பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

காவியமும் ஓவியமும் பாகம் - 3

காவியமும் ஓவியமும் எனும் நூலில் உள்ள கட்டுரைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பாகம் பெருந்தகு நிலை

நாலு திசையிலும் ஒரே பசுமை; மழைக் காலத்தில் காடு முழுவதும் தளிரும் பூவும் குலுங்குகின்றன. அடர்த்தியான அந்தக் காட்டினிடையே மெல்லச் செல்கிறது தேர். தேருக்குள்ளே ஆணில் அழகன், வீரர்க்குள் வீரன் ஒருவன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். தான் மேற்கொண்ட காரியத்தில் வெற்றியடைந்த மிடுக்கை அவனுடைய எடுப்பான பார்வை எடுத்துரைக்கிறது. இயற்கை யெழிலை இறைவன் வஞ்சகமின்றி வாரி இறைத்திருக்கும் வனத்தைப் பார்க்கிறான். எத்தனை அழகு ததும்புகிறது! தேருக்குப் பின்னே ஒரு கூட்டம் வருகிறது. வில்லும் கையுமாக வரும் வீரர் கூட்டம் அது. ஆனால் அவர்கள் வில்லில் நாணை ஏற்றவில்லை. சிரிப்பும் பாட்டுமாக வருகிறார்கள் அவர்கள்.

தேரில் இருப்பவன் திடீரென்று தன் சாரதியைப் பார்த்து, "வலவ, குதிரையை வேகமாக ஓட்டு. எவ்வளவு வேகமாக ஓட்ட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓட்ட வேண்டும். உன் கைத்திறமையை இன்று தான் பார்க்கப் போகிறேன்" என்று கட்டளையிடுகிறான்.

தேர்ப்பாகனுக்கு இந்த அவசரத்துக்குக் காரணம் விளங்கவில்லை. போர் முடிந்து விட்டது. படைத் தலைவனாகிய அந்த வீரன் தன் படையாளருடைய ஊருக்கு மீண்டு வருகிறான். இப்பொழுது எதற்கு அவசரம்? போகும்போதுதான் அரசன் ஆணையை ஏற்றுத் தலைதெறிக்க ஓட வேண்டியிருந்தது.

'இது வரையில் நிதானமாகத்தானே வந்தோம்? இவரும் காட்டின் அழகைப் பார்த்து வந்தாரே. இதற்குள் திடீரென்று இப்படி உத்தரவிடுகிறாரே' என்று எண்ணி வீரனைத் திரும்பிப் பார்த்தான்.

"குதிரையின் வேகத்தை இன்று அளந்து காட்ட வேண்டும். இதுவரையில் நீ தாற்றுக்கோலை உபயோகித்ததே இல்லை. அது இங்கே துருப்பிடித்துக் கிடக்கிறது. அதைக்கூட இன்று நீ உபயோகிக்கலாம். எப்படியாவது விரைவில் ஊர் போய்ச் சேர வேண்டும்."

பாகனுக்கு வியப்பின்மேல் வியப்பு உண்டாயிற்று.

"பின்னால் வருகிறார்களே, அவர்கள்...?" என்று கேள்வித் தொனியோடு நிறுத்தினான்.

"அவர்கள் மெல்ல வரட்டும். அவர்கள் போரில் மிகவும் சிரமப்பட்டு நம் மன்னருக்கு வெற்றியை உண்டாக்கினார்கள். அதோடு நெடுந்தூரம் வேகமாக நடந்து வந்திருக்கிறார்கள். அவ்வீரர்கள் வேண்டிய இடத்தில் தங்கி, கச்சையையும், கவசத்தையும் கழற்றி வைத்துவிட்டு இளைப்பாறட்டும். இஷ்டம்போல் இருந்துவிட்டு மெல்ல மெல்ல வரலாம். அவசரம் இல்லை. நான் விரைவிலே போகவேண்டும். சவுக்கை எடுத்துக் கொள்."

பாகனுக்கு மயக்கம் தெளியவில்லை. அந்த வீரர்களோடு ஒன்றாகப் புறப்பட்ட படைத்தலைவன் எதற்காக முன்னால் போகவேண்டுமென்று முடுக்குகிறான்? தாற்றுக் குச்சியைக்கூட உபயோகிக்கும்படி சொல்லுகிறானே! குதிரைகள் என்ன சாதாரணமானவையா!

தலைவன் பாகனது உள்ளத்தை உணர்ந்து கொண்டான். குதிரைகளைக் குழந்தைகளைப் போலப் பாதுகாக்கும் பாகனை, அதுகாறும் தீண்டாத முட்கோலைத் தீண்டி ஓட்டும்படி சொல்லலாமா? சொன்னது தவறுதான். பாகனுக்குத் தன் மன வேகத்தை எப்படி விளக்குவது?

"அங்கே பார்!" என்று தலைவன் சுட்டிக் காட்டினான்.

அதுவரையில் தலைவன் கண்கள் அந்த இடத்திலே பதிந்திருந்தன என்பதைப் பாகன் இப்போது தான் உணர்ந்தான்.

பாகனும் பார்த்தான். அவனுக்கு எல்லாம் தெளிவாகிவிட்டது. தலைவனது உள்ளம் அங்கில்லை என்பதை அறிந்தான்.

அங்கே கண்ட காட்சிதான் என்ன?

மழை பெய்து ஓடிய ஓடையில் மணல் இன்னும் புலரவில்லை. அங்கே காட்டுக் கோழிகள் இரண்டு அங்கும் இங்கும் உலவுகின்றன. ஆண்கோழி 'கொறக் கொறக்'கென்று சத்தமிடுகிறது. உருக்கின நெய்யிலே பாலைத் தெளித்தது போலச் சொட சொடவென்றிருக்கிறது அதன் குரல். பல புள்ளிகளையுடைய அந்த ஆண் - கோழி அழகாக இருக்கிறது. ஈரமணலைக் கிண்டி ஒரு புழுவைக் கொத்துகிறது. கொத்தின சந்தோஷமோ, பேடைக்குக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணமோ, தன் பின்னாலே நின்ற பேடையைக் கம்பீரமாகத் திரும்பிப் பார்க்கிறது. அந்தப்பெருந்தகு நிலையில் கண்ணைச் சிக்கவிட்ட தலைவன் மனம் அந்தக் காட்டைக் கிடந்துபோய் வீட்டின் தலைவாசலிலே நிற்கிறது.

தலைவன், அரசன் ஆணையைச் சிரமேல் தாங்கி உயிரினும் வேறு அல்லாத தன் காதலியைப் பிரிந்து போருக்கு வந்தான். போர் முடிந்தது. அந்தக் கான வாரணம் உணவை ஈட்டிய திருப்தியோடு பேடைமுன் நிற்பது போலத் தானும் வெற்றி ஏந்திய தோளோடு காதலியின் முன் நிற்க விரைவது என்ன ஆச்சரியம்!

இனி, பாகன் தாமதிபானா? குதிரையைத் தட்டிவிட்டான்.

தலைவன் கூற்று

விரைப்பரி வருந்திய வீங்குசெலல் இளையர்

அரைச்செறி கச்சை யாப்பழித் தசைஇ

வேண்டமர் நடையர் மென்மெல வருக;

தீண்டா வைமுள் தீண்டி நாம்செலற்

கேமதி வலவ, தேரே; உதுக்காண்

உறுக்குறு நறுநெய் பால்விதிர்த் தன்ன

வரிக்குரல் மிடற்ற அந்நுண் பல்பொறிக்

காமரு தகைய கான வாரணம்,

பெயனீர் போகிய வியனெடும் புறவிற்

புலரா ஈர்மணல் மலரக் கெண்டி

நாளிரை கவர மாட்டித்தன்

பேடை நோக்கிய பெருந்தகு நிலையே.

-- நற்றிணை - மருதன் இளநாகனார் பாட்டு.

[விரைப்பரி வருந்திய - விரைந்த நடையால் களைப் புற்ற. இளையர் - வீரர். அரைச் செறி கச்சை யாப்பு - இடையிலே செறிந்த கச்சையின் கட்டை அழித்து - அவிழ்த்து. அசைஇ - இளைப்பாறி. வைமுள் - கூர்மையான முட்கோல். ஏமதி - ஓட்டுவாயாக. வலவ - பாகனே. உதுக்காண் - அதோ பார். விதிர்த்தன்ன - தெளித்தாற் போல. கானவாரணம் - காட்டுக்கோழி. பெயனீர் - மழைத் தண்ணீர். புலரா - உலராத. ஈர்மணல் - ஈரமான மணல். மாட்டி - கொன்று.)

ஆண் சிங்கம்

போர்க்களம் என்றால் அது சாமான்யமான போர்க்கலாமா? இருசாரிலும் படைவீரரும் குதிரைப் படையும் யானைப்படையும் தேர்ப்படையும் கடுமையாகப் போர் புரிந்தனர். நிலமகள் முதுகு உளுக்கும் படியான போர். தேர்ந்தெடுத்த வீரர் பெருங் கூட்டம் தினவுபெற்ற தோள்களின் வலிமையை உலகு உள்ளளவும் நிலைநிறுத்த முனைந்து வந்திருக்கிறது. படைகளின் பெருமை அவற்றிலுள்ள யானையின் மிகுதியினாலேயே புலப்படுகிறது. யானையையுடைய பெரும்படையைச் சிதைக்க வேண்டும் என்று ஒவ்வொரு வீரனும் உறுதி பூண்டு முன் நிற்கிறான். யானை அம்பினாலே சாயாது; அடியினாலே மடியாது. யானைக்கு ஏற்ற படை வேல்தான்.

போர்க்களத்தில் பல யானைகளைத் தன் கை வேலால் குத்தி மடிப்பதே வீரத்துள் வீரம் என்று கருதும் தமிழர் வழி வந்தோர் அப்படை வீரர்கள். அப்படி யானைகளை வீழ்த்திவிட்டுத் தாம் இறந்தாலும் பொன்றாப் புகழொடு மாயலாம் என்ற துணிவு அவர்களுக்கு இருக்கிறது. யானையெறிந்த வீரர்களைப் புலவர்கள் பாடுவார்கள்; அவர்கள் இறந்தால் வீரக்கல் நாட்டுப் பூசிப்பார்கள் அந்தக் கல்லில் பெயர் எழுதிப் புகழ் பரவி இளைஞர்கள் தலை வணங்குவார்கள். யானைப்போர் அவ்வளவு உயர்ந்தது, அருமையானது என்பது அவர்கள் கருத்து.

போர் நடக்கிறது; யானையும் யானையும் முட்டுகின்றன; குதிரையும் குதிரையும் இடிக்கின்றன; வீரரும் வீரரும் எதிர்க்கின்றனர். எங்கும் செங் குருதி வெள்ளம். உருண்ட தலையும் அறுந்த தோளும் வெட்டிய காலும் துணிபட்ட குதிரையும் கிடக்கின்றன. யம கிங்கரர்களின் வருங்கால சந்ததிகளுக்குச் சிற்றில் இழைத்துச் சிறுசோறு சமைத்து விளையாடுவதற்கு ஏற்ற இடம்போல் விளங்குகிறது அக்களம். பேய்க்கும் கழுகுக்கும் நரிகளுக்கும் வயிறார விருந்தளிக்கும் அந்தக் களத்திலே வீரம் தாண்டவமாகிறது.

அந்தக் கூட்டத்தில் ஒரு வீரன் பம்பரம் போல் சுழன்று திரிகிறான். அவன் வீரக் குடியிலே பிறந்தவன். அவனுடைய தாய் பாலூட்டுகையிலேயே வீரத்தையும் கரைத்து ஊட்டியிருக்கிறாள். "ஆயிரம் வீரர்களைக் கொல்வதைவிட ஓர் யானையை எறிந்து வீழ்த்துவதுதான் வீரம். நீ போர்க்களத்தில் இறந்து போனாலும் பல யானைகளைக் கொன்றுவிட்டுப் பிறகே மார்பில் புண்பட்டு வீழ்ந்தாயென்று அறிந்தால் நான் உன்னைப் பெற்ற பெருமையைப் பாராட்டி உயிர் விடுவேன்" என்று அந்த மறக்குடிப் பெண் அவனுக்கு உபதேசம் செய்திருக்கிறாள். தன் தாயின் வார்த்தைகள் அவனுக்குப் பொருள்படும் பருவம் வந்த காலத்தில் அவன் அறிந்த செய்திகள், கதைகள் எல்லாம் களிறு எறிந்த வீரர் கதைகளே. "ஆண் சிங்கம் ஆண் சிங்கம் என்று சொல்லுகிறார்களே, ஏன் தெரியுமா? பிடரி மயிரும் எடுத்த பார்வையும் மாத்திரம் சிங்கத்தின் லக்ஷணத்தைத் தந்து விடுமென்று எண்ணாதே. பருமனாக வீங்கிய உடம்பையுடைய யானையைக் கிழித்து வீழ்த்தி விடுவதுதான் சிங்கத்துக்குப் பெருமை. நீயும் சிங்கக்குட்டி யென்று பேரெடுக்க வேண்டுமானால் போரில் யானைகளுக்கு எமனாக விளங்குவாயாக! இந்தா, பிடி இந்த வேலை; இதுதான் உன்னுடைய மூதாதையர் வைத்திருக்கும் சொத்து. இந்த வேலால் யானைகளை எறிந்து உண்மையான சிங்கமாகப் புகழடையவேண்டும்" என்று தன்னை வாழ்த்திப் போர்க்களத்துக்கு அனுப்பிய தாயின் வீர உரையை அவன் மறக்கவில்லை.

அந்த வேலைச் சுழற்றிக்கொண்டு திரிகிறான். நல்ல வேளையாக, பகைப் படையின் தலைவனுக்கு உரிய யானையே எதிர்ப்பட்டது. அதனைக் குறி பார்த்துத் தன் நெடிய வேலை எறிந்தான். அதன் பெரிய உடலில் அது பாய்ந்து தங்கிவிட்டது; ரத்தம் குபீரென்று அருவிபோலப் பீச்சி அடித்தது. இனி அந்த யானை அடுத்த உலகத்திற்குப் போக வேண்டியதுதான்.

இப்போது வீரனுக்கு ஒரு கவலை வந்துவிட்டது. 'நம்முடைய கைவேலை யானைமேல் வீசினோம்; அதன் உடலில் அது தங்கிவிட்டது. நம் கையில் இப்போது ஆயுதம் ஒன்றும் இல்லையே! எதைக் கொண்டு போர் செய்வது?' என்று ஒரு கணம் ஏங்கினான். தன் திரண்ட தோளையும் மார்பையும் கொண்டான். மார்பிலே பார்வை சென்றபோது அவன் யானையை வீழ்த்துவதற்காக வந்த வேகத்தில் மார்பிலே தன் கைவேலை வீசி எறிந்தான். அது யானைபோன்ற அவன் மார்பிலே தைத்தது. ஒரே ஆத்திரத்தோடு யானைமேல் பாயும் அவ்வீரன் அதனை அநாயாசமாக ஏற்றுக்கொண்டு வேகம் குறையாமலே போய்த் தன் காரியத்தை முடித்தான். தன் மார்பில் பாய்ந்த வேலை அந்த வேகத்தில் மறந்தான்.

இப்போது அந்த வேல் அவன் கண்ணிற்பட்டது. அவனுக்கு எவ்வளவு குதூகலம் தெரியுமா? அம்பறாத் தூணியிலிருந்த அம்பை யெல்லாம் பிரயோகம் செய்துவிட்டு மேலே அம்பில்லாமல் வெறுங்கையோடு நின்ற வீரனுக்கு அந்தத் தூணி நிறைய அம்புகளை வைத்தால் எப்படி இருக்கும், அப்படி இருந்தது அவனுக்கு. அவனுக்குக் கிடைத்த வேல் யாசித்துப் பெற்றதா? இல்லை. பகைவன் எறிந்த வேல். அவனுடைய இரும்பு திரண்டனைய உடம்பில் சிறிதளவே புகுந்து பதிந்து நின்றது; அவ்வளவுதான். அதைத் துளைக்க முடியவில்லை. பார்த்தான் வீரன்; வெடுக்கென்று மார்பினின்று அதைப் பறித்தான். வலியை மறந்தான். சரியான சமயத்தில், தான் நிராயுதபாணியாக இருந்த செவ்வியில், உதவிய அந்த வேலைப் பார்க்குந்தோறும் அவன் உள்ளம் மகிழ்ந்தது. அவனுடைய மார்பாகிய உறையினின்றும் அந்த வேல் வெளிப்பட்டபோது அவன் நெஞ்சாகிய உறையிலிருந்து மகிழ்ச்சியும் வீரமும் வெளிப்பட்டன. ஆயுதம் பெற்றதால் மகிழ்ச்சியும் பகைவன் வேலை அலஷ்யமாக ஏற்றுக் கொண்ட பெருமையால் வீரமும் பொங்கி வழிய அந்த ஆண்சிங்கம் வேலைச் சுழற்றிக்கொண்டு அடுத்த யானையைத் தேடிப் பாய்கிறது.

"கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா நகும்."

--குறள்.

[போக்கி - செலுத்தி. மெய்வேல் - தன் உடம்பிலே தைத்த வேலை. பறியா - பறித்து. நகும் - மகிழ்வான்.)

அதே யானை!

என்ன கொண்டாட்டம்! என்ன விளையாட்டு! குழந்தைகள் யானையை யானையென்றா எண்ணியிருக்கிறார்கள்? இல்லவே இல்லை. மரயானையை வைத்துக் கொண்டு விளையாடுவது போலல்லவா விளையாடுகிறார்கள்? தண்ணீரில் நிற்கும் யானையின் மத்தகத்திலிருந்து கொம்மாளம் போடுகிறார்கள். யானை குளிக்கிறது; அதுவாகக் குளிக்கிறதா? குளிப்பாட்டுகிறார்களா? குளத்திலே மண்டி - யிட்டு முதுகு முழுகக் குளிக்கிறது. குழந்தைகள் தங்கள் சிறுகையால் ஜலத்தை வாரி வாரி அதன் முகத்தில் இறைக்கிறார்கள்; அதன் தந்தத்தைக் கழுவுகிறார்கள். யானை தன் தும்பிக்கையினால் நீரை வாரி முகத்தில் வீசிக் கொள்கிறது. குழந்தைகளின்மேல் அந்த நீர்த்துளிகள் வீசும்போது அவர்கள் பேரின்பத்தை அடைகிறார்கள். யானையைத் தேய்த்துக் கழுவுகிறார்கள். அவர்கள் அதைக் குளிப்பாட்டுகிறார்கள். அது அவர்களைக் குளிப்பாட்டுகிறது. இந்த நீர் விளையாட்டிலே அந்த யானைக்குக்கூட மட்டற்ற மகிழ்ச்சி இருக்கிறது என்றுதான் தெரிகிறது. இல்லாவிட்டால் குழந்தைகளின் விளையாட்டுக்கு இடங்கொடுத்துக் கொண்டு அது நிற்குமா?

இப்படி ஊரிலுள்ள குறுமாக்கள் (சிறு பையன்கள்) தன் வெள்ளிய தந்தத்தைக் கழுவுதலால் மகிழ்ந்து போய் நீர்த்துறையிற் படியும் பெருங் களிற்றை ஒளவை பார்க்கிறாள். அவளுக்குத் தூக்கி வாரிப்போடுகிறது! அப்போது அவள் கண்ட காட்சியால் அல்ல; அந்தக் காட்சியையும் சில காலத்துக்கு முன் அவள் அறிந்த காட்சியையும் அவள் மனசிலே ஒப்பிட்டுப் பார்க்கிறாள். அடேயப்பா! அன்றைக்கு என்ன தடபுடல்! என்ன குழப்பம்! எத்தனை கவலை! ஊரெல்லாம் அல்லோல கல்லோலப் பட்டல்லவா நின்றது? யானை யொன்று மதம் பிடித்து அடக்குவாரின்றி ஊர் முழுவதும் அலைந்து திரிந்து மரங்களை முறித்தும் கூரையைப் பிய்த்தும் மதிலோடு மோதியும் கதவினைக் குத்தியும் வெடிபடப் பிளிறியும் இடிபட உலவியும் பண்ணிய கொடுமையை இன்னும் ஊரார் மறக்க வில்லையே. அதே யானை இன்று சாதுவாகவும் சிறு குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருளாகவும் நீர்த் துறையில் நிற்கிறது!

ஒளவைக்கு ஏன் ஆச்சரியம் உண்டாகாது? அந்தக் காலத்தில் அதனருகில் யாராவது போக முடிந்ததா? துன்னருங் கடாம் (அணுகுதற்கரிய மதம்) ஏறியிருந்தது. அதே யானைதான் இது என்பதை யாரும் நம்ப முடியாது. ஒளவைக்கு இந்தக் காட்சியைக் காணக்காண வியப்பு மேலிட்டது. இது குழந்தைகளின் பெருமையா? யானையின் இயல்பா? யோசித்து யோசித்துப் பார்த்தாள் தமிழ்ப் பாட்டி. நிச்சயமாக யானையின் இயல்புதான் என்று தெரிந்தது. இந்த அதிசயத்தை நினைத்தபடியே அவள் அதியமான் அரண்மனையை அடைந்தாள். அதியமான் தகடூரில் அரசாண்ட சிற்றரசன்; பெருவீரன். அவன் பல போரில் பகைவர்களைப் புறங்காட்டி ஓடச்செய்து வெற்றி பெற்றவன். போர்க்களத்தில் ருத்திரமூர்த்தி போல நின்று பகைவருடைய யானைப்படையையும் தேர்ப்படையையும் பிற படைகளையும் கொன்று குவித்துக் கொற்றவைக்கு விருந்திடுபவன்.

ஒளவைப்பாட்டி அவன் திருவோலக்கத்தை அடைந்தபோது புலவர் பலர் அவனுடைய வீரச் சிறப்பைப் பாராட்டிக்கொண்டிருந்தனர். சிங்கம் போலவும் புலிபோலவும் அவன் போர்க்களத்தில் போர் புரிந்து வென்றதை வருணித்தனர். களமெல்லாம் குருதிவெள்ளம் பாய, அந்த வெள்ளத்திலே இறந்த யானைகளும் வீரர் உடல்களும் மிதக்க, கழுகுகளும் பருந்துகளும் தம் வயிறார உணவுபெற, அவன் செய்த வீர விளையாட்டை வீரச் சுவையும் கோபச் சுவையும் புலப்படச் சொன்னார்கள். 'அவ்வளவு கொடுமையை உடையவனா!' என்று நினக்கும்படி இருந்தன, அவர்கள் சொன்ன செய்திகள். போர்க்களத்திலே அவன் அப்படி இருந்திருக்கலாம்; ஆனால் இங்கே புலவர்களிடையே அவன் மிகவும் சாதுவாக ஒரு குழந்தையைப்போல் அமர்ந்திருந்தான். கவிஞர்களிடம் மிகவும் பணிவாக நடந்து கொண்டான்; மென்மையாகவும் இனிமையாகவும் பேசினான். அவனுடைய வார்த்தைகளிலே அன்பு தான் இருந்தது; மருந்துக்குக்கூடக் கடுமையில்லை. புலவர்கள் பேசும்போது அந்தப் பேச்சை மிகவும் கர்வத்தோடும் மரியாதையோடும் கேட்டான். பார்வையிலே ஒரு குளிர்ச்சி, உடலிலே ஒரு பணிவு, வார்த்தைகளிலே ஒரு குழைவு ஆகிய இவ்வளவும் அவனது கோலத்தை இனிமைப் பிழம்பாகச் செய்தன.

''இவன்தானா போர்க்களத்தில் ஊகைவர்களைப் படுகொலை செய்து தன் கைக்குச் செவ்வண்ணம் தீற்றியவன்? இருதயத்திலே சென்று தண்மையைப் புகுத்தும் இவனுடைய பார்வையா தீப்பொறிகளைக் கக்கியிருக்கும்?' என்று எண்ணமிடலானாள் ஒளவை. அப்பொழுது அவள் அகக் கண்னின்முன் சற்றுமுன் கண்ட காட்சி, நீர்த்துறைபடியும் களிறு, வந்தது. ஊரை அன்றொரு நாள் அலைத்து வருத்திய அதே யானை இன்று சிறு பிள்ளைகள் தன் தந்தத்தைக் கழுவி விளையாட, சாந்த நிலையோடு நிற்கிறது. இரண்டு நிலையிலும் அதே யானைதான். அன்று மதம் பெருகி நின்றது; இன்று மதம் அடங்கி நிற்கிறது. இந்த அதியமானும் அப்படித்தான் இருக்கிறான். பகைவருக்கு மதம் பட்ட யானை அவன். புலவர்களுக்கோ நீர்த்துறை படியும் களிறாக உள்ளான். எவ்வளவு பொருத்தமான உவமை! கருத்து அழகிது! உள்ளத்தே பதிந்த அக்கருத்து உடனே ஒளவையின் வாக்கில் கவிதையாக வெளிப்பட்டது. அதியமானை நோக்கிப் பாடுகிறாள் ஒளவை:

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்

நீர்த்துறை படியும் பெருங்களிறு போல

இனியை பெரும் எமக்கே; மற்றதன்

துன்னருங் கடாஅம் போல

இன்னாய் பெருமநின் ஒன்னா தோர்க்கே.

--புறநானூறு - ஒளவையார் பாட்டு.

[ஊர்க் குறுமாக்கள் - ஊரிலுள்ள சிறு பிள்ளைகள். வெண்கோடு - வெள்ளையான தந்தத்தை. கழாஅலின் - கழுவுதலால். துன்னரும் கடாஅம் போல் - யாரும் அணு குதற்கரிய மதம்பட்ட நிலைமையைப் போல. இன்னாய் - கொடியவனானாய். ஒன்னாதோர்க்கு - பகைவர்களுக்கு.]

அரும்பதக் குறிப்பு

 • அ - அழகு
 • அடுதல் - சமைத்தல்
 • அமர்தல் - தங்குதல்
 • அரண் செய்தல் - பாது காத்தல்
 • அருந்துதல் - ஊட்டுதல்
 • அரை - இடை
 • அலமருதல் - சுழலுதல்
 • அலைத்தல் - துன்புறுத்தல்
 • அவலம் - வருத்தம்
 • அழல் - நெருப்பு
 • அழித்தல் - அவிழ்த்தல்
 • அழுங்கல் - ஆரவாரம்
 • அளவளாவுதல் - நெருங்கிப் பழகுதல்
 • அளி - அன்பு
 • அளை - வளை
 • அறிந்திசினோர் - அறிந்தவர்
 • அன்ன - போன்ற
 • ஆகுமதி - வாயாக
 • ஆயர் - இடையர்
 • ஆயிடை - அதற்கிடையே
 • ஆரல் - ஒரு வகை மீன்
 • ஆள்வினை - முயற்சி
 • ஆறு - வழி
 • ஈர்மணல் - ஈரமான மணல்
 • உண்கண் - மையுண்ட கண்
 • உணர்கம் - அறிவோம்
 • உதுக்காண் - அதோ பார்
 • உயர்வு நவிற்சி - அளவுக்கு மிஞ்சிப் புகழ்தல்
 • உலம் - கல்தூண்
 • உவலை - தழை
 • உளுக்குதல் - அசைத்தல்
 • ஊச்சுதல் – உறிஞ்சுதல்
 • ஊதியம் - வருவாய்
 • ஊரன் - மருத நிலத் தலைவன் பெயர்
 • ஊழ் - விதி
 • எஞ்சுதல் - மிகுதியாதல்
 • எய்தாது - போதாது
 • எய்ப்பு - இளைப்பு
 • எய்யாமை - அறியாமை
 • எயினர் - வேடர்
 • எவ்வம் - துன்பம்
 • எவன் - என்ன
 • எழில் - அழகு
 • எறிதல் - வீசுதல்
 • எறும்பி - எறும்பு
 • ஏது - காரணம்
 • பத்தகக் காட்டி
 • ஆன் - பசு
 • இடும்பை - துன்பம்
 • இணைமலர் - இரட்டைப் பூ
 • இமிர்தல் – ஒலித்தல்
 • இயக்கம் - புடைபெயர்ச்சி
 • இரு - பெரிய
 • இல்லாகுதும் - இல்லையா வோம்
 • இழுக்கு - குற்றம்
 • இளிவு - அவமதிப்பு
 • இளையர் - இளைய வீரர்
 • கடாம் - மதம் உடையாய்
 • கணம் - தொகுதி
 • கதிர் - கிரணம்
 • கதிரவன் - சுரியன்
 • கமழ்தல் - மணத்தல்
 • கரத்தல் - மறைத்தல்
 • கலிங்கம் - ஆடை
 • கலிழி - கலக்கம்
 • கலைமான் - ஆண்மான்
 • கவர்தல் - கைக்கொள்ளுதல்
 • கவலை - பிணங்கிய வழி
 • கவிதல் - சூழ்தல்
 • கவுள் - கன்னம்
 • கழறுதல் - கண்டித்தல்
 • கழாஅல் - கழுவுதல்
 • கழுவுதல் - துடைத்தல்
 • கள்ளம் - பொய்
 • களிறு - ஆண்யானை
 • களைஞர் - விலக்குபவர்
 • காமரு - விருப்பம் மிக்க
 • கார் - மேகம், கார்காலம்
 • காரிகை - பெண்
 • காவதம் – காதம்
 • கான் - காடு
 • கானவாரணம் - காட்டுக் கோழி
 • கீழறுத்தல் - மறைவாகக் கேடு சூழ்தல்
 • குய் - தாளிதம்
 • குருகு - நாரை, ஒரு பறவை
 • குருதி - இரத்தம்
 • குழல் - புல்லாங்குழல்
 • குறிஞ்சி நிலம் - மலையும் மலையைச்சார்ந்த இடமும்
 • குறும்பொறை நாடன் - முல்லை நிலத் தலைவன் பெயர்
 • குறுமாக்கள் - சிறுபையன்கள்
 • கூவல் - பள்ளம்
 • கெண்டுதல் - கிண்டுதல்
 • கெழு - பொருந்திய
 • கையறுதல் - செயலற்றுக் கிடத்தல்
 • கொடுங் கழி - வளைந்த உப்பங்கழி
 • கொடுவில் - வளைந்த வில்
 • கொற்றவை - வெற்றிக்குரியபெண்தெய்வம், துர்க்கை
 • துனி – துன்பம்
 • ஏமதி - ஏவுவாயாக
 • ஏறிட்டுக் கொள்ளுதல் - மேற் கொள்லுதல்
 • ஒண்னுதல் - விளக்கத்தை யுடைய நெற்றி
 • ஒழுகுதல் - ஓடுதல்
 • ஒளிறுதல் - விளங்குதல்
 • ஒன்னாதோர் - பகைவர்
 • ஓரி - தலைமயிர்
 • கச்சை - இடையிற் சுற்றிய கட்டு
 • இன்னாய் - கொடுமையை
 • கடுகுதல் - விரைதல்
 • கோடு - கொம்பு
 • கோள் - குலை
 • சாரல் – மலைச்செறிவு
 • சினம் - வெம்மை
 • சுடர் - சூரிய சந்திரர்
 • சுரம் - பாலை நிலம்
 • சூளுறவு - சபதம்
 • செக்கர் - செவ்வானம்
 • செங்கதிர்ச் செல்வன் - சூரியன்
 • செப்பஞ்செய்தல் - ஒழுங்கு படுத்தல்
 • செய்வினை - மேற்கொண்ட காரியம்
 • செரு - சண்டை
 • செல்லல் - துன்பம்
 • செலல் - நடை
 • செவ்வி - சமயம், சமத்துவம்
 • செறித்தல் - இறுக்குதல்
 • செறிதல் - இறுகுதல்
 • சென்றீக - செல்க
 • சேர்ப்பன் - நெய்தல் நிலத் தலைவன் பெயர்
 • சொக்குதல் - மயங்குதல்
 • ஞான்று - காலம்
 • தகை - இயல்பு
 • தண்மை - குளிர்ச்சி
 • தலையளி - உயர்ந்த அன்பு
 • தவ - மிக
 • தவிர்த்தல் - விலக்குதல்
 • தாங்குதல் - தடுத்தல்
 • தாங்குமதி - தடுப்பாயாக
 • தாழ் - தாழ்ப்பாள்
 • தாழ்பு - தாழ்ந்து
 • தாள் - தண்டு
 • திருவோலக்கம் - அரசன் ஸ்தானத்தில் வீற்றிருக்கும் நிலை
 • திரு - செல்வம்
 • திரைதல் - மடிப்பு விழுதல்
 • தீமை - இனிமை
 • தீர்கம் - நீங்குவோம்
 • துணி - துண்டு
 • துணை - இரட்டை
 • துழத்தல் - துழாவுதல்
 • துன்னுதல் - அணுகுதல்
 • பெருமிதம் - பெருமை யுணர்ச்சி
 • தூக்குதல் - எடுத்துக் காட்டுதல்
 • தேரோன் - சூரியன்
 • தேன் - வண்டு
 • தொடி - தோள்வளை
 • நகுதல் - மகிழ்தல்
 • நவிலுதல் - ஒலித்தல், பயிலுதல்
 • நனி - மிக
 • நாள் - காலை
 • நுகர்தல் - உண்ணுதல், இன் புறுதல்
 • நெய்தல் நிலம் - கடலும் கடலைச் சார்ந்த இடமும்
 • நெறி - வழி
 • நொதுமல் - அயல்
 • நொவ்விதாக - வேகமாக
 • பகழி - அம்பு
 • படப்பை - ஊர்ப்பக்கம்
 • படர்தல் - செல்லுதல், விரும்புதல்
 • படிதல் - நீராடுதல்
 • பேடை - பெண்பறவை
 • பேணுதல் - பாதுகாத்தல்
 • பேதை - அறிவற்றவன்
 • பொய்த்தல் - தவறுதல்
 • பொருதல் - மோதுதல்
 • பொறி - புள்ளி
 • பொறை - குண்டுக்கல்
 • பொன்றுதல் - அழிதல்
 • போக்குதல் - கைவிடுதல்
 • போகுதல் - ஓடுதல் போது - மலரும் பருவத்துப் பேரரும்பு
 • போழ்து - பொழுது
 • போற்றுதல் - பாதுகாத்தல்
 • மகிழ்ந்தன்று - மகிழ்ந்தது
 • மட்டு - அளவு
 • மதி - சந்திரன்
 • மதுகை - வலிமை
 • மயங்குதல் - கலத்தல்
 • மருட்சி - மயக்கம் பதம் - பக்குவம்
 • மருத நிலம் - வயலும் வயலைச் சார்ந்த நிலமும் பந்தி - குதிரைச்சாலை
 • மருப்பு - கொம்பு பரி - நடை
 • மலிர்தல் - மேலே வருதல் பரிதல் - ஓடுதல்
 • மறக்குடி - வீரர்கள் பிறந்த குடும்பம் பலவு - பலாமரம்
 • மறலி - யமன் பற்றுக்கோடு - தாரம்
 • மறுகுதல் - மனம் சுழலுதல் பாகர் - குழம்பு
 • மன்ற - நிச்சயமாக பாசறை - பாடி வீடு
 • மாட்டுதல் - கொல்லுதல் பாதாதி கேசம் -அடிமுதல் முடிவரையில் மாய்த்தல் - தீட்டுதல் பால் - ஊழ்வினை
 • மாறு பற்றுதல் - எதிரெதிரே பற்றுதல் பிணிக்கொள்ளுதல் - கட்டுப் படுத்தல் மிடறு - கழுத்து பிணைமான் - பெண்மான்
 • மிடுக்கு - எடுப்பு, பெருமை யுணர்ச்சி பிணையல் - மாலை
 • மின் - நட்சத்திரம் பிழம்பு - பிண்டம்
 • முகன் - முகம் பிளிறுதல் - முழங்குதல்
 • முட்கோல் - தாற்றுக்கோல் புலர்தல் - உலர்தல்
 • முட்டு - இடையூறு புறம் - முதுகு
 • முரணுதல் - வேறுபடுதல் புறவு - முல்லை நிலம்
 • முரலுதல் - ரீங்காரம் செய்தல் புன்மை - பொலிவின்மை
 • முரற்சி - ரீங்காரம் பூதர் - சீலர்
 • வாரனம் - கோழி பெயல் - மழை
 • வாள் - ஒளி பெருந்தகு நிலை - பெருமிதத்தைக் காட்டும் தோற்றம் வானம் - காசம் முல்லைநிலம் - காடும் காட்டைச் சார்ந்த இடமும் விதிர்த்தல் - தெளித்தல் முளிதல் - முற்றி விளைதல்
 • வியல் - பரப்பு முறுவலித்தல் - புன்னகை செய்தல்
 • விரகம் - பிரிவுத் துன்பம் மூதாதையர் - முன்னோர்
 • வீங்குதல் - மிகுதல் மெய் - உடம்பு
 • வீதல் - அழிதல் யாப்பு - கட்டு
 • வீழ்த்தல் - விழச் செய்தல் வரிக்குரல் - கரகரப்பான தொனி
 • வேரல் - மூங்கில் வலவன் - தேரை ஓட்டு பவன்
 • வை - கூர்மை வழுவுதல் - தவறுதல்
 • வைமுள் - தாற்றுக்கோல் வாங்குதல் - இரத்தல்
 • வௌவுதல் - கைக் கொள்ளுதல்

ஆசிரியர்- கி. வா. ஜகந்நாதன்

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

2.875
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top