பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / சிறந்த செயல்முறைகள் / பரிந்துரைக் கடிதம் எழுதுதல்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பரிந்துரைக் கடிதம் எழுதுதல்

பரிந்துரைக் கடிதம் எழுதுதல் குறித்த தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பரிந்துரைக் கடிதம்

பரிந்துரைக் கடிதம் என்பது, உங்களைப் பற்றியும், உங்களது திறன் பற்றியும் நேர்மறையாக எழுதுதலாகும். அதை எழுதுபவர், உங்களுக்கு பல வருடங்கள் அறிமுகம் உள்ளவராகவும், நீங்கள் விண்ணப்பிக்கும் துறையில் தகுதி வாய்ந்தவராகவும் இருத்தல் வேண்டும். பரிந்துரை கடிதம் எழுதும் பணிக்கு, உங்களின் கல்லூரிப் பருவத்தில், உங்களுக்கு நன்கு அறிமுகமான, உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்த ஒரு நல்ல பேராசிரியர் மிகவும் பொருத்தமானவராக இருப்பார்.

சம்பந்தப்பட்டவரிடம் பரிந்துரைக் கடிதம் கேட்கையில், நீங்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட படிப்பிற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதற்கான தெளிவான காரணங்களை, அவரை அறியச் செய்யுங்கள். கடைசி நேரத்தில் சென்று விஷயங்களைக் கூறாமல், குறிப்பிட்ட காலத்திற்கு முன்பேயே தெளிவாக எடுத்துக்கூறி, அவருடன் அமர்ந்து நிதானமாக கலந்துரையாடுங்கள். இதன்மூலம், அவரைப் பற்றியும் நீங்கள் அறிந்து, அவர் பொருத்தமானவரா என்பதையும் முடிவு செய்ய முடியும்.

கலந்துரையாடலின்போது, தெளிவாகப் பேசி, உங்களின் பலம் சார்ந்த அம்சங்கள் பற்றி தெளிவாக எடுத்துக் கூறவும். ஒரு குறிப்பிட்ட படிப்பை மேற்கொள்ள நீங்கள் தகுதியானவர்தான் என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும்.

சரியான நபரைத் தேர்ந்தெடுத்தல்

பரிந்துரைக் கடிதம் எழுதுவதென்பது, சிறிது காலம் பிடிக்கக்கூடிய ஒரு முக்கிய செயலாகும். எனவே நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு சரியான நபர், உங்களுக்காக, ஒரு சிறப்பான கடிதத்தை எழுதித் தருவார் என்ற நம்பிக்கை உங்களுக்கு வேண்டும். கடிதம் எழுதுபவருக்கு, அதை எழுதி அனுப்ப, குறைந்தபட்சம் 4 வாரங்களாவது தரப்பட வேண்டும். கடிதம் எழுதும் பணியானது சரியாக நடைபெறுகிறதா என்பதை உறுதிசெய்ய, கடிதத்திற்கான குறிப்பிட்ட தேதிக்கு சராசரியாக 10 நாட்கள் முன்னதாக, கடிதம் எழுதுபவருக்கு நினைவூட்டலாம். ஆனால், எக்காரணம் கொண்டும், கடிதத்தைப் படிக்க தருமாறு கேட்கக்கூடாது.

அதேசமயம், கடிதம் எழுதும் நபர் குறித்து உங்களுக்கு சரியான அறிமுகமோ அல்லது திருப்தியோ இல்லாவிட்டால், வேறு யாரேனும் ஒரு நபரை, பரிந்துரை செய்யும்படி அவரைக் கேட்கலாம். மேலும், நீங்களே கடிதம் எழுதி, அதில் குறிப்பிட்ட நபர் கையொப்பமிடுவதும் உண்டு. ஆனால், அந்த நபர் தகுதியான மற்றும் சரியான நபர்தானா என்பதை உறுதி செய்வதும் முக்கியம்.

உங்களின் ஆலோசகருடன், குறிப்பாக, உங்களது தீசிஸ் கமிட்டியின் தலைவருடன் உங்களுக்கு சரியான உறவு இல்லையென்றால், உங்கள் துறையின் ஒரு மூத்த உறுப்பினரை கடிதம் எழுதுமாறு கேட்கலாம். அக்கடிதமானது, சூழலை, நேரடியாகவோ, மறைமுகமாகவோ தெரிவிக்க வேண்டும்.

உதவுதல்

ஒருவர், உங்களுக்காக பரிந்துரைக் கடிதம் எழுதுகிறார் என்றால், அவர் உங்களுக்கு உதவுகிறார் என்று அர்த்தம். எனவே, அந்தப் பணியை முடிக்க, நீங்கள், முடிந்தளவிற்கு அவருக்கு உதவ வேண்டும். உங்களின் Resume -ன் நகலைத் தருவதோடு, உங்களின் படிப்பு மற்றும் அதுசார்ந்த விபரங்கள் அடங்கிய ஒரு அறிக்கையையும் அவருக்குத் தரலாம். மேலும், கடிதத்தை எழுதி முடித்து அதை அவர் அனுப்பும் பொருட்டு, அனைத்து முன்னேற்பாடுகளையும் நீங்கள் செய்ய வேண்டும்.

பரிந்துரைக் கடிதங்கள் என்பவை, ஒருவர் ஒரு குறிப்பிட்ட படிப்பில், பணியில் அல்லது ஒரு சலுகையைப் பெற தகுதியுடையவர் என்ற சான்றளிப்பதாகும். அதேசமயம், சான்றளிப்பவர், ஒருவரின் தகுதி மற்றும் திறமை குறித்து போதுமான திருப்தியடையவில்லை என்றால், அவர் பரிந்துரைக் கடிதத்தை எழுதக்கூடாது. மாறாக, தமக்குத் தெரிந்த வேறு ஒருவரை, வாய்ப்பிருந்தால், இப்பணியை செய்வதற்காக சிபாரிசு செய்யலாம்.

கடிதத்தின் உள்ளடக்கம்

சிறந்த உரைநடையில், நல்ல சொற்களைப் பயன்படுத்தி எழுதப்பட வேண்டும்.

* தனிப்பட்ட விபரங்கள்

* செயல்திறன்

* அனுபவம்

* திறமைகள் மற்றும் ஆற்றல்கள்

* தொழில் நிபுணத்துவ உத்தரவாதம்

போன்றவை, கடிதத்தில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள்.

பரிந்துரைக் கடிதம் எழுதுபவர்கள், மறைமுகமான அல்லது பூடகமான மொழி நடையைப் பயன்படுத்தக்கூடாது. சொல்ல வேண்டிய விஷயத்தை தெளிவாக மற்றும் நேரடியாக சொல்ல வேண்டும். குறிப்பிட்ட மாணவரைப் பற்றிய நேர்மறை கருத்துக்கள் மிக முக்கியம். இல்லையெனில், தனது நோக்கத்தை, அந்தக் கடிதம் நிறைவேற்றாது.

பரிந்துரையின் பகுதிகள்

பரிந்துரைக் கடிதமானது, நீளத்தில் 1 பக்க அளவில் இருத்தல் வேண்டும். பொதுவாக, இக்கடிதமானது, Opening, Body, Closing ஆகிய 3 பகுதிகளைக் கொண்டிருக்கும்.

தொடக்கம்(Opening)

எழுதுபவர், தனக்கும், சம்பந்தப்பட்ட மாணவனுக்கும் உள்ள உறவை தெளிவாக விளக்குவதோடு, கடிதம் எழுதும் காரணத்தையும் விரிவாக குறிப்பிட வேண்டும்.(உதாரணம் - கடிதம் எழுதுபவரிடம், சம்பந்தப்பட்ட மாணவர், ஏதேனும் தீசிஸ் பணி செய்திருந்தால், அது தொடர்பான சிறப்பான அனுபவத்தை எழுதலாம்).

உள்ளடக்கம்(Body)

* மாணவர் பற்றிய குறிப்பான தகவல்கள் இப்பகுதியில் கொடுக்கப்பட வேண்டும்.

* தொடர்புடைய மாணவனின், மனோரீதியான சமநிலைத் தன்மை, தன்னம்பிக்கை, சார்புத்தன்மை, பொறுமை மற்றும் படைப்புத்திறன் உள்ளிட்ட தகவல்கள்.

* பாடம் தொடர்பான அறிவு, சிக்கல் தீர்க்கும் திறன், மாணவர்களை நிர்வகிக்கும் சாமர்த்தியம், உடனிருப்பவர்கள், பெற்றோர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் திறன், பாடத்திட்ட மேம்பாடு உள்ளிட்ட தகவல்கள்.

* சிறப்பு அனுபவம் மற்றும் குறிப்பிட்ட விஷயங்களிலுள்ள திறன்கள். மாணவனுக்கு இருக்கக்கூடிய அதிகபட்ச ஆற்றல் திறன் அல்லது சிறப்பான தகவல்தொடர்புத் திறன். ஆராய்ச்சி புராஜெக்ட்டுகள், கற்பித்தல் மற்றும் Extra curricular activities போன்றவற்றில் மாணவரின் அனுபவம் மற்றும் திறமைகள் போன்ற அம்சங்கள்.

மேற்கூறிய 3 பகுதிகள் Body அமைப்பில் இடம்பெற்றிருக்கும்.

நிறைவு(Closing)

முந்தைய பகுதிகளில் எழுதிய விஷயங்களை, இப்பகுதியில் சுருக்கமாக கோர்க்கவும். பரிந்துரைக் கடிதமானது, நேரடியாகவும், சொல்ல வருவதை தெளிவாகச் சொல்வதாகவும், தேவையற்ற அலங்காரம் மற்றும் வர்ணனைகளை தவிர்ப்பதாகவும் இருத்தல் வேண்டும்.

வேலை வழங்குநர் கடிதம்

ஒரு மாணவர் வேலைசெய்த நிறுவனம் வழங்கும் கடிதத்தில்,

* அந்நிறுவனத்தில் சம்பந்தப்பட்டவர் வகித்த பதவி

* அவரின் பணி பொறுப்புகள்

* திறமை

* ஆற்றல்

* அறிவு

* முன்முயற்சி

* அர்ப்பணிப்பு

* கண்ணியம்

* குழுவோடு சேர்ந்த பணிபுரியும் திறன்

* தனியாக பணிசெய்யும் தன்மை

போன்ற அம்சங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

கல்வி நிறுவனம் வழங்கும் கடிதம்

* மாணவரின் கல்விச் செயல்பாடுகள்

* பெற்ற பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்

* முன்முயற்சி

* அர்ப்பணிப்பு

* கண்ணியம்

* கல்வி நிறுவன கொள்கைகளைப் பின்பற்றுவதிலுள்ள ஆர்வம்

* பிறருடன் இணைந்து செயல்படும் திறன்

* தனியாக செயல்படும் தன்மை

போன்ற அம்சங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

பிற ஆலோசனைகள்

ஒவ்வொரு கடிதத்திற்கும் நீங்கள், Thank-you note எழுத வேண்டும். பரிந்துரைக் கடிதம் எழுதுபவருக்கு, உங்களின் முக்கிய நடவடிக்கைகள், அவ்வப்போது அவருக்கு தெரிய வேண்டும். எதிர்காலத்தில், அவரே இன்னொரு பரிந்துரைக் கடிதத்தையும் எழுதுவார். Thank-you note எழுதும் முன்பாக, பரிந்துரைக் கடிதம் தனது நோக்கத்தை அடைந்துள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ளவும்.

ஆதாரம் : தினமலர்

3.08333333333
யாமீஸ் Feb 17, 2019 11:04 AM

சூப்பர்

மாதவன் Sep 08, 2018 05:17 PM

சூப்பர்!!!!!!!!

Mimi Jul 10, 2018 06:11 PM

Super

நித்தியா Jul 10, 2018 06:10 PM

Super

MUTHURAJA N Oct 30, 2015 11:24 AM

மிக நன்மையான பகுதி, வாழ்த்துக்கள்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top