பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

காவியமும் ஓவியமும் பாகம் - 1

காவியமும் ஓவியமும் எனும் நூலில் உள்ள கட்டுரைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

'காமமோ பெரிதே!'

மலைச்சாரலின் மோகனக் காட்சியிலே சிந்தையைப் பறிகொடுத்து நின்று நாலு திக்கையும் கண்களால் அளக்கும் அவன் ஒரு வீரனாகத்தான் இருக்க வேண்டும். 'உலம் படு தோள்' என்று கவிகள் வர்ணிக்கிறார்களே, அந்தத் தோள்களை அவன் கொண்டிருக்கிறான். அவன் அந்த இயற்கை எழிலைப் பார்த்துச் சொக்கி நிற்கிறானென்று சொல்வது தவறோ? ஆம்; அவன் வேறு எதையோ எதிர்பார்த்து நிற்கிறான். மரங்களினூடே தலையை அங்கும் இங்கும் திருப்பியும் தாழ்த்தியும் பார்க்கிறான். யாரோ வருவதைத்தான் எதிர்நோக்கி நிற்கவேண்டும்.

அதோ வருகிறாள் ஒருத்தி; அவளுடைய உல்லாஸ சோபையிலே மலைப் பிராந்தியங்களின் மணம் தவழ்கிறது. அவளைக் கண்டவுடன் அவனுக்கு முகத்தில் ஓர் ஒளி ஏறுகிறது. ஆனால் அவன் அவளைக் கண்டவளவில் திருப்தி அடையவில்லை. பின்னும் தன் பார்வையை ஓட்டுகிறான். அவளைத் தொடர்ந்து யாராவது வருகிறார்களோ என்று ஆவலோடு கவனிக்கிறான். சிறிது ஏமாற்றக் குறிப்பு அவனது முகத்திலே படர்கிறது.

அவள் வந்துவிட்டாள். வந்து அவன் முன் நின்றாள்.

"உன் யஜமானி வரவில்லையா?" என்று அவளை அவன் கேட்கிறான்.

"உன் யஜமானிதானே?" என்று அந்தக் கேள்வியை மடக்கிக் கேட்டுப் புன்னகை பூக்கிறாள் அந்தப் பெண்ணணங்கு.

"சந்தேகமென்ன? என்னுடைய யஜமானிதான்; என் ஆருயிர்த்தலைவி!"

"அது கிடக்கட்டும்; இரண்டு நாட்களாக ஏன் வரவில்லை?"

அவன் என்னவோ யோசனை செய்து நிற்கிறான்.

அவனுடைய காதலியின் உயிர்த்தோழி அந்தப் பெண்மணி. காதலனும் காதலியும் அந்தரங்கமாகப் பழகி வருகிறார்கள். இன்னும் திருமணம் நடை பெறவில்லை. காதலனுக்குள்ள கடமைகள் சில நாட்கள் அவனை வரவொட்டாமல் தடுக்கின்றன. இந்த ரகசிய வாழ்க்கை எவ்வளவு காலம் நடை பெறுவது? காதலி மிகவும் துயரம் அடைகிறாள். அதைப் போக்கி அவர்கள் காதல் நிலைபெறச் செய்யவேண்டியது தோழியின் கடமை. உலகறிய மணம் செய்து கொள்ளும்படி காதலனை வற்புறுத்த வேண்டும். நேரே அந்தச் செய்தியைச் சொல்வதை விடத் தலைவியின் நிலையைச் சொல்லி, அதனால் அவனே அந்த விஷயத்தை உணர்ந்து கொள்ளும்படி செய்ய வேண்டுமென்ற உறுதியோடு இன்று வந்திருக்கிறாள் தோழி.

"சாரலையுடைய மலை நாட்டுக்குத் தலைவன், நீ சொளக்கியமாக இருக்கவேண்டும்!"

இந்த ஆரம்பம் ஏதோ ஒன்றச் சொல்லப் போகிறாளென்பதைப் புலப்படுத்தியது. 'இப்போது எனக்கு என்ன சொளக்கியக் குறைவு வந்துவிட்டது? இவள் எதையோ பிரமாதமாகச் சொல்லப் போகிறாள்' என்று அவன் ஊகித்துக் கொள்கிறான்.

"ஆமாம்; உன்னுடைய மலைச்சாரலின் அழகே அலாதியானது. அந்தச் சாரலிலுள்ள பலாப்பழங்களுக்கு எத்தனை பாதுகாப்பு? இயல்பாகவே வளர்ந்து ஓங்கி நிற்கும் மூங்கில்களே நெருக்கமாக நின்று வேலியைப்போல் உள்ளன. அந்த எல்லைக் குள்ளே பலாமரங்கள் குலுங்கக் குலுங்கக் கனிந்து நிற்கின்றன. அந்தப் பலா மரமோ வேர்ப்பலா; பழங்களெல்லாம் வேரிலே காய்க்கின்றன. பூமியிலிருந்து வெடித்துப் புறப்படுகின்றன. நிலமே அவற்றிற்கு ஆதாரமாக இருக்கிறது. இவ்வளவு பாதுகாப்பாக அவை வளரும்போது அவற்றிற்கு என்ன குறை?" என்கிறாள் அவள்.

'இந்தக் குறத்தி என்னவோ சொல்லப் போகிறாள். அதற்காகத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறாள்' என்று எண்ணிய காதலன், "அந்தப் பலாப்பழ விசாரம் இப்போது எதற்கு?" என்று கேட்கிறான்.

"எதற்கா? அந்த விஷயம் யாருக்குத் தெரியப் போகிறது!"

"எந்த விஷயம்?"

"எங்கள் சாரலிலே விளையும் பலாப்பழத்தின் நிலையை அறிவது எளிதல்லவே! அதுவும், வேரிலே பழுத்து, நிலத்தால் தாங்கப்பெற்று, மூங்கில்வேலியின் காவலுக்குள்ளே உள்ள பழத்தையுடைய உங்கள் மலைசாரலை மாத்திரம் அறிந்தவர்களுக்கு எங்கள் ஊர் விஷயம் எப்படித் தெரியப் போகிறது?"

"உங்கள் சாரலில் மட்டும் என்ன தனிச் சிறப்பு இருக்கிறது?"

"அதைத்தான் சொல்ல வருகிறேன். அதோ பார் அந்த பலா மரத்தை. அதில் எவ்வளவு பெரிய பழம் தொங்குகிறது, பார்!"

"அடே அப்பா! உண்மையிலே பெரிய பழந்தான்."

"அதன் காம்பைப் பார்த்தாயா? அது எவ்வளவு சிறியது பார்த்தாயா? அதைத் தாங்கும் கொம்பு எவ்வளவு சிறிதாக உள்ளது? அவ்வளவு சிறிய கொம்பிலே பழுத்து முதிர்ந்த அந்தப் பெரிய பழம் எவ்வளவு காலம் இப்படியே தொங்கும்?"

"பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. எந்தச் சமயத்தில் முதிர்ந்து விழுந்து விடுமோ என்ற கவலைகூட உண்டாகிறது.'

இது சொன்னதுதான் தாமதம்; தோழி, "ஆ! அதுதான் சொல்கிறேன்" என்று உணர்ச்சியோடு கூவினாள். தலைவன் அவளை உற்று கவனித்தான்.

"நீ இவ்வளவு காலமாக உன் காதலியின் தன்மையை அறிந்திருந்தால், அவளும் இந்தப் பலாப் பழம் போல இருப்பதை உணர்ந்திருக்கலாமே. அவள் உன்னிடத்தில் எவ்வளவு காதலாக இருக்கிறாள் தெரியுமா? அவளுக்குள்ள காதல் எவ்வளவு பெரிது என்பதை அறிவாயா?"

தலைவன் பெருமூச்சு விடுகிறான்.

"இந்தச் சிறிய கொம்பிலே பெரிய பழம் தொங்குவதைப் போல உன் காதலியின் உயிர் மிகச் சிறிது; அவள் கொண்டிருக்கும் காதலோ பெரிது. அவள் உயிருக்கும் காதலுக்கும் உள்ள பிணைப்பு அறாமல் இருக்கவேண்டும். அதற்கு வழி உன்னிடம் தான் இருக்கிறது."

தோழியின் மந்திரம் பலித்துவிட்டது. அவன் மறுபடியும் அந்தச் சிறுகோட்டுப் பெரும் பழத்தைப் பார்க்கிறான். 'அந்தப் பழம் விழுந்துவிட்டால் யாருக்குப் பிரயோசனம்? அதனை நுகர்வதற்கு உரியவன் பறித்துப் பயன்படுத்த வேண்டும். இல்லா விட்டால் வீணாகி விடும். நம் காதலியை நாமும் தக்க பருவத்தில் மணந்து பாதுகாக்கவேண்டும்' என்ற சங்கற்பம் அவன் உள்ளத்தே உதயமாகிறது. விடைபெற்றுச் செல்கிறான்.

"இவள் உயிர் தவச் சிறிது ; காமமோ பெரிதே" என்று தோழி கூறிய வார்த்தைகள் அவனுக்குள் ரீங்காரம் செய்கின்றன.

தோழி கூற்று

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்

சாரல் நாட, செவ்வியை ஆகுமதி;

யாரஃ தறிந்திசி னோரே? சாரற்

சீறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்

உயிர்தவச் சிறிது; காமமோ பெரிதே!

- குறுந்தொகை - கபிலர் பாட்டு.

[வேரல் - மூங்கில். வேர்க்கோட் பலவு - வேரிலே பழக்குலையையுடைய பலா - மரம். சாரல் - மலைச்சரிவு. செவ்வியை ஆகுமதி - சொளக்கியமாக இருப்பாயாக. அறிந்திசினோர் - அறிந்தவர்கள். சிறு கோட்டு - சிறிய கொம்பில் தூங்கியாங்கு - தொங்கினாற்போல். தவ - மிகவும்.)

'மாலையின் அக்கிரமம்'

அவள் பிறர்பார்வைக்குக் கன்னிதான் ஆனாலும் அவளுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஒருவன் இருக்கிறான். அவளது காதல் இன்பத்தை நுகர்ந்தவன் அவன். எழிலும் உருவும் திருவும் பொருந்திய அந்த மடமங்கையின் உள்ளத்திலே வீற்றிருக்கும் அவன் அவளுக்கு ஏற்ற அழகுடையவன்; வீரமுடையவன்; செல்வமும் உடையவன். அவன் ஒரு நாட்டுக்கே தலைவன்; சிற்றரசன். வீரம் செறிந்த அரசர் வழி வந்தவன். அவனுடைய நாட்டில் இயற்கையின் முழு வளமும் குலுங்குகிறது. மலைகள் நிரம்பிய குறிஞ்சி நிலம் வேண்டுமா? அவன் நாட்டில் இருக்கிறது. பல பல அருவிகள் குதித்தோடும் மலைச்சாரல்களிலே அடர்ந்து வளர்ந்த காடுகளைக் கண்ட புலவர்கள் அவனை, "கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்" (தொகுதியைக் கொண்ட அருவிகளும் காடுகளும் பொருந்திய மலைநாட்டை உடையவன்) என்று பாராட்டுகிறார்கள். கானாறும், மாடு மேய்க்கும் ஆயர்கள் வாழும் காடும் நிரம்பிய முல்லை நிலச் - செல்வமும் அவனுக்கு உண்டு. அதனால் அவனை, "குறும்பொறை நாடன்" (சிறிய கற்களையுடைய நாட்டையுடையவன்) என்று புகழ்கிறார்கள்.

அவனுடைய செல்வத்துக்குத் தனியடையாளமாகச் சிறந்து நிற்பது அவனுக்கு உரிய மருத நிலச் செல்வம். நெல்லும் கரும்பும் காடுபோல அடர்ந்து விளைந்து பல நாடுகளுக்கு உணவு அருந்தும் நல்ல வயல்கள் அந்த நிலத்து ஊர்களில் உள்ளன. எல்லாம் அவனுக்குச் சொந்தம். "நல்வய லூரன்" என்ற சிறப்புக்கு அவன் எவ்வகையிலும் தகுதியுடையவன். இவை மட்டுமா? முத்தும் பவழமும் பிறக்கும் பெருங்கடற்கரையளவும் அவன் நாடு பரந்திருக்கிறது. கடற்கரையை அடுத்துள்ள நெய்தல் நிலப் பரப்பையும் அவன் பெற்றிருப்பதால், "தண்கடற் சேர்ப்பன்" (தண்ணிய கடல் துறையை உடையவன்) என்ற பெயரால் சில சமயங்களில் அறிஞர்கள் அவனப் புகழ்வதுண்டு. இப்படிக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நால்வகை நிலத்துக்கும் தலைவனாகிய அவனுக்கு இப்போது காதற் பயிர் விளைக்கும் அவள் கிடைத்தாள். இனி அவனுக்கு என்ன குறை?

இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஏற்றவர்களே. கடவுள் திருவருளால் கண்டார்கள்; காதல் கொண்டார்கள்; அளவளாவினார்கள். இப்போது அவன் பிரிந்து போயிருக்கிறான். மறைவாகக் காதல் புரியும் ஒழுக்கத்தை அவர்கள் விரும்பவில்லை. உலகறிய மணம் புரிந்து கொள்ளவே விரும்பினர். அதற்கு வேண்டிய காரியங்களைச் செய்ய அவன் பிரிந்து சென்றான். இவ்வளவு வயசு ஆகும் வரையில் அவனைப் பிரிந்திருந்தாளே; இப்போது ஒரு கணமேனும் பிரிந்திருக்க முடியவில்லை. அவனை அறியாமல் இருந்த காலம் எவ்வளவு நீண்டதாக இருந்தாலும் அவளைத் துன்புறுத்தவில்லை. அவன் வரவுக்காக அவள் காத்திருந்தாள். அவள் அழகு காத்திருந்தது; அவள் உணர்வு காத்திருந்தது; உயிரே காத்திருந்தது. இன்னும் அவனைக் காணாமல் இருந்திருந்தால் இந்த உலகம் அழியும் வரையில் அவள் அவனுக்காகக் காத்திருப்பாள். அப்பொழுதெல்லாம் அவள் கன்னி. இப்போது அவள் காதலி. ஒரு நாள் போவது ஒரு யுகமாக இருக்கிறது. தனிமை அவளை வருத்துகிறது. தனியிடத்தே சென்று அவனையே நினைந்து புலம்புகிறாள்.

ஓடக்கரையிலும், சுனைக் கரையிலும், கழிக் கரையிலும் சென்று தன் பார்வையை நீர்மேல் நிமிர்ந்து நிற்கும் மலர்க் கூட்டத்தில் செலுத்துகிறாள். பகல் நேரத்தில் சென்று அவனுடைய நினைவிலே தன்னை மறந்து வீற்றிருக்கிறாள். அவள் கண் முன்னே சில நிகழ்ச்சிகள் நிகழ்கின்றன. அதை அவள் உணரவில்லை; அவள் உள்ளம் கண்பார்வை யோடு கலக்கவில்லை. திடீரென்று அந்த ஆச்சரிய நிகழ்ச்சி கண்ணில் படுகிறது. அவள் அங்கே வந்து அமர்ந்தபொழுது தாமரை மலர்கள் மலர்ந்திருந்தன; நீல மலர்கள் குவிந்திருந்தன. இப்போதோ தாமரைகள் குவியத் தொடங்கின; நீல மலர்கள் இதழ் விரிந்தன. "அட! மாலைக் காலம் வந்துவிட்டதுபோல் இருக்கிறதே!" என்று திரும்பிப் பார்க்கிறாள். சூரியன் ரத்தத்தைக் கக்கிக்கொண்டு மலை வாயில் விழுந்து கொண்டிருக்கிறான். பார்த்தவுடன் பகீரென்கிறது அவளுக்கு.

மாலைக் காலத்தைக் கண்டால் அவளுக்கு யமனைக் கண்டதுபோல் இருக்கும். ஊரெல்லாம் குறட்டை விட்டுத் தூங்க, தான் மட்டும் தனித் திருக்கும் இரவுக் காலத்தை அறிவுறுத்துவதல்லவா அந்தப் பாழும் மாலை! அதற்கு எப்படித் தப்புவது? "இதென்ன! நான் இப்பொழுதுதானே வந்தேன்! அதற்குள் எப்படி மாலைக்காலம் வந்தது? பெரிய அக்கிரமமாக இருக்கிறதே!" அவள் அங்கிருந்து ஓடி உப்பங்கழியின் பக்கத்திலே சென்று பார்க்கிறாள். அங்குள்ள நெய்தல் மலர்கள் அவளுடைய உள்ளத்தைப் போலக் கூம்பியிருக்கின்றன. காலத்தை உணர்த்தும் இயற்கைக் கடிகாரம் அவை. "சந்தேகமே இல்லை. மாலைதான் வந்துவிட்டது. அதற்கு இப்போதுதான் வரவேண்டுமென்ற நியதி இல்லையோ! இந்தப் பட்டப் பகலிலே மாலை வரும் அக்கிரமத்தைக் கேட்பவர்கள் ஒருவரும் இல்லையா!" மாலை, இரவு, நள்ளிரவு, இவற்றால் வரும் தாபங்கள் எல்லாம் அவள் உள்ளக் கண்ணிலே ஒன்றன்பின் ஒன்றாக வந்து பயமுறுத்துகின்றன.

"சரிதான்! கேட்பாரற்ற ஊரிலே யார் எதைச் செய்தால்தான் என்ன? என்னுடைய உயிர்க் காதலர் என்னைப் பிரிந்திருக்கிறார். இந்தச் சமயம் பார்த்து இப்படியெல்லாம் அக்கிரமம் நடக்கிறது. என்னடா ஆச்சரியம்! இந்த மாலைக் காலந்தான் தவறுதலாக வந்து விட்டதென்று நினைத்தால் இதன் கூட்டாளிகளுமா இப்படிச் செய்யவேண்டும்? சூரியன் இவ்வளவு சீக்கிரம் அஸ்தமித்துவிட்டான்! நெய்தல் மலர்களும் இவ்வளவு சீக்கிரம் குவிந்துவிட்டன! எல்லாம் வாஸ்தவமாக முன்பெல்லாம் நடக்கிற மாதிரியே இருக்கின்றன. ஆனால், பொய்! பொய்! இது நல்ல கடும்பகல். இந்தக் கடும்பகலில்தான் வஞ்சகமாக மாலை வந்திருக்கிறது."

பெருமூச்சு விடுகிறாள்; கண்ணை வெறித்துப் பார்க்கிறாள். மாலை ஏதோ ஒரு உருவத்தை எடுத்துக் கொண்டு அவள் முன்பு நிற்கிறதா என்ன? அவள் அதோடு பேசுகிறாளே! "என் செயலெல்லாம் அழியும்படி வந்த மாலையே!" மாலைக்காலம் வந்தால் அவள் செத்த பிணம் போலத்தான் ஆகிவிடுவாள். விரகவெந்தீ மாலைக் காலத்தில்தான் கொழுந்தோடிப் படரும். அவள் அதனால்தான் அதைக் கண்டு துடிதுடிக்கிறாள். "மாலைப்போதே! என் தலைவர் பிரிந்தார். இதுவே சமயமென்று, நீ முன்பெல்லாம் வருவது போலவே வருகிறாயென்று எல்லோரும் நினைக்கும்படி என்னவோ செய்து ஏமாற்றிக் கடும் பகலிலேயே வந்துவிடுகிறாய். உன்னைக் கேட்பவர் ஆர்? வளைந்து செல்லும் கழியில் உள்ள நெய்தல் மலர்கள் குவியும்படி, காலையிலே நீ வந்தாலும் உன்னை மாற்றுபவரோ இங்கே இல்லை; நீ வைத்ததுதான் சட்டம்" என்று அவள் குமுறுகிறாள். அவள் நோய் அவளுக்கல்லவா தெரியும்?

தலைவி கூற்று

கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்

குறும்பொறை நாடன் நல்வயல் ஊரன்

தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற்

கடும்பகல் வருதி கையறு மாலை,

கொடுங்கழி நெய்தலுங் கூம்பக்

காலை வரினும் களைஞரோ இலரே.

-ஐங்குறுநூறு - அம்மூவனார் பாட்டு.

[கணம் - தொகுதி. கான் - காடு. கெழு - பொருந்திய. குறும்பொறை நாடன் - முல்லை நிலத்தவனது பெயர். ஊரன் - மருதநிலத் தலைவன். சேர்ப்பன் - நெய்தல் நிலத் தலைவன்; சேர்ப்பு - கடற்றுரை. பிரிந்தென - பிரிய. பண்டை யின் - முன்போலத் தோற்றும்படி. வருதி-வருகிறாய். கையறு - செயலறுதற்குக் காரணமான. கொடுங்கழி - வளைந்த உப்பங்கழி. கூம்ப-குவிய. களைஞர்-விலக்குபவர்.]

கிழவியின் பிரயாணம்

ஐயோ பாவம்! நடக்கும்பொழுதே தத்தித் தத்தி நடக்கிறாளே, கால் சோர்ந்து போகிறதே! எதற்காக இந்தக் கிழவி இப்படி புறப்பட்டாள்? கையைக் கவித்துக் கொண்டு எதையோ பார்க்கிறாள். இவள் வயசுக்கு இப்படி நடந்து திரிபவர் யார் இருக்கிறார்கள்? இவளையே கேட்டுப் பார்க்கலாம். "பாட்டீ, ஏன் இப்படி இந்த அகன்ற பாலை வனத்திலே நடக்கிறாய்? இங்கே அலையும்படி உன்னை விட்ட விதி பொல்லாததாய் இருக்கவேண்டும்."

இதென்ன! பாட்டி காதில் என் கேள்வி விழ வில்லை. இவள் காதும் மந்தமாகியிருக்கிறதே. இந்த வெயிலில் தங்க நிழல் இல்லாத பாலைவனத்தில் அங்கந் தளர்ந்து திரைந்த இந்தப் பெரியவள் நடந்து அலுத்துப்போய் நிற்கிறாளே. இவள் எதற்காக இப்படிக் கூர்ந்து கூர்ந்து பார்க்கிறாள்?

"அப்பா, யாரப்பா?"

ஆம், பாட்டியின் குரல்தான், இவள் தொண்டையிலுள்ள வறட்சி தொனிக்கிறதே.

"ஏன் பாட்டீ!"

"அதோ வருகிறார்களே; அவர்கள் ஒரு பெண்ணும் ஓர் ஆணுந்தானே?"

"ஆம், பாட்டி, யாரோ காதலனும் காதலியும் போலத் தெரிகிறது."

"அப்படியா!"

கிழவியின் முகத்திலே ஒரு மலர்ச்சி உண்டாகிறது. சிறிது நின்று பெருமூச்சு விடுகிறாள்; "அப்பாடி!" என்று சொல்லி ஆசுவாசப் படுத்திக் கொள்கிறாள். அந்தத் தம்பதிகளையே பார்த்துக் கொண்டு நிற்கிறாள். அவர்களோ மெல்ல மெல்லக் கதை பேசிக் கொண்டு இவளெதிரே வருகிறார்கள். கிழவியின் மன வேகத்திற்கு அவர்கள் நடை நேர் மாறாக இருக்கிறது. ஒரு கணத்தில் அவர்களைச் சந்திக்க வேண்டுமென்று கிழவி எண்ணுகிறாள். அவர்கள் வேகமாக நடந்து வந்தால்தானே? அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். பாட்டி கண்ணைத் துடைத்துத் துடைத்துப் பார்க்கிறாள். அவர்கள் இந்த முதியவளை நெருங்கி விட்டார்கள். இவள் தன் கண்ணை அகல விழித்துக் கூர்ந்து கவனிக்கிறாள்.

அடே! இதென்ன! இவள் முகம் ஏன் இப்படித் திடீரென்று மாறுகின்றது? சூரியனது ஒளியிலே பள பளத்த இவள் முகம் மேகத்திரை போட்டாற்போலே சோகபடலத்தை ஏறிட்டுக்கொண்டு விட்டதே! ஏன்? இவள் உள்ளத்திலே ஏதோ ஏமாற்றம் தோன்றி விட்டது. பாவம்! அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது. அந்தக் காதலிரட்டையர் போய்விட்டனர். தளர்ந்து பதிந்த கால்களையும் எடுத்து இரண்டடி மேலே நடக்கிறாள் கிழவி. மேல் மூச்சு வாங்குகிறது. பல்லைக் கடித்துக் கொண்டு இளைய ஆண்மகனைப் போல வீசி நடக்க மனம் முந்துகிறது. காலையும் வீசி வைக்கிறாள். ஆனால் அடுத்த கால் அதை பின் தொடரவில்லை; தளர்கிறது. "ஐயோ!" என்று விழப் போகிறாள். கைத்தடி அவளை விழாமல் நிலைநிறுத்துகிறது.

மறுபடியும் பார்க்கிறாள். கையை நெற்றியின் மேல் வைத்துப் பார்க்கிறாள். பாலை வனத்தில் மனிதர்கள் அடிக்கடி பிரயாணம் செய்வார்களா? சிறிது நேரம் கழித்து இரண்டு உருவங்கள் நிழலைப் போல் நெடுந் தூரத்திலே தெரிகின்றன. அந்த நிழலை நம்பிக் காத்து நிற்கிறாள். அந்த உருவங்களின் அங்க அடையாளங்கள் ஒருவாறு புலப்பட்டு அவர்கள் ஆணும் பெண்ணுமென்று தெரிந்தால் இவளுக்கு நம்பிக்கை உதயமாகிறது. ஆனால் அருகில் வந்த போது மறுபடியும் அவள் ஏமாந்து போகிறாள். அருகில் வந்ததும் அந்த உருவங்கள் இவள் உள்ளத் திலே இருளைத்தான் புகுத்திச் செல்லுகின்றன.

தூரத்திலே எது தெரிந்தாலும் இவள் கூர்ந்து கவனிக்கிறாள். காலோய்ந்த யானை வருகிறது; பயந்து சாகிறாள். வேறு யாரோ ஆடவர்கள் வருகிறார்கள். அவர்களை என்னவோ கேட்கிறாள். "நீ எங்கேயம்மா போகிறாய்?" என்று அவர்கள் கேட்கிறார்கள். இவள் விடை கூறவில்லை. இவளுக்கே எங்கே போகிறோமென்று தெரியவில்லை. ஆம்; இவளுடைய லசஷயம் ஓரிடமல்ல; வேறு ஏதோ !

"பாட்டீ, எங்கே போகிறாய்?"

"எனக்கே தெரியாதப்பா."

"எவ்வளவு நாழிகை இப்படி நடந்துகொண்டே இருப்பாய்?" "தெரியாதப்பா!" "எப்பொழுது உன் பிரயாணத்துக்கு முடிவு நேரும்?"

"வாழ்க்கைப் பிரயாணத்துக்கா?"

"உன் காலில் வன்மை இல்லையே?"

"ஆம் அப்பா, என் கால் தவறுகிறது; நான் ஓர் இடத்தில் வைத்தால், அது ஓரிடத்தில் போகிறது."

"எதையோ மிகவும் ஆவலாகப் பார்க்கிறாயே?"

"பார்த்துப் பார்த்து என் கண்ணில் இருக்கிற அரைக்காற் பார்வைகூட மங்கிவிட்டது."

"எதைப் பார்க்கிறாய்?"

"என் துரதிருஷ்டத்தைப் பார்க்கிறேன்."

"ஒன்றும் விளங்கவில்லையே பாட்டி!"

"நான் பார்க்கிறேன்; சூரியனும் சந்திரனும் இல்லாத வானத்திலே அந்த இரண்டு சுடருருவங்களையும் தேடிப் பார்க்கும்போது ஆயிரக் கணக்கான நட்சத்திரங்கள் தோன்றுகின்றன. எல்லாம் நட்சத்திரங்கள்; மதியில்லை; கதிரவனும் இல்லை!"

"அது போல - ?"

"நான் பார்க்கிறேன். என்னைச் சேர்ந்தவர்களைத் தேடிப் பார்க்கிறேன். அகலிரு வானத்து மீனைக் காட்டிலும் பலர் இங்கே போகிறார்கள்; இந்த உலகத்திலுள்ள எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக இங்கே வருகிறார்களென்று தோன்றுகிறது. இவ்வளவு பேர்களில் எல்லோரும் பிறரே. அவர்களைக் காணவில்லை."

"அவர்கள் யார் பாட்டீ?"

"எழில் திரண்ட நங்கை ஒருத்தி; அவளுக்குப் பற்றுக்கோடாக நின்ற ஆண் மகன் ஒருவன்."

"அவர்கள் இங்கே ஏன் வந்தார்கள்?"

"என் பாவம்! எங்களவர் செய்த பாவம்! பாவ மல்ல; எங்கள் அறிவின்மை."

"கதையை முழுவதும் சொல்லு பாட்டீ!"

"அவள் என் மகள். நான் அவளை வளர்த்த செவிலி. மார்மேலும் தோள்மேலும் வைத்து வளர்த்தேன். அவளுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஆண் சிங்கம் ஒன்று உண்டென்ற உண்மையை உணரும் சக்தி எனக்கு இல்லை. அவள் அவனுடைய அன்பிலே இன்பங் கண்டாள். அவள் குறிப்பறிந்து அவனை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்ளும் பாக்கியம் எங்களுக்கு இல்லாமற் போயிற்று. அவளுடைய காதல் எவ்வளவு அருமையானது என்பதைத் தெரிந்துகொள்ளவில்லை. அவர்கள் எங்களிடமிருந்து நன்மை உண்டாகுமென்று எதிர்பார்த்தார்கள். எங்கள் மனம் இளகவில்லையென்று தெரிந்தது. இரு பறவையும் பறந்து போயின. அவள் போன பிறகே அவளருமை தெரிகிறது. என்ன பிரயோசனம்? தெய்விகக் காதலால் பிணிக்கப்பட்ட அந்தக் கொடியும் அது படர்ந்த கொம்பு போன்ற அவனும் இவ்வழியாக வருவார்களென்று பார்க்கிறேன்."

கிழவி மேலே தன் பிரயாணத்தைத் தொடங்கினாள். அன்பின் அருமையை உணராமல் கை நழுவவிட்ட கிழவியின் பிரயாணம் வாழ்க்கைப் பிரயாணம்போல ஏமாற்றம் நிறைந்ததாகவே இருக்கிறது. அன்பற்ற கொடியவரது நெஞ்சம் போலே அழலெரிக்கும் அந்தக் கொடுஞ் சுரத்தில் அன்பே வடிவமென்று எண்ணத்தகும் இரண்டு உருவங்களை, 'காதல் ஒன்று, அதனைப் பேணிக்காக்கும் வரம் ஒன்று' என்று சொல்லத்தகும் இரண்டு பேர்களை, இன்னும் கிழவி கண்டாளோ இல்லையோ!

செவிலி கூற்று

காலே பரிதப் பினவே; கண்ணே

நோக்கி நோக்கி வாளிழந் தனவே;

அகலிரு வானத்து மீனினும்

பலரே மன்ற இவ் வுலகத்துப் பிறரே.

-குறுந்தொகை - வெள்ளி வீதியார் பாட்டு.

[பரி தப்பின - நடை தவறின. வாள் - ஒளி. அகல் இரு வானத்து அகன்ற பெரிய வானத்திலுள்ள. மீன் - நட்சத் திரம். மன்ற - நிச்சயமாக. பிறர் - அயலார்.]

ஆச்சரியம்

மரமும் செடியும் கரிந்து போன பாலைநில வெம்மையிலே அவர்கள் இந்தக் காட்சியைக் கண்டு வியந்து போனார்கள். செங்கதிரவன் இரக்கமின்றி எறிக்கும் வெய்ய கதிரில் அந்த இளங் காதலர்களின் அன்பு வாடிப் போகவில்லை; ஒளி விடுகிறது. அழகு நிரம்பிப் பருவம் வந்த அக் காதலனும் காதலியும் பாலை நிலத்தில் நடப்பவர்களாகத் தோன்றவில்லை. மலர் மலி சோலைகளும் நீர்மலி வாவிகளும் உள்ள வழியிலே செல்பவர்களைப் போல் மகிழ்ச்சியுடன் நடக்கிறார்கள். எதிரே வந்த சிறு கூட்டத்தார் இந்தக் காட்சியைக் கண்டு வியக்காமல் இருப்பது எப்படி? "எவ்வளவு ஒற்றுமை! அழகிலும் அறிவிலும் அன்பிலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவராகத் தோன்றவில்லையே!" என்றார் ஒருவர். "முறுக்கேறித் திரண்ட தோள்களையுடைய இந்தக் காளையின் அன்பு நிழலிலே மென்மையே உருவம் படைத்து வந்தாற்போன்ற இந்தப் பெண் செல்லும் காட்சியைக் கண்டது கண் செய்த பாக்கியம். நமக்குக்கூட இது பாலைவனமென்ற நினைவு மறந்து போகிறதே!" என்றார் மற்றொருவர்.

"நீர் சொல்வது உண்மைதான். இவர்களைக் காணும்போதே கண் குளிர்கிறது. நல்ல மெல்லிய மலர்களால் ஆகிய இரட்டை மாலையைக் கண்டது போல இருக்கிறது. கடவுளின் திருவருள் எத்தனை ஆச்சரியமானது. காதலென்ற ஒன்றை மனிதர்களுக்கு அளித்துத் துன்பத்தையும் வெம்மையையும் பொருட்படுத்தாத இனிமையை அதில் ஊட்டியிருக்கிறாரே! இவர்களுடைய காதல், காட்டிலும் நாட்டிலும் சிறக்கவில்லை; ஜீவனற்றுப்போன தாவரங்களும், உயிர் உடலினின்றும் போய்க்கொண்டிருக்கும் விலங்குகளும், காலோய்ந்து வலியிழந்து செல்லும் நம்மைப்போன்ற மக்களும் உள்ள இந்தப் பாலைநிலப் பெருவெளியிலேதான் இவர்களுடைய காதலுக்குத் தனிச்சிறப்பு உண்டாகியிருக்கிறது. விஷக் கடலினிடையே அமுதம் தோன்றியதுபோலவும், உலகைக் கவிந்த அந்தகாரத்தினிடையே மின்னல் தோன்றியது போலவும் இவர்கள், இங்கே காட்சியளிக்கிறார்கள். இவர்கள் காதல் வாழ்க!"

அவர் உள்ளத்தே எழுந்த உவகைப் பெருக்கு வார்த்தைகளாக வெளிப்பட்டுக் கொண்டிருந்த போது வேரொருவர் அவற்றைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. பாலைநிலத்திலும் கவிதை செய்யவைத்த இளங்காதலர்களின் காட்சியிலே கண்ணை பறிக்கொடுத்து நின்றார். உற்றுப் பார்த்தார். அவனைப் பார்த்தார், அவன் முகவெட்டைப் பார்த்தார். அவளையும் பார்த்தார், அவள் கண்களைப் பார்த்தார். ஏதோ புதிய பொருளைக் கண்டு பிடித்தவரைப்போலத் துள்ளிக் குதித்தார். "கண்டறியாதன கண்டேன். வியப்பு, பெருவியப்பு!" என்று உரக்கக் கூவினார். நல்ல வேளை, இதற்குள் அந்தக் காதலர் சென்றுவிட்டனர்.

முன்னே பேசிய இருவருள் ஒருவர், துள்ளிக் குதித்தவரைப் பார்த்து, "பெரு வியப்புத்தான்! நாங்களும் அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். சாதல் நிரம்பிய இங்கே காதலைக் கண்டோம். அந்தக் காதல், வெங்கதிரை நிலவொளியாக்கிற்று. பாலை நிலத்தைப் பூம்பொழிலாக்கிவிட்டது. இவை அதிசய மல்லவா?" என்றார். "அதற்கு மேலும் அதிசயம்! கடவுளின் அருள் என்று சொல்லுவார் சொல்லுக! நல்வினையின் வலிமை என்று கூறுவார் கூறுக! இந்த ஊழ்வினைத் திறம் நன்று! என்ன ஆச்சரியம்! ஊழ் வினையே! பாலே! நீ நல்லை!" பைத்தியம் பிடித்தது போலக் கூத்தாடும் அவருடைய வார்த்தைகளைத் தெளிந்து கொள்ளாமல் மற்ற இருவரும் மயங்கி நின்றார்கள்.

"நீர் கண்ட அதிசயம் என்ன, சொல்லும்."

"இந்த இரண்டு பேர்களையும் நான் அறிவேன்."

"அறிந்தால் என்ன? அதில் அதிசயம் என்ன இருக்கிறது?"

"இவர்கள் இளங்குழந்தைகளாக இருக்கும் போது நான் பார்த்திருக்கிறேன். அதே சாயல்; அதே முகவெட்டு; அந்தப் பெண் இருக்கிறாளே, அவளுடைய கண்களை நான் மறக்கவில்லை; அன்று கண்ட கண்களே; இப்போது மருட்சியுங்கூடக் கண்டேன்."

"இளமையிலிருந்து பழகிய நண்பினரென்று தானே சொல்லப் போகிறீர்? அது பெரிய ஆச்சரியமா? வடகடலில் இட்ட நுகத்தில் தென்கடலில் இட்ட கழி சேர்வது - போல் எங்கிருந்தோ வரும் ஆடவனும், எங்கிருந்தோ வரும் மடமகளும் ஒரு கணத்தில் ஊழ்வசத்தால் மனம் ஒன்றி மணமகிழும் வரலாறுகளை நாம் கேட்டிருக்கிறோம்; படித்திருக்கிறோம். அந்தக் காதல்தானே ஆச்சரியம்? பலநாள் பழகினவர் காதல் செய்வதில் என்ன வியப்பு இருக்கிறது?"

"கொஞ்சம் பொறுங்கள். பழகினவர்கள் ஒன்றுவதில் ஆச்சரியம் இல்லை; பழகாதவர்கள் பொருந்துவதுதான் அதிசயமென்பதை நானும் அறிவேன். ஆனால் இவர்கள் காதல் அதனினும் அதிசயமானது!"

"விஷயத்தை விளங்கச் சொல்லாமல் மூடு மந்திரம் போட்டால் நாங்கள் எப்படித் தெரிந்து கொள்வோம்!"

"இப்போது கைகோத்துக்கொண்டு போகின்ற இவர்களே, அன்றைக்கு எப்படி இருந்தார்கள் என்று பார்த்திருந்தால் உங்களுக்கும் இதன் சிறப்புத் தெரியும்."

"பார்க்காத குற்றத்தை ஒப்புக் கொள்கிறோம். அதை நீர் சொல்லிவிடும். கேட்டு மகிழ்ச்சி அடைகிறோம்."

"இவனும் இவளும் பகைவர்களாக இருந்தார்கள். சண்டை என்றால் சாமான்யமான சண்டையா? இவன் இவள் தலை மயிரைப் பிடித்து இழுத்தான். இவள் ஐயோ என்று கூவிக்கொண்டு இவனுடைய தலை மயிரைப் பிடித்து இழுத்து ஓடினாள். சண்டைக்கு ஒரு காரணமும் இல்லை. இந்தச் சண்டையைச் செவிலிமார் வந்து தடுத்தார்கள். அப்படியும் ஓயவில்லை. சின்னச் சண்டை தான். ஆனாலும் நாகம்போல ஒருவருக்கு மேல் ஒருவர் சீறிக்கொண்டு எதிர்த்ததைப் பார்த்திருந்தால், அவர்களா இப்படி இணைந்து வாழ்கிறார்களென்று நான் வியப்பதற்குக் காரணம் கண்டு கொள்வீர்கள். பழகாதவர்களை ஒன்றுபடுத்துவது ஆச்சரியமா? பகைசெய்து முரணியவர்களை ஒன்று படுத்துவது ஆச்சரியமா? இந்த ஆச்சரியத்தைக் கடவுள் செய்து காட்டுகிறார்; ஊழ்வலி செய்கிறது. அந்த ஊழை நாம் வியந்து பாராட்டாமல் இருப்பது எப்படி?" என்று முடித்தார்.

"ஆம்! ஆச்சரியத்திலும் ஆச்சரியந்தான். நல்லை மன்றம்ம பாலே! (ஊழ்வினையே, நீ நிச்சயமாக நன்மையை யுடையாய்)" என்று மற்ற இருவர்களும் சேர்ந்து ஊழை வாழ்த்தினார்கள்.

கண்டோர் கூற்று

இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன்

புன்றலை ஓரி வாங்குறள் பரியவும்,

காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது

ஏதில் சிறுசெரு உறுப, மன்னோ

நல்லைமன் றம்ம பாலே! மெல்லியற்

றுணைமலர்ப் பிணையல் அன்னஇவர்

மணமகிழ் இயற்கை காட்டி யோயே!

குறுந்தொகை - மோதாசனார் பாட்டு.

(ஐம்பால் - கூந்தல். புன்தலை ஓரி - புல்லிய தலைமயிர் வாங்குகள் பரியவும் - இழுத்துவிட்டு ஓடவும். தவிர்ப்பவும் - விலக்கவும். ஏது இல் - காரணம் இல்லாத. செரு - சண்டை . உறுப - செய்வார்கள். மன்ற - நிச்சயமாக. பால் - ஊழ்வினை. துணை மலர்ப் பிணையல் - இரட்டை மலர்மாலை. இயற்கை - இயல்பு. காட்டி யோய் - உண்டாக்கினாய்.)

இன்ப வாழ்வு

நன்றாக முற்றி விளைந்த தயிர், முளிதயிர். முதல் நாள் இரவு மிகவும் சிரத்தையோடு காய்ச்சிப் பிரை குத்திய தயிர். அதை எடுத்து வைத்துக்கொண்டு அந்த மெல்லியலாள் தன் கையாலேயே சிலுப்பத் தொடங்குகிறாள். காந்தள் மலரின் இதழ்களைப் போன்ற தன் மெல்லிய கைவிரல்களால் பிசைகிறாள். அவசர அவசரமாகப் பிசைகிறாள். தன்னுடைய நாயகனுடைய பசி வேளைக்கு உணவு படைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் அவள் சமையல் செய்கிறாள். பெரிய விருந்து சமைத்து விடவில்லை. சோறு சமைத்து விட்டாள். மோர்க்குழம்பு பண்ணப் போகிறாள். அதற்காகத்தான் அந்த முளிதயிரைத் தன் காந்தள் மெல்விரலால் பிசைகிறாள். அதோடு சேர்க்க வேண்டியவற்றை யெல்லாம் அரைத்து வைத்திருக்கிறாள். எல்லாவற்றையும் அதில் இட்டுக் கலக்குகிறாள். தன் நாயகன் காத்துக்கொண்டிருக்கிறானே என்ற எண்ணம் அவளை முடுக்குகிறது; ஆயிற்று; தாளித்துக் கொட்ட வேண்டியதுதான்.

சட்டென்று கையைத் தன் புடைவையிலே துடைத்துக் கொள்கிறாள். செல்வத்திலே வளர்ந்த அவளுக்குப் புடைவை வீணாகப் போகுமே என்ற ஞாபகமே இல்லை. 'அவர் காத்திருக்கிறார்' என்ற ஒரே எண்ணந்தான். அவன் அவசரப்படுகிறானா என்ன? அப்படி ஒன்றும் இல்லை. அவள் மிக்க அன்போடு பரபரப்புடன் செய்கிற இந்தச் சமையலைப் பார்த்துச் சிரித்த படியே நிற்கிறான் அவன். அந்த உணவை உண்ணுவதைக் காட்டிலும் அவள் அதைச் சமைக்கும் வேகத்தில், அதற்காக அவள் உடம்பை நெளித்துக் கொள்ளும் கோணலில், இன்னதுதான் செய்ய வேண்டுமென்ற வரையறையே இல்லாமல் அவள் கையும் காலும் துடிக்கிற துடிப்பில் அவன் ஒரு தனி அழகைக் கண்டு களிக்கிறான்.

அந்தப் புடைவை அழுக்காகிவிட்டதே, அதைக் கவனிக்கிறாளா? இல்லவே இல்லை; அந்தப் புடைவையோடேதான் அவள் சமைக்கிறாள். அடுப்பில் கரண்டியைப் போடுகிறாள்; தாளித்துக் கொட்டுகிறாள். தாளித்துக் கொட்டினால்தான் என்ன? அதையேயா பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்? அதிலே ஒரு திருப்தி அவளுக்கு. அந்தத் தாளித்த புகை குவளை மலரைப் போன்ற அவளது கண்ணைக் கவிகிறது. அவசர அவசரமாக ஒரு கையால் கண்ணையும் துடைத்துக் கொள்கிறாள். 'குவளை உண் கண் குய்ப்புகை கமழ' அவள் துழாவிச் சமைத்த அந்த இனிய புளிக் குழம்பு, தீம்புளிப்பாகர், இப்போது தயாராகிவிட்டது.

இலை போடுகிறாள்; பரிமாறுகிறாள். வெறும் பச்சை மோர்க் குழம்புதான் அது. அதை அவன், "மிகவும் நன்றாக இருக்கிறது; மிகவும் நன்றாக இருக்கிறது!" என்று நொட்டை கொட்டிக்கொண்டு உண்கிறான்; "இன்னும் கொஞ்சம் போடு, இன்னும் கொஞ்சம்" என்று கேட்கிறான். இனிது எனக் கணவன் அதை உண்பதனால் அவள் பூரித்து போகிறாள். அவள் என்ன பண்ணிவிட்டாள்! அறுசுவை உண்டி சமைத்துவிட வில்லை. ஆனாலும் தன் மாசற்ற அன்பைக் குழைத்துச் செய்தாள். அந்த அன்பை உணர்ந்து அவன் உண்கிறான்; பாராட்டுகிறான். அவள் உள்ள மகிழ்ச்சி முகத்தில் லேசாகத் தெரிகிறது. அந்த ஒள்ளிய நெற்றியையுடைய செல்வ மகளது முகம் மிகவும் நுண்ணிதாக மகிழ்கிறது. திருப்தியின் ரேகையும், உள்ள மலர்ச்சியின் பொலிவும் அந்த முகத்தை அழகு செய்கின்றன.

இந்த இன்பவாழ்வின் காட்சியை அவளுடைய பிறந்த வீட்டிலிருந்து வந்த செவிலித்தாய் பார்க்கிறாள். பார்த்துவிட்டு மீண்டும் தன் ஊருக்குப் போகிறாள். பெண்ணின் தாய் செவிலியைப் பார்த்து, "போனாயே; குழந்தை எப்படி இருக்கிறாள்? மாப்பிள்ளை அவளை நன்றாக வைத்துக்கொண்டிருக்கிறானா? சந்தோஷமாக இருக்கிறாளா?" என்று கேட்கிறாள். அவள் தான் கண்ட காட்சியையே விடையாகச் சொல்கிறாள்:

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்

கழுவுறு கலிங்கம் கழா அ துடீஇக்

குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்

தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்

இனிதெனக் கணவன் உண்டலின்

நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே.

-குறுந்தொகை - கூடலூர்கிழார் பாட்டு.

[முளி - விளைந்த. பிசைந்த குழப்பிய. கலிங்கம் - ஆடை. கழாஅது - துவைக் காமல். உடீஇ - உடுத்து. உண்கண் - மையுண்ட கண். குய்ப்புகை - தாளிதப்புகை. துழந்து - துழாவி. அட்ட - சமைத்த. தீம்புளிப் பாகர் - இனிய புளிச்சுவையையுடைய குழம்பு. நுண்ணிதின் - மிக நுண்மையாக. மகிழ்ந்தன்று - மகிழ்ந்தது. ஒண்ணுதல் முகன் - விளக்கத்தையுடைய நெற்றியையுடையவளது முகம்.]

'மான் உண்டு எஞ்சிய நீர்'

தெய்வத்தின் திருவருள் கூட்டினமையால் அந்தப் பெண்மகளும், ஆண்மகனும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். இரண்டு தலையும் ஓர் உடம்பும் உடைய பறவையைப் போல அவர்கள் இரண்டு உடலும் ஓருயிருமாகப் பழகினர். பிறர் அறியாதவாறு அளவளாவி வந்தனர் அவர்கள். காதலியின் உயிர்த் தோழி ஒருத்திக்குத் தான் அந்த இரகசியம் தெரியும். தம் மகள் ஒரு காதலனைத் தானே நாடி அடைந்திருக்கிறாள் என்ற உண்மையை அவள் பெற்றோர் உணரவில்லை. முதலில் தினை புனத்திடையே தொடங்கிய காதல் நாடகம் இரவில் வீட்டுப் புறத்தேயுள்ள தோட்டத்தில் நிகழ்வ தாயிற்று.

இந்தத் திருட்டுக் காதல் வாழ்நாள் முழுவதும் நிகழ்வதென்பது அமையுமா? என்றேனும் ஒரு நாள் மறைவு வெளிப்பட்டுவிடுமே! அன்றி, கனவிலே காதல் புரியும் அவ்விரண்டு ஆருயிர்க் காதலர்களும் ஒரு நாளில் சேர்ந்து பழகும் காலம் கொஞ்சந்தானே? பகலெல்லாம் ஒருவரை ஒருவர் நினைந்து செயலிழந்து கிடப்பதும், இரவில் பலபல இடையூறுகளுக்கிடையே இருவரும் தலைப்பட்டு அளவளாவி இன்புறுவதும் எவ்வளவு காலம் நடைபெறும்? தம்முள்ளே இருக்கும் காதலைக் காதலி தன் பெற்றோர்களுக்குக் குறிப்பாக அறிவிக்க எண்ணித் தன் உயிர்த்தோழியிடம் அதைச் சொல்லுகிறாள். தலைவி, பகற் காலத்தில் தலைவனை நினைந்து நோயுற்றவளைப்போலக் கிடப்பதை அறிந்த செவிலித்தாய், "இவள் ஏன் இப்படி இருக்கிறாள்?" என்று தோழியைக் கேட்கிறாள். இதுதான் சமயமென்று கருதி அவள் தலைவிக்கு ஒரு காதலன் அமைந்த செய்தியைக் குறிப்பாய்த் தெரிவிக்கிறாள். அந்தக் குறிப்பைச் செவிலி உணரவில்லை.

இதனிடையில் தலைவியை மணந்து கொள்ள யார் யாரோ வேறு முயற்சி செய்கிறார்கள். தன் காதலனையன்றிப் பிறரை மணந்தால் தன் கற்பு வழுவுமாதலால் இந்தச் சிக்கலினின்று நீங்கும் வழி என்னென்று ஆராய்ந்து மறுகுகிறாள் காதலி நங்கை. தோழி அதனை அறிந்து வழி உண்டாக்குகிறாள். தலைவனைப் பார்த்து, "இவளை மணம்பேச அயலாரெல்லாம் வருகிறார்கள். நீ மணம் பேச வந்தால், தங்கள் செல்வ நிலைக்கு ஏற்றவனல்ல என்று மறுத்தாலும் மறுப்பார்கள். ஆதலால் இவளை ஒருவரும் அறியாமல் உடனழைத்துக் கொண்டு நின் ஊர் சென்று மணம் புரிந்து கொள்வாயாக!" என்று தோழி வழி சொல்லிக் கொடுக்கிறாள். தலைவன் அவள் கூறுவது தக்கதென்று எண்ணி இசைகிறான்.

இரு காதற் பறவைகளும் பறந்து போய் விடுகின்றன. அவ்விரு காதலரும் போன பிறகு வீட்டாருக்கு உண்மை விளங்குகிறது. "ஐயோ! முன்பே தெரிந்திருந்தால் அவனுக்கே இவளைக் கல்யாணம் செய்து கொடுத்திருப்பேனே!" என்று தாய் வருந்துகிறாள். தோழி ஒன்றும் அறியாதவள்போல அந்தச் சோக நாடகத்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். போன காதலர்கள் மணம் செய்து கொண்டார்கள். "இனிமேல் நம்மைப் பிரிப்பவர்கள் யார் இருக்கிறார்கள்? மறைவாக நிகழ்ந்த நம் காதலை அக்கினி பகவானுக்கு முன்னே உலகறியும்படி செய்து விட்டோம். இனி, என்னுடைய ஊருக்கு நாம் தம்பதிகளாய் போய் வருவோம். என்மேல் இருந்த கோபமெல்லாம் இப்போது என் பெற்றோர்களுக்கு ஆறியிருக்கும்" என்று தன் மனைவி கூறும் போது, அவன் தடுப்பானா, என்ன? புறப்பட்டு விடுகிறான், உரிமையுள்ள கணவனாக.

பிறந்தகத்துக்கு வந்தபோது அந்த மடமகள் எதிர்பாராத ஆச்சரியங்களைக் காண்கிறாள். யாராவது அவர்களுடைய கல்யாணத்தைப் பற்றி முணு முணுக்க வேண்டுமே! எல்லோரும் முகமலர்ச்சியுடன் இணைமலர் மாலை போன்ற அவ்விரண்டு அழகுருவினரையும் அன்புடன் வரவேற்று உபசரிக்கின்றனர். தோழிதான் எல்லோரையும்விட அதிக இன்பத்தை அடைகிறாள். இந்த மாதிரி, கணவனும் மனைவியுமாகக் கண்குளிர அவர்களைக் காணவேண்டுமென்று அவள் ஏங்கிக் கிடந்தது அவளுக்குத்தானே தெரியும்? இல்லற வாழ்க்கையிலே புகுந்த தலைவியைத் தனியே கண்டு தோழி பேசக் களிக்கிறாள்.

தன் சொந்த ஊரிலே அந்தக் காதற் பாவை ஓர் அரசிபோல் வாழ்ந்தவள். செல்வம் நிரம்பிய வீட்டில் வளர்ந்தவள். ஒன்றாலும் குறைவு தோன்றாதபடி போற்றி வளர்க்கப் பெற்றவள். அவள் தன் காதலனுடன் வேற்றூரில் எங்ஙனம் வாழ்க்கை நடத்துவாள்? தோழிக்கு இந்தக் கவலை எழுந்தது. தலைவனுடைய ஊர் தண்ணீர் இல்லாக் காடென்று கேள்வி யுற்றிருக்கிறாள். ஆகவே, அவள் பேச்சிடையே மெல்ல, "நீ சென்ற ஊரில் நல்ல தண்ணீர் இல்லை என்கிறார்களே, நீ எப்படி நுகர்ந்தாய்?" என்று கேட்கிறாள்.

தலைவி அவள் கேட்ட கேள்வியைக் கேட்டு ஆச்சரியப்படுகிறாள். "என்ன, இப்படிச் சொல்லுகிறாய்? தாகம் எடுத்த போதெல்லாம் பாலைக் குடிப்பவளாயிற்றே என்று நினைத்துச் சொல்லுகிறாயோ? என்னுடைய நாவின் வறட்சியைப் போக்க இனிய தண்ணீர் இங்கே இருக்கிறது. ஆனால் என் உயிரின் வறட்சியைப் போக்கும் அன்பு நீர் பொங்கும் இடமல்லவா அந்த ஊர்? நம்முடைய ஊரில் தேனோடு கலந்த பாலைச் சாப்பிட்டுக்கொண்டு பொழுது போக்குவதைவிட, அவர் ஊரில் கலங்கிய நீரை உண்டு வாழ்வதுதான் எனக்கு இனிது!"

"என்ன? கலங்கிய நீரா? அதுதான் அங்கே கிடைக்குமா?"

"நல்ல நீர் கிடைக்கிறதோ இல்லையோ, அது வேறு. நல்ல நீர் கிடைக்காமல் கலங்கிய நீர் கிடைப்பதாயிருந்தாலும் அதுதான் இனிது. தழைகள் நிரம்பிய சிறு பள்ளத்திலே மான்கள் உண்டு எஞ்சியிருக்கிறதே, அந்தக் கலங்கல் நீராக இருந்தாலும் அதை அருந்துவதை வெறுக்க மாட்டேன். அதுதான் இனிது. தோழி! அதை உண்ணும் பொழுதெல்லாம், அது என் உயிர்க் காதலருடைய நாட்டு நீரென்ற பெருமிதம் எனக்கு தெளிவை உண்டாக்குகிறது. உள்ளம் மகிழ்ச்சி பொங்க நிற்கையில் இந்த நீரின் கலக்கம் என்ன செய்யும்? "இங்கேயோ, அவரை அடையாமல் உள்ளம் கலங்கிக் கிடக்கும்போது, தேனும் பாலும் கலந்து தந்தாலும் அது எப்படி எனக்கு இன்பத்தைத் தரும்?"

தோழி உண்மையை உணர்கிறாள். மானுண்டு எஞ்சிய கலிழி நீரை இனிதாகப்பண்னுவது காதலனது அன்பு என்பதைக் கண்டுகொள்கிறாள்.

தலைவன் கூற்று

அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத்

தேன்மயங்கு பாலினும் இனிய, அவர் நாட்டு

உவலைக் கூவற் கீழ

மானுண் டெஞ்சிய கலிழி நீரே.

- ஐங்குறு நூறு - கபிலர் பாட்டு.

[அன்னையென்றது தோழியை. வாழிவேண்டு - நீ வாழ்வாயாக! நான் சொல்வதை விரும்பிக் கேட்பாயாக. படப்பை - ஊர்ப்பக்கம். மயங்கு கலந்த. உவலைக் கூவற் கீழ - தழை நிரம்பிய பள்ளத்தின்கீழே உள்ள. எஞ்சிய கலிழி நீர் - மிஞ்சி நிற்கும் கலங்கல் தண்ணீர்.]

'மெளன நாடகம்'

ஆணும் பெண்ணும் கூடி வாழும் இல்லற வாழ்க்கையில் பெண்ணுக்குத்தான் வீடென்னும் கூடு கட்டிக் கிளியைப்போலப் பாதுகாத்து வைத்திருப்பார்கள். ஆடவனும் அந்தக் கூட்டில் அடை பட்டுக் கிடந்தால் பிறகு ஆடவனுக்கு என்ன பெருமை? அவனுக்குரிய முயற்சிகள் இல்லையா? இல்லறத் தேரை ஓட்டும் பொறுப்பு அவனுடைய தாயிற்றே. அதற்குப் பொருள் வேண்டாமா?

ஆள் வினையினால்தான் மனிதன் ஆடவனாகிறான். அவனுடைய முயற்சியின் பலமே உலகத்தில் இயக்கத்தை உண்டுபண்ணுகிறது. காதல் இன்பத்திலே ஊறி நிற்கும் பொழுது அவனுடைய உள்ளமும் உடலும் ஓய்வு பெறுகின்றன; புது முறுக்கை அடைகின்றன. அந்த அமைதியிலிருந்து மீண்டும் அவன் முயற்சியின்மேற் பாய்கிறான். உலகத்தின் பரந்த வெளியிலே புகுந்து தொழில் செய்து பொருளீட்டுகிறான். பொருள் குவித்து அறம் செய்கிறான்; இன்பம் நுகர்கிறான். பருவகாலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து போவது போல முயற்சியும் அதன் பயனும் நுகரும் நுகர்ச்சியும் மாறி மாறி ஆடவனது வாழ்க்கையை அளந்து வருகின்றன.

பெண்மகள் இந்த முயற்சியின் பெருமையை உணர்கிறாளா? தன் ஆருயிர்க் காதலனைப் பிரியச் செய்யும் பொருள் முயற்சியை அவள் வெறுக்கிறாள். பொருளைக் காட்டிலும் இன்பம் பெரிதென்று நினைக்க வில்லை. அவளும் அறிவுடையவள் தானே? பொருள் வளம் இருந்தால் தான் இன்பம் சுரக்குமென்பது அவளுக்குத் தெரியாதா என்ன? ஆனாலும் அந்தப் பொருளை ஈட்டும் பொருட்டுத் தன் காதலன் பிரிவா னென்பதை அறியும்போது அவள் எல்லாவற்றையும் மறந்துவிடுகிறாள். 'அவளைப் பிரிந்து உயிர் வாழ்வது எப்படி?' என்ற ஏக்கம் அவனைப் பற்றிக் கொள்கிறது.

அவனுடைய கட்சியை எடுத்துப் பேச ஒரு தோழி இருக்கிறாள். அவள் என்ன என்ன காரணமோ சொல்லி, காதலன் இப்பொழுது பிரிவது இன்றியமையாததென்று வற்புறுத்துகிறாள். அதெல்லாம் சரி. உணர்ச்சி மிகுந்த இடத்தில், இந்தக் காரணங்களெல்லாம் ஏறுமா? காதலி பெரிய யோசனையில் ஆழ்கிறாள்.

"அவர் பொருள் தேடிவர எண்ணுகிறார். இல்லறம் நடத்தும் சுமையை வகிக்க வேண்டியிருப்பதால் அவர் முயற்சியை நீ தரிக்க வேண்டும்" என்கிறாள் தோழி.

"ஹும்!"

"அவர் பொருள் ஈட்டும் பொருட்டுப் போய் விரைவில் மீண்டு வருவார். நீ அவரைப் போய் வா என்று சொல்லவேண்டும்." விஷயத்தைக் கேட்கும்போதே பாதி உயிர் போய்விடும்போல் இருக்கிறது, அந்த மெல்லியலுக்கு. அவள் தைரியமாக நின்று, "போய்வா" என்று சொல்ல வேண்டுமாம்! காதலனைப் போய்வா என்று சொல்வதற்கும், யமதர்ம ராஜனை, "என் உயிர் கொள்ள வா" என்று அழைப்பதற்கும் வித்தியாசம் அவள் அளவில் ஒன்றும் இல்லை.

"போகக்கூடாது" என்று சொல்லலாமா? சே, அது தவறு. காதலர் தம் இருவருடைய இன்ப வாழ்க்கையும் முட்டின்றி நடை பெறுவதற்கு வேண்டிய பொருளைத்தானே தேடச் செல்கிறார்? போகக் கூடாதென்று தடுப்பது நியாயம் அன்று. அவர் பிரிந்து போனால் அதனால் வரும் துன்பந்தான் என்ன?

காதலியின் மனம் சுழல்கிறது. அவள் தன் தோள்வளைகளைப் பார்க்கிறாள். அது சம்பந்தமாக யோசனை படர்கிறது. இப்போது தன் தோளோடு செறிந்து கிடக்கும் அந்தத் தொடி அவர் பிரிந்து நீங்கினால் உடனே கழன்று தோளினின்றும் நீங்கி விடுமே!

ஏன்?

அவள் இப்போது அந்த வளைகளைத் தாங்கி நிற்கும் தன் தோளைப் பார்க்கிறாள். அவருடைய அணைப்பிலே இன்பங்கண்டு பூரித்த இந்தத் தோள்கள் என்ன ஆகும்? தம்மைக் கருது வாரின்றி மெலிந்து போகும். தோள் மெலியவே தொடி கழன்றுவிடுமே!

என்ன செய்வது?

தோளையும் தொடியையும் மாறி மாறிப் பார்க்கிறாள். காதலன் போகாமல் இருப்பது முறையன்று. அவன் பிரிந்தால் அவள் மெலிந்து போவாள். காதலன் போகவேண்டும்; அவள் தோளும் மெலியாமல் இருக்கவேண்டும். அதற்கு வழியுண்டா ? ஆம்.; ஏன் இப்படிச் செய்யக்கூடாது? இதில் அன்ன தவறு? அவர் போகட்டும்; நாமும் அவருடன் போவோமே!' இந்த எண்ணம் தோன்றியதோ இல்லையோ, உடனே காதலி தன் பாதங்களைப் பார்க்கிறாள். அவள் தன் காதலனுடன் போவதாக இருந்தால் அந்தத் துணிகரமான செயலை ஏற்றுக் கொள்ள வேண்டியது கால்களினுடைய பொறுப்பு. அவை நடந்து தன் தோள் மெலிவையும் தொடி கழல்வதையும் பாதுகாக்கவேண்டும். அவள் மென்மையான நோக்கம் அவளுடைய பாதத்திலே சென்றது. தன் கால்களைத் தானே நெஞ்சினால் பிடித்துக்கொண்டு வேண்டுகிறாள். "என் மெத்தென்ற பாதங்களே, நீங்களே வருத்தம் பாராமல் தலைவருடன் சென்று என் தோள் மெலிவடையாமலும், என் தொடி கழலாமலும், யான் துன்புறாமலும் காப்பாற்ற வேண்டும்" என்று வேண்டுகிறாள்.

இவ்வளவும் அவள் மனத்துக்குள் நிகழும் நிகழ்ச்சி. தோழி அவள் கருத்தை உணர்ந்துகொண்டாள். நேரே நாயகன்பாற் சென்றாள். அவன் ஆர்வத்தோடு தன் காதலியின் உடம்பாட்டை எதிர்பார்த்து நிற்கிறான்.

"என்ன சொன்னாள்?"

"ஒன்றும் வாய் திறந்து சொல்லவில்லை. நான் சொன்னதைக் கேட்டாள். தன் தொடியை நோக்கினாள்; மெல்லிய தோளை நோக்கினாள்; பிறகு அடியை நோக்கினாள். ஆண்டு அவள் செய்தது அதுதான்." இந்த மொளன நாடகத்தின் பொருளைத் தலைவன் உணர்ந்து கொண்டான். அவள் மனத்தோடு தன் மனத்தையும் வைத்து ஒட்டியறியும் காதலுடையவன் அல்லவா? 'அவள் வருவதா! இது சாத்தியமன்று' என்று நினைத்தான். "சரி, நான் இப்போது புறப்படவில்லை" என்று சொல்லி வீட்டுக்குள்ளே புகுந்தான்.

தோழி கூற்று

தொடிநோக்கி மென்றோளும் நோக்கி அடிநோக்கி

அஃதாண் டவள்செய் தது.

--குறள், கஉஎ .

[தொடி - தோள்வளை. அஃது ண்டு அவள் செய்தது அதுதான், தன் தோழி தலைவனது பிரிவை உணர்த்திய காலத்தில் அவள் குறிப்பாகச் செய்த செய்கை.)

இதன் தொடர்ச்சி-காவியமும் ஓவியமும் பாகம் 2

ஆசிரியர் - கி. வா. ஜகந்நாதன்

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top