பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / சிறந்த செயல்முறைகள் / படைப்பாற்றல் கல்வி முறை
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

படைப்பாற்றல் கல்வி முறை

படைப்பாற்றல் கல்வி முறை (Active Learning Method) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இரவீந்திரநாத் தாகூரின் கல்வி தத்துவத்தின்படி கல்வியானது, சுதந்திரமான கற்றலைத் தருவதாகவும், படைப்பாற்றலுடன் கூடிய தன் திறனை வெளிப்படுத்துவதாகவும், இயற்கையுடன் இயைந்ததாகவும் இருத்தல் வேண்டும். இக்கூற்றின் அடிப்படையிலேயே, கற்றல் கற்பித்தல் முறைகள் அமைக்கப்பட்டு வகுப்பறை நிகழ்வுகள் நடைபெற, படைப்பாற்றல் கல்வி முறை திட்டமிடப்பட்டுள்ளது.

கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆசிரியரிடம் எழுவதைக் காட்டிலும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் மாணவரிடம் தோன்றுவதே கற்றலுக்கு அடிப்படை – டால்டன் தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு (NCF), 2000 மற்றும் 2005ன் கூற்றுப்படி, அனைத்து மாணாக்கரும் கற்பதற்கு ஆர்வமுடனும், கற்றல் திறன் உள்ளவராகவும் உள்ளனர். கற்றலின் முக்கிய கூறுகளாக பொருள் உணர்தல், கருதுகோள் அமைத்தல், மீள்பார்வை, கருத்து உருவாக்கம் ஆகியவை அமைந்துள்ளன. அனுபவம் வாயிலாக பொருள்களை உருவாக்குதல் மற்றும் வடிவமைத்தல், பரிசோதனை செய்தல், படித்தல், கலந்துரையாடல், கேட்டல், வினவுதல், சிந்தித்தல், கருத்துக்களை உள்வாங்குதல், எழுதுதல், பேசுதல் ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் கற்றலை வெளிப்படுத்துகின்றனர். வகுப்பறைக்குள்ளும், பள்ளிக்கு வெளியேயும் கற்றல் நிகழ வாய்ப்புள்ளது. கற்றலுக்கான ஆயத்த மனப்பான்மையை மாணாக்கரிடையே ஏற்படுத்தினால்தான் கற்றல் நிகழ வாய்ப்பு ஏற்படும்.

'மாணவர்களை ஆசிரியர் உற்று நோக்கக் கற்றுக் கொண்டால் மாணவர்கள் தம்மைத் தாமே கவனிக்க முற்படுவர்' படைப்பாற்றல் கல்வி முறை தமிழக வகுப்பறையில் ஒரு சிறந்த மாற்றத்தையே உருவாக்கியுள்ளது. படைப்பாற்றல் கல்வி, செயல்நிலைசார் கற்றலை (Active Learning) வலியுறுத்துகிறது.

செயல்வழிக்கற்றல், ஆசிரியர் மைய கற்பித்தலில் இருந்து மாணவர் மைய கற்றலுக்கு தொடக்கக்கல்விக் களத்தை மாற்றியுள்ளது எனலாம். ஆசிரியர் பாடப் பொருள்களை வகுப்பறையில் கற்பிப்பது என்பதிலிருந்து மாணவர், மிகுந்த செயல்பாடுகள் மூலம், சுறுசுறுப்பாக, கற்றல் கற்பித்தல் பொருள்களுடன், இயங்கி கற்பது என்ற நிலைக்கு இம்முறை மாற்றியுள்ளது.

நோக்கங்கள்

இம்முறையின் மூலம் மாணவன்

 • கற்கும் முயற்சியை மேற்கொள்ளும் திறன் பெறுவான்.
 • கற்றலில் இயற்கையான ஆர்வத்தைப் பெறுவான்.
 • கற்றலுக்கான வழிமுறைகளை வகுப்பான்.
 • கற்றலுக்கான ஆயத்தத்தை ஏற்படுத்திக்கொள்வான்.
 • அனுபவங்கள் மூலம் கற்பான்.
 • பகுத்தறியும் மனப்பான்மை வளர்த்துக் கொள்வான்.
 • கருத்துக்களைப் புரிந்து கொள்வான்.
 • சோதித்து அறியும் திறனை வளர்த்துக் கொள்வான்.
 • பிரச்சனைக்கு முடிவு காண்பான்.
 • தானே செய்து பார்த்து புரிந்து கொள்வான்.
 • கற்றலுக்கான பொருள்களைச் சேகரிக்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வான்.
 • கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்வான்.
 • வினா எழுப்புவான்.
 • தொகுத்தறிவான்.
 • புதிய சூழலை பயன்படுத்துவான்.
 • சுய மதிப்பீடு செய்வான்.

படைப்பாற்றல் கல்வி முறையின் அடிப்படை

 • படைப்பாற்றல் கல்வி முறை வகுப்பறையின் இடத்தை பொருத்ததல்ல. சிறிய வகுப்பறையிலோ, பெரிய வகுப்பறையிலோ இதனை நடத்த இயலும்.
 • மாணவர் எண்ணிக்கையைப் பொருத்தது அன்று. 20 முதல் 60 மாணவர் கொண்ட வகுப்பறையிலும் இம்முறையை நடத்த இயலும்.
 • பாடப் பொருளைப் பொருத்தது அன்று. இம்முறை எவ்விதமான பாடத் திட்டத்திற்கும், எப்பாடப் பொருளுக்கும் பொருந்தும்.
 • வகுப்பறையிலோ, வெளியிலோ, கரும் பலகை இல்லாத இடத்திலோ, மண் தரையிலோ, குறைந்தபட்ச வசதிகள் உள்ள இடத்திலோ செயல்படுத்த முடியும்.
 • ஆசிரியரை முழுமையாக சார்ந்திராமல், ஒரு நல்ல ஊக்கப்படுத்தப்பட்ட வகுப்பறையில் தானாகவே நிகழும்.
 • ஆசிரியரின் திறனுக்கேற்ப வகுப்பறையில் நிகழும்.

மாணவர்கள், கவனித்தல் மட்டுமின்றி, படித்தல், எழுதுதல், கலந்துரையாடுதல் மற்றும் பிரச்சனைகளைத் தாமே தீர்த்தல் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. படைப்பாற்றல் கல்வி முறையில் இது சாத்தியப்படுகிறது.

தமிழகப் பள்ளிகளில் தொடக்கக் கல்வியில் செயல்வழிக் கற்றல் முறையாகவும் (ABL) உயர் தொடக்கக் கல்வியில் படைப்பாற்றல் கல்வி முறையாகவும் (ALM) மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

படைப்பாற்றல் கல்வி முறையில் மாணவர் எட்டாம் வகுப்பு நிறைவு செய்த நிலையில், படிக்கவும் எழுதவும் தகவல்களைப் பிரித்து தொடர் கற்றலாக மாற்றவும் தமது கற்றல் அனுபவத்தை உணர்ந்து கொள்ளும் வகையில் வெவ்வேறு மனவரைபடங்களை வரையவும் பலவித உத்திகளைக் கையாண்டு தொகுக்கவும் தனியாகவோ, இருவராகவோ, சிறு குழுவாகவோ, பெரிய குழுவாகவோ செயல்படவும் தாம் கற்றுக் கொண்டதை சகமாணவர்க்கு கற்றுக் கொடுக்கவும், பற்பல சிக்கலான தகவல்களை புரிந்து கொள்ளவும் முடியும்.

படைப்பாற்றல் கல்வி முறையில் நடைபெறும் கற்றல் செயல்பாடுகள்

மனவரைபடம் வரைதல், கருத்துக்களைத் தொகுத்தல், கலந்துரையாடுதல், பங்கேற்றல், உற்று நோக்கல், பாடக்கருத்தை வழங்குதல், பயிற்சி மேற்கொள்ளுதல், செயல் திட்டம் மேற்கொள்ளுதல், நினைவில் இருத்தும் பயிற்சிகள் செய்தல், தனி, சிறுகுழு, பெரிய குழுக்களில் செயல்பாடுகள் செய்தல்.

படைப்பாற்றல் கல்வி முறையின் தனிச் சிறப்புகள்

கற்றலில் மாணாக்கரின் முயற்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது. மாணாக்கரிடையே புரிதலுடன் கற்றல் நிகழ்கிறது. மாணாக்கர் கற்பதற்குக் கற்றுக் கொள்கின்றனர். மாணாக்கர் தனித் தன்மையுடன் கற்றுக் கொள்ள வாய்ப்பளிப்பதாக வகுப்பறைச் சூழல் அமைந்துள்ளது. கற்றலை வளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. வெவ்வேறு கற்றல் பாங்கில் (Learning Style) மாணாக்கர் கற்கின்றனர். வெவ்வேறு வகையான திறன்களை வெளிப்படுத்தும் வாய்ப்பு, மாணாக்கர் மனவரைபடம் வரையும் நிலையிலும், தொகுத்தல் மற்றும் குழுவில் எடுத்துரைத்தல் ஆகிய நிலைகளிலும் நடைபெறுகிறது.

கற்றல் செயல்பாடுகளின் அடிப்படையிலேயே கற்றல், கற்பித்தல் அமைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக படம் வரைதல், மன வரைபடம் வரைதல், குழுக்களில் எடுத்துரைத்தல், பரிசோதனைகள் செய்து காட்டுதல் போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியது. கற்ற பாடப்பகுதிகள் மற்றும் கருத்துக்களை, தேவையான சந்தர்ப்பங்களில் திருப்புதல், மீள்பார்வை செய்தல் போன்ற செயல்களை உள்ளடக்கியது. பல்புலன் வழியாகக் கற்றல் நிகழ்வதால் நிலையான கற்றல் ஏற்பட வாய்ப்புள்ளது. பாடத்தை முழுமையாகக் கற்க வாய்ப்புள்ளது.

இணைக்கற்றல் (Pair Study)

ஆசிரியர் முன்னறிவுக் கேள்விகள் / தொடர்புடைய நிகழ்வுகள் மூலம் பாடப்பகுதியை அறிமுகம் செய்தபின் மாணவரை இருவர் கொண்ட குழுவாகப் பிரித்து படித்தல், மனவரைபடம் வரைதல், தொகுத்தல் ஆகிய படிநிலைகளில் கற்கச் செய்வது இணைக்கற்றல் ஆகும். இதைத் தொடர்ந்து மாணவர் தொகுத்து வழங்குதல், தனியாகவோ, இருவர் கொண்ட குழுவாகவோ பாடநூலில் உள்ள கேள்விகளுக்கு பதிலளித்தல், ஆசிரியர் மதிப்பீடு ஆகிய செயல்பாடுகள் இணைக்கற்றலில் நடைபெறும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்.

Filed under:
2.4
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top