பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கடற்கரையிலே 9 முதல் 15

கடற்கரையிலே (இலக்கியக் கட்டுரைகள்) 9 முதல் 15 வரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பட்டினத்தார்

சென்னைமாநகரின் அருகேயுள்ள கடற்கரை யூர்களிலே சாலத்தொன்மை வாய்ந்தது திருஒற்றியூர். மூவர் தமிழும் பெற்றது அம் மூதூர். பட்டினத்தார் என்று தமிழகம் போற்றும் பெரியார் அப்பதியிலே பல நாள் வாழ்ந்தார். அவரை நன்றாகப் பற்றிக் கொண்டது ஒற்றியூர். தமது உள்ளங் கவர்ந்த ஒற்றியூர்க் கடற்கரையிலே நின்று ஒருநாள் அவர் உயரிய உண்மைகளை உணர்த்த லுற்றார்:-

"கற்றவர் போற்றும் ஒற்றிமாநகரே! உன்னை நாடி யடையாதார் இந்நாட்டில் உண்டோ? உன் கடலருகே நிற்கும் கரும்பைக் கண்படைத்தவர் காணா திருப்பரோ? அக் கரும்பின் தன்மையை என்னென்று உரைப்பேன்? காண இனியது அக் கரும்பு; கண் மூன்றுடையது அக் கரும்பு; கண்டங்கறுத்தது அக் கரும்பு; தொண்டர்க்கு உகந்தது அக் கரும்பு. கண்டு கொண்டேன் அக்+ கரும்பை! அக் கரும்பே என் கடு வினைக்கு மாமருந்து.

+ " கண்டம் கரியதாய், கண்மூன் றுடையதாய்
அண்டத்தைப் போல அழகியதாய்-தொண்டர்
உடல்உருகத் தித்திக்கும் ஓங்குபுகழ் ஒற்றிக்
கடல் அருகே நிற்கும் கரும்பு."

"அலைகடலே! உன் அலையை ஒத்ததே என் நிலையும்! அடுத்தடுத்து வருகின்ற உன் அலைகளை எண்ணமுடியுமோ? அப்படியே என் பிறப்பும் எண்ணத் தொலையாது. இம் மண்ணுலகிற் பிறந்து பிறந்து, நான் மனம் சலித்தேன்; என்னைச் சுமந்து சுமந்து அன்னையர் மெய் சலித்தார். என்னைப் படைத்துப் படைத்து அயனும் கை சலித்தான்; இது வரையில் பிறந்தது போதும். இனிப் பிறவாதிருக்க வேண்டும். அந் நிலையை நாடியே உன்னைத் தஞ்சம் அடைந்தேன்.

" பழங்கடலே! அப்பர் என்ற அருமைப் பெயர் பெற்ற அண்ணல்-செஞ்சொற் பாமாலை தொடுத்துச் சிவனார் திருவடியில் அணிந்த செம்மல்-முன்னொரு கால் உன் கரையை வந்தடைந்தார்; உள்ளம் உருகிப் பாடினார். ஒப்பற்ற அன்பு வாய்ந்த அப் பெருமானை 'அப்பர்' என்று அழைப்பது எத்துணை அழகு! என் அப்பன் காட்டிய நெறியைக் கடைப் பிடித்தல் என் பிறப்புரிமை யன்றோ? +'மனம் என்னும் தோணியில் சினம் என்னும் சரக்கை ஏற்றி, மதி என்னும் கோலை ஊன்றி, மாக்கடலிற் செல்லுங்கால், மதன் என்னும் பாறை தாக்குமே! ஒற்றியூர் உடைய கோவே! அப்போது உன்னை நினைக்கும் உணர்வினை அருள்வாய்' என்று அவர் அருளிய திருவாக்கே எனக்கு வழிகாட்டு கின்றது. வாழ்க்கை என்னும் கடலில் ஓடும் உயிருக்கு இதனினும் சிறந்த உறுதியுண்டோ? மனத்திலே சீலம் என்னும் சரக்கை ஏற்றாது, சினம் என்னும் சரக்கை ஏற்றுதல் ஈனம் அன்றோ? அச் சரக்கை ஏற்றிச் செல்லும்போது, செருக்கென்னும் பாறை தாக்கி நொறுக்கிவிடும் என்று அப்பர் கூறியது அமுத வாக்கன்றோ? யான், எனது என்னும் இருவகைச் செருக்கும் அற்றவரே பிறவிப் பெருங்கடல் கடந்து பேரின்ப உலகம் பெறுவர் என்று தமிழ்மறை பாடிற் றன்றோ? வாழ்க்கையை உருப்படவொட்டமல் சிதைத்து அழிக்கும் செருக்கை 'மதன் எனும் பாறை' என்று அப்பர் பெருமான் பாடிய அருமையை எவ்வாறு புகழ்ந்து உரைப்பேன்?

+" மனம்எனும் தோணிபற்றி
மதிஎனும் கோலை ஊன்றிக்
சினம் எனும் சரக்கைக் ஏற்றிச்
செறிகடல் ஓடும்போது
மதனெனும் பாறை தாக்கி
மறியும்போது அறிய வொண்ணா
உனைஎனும் உணர்வை நல்காய்
ஒற்றியூர் உடைய கோவே"

"நீர்ப் பெருக்குற்ற நெடுங்கடலே! செல்வச் செருக்கே செருக்கினுள் எல்லாம் தலையாகும். உலக வாழ்க்கை செம்மையாக நடைபெறுவதற்குச் செல்வம் இன்றியமையாததுதான். 'பொருளில்லார்க்கு இவ் வுலகமில்லை' என்பது பொய்யா மொழியே. ஆயினும், செல்வத்தின் பயனறிந்து வாழ்பவர் இவ் வுலகில் ஒரு சிலரேயாவர். அல்லும் பகலும் அரும்பாடுபட்டுத் தேடும் பணத்தை மண்ணிலே புதைத்துவைத்து மாண்டு ஒழிபவர் எத்தனை பேர்? பரிந்து தேடும் பணத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்வதே பேரின்பம் என எண்ணி வாழும் ஏழை மாந்தர் எத்தனை பேர்? செல்வம் என்பது சொல்லுந் தன்மைத்து என்ற உண்மையை அறியாது அதைக் காட்டி வைத்துக் காக்க முயலும் கயவர் எத்தனை பேர்? செல்வம் பெற்றவர் தம் நிலையைக் குறித்துச் சிறிதும் சிந்திக்கின்றார் இல்லையே! பிறக்கும்பொழுது தங்கத் தலையொடும்,வயிரக் கையொடும், வெள்ளிக் காலொடும் பிறந்தவர் எவரும் இல் லையே! இறக்கும்பொழுது பொன்னையும் பொருளை யும் தம்முடன் கொண்டு செல்வார் எவரும் இல்லையே! இத் தகைய செல்வத்தின் பயன்தான் யாது? உலகியல் அறிந்த பெரியோரெல்லாம் ஒரு தலையாக அதனை உணர்த்தியுள்ளார்க! 'ஈதலே செல்வத் தின் பயன்; அற்றாரை ஆதரித்தலே செல்வம் பெற்றா ரது கடமை.' இதை அறிந்து வாழ்பவர் ஆன்றோர் ஆவர்; கொடுக்க அறியாதவர் † குலாமர்; பிறவிப் பயன் அறியாப் பதடிகள்.

† " பிறக்கும் பொழுது கொடுவந்த
தில்லை; பிறந்து மண்மேல்
இறக்கும் பொழுது கொடுபோவ
தில்லை; இடைநடுவில்
குறிக்கும்இச் செல்வம் சிவன்தந்த
தென்று கொடுக்கறியாது
இறக்கும் குலாருக்குஎன்
சொல்லுவேன் கச்சி ஏகம்பனே!"
-- பட்டினத்தார் பாடல்

"பரந்த பெருங்கடலே! பசித்தோர் முகம் பார்த்து இரங்கும் தன்மை வாய்ந்த செல்வர் இல்லாத நாடு நாடாகுமா? ஏழையர்க்கு ஒன்றும் ஈயாது ஏழடுக்கு மாடம் கட்டி இறுமாந்திருப்பவர் இறைவனது கருத்தறியாத ஈனர் அல்லரோ? மெய்யறிவு பெற்ற மேலோர் எல்லாம் மெய்ப்பொருளாகிய இறைவனை 'ஏழை பங்காளன்' என்று குறித்தனரே யன்றிச் செல்வர் பங்காளன் என்று சிறப்பிக்க வில்லையே! இத் தகைய ஏழையரைப் புறக்கணிப்பது ஆண்டவனைப் புறக்கணிப்பதாகு மன்றோ? அழியுந் தன்மை வாய்ந்த செல்வத்தை அற்றார்க்கும் ஆதுலர்க்கும் கொடுத்து, அழியாத அறமாக மாற்றிக் கொள்வதன்றோ அறிவுடைமை யாகும்?

" நற்றவர் வாழும் ஒற்றியுரே! என்னையாளும் இறைவன் கருணையால் உறுதிப்பொருள் இன்ன தென்றுணர்ந்தேன். காவிரிப்பும் பட்டினத்தில் கடல் வாணிகத்தால் வந்த பொருளைக் கண்டு களிப்புற்றிருந்த என்னைக் கரையேற்றத் திருவுளங் கொண்டான் ஒற்றியுருடைய இறைவன்; ஒரு சீட்டைக் காட்டி என்னை ஆட்கொண்டான். 'காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே' என்னும் அருமைத் திருமொழியால் என்னுள்ளத்தை உருக்கினான். காதற்ற ஊசியைக் காட்டி என்னைக் கடைத்தேற்றி னானே!

"ஒற்றியுரே! உன் பெருமையை அவன் அருளால் உணர்ந்தேன். +நீயே சிவலோகம் என்று அறிந்தேன். என் உள்ளம் கவர்ந்த ஒற்றியே! வாழி; என்னைத் தாங்கும் ஒற்றியே! வாழி; உலவாப் பெரும் பெயர் ஒற்றியே! வாழி" என்று வாழ்த்திக்கொண்டு ஆழிக்கரையை விட்டகன்றார் இருவினைக் கட்டறுத்த பட்டினத்தார்.

"வாவிஎல்லாம் தீர்த்தம்; மனம்எல்லாம்வெண்ணீறு;
காவனங்கள் எல்லாம் கணநாதர்-பூவுலகில்
ஈது சிவலோகம் என்றென்றே மெய்த்தவத்தோர்
ஓதும் திருவொற்றி யூர்."
- பட்டினத்தார் பாடல்.

-----------------------------------------------------------

பண்டித சோழன்

தமிழ் நாட்டுத் துறைமுக நகரங்களுள் ஒன்று நாகபட்டினம். நாகர் என்ற பழந் தமிழ்க் குலத்தார் ஒரு காலத்தில் அங்கே சிறப்புற்று வாழ்ந்திருந்தார் என்பர். சோழ நாட்டின் தலைநகராகிய காவிரிப்பூம் பட்டினம் ஆழிவாய்ப்பட்டு அழிந்த பின்னர் நாக பட்டினம் தலையெடுத்தது; வணிகத்தால் வளமுற் றது. தஞ்சையைத் தலைநகராக கொண்ட சோழ மன்னர் நாகையைத் திருத்தி வளர்த்தனர். அம் மன்னரில் தலை சிறந்தவன் இராஜேந்திரன். அவன் தன் நிலப் படையால் கங்கை வரையுள்ள நாடுகளை வென்றான். கப்பற்படையால் கடாரம் முதலிய பல தேசங்களை வென்றான். அவ் வெற்றித் திறனை வியந்து 'கங்கை கொண்டான்' என்றும், 'கடாரம் கொண் டான்' என்றும் அவனைத் தமிழகம் பாராட்டியது. தமிழ்ச்சுவை யறிந்த அம் மன்னனைப் 'பண்டித சோழன்' என்று கலைவாணர் கொண்டாடினர். இத் தகைய காவலன் நாகைமா நகர்க்கு ஒரு கால் எழுந் தருளியபோது அந் நகரம் ஓகையுற்று எழுந்தது; கடற் கரையில் விண்ணளாவிய பந்தலிட்டு வரவேற்றது. அக் காட்சியைக் கண்டு பெரு மகிழ்ச்சியுற்ற மன்ன வன் பேசலுற்றான்:-

" நல்லோர் ஏத்தும் நாகைமா நகரே ! என்றும் உள்ள தமிழகத்தில் நீ தொன்றுதொட்டு இருந்து வருகின்றாய். சோழ நாட்டுக் கடற்கரை நகரங்களுள் இன்று நீயே தலைமைசான்றாய் ! கடல் வளம்படைத்த உன்னைக் 'கடல் நாகை' என்று பாடினார் திருநாவுக் கரசர். இருமையும் தரும் ஈசனார் கோயில் இங்கு அருமையான காட்சி தருகின்றது. காரோணம் என் னும் திருக்கோயிலைக் கண்பெற்றவர் கானுருதிப்பரோ?

"மன்னர் போற்றும் மணிநகரே ! இறைவன் அருளால் என் அரும்பெருந் தந்தையார்-இராஜ ராஜன்-நிலப்படையும் நீர்ப்படையும் பெருக்கினார்; செருக்குற்ற மாற்றரசரை நொறுக்கினார்; கோதாவரி முதல் குமரி வரை ஆணை செலுத்தினார்; கடல் சூழ்ந்த பல நாடுகளில் புலிக் கொடியை நாட்டினார். சென்ற விடமெல்லாம் செரு வென்று ஜெயம் பெற்ற மன்னரை 'ஜெயங்கொண்டான்' என்று தமிழகம் சீராட்டி மகிழ்ந்தது. அவர் காட்டிய நெறியைக் கடைப்பிடித்து வாழ முயல்கின்றேன்; அம் மன்னர் அடிச்சுவடுபற்றி இந் நாட்டை ஆள ஆசைப்படுகின்றேன். அவர் காலத்தில் வெற்றிச்சுவை கண்ட தமிழ்ச்சேனை மேன்மேலும் வாகைமாலை சூட விரும்பிற்று; வடக்கே கங்கையாறளவும் சென்று மாற்றாரை வென்றது; பொங்கு கங்கையைப் பொற்குடத்தில் எடுத்து வந்தது; 'கங்கை கொண்டான்' என்னும் விருதுப் பெயரை எனக்குத் தந்தது.

" நலமார்ந்த நன்னகரே ! கங்கையின் நீரை என் தண்ட நாயகன் கொண்டு வந்தான். கோதாவரிக் கரையில் நான் அப்படைத் தலைவனை வரவேற்றேன்; கங்கையைக் கொண்டேன்; புதிதாகச் சோழநாட்டில் நான் கட்டிய ஏரியில் அந் நீரை உகுத்தேன்; 'சோழ கங்கம்' என்னும் பெயரையும் அதற்கு அளித்தேன்; கொள்ளிடத்திலிருந்து கால்பிடித்துக் காவிரியின் நீரை அந்த ஏரியிற் பெருக்கினேன். கங்கையும் காவிரியும் கலந்த ஏரியில் என்றும் நீர் பொங்கிப் பெருக வேண்டுமென்று இறைவனைத் தொழுதேன். அப்போது 'ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்' என்ற தமிழ்ப் பாட்டை இசைவாணர் அந்த ஏரியின் கரையில் நின்று பாடினர். அதுகேட்டு என் உள்ளம் உருகிற்று. சோழ கங்கத்தின் கருணையால் வெற்றிட மெல்லாம் இப்போது விளைநில மாயிற்று; காடு மேடெல்லாம் கழனியாயின. சோழநாட்டை வள நாடாக்கி, வளவன் என்ற பெயரை எம் குலத்தார்க்கு வழங்கிய ஆதிமன்னன்-திருமா வளவன்-'குளம் தொட்டு வளம் பெருக்கினான்' என்று பட்டினப் பாலை பாராட்டுவதைப் படித்தேன். ஒல்லும் வகையால் அவ் வளவனைபோல் வேளான்மையை ஆதரிக்க ஆசைப் படுகின்றேன். படையாற்றலினும் பசியாற்றலே சிறந்த தென்பதை எண்ணி எண்ணி மனம் களிக் கின்றேன். கங்கை கொண்டேன்; பயிர் முகம் கண்டேன். ஆதலால், 'கங்கைகொண்டான்' என்ற விருதுப் பெயரைப் போற்றுகிறேன்.

"வளவன் நாட்டுத் துறைமுகமே! இந் நாட்டில் பசி ஒழிந்தால்மட்டும் போதுமா? பொருளும் பெருக வேண்டும் என்பது என் ஆசை. தாழ்விலாச் செல்வம் வாணிகத்தால் வரும். இதை உணர்ந்தன்றோ தமிழ் நாடு மூவேந்தரும் துறைமுக நகரங்களைக் குறிக் கொண்டு காத்தனர்? சோழநாட்டுக் கரையிலே திருமாவளவன் திருத்தியமைத்த பூம்புகார் நகரம் யார் செய்த தீவினையாலோ அழிந்து பட்டது. ஆயினும், நாக பட்டினமே! உன்னைக் கண்டு ஒருவாறு வாட்டம் தீர்ந்தேன். அந் நாளில் புகார் நகரத்தில் நிகழ்ந்த வாணிகம் இந் நாளில் இங்கு நடைபெறுகின்றது. பல இனத்தார், பல மதத்தார் இந் நகரிலே கலந்து வாழ் கின்றார்கள். சைவம், வைணவம், சமணம், சாக்கியம் ஆகிய நால்வகைச் சமயங்களும் நேசப் பான்மை யுடன் இந் நகரில் நிலவக் காண்கின்றேன். கடார தேசத்தை ஆளும் அரசன் சாக்கியச் சமயத்தைச் சார்ந்தவன். அந் நாட்டார் பலர், இந் நகரில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வழிபாடு செய்வதற்காகப் புத்த விகாரம் ஒன்று இந் நகரிலே கட்ட விரும்பினான் கடார மன்னன்; என் தந்தையாரிடம் அதற்கு அனுமதி வேண்டினான். உடனே அனுமதி கொடுத்தார் அவர்; அம் மட்டில் அமையாது ஆனைமங் கலம் என்ற ஊரையும் அக் கோயிலுக்கு நன்கொடையாக அளித்தார். சூடாமணி விகாரம் என்னும் பெயரால் இந் நகரத்திலே அந்த ஆலயம் சிறந்து விளங்குவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

"வணிகர் நிறைந்த மணி நகரே! கடார தேசத் திற்கும், தமிழ் நாட்டிற்கும் நினைப்புக்கு எட்டாத நெடுங்காலமாக வர்த்தக உறவு உண்டு. +காழகம் என்று முன்னாளில் அழைக்கப்பட்ட அந் நாட்டின் விளைபொருளும் நுகர்பொருளும் தமிழ் நாட்டுத் துறைமுகத்தில் வந்து இறங்கிய வண்ணமா யிருந்தன. காழக நட்டார் காவிரித் துறைமுகத்தில் குடியேறியவாறே திரை கடலோடிய தமிழகத்தார் காழகம் சாவகம் முதலிய நாடுகளில் வாணிகத்திற்காகச் சென்று வாழ்ந்தார்கள். அங்குள்ள தக்கோலம், மலையூர், பண்ணை ஆகிய ஊர்ப் பெயர்கள் தமிழர் இட்ட பெயர்கள் என்பதில் தடையமுண்டோ?
----------
+:"ஈழத் துணவும் காழகத் தாக்கமும்" -பட்டினப்பாலை.

"வாகை சூடிய நாகையே! இன்று கடாரத்தை ஆளும் அரசன் அந் நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் உள்ள பண்டை உறவை மறந்தான்; புத்த விகா ரத்தை நாம் ஆதரித்த அருமையையும் புறக்கணித் தான்; சித்த விகாரத்தால் சீனத்தாரோடு புத்துறவு பூண்டான். அவ் வர்த்தக உறவினால் கடாரத்திலுள்ள தமிழர் கையற்றார். தமிழகத்திற்கும் வாணிக வளம் சிறிது குறைவதாயிற்று. முறை தவறி நடந்த கடார மன்னர்க்குத் தமிழாற்றலை அறிவித்தற்காகவே நமது கடற்படை எழுந்தது. கடாரம் கிடுகிடுத்தது; குற்ற முள்ள மன்னவன் நெஞ்சு குறுகுறுத்தது. அவன் நமது அடியில் முடியை வைத்து வணங்கினான்; பிழை பொறுக்கும் படி வேண்டினான்; முறையாக திறை செலுத்த இசைந்தான்; 'இனி என்றும் தமிழ் நாட்டின் நலத்திற்கு மாறாக நடப்பதில்லை' என்று வாக்களித்தான். வடுப்படாமல் வாகைமாலை சூடிய தமிழ்ச் சேனை இந் நாகைத் துறைமுகத்தில் வந்து இறங்கியபொழுது இங்கெழுந்த எக்களிப்பை என்னென் றுரைப்பேன்! 'கங்கை கொண்ட தமிழரசன் கடாரமும் கொண்டான்' என்று கவிஞர் கொண்டாடினார்கள்; பாட்டாலும் உரையாலும் என் படைத் திறமையை பாராட்டினார்கள். அப் பாராட்டெல்லாம் என் குடிபடைகளுக்கே உரியவாகும். ஒன்றை மட்டும் நான் ஒப்புக்கொள்வேன். கங்கை கொண்டதனால் கழனி கண்டேன்; கடாரம் கொண்டதனால் கடல் வளம் பெற்றேன். இனி என் நாட்டுக்கு என்ன குறை?

" தகைமை வாய்ந்த திருநகரே! திருவள்ளுவர் கூறியவாறு தள்ளா விளையலும், தாழ்விலாச் செல்வமும் உடைய தமிழ் நாட்டில் தக்காரும் வாழ்வதறிந்து மனம் தழைக்கின்றேன். தஞ்சை மாநகரில் என் தந்தையர் எடுத்த திருப்பணி இனிது நிறைவேற உறுதுணையாக நின்றவர் கருவூர்த் தேவர் என்பதை நாடறியும். அவர் மும்மையும் உணர்பவர்; ஒருமையே மொழிபவர். அவர் ஆசியால் நான் வாசி பெற்றேன். கங்காபுரி என்னும் கங்கை கொண்ட சோழபுரத்தில் ஈசனார்க்கு நான் எடுத்த திருக்கோயிலை கருவூர்ப் பெரியார் பாடியருளினார். அவர் பாடிய இசைப் பாட்டால் என் பெயர் தாங்கிய நகரின் புகழ் எட்டுத் திசையிலும் பரவலாயிற்று. அம்மட்டோ? அருள் நூலும், பொருள் நூலும் அவர் வாயிலாகக் கேட் டறிந்த என்னைப் 'பண்டித சோழன்' என்று தமிழகம் பாராட்டத் தொடங்கிற்று. அப் பட்டத்தை தாங்கு தற்குரிய தகுதி யில்லையே என்று ஏங்குகின்றது என்னுள்ளம்.

"கற்றவர் நிறைந்த நற்றவ நகரே! கடல் நாகை யாகிய நீ, கலை நாகையாகவும் விளங்குகின்றாய்! இங் குள்ள கலைவாணர் உதவியால் அருந்தமிழ்க் கலைகளை ஓதி யுணர்ந்து நான் பண்டித சோழன் ஆக முயல் வேன். மெய்ஞ்ஞான பண்டிதனாகிய முருகவேள் அருளால் முத்தமிழறிந்து வாழ்வேன். எல்லோரும் இன்புற்று வாழ ஈசன் அருள் புரிக " என்று பணிந்து விடை கொண்டான் பண்டித சோழன்.
-----------------------------------------------------------

கண்டி மன்னன்

இலங்கை என்று வழங்கும் ஈழநாடு இயற்கை வளம் வாய்ந்த நாடு. அங்குச் சிங்களவரோடு தமிழரும் தொன்றுதொட்டு வாழ்ந்து வருகின்றார்கள். பரராஜசிங்கன் என்ற அரசன் அந் நாட்டை ஆண்டு வந்த காலத்தில் கடுமையான பஞ்சம் வந்துற்றது. பசியின் கொடுமையால் குடிகள் படாத பாடு பட்டனர். மன்னன் மனம் பதைத்து வாடினான்; காவிரி நாட்டை நோக்கினான்; தடையின்றிக் கொடுக்கும் தகைமை வாய்ந்த சடையப்ப வள்ளலின் உதவியை நாடினான். உடனே அவர் களஞ்சியத்தி லிருந்த நெல் கப்பலேறியது; யாழ்ப்பாணத் துறையில் வந்து மலைபோற் குவிந்தது. அதை கண்டான் அரசன்; கடற்கரையில் நின்று களிப்புடன் பேசலுற்றான்:-

"தென் இலங்கைத் திருநகரே! சிங்களரும் தமிழரும் சேர்ந்து வாழும் இந் நாட்டில் என்றும் இல்லாத பஞ்சம் இன்று வந்து சேர்ந்தது. மாதம் மூன்று மழையுள்ள நாட்டில் பத்து மாதமாக ஒரு துளி மழையில்லையே! பயிர் முகங் காட்டும் கழனிகள் எல்லாம் பாழடைந்து கிடக்கின்றன. வாழும் உயிர்கள் எல்லாம் வற்றி உலர்ந்து வானத்தையே நோக்கி நிற்கின்றன. காவலன் என்று பேர் படைத்த நான், நாடு படுந் துயரத்தைக் கண்டு நலிவுற்றேன்; கண்டிமா நகரிலுள்ள கண்கண்ட தெய்வமாகிய கண்ணகியை வேண்டினேன்.

'தாயே! பத்தினிப் பெண்டிர் வாழும் நாட்டில், வானம் பொய்யாது, வளம் பிழைப்பறியாது என்று இளங்கோவடிகள் பாடினாரே! கற்புத் தெய்வமாகிய நீ கோயில் கொண்டிருக்கும் நாட்டிலே இக் கொடுமை நிகழலாமா? நெஞ்சறிய ஒரு பிழையும் நான் செய்தறியேனே! வஞ்சமின்றி வாழும் என் குடிகள் பஞ்சத்தின் வாய்ப்பட்டு வருந்துதல் தகுமோ? அன்னையே! நானும் இந் நாடும் உன் அடைக்கலம்' என்று முறை யிட்டேன். அன்றிரவு சற்றுக் கண்ணயர்ந்தேன்; ஒரு காட்சி கண்டேன். எண்ணறந்த கப்பல்கள் தமிழ் நாட்டிலிருந்து நெல் மூடைகளைக் கொணர்ந்து இந்த யாழ்ப்பாணக் கரையிலே இறக்கிக்கொண்டிருக்கக் கண்டேன்; கண் விழித்தேன். கப்பலும் இல்லை; நெல்லும் இல்லை; கனவிற் கண்ட காட்சி என்று உணர்ந்தேன்; கவலையுற்றேன். ஆயினும், அக் கனவு வீணாகப் போகவில்லை. ஈழநாட்டின் துயரம் தீர்ப்பது சோழநாட்டின் உரிமையன்றோ என்று சிந்தித்தேன். சோழநாடு காவிரி பாயும் வளநாடு. குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர் பலர் அந் நாட்டில் வாழ்கின்றனர். இல்லையென்று சொல்லாமல் எல்லை யின்றிக் கொடுக்கும் நல்லார் பலர் அங்குள்ளார்கள். அவர்களுள் தலைசிறந்தவர் வாடாத பாமாலை பெற்ற வள்ளல்; சடையாது கொடுக்கும் சடைய வள்ளல். அவரிடம் இந் நாட்டின் சார்பாக ஒரு வேண்டுகோள் விடுத்தேன். அதற்கு ஆறாம் நாளில் வந்தது ஆயிரம் கப்பல். அதோ! குன்று போலக் குவிந்திருக்கின்றதே அவர் அனுப்பிய நெல்! அந்த நெல்லிலே ஒரு கல்லுண்டா? கலப்புண்டா? பதருண்டா? பச்சை யுண்டா? அதை அள்ளிப் பார்ப்பவரெல்லாம் துள்ளி மகிழ்கின்றார்களே! இன்றுதான் இந் நாட்டார் முகத்தில் புன்னகை தவழக் கண்டேன்; என் மனக் கவலை விண்டேன்.

"தகை சான்ற தனி நகரே! தக்கோர் வாழும் நாடு தமிழ்நாடு என்று அறிவின்மிக்கோர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அதன் உண்மையை இன்று அறிந்தேன். தமிழ் நாட்டு வள்ளல், காலத்தில் உதவி செய்து நம்மை காப்பாற்றினார். கருணையே உருவாகிய அப் பெருமானுக்கு என்ன கைம்மாறு செய்ய வல்லோம்? உண்டி கொடுத்தவர் உயிர் கொடுத்தவ ரல்லரோ? உயிர் தந்த ஒருவனை 'அம்மையே, அப்பா, ஒப்பிலாமணியே' என்று நாம் எந் நாளும் போற்றுவோம். அவ் வள்ளலார் குலம் வாழையடி வாழைபோல் நீடூழி வாழ்க என்று வாழ்த்துவோம். அவர் நாட்டிலுள்ள காவிரியாறு இன்று போலவே என்றும் வளமுறத் திகழும் வண்ணம் ஆண்டவன் திருவருளை வேண்டுவோம்.

"அருள் பூத்த தமிழ் நகரே! காவிரி நாட்டின் கண்ணெனத் திகழும் தில்லையம்பதியிலே எம்மை யாளுடைய ஈசன்-மும்மைசால் உலகுக்கெல்லாம் முதல்வன்-ஆனந்தக் கூத்தாடுகின்றான். அப் பெருமான் ஆடுகின்ற அம்பலத்தை, 'அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்' என்று ஆன்றோர் பாடினர். காவிரியாற்றின் நடுவே கருணைமா முகிலாகிய திருமால் ஆனந்தமாய்க் கண்வளர்கின்றார். அவர் பள்ளிகொள்வதற்கு என்ன தடை? நாடு செழித்திருக்கின்றது; அறம் தழைத்திருக்கின்றது; எல்லோரும் இன்புற்று வாழ்கின்றார்கள். ஆதலால், காக்கும் கடமையுடைய பெருமாள் கவலையற்றுத் திருவரங்கத்திலே கண்வளர்கின்றார். காவிரி நாட்டிலுள்ள அமைதியைக் காட்டுகின்றது அவர் திருக்கோலம். எனவே, ஆனந்தக் கூத்துக்கும் ஆனந்த சயனத்துக்கும் அடிப்படையான காரணம் சோழ நாட்டு வளமே யன்றோ? இத் தகைய வள நாட்டில் +தரும தேவதைபோல் விளங்கும் வள்ளல் தழைத்து ஓங்கி வாழ்க என்று வாழ்த்துகின்றேன்.

+"இரவு நண்பகல் ஆகி லென், பகல்
இருள றாஇர வாகிலென்,
இரவி எண்திசை மாறி லென்கடல்
ஏழும் ஏறிலென், வற்றிலென்?
மரபு தங்கிய முறைமை பேணிய
மன்னர் போகிலென்; ஆகிலென்? வளமை இன்புறு சோழ மண்டல
வாழ்க்கை காரண மாகவே,
கருது செம்பொனின் அம்ப லத்திலே
கடவுள் நின்று நடிக்குமே!
காவி ரித்திரு நதியி லேஒரு
கருணை மாமுகில் துயிலுமே!
தருவு யர்ந்திடு புதுவை யம்பதி
தங்கு மானிய சேகரன்,
சங்க ரன்தரு சடையன் என்றொரு
தரும தேவதை வாழவே!"
- பெருந் தொகை, 1135 .


"கலைமணக்கும் தலைநகரே! செந்தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் தொந்தம் மிகவுண்டு. ஈழநாட்டு ஆதியரசருள் ஒருவன் பாண்டி மன்னன் திரு மகளை மணந்து வாழ்ந்தான். சேரநாட்டரசன் வஞ்சிமா நகரில் நடத்திய கண்ணகி விழாவில் இந் நாட்டுக் கஜபாகு மன்னன் கலந்து கொண்டான். அன்று தொட்டு கண்டி முதலாய பல நகரங்களில் பத்தினித் திருநாள் நடைபெற்று வருகின்றது; அன்றியும், இந் நாட்டுக் கடற்கரையிலுள்ள கோணமலையில் திருக்கோயில் அமைத்து அதைத் +திருக்கோணமலை யாக்கியவர் தமிழர் அல்லரோ? கருங்கடலை நோக்கி வளைந்துள்ள மலையைக் கோணமலை என்று பெயரிட் டழைத்த தமிழரின் அறிவு நலம் வியக்கத்தக்க தன்றோ?
--------------
திருக்கோணமலை இப்போது Trincomalle (டிரிங்காமலி) என மருவி வழங்குகின்றது.
"தமிழ் மணக்கும் திருநகரே! இவையெல்லாம் உண்மையே எனினும், நீயே இலங்கை நாட்டின் தொன்னகரம்; தமிழர் வாழும் நன்னகரம். உன் கடற்கரையிலே குவிந்துகிடந்த பெருமணலைக் கண்டு, மணவை என்று முன்னையோர் உனக்குப் பெயரிட்டார்கள். இப்போது யாழ்ப்பாணம் என்ற அழகிய பெயரைத் தாங்கி நிற்கின்றாய் நீ! யாழ்ப் பாணர் என்பார் தமிழ்நாட்டுப் பழங்குலத்தார். செவிக்கினிய யாழிலே பண்ணொடு பாட்டிசைத்து இசையின்பம் விளைவித்தவர் அவரே! நாளும் இன் னிசையால் தமிழ் வளர்த்த ஞானசம்பந்தர் காலத்தில் யாழ்ப்பாணர் குலத்திலே திருநீலகண்டர் என்னும் இசைவாணர் தலைசிறந்து விளங்கினர். தேவாரப் பாட்டைப் பண்முறையில் அமைத்துப் பாடியவர் அவரே! இத் தகைய பெருமை வாய்ந்த யாழ்ப் பாணர்கள் உன்பால் வந்து குடியேறினார்கள்; கடற்கரையில் அமர்ந்து பண்ணார்ந்த பாட்டிசைத்தார்கள் மேடும் காடுமாய்க் கிடந்த உன்னைப் பண்படுத்தி னார்கள். அப்போது நீ புதுப்பெயர் பூண்டாய். யாழ்ப்பாணர் திருத்திய காரணத்தால் யாழ்ப்பாணம் என்று பெயர் பெற்றாய். அன்று முதல் உன் இசையும் இயலும் வளர்ந்தோங்கி வருகின்றன.

"வசை தீர்த்த வளநகரே! தமிழ் நாட்டு வள்ளல் அனுப்பிய நெல், இத் தமிழ் நகரத்தில் வந்து சேர்ந் தது சாலப்பொருத்த முடையதன்றோ? இந் நெல்லை அள்ளும்பொழுதும், அளக்கும்பொழுதும், உண வாக்கி உண்ணும்பொழுதும் தமிழ் அன்னத்தால் உயிர்வாழ்கின்றோம் என்ற உணர்ச்சி ஒவ்வொரு வருக்கும் உண்டாகும். அவ்வுணர்ச்சியால் எழுகின்ற நன்றி, ஈழநாட்டுக்கு என்றும் நலமளிப்பதாகும்.

"இசைவாணர் கண்ட மணிநகரே! உன்னால் இந் நாட்டுக்கு வந்த துன்பம் தீர்ந்தது. வயிறார உணவுண்ணும் உயிர்கள் எல்லாம் உன்னை வாயார வாழ்த்துக! உன் திசைநோக்கி வணங்குக!" என்று கைக்கூப்பித் தொழுது விடைபெற்றான் கவலை தீர்ந்த கண்டி மன்னன்.
-----------------------------------------------------------

கம்பர்

பாண்டி நாட்டுக் கடற்கரையிலுள்ள பழம் பதிகளில் ஒன்று தருப்பசயனம் என்னும் திருப்புல்லணை. திருப்புல்லாகிய தருப்பையைத் தலையணையாக வைத்து, கருங்கடலை நோக்கிக் கருணையங் கடலாகிய இராமன் வரங்கிடந்தமையால் திருப் புல்லணை என்னும் பெயர் அப்பதிக்கு அமைந்த தென்பார். வானர சேனையுடன் நாடும் மலையும் கடந்து வந்த இராமன் இலங்கைக்கு எதிரேயுள்ள அக்கடற்கரையை அடைந்தான்; குறுக்கே நின்ற கடலைக் கடந்து எவ்வாறு அரக்கர் நாட்டுக்குச் செல்வது என்றெண்ணிக் கவலையுற்றான். அந்த மனப்பான்மையோடு அவ் வீரன் நின்ற நிலையையும் நெடுங்கடல் அவனை வரவேற்ற நீர்மையையும் கவிக் கண்ணாற் கண்ட கம்பர் பேசுகின்றார்:-

"கருங்கடலே! அரக்கர் வாழும் இலங்கையின் நாற்புறமும் அரணாக நின்று அருங்காவல் புரிகின் றாயே! அவ் வரக்கர் அறநெறி துறந்தவர் என்பதை நீ அறியாயோ? 'இரக்கமற்றவர் அரக்கர்' என்ற வாய்மொழியும் கேட்டிலையோ? உன் காவலால் அன்றோ அன்னார் நிறுவிய வல்லரசு பின்னமின்றி வாழ்கின்றது? 'மா நீர் சூழ்ந்த இலங்கைக்கு மாற்றார் எவரேனும் வரமுடியுமா?' என்று அரக்கர் மார் தட்டிப் பேசுகின்றார்களே! 'அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை' என்று மிஞ்சி அறைகின்றார்களே! உன் துணை யுடைமையா லன்றோ இப்படித் துள்ளுகின்றார்கள்?

அறப் பெருங்கடலே! அரக்கர் வேந்தன் மறக்கள வேள்வி செய்பவன் என்பதை நீ மறந்தனையோ? பஞ்சவடிச் சோலையில் அவன் செய்த பாதகச் செயலை நீ அறியாயோ? மாசற்ற சீதையை நெஞ்சார வஞ்சித்துக் கவர்ந்தானே அந்நிருதர் வேந்தன்! தன்னந் தனியளாய்த் தவச்சாலையில் இருந்த கற்பின் செல்வியை எடுத்துச் சென்று சிறைச்சாலையில் வைத்த அவன் சிறுமையை நீ அறியாயோ? அசோக வனத்தில் சோகமே வடிவாயமைந்த அம் மங்கை, கணவனைத் திக்கு நோக்கித் தொழுவதும், விக்கி விம்மி அழுவதும், மக்கி மடிந்து விழுவதும் கண்டு இரக்கமற்ற அரக்கி யரும் தளர்ந்து ஏங்குகின்றார்களே! அவள் வடிக்கும் கண்ணீர் இலங்கைக் கோட்டையை இடித்து நொறுக்காமல் விடுமோ? 'அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம்' என்பது ஆன்றோர் மொழியன்றோ?

"அலைகடலே! அம் மங்கையின் கணவன் - செங்கமலக் கண்ணன்-வெஞ்சிலை வீரன், இதோ! உன் கரையில் வந்து நிற்கின்றான். அவன் பெருமையை அறிந்துதான் முன்னிலும் அதிகமாய் முழங்கு கின்றாயோ? சீதநீர்த் துளிகளைத் திரைக் கரத்தால் எடுத்து அவன் திருவடியில் தெளிக்கின்றாயோ? கோமகன் வந்தான் என்று குதிக்கின்றாய் போலும்? ஐயோ! அவ் வண்ணலின் நிலையை நீ அறிந்தாய் அல்லையே! ஆழிசூழ் உலமெல்லாம் அரசாளும் உரிமை துறந்து, பூழிவெங் கானம் போந்த புண்ணி யன் அவன்; கானகத்தில் கற்படை மனையாளைப் பறிகொடுத்துக் கடுந்துயர் உழந்த காதலன். மானம் அவன் மனத்தை அறுக்கின்றது. அரக்கர் நகரில் சிறைப்பட்ட சீதையின் சோகம் அவன் உள்ளத்தை உருக்குகின்றது; தூது சென்ற அனுமனிடம் அவள் சொல்லியனுப்பிய செய்தியை நினைந்து நினைந்து நெஞ்சம் துடிக்கின்றான் அவன்; அவள் குறிப்பிட்ட கால அவதி நெருங்குகின்றதே என்று மறுக்கம் உறுகின்றான்; காடும் மலையும் கடந்து வருகையில் சால நாள் கழிந்ததே என்று கவலைப்படுகின்றான்.

"மறிகடலே! நிலப்பரப்பின் எல்லை கண்ட வீரன் இப்போது நீர்ப் பரப்பின் தொல்லை கண்டு துளங்கு கின்றான்; உறக்கம் நீத்த கண்களோடு உன்னைப் பார்க்கின்றானே! + உன்னை நோக்கி அவலமே வடிவ மாக நிற்கும் அண்ணலை மணிவண்ணன் என்பார்கள்; தாமரைக் கண்ணன் என்பார்கள். ஆயினும் மனத்துயரால் மணிவண்ணத்தின் ஒளி மழுங்கி விட்டதே! இரவும் பகலும் உறங்காத கண்கள் செங் கமலத்தின் செவ்வி யிழந்தனவே!* அவன் அகத்தில் அடங்கிய ஆறாத் துயரம் முகத்தில் நன்றாய்த் தெரிகின்றதே! தூங்காத கண்களில் இன்னும் துலக்க மாகத் தோன்றுகின்றதே!

+ "பொங்கிப் பரந்த பெருஞ்சேனை
புறத்தும் அகத்தும் புடைசுற்றச்
சங்கிற் பொலிந்த கையாளைப்
பிரிந்த பின்பு தமக்கினமாம்
கொங்கிற் பொலிந்த தாமரையின்
குழவும் துயில்வுற்று இதழ்குவிக்கும்
கங்குற் பொழுதும் துயிலாத
கண்ணன் கடலைக் கண்ணுற்றான்"
--கம்பராமாயணம் - கடல் காண் படலம்


"முத்து விளைக்கும் முந்நீரே! அறவோனாகிய அப் பெருமானைக் கண்டு நீ அன்பு கொண்டாய்; மெல்லிய தென்றலால் வரவேற்றாய்; அழகிய முத்துக்களைக் கையுறையாக உன் கரையிலே வைத்தாய்; அந்தோ! வந்தவன் மனநிலையறியாது நடந்து கொண்டாயே! உன் வரவேற்பு வெந்த புண்ணில் வேல் எறிந்தாற்போல் அவ் வள்ளலை வாட்டி வருத்துகின்றதே; எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்த்துவிட்டாயே! நீ விடுத்த மெல்லிய பூங்காற்று அவன் மேனியை வெதுப்புகின்றதே! நஞ்சுபோல் நலிகின்றதே! அதற்கும் மேலாக உன் முத்துக்கள் சீதையின் முறுவலை நினைப்பூட்டி, கனலோடு காற்றும் கலந்தாற்போல் கடுவேகத்தை அவன் மனத்தில் ஊட்டி விட்டனவே!

"தூர மில்லை மயில் இருந்த சூழல் என்று மனம் செல்ல
வீர வில்லி நெடுமானம் வெல்ல நாளும் மெலிவானுக்கு
ஈர மில்லாத நிருதரோடு என்ன உறவுண்டு உனக்கு ஏழை
மூரல் முறுவல் குறிகாட்டி முத்தே! உலகை முடிப்பாயோ?" +
+ கம்பராமாயணம் - கடல் காண் படலம்

"தென் கடல் முத்தே! நீரிலே பிறந்து, நீரிலே வளர்ந்த உனக்கு ஈரமில்லாத அரக்கரோடு எப்படி உறவு உண்டாயிற்று? உனக்கும் அவர்க்கும் ஒருவித உடன்பாடும் இல்லையே! பண்பாடற்ற அரக்கரோடு சேர்ந்து ஐயன் மனத்தைப் புண்படுத்தி விட்டாயே! தன்னோடு சீதை கானகம் நோக்கிப் புறப்படும் பொழுது,

"முல்லையும் கடல்முத்தும் எதிர்ப்பினும்
வெல்லும் வெண்ண கையாய்!"

என்று ஐயன் சொல்லியதை இங்கு நினைப்பூட்டி எல்லையற்ற இடர் தந்தாயே! இப்பொழுது அவ்வீரன் மனம் முறுகி நிற்கின்றது; வீணாகக் காலம் கழிகின்றதே என்ற விறுவிறுப்பு எழுகின்றது; பரபரப்புண்டாகிறது. வரைகடந்த சீற்றத்தால் அவான் வரிசிலை யெடுத்து வளைப்பானாயின் இவ் வுலகம் என்னாகும்? சரமாரியால் சராசர மெல்லாம் சாம்பராய் விடுமே!

"நித்திலம் விளைக்கும் நெடுங்கடலே! உன் முகத்தைக் கண்டு பெருங்கோபமும் தாபமும் பிறந்தா லும்அவற்றை அடக்கும் திறம் உடையவன் அவ் வீரன்.செம்மை சான்ற நெறி திறம்பி, ஒருபோதும் வெம்மை விளைக்க அவன் ஒருப்படமாட்டான். 'பொறுத்தார் பூமியாள்வார்; பொங்கினார் காடாள் வார்'என்னும் முதுமொழியின் உண்மை யறிந்து வாழ்பவன் அவன்; 'என்றும் அறம் வெல்லும்; பாவம் தோற்கும்' என்ற கொள்கையை நன்றாக மனத்திற் கொண்டவன்; அரக்கர் செய்த தீமைக் காக அனைத்துலகையும் ஒழிக்க ஒருபோதும் கருத மாட்டான். இத் தகைய வீரனுக்குத் துணைபுரித லன்றோ உனக்குப் பெருமை தரும்? காலத்திற் செய்த நன்றி சிறிதெனினும் அது ஞாலத்தின் மாணப் பெரிது என்பது பொய்யாமொழி யன்றோ? அறவோரை ஆதரிக்கும் ஆழியே வாழி! அல்லோரை அழித்தொழிக்கும் ஆழியே, வாழி!" என்று வாழ்த்தி வணங்கினார் கவிஞர்.
-----------------------------------------------------------

தாயுமானவர்

திருமறைக்காடு என்பது சோழமண்டலக்கரையி லுள்ள பெருமை வாய்ந்த பழம்பதிகளில் ஒன்று. தமிழர் வாழும் இலங்கையைத் தண்ணளியோடு நோக்கி நிற்பது அதன் துறைமுகம். இந் நாளில் அது வேதாரண்யம் என்று அழைக்கப்படுகின்றது. அவ் வூரிலே தோன்றினார் தாயுமானவர் என்று தமிழகம் போற்றும் சிவஞானச் செல்வர். கற்று அறிந்து அடங் கிய அப் பெரியார், திருச்சிராப்பள்ளி முதலிய பல ஊர்களில் உள்ளத் துறவியராய் வாழ்ந்து, இறுதியில் தம் பிறப்பிடமாகிய திருமறைக்காட்டைத் தரிசிக்க வந்திருந்தபோது அங்குள்ள பழங்கடலை நோக்கிப் பேசலுற்றார்:-

"மறைக் காட்டுத் திரைக்கடலே! இம் மண்ணுலகில் நீரிலும் நிலத்திலும் வாழ்கின்ற உயிரினங்களிலே தலைசிறந்தவர் மானிடர் அல்லரோ? 'அரிது அரிது மானிடர் ஆதல் அரிது' என்பதில் ஐய முண்டோ? ஆயினும், அப் பிறப்பின் மேன்மையை மானிடர் அறிந்தனரா? பெரும்பாலோர் அன்ன விசாரம் அதுவே விசாரமாக அலைந்து திரிகின்றார்களே! இதனை வாழ்வு என்று சொல்லலாமா? சிறப்பாகப் பகுத்தறிவு பெற்ற மாந்தர், குறிக்கோள் இல்லாது வாழலாமா? வயிறு வளர்ப்பதையே தம் தொழிலாகக் கொண்டு வாழ்நாளை வறிதாகக் கழிக்கலாமா? உயிர் வாழ்வதற்காக உண்பதும், உண்பதற்காக உயிர் வாழ்வதும் உயரிய செயலாகுமா? மனிதப் பிறப்பின் பெருமையை நினைத்துப் பார்ப்பவர் எத்தனைபேர்? 'நான்யார்?' என்று சிந்திப்பவர் எத்தனை பேர்? 'இப் பிறவி தப்பினால் எப் பிறவி வாய்க்குமோ? ஏது வருமோ?' என்று எண்ணிப் பார்ப்பவர் எத்தனை பேர்? 'யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவது மின்றி மற்றொன்றும் காணாத மாந்தர் பலரல்லரோ?

"நேர்மையுள்ள நெடுங்கடலே! மனித இனத்தில் கற்றவர் மேலோர் என்றும், மற்றவர் கீழோர் என்றும் கருதப் பெறுவர். ஆயினும் கற்றவர் எல்லாம் மெய்யறிவு பெற்ற மேலோர் என்று சொல்ல முடியுமா? கற்ற கல்வியால் கர்வமுற்று, பொய்யை மெய்யாகவும், மெய்யைப் பொய்யாகவும் மாற்றி மருட்டும் மாந்தரும் உளரே! வித்தையின் மதுகையால் நாத்திகம் பேசி நாத் தழும்பேறும் அறிஞரும் உளரே! வாது செய் வதும் பேது செய்வதும் வாக்கு வன்மையால் இயலு மல்லவா? இத் தகைய வித்தகரால் விளையும் தீமையை அளவிட்டுரைக்க லாகுமோ? இதைக் கருதும்பொழுது 'கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்' என்று சொல்லுதல் தவறாகுமோ?

"ஆழ்ந்து அகன்ற பெருங்கடலே! நெடுங்கடல் என்றும் பெருங்கடல் என்றும் பேசப்படுகின்றாய் நீ! பொங்கி எழுகின்றாய்; விழுகின்றாய்! உனக்குக் கங்கு கரை இல்லை. +மாந்தர் கட்டுகின்ற ஏரிக்கும் குளத்திற்கும் கரையுண்டு; மட்டற்ற வெள்ள முடைய நீ, கரை யொன்றும் இன்றியே கட்டுப் பட்டு நிற்கின்றாயே! இஃது இறைவன் செயல் அன்றோ? அவன் ஆணையால் உலகம் இயங்கு கின்றது என்பதற்கு நீயும் ஓர் அடையாளமாய் நிலவுகின்றாயே! அவனன்றி ஓர் அணுவும் அசை யாது என்ற ஆப்தர் மொழியை நீயும் மெய்ப்பிக் கின்றாயே!

+ "உரையிறந்து பெருமை பெற்றுத்
திரைக்கை நீட்டி
ஒலிக்கின்ற கடலே! இவ்
வுலகம் சூழக்
கரையின்றி வைத்தார் யாரே?"
-- தாயுமானவர் பாடல்


"கத்தும் கருங்கடலே! அந்தோ! உனது ஆரவாரம் எனக்குப் பிடிக்கவில்லை. அல்லும் பகலும் நீ அலறுகின்றாயே! அமைதியில் உனக்கு அணுவள வும் நாட்டமில்லையே! சும்மா இருக்கின்ற சுகத்தை நீ அறிந்தா யல்லை! பேசாத நிலையன்றோ பெருநிலை? அந் நிலையை நாடுகின்றது என் உள்ளம். 'சும்மா இரு' என்று எல்லோரும் சொல்லுவர். சொல்லுதல் யார்க்கும் எளிது; சும்மா இருக்கும் செயலோ மிக அரிது. மதயானையை மடக்கலாம்; மற்றைய விலங்கு களை அடைக்கலாம். கனல்மேல் இருக்கலாம்; புனல் மேல் நடக்கலாம். ஆனால், சிந்தையை அடக்கிச் சும்மா இருக்கின்ற திறம் அரிது, அரிது. அத் திறம் பெற்றவர் கோடியில் ஒருவரே என்று கூறவும் வேண்டுமோ?

"அருந் தமிழ்க் கடலே! இத் தமிழ்நாடு தெய்வத் திருநாடு; செயற்கரிய செய்யும் சீலர் நிறைந்த நாடு; மோன நிலையே ஞானநிலை என்றும் காட்டும் மாதவர் மலிந்த நாடு; அனுபவ ஞானம் பெற்ற ஆன்றோர் வாழ்ழும் நாடு. இந் நாட்டிலே அனுபூதிச் செல்வராய் விளங்கிய அருணகிரிநாதரை அறியாதார் உளரோ? அவர் அருளிய 'கந்தர் அனுபூதி' செந்தமிழ் நாட்டார் போற்றும் ஞானக் களஞ்சியம். அந்த அனுபூதியிலே மிளிர்கின்றது ஓர் அருமையான வாசகம்:

"ஆசா நிகளம் துகள்ஆ யினபின்
பேசா அனுபூ திபிறந் ததுவே"

என்ற வாசகத்தைப் படித்தேன்; சிந்தித்தேன்; தெளிந்தேன். அரியவற்றுள் எல்லாம் அரிது என்று ஆன்றோர் பலரும் அறிவுறுத்திய அனுபூதிச் செல்வம் பெற்ற அருணகிரிநாதரை மனமாரப் போற்றி னேன்; அப் பெருமானை ஞானத் தந்தையாகக் கொண்டேன். 'ஐயா! அருணகிரி அப்பா! உன்னைப் போல், மெய்யாக ஓர் சொல் விளப்பினர் யார்?' என்று விம்மிதமுற்று நின்றேன்.

"பழங்கடலே! பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்க மற நிற்கும் பரம் பொருளையே நாடுகின்றது என் நெஞ்சம். பேச்சற்ற நிலையே பேரின்ப நிலை யென்று அறிகின்றது என் உள்ளம். தன்னேரில்லாத் தலை வனைத் தர்க்கமிட்டுக் காணமுடியுமோ?

+"தர்க்கமிட்டுப் பாழாம்
சமயக் குதர்க்கம் விட்டு
நிற்கும் அவர் கண்டவழி
நேர்பெறுவது எந்நாளோ?"
+ தாயுமானவர் பாடல்

என்று பாடிக்கொண்டே கடற்கரையை விட்டகன்றார் தாயுமானவர்
-----------------------------------------------------------

மார்க்கப் போலர்

தென்பாண்டி நாட்டுக் கடலருகே உள்ளது காயல் என்னும் துறை. முன்னாளில் அது பெரிய தொரு துறைமுக நகரம். பொருநையாறு கடலொடு கலக்குமிடத்தில் முத்துவிளையும் பெருந்துறையாக விளங்கிய காயல் இப்பொழுது தூர்ந்து கிடக்கின்றது. கடல் நெடுந்தூரம் விலகிவிட்டது. கலங்கள் இயங்கும் காயலாக அத் துறைமுகம் சிறந்திருந்த காலத்தில் பாண்டி நாட்டிற்கு வந்தார் மார்க்கப் போலர் என்ற மேல் நாட்டு அறிஞர்; காயல் மாநகரைக் கண்டார்; அந் நகரின் அழகிய கடற்கரையிலே நின்று பேசலுற்றார்:-

"தென்னவன் நாட்டு நன்னகரே! முன்னொரு காலத்தில் எத் திசையும் புகழ் மணக்க வீற்றிருந்த இத்தாலிய நாட்டிலே பிறந்தவன் நான். இளமை யிலேயே இவ் வுலகம் முழுவதும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என் உள்ளத்தில் எழுந்தது. அந்த ஆசையால், கலத்தினும் காலினும் போந்து பல நாடு நகரங்களைக் கண்டேன்; பண்டைச் சிறப்புடைய பாண்டி நாட்டை வந்தடைந்தேன்; ஐந்து மன்னர் இந் நாட்டில் ஆட்சி புரிகின்றார்கள். தலை நகரில் சுந்தர பாண்டியன் அரசு வீற்றிருக்கின்றான். அவன் வாழும் முறையையும் ஆளும் முறையையும் கண் டறிந்தேன். துறைமுக நகரமாய் விளங்கும் நீயே பாண்டி நாட்டிற்கு ஏற்றமும் தோற்றமும் தரு கின்றாய்; வாணிக வளத்தின் உறைவிடமாய்த் திகழ்கின்றாய். உன் துறைமுகத்திலே கலங்கள் இயங்கும் காட்சியைக் கண்டு இன்புறுகின்றேன்.

"முத்தம் தரும் முந்நீர்த் துறையே! தென்னாட்டு முத்து எந் நாட்டிலும் சென்று ஏற்ற முற்று விளங்கு வதை நான் அறிவேன். ஆயினும், முத்துச் சலா பத்தை முதன் முதலாக இன்றுதான் கண்டேன். இளவேனிற் காலமே முத்துக் குளிக்கின்ற காலம். அப் பணியில் நன்றாகப் பழகியவர் பாண்டி நாட்டுப் பரதவர். அன்னார் சலாபத் துறையிற் போந்து சலிப்பின்றிப் பணி செய்வதைப் பார்த்தேன். இடுப்பிலே வலைப் பையை இறுக்கிக்கொண்டு, காலிலே கல்லைக் கட்டிக்கொண்டு, படகின் நெடுங் கயிற்றைப் பற்றிக் கொண்டு அவர் கடலின் உள்ளே இறங்குவர். நொடிப் பொழுதிலே கடலடியிற் போந்து, அகப்பட்ட முத்துச் சிப்பிகளை அள்ளிப் பையிலே போடுவர்; மூச்சு முட்டும் வேளை கிட்டியவுடன், காலில் உள்ள கல்லைக் கடலடியிற் கழற்றிவிட்டுக் கயிற்றை அசைப் பர். அப்போது படகின்மீது கண்ணும் கருத்துமாய் நிற்கும் பரதவர் கயிற்றை மேலே இழுத்து முத்துக் குளித்தவரைக் கடலினின்று எடுப்பர்.

"பரதவர் மலிந்த பாண்டித் துறையே! முத்துச் சலாபவேலை நடைபெறும்பொழுது இந் நகரமே புத்துயிர் பெறுகின்றது. உன் கடற்கரையிலே பல நாட்டு வணிகரும் செல்வரும் வட்டமிடுகின்றார்கள். முத்துச்சிப்பி கரையிலே வந்து குவிந்தவுடன் பங் கிடப்படுகின்றது. பாண்டி நாட்டை யாளும் மன்னர்க் குப் பத்தில் ஒரு பாகம்; அடுத்தபடியாக மந்திரம் ஓதும் மறையவர்க்கு இருபதில் ஒருபாகம். முந்நீரில் மூழ்கி முத்தெடுக்கும்போது மீன்கள் தடை செய்யா வண்ணம் மந்திர வலிமையால் அவற்றைக் கட்டி முத்துக்குளிப்பவரைப் பாதுகாக்கும் மறையவர்க்குரிய மந்திரக் கூலியாம் அஃது. இவ் விரு பங்கும் போக எஞ்சிய முத்துதான் பாடுபடும் பரதவர்க்குரிய தாகின்றது.

"காவலர் போற்றும் காயல் மாநகரே! எத்தனை வகையான செல்வம் இருப்பினும் பாண்டி மன்னர்க்கு முத்துச் செல்வமே முதன்மையான செல்வம். அழகிய முத்தைக் காணும்பொழுது, அவர் அடையும் இன்பத் திற்கு ஓர் அளவில்லை. இதனாலன்றோ ஆணி முத்துக் களை அயல் நாட்டார்க்கு விற்கலாகாது என்னும் அரசாங்க விதி பிறந்திருக்கின்றது! நாட்டுக் குடி களில் எவரிடமேனும் ஆணிமுத்து அகப்பட்டால், அதிகவிலை கொடுத்து அரசனே அதனை வாங்கிக் கொள்கின்றான். ஆதலால், பாண்டிய நாட்டுக் கருவூலத்திலுள்ள செல்வத்தை அளவிட்டு உரைத்தல் ஆகுமோ? முன்னோர் தேடிவைத்த முத்தையும் மணி யையும் பாண்டி மன்னர் கண்ணிணும் அருமையாய்க் காக்கின்றார்கள். மேன்மேலும் அவற்றைச் சேர்ப்ப தில் அன்னார் கருத்துச் செல்கின்றதே யன்றி எடுத் துச் செலவழித்தல் என்பது என்றும் இல்லை. சுந்தர பாண்டியன் மார்பில் ஓர் அழகிய முத்தாரம் இலங்கு கின்றது. அது, வழி வழியாக அச் செழியன் குலத்தில் வருகின்ற ஓர் அருங்கலம். ஆணிமுத்துக்களை அணி பெறக் கோத்தமைத்த அந்த ஆரத்தின் விலையை யாவரே மதிக்க வல்லார்? இத் தகைய அணிகள் எத்தனை, எத்தனை!

"கடல்வளம் கொழிக்கும் காயலே! தென்னவன் நாட்டுத் திருவே ஓர் உருவெடுத்தாற்போலத் திகழ்கின்றாய் நீ! பஞ்ச பாண்டியரும் உன்னை நெஞ்சாரப் போற்றுகின்றார்; உன் வாணிக வளத்தினைக் கண்டு உள்ளம் தழைக்கின்றார். மேலைக் கடலிலே செல்லும் வர்த்தகக் கப்பல்கள், உன் துறைமுகத்தைத் தொடாமற் செல்வதில்லை. குடகடலின் வழியாக வரும் கலங் களில் குதிரைகள் ஆயிரம் ஆயிரமாக இங்கே இறங்கு கின்றன. பாண்டியர் ஐவரும் குதிரைப் படையின் பெருக்கத்திலே ஆசையுடையவர்; ஆண்டுதோறும் பதினாயிரம் குதிரைகள் வாங்குகின்றனர்; விரும்பி அதிக விலையும் தருகின்றனர். ஆயினும் குதிரை விற்பவர்கள் நேர்மையாக நடந்து கொள்வதில்லை; பஞ்சவரை வஞ்சிக்கின்றார்கள்.தாம் விற்கும் குதிரை கள் பாண்டிய நாட்டில் வாழவேண்டும் என்ற எண்ணம் அவர்க்கில்லை. ஒல்லையில் அவை ஒழிந்தால் நலம் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். அயல் நாட் டிலிருந்து வாங்கும் குதிரைகளைப் பேணி வளர்க்கத் தெரிந்தவர் தென்னாட்டில் இல்லை. அவை நோயுற்றால் மருந்து கொடுக்க வல்லாரும் இல்லை. குதிரை விற்ப வர்கள் அத்தகைய மருத்துவரை இங்கே வரவிடுவ தும் இல்லை. பாண்டியர் வாங்கும் குதிரைகள் ஓர் ஆண்டிற்குள் மாண்டு ஒழிந்தால், மீண்டும் பதினாயிரம் பரிகளைக் கொண்டுவந்து விற்கலாமல்லவா? இப்படி அரசனை வஞ்சித்துத் தம் வாணிகத்தை வளர்க்கின்றார் அயல் நாட்டுக் குதிரை வர்த்தகர்! ஆயினும் இப்படிப் பிழைக்கின்ற ஏழை மக்கள் உன் முத்துச் செல்வத்தைப் பறிக்க முடியுமா? முத்தம் தரும் முந்நீர்த் துறையே! நீ நித்தம் வாழி, வாழி!" என்று வாழ்த்தி விடை பெற்றார் மார்க்கர்.
-----------------------------------------------------------

ஆனந்த ரங்கர்

புதுவை என்னும் புதுச்சேரி முன்பு பிரஞ்சு ஆட்சியிலுள்ள துறைமுக நகரம். புதுச்சேரியைப் பாண்டிச்சேரி என்று வழங்கலாயினர் வெள்ளைப் பரங்கியர். அந் நகரில் வாணிகத்தால் வளம் பெற்ற வருள் ஒருவர் ஆனந்த ரங்கர். மதி நலத்தால் அவர் மன்னரும் மதிக்க வாழ்ந்தார். புதுவையில் ஆட்சி புரிந்த பிரஞ்சுக் கவர்னர்களில் தலைசிறந்தவன் டூப்ளே என்பவன். அவனுடைய நன்மதிப்பை நிரம்பப் பெற்றவர் ஆனந்த ரங்கர். நாள்தோறும் நாட்டிலே தாம் கண்ட காட்சியையும், கேட்ட செய்தியையும் ஒழுங்காகக் குறித்து வைத்தார் அவர். அதுவே இப்பொழுது சிறந்த சரித்திரக் களஞ்சியமாக விளங்கு கின்றது

பன்னீராண்டு புதுவையில் கவர்னராயிருந்து பணி செய்த டூப்ளேயின் பெருமையை அன்று பிரஞ்சு நாட்டார் அறிந்தாரல்லர். அரசியலாளரின் கோபத்திற்கு ஆளாகி, அப் பெருமகன் பதவியிழந்து, விரசு கோலந் துறந்து, பாரீசுக்குக் கப்பலேறிய நாளில் பழைய நினைவுகளெல்லாம் ஆனந்தரங்கர் உள்ளத்தில் பொங்கி எழுந்தன. அவற்றை எவரிடமும் சொல்லி ஆற்றிக்கொள்ள விரும்பாது அந்தி மாலையில் அவர் கடற்கரையில் பேசலுற்றார்:-

"பொங்கு மாக்கடலே! புதுவையின் கவர்ன ராய்ப் பன்னீராண்டு ஆட்சி புரிந்த பெருமகன் இன்று காலையில் கப்பலேறிச் சென்றான். இந் நாளை நான் எந்நாளும் மறக்க முடியுமா? இத்தனை காலமும் என் இன்ப துன்பங்களுக் கெல்லாம் காரணனாய் இருந்த அக் கவர்னரையே நினைத்துக் கரைகின்றது என் நெஞ்சம். ஐயோ! பெருங்கடலே! என் கதையை உன்னிடம் சொல்லாமல் வேறுயாரிடம் சொல்வேன்? நான் சென்னையின் அருகேயுள்ள ஒரு சிற்றூரில் பிறந்தேன். என் தந்தையாரோடு இளமை யிலேயே இந்த ஊரை வந்தடைந்தேன். 'புதுவையை அடைந்தவர் புதுவாழ்வு பெறுவர்' என்று என் தந்தையார் நம்பினார். அவர் முயற்சி யுடையவர்; 'வர்த்தகமே அர்த்த சாதனம்' என்று அடிக்கடி சொல்வார். இத் தகைய பண்புடைய தந்தையார் என் பதினாறாம் ஆண்டில் பரமபதம் அடைந்து விட்டார்.

"ஈர நெடுங்கடலே! அன்று தொட்டுக் குடும் பப் பொறுப்பெல்லாம் என் இளந்தலையில் விழுந்தது. ஆயினும் நான் தயங்கவில்லை; 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்ற முதுமொழியை நம்பி வர்த்தகம் செய்யத் தலைப்பட்டேன்; புதுவையில் அங்காடி வீதியிலே ஒரு சிறு பாக்குக் கடை வைத்தேன். அக் கடையே என் ஆக்கத்திற்கு அடிப்படையாய் அமைந்தது. ஆதலால், அக் கடையை விடாமல் இன்றுவரை நடத்தி வருகி்ன்றேன். அதில் ஆனந்தமாய் இருந்து என் தாய் மொழியைக் கற்கவும் கேட்கவும் எனக்கு ஆசை அதிகம். 'செல் வத்துட் செல்வம் செவிச்செல்வம்' என்ற அருமைத் தமிழ் மறையை நான் எந் நாளும் மறந்தறியேன். அருந் தமிழ் விருந்தளிக்கும் அறிஞருக்குப் பெரும் பொருள் அளிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஒரு நாள் மதுரகவி என்னும் பாவலர் என்னைக் காண வந்தார். மாலைப்பொழுது. நான் இன்று போலவே அன்றும் இக் கடற்கரையிலே உலாவிக் கொண்டிருந்தேன். அவர் வந்ததும் தேன்மடை திறந்தாற் போல் பாடத் தொடங்கினார். நெடுங்கடலே! உன் மெல்லிய காற்றினும் இனிமையா யிருந்தது அவர் பாடிய தெள்ளிய தமிழ்ப் பாட்டு. அப்போது நான் நடையை மறந்தேன்; கடையை மறந்தேன்; ஆனந்த பரவசனாயினேன். அந் நிலையைக் கண்டார் கவிஞர்; அளவிறந்த அன்பு கொண்டு என்னைப் பற்றியே ஓர் பாட்டுப் பாடிவிட்டார்.

' உலங்கொண்ட மனிப்புயனே! பிரம்பூர் ஆ
னந்தரங்கா! உன்பாற் சொல்ல
வலங்கொண்ட கருடனையாம் இடங்கண்டோம்
எழில்நரையான் வலத்தே கண்டோம்
பொலங்கொண்ட மணிமாட மீமிசையில்
புயல்தவழும் புதுவை யென்னும்
தலங்கண்டோம் நினதுநகை முகங்கண்டோம்
இனிவேண்டும் தனம்கண் டோமே!"
-- பெருந்தொகை, 1357.

"புதுவைப் பெருங்கடலே! இப்போது புதுச் சேரி புத்துயிர் பெற்று வருகின்றது; வர்த்தகத்தால் வளம் பெருகுகின்றது; குச்சு வீடுகள் மச்சு வீடுகளாகின்றன. புதியவாகப் பல பேட்டைகள் உண்டா கின்றன. ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் வாணிகத் துறையிலே போட்டியிடுகின்றனர். இருதிறத்தா ரும் தங்கள் பெயரை இத் தமிழ் நாட்டில் நிலை நாட்ட ஆசைப்படுகிறார்கள். ஆங்கிலேயரின் வர்த்தக நிலைய மாகிய சென்னையில் 'காலட்' என்பவர் சிறிது காலம் கவர்னராயிருந்தார்; நெசவுத் தொழிலைப் பேணி வளர்ப்பதற்காக நல்ல நீரும் நிழலும் அமைந்த திருவொற்றியூரிலே ஒரு பேட்டையை உண்டாக்கினார்; நூறு குடும்பங்களைக் கொண்ட அக் குடியிருப்புக்குக் 'காலட்பேட்டை' என்ற பெயர் கொடுத்தார். காலட் கவர்னர் கப்பலேறிப் போய் விட்டார். அவர் பெயர் தாங்கிய பேட்டை 'காலாடிப் பேட்டை' என்று இப்போது வழங்குகின்றது. வெள்ளைப் பெயரால் விளையும் விபரீதத்திற்கு வேறு சான்று வேண்டுமா?

"முந்நீர்ப் பெருந்துறையே! இத்தகைய பேராசை டூப்ளே கவர்னரிடமும் இருந்தது. புதுச்சேரியின் பாக்கமாக அமைந்த ஒரு சிற்றூருக்கு அவர் டூப்ளேப் பேட்டை என்று பெயரிட்டார்; எல்லோரும் அவ்வூரை அப்படியே அழைக்கவேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்; துரைத்தன அதிகாரிகள் டூப்ளேப் பேட்டையிலேதான் வீடு கட்டி வசிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். ஆயினும், நாட்டு மக்களுக்கு புதுப்பெயரிலே நாட்டமில்லை. 'தானாய்ப் பழுத்தால் பழமா, தடியால் அடித்தால் பழமா?' என்பது பழமொழியல்லவா? மேலும் டூப்ளேப் பேட்டை என்ற பெயர் நாட்டு மக்கள் நாவில் நல்ல முறையில் வருமா? இயற்கைக்கு மாறாக வற்புறுத் தினால் காலாடிப்பேட்டை போன்ற விபரீதந்தான் விளையும். டூப்ளேப்பேட்டை என்பது துவளைப் பேட்டையாகுமோ? அல்லது தவளைப் பேட்டை யாகுமோ? யார் அறிவார்? பேராசையுடைய டூப்ளேயின் செவியில் இதைச் சொன்னால் ஏறாதென்று நான் சும்மா இருந்து விட்டேன்.

" நலமார்ந்த நற்கடலே! ஒரு நன்றி செய்தாரை உள்ளத்தில் வைத்துப் போற்றுவது தமிழர் பண்பு. அந்த முறையில் எனக்குப் பெருநன்றி செய்த டூப்ளே துரையை நான் என்றென்றும் போற்றுவேன். புதுவையில் பிழைக்கவந்த எனக்கு ஏற்றமும் தோற்றமும் அளித்தவர் அவரே! சிறப்புடன் சிவிகையில் ஏறி, மேளதாளத்துடன் அவர் மாளிக்கைக்குச் செல்லும் உரிமையை எனக்குத் தந்தார் அவர்; அங்காடி விலைகளையும் அரசியல் முறைகளையும் அந்தரங்கமாக என்னுடன் ஆலோசித்தார்; நிற வேற்றுமை சிறிதும் இன்றி நெருங்கி என்னுடன் மனங்கலந்து பேசி மகிழ்ந்தார்; மாறுபட்ட கருத்தை நான் எடுத்துரைத்தாலும் சீறி விழ மாட்டார்; தம் செவியில் ஏற்று நிதானமாக ஆராய்வார். இது வன்றோ நல்லமைச்சனுக்கும் அதிகாரிக்கும் ஏற்ற பண்பு?

"கரை காணாக் கருங்கடலே! ஆயினும், அவரிடம் ஒரு பெருங்குறை யுண்டு. அக் குறையினால் குன்று முட்டிய குருவி போல் மறுகினார் அப்பெருமகனார். அவருக்கு மனையாளாய் வாய்த்த மேடம், செருக்கும் சிறுமையும் உடையவள்; எல்லோரையும் அடக்கி ஆள்வதில் ஆசையுடையவள். வீட்டிலே அவள் இட்டதே சட்டம். பொறியில் அகப்பட்ட எலிபோல் அடங்கி அவள் சொல்லின் வழியே சுழல்வார் டூப்ளே துரை; ஒன்றும் மறுத்துப் பேச மாட்டாமல் விழிப்பார். அவள் அதிகாரம் வீட்டளவில் நின்றுவிடவில்லை. அரசியல் வேலைகளிலும் அவள் தலையிட்டு அல்லல் விளைப்பால். அம் மேடம் தருக்குற்றுத் தகாத செயல்களைச் செய்யத் தூண்டும் பொழுது டூப்ளே தடுத்துச் சொல்ல அஞ்சுவார்; சில வேளைகளில் அடிமைபோல் கெஞ்சுவார்; அவர் கெஞ்சக் கெஞ்ச அவள் மிஞ்சுவாள். அந்தோ! பேய் கொண்டாலும் கொள்ளலாம்; இத்தகைய பெண் கொள்ளலாகா தம்மா!

"காலங் கண்ட நெடுங்கடலே! அன்றாடம் கவர்னர் வீட்டிலும் வெளிநாட்டிலும் நான் கண்டதும் கேட்டதும் பல உண்டு. அவற்றை யெல்லாம் என் நாட் குறிப்பிலே நான் எழுதி வைக்கத் தொடங்கினேன். அவ்விதம் குறித்து வைப்பதில் ஒரு கருத்தும் எனக்கில்லை. பசித்தவன் பழங்கணக்கைப் பார்ப்பது போல் வேலையற்ற வேளைகளில் என் நாட்குறிப்பைப் பார்த்துப் பொழுது போக்குவேன். இக் காலம் மிகக் குழப்பமான காலம்; முத் திறத்தார் ஆதிக்கம் பெற முயலும் காலம். மகமதியரும், ஆங்கிலேயரும், பிரெஞ்சுக்காரரும் ஒருவரை ஒருவர் ஆள்வினையாலும் சூழ்வினையாலும் வென்று உயரக் கருதும் காலம். இந்தக் காலத்தில் டூப்ளே கவர்னராக வந்தது புதுவைக்கு ஒரு நல்ல காலம்!

"புகழார்ந்த புதுவைக் கடலே! தென்னாட்டிலே பிரெஞ்சு ஆட்சியை நிறுவ ஆசைப்பட்டார் டூப்ளே; மகமதிய நவாப்போடு அரசியல் சதுரங்கம் ஆடினார்; சென்னையில் இருந்த ஆங்கிலயேர் மீது கப்பற்படை கொண்டு சாடினார். பிரெஞ்சுப்படை வென்றது. சென்னைக் கோட்டையிலே பிரெஞ்சுக் கொடி பறந்தது; டூப்ளேயின் புகழ் உயர்ந்தது. பிரெஞ்சுக் கொடியை வணங்கிப் பணியாத ஆங்கிலப் படை வீரரை யெல்லாம் சிறைப்பிடித்துப் புதுவைக்குக் கொண்டுவரும்படி ஆணை பிறந்தது. சென்னைக் கவர்னராயிருந்த மார்ஸ் என்பவரும் அவர் பரிவார மும் இப் புதுவைத் துறைமுகத்திற்குக் கொண்டுவரப் பெற்றனர்; ஆங்கிலக் கவர்னருக்கு மரியாதை காட்டி வரவேற்கக் கருதியவர்போல் டூப்ளே ஆடம்பரமாக இத் துறைமுகத்திற்கு வந்தார். அம்மம்ம! அப் போது இக் கடற்கரையில் கூடியிருந்த மக்களுக்குக் கணக்குண்டா? ஆரவாரத்திற்கு ஓர் அளவுண்டா? புதுவைக் கடலினும் பெரிதாகப் பெருமுழக்கம் செய்த மக்களைக் கண்டு டூப்ளே மனங் குளிர்ந்தார்; மார்ஸ் மனந் தளர்ந்தார். அன்று மலர்ந்த செந் தாமரையை ஒத்தது டூப்ளேயின் முகம்! மாலைக் கமலம் போல் வாடிக் குவிந்தது மார்ஸின் முகம். இந்தக் கோலத்தில் வெற்றிபெற்ற கவர்னரும் தோல்வியுற்ற கவர்னரும் புதுவையின் வீதியின் வழியே சென்ற காட்சிக்கு நிகரான தொன்றை நான் என்றும் கண்ட தில்லை. மறுநாள் டூப்ளேயின் மாளிகைக்குச் சென் றேன். ஆனந்த மயமாக விளங்கிய அவர் 'ஆனந்த ரங்கரே வாரும்' என்றழைத்தபோது நான் என்றும் இல்லாததோர் இன்பம் பெற்றேன். அவர் மதி நலத்தை மனமாரப் புகழ்ந்துரைத்தேன்.

"புகழ்பூத்த புதுவைத் துறையே! சென்னையிலே பிரஞ்சு ஆதிக்கம் பெருகக்கண்ட மகமதிய நவாப்பு பெருஞ்சீற்ற முற்றார்; முள் மரத்தை முளையிலே கிள்ளி யெறியவேண்டும் என்றெண்ணிச் சென்னையின்மீது படையெடுத்தார். நவாப்பின் மைந்தன் மாவுஸ் கானே படைத்தலைவனாயினான். இதையறிந்த டூப்ளே புதுவையிலிருந்து ஒரு பட்டாளத்தைச் சென்னைக்கு அனுப்பினார். அடையாற்றின் வடகரையில் இரு படைகளும் கை கலந்தன; கடும்போர் புரிந்தன. சிறிது நேரத்தில் மகமதியர் படை சின்ன பின்ன மாய்ச் சிதறி ஓடிற்று. 'மகமதியர் அதிசூரர்; அவரை வெல்ல எவராலும் ஆகாது' என்று பொதுமக்கள் எண்ணியிருந்த எண்ணம் அடையாற்றுப் போரிலே அடிபட்டு ஒழிந்தது. மகமதியரது பேராண்மையைத் தகர்த்த டூப்ளேயின் புகழ் மும்மடங்கு வளர்ந்தது.

"நிலையற்ற பெருங்கடலே! ஆயினும் இன்ப மும் துன்பமும் கலந்தே இவ் வுலக வாழ்க்கை. உயர்ந்தவர் தாழ்வர்; தாழ்ந்தவர் உயர்வர். நாட்டிலே குழப்பம் பெருகிற்று; வர்த்தக வளம் குறுகிற்று; பாரீசு நகரம் பரபரப்புற்றது. டூப்ளேதான் இதற் கெல்லாம் காரணம் என்ற கருத்துப் பரவிற்று. எல் லோரும் அவரைக் கைவிட்டார். முன்பு கரும்பாய் இருந்தவரேல்லாம் வேம்பாயினர்; வேலையைவிட்டு அவரை நீக்கினர்; மற்றொருவரைக் கவர்னராக நியமித் தனர். புதிதாக வந்த கவர்னரிடம் புதுவையை ஒப்புவித்து, பாரீசை நோக்கிப் புறப்பட்டார் டூப்ளே.

"கதறும் பெருங்கடலே! அந்தோ! அன்று கவர்னராய் அவர் இந்தத் துறைமுகத்தில் வந்து இறங் கிய பெருமை என்ன! அவரை வரவேற்ற மாட்சி என்ன! அலங்காரக் காட்சி என்ன! பன்னீராண்டு அவர் ஆட்சி புரிந்தார். அப்போது அவர் நாவசைந் தால் இந் நாடசையுமே! அவர் அறிவிற் சிறந்தவர்; ஆள்வினை யுடையவர்; ஆங்கிலேயரை அலற வைத்தார்; மகமதியரை மறுகவைத்தார்; பாதுஷாவை யும் பதற வைத்தார். இத் தகைய பிரஞ்சு கவர்னர் எளியராய்த் தனியராய் இன்று இந் நகரை விட்டுச் செல்கின்றார்; நிதியிழந்து, நிமிர்ந்த நடையிழந்து, வழியனுப்ப நண்பர் யாருமின்றி வைகறைப் பொழு திலே இப் பதியை விட்டுப் போகின்றார். காட்டில் அரசு வீற்றிருந்த சிங்கத்தைக் கூட்டில் அடைத்தாற் போல் அவரைக் கப்பலில் ஏற்றிக் குற்றவாளிபோல் கொண்டு செல்கின்றார்களே! இன்று அக்டோபர் மாதம் பதினான்காம் தேதி; இந் நாள் அவர்க்கு அட்டமத்தில் சனியாய் அமைந்ததே! பாரீசு நகரத் தில் இனி அவர் என்ன பாடு படப்போகின்றாரோ?" என்று கண்ணீர் வடித்துக்கொண்டு கடற்கரையை விட்டகன்றார் ஆனந்த ரங்கர்.

ஆசிரியர் : ரா.பி. சேதுபிள்ளை

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

3.02857142857
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top