத்தைத் தவிர்க்க, மேலாண்மை செய்பவருக்கு ஆராய்ச்சி மனப்பான்மை தேவை. அனைவருக்கும் கல்வி, இருபாலர் கல்வி, தொழிற் கல்வி, வேறுபட்ட பாடங்கள், கலைத்திட்ட நிறைவேற்றம், ஏற்புடைமை, கள நிலவரம், பொதுக்கருத்து, வளர்ச்சி, தர மேம்பாடு, மனித உறவுகள், இடைவினைகள், பரவலாக்கம் ஆகிய பல்வேறுபட்ட ஆய்வுகளை மேற் கொண்டு, அவற்றை நடைமுறைப்படுத்த பள்ளி மேலாண்மை முன்வர வேண்டும்.

"அறிஞர்களின் அறிவுரைகளுக்கேற்ப பள்ளியை அமைக்க, கல்வியாளர்களுக்குப் பயற்சியளிக்க, பார்வையை விரிவாக்க, மனதைப் பண்படுத்த, நடத்தையை ஒழுங்குபடுத்த மற்றும் வலிமையாக்க, அழகுணர்வு ஆர்வத்தை வளர்க்க உடலைத் திடப்படுத்த, உடல் நலத்தைச் சீரமைக்க, கடமையை அறிவுறுத்த, பள்ளியை மேம்படுத்த பள்ளி மேலாண்மை அவசியம்” எனப் பி.சி.ரென், (P.C. Wren) மேலாண்மையின் நோக்கங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

பள்ளி மேலாண்மைக் கோட்பாடுகள்

கல்வித்தத்துவங்களுடன் ஒத்துப்போதல்

கல்வித்தத்துவங்களின் அடிப்படையில் கல்வி நோக்கங்கள் வரையறுக்கப்படுகின்றன சமுதாயத்தின் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ற கல்வித்தத்துவங்களை, ஒவ்வொரு நாடும் உருவாக்கி வருகின்றன. உலக அரங்கில் தன்னாடு பின்தங்கவோ, தொய்வடையவோ கூடாதென உலகக்கல்வித் தத்துவக் கோட்பாடுகளை ஒவ்வொரு நாடும் குறித்த கால இடைவெளியில் புனரமைப்பும் தகவமைப்பும் செய்து வருகின்றன. நாட்டின் இத்தகு நோக்கங்கள் பள்ளிகளில், வகுப்பறைகளில் நாளும் நிறைவேற்றப்பட வேண்டும்.

மக்களாட்சி அணுகுமுறை

பள்ளிக் குழந்தைகளை, நாளைய இந்தியக் குடிமக்களாக உருவாக்க உரிய பயிற்சியை அளிக்கும் முகவாண்மையாகப் பள்ளிகள் செயல்படுகின்றன. பள்ளிதன் அன்றாடச் செயல்களில் மக்களாட்சி முறைகளைப் பின்பற்றுவதன் வாயிலாகக் குழந்தைகளிடையே அப்பண்புகளை உருவாக்க முடியும். எல்லா முடிவுகளும் கூட்டு மனப்பான்மையில் மற்றவர்களையும் அனுசரித்து எடுக்கப்பட வேண்டும். தலைமையுடன் ஆசிரியர், மாணவர், பெற்றோர் கலந்து பேசி பள்ளியின் செயல்பாடுகளை, பொதுநலன் கருதிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் பின்பற்ற வேண்டும். பயனாளிகளின் கருத்துக்களையும், உணரப்பட்ட தேவைகளையும் அறிந்து திரட்டி, உகந்தவாறு பிரதிபலிப்பதாகப் பள்ளி நடைமுறைகள் அமைதல் நன்று.

அனைவரும் பங்கேற்றல்

கூட்டுமனப்பான்மையும், இணைந்து செயல்படுதலும் நவீன மேலாண்மையின் உத்திகளாகும். நிறுவனத்தின் வெற்றியில் அனைவரும் பங்கேற்று மிகச் சிறந்த பணியினை நிறுவனத்திற்கு வழங்க முன்வருமாறு மேலாண்மை அமைய வேண்டும். சமுதாயம், மேற்பார்வையாளர், பெற்றோர், ஆசிரியர், மாணவர் மற்றும் அனைவரது சிறந்த பங்களிப்பைப் பெற்று, நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு வழங்குதல் வேண்டும். ஒவ்வொருவருடைய பங்களிப்பிற்கும் உரிய வாய்ப்பையும் வரவேற்பையும் முனைந்து வழங்க வேண்டும்.

தனித்தன்மையை மதித்தல்

தனியாள் வேற்றுமைகள் மதிக்கப்பட வேண்டும். தான் முதன்மையானவர் என்று யாரும் எண்ணுதலோ, பிறரை அதன் காரணமாகக் கட்டளையிடுவதோ கூடாது. ஒவ்வொருவருடைய தனித்தன்மையையும் நிறுவன மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மனிதர்கள் அனைவரும் பலபடித்தானவர்கள்; வெவ்வேறு இயல்புகளும், விருப்பு வெறுப்புகளும் உள்ளவர்கள் என்பதே சமூகவியல் உண்மை. தனித்தன்மை ஆக்கபூர்வமாக மதிக்கப்படும் போது அது அர்ப்பணிப்பு உணர்வாகவும், நிராகரிக்கப்படும் போது எதிரிடையானதாகவும் மாறிவிடக் கூடும் என்பதையும் ஒருக்காலும் மறந்துவிடலாகாது. ஒவ்வொரு குழந்தையின் விருப்பம், ஆற்றல்கள் தனிப்பட்ட தன்மையில் வளரவும் உதவ வேண்டும்.

வேறுபட்ட செயல்களுக்கு முக்கியத்துவம்

வேறுபாடுகள் இயற்கையின் நியதி. வித்தியாசங்கள் தனித்தன்மை, புதுமைகளின் அடிப்படை. ஒருமைப்பாட்டை போலவே பன்மைத்தன்மையும் ஒரு சிறப்புக் கூறே. சமூகப் பன்மைத்தன்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் அலுப்போ, வெறுப்போ பொருளற்றது. அடிப்படையில் நாம் அனைவரும் சமன்பாட்டை விரும்பினாலும், ஒருமைப்பாட்டை நோக்கமாகக் கொண்டாலும் ஆர்வத்தில் வேறுபாடுகளையும், நாட்டத்தில் மாறுபாடுகளையும், சமுதாயத்தில் பன்மைத் தன்மையையும் நாம் நிராகரிக்காமல், அவற்றின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து மேலாண்மை செய்தல் அவசியம்.

நம்பிக்கையான மனப்பாங்கு

உலகைச் சரிவர விளங்கிக் கொள்ள நம்பிக்கையும் அவ நம்பிக்கையும் இரு கண்கள்; இரண்டும் தேவைதான். எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படுவது ஒருவரின் பலவீனம். அதற்காக ஆயுந்தன்மையையும், விழிப்புணர்வையும் இழந்துவிடலாகாது.

"தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்" என வள்ளுவப் பெருந்தகையும் இதனையே ஆய்ந்து கூறியுள்ளார்.

பள்ளி நிர்வாகம், திறமையான செயல்பாடுகளில் மிக முழுமையான நம்பிக்கைக் கொள்ள வேண்டும். சுய மதிப்பீட்டிற்கு முக்கியத்துவம் அளித்து செயல்பாடுகளைச் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த நம்பிக்கையான மனப்பாங்கு உடையவர்களாகத் திகழ வேண்டும்.

ஆசிரியரின் பணி மேம்பாடு

ஆசிரியரின் பணியைப் பள்ளியின் வளர்ச்சிக்கு முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதோடு, அவர்களின் மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் நிர்வாகம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். தங்களுடைய அறிவை தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொள்ள பணியிடைப் பயிற்சி வாயிலாகவும், புதிய எண்ணங்களை, யுக்திகளைக் கருத்தரங்கு, பணிமனை போன்றவற்றில் பிறருடன் பகிர்ந்து கொள்வதன் வாயிலாகவும், தொழில் சார்ந்த திறன்களை நாளும் வளர்த்துக்கொள்ள, ஆசிரியர்களை வல்லுநர்களாக்கிட மேலாண்மை திட்டமிட்டு ஆவன செய்ய வேண்டும்.

பள்ளி - சமுதாயத் தொடர்பு

சமுதாயத்தின் கல்வித்தேவை, விருப்பம், நாட்டம் ஆகியவற்றை நிறைவேற்றிக் கொள்ளவே சமுதாயத்தின் முயற்சியால் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. சமுதாயத்தினரே பள்ளியின் உரிமையாளர்கள். பள்ளிக்கும், சமுதாயத்திற்குமிடையே உள்ளன்புமிக்க செயல் நோக்கமுள்ள உறவை மேம்படுத்துதல் அவசியம். பள்ளியின் செயல்பாடுகளும், முன்னேற்றங்களும், சமுதாயத்தின் மேம்பாட்டுக்காகவே திட்டமிடப்பட வேண்டும். பள்ளி நிர்வாகத்தின் சமுதாயத்தினரை உள்வாங்கி அவர்தம் பிள்ளைகளின் கல்வி நலனை உரிய வழிகாட்டுதலுடனும், சமுதாய ஆதரவுடனும் நிறைவேற்றித்தர வேண்டும். சமுதாய விழிப்புணர்வு, சமுதாயப் பங்கேற்பு, சமுதாய ஒத்துழைப்பு, சமுதாய மேலாண்மை, சமுதாய மதிப்பீடு, சமுதாய உடைமை எனச் சமுதாயத்தைத் தயார்படுத்திக் கல்வித் தன்னாட்சிக்கும் பள்ளி நிர்வாகம் திட்டமிட்டு வழிகோல வேண்டும்.

முடிவுரை

பள்ளியின் வளர்ச்சிக்கும், பணிகள் திறம்படவும், ஒருங்கிணைந்து செயல்படவும் நல்ல பள்ளி நிர்வாகம் தேவை. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடையே நல்ல உறவையும், பொருட்கள், வசதிகள், நிதி, வளங்கள், கட்டிடம், தளவாடப் பொருட்கள் முதலியவற்றிலிருந்து உச்சபயனையும் நல்ல நிர்வாகம் பெற முடியும் என்பது திண்ணம்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம்

3.02127659574
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top