பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பதிற்றுப்பத்து

மிகவும் பழமை வாய்ந்த சங்க இலக்கியமாகிய பதிற்றுப்பத்து பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதி என்ன சொல்கிறது?

இப்பகுதி எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்தை அறிமுகப்படுத்துகிறது. பதிற்றுப்பத்து பத்துச் சேர அரசர்கள் பற்றிப் புகழ்ந்து பாடுகிறது என்பதைக் கூறுகிறது. பதிற்றுப்பத்து கூறும் சேர மன்னர்களின் வீரம், படைத்திறன், ஆட்சி முறை, கொடை, சமுதாயம், பண்பாடு ஆகியவற்றை விளக்குகிறது. சேர மன்னர்களின் பண்பு நலன்களை விவரிக்கிறது. அக்கால மக்களின் வாழ்க்கை முறையினை எடுத்துரைக்கிறது. இவற்றைப் பாடிய புலவர்களின் நிலையினை விளக்குகிறது. உவமை முதலான இலக்கிய நலங்களைக் கூறுகிறது.

இதைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

பண்டைத் தமிழ் வரலாற்றில் சேர மன்னர் வரலாற்றினை இலக்கிய அடிப்படையில் அறிந்து கொள்ளலாம். சேர மன்னரது ஆட்சி, வீரம், படை, கொடைத் திறம், சமுதாயம், பண்பாடு பற்றி உணரலாம். புலவர்களின் வாழ்க்கை நிலை பற்றியும், பாணர், கூத்தர், விறலியர் போன்ற கலைஞர்களின் வாழ்க்கை நிலை பற்றியும் அறியலாம்.

முன்னுரை

தமிழில் உள்ள இலக்கியங்களுள் மிகவும் பழமை வாய்ந்தவை சங்க இலக்கியங்களாகும். அச்சங்க இலக்கியங்களுள் வரலாற்றுச் செய்திகளைக் கூறும் இலக்கியங்கள் புற இலக்கியங்களே. அக இலக்கியங்களும் ஆங்காங்கே வரலாற்றுச் செய்திகளைச் சுட்டிச் சென்றாலும் புறநானூறு, பதிற்றுப்பத்து, ஆற்றுப்படை இலக்கியங்கள் போன்ற புற இலக்கியங்களே வரலாற்றுச் செய்திகளை நமக்கு முழுமையாகத் தருகின்றன. சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் புலவர் பலரால் பாடப் பட்டவை. இருப்பினும் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த அப்புலவர்கள் ஒருங்கிணைந்து திட்டமிட்டு, சில இலக்கியங்களை உருவாக்கியுள்ளனர் என்று கூறத்தக்க அளவில் சில இலக்கியங்கள் காணப்படுகின்றன. அத்தகைய இலக்கியங்களில் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவை மிகச் சிறந்தவை. ஏனெனில் ஐந்து புலவர்கள் அன்பின் ஐந்திணைகளை எடுத்துக் கொண்டு ஆளுக்கு நூறு பாடல்களாக ஐங்குறுநூறு என்ற அகப்பாடல் தொகுதியினை எழுதினர். அதேபோல் பத்துப் பெரும் புலவர்கள் பத்துச் சேர அரசர்கள் பற்றி ஒவ்வொரு அரசனுக்கும் பத்துப் பத்துப் பாடல்களாகப் பாடிச் சிறப்புச் செய்துள்ளனர்.

ஒரு மரபில் பிறந்த பத்து மன்னர்கள் குறித்து, தொடர்ச்சியாகப் புலவர் பாடிய செய்யுட்கள் காலமுறை தவறாது இடம் பெற்றிருப்பதுவே இந்நூலின் தலைமைச் சிறப்பாகும். பதிற்றுப்பத்துப் பாடல்களைத் தொகுத்தோர் ஒவ்வொரு பத்துக்கும் பதிகம் ஒன்றனையும் சேர்த்துள்ளனர். பாடப்பட்ட சேர மன்னனின் மெய்க்கீர்த்தி போலப் பதிகம் அமைந்தது. பாடிய புலவர், பாடப்பட்ட மன்னன், புலவர் பெற்ற பரிசில் முதலான செய்திகளைப் பதிகம் கூறுகிறது. பதிகங்களைப் பாடியவர் பெயர் தெரியவில்லை . ஒவ்வொரு பாட்டிற்கும் திணை கூறாமல் துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்று குறித்துச் சென்றுள்ளமை பதிற்றுப்பத்துக்கே உரிய தனிச் சிறப்பாகும்.

எட்டுத்தொகையில் பதிற்றுப்பத்து பெறுமிடம்

எட்டுத் தொகையில் காணப்படும் நூல்களுள் பதிற்றுப்பத்து நான்காம் இடத்தைப் பெற்றுள்ளதை எட்டுத்தொகை பற்றிய வெண்பா கூறும். இந்நூல்களில் பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய இரண்டும் புறப்பொருள் பற்றியன. புறநானூறு சங்க கால வரலாற்றை அறிய உதவுவது. பதிற்றுப்பத்து சங்க காலச் சேரமன்னர்களின் வரலாற்றை மட்டும் அறிய உதவுகிறது. இசை வகுக்கப்பட்ட புறநூல் இது ஒன்று மட்டுமே. இந்த இரண்டு புறப்பாடல்களைத் தவிர, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவை அகப்பாடல்களாகும். பரிபாடல் அகமும் புறமும் கலந்தது.

பதிற்றுப்பத்தின் பெயர்க்காரணம்

பத்துப் பத்து என்பது பதிற்றுப்பத்து என ஆயிற்று. பத்துச் சேர மன்னர்களைப் பற்றிப் பத்துப் புலவர்கள் பாடிய பத்துப் பத்துப் பாடல்களின் தொகுதியாக விளங்குவதால் இந்நூல் பதிற்றுப்பத்து எனப் பெயர் பெற்றது. ஆக இது நூறு பாடல்கள் அடங்கிய தொகுதியாகும்.

பதிற்றுப்பத்தும், எழுதிய புலவர்களும்

பதிற்றுப்பத்து பத்து அரசர்களைப் பற்றிப் பத்துப்புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுதி என்றாலும் கால வெள்ளத்தில் முதற்பத்தும், இறுதிப் பத்தும் அழிந்துபட்டன. தமிழுலகிற்குக் கிடைத்திருப்பவை இரண்டாம் பத்து முதல் ஒன்பதாம் பத்து முடியவுள்ள எட்டுப் பத்துக்களே. முதற்பத்தையும், பத்தாம் பத்தினையும் சார்ந்த பாடல்கள் சில தொல்காப்பிய உரைகளாலும், புறத்திரட்டு என்னும் தொகை நூலாலும் தெரிய வருகின்றன.

பத்து

பாடிய புலவர்

பாடப்பெற்ற அரசன்

முதற்பத்து

--

--

இரண்டாம் பத்து நெடுஞ்சேரலாதன்

குமட்டூர்க் கண்ணனார்

இமயவரம்பன்

மூன்றாம் பத்து குட்டுவன்

பாலைக் கௌதமனார்

பல்யானைச் செல்கெழு

நான்காம் பத்து நார்முடிச் சேரல்

காப்பியாற்றுக் காப்பியனார்

களங்காய்க் கண்ணி

ஐந்தாம் பத்து செங்குட்டுவன்

பரணர்

கடல் பிறக்கோட்டிய

ஆறாம் பத்து சேரலாதன்

காக்கைபாடினியார் நச்செள்ளையார்

ஆடுகோட்பாட்டுச்

ஏழாம் பத்து வாழியாதன்

கபிலர்

செல்வக் கடுங்கோ

எட்டாம் பத்து பெருஞ்சேரல் இரும்பொறை

அரிசில்கிழார்

தகடூர் எறிந்த

 

ஒன்பதாம் பத்து இரும்பொறை

பெருங்குன்றூர் கிழார்

குடக்கோ இளஞ்சேரல்

பத்தாம் பத்து

--

--

பாடிய புலவர்கள் பற்றிய செய்திகள்

முதற் பத்தைப் பாடிய புலவர் பற்றித் தெரியவில்லை. இருப்பினும் பாடப்பட்ட அரசன் உதியன் சேரலாதன் என்று அறிஞர் கருதுவர்.

குமட்டூர்க் கண்ணனார்

இரண்டாம் பத்தைக் குமட்டூர்க் கண்ணனார் என்பவர் பாடியுள்ளார். இவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடி உம்பற்காட்டில் ஐந்நூறு ஊர்களை இறையிலியாகப் பெற்றார் (இறையிலி - வரியற்ற இலவச நிலம்) குமட்டூர் இவரின் ஊராகும்.

பாலைக் கௌதமனார்

மூன்றாம் பத்தைப் பாடியவர் கெளதமனார். கௌதமனார் என்பது இவரது இயற்பெயராகும். பாலைத் திணையைப் பாடுவதில் வல்லவராக இருந்ததால் இவர் பாலைக் கௌதமனார் எனப்பட்டார். மூன்றாம் பத்தில் இவர் பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் புகழ்ந்து பாடியுள்ளார். இவர் அந்தணர். ஒழுக்கத்தை உயிராகப் போற்றிய மனிதர். இவர் பத்து வேள்விகள் செய்து மனைவியொடும் விண்ணுலகு சென்றார் எனக் கூறப்படுகிறது.

காப்பியாற்றுக் காப்பியனார்

நான்காம் பத்தைப் பாடியவர் காப்பியாற்றுக் காப்பியனார் என்பவர். இப்புலவரின் ஊர் காப்பியாறு. இயற்பெயர் காப்பியன். இதனால் இவரைக் காப்பியாற்றுக் காப்பியனார் என அழைக்கின்றனர். இவர் பாடிய மன்னன் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் என்பவனாவான். இதைப் பாடியதற்குப் பரிசிலாக இந்த அரசனிடம் நாற்பது நூறாயிரம் பொன்னும், ஆட்சியில் ஒரு பகுதியும் பெற்றுள்ளார்.

பரணர்

ஐந்தாம் பத்தைப் பாடியவர் பரணர். இவரோடு ஒத்த புலவர் கபிலர். எனவே இருவரையும் கபில பரணர் என்றே கூறிவந்தனர். இவரது பாடல்களில் வரலாற்றுச் செய்திகள் இடம்பெறும். இவர் ஐந்தாம் பத்தில் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பாடியுள்ளார். சங்க இலக்கியங்கள் பெரும்பாலானவற்றில் இவரது பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவர் செங்குட்டுவனைப் பாடியதால் உம்பற்காட்டு வருவாயையும், அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசாகப் பெற்றார்.

காக்கைபாடினியார் நச்செள்ளையார்

ஆறாம் பத்தைப் பாடியவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார் ஆவார். செள்ளை என்ற சொல், தாய் எனப் பொருள்படும். 'ந' என்பது சிறப்பை உணர்த்துவது. இவர் பெண்பால் புலவர் என்பதைச் செள்ளை என்ற சொல்லால் அறியலாம். காக்கையைப் பற்றிப் பாடியதால் காக்கைபாடினியார் என அழைக்கப்பட்டார். இவர் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை ஆறாம் பத்தில் பாடினார். அவரது பாட்டைக் கேட்டு மகிழ்ந்த மன்னன் அவருக்கு ஒன்பது துலாம் பொன்னும், நூறாயிரம் பொற்காசும் பரிசாகத் தந்தான். தனது அவைக்களப் புலவராகவும் சேர்த்துக் கொண்டான்.

கபிலர்

ஏழாம் பத்தைப் பாடியவர் கபிலர். சங்கப் புலவரில் தலை சிறந்தவர். இவரது ஊர் வாதவூர். இவர் குறிஞ்சித் திணையைப் பாடுவதில் வல்லவர். பாரியின் நெருங்கிய நண்பர். இவர் செல்வக்கடுங்கோ வாழியாதனை ஏழாம் பத்தில் புகழ்ந்து பாடி, அதற்குப் பரிசாக அம்மன்னன் நூறாயிரம் காணம் பொன் தந்ததுடன், நன்றா என்ற குன்றின் மீது ஏறி நின்று கண்ணில் கண்ட ஊரை எல்லாம் இவருக்கு அன்பளிப்பாகத் தந்தான்.

அரிசில்கிழார்

எட்டாம் பத்தைப் பாடியவர் அரிசில்கிழார். கிழார் என்பதற்கு உரிமையாளர் எனப் பெயர். அரிசில் என்பது இவரது ஊர். எனவே அரிசில் கிழார் என அழைக்கப்பட்டார். இயற்பெயர் தெரியவில்லை. இவர் பெருஞ்சேரல் இரும்பொறையைப் பாடியுள்ளார். இப்பத்தைப் பாடியதற்காக அரசு கட்டிலையும், ஒன்பது நூறாயிரம் பொற்காசுகளையும் பரிசிலாகப் பெற்றார்.

பெருங்குன்றூர்கிழார்

ஒன்பதாம் பத்தைப் பாடியவர் பெருங்குன்றூர்கிழார் ஆவார். இவர் ஊர் பெருங்குன்றூர் ஆகும். இயற்பெயரை அறிய முடியவில்லை. ஒன்பதாம் பத்தில் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையை இவர் பாடியுள்ளார். அதற்குப் பரிசாக முப்பத்திரண்டாயிரம் பொற்காசுகளையும், ஊரும் மனையும் வாழ்வதற்கு மலையும், அணிகலனும் பெற்றார். பத்தாம் பத்து யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப் பாடியதாக இருக்கலாம் என அறிஞர் கருதுவர். பாடிய புலவர் பெயரோ, பெற்ற பரிசிலோ தெரியவில்லை .

பதிற்றுப்பத்து

பதிற்றுப்பத்திலிருந்து முதல் நூற்றாண்டுக் காலத்துச் சேரவேந்தர்கள் பற்றிய செய்திகளை அறிகிறோம். வரலாறு, நிலவளம், மன்னர்களைப் பற்றிய செய்திகள், மக்களின் வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது. இனி ஒவ்வொரு பத்தாகக் காணலாம்

முதற் பத்து

உதியன் சேரலாதனைப் பாடிய பத்துப் பாடல்களும் கிடைக்கவில்லை. பாடிய புலவர் பெயரும் தெரியவில்லை .

இரண்டாம் பத்து

உதியன் சேரலாதனுக்கும், வேண்மாள் நல்லினி என்ற அரசிக்கும் மகனாகப் பிறந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.

புண்ணுமிழ் குருதி, மறம் வீங்கு

பல்புகழ், பூத்த நெய்தல், சான்றோர் மெய்ம்மறை,

நிரைய வெள்ளம், துயிலின் பாயல், வளம்படு

வியன்பணை, கூந்தல் விறலியர், வளன் அறு பைதிரம்,

அட்டு மலர் மார்பன்

என்ற தலைப்புக்களில் குமட்டூர்க் கண்ணனார் இவனது வரலாற்றைப் பாடியுள்ளார். நெடுஞ்சேரலாதன் வடக்கே இமயமலை வரை படையெடுத்துச் சென்று வென்றவன். அதற்கு அடையாளமாக இமயத்தில் வில்லைப் பொறித்தவன். தமிழினத்தின் சிறப்பை உலகறியச் செய்தவன். ஆரியர்களை வென்று தன்னை வணங்கச் செய்தவன். கடம்பர்களை வென்றவன். பகைவரோடு வஞ்சனையின்றிப் போர் செய்தவன். தன் வீரர்களுக்குக் கவசமாகவும் விளங்கியவன். பகைவர்கள் புறமுதுகிட்டு ஓடுமாறு போர் செய்தவன். போரில் பெற்ற பெருஞ்செல்வங்களைப் படைகளுக்கும், குடிமக்களுக்கும் அளித்துள்ளான். தனது உறவினரின் நீண்ட நாள் பசியைப் போக்க மாமிசம் கலந்த வெண்சோற்றினை அளித்துள்ளான். இவன் பரிசிலர்க்குத் தெளிந்த கள்ளினையும், புதிய ஆடைகளையும் அணிகலன்களையும் வழங்கிச் சிறப்பித்ததை,

மையூன் பெய்த வெண்ணெல் வெண்சோறு

நனையமை கள்ளின் தேறலொடு மாந்தி

நீர்ப்படு பருந்தின் இருஞ்சிறகு அன்ன

நிலந்தின் சிதாஅர் களைந்த பின்றை

நூலாக் கலிங்கம் வாள் அரைக் கொளீஇ

(மையூன் = ஆட்டிறைச்சி; கள்ளின்தேறல் = கள்ளின் தெளிவு ; சிதாஅர் = கிழிந்த ஆடை; நூலாக்கலிங்கம் = நூற்கப்படாத நூலாலாகிய ஆடை, பட்டாடை) என்ற பாடல் வரிகள் மூலம் அறியலாம்.

மூன்றாம் பத்து

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன். இவனது வரலாற்றை

அடுநெய் ஆவுதி, கயிறு குறுமுகவை,

ததைந்த காஞ்சி, சீர்சால் வெள்ளி,

கான் உணங்கு கடுநெறி, காடுறு கடுநெறி,

தொடர்ந்த குவளை, உருத்துவம் மவிர் நிறை,

வெண்கை மகளிர், புகன்ற ஆயம்

என்ற தலைப்புக்களில் இந்த மூன்றாம் பத்துச் சிறப்பிக்கிறது. இம்மூன்றாம் பத்தின் ஆசிரியர் பாலைக் கெளதமனார். குட்டுவன் குட்ட நாட்டிற்கு உரியவன். இவன் உம்ப காட்டில் ஆட்சி செலுத்தினான். தன் அறிவு ஒத்த முதியவரின் வழிகாட்டுதலின்படி ஆட்சி செய்தான். தன் நாட்டில் உள்ள நிலத்தின் எல்லையை அவரவருக்கு உரியவாறு வகுத்து ஒழுங்கு செய்தான். இவனது நாட்டில் வேள்வித் தீயின் புகையையும், தம்மை நாடி வருபவர் அளவில்லாது உண்ணச் சமைக்கும் நெய் மணத்தையும் கடவுளரும் விரும்புவர். இதனை,

ஊனத்து அழித்த வால்நிணக் கொழுங்குறை

குய்இடு தோறும் ஆனாது ஆர்ப்ப

கடல்ஒலி கொண்டு செழுநகர் வரைப்பின்

நடுவண் எழுந்த அடுநெய் ஆவுதி

இரண்டுடன் கமழும் நாற்றமொடு வானத்து

நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி(பாடல்-1)

என்ற பாடல் அடிகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. அகப்பா என்பது பகைவரின் கோட்டை. அக்கோட்டை மிகுந்த காவலை உடையது. அது உம்பற் காட்டுப் பகுதியில் இருந்தது. குட்டுவன் அதனைத் தன் படை வலிமையால் பகைவர்களை அழித்து வெற்றி பெற்றான். இந்த வெற்றிச் சிறப்பினை

அண்ணலம் பெருங் கோட்டகப்பா எறிந்த

பொன்புனை உழிஞை வெல்போர்க் குட்டுவ (பாடல் -2)

என்ற பாடல் அடிகள் தெரிவிக்கின்றன.

நாடு வறட்சியால் வாடிய போதும், தன்னை நாடி வரும் பாணர், கூத்தர் முதலான பரிசிலருக்கு அவர்கள் உள்ளம் மகிழப் பசியை நீக்கி, பொன்னாலான அணிகலன்களை வழங்கினான் என்று பல்யானைச் செல்கெழு குட்டுவனின் கொடைத் திறத்தை இப்பத்து விவரிக்கிறது. நிலம், நீர், காற்று, தீ, வான் என்ற ஐந்தையும் அளந்து முடிவு கண்டாலும் குட்டுவனின் அறிவாற்றலை அறிய முடியாது எனக் கீழ்வரும் பாடல் அடிகள் விளக்குகின்றன.

நீர்நிலம் தீவளி விசும்போ டைந்தும்

அளந்துகடை யறியினும் அளப்பருங் குரையைநின்

வளம் வீங்கு பெருக்கம் இனிதுகண் டிகுமே (பாடல்-4)

நான்காம் பத்து

நான்காம் பத்தின் ஆசிரியர் காப்பியாற்றுக் காப்பியனார். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், வேளாவிக் கோமான் பதுமனின் மகள் பதுமன் தேவியும் பெற்றெடுத்த மகனாவான் களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல். அவன் புகழை,

கமழ்குரல் துழாய், கழையமல் கழனி,

வரம்பில் வெள்ளம், ஒண்பொறிக் கழற்கால், மெய்யாடு பறந்தலை, வாள்மயங்கு கடுந்தார், வலம்படுவென்றி,

பரிசிலர் வெறுக்கை , ஏவல் வியன் பணை ,

நாடுகாண் அவிர் சுடர்

எனும் பத்துத் தலைப்புகளில் பாடுகிறார்.

இம்மன்னன் தன் தோற்றத்தாலே பகைவர்களை நடுங்கச் செய்துள்ளான். பூழி நாட்டை வெற்றி கண்டான். பெருவாயில் என்னும் இடத்தில் இருந்த நன்னனின் போர் ஆற்றலை முழுமையும் அழித்தான். இவன் மிகுந்த செல்வத்தை உடையவன். வறுமையில் தாழ்ந்த குடியை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்தான். பகைவர்களை அழித்தான். உயர்ந்த சான்றோர்களிடம் பணிவுடையவன். ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவன் என்பதை

பகைவர் ஆரப் பழங்கள் அருளி

நகைவர் ஆர நன்கலம் சிதறி

ஆன்றவிந்து அடங்கிய செய்தீர் செம்மால் (பாடல்-7)

(ஆர = நிறைய; பழங்கண் = துன்பம்)

என்ற பாடல் அடிகள் மூலம் நாம் அறியலாம்.

தன்னை நாடிவரும் பரிசிலரை மகிழ்ச்சியுடன் கள்ளைக் குடிக்க வைத்துத் தானும் | உண்டு, இரவலர்களை வேற்றிடம் செல்லாமல் காப்பான். அவர்களைத் தன்னிடமே தங்க வைத்துக் கொள்வான்.

ஐந்தாம் பத்து

ஐந்தாம் பத்தைப் பாடியவர் பரணர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் மகள் மணக்கிள்ளிக்கும் மகனாகப் பிறந்தவன் செங்குட்டுவன்.

சுடர்வீ வேங்கை, தசும்பு துளங்கு

இருக்கை, ஏறா ஏணி, நோய்தல்

நோன்தொடை, ஊன்துவை அடிசில்,

கரைவாய்ப் பகுதி, நன்னுதல் விறலியர்,

பேரெழில் வாழ்க்கை , செங்கை மறவர்,

வெருவரு புனல்தார்

என்ற தலைப்பில் அமைந்த ஐந்தாம் பத்து சேரன் செங்குட்டுவன் வரலாற்றை அறியத் துணை புரியும். இவன் தன்னைப் பகைத்தவர் அழியவும், நட்புடையவர் ஆக்கம் பெறவும் துணை புரிவான். பகைவர் வலிமை கெட வஞ்சியாமல் எதிர் நின்று போர் செய்பவன். இவனது ஆட்சி எல்லையாக வடக்கே இமயமும், தெற்கே குமரியும் இருந்தன. இவன் போர் செய்வதையே தொழிலாக உடையவன். இதனை,

போரடு தானைப் பொலந்தார் குட்டுவ (பாடல்-3)

(தானை = சேனை)

எனப் பரணர் பாடியதில் இருந்து அறியலாம்.

வறுமையால் தன்னை நாடி வந்த வறியவர்கள் உண்பவற்றை மறைக்காது உண்ணச் செய்தான். அவர்களோடு அமர்ந்து தானும் உண்டான். பாணர், கூத்தர் முதலியோர் மகிழப் பொன்னணிகள் தந்தான். விறலியருக்குப் பெண் யானையையும், வீரர்களுக்கு ஆண் யானைகளையும், பாணர்களுக்குக் குதிரையினையும் பரிசாகக் கொடுத்தான். இதனை

பாடு விறலியர் பல்பிடி பெறுக!

துய்வீ வாகை, நுண்கொடி உழிஞை

வென்றி மேவல், உருகெழு சிறப்பின்

கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுக!

மன்றம் படர்ந்து, மறுகுசிறைப் புக்கு

கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும்

அகவலன் பெறுக மாவே! (பாடல்-3)

(உருகெழு = அச்சம் தரும்; மள்ளர் = வீரர்; அகவலன் = பகைவன்)

என்று பாடுகின்றார்.

செங்குட்டுவன் பகைவரும் வியந்து பாராட்டும் கெடாத கல்வி அறிவும், ஒழுக்கமும் உடையவன் என்பதை,

இகல்வினை மேவலை ஆகலின் பகைவரும்

தாங்காது புகழ்ந்த தூங்குகொளை முழவின்

தொலையாக் கற்ப (பாடல்-3)

(தாங்காது = வியப்புத் தாளாது; தூங்குகொளை = தூங்கலோசை கொண்ட; தொலையாக் கற்ப = கெடாத அறிவுடையவனே) என்ற அடிகள் விளக்குகின்றன. பல போர்களைச் செய்து பெற்ற பொருள்கள் அரியவை என்று எண்ணாமல், தனக்காகப் பாதுகாக்காமல், மறந்தும் கனவில்கூடப் பிறர் உதவியை வேண்டாமல் வாழ்ந்தவன் செங்குட்டுவன். இதனை,

நிலம்புடைப்பு அன்னஆர்ப்பொடு விசும்பு துடையூ

வான்தோய் வெல்கொடி தேர்மிசை நுடங்கப்

பெரிய ஆயினும் அமர்கடந்து பெற்ற

அரிய என்னாது ஓம்பாது வீசி

கலம்செலச் சுரத்தல் அல்லது கனவினும்

களைகஎன அறியாக் கசடுஇல் நெஞ்சத்து ஆடுநடை அண்ண ல் (பாடல்-4)

(புடைப்பு = இடிப்பது; விசும்பு துடையூ = வானத்தைத் தடவி; கலம்செலச் சுரத்தல் = அணிகலன் வழங்குதல்; கசடு = குற்றம்; ஆடுநடை = பெருமித நடை) என்ற பாடல் அடிகளால் பரணர் செங்குட்டுவனை வாழ்த்துவதிலிருந்து அறியலாம். செங்குட்டுவன் தனது நண்பன் அறுகை என்பானின் பகைவன் மோகூர் மன்னன் மீது படையெடுத்து வெற்றி பெற்றான். நண்பனின் பழிச் சொல்லைப் போக்கினான். தன் வெற்றிக்குத் துணையான வீரர்களுக்குச் சோறு வேறு, தனக்கு வேறு சோறு எனப் பிரித்துக் காணப்படாத வண்ணம் உணவளித்தான். பகைவரை அழித்த உன்போன்ற வேந்தரும் இல்லை, உனக்கு ஒப்பாரும் இல்லை என்று பரணர் செங்குட்டுவனைப் புகழ்கின்றார். நண்பர்க்கும், மகளிர்க்கும் வணங்கிய மென்மையினையும், பகைவர்க்கு வணங்காத ஆண்மையினையும் உடையவன் செங்குட்டுவன் என்பதை,

கைவல் இளையர் நேர்கை நிரப்ப

வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை (பாடல்-8)

என்ற அடிகள் விவரிக்கின்றன. இது போன்ற அரிய செய்திகளை இப்பத்தின் வழி அறியலாம்.

ஆறாம் பத்து

குட நாட்டிற்கு உரிய மன்னன் சேரலாதன், அவனுக்கு வேளாவிக் கோமானின் மகளான தேவிக்கும் மகனாகப் பிறந்தவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். தண்டகாரணியத்தில் ஆரியர் திருடிப் போன மலையாடுகளை மீட்டு, தன் நகரான தொண்டிக்குக் கொண்டு வந்தான். இதன் காரணத்தால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் எனப் பெயர் பெற்றான். வானவரம்பன் என்பது இவனது இயற்பெயர். இவனது வரலாற்றுச் சிறப்புகளை

வடு அடு நுண்ணுயிர், சிறுசெங்குவளை,

குண்டு கண் அகழி, நில்லாத் தானை, துஞ்சும் பந்தர்,

வேந்து மெய்ம் மறந்த வாழ்ச்சி, சில்வளை விறலி,

ஏவிளங்குதடக்கை, மாகூர் திங்கள், மரம்படு தீங்கனி

ஆகிய தலைப்புக்களில் ஆறாம் பத்து எடுத்துரைக்கிறது. இப்பத்தினைக் காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியுள்ளார். இப்பத்தின் வழி அறியலாகும் செய்திகள்:

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மழவரைப் போரில் வென்றான். குழந்தையைக் காக்கும் தாயைப் போலத் தன் மக்களைப் பாதுகாத்தான். அறத்தையே விரும்பும் குணத்தை உடையவனாக விளங்கினான். இவன் அவையில் குமரி முதல் இமயம் வரையிலும் உள்ள அனைத்து அரசரும் கூடியிருப்பர். அவையில் சான்றோர்களும் நிறைந்து இருப்பர். அனைவரும் கூடியிருந்த ஒரு நேரத்தில் பாணர், விறலியரின் ஆட்டமும் பாட்டும் கேட்டு மகிழ்ந்திருந்தான். அதனைக் கண்ட இவனுடைய பகைவர்கள் சிற்றின்பத்தில் மூழ்கி நிற்கும் எளியவன் என இவனை நினைத்தனர். ஆனால் இவன் கொடிய நஞ்சினை உடைய மலைவாழ் பாம்புகளை அஞ்சிடச் செய்யும் மேகத்தின் இடி முழக்கத்தை ஒத்தவன் என்பதை அறியார். அவனுடைய வீரர்கள் பகைவர்களை ஒரே வீச்சில் அழிக்கும் வெற்றி வீரர்கள். கூற்றுவனின் பகையை ஒத்தவன் சேரலாதன். இதனைக் காக்கைபாடினியார்

வாள்நகை இலங்கு எயிற்று

அமிழ்துபொதி துவர்வாய் அசைநடை விறலியர்

பாடல் சான்று நீடினை உறைதலின்

வெள்வேல் அண்ணல் மெல்லியன் போன்ம்என

உள்ளுவர் கொல்லோநின் உணரா தோரே?

(பாடல் - 1)

(விறலியர் பாடல் சான்று நீடினை உறைதலின் = விறலியர் பாட்டைப் பெரிதும் விரும்பியிருத்தலாலே; மெல்லியல் போன்ம் = சிற்றின்பத்தில் ஈடுபட்டவன் போலும்; உணராதோர் = இயல்பை உணராதவர்கள்) போர் செய்யும் ஆவலால் வந்த பகைவரை வஞ்சியாது போர் செய்து அழித்த மேம்பட்ட கை சேரலாதனது கை என்பதை,

நல்லமர்க் கடந்தநின் செல்லுறழ் தடக்கை

இரப்போர்க்குக் கவிதல் அல்லதை இரைஇய

மலர்புஅறியா எனக் கேட்டிகும் (பாடல்-2)

(செல் உறழ் = இடிபோன்ற; கவிதல் = கொடுப்பதற்காகக் குவிதல்; அல்லதை = தவிர; இரைஇய = பிறரிடம் இரக்க; மலர்பு = விரிதல்) என்ற பாடல் அடிகளால் அறியலாம். வறியவர் தன் நாட்டில் இல்லாததால், பிறருக்கு உதவி செய்து மகிழ்கின்ற இன்பத்தை எண்ணி, பிற நாடுகளில் இருந்து வரும் வறியவரைத் தேரில் ஏற்றி வந்து உணவை மிகுதியாக உண்ணக் கொடுக்கும் புகழை உடையவன் சேரலாதன் என்பதை

குடவர் கோவே கொடித்தேர் அண்ணல்

வாரார் ஆயினும் இரவலர் வேண்டித்

தேரில் தந்தவர்க்கு ஆர்பதம் நல்கும்

நகைசொல் வாய்மொழி இசைசால் தோன்றல்

- (பாடல்-5)

என்ற பாடல் அடிகள் கூறுகின்றன. சேரலாதன் பகைவர்க்கு அஞ்சாதவனாய் இருப்பினும் தன் தலைவியின் ஊடலுக்கு அஞ்சுபவன்; அதைவிட இரவலரின் இரக்கம் மிகுந்த பார்வைக்கு இளகுபவன் என்பதை,

நுண்ணுதல் மகளிர் துனித்த கண்ணினும்

இரவலர் புன்கண் அஞ்சும் - (பாடல்-7)

என்ற அடிகளின் மூலம் அறியலாம்.

ஏழாம் பத்து

சேரலாதன் அந்துவஞ்சேரல், நுட்பமான கேள்வி ஞானம் உடையவன். அவனுக்குப் பொறையன் தேவி என்பவள் பெற்றுத் தந்த மகன் செல்வக் கடுங்கோ வாழியாதன். இவனுடைய வரலாற்றை, புலாஅம் பாசறை, வரைபோல் இஞ்சி, அருவி ஆம்பல், உரைசால் வேள்வி, நாள்மகிழ் இருக்கை, புதல்சூழ் பறவை, வெண் போழ்க்கண்ணி, ஏம் வாழ்க்கை, மண்கெழு ஞாலம்,பறைக் குரல் அருவி என்ற தலைப்பிலான பாடல்கள் மூலம் ஏழாம் பத்து விவரிக்கிறது. இப்பத்தைப் பாடியவர் கபிலர். செல்வக் கடுங்கோ வாழியாதன் தன் நாட்டில் பல வளங்களை ஏற்படுத்தியவன். தன் பகைவரைத் தோற்று ஓடும்படி செய்தவன். பல போர்களைச் செய்தவன். வேள்விகள் செய்தவன். இவன் வறியவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவுவதால் செலவு குறித்து வருந்தமாட்டான். தொடர்ந்து உதவுவதால் உண்டாகும் புகழை நினைத்து மகிழவும் மாட்டான் என்பதை,

ஈத்த திரங்கான், ஈத்தொறு மகிழான்

ஈத்தொறு மாவள் ளியன்என நுவலுநின்

நல்லிசை தரவந் திசினே (பாடல்-1)

(வள்ளியன் = வள்ளல்; நல்லிசை = புகழ்; வந்திசின் = வந்தேன்)

என்ற பாடல் அடிகள் விளக்குகின்றன. இது போன்ற அரிய செய்திகளின்வழி, கடுங்கோவின் வீரம், கொடை பற்றி அறியலாம்.

எட்டாம் பத்து

செல்வக்கடுங்கோ வாழியாதன் என்பவனுக்கும் வேளாவிக் கோமான் பதுமனின் மகளுக்கும் மகவாகப் பிறந்தவன் பெருஞ்சேரல் இரும்பொறை. இவனது வரலாற்றை இந்த எட்டாம் பத்து விளக்குகின்றது. இப்பத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களின் தலைப்புகள் குறுந்தாள் ஞாயில், உருத்து எழு வெள்ளம், நிறம் திகழ் பாசிழை, நலம் பெறு திருமணி, தீம் சேற்று யாணர், மா சிதறு இருக்கை, வென்றாடு துணங்கை, பிறழ நோக்கு இயவர், நிறம்படு குருதி, புண்ணுடை எறுழ்த் தோள் என்பன. இதனைப் பாடியவர் அரிசில்கிழார். சோழர்களையும் பாண்டியர்களையும் ஒரே போரில் வென்றவன் இச் சேரன். அம்மன்னர்களின் முரசுகள், குடைகள், அணிகள் ஆகியவற்றைக் கவர்ந்தவன். வேள்வி பல செய்தவன்.

இவனது நாட்டில் வளம் சிறந்து காணப்பட்டது. இவன் பகைவரோடு அஞ்சாது போர் செய்தவன். போரில் சுடுவதற்காக உண்டாக்கிய தீயானது பகைவரின் ஊர்களைக் கவர்ந்து உண்ணுதலால் சுடு நாற்றம் நாறும். புகை மிகுதியாகத் தோன்றி நான்கு திசைகளிலும் மறைக்கும். யானைகளையும் அரிய அணிகலன்களையும் இவனுக்கு வரியாகக் கொடுக்காத பகைவர்கள் உடல் நடுக்கம் மிக இவனைத் தெய்வம் என வணங்கி நிற்பர். இவன் வேள்வி செய்வதற்குரிய வேதங்களை முறையாகக் கற்றவன். அவற்றிற்குரிய கடமைகளையும் குறைவின்றிச் செய்தவன் என்பதை,

கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது

வேள்வி வேட்டனை - (பாடல்-4)

(கேள்வி = மறைப்பொருள்; படிவம் ஒடியாது = விரதம் கெடாமல்; வேள்வி வேட்டனை = வேள்வி செய்தாய்) என்று குறிப்பிடுகின்றார் அரிசில்கிழார். செல்வமும், குண அமைதியும், மகப்பேறும், தெய்வ உணர்வும், பிறவும் முன் செய்தவம் உடையவர்க்கே கிடைக்கும் என்பதை, வேதம் கற்ற புரோகிதனுக்கு உணர்த்தி அவனைக் காட்டுக்குத் தவம் செய்ய அனுப்பினான். இதனை,

வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும்

தெய்வமும் யாவதும் தவமுடையோர்க்குஎன

வேறுபடு நனந்தலைப் பெயர- (பாடல்- 4)

(நனந்தலை = விரிந்த இடம்)

என்ற பாடல் அடிகள் விளக்குகின்றன. பகைவர்களை முழுவதுமாக ஒழித்தவன். பகை மன்னர்களின் வீரர்கள் அழியவும் பகை மன்னர்கள் இறந்துபடவும் செய்தவன். இவனுடைய குதிரைப் படைகளையும், காலாட் படைகளையும் எண்ண முடியாது என்பதை,

பண்ணமை தேரும் மாவும் மாக்களும்

எண்ணற்கு அருமையன் எண்ணின்றோ இலனே

- (பாடல் - 7)

என வியந்து பேசுகிறார் புலவர். இவன் தகடூர்க் கோட்டையை அழித்தவன் என்பதை,

வில்பயில் இறும்பில் தகடூர் நூறி - (பாடல் - 8)

என்ற அடி குறிப்பிடுகின்றது.

ஒன்பதாம் பத்து

குட்ட நாட்டுக் குடியினனான இரும்பொறைக்கும் மையூர் கிழான் மகள் அந்துவஞ்செள்ளைக்கும் மகனாகப் பிறந்தவன் இளஞ்சேரல் இரும்பொறை. இவனது வரலாற்றை நிழல்விடு கட்டி, வினைநவில்யானை, பல்தோல் தொழுதி, தொழில் நவில் யானை, நாடுகாண் நெடுவரை, வெந்திறல் தடக்கை, வெண்தலைச் செம்புனல், கல்கால் கவணை, துவராக் கூந்தல், வலிகெழு தடக்கை என்ற தலைப்புகளில் இப்பத்துப் பாடல்கள் விவரிக்கின்றன. இப்பத்துப் பாடல்களை எழுதியவர் பெருங்குன்றூர் கிழார். இரும்பொறை பொன்னாலான தேரை உடையவன். பகைவனைக் கொல்லும் கூற்றுவனைப் போன்ற வலிமை உடையவன் என்கிறது இப் பதிற்றுப்பத்து. சேர நாட்டிற்கும், பாண்டிய நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதி பூழிநாடு, அந்நாட்டைக் கைப்பற்றியவன் இவன். இதனை,

நுதல்அணந்து எழுதரும் தொழில்நவில் யானை

பார்வல் பாசறைத் தரூஉம் பல்வேல்

பூழியர் கோவே - (பாடல்-4)

(அணந்து = நிமிர்த்தி)

என்ற பாடல் அடிகள் விவரிக்கின்றன. சோழர்களை வென்றான் என்பதை,

ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்

இட்ட வெள்வேல் முத்தைத் தம்என

முன்திணை முதல்வர் போல் நின்று

தீஞ்சுனை நிலைஇய திருமா மருங்கின்

கோடுபல விரிந்த நாடுகாண் நெடுவரை

- (பாடல்-5)

(ஒன்னாப் பூட்கை = பகைமை கொண்ட ; சென்னியர் = சோழர்; முத்தை (முந்தை) = முன்னே, எதிரே; தம் என = தருக என்று; முன் திணை முதல்வர் = குலத்து முன்னோர் ; கோடு = சிகரம்) என்ற அடிகள் குறிப்பிடுகின்றன. அறம் பல செய்தவன். அறம் செய்ய இடையூறு வந்தால் அதனைப் போக்கப் போரைச் செய்பவன். போரில் ஆண்மகன், அறத்தையும், நல்ல நெஞ்சத்தையும் அசைந்த நடையையும் உடையவன். பாணர் முதலானவருக்குப் பரிசில் வழங்கி ஆதரிப்பவன். கொற்றவையை வழிபடுபவன். சோழ பாண்டியர்கள், குறுநில மன்னர்கள் இவனை வணங்கி நிற்பர். கழுவுள் என்ற ஆயர் தலைவனையும் அவனுக்குத் துணையாக வந்தவரையும் பெருஞ்சேரல் இரும்பொறை வென்றான்.

இவனுடைய காலத்தில் போர் வீரர்கள் இரவு நேரங்களிலும் வாளைச் சுமந்தவர்களாகத் திரிந்தனர். போர் செய்வதை விருப்பமாகக் கொண்டனர். கூறிய வஞ்சினம் தவறாமல் தம் குடிக்குப் புகழைத் தேடவிரும்பினர். இரும்பொறையோடு போரிட அஞ்சிய பகைவர்கள் உறக்கம் கொள்ள மாட்டார்கள். இவனிடம் இருந்து தம்மைப் பாதுகாக்குமாறு தெய்வத்தை வழிபடுவர். இவனோடு போர் புரியப் பகைவர்கள் இல்லாததால் வீரர்கள் போர் வெறிகொண்டு திரிவர். யானைகளும் மதம் கொண்டு திரியும். குதிரைப் படையும் தயார் நிலையில் அணிகலன்களை அணிந்து நிற்கும்.

இதனை,

மறவர் மறல; மாப்படை உறுப்பத்

தேர்கொடி நுடங்கத் தோல்புடை யார்ப்ப

- (பாடல்-2)

என்ற அடிகள் விளக்குகின்றன. (மறல = போர்வெறி கொண்டு திரிய; மா = குதிரை; உறுப்ப = ஆயத்தமாய் நிற்க; தோல் புடை ஆர்ப்ப = கிடுகுப்படை (கேடயம் தாங்கிய படை) ஒருபுறம் ஆரவாரிக்க) பல வழியிலும் பெற்ற குறையாத செல்வமும், பகைவர் பலமுறை போரிட்டு அழித்த போதும் குறையாத வீரர்களையும் கொண்டவன். செங்கோன்மை, சால்பு, வீரம் போன்ற வற்றாத புகழையும், செல்வத்தையும் உடையவன் இரும்பொறை என்பதை,

பாடுநர், கொளக்கொளக் குறையாச் செல்வத்து,

செற்றோர் கொளக் கொளக் குறையாத் தானை,

சான்றோர் வண்மையும், செம்மையும், சால்பும்,

மறனும் புகன்று புகழ்ந்து அசையா நல்இசை

நிலம் தரு திருவின் நெடியோய் (பாடல்-5)

(அசையா = குறையாத; நல் இசை = புகழ்)

எனப் பதிற்றுப்பத்துப் புகழ்கிறது.

சேரர்களின் வீரச் செயல்கள்

சேர மன்னர்களும், அவர்களது வீரர்களும் வீரத்திற்குப் பேர் போனவர்கள். கடற்போரில் வல்லவர்கள். இதனைப் பதிற்றுப்பத்து தெளிவுபடுத்துகிறது. சேர மன்னர்களும் மறவர்களும் அறநெறி தவறாது போர் புரிந்து நின்றனர். சேர மன்னர்கள் எமனே சினம் கொண்டு வந்தாலும் அவனைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வார்கள். பகைவர் அஞ்சப் போர் செய்துள்ளனர். இதனைப் பதிற்றுப்பத்து சிறப்பாகக் கூறும். தாம் கூறிய வஞ்சினம் தவறாது எதிர்ப்பட்ட பகைவர்களை யெல்லாம் இறந்து அழியுமாறு போர் செய்தமையை

வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர்

முரசுடைப் பெருஞ்சமத்து அரசுபடக் கடந்து

வெவ்வர் ஓச்சம் பெருக - (பாடல்-1)

(சமத்து = போரில்; வெவ்வர் = வெம்மை; ஓச்சம் = ஆக்கம், உயர்வு)

என ஐந்தாம் பத்துக் கூறுகிறது. வீரர்கள் தமக்குச் சமமானவரோடு போர் செய்ததை,

நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்

அம்புசேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது

தும்பை சூடாது மலைந்த மாட்சி

அன்னோர் பெரும்! நன்னுதல் கணவ!

அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவ!

(பாடல்-2, ஐந்தாம் பத்து) (வசி = தழும்பு; சேர்ந்தோர் = சமமானவர்; தும்பை = தும்பை மாலை)

என்ற பாடல் அடிகளால் அறியலாம். மேலும், செங்குட்டுவன் போரில் எதிர்ப்பவரை வெல்வதையே தொழிலாகக் கொண்டுள்ளான் என்பதை நாம் அறிய முடிகிறது. சேர மறவர்கள் பகைவருக்கு அஞ்சாதவர்கள். இரவு நேரத்திலும் வீர வாளை வைத்து உள்ளனர். போரில் புண்பட்டு விழுவதை விருப்பமாகக் கொண்டுள்ளனர். தாம் கூறிய வஞ்சினம் தவறாமல் தாம் பிறந்த குடிக்கு நல்ல புகழை நிலை நிறுத்த, பாசறையில் உலவுவார்கள்.

மாயிருங் கங்குலும், விழுத்தொடி சுடர்வரத்

தோள்பிணி மீகையர், புகல்சிறந்து நாளும்

முடிதல் வேட்கையர், நெடிய மொழியூஉ

கெடாஅ நல்லிசைத் தன்குடி நிறுமார்

(பாடல்-1, ஒன்பதாம் பத்து)

(கங்குல் = இரவு ;விழுத்தொடி = வீரவளை, மீகை = தோள்களைப் பிணித் தகை: புகல் = போர் விருப்பம்; நெடிய = வஞ்சினம்; மொழியூஉ = மொழிந்து)

என்ற பாடல் அடிகள் கூறுகின்றன.

சேரர்களின் கொடைத் திறம்

சேர மன்னர்கள் தாம் பெற்ற இன்பம் எல்லாரும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கோடு வாழ்ந்துள்ளனர். கொடை உள்ளம் கொண்டவர்களாகத் திகழ்ந்துள்ளனர். தம்மை நாடி வரும் வறியவரின் பசிப்பிணியைப் போக்கி உள்ளனர். புதிய ஆடை அணிகலன்களை வழங்கியுள்ளனர். செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னும் சேரமன்னன் பெரும் பொருளைப் பிறருக்குக் கொடையாகக் கொடுத்தற்கு ஒரு நாளும் வருந்த மாட்டான். மகிழ்வும் அடைய மாட்டான். கொடுக்கும் போது எல்லாம் அளவில்லாது கொடுப்பான் எனப் பதிற்றுப்பத்துக் கூறும்.

ஈத்த திரங்கான்; ஈத்தொறு மகிழான்

ஈத்தொறும் மாவள் ளியன்என நுவலும்நின்

நல்லிசை தரவந் திசினே

- (பாடல்-1, ஏழாம் பத்து)

சேரன் செங்குட்டுவன் தனக்கு ஒருவகைச் சோற்றையும் பிறருக்கு இன்னொரு வகைச் சோற்றையும் சமைத்து வழங்காதவன் என, பரணர் அழகுபடக் கூறுகின்றார்.

சோறு வேறென்னா ஊன்றுவை அடிசில்

(பாடல்-5, ஐந்தாம் பத்து)

போரில் பெற்ற பெருஞ்செல்வத்தை எளியோர்க்கு வாரி வழங்கினான் செங்குட்டுவன் என்பதை,

பெரிய வாயினும் அவர் கடந்து பெற்ற

அரிய என்னாது ஓம்பாது வீசி

- (பாடல்-4, ஐந்தாம் பத்து)

என்ற அடிகள் கூறுகின்றன. வறுமையில் வாடுவோர்க்கு உதவுவது கடமை. இதனை உணர்ந்து அவர்களின் துன்பம் தீரும் அளவு பொருள்கள் வழங்கியவன், அன்பு காட்டியவன் இளஞ்சேரல் இரும்பொறை என்பதை,

நல்லிசை நிலைஇய நனந்தலை உலகத்து

இல்லோர் புன்கண் தீர நல்கும்

நாடல் சான்ற நயனுடை நெஞ்சின்

(பாடல்-6, ஒன்பதாம் பத்து)

என்ற அடிகள் வழி அறியலாம்.

வறட்சிக் காலத்திலும் பாணர், கூத்தர் முதலான பரிசிலரின் பசிப்பிணியைப் போக்கினான். அவர்களுக்குத் தக்க அணிகலனை வழங்கினான் செங்குட்டுவன் என்பதை மூன்றாம் பத்து விவரிக்கின்றது. பகைவரோடு போரிட்டுக் கவர்ந்த பொருளை, பாணர் முதலிய இரவலர்கள் மகிழும்படி, வேண்டாம் என்று மனநிறைவு கொள்ளும் அளவிற்கு வழங்கினான். தளர்ந்த குடியை உயர்த்தினான். இதனைக் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் செய்தான் என்பதை,

துப்புத் துவர்ப்பாகப் பெருங்கிளை உவப்ப

ஈத்துஆன்று ஆனா இடனுடை வளனும்

துளங்குகுடி திருத்திய வளம்படு வென்றியும்

-(பாடல்-2, நான்காம் பத்து)

(துப்பு = வலிமை; ஈத்து ஆன்று ஆனா இடனுடை வளன் = ஈந்து, பெற்றவர் இனி வேண்டாம் என்பதால் தங்கிப்போன செல்வம்; துளங்கு குடி = தளர்ந்தகுடி) என்று காப்பியாற்றுக் காப்பியனார் கூறுகிறார்.

பதிற்றுப்பத்தில் கற்பனையும் உவமைகளும்

பதிற்றுப்பத்துப் பாடல்கள் ஆழ்ந்த கலையின்பமும் அரிய சொல்லாட்சியும் அழகிய உவமை நயமும் கொண்டு விளங்குகின்றன. சங்க காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த புலவர் பெருமக்களின் படைப்பாகப் பதிற்றுப்பத்துத் திகழ்கிறது. ஒவ்வொரு செய்யுளின் பின்னும் அமைந்துள்ள துறை, வண்ணம், தூக்கு, பெயர் ஆகியவை உரையில்லாத மூலப் பிரதிகளிலும் உள்ளன. ஆதலால் இவை பாடல் ஆசிரியர்களாலோ, தொகுத்தாராலோ எழுதப் பட்டிருக்க வேண்டும். பாடல்களுக்கு உள்ள பெயர்கள் எல்லாம் மிகச் சிறந்த சொற்களால் கற்பனை நயத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன, சான்றாக, புண்ணுமிழ் குருதி என இரண்டாம் பத்தின் முதல் பாடலினைக் காணலாம் "இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் வேல் அவனுடைய பகைமன்னர்களின் துளைத்தற்கரிய மார்பினைத் துளைத்ததினால் உண்டான புண்கள் உமிழும் குருதியினால் உப்பங்கழிகளில் உள்ள நீலமணி போன்ற நீர் தன் நீலநிறம் மாறி, குங்குமக் கலவை போலச் சிவப்பாயிற்று என்னும் சிறப்புக் கருதிப் பாடலுக்குப் புண்ணுமிழ் குருதி எனப் பெயராயிற்று” என்பார் முனைவர் அ.ஆலிஸ்.

இவ்வாறு பல்வேறு பெயர்கள் மிகச் சிறந்த கற்பனை நயத்துடன் விளங்குகின்றன. சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மனைவி சினம் கொள்ளாது அமைந்த கற்பினை உடையவள். ஊடல் காலத்திலும் இனிமையாகப் பேசுபவள் என்பது புலவரின் கூற்று.

ஆறிய கற்பின் அடங்கிய சாயல்

ஊடினும் இனிய கூறும் இன்னகை

(பாடல்-6, இரண்டாம் பத்து)

இந்த அடிகள் கவிஞனின் படைப்புத் திறனை விளக்கும். இளஞ்சேரல் இரும்பொறையின் படையுடன் போர் செய்ய அஞ்சிய சோழப் படைகள் இரும்பொறையிடம் போர் செய்து வெற்றி பெற முடியாது என்று தம்முடைய படைக்கருவிகளை நிலத்தில் எறிந்தனர். அவ்வாறு எறியப்பட்ட வேல்கள் கபிலர், செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாடிப் பெற்ற ஊரை விட அதிகம்.

மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின்

உவலை கூராக் கவலைஇல் நெஞ்சின்

நனவில் பாடிய நல்இசைக்

கபிலன் பெற்ற ஊரினும் பலவே

(பாடல்-5, ஒன்பதாம் பத்து)

என்கிறார் பெருங்குன்றூர் கிழார்.

களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலின் படையோடு பொருது தோற்ற பகைவர்களது யானைகளின் வெட்டப்பட்டது திக்கைகள் பனைமரங்கள் வெட்டப் பட்டுக் கிட்ட்பன போல் வீழ்ந்து கிடக்கும். குதிரை, யானை, வீரர்களுடன் இறந்து கிடப்பதால் உண்டான பிணத்தை உண்ணுவதற்காகப் பெண் கழுகினை ஆண் கழுகானது அணைத்துக் கொண்டு பள்ளம் நோக்கி ஓடும். பெரிய பிணக்குவியலைச் சுமந்து கொண்டு பேய்கள் பிணங்களை உண்டு மகிழும் என்கிறார் காப்பியாற்றுக் காப்பியனார் இவ்வாறு கற்பனைகளும் உவமைகளும் பதிற்றுப்பத்திற்கு அழகூட்டுகின்றன.

சேரர்களின் ஆட்சி முறை

அரசனே ஆட்சித் துறையின் மையமாக விளங்கினான். அரசனை, கோ, மன்னன், வேந்தன், கொற்றவன் என்று அழைத்தனர். சேரர்களின் ஆட்சி எல்லையாக வடக்கே இமயமும், தெற்கே குமரியும், மேற்கும் கிழக்கும் கடல்களும் இருந்தன. இதனைப் பல பாடல்களால் அறியலாம். சேரர்களிடம் காலாட் படை, குதிரைப் படை, யானைப் படை, தேர்ப் படை போன்ற படைகள் இருந்துள்ளன. மன்னனே நீதி வழங்கும் அதிகாரம் பெற்றிருந்தான். இருப்பினும் மன்னன் தவறு செய்கின்ற போது தக்க சமயத்தில் புலவர்கள் நல்வழிப்படுத்தினர். மன்னர்கள் சினம், காமம், அளவிறந்த கண்ணோட்டம், அச்சம், பொய்ச் சொல், கழி பேரன்பு, கொடுஞ்செயல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என மூன்றாம் பத்தில் பாலைக் கௌதமனார் அறிவுறுத்துகிறார்.

சினனே காமம் கழி கண்ணோட்டம்

அச்சம், பொய்ச் சொல், அன்புமிக உடைமை

தெறல் கடுமையொடு, பிறவும் இவ் உலகத்து

அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும்

(பாடல்-2, மூன்றாம் பத்து) என்கிறார்.

பதிற்றுப்பத்துக் கூறும் சமூகச் செய்திகள்

பதிற்றுப்பத்து சேரர் வரலாற்றைக் கூறும் இலக்கியம் என்பதால் இதன் மூலம் சேர மன்னர்களின் ஆட்சிக் காலச் சமூகச் செய்திகளை ஓரளவுக்கு அறிந்து கொள்ளலாம். அரசனே அனைத்து அதிகாரமும் கொண்டவனாக விளங்கினான். மக்கள் அரசனைத் தெய்வத்திற்கு இணையாகக் கருதினர். வீரமுடைய அரசர்கள் வள்ளல் தன்மை உடையவர்களாகவும் விளங்கினர். கடற்போரில் வல்லவர்களாக அரசர்கள் இருந்தனர். தம் நாட்டில் இரவலர் இன்மையால், பிற நாட்டில் சென்று இரவலரைக் கொணர்ந்து அவர்களுக்கு வாரி வழங்குவர். பல்வேறு விழாக்கள் அவர்கள் காலத்தில் கொண்டாடப்பட்டன. அவற்றில் வேனில் விழாவும், புனலாட்டு விழாவும் முக்கியமானவை.

நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும்

மலிபுனல் நிகர்தரும் தீநீர் விழவிற்

பொழில்வதி வேனிற் பேரெழில் வாழ்க்கை (பாடல் 8).

(மண்டும் = கலக்கும்; தீ நீர் விழவு = இனிய நீர் விளையாட்டு; வேனில் = வேனில்விழா)

என்று ஐந்தாம் பத்தில் பரணர் கூறுகிறார்.

தொகுப்புரை

பதிற்றுப்பத்து பத்துச் சேர அரசர்களின் வரலாற்றைக் கூறினாலும் சங்க கால வரலாற்றை ஓரளவு அறியச் சான்றாக நிற்கிறது. உலக வீரயுகப் பாடல்களுக்கு இணையாகப் போற்றப்படுகின்ற பாடல்கள் பதிற்றுப்பத்துப் பாடல்களாகும்.

கேள்வி பதில்கள்

1. பதிற்றுப்பத்துப் பெயர்க்காரணம் கூறுக

விடை : பத்துப் பத்து (பத்து X பத்து) நூறு பாடல்களால் ஆனமையால் இந்நூல் பதிற்றுப்பத்து ஆயிற்று.

2. பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் யார்?

விடை : பதிற்றுப்பத்தைத் தொகுத்தோர், தொகுப்பித்தோர் தெரியவில்லை.

3. எவ்வெப் பத்துகள் கிடைக்கவில்லை?

விடை : முதற் பத்தும், இறுதிப்பத்தும் கிடைக்கவில்லை.

4. கிடைக்காத பத்துக்களில் பாடப் பெற்ற அரசர்கள் யாவர்?

விடை : முதற்பத்து உதியன் சேரலாதன், பத்தாம் பத்து யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை.

5. மூன்றாம் பத்தினை எழுதியவர் யார்?

விடை : மூன்றாம் பத்தினை எழுதியவர் பாலைக் கெளதமனார்.

6. செள்ளை என்பதன் பொருள் யாது?

விடை : செள்ளை என்றால் தாய் எனப் பொருள்.

7. பதிற்றுப்பத்தின் காலம் யாது?

விடை : பதிற்றுப்பத்தின் காலம் சங்க காலமாகும்.

8. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் பெற்றோர் பெயர் கூறுக.

விடை உதியன் சேரலாதன், வேண்மாள் நல்லினி

9. சேரன் செங்குட்டுவனைப் பாடிய பத்து எது?

விடை : ஐந்தாம் பத்து - பரணர்

10. காக்கைபாடினியாரின் இயற்பெயர் என்ன?

விடை : நச்செள்ளையார் -'செள்ளையார்' எனவும் கூறுவர்

11. வேதங்களை முறையாகக் கற்ற சேரன் யார்?

விடை : பெருஞ்சேரல் இரும்பொறை

12. புண்ணுமிழ் குருதி - விளக்குக.

விடை : இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் வேல் அவனுடைய பகை மன்னர்களின் துளைத்தற்கரிய மார்பினைத் துளைத்ததினால் உண்டான புண்கள் உமிழும் குருதியினால் உப்பங்கழிகளில் உள்ள நீலமணி போன்ற நீர் தன் நீல நிறம் மாறி, குங்குமக் கலவை போலச் சிவப்பாயிற்று என்னும் சிறப்புக் கருதிப் பாடலுக்குப் புண்ணுமிழ் குருதி எனப் பெயராயிற்று.

13. பாலைக் கௌதமனார் அரசனுக்குக் கூறும் அறிவுரைகளைக் கூறுக

விடை : மன்னர்கள் சினம், காமம், கழி கண்ணோட்டம், அச்சம், பொய்ச் சொல், கழி பேரன்பு, கொடுஞ்செயல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் எனப் பாலைக் கௌதமனார் அறிவுறுத்துகிறார்.

14. சேரரின் படைகளைக் கூறுக

விடை : தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என நான்கு விதமான படைகள் சேரர்களிடம் இருந்தன.

ஆசிரியர்கள் : முனைவர். ச. மணி & முனைவர். நை.மு. இக்பால்

ஆதாரம் : தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்நாடு அரசு

2.87878787879
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top