பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழர் வீரம் - 1 முதல் 6

தமிழர் வீரம் எனும் நூலின் முதல் ஆறு பகுதி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்க் கொடி யேற்றம்

தமிழன் சீர்மை

தமிழன் என்றோர் இனம் உண்டு; தனியே அதற்கொரு திறம் உண்டு. அத்திறம் முன்னாளில் தலை சிறந்து விளங்கிற்று. "மண்ணும் இமையமலை எங்கள் மலையே" என்று மார் தட்டிக் கூறினான் தமிழன். "கங்கையும் காவிரியும் எங்கள் நதியே" என்று இறுமாந்து பாடினான் தமிழன். "பஞ்சநதி பாயும் பழனத் திருநாடு எங்கள் நாடே" என்று நெஞ்சம் நிமிர்ந்து பேசினான் தமிழன்.

தமிழன் ஆண்மை ஆண்மை நிறைந்தவன் தமிழன். அந்நாளில் அவன் வாலாண்மையால் பகைவரை வென்றான்; தாளாண்மை யால் வன்னிலத்தை நன்னிலமாக்கினான்; வேளாண்மை யால் வளம் பெருக்கினான். இது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த தமிழன் நிலை இன்றும் வடநாட்டில் அவன் கை வண்ணம் மண்ணுள் மூழ்கி மறைந்து கிடக்கின்றது. இந்தியாவின் எல்லைப்புறத்திலுள்ள பெலுச்சியர் நாட்டிலே தமிழ் இனத்தைச் சேர்ந்த மொழியொன்று இன்றளவும் வாழ்கின்றது.

தென்னாடு - தமிழ்நாடு

உயர்ந்தவர் தாழ்வர்; தாழ்ந்தவர் உயர்வர். இஃது உலகத்து இயற்கை. அந்த முறையில் படிப்படியாகத் தாழ்ந்தான் தமிழன்; வளமார்ந்த வட நாட்டை வந்தவர்க்குத் தந்தான்; தென்னாட்டில் அமைந்து வாழ்வானாயினான். அந் நிலையில் எழுந்தது, "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்" என்ற வாசகம்.

இமையப் படையெடுப்பு ஆயினும், இமையமலை தன் மலை என்பதைத் தமிழன் மறந்தானல்லன். படையூற்றம் உடைய தமிழ் மன்னர் பலர் வடநாட்டின்மீது படையெடுத்தனர்; வீரம் விளைத்தனர். வெற்றி பெற்றனர். சேர சோழ பாண்டியர் ஆகிய தமிழ் வேந்தர் மூவர்க்கும் அப்பெருமையிலே பங்குண்டு.

விற்கொடி யேற்றம் சேரகுல மன்னருள் சாலப் பெருமை வாய்ந்தவன் நெடுஞ் சேரலாதன். அவன் இமையமலை வரையும் படையெடுத்துச் சென்றான்; எதிர்த்த ஆரிய மன்னரை அலற அடித்தான்; சிறை பிடித்தான். இமையமலையில் தனது வில்லுக்கொடியை ஏற்றி, "இமைய வரம்பன்" என்னும் விருதுப் பெயர் கொண்டான். அவன் புகழைப் பாடினார் பொய்யறியாப் பரணர்.

புலிக்கொடி யேற்றம் பழங்காலச் சோழர் குலப் பெருமையெல்லாம் தன் பெருமையாக்கிக் கொண்டவன் கரிகால சோழன் என்னும் திருமாவளவன். அடலேறு போன்ற அவ்வீரன் வடநாட்டின்மேற் படையெடுத்தான்; தடுப்பார் எவருமின்றி, இமையமலையை அடுத்தான்; விண்ணளாவிய அம் மலையை அண்ணாந்து நோக்கினான்; தன் வேகம் தடுத்தாண்ட அவ் விலங்கலின்மீது சோழ நாட்டு வேங்கைக் கொடியை ஏற்றினான். அவன் பெருமையைச் சிலப்பதிகாரம் பாடிற்று.

வெற்றி வீரனாகத் தமிழ் நாட்டை நோக்கித் திரும்பி வரும் பொழுது திருமாவளவனை வச்சிர நாட்டு மன்னன் வரவேற்று முத்துப் பந்தலைத் திறையாக அளித்தான். மகத நாட்டரசன் தடுத்துப் போர் புரிந்து தோற்றான்; எட்டுத் திசையும் புகழ் பெற்ற வளவனுக்குப் பட்டிமண்டபத்தைத் திறையாக இட்டு வசங்கினான். அவந்தி நாட்டு அரசன் முன்னமே நண்பனாதலின், மனம் உவந்து தமிழ் மன்னனை வரவேற்றுத் தோரணவாயில் ஒன்று பரிசாகத் தந்தான். பொன்னாலும் மணியாலும் ஆன்னார் மூவரும் புனைந்து அளித்த அரும் பரிசுகள் பூம்புகார் நகரின் சித்திர மாளிகையில் சிறந்த காட்சிப் பொருள்களாக அமைந்தன. அவற்றைக் கண்டு விம்மிதம் உற்றனர் வீரர் எல்லாம்.

மீன்கொடி யேற்றம் பாண்டியரது மீனக் கொடியும் இமயமலையில் மிளிர்வதாயிற்று. அக் கொடியேற்றிய மன்னவனைப் "பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி" என்று பாராட்டினார் பெரியாழ்வார். அவன் வழி வந்த பாண்டியன் ஒருவன், "ஆரியப்படை கடந்த நெடிஞ்செழியன்" என்று சிலப்பதிகாரத்திலே குறிக்கப்படு கின்றான். செருக்களத்தில் ஆரியரை வென்றமையால் செழியன் அச் சிறப்புப் பெயர் பெற்றான் என்பது வெளிப்படை. ஆண்மையும் அருளும் வாய்ந்த அம் மன்னன் மதுரை மாநகரில் அரசு வீற்றிருந்தபோது பாண்டியநாடு பேரும் பெருவாழ்வும் பெற்று விளங்கிற்று. அப் பெருமையை நேரில் அறிந்த அயல் நாட்டான் ஒருவன், "தென்னவன் நாட்டுச் சிறப்பும் செய்கையும் கண்மணி குளிர்ப்பக் கண்டேன்" என்று வாநாரப் புகழ்ந்து வாழ்த்தினான்.

ஆரிய அரசர் இருவர்

இவ்வாறு இமயமலையிலே தமிழ்க்கொடி ஏற்றி வீரப்புகழ் பெற்ற வேந்தரை மறந்தாரல்லர் வடநாட்டார். ஒரு தலைமுறை கழிந்தது. பின்னும் தமிழ் வேந்தரது புகழ் மழுங்கவில்லை. ஒரு திருமணப்பந்தலில் ஆரிய மன்னர் பலர் குழுமியிருந்தனர். அவர்களுள் கனகன், விசயன் என்ற இருவர் தமிழரசரைக் குறித்து அசதியாடினர். "தமிழ் நாட்டரசர் படையெடுத்து வந்து, இமயமலையில் வில்லும் புலியும் கயலும் பொறித்த நாளில் எம்மைப் போன்ற வீரசூர வேந்தர்கள் இந் நாட்டில் இல்லைபொலும்" என்று பேசி மகிழ்ந்தார்கள்.

சேரன் சீற்றம்

வடநாட்டினின்றும் வந்த மாதவர் வாயிலாக அவ்வசை மொழியைக் கேட்டான் சேரன் செங்குட்டுவன். அவன் கண் சிவந்தது; கரம் துடித்தது; "இன்றே வடநாட்டின்மேற் படையெடுப்பேன். தமிழரசரை பழித்துச் சிறுமை பேசிய மாற்றாரைச் சிறைபிடிப்பேன்; பத்தினி யாகிய கண்ணகிக்கு இமயமலையிற் சிலையெடுப்பேன்; அச் சிலையை அவ்வரசர் தலையில் ஏற்றி வருவேன்" என்று வஞ்சினம் கூறினான். வீரர் ஆரவாரித்தனர். படை திரண்டு எழுந்தது. வஞ்சிமா நகரினின்றும் வஞ்சிமாலை சூடிப் புறப்பட்டான் சேரன். பல நாடும் மலையும் கடந்து ஊக்கமாகச் சென்றது தமிழ்ச் சேனை.

"காவா நாவிற் கனகனும் விசயனும் விருந்தின் மன்னர் தம்மொடும் கூடி அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கெனச் சீற்றமு கொண்டுஇச் சேனை செல்வது" என்று அதன் திறமுரைத்தான் சேரன்.

ஆரியப் படையும் தமிழ்ப் படையும்

நீலகிரியையும் கங்கையாற்றையும் கடந்து பகைப்புலம் புகுந்தது தமிழ்ப்படை. அங்குக் கனகனும் விசயனும் எட்டு வேந்தரைத் துணைக்கொண்டு சேரனை எதிர்த்தனர். இரு திறத்தார்க்கும் கடும்போர் நிகழ்ந்தது. தமிழ்ப் படையின் வெம்மையைத் தாங்கமாட்டாது கூட்டுச் சேனை நிலை குலைந்து ஓட்டமும் பிடித்தது. கனக விசயர் சேரன் கையிற் சிக்கிக் கொண்டார்கள். ஒரு பகலிற் பல வேந்தரைப் புறங் கண்ட சேரன் வெற்றி வீரனாகப் பாசறையில் வீற்றிருந்தான்; இமய மலையிற் போந்து பத்தினிப் படிமத்திற்குரிய சிலை யெடுத்து வருமாறு தன் சேனாதிபதியை ஏவினான்.

வீரப் பரிசளிப்பு

கங்கையின் தென் கரையால் நட்பரசராகிய கன்னர் தமிழ் மன்னன் தங்குதற்குச் சிறந்ததோர் பாசறை அமைத்திருந்தனர். அங்கு வந்து அமர்ந்தான் சேரன். படை வீரர் பல்லாயிரவர் நிறைந்திருந்தார்கள். அவர்களுள் மாற்றாரை முருக்கி வென்றவர் பலர்; விழுப்புண் பட்டவர் பலர்; செருக்களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட சூர்ரின் மைந்தர் பலர். அவரை யெல்லாம் வருக என்றழைத்தான் வீர மன்னன்; அவரது வரிசையறிந்து பொன்னாலாகிய வாகைப் பூக்களை முகமலர்ந்து பரிசளித்தான். செங்குட்டுவனது செங்கையாற் பரிசு பெற்ற வீரர் சருக்களத்தில் பெற்ற இன்பத்திலும் சிறந்ததோர் இன்ப முற்றனர்.

ஆரிய மன்னருக்கு விடுதலை

பின்பு, தென்னாட்டை நோக்கிப் புறப்பட்டான் சேரன்; இமயமலையிலே எடுத்துக் கங்கையிலே நீராட்டிய கண்ணகி சிலையைக் கனக விசயரின் முடிமேல் ஏற்றினான்; வெற்றிமுரசம் அதிர, வெண்சங்கம் முழங்க, சிறையரசர் தலையில் இமயச்சிலை விளங்க வஞ்சிமாநகரை அடைந்தான். பத்தினிக்கோட்டத்தில் கண்ணகியான் சிலை ஒரு சன்னாளில் நிறுவப்பெற்றது. அக் காட்சியைக் கண்களிப்பக் கண்டனர் தமிழரசரும் அயல் அரசரும். கண்ணகியின் திருவிழாவை முன்னிட்டு விடுதலை பெற்ற கனகனும் விசயனும், "தலைக்கு வந்தது தலைச்சுமையோடு போயிற்று" என்று உள்ளங் குளிர்ந்து பத்தினிக் கோட்டத்தை வணங்கித் தத்தம் நாட்டை நோக்கிச் சென்றனர்.

தமிழர் படைத்திறம்

நாற்படை

அரசர்க்குரிய அங்கங்களுள் தலைசிறந்தது படை. படைது திறத்தால் அரசன் உட்பகையை அழிப்பான்; புறப்பகையை ஒழிப்பான். முன்னாளில் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்னும் நாற்படையுமுடைய அரசன் மிகச் சிறந்தவனாக மதிக்கப் பெற்றான். எல்லாப் படைகளுக்கும் மன்னனே மாபெருந் தலைவன்.

யானைப் படை

நால்வகைப் படைகளில் ஏற்றமும் தோற்றமும் வாய்ந்தது யானைப்படை. செருக்களத்தில் வீறுகொண்டு வெம்போர் வீளைப்பதும், மாற்றார்க்குரிய மாட மதில்களைத் தாக்கித் தகர்ப்பதும் யானைப் படையே. அப்படைவீர்ர் யானையாட்கள் என்றும், குஞ்சரமல்லர் என்டும் குறிக்கப்பெற்றனர். வலிமை சான்ற அழகிய யானை, பட்டத்து யானை என்று பெயர் பெற்றது. உயர்ந்த மேனியும், ஓங்கிய நடையும், சிறந்த கொம்பும், பரந்த அடியும், சிறிய கண்ணும், செந்நிற வாயும் உடைய யானையே அப் பதவிக்கு உரியதாயிற்று. அரசன், நாட்டைச் சுற்றிப் பார்க்கப் புறப்படும்பொழுதும், படையெடுக்கும் பொழுதும் பட்டத்து யானைமீதேறிச் செல்வான். அவன் கொடி தாங்கும் தகுதியும் அதற்கே உண்டு.

சேரநாட்டு யானைப்படை தமிழகத்தில் மலைநாடாகிய சேரநாடு யானைச் செல்வமுடையது. ஆதலால் அந்நாட்டுப் படையில் யானைப் படை சிறந்ததோர் அங்கமாக விளங்கிற்று. அந் நாட்டை ஆண்ட அரசன் ஒருவன் "பல்யானைச் செல்கெழு குட்டுவன்" என்று பாராட்டப்படுகின்றான். புலவர் பாடும் புகழுடைய வீரனாய் விளங்கிய அச்சேரன் வேழப்படையால் விழுமிய புகழ் பெற்றவன் என்பது வெளிப்படை.

சோழநாட்டு யானைப்படை

சோழநாட்டின் வேழப்படைத் திறத்தினைப் பிற நாட்டு அறிஞர் எழுதியுள்ள குறிப்புகளால் அறியலாகும். "சோழநாட்டு அரசாங்கம் அறுபதாயிரம் போர்க் களிறுகளை உடையது. போர்க்களத்திற் புகும் பொழுது அவற்றின் முதுகில் அமைந்த வீடுகளில் வீரர் நிறைந்திருப்பர்; தூரத்திலுள்ள பகைவர்கள்மீது வில்லம்பு துரப்பர்; ஈண்டிய பகைவர்மீது ஈட்டியைப் பாய்ச்சுவர். போர் முனையில் வீரம் விளைத்து வெற்றி பெரும் வேழங்களுக்கு விருதுப் பெயர் கொடுப்பதுண்டு. அப் பெயர்கள் அவற்றின் கொற்றத்தைக் குறிப்பனவாக அமையும். நாள்தோறும் போர்க் களிறுகளை அரசன் பார்வையிடுவான்" என்று சீனத்து அறிஞன் ஒருவன் எழுதிப் போந்தான்.

பாண்டிநாட்டு யானைப்படை

பாண்டி நாட்டை ஆண்ட வீரமன்னருள் ஒருவன் பெருவழுதி என்னும் பெயறினான். பகைவர்களை அறப்போரால் வென்று மறக்கள வேள்வி புரிந்தவன் அவன். யானைப்படை அவனிடம் சிறந்து விளங்கிற்று. "கொல்யானை பலவோட்டிக் கூடா மன்னர் குழாம் தவிர்த்த பெருவழுதி" என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் அவனை வியந்துரைக்கின்றன. பாண்டி நாட்டு மீனக் கொடி அவன் பட்டத்து யானையின்மீது பெருமிதமாக நிமிர்ந்து பறந்த காட்சியைக் கண்ட கவிஞர் ஒருவர். "கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ வாழிய" என்று மன மகிழ்ந்து வாழ்த்தினார்.

வேளைப் படை

கண்ணினைக் காக்கும் இமைபோல அரசற்குக் காலத்தில் உதவி புரியும் வீரரும் முற்காலத்தில் இருந்தனர்; அன்னார் அணுக்கப் படையினர்; உற்றவிடத்து உயிர் வழங்கும் பெற்றியர். உடுக்கையிழந்தவன் கை போல் இடுக்கண் வந்த வேளையில் ஏன்று உதவிய அவ்வீரர் "வேளைக்காரர்" என்று அழைக்கப் பெற்றார். தஞ்சைச் சோழ மன்னர் சேனையில் வேளைக்காரப் பட்டாளம் ஒன்று சிறந்து விளங்கிற்று.

ஔவை கண்ட வீரன்

பழங்காலத்திலும் இத்தகைய வேளைப்படை வீரர் இருந்தனர் என்பது ஔவையார் பாட்டால் விளங்கு கின்றது. ஒரு நாள் ஓர் அரசனைக் காணச் சென்றார் ஔவையார். மது நிறைந்த பொற்கிண்ணம் அவன் முன்னே நின்றது. அங்கு முறுக்கு மீசையோடு மெய்க்காப்பாளனாக நின்றான் ஒரு சேவகன். அவன் முகத்தை ஔவையார் அமர்ந்து நோக்கினார்; அவன் ஊரும் பேரும் கேட்டறிந்தார்; முகமலர்ந்தார்; ஆர்வத்தோடு பேசலுற்றார்:

"அரசே! இவன் பிறந்த குடியின் பெருமையை மூன்று தலைமுறையாக நான் அறிவேன். ஒரு போர் முனையில் உன் பாட்டன் பெரும் போர் புரிந்துகொண்டிருந்தான். அவன் வில்லினின்றும் போந்த அம்புகள் மாற்றார் சேனையைச் சின்னபின்னமாக்கின. அவ்வில்லின் செயல் கண்டு விம்மிதம்கொண்டு நின்றான் உன் ஐயன். அப்போது பகைவன் ஒருவன் விலாப் புறமாக நின்று வீசிய வேற்படை அவனை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தது. அதனை அவன் அறிந்தானில்லை. நொடிப்பொழுதில் வேற்படைக்கும் அவனுக்கும் இடையே ஒரு வீரன் வந்து நின்றான்; வெம்படையைத் தன் மார்பில் ஏற்றான்; மடிந்து மண்மேல் விழுந்தான். அவனைத் தழுவி எட்த்தான் உன் பாட்டன்; கடும் புண்ணைக் கண்ணீராற் கழுவினான்; அவன் விழுந்து பட்ட இடத்தில் வீரக் கல் நாட்டினான்.

"அவ் வீரனுடைய பேரன் இவன். அந்த முறையில் அவன் பெயரே இவன் பெயர். அமர்க்களத்தில் இவனும் அருஞ் செயல் புரிய வல்லான்; உனக்காக உயிரையும் கொடுப்பான். தியாகம் இவன் பிறவிக்குணம். ஆதலால் இக் கிண்ணத்திலுள்ள மதுவை முதலில் இவனுக்கே கொடு" என்று கூறினார். அது கேட்ட அரசன் மனமகிழ்ந்து ஔவையார் பணித்தவாறே செய்தான்.

மூலப் படை

பல்வகைப் படையையும் கையாண்டது பழந்தமிழ் நாடு. மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப் படை, துணைப்படை, பகைப்படை என்னும் அறுவகைப் படையையும் உடையராயிருத்தனர் தமிழ் மன்னர். ஆயினும் அவற்றுள் சாலச் சிறந்தது மூலப்படையே. அப்படை வீரர் வாழையடி வாழைபோல் மன்னர்க்குப் படைத் தொழிலாற்றும் மறக் குலத்தினர்; பரம்பரையாற் பெற்ற பேராண்மையும் மனத் திண்மையும் உடையவர்; பகைவரது வெம்மையைத் தாங்கி நிலைகுலையாது நின்று போரிடும் தன்மையர். இத்தகைய மூலப் படையைத் "தொல்படை" என்றார் திருவள்ளுவர்."

விலைப் படை

வேந்தர்க்குரிய படைகளுள் விலைப்படையும் ஒன்று. "பொன்னின் ஆகும் பொருபடை" என்று அதன் தன்மையை உணர்த்தினார் சிந்தாமணியாசிரியர். முன்னாளில் விலைப் போர் வீரராக விளங்கியவர்களுள் ஒருவர் வேளிர்குலத் தலைவர். அவர் பேராண்மை வாய்ந்தவர்; மாற்றாரின் கூற்றுவர்; வெற்றிமேல் வெற்றி பெற்ற வீர்ர், சென்ற விடமெல்லாம் செரு வென்று உயர்ந்தமையால் அவர் "முனையடுவார்" என்னும் சிறப்புப் பெயர் பெற்றார். போர் முனையிலே தோல்வியுற்றவர் பெரும்பாலும் அவருதவியை நாடுவர்; அதற்குக் கைம்மாறாகத் தக்க பொன்னும் பொருளும் கொடுக்க இசைவர். முனையடுவார் போர்க்கோலம் புனைந்து புறப்படுவார். மாற்றாரைத் தாக்குவார்; வெற்றி பெறுவார்; பேசிய பொருளைப் பெற்று மீள்வார்.

அவ்வாறு கிடைத்த பொருளிற் பெரும்பாகத்தை அவர் அறவழியிற் செலவிட்டார். வாளாண்மையால் வந்த பொருளை அறநெறியிற் செலவிட்டு அவர் இறைவன் திருவருளுக்குரியரானார். திருத்தொண்டர் புராணத்தில் போற்றப்படுகின்ற அரனடியார் அறுபத்து மூவரில் முனையடுவாரும் ஒருவராய் விளங்குகின்றார்.

படை வகுப்பு

இன்னும், இக் காலத்துப் பட்டாள முறையில் அமைந்த படைகளும் முற்காலத்தில் உண்டு. விற்படை, வேற்படை, மற்படை, வாட்படை முதலிய படை வகுப்புகளைத் தமிழ்ப் பாட்டிலே காணலாம். விற்கலையில் தேர்ந்திருந்தது முற்காலத் தமிழ் நாடு. மலை நாட்டை யாண்ட சேரமன்னர்க்கு வில்வித்தை குலவித்தையாகவே அமைந்தது, சேர நாட்டுக் கொடியில் வில்லின் வடிவமே எழுதப்பட்டிருந்தது. வில்லவன் என்பது சேரமன்னர்க்குரிய குடிப் பெயராக வழங்கிற்று. இன்றும் பழைய வில்லாண்மையைக் காட்டும் வழுக்கம் ஒன்று மலையாள நாட்டில் உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை மலையாள மன்னர் தம் அரண்மனையினின்று வில்லுடன் வெளிப்பட்டு அம்பெய்து மீண்டு வருகின்றார்.

வட்டுடை

வீரர் உடுக்கும் உடை வட்டுடை என்று பெயர் பெற்றிருந்தது. வில்லாளருள் முதல்வனாக வைத்து எண்ணப்பட்ட சீவகன், மாற்றார் கவர்ந்து சென்ற பசுக்களை மீட்டுவரப் புறப்பட்டபோது வட்டுடை உடுத்திருந்தான் என்று சிந்தாமணி கூறுகின்றது. தாய்முகங் காணாது கதறியழுத கன்றுகளும், அவற்றின் துயர் கண்டு தரியாத ஆயர்களும் இன்புறும் வண்ணம் பசுக்களை மீட்டுத் தந்த சீவகனை,"வட்டுடைப் பொலிந்த தானை வள்ளல்!" என்று அக் காவியம் வியந்து புகழ்கின்றது. முழந்தாள் அளவாக வீரர் உடுக்கும் உடையே வட்டுடையாகும்." விற்படையில் கைதேர்ந்த வீரர் 'தேர்ந்த வில்லிகள்' என்று பெயர் பெற்றனர்.

வீர முரசு

தமிழ் நாட்டு முடி மன்னர்க்கு மூன்று முரசம் உண்டு; ஒன்று நீதி முரசு; மற்றொன்று கொடை முரசு; இன்னொன்று படை முரசு. செம்மையின் சின்னம் நீதி முரசம்; வன்மையின் சின்னம் கொடை முரசம்; ஆண்மையின் சின்னம் படை முரசம்.

வெம்மை வாய்ந்த புலியை வீறுடன் தாக்கிக் கொம்பினால் பீறிக்கொன்ற பெருங்காளையின் தோலாற் செய்யப்படுவது வீரமுரசம். போர் ஒடுங்கிய காலங்களில் அஃது அரண்மனையில் ஒரு மணி மஞ்சத்தில் வீற்றிருக்கும். மன்னன் படையெடுக்கும் பொழுது அம் முரசம் மாளிகையினின்று எழுந்து முன்னே செல்லும்.

இசைக் கருவிகள்

போர்க்களத்தில் வீர வெறியூட்டும் இசைக்கருவிகள் பல இருந்தன. பறையும் பம்பையும், திட்டையும் தடாரியும், முழவும் முருடும், கரடிகையும் திண்டியும் அத்தகைய கருவிகள். அவற்றின் பெயர்கள் ஒலிக் குறிப்பால் அமைந் தனவாகத் தோன்றுகின்றன. பம்பம் என்று ஒலிப்பது பம்பை; முர்முர் என்று ஒலிப்பது முருடு; கரடிபோல் கத்துவது கரடிகை. இவ்விசைக் கருவிகள் ஒன்று சேர்ந்து ஒலிக்கும் பொழுது வீரரது தலை கறங்கி ஆடும்; நரம்புகளில் முறுக்கேறும்; போர் வெறி பிறக்கும்; வீரம் சிறக்கும்.

மறவர்

மனத்திண்மை வாய்ந்த வீரரை மறவர் என்று அழைத்தனர் பழந் தமிழர். அவர் கல்லெனத் திரண்ட தோளர்; கட்டமைந்த மேனியர்; முறுக்கு மீசையர்; தருக்கு மொழியினர்; வீறிய நடையினர்; சீறிய விழியினர்.

"புகழ்எனின் உயிரும் கொடுக்குவர், பழிஎனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்."

பேராண்மை

போர்க்களத்தில் முன் வைத்த காலைப் பின் வைத்தலறியாத மறவரே சுத்த வீரர். தம்மை நோக்கி வரும் படைக்கலத்தைத் துச்சமாகக் கருதுவது அவர் இயற்கை. படைக்கலம் வரும் போது விழித்த கண் இமைத்தல் அவர் வீரத்திற்கு இழுக்கு.

அன்னார் மாற்றாரது படைக்கலத்தாற் பெற்ற வடுக்களைப் பொன்னினும் மணியினும் மேலாகப் போற்றுவர்; அவற்றைப் புகழின் சின்னமாகக் கருதிப் பெருமை கொள்வர்.

தழும்பன்

முன்னாளில் தழும்பன் என்ற பெயருடைய தலைவன் ஒருவன் தமிழ் நாட்டில் வாழ்ந்தான். அவன் முகத்திலும் மார்பிலும் அடுக்கடுக்காக வடுக்கள் அமைந்திருந்தன. வேலாலும் வில்லாலும் மாற்றார் எழுதியமைத்த வீரப்படம்போல் விளங்கிற்று அவன் கட்டமைந்த மேனி. பகைவர் படைக்கலத்தால் உழுது வீரம் விளைத்த உடம்பினைப் பார்த்துப் பார்த்து இன்புற்றான் அவ் வீரன்; ஒவ்வொரு தழும்பின் வரலாற்றையும் பேசிப் பேசி பெருமிதம் அடைந்தான். நாளடைவில் அவனுடைய இயற்பெயர் மறைந்து போயிற்று. தழும்பன் என்ற சிறப்புப் பெயரே அவற்குரியதாயிற்று. தமிழ்ப் பெருங் கவிஞராகிய பரணர் முதலியோர் அவன் பேராண்மையை வியந்து பாடினர்.

புலிப் பல்

போர் ஒழிந்த காலங்களில் கருங்கை மறவர் காட்டினுள்ளே போந்து கடும் புலிகளைத் தாக்குவர். அவற்றின் வாயைக் கிழிப்பர்; பற்களைத் தகர்ப்பர்; வெற்றிப் பரிசாகிய அப் பற்களைக் கோத்துத் தம் குல மாதர்க்கு அணிகலனாகக் கொடுப்பர். அதுவே மறக்குடி மாதர் மதித்த நற்பரிசு. "மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற மாலை வெண்பல் தாலி" என்று பழந்தமிழ்க் கவிதை அதன் பெருமையைப் பாடிற்று.

புலிகடிமால்

முன்னாளில் கடும்புலி வாழும் காட்டிலே முனிவர் ஒருவர் தவம் புரிந்திருந்தார். அவர்மீது பாய்வதற்குப் பதி போட்டது ஒரு பெரும் புலி. வீரம் வாய்ந்த தமிழ் மகன் ஒருவன் அப்போது அவ் வழிப் போந்தான்; புலிக்கும் முனிவருக்கும் இடையே பாய்ந்தான்; அவ்விலங்கைக் கொன்று முனிவர் உயிரைக் காத்தான். அன்று முதல் 'புலிகடிமால்' என்று தமிழகம் அவனைப் புகழ்வதாயிற்று. அவன் குடி வழியில் வந்த தலைவர்க்கெல்லாம் அது பட்டப் பெயராக வழங்கிற்று.

வீரப் பெயர்

இன்னும், அந் நாளில் பல வகையான வீரப் பெயரிட்டு வாழ்ந்தனர் தமிழர். வேங்கை மார்பன் என்பது ஒரு சிற்றரசன் பெயர். அச்சொல்லிலே வீரம் வீறுகின்றது. இன்னும் விறல் மிண்டன், கோட்புலி முதலிய பெயர்களும் ஆடவர் பெயர்களாக அமைந்தன. சிங்கன் என்ற பெயரும் அக்காலத்தில் வழங்கிற்று. பொதியமலைக்கருகே சிங்கன் என்ற தலைவனால் ஆளப்பட்ட பாளையம் சிங்கன்பட்டி என்று பெயர் பெற்றது. புலமை சான்ற திருவள்ளுவரின் நண்பராகத் திகழ்ந்த தமிழ்ப்பெருமகன், ஏலேல சிங்கன் என்னும் பெயர் பெற்றிருந்தான் என்பர். இவ்வாறு வீரப் பெயர்பூண்டு, வீரம் விளைத்தனர் பண்டைத் தமிழர்.

கொற்றவை வழிபாடு

தமிழ் வீரர் வணங்கிய தெய்வம் கொற்றவை ஆகும். வெற்றி தரும் தாயே கொற்றவை என்று பெயர் பெற்றாள்.

"சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை"

யின் கோயில் தமிழ் நாட்டுப் பாலை வனங்களிலும் மலைகளிலும் சிறந்து விளங்கிற்று. ஆனைமலைத் தொடரில் உள்ள அயிரை என்னும் குன்றின்மீது கொற்றவையின் கோயில் ஒன்று முற்காலத்தில் இருந்தது. மன்னரும் மறவரும் அங்கே குருதிப் பலி கொடுத்து வழிபாடு செய்தார்கள். நாளடைவில் அயிரை மலை என்ற பெயர் ஐவர்மலை என மருவிற்று. பஞ்சபாண்டவர் என்னும் ஐவர்க்கும் உரியது அம் மலை என்ற கதை எழுந்தது. அதற்கு இசைய அங்கிருந்த கொற்றவை ஐவர்க்கும் தேவியாய பாஞ்சாலி என்று அழைக்கப் பெற்றாள்.

வீரத்தாய்

வீரத்தைப் பெண்ணாக வழிபட்ட பெருமை தமிழருக்கு உரியதாகும். இம் மாநிலத்தில் ஆதி சக்தியாக அமைந்தவள் கொற்றவை. பழமைக்குப் பழமையாய்த் திகழ்பவள் அவளே. தமிழகத்திற் படை வீடுகொண்டு அருள் புரியும் வீர முருகனை ஈன்ற தாய் அவளே. அரந்தை கெடுத்து வரம் தரும் திறம் வாய்ந்தவள் அவளே.

"உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை" - திருக்குறள், 761. இவனைப் பதிற்றுப்பத்து மூன்றாம் பத்தில் பாலைக் கௌதமனார் பாடியுள்ளார்.  சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரியார், இரண்டாம் பாகம், முதல் பகுதி, ப. 230. வேள்விக்குடிச் செப்பேடுகள் கி.பி. எட்டாம் நூற்றாண்டிலே வரையப்பெற்றன. புறநானூறு, 9. நெட்டிமையார் பாட்டு. ஆபத்து வேளையில் அஞ்சல் என்று அருள் புரியும் முருகவேளை "வேளைக்காரப் பெருமாள்" என்றார், அருணகிரிநாதர். "புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோட் டக்க துடைத்து" என்ற திருக்குறள் ஈண்டுக் கருதத் தக்கது. புறநானூறு, 290. "உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது" - திருக்குறள், 762. "அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற் கடியேன்" என்று திருத்தொண்டத் தொகைப் பதிகத்திலே பாடினார், சுந்தரமூர்த்தி. சீவக சிந்தாமணி, 468. "வட்டுடை-முழந்தாள் அளவாக வீரர் உடுக்கும் உடை விசேடம்" என்றார் நச்சினார்க்கினியர். போர்க்களத்தில் முழங்கும் கருவிகளை ஒரு பாட்டில் தொகுத்துரைத்தார் வில்லி. அதனை வில்லி பாரதம், பதினேழாம் போர்ச் சருக்கத்திற் காண்க. புறநானூறு, 182. "விழித்தகண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின் ஒட்டன்றோ வன்கண் அவர்க்கு" என்றார் திருவள்ளுவர். பகைவர் எறிந்த வேல் தன்னை நோக்கி வரும்போது கண்ணிமைத்தல் தோல்வியாகும் என்பது இக்குறளின் கருத்து. தமிழ்நாட்டுச் சிறுவர் ஆடும் விளையாட்டில் இக் கருத்தை இன்றும் காணலாம்.

"எனக்குப் பயப்படுவாயா, மாட்டாயா," என்று ஒருவன் கேட்பான். "பயப்பட மாட்டேன்" என்று மற்றவன் சொல்வான். "அப்படியானால் கண்ணை விழித்துக் கொண்டு என் முன்னால் நில்" என்பான். அப்படி மற்றவன் நின்றவுடனே இவன் தன் இரு கைகளையும் ஓங்கித் தட்டுவான். அப்போது அவன் கண்ணை மூடி விழித்தால் தோல்வி; கண்ணிமையாமல் நின்றால் வெற்றி. பெரும் புண்ணால் அழகு பெற்ற தழும்பன் என்ற கருத்தமைத்துப் பாடினார் பரணர். "இரும்பாண் ஒக்கல் தலைவன் பெரும் புண் ஏர் தழும்பன்" - நற்றிணை, 300 நக்கீரரும் இதனைப் பாடினர். சிலப்பதிகாரம், வேட்டுவ வரி, 27-28. புறநானூறு - 201. "அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்." - சுந்தரமூர்த்தி தேவாரம், திருத்தொண்டத் தொகைப் பதிகம். சிலப்பதிகாரம்: வேட்டுவ வரி, 63-64. 'சேரன் செங்குட்டுவன்,' ப.181. பழனியிலிருந்து ஏழு மைல் தூரத்திலுள்ள ஐவர் மலையில் நூற்று அறுபதடி நீளமுள்ள குகையும், பழங்கோயிலும் உள்ளன. M.M.III,724. திருமுருகாற்றுப்படை, முருகனை "வெற்றி வெல் போர்க் கொற்றவை சிறுவன்" என்றும், "பழையோள் குழவி" என்றும் குறிக்கின்றது.

தமிழ்நாட்டுப் போர்க் களங்கள்

பேராசை

பகையும் போரும் எந்நாளும் இவ்வுலகில் உண்டு. மண்ணாளும் மன்னரின் ஆசைக்கு அளவில்லை; அகில மெல்லாம் கட்டி ஆண்டாலும் கடல் மீதிலே ஆணை செலுத்த விரும்புவர்; கடலாட்சி பெற்ற பின்னர் வான வெளியை ஏகபோகமாக ஆள ஆசைப்படுவர். இத்தகைய ஆசையால் வருவது பூசல். "ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று. இவ்வுலகத்து இயற்கை" என்றார் ஒரு தமிழ்க் கவிஞர்.

பாரதப் போரும் தமிழரசும்

மண்ணாசை பிடித்த மன்னர் வாழும் இம்மாநிலத்தில் நெடுங்காலம் தன்னரசு பெற்று வாழ்ந்தது தமிழ்நாடு. வாழையடி வாழையென வந்தனர் சேர சோழ பாண்டியர். பாரதப் போர் நிகழ்ந்தபோது பகைத்து நின்ற இரு படைக்கும் வளமாகச் சோறளித்தான் ஒரு தமிழ் வேந்தன். அவன் பெருமையை வியந்து புகழ்ந்தது பாரதநாடு.

'ஓர்ஐவர் ஈரையும் பதின்மர் உடன்றெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் பொறையன் மலையன் திறம்பாடிக் கார்செய் குழலாட ஆடாமோ ஊசல்" என்று அச் சேரன் சீர்மையைச் சிலம்பு பாடிற்று.

தலைவணங்காத் தமிழகம்

வடநாட்டு வம்பமோரியர் திக்கெட்டும் வெல்வோம் என்று தோள் கொட்டி ஆர்த்துத் தென்திசை நோக்கி வந்தபோது அவர் படை வெள்ளத்தைத் தடுத்துப் போர் புரிந்தான் பழையன் என்னும் தமிழ் வீரன். அப்போது வம்பர் படைத்திறம் தமிழ் நாட்டில் முனைந்து செல்ல மாட்டாது மடங்கி அடங்கிற்று. அன்றியும் அசோகன் போன்ற அருந்திறல் அரசர்களும் தமிழ் நாட்டின் தன்னரசை மதித்தார்கள். அந்நாளில் வர்த்தகம் கருதி வந்த பிற நாட்டாரைத் தமிழ்நாடு வரவேற்றது; அவரோடு வேற்றுமையின்றிக் கலந்தது; ஆனால், தண்டெடுத்து வந்தவரைத் தட்டி முறித்தது.

திருமாவளவன்

தமிழ்நாட்டு முடிவேந்தருக்குள் அடிக்கடி போர் நிகழ்ந்ததுண்டு. சோழ மன்னரில் திருமாவளவனும், பாண்டிய மன்னரில் நெடுஞ்செழியனும் தாமாகவே தலையெடுத்த பெரு வீரர். இளமையில் அரியணை ஏறினான் திருமாவளவன். எளிதில் அவனை வெல்லலாம் என்று கருதினர் பகை வேந்தர். பாம்பு சிறியதாயினும் பெருங்கழியால் அடித்தல் வேண்டும் என்பது அவர் கொள்கை. ஆதலால் சேரனும் பாண்டியனும் பெரும்படை திரட்டினர். சிற்றரசர் பதினொருவர் அவருடன் சேர்ந்தனர். நேசப் பெரும்படை வளவனுக்குரிய நாட்டின்மேற் சென்றது. அப்படையின் வருகையை ஒற்றர் வாயிலாக அறிந்தான் வளவன்; ஊக்கம் உற்றான். மண்ணாசை பிடித்த மாற்றார் அனைவரையும் ஒருங்கே அடித்து முடிப்பதற்கு நல்லதோர் வாய்ப்பு நேர்ந்தது என்று எண்ணி மன மகிழ்ந்தான். வெண்ணிப் போர் சோழியப்படை காற்றெறி கடலெனக் கதித்தெழுந்தது. ஆத்திமாலை அணிந்த திருமாவளவன் முன்னணியில் பெருமிதமாகச் சென்றான். வெண்ணியூரின் அருகே இரு திறத்தார்க்கும் வெம்போர் நிகழ்ந்தது. போர்க்களத்தில் பாண்டியன் அடிபட்டு விழுந்தான்; ஆவி துறந்தான். சேரன் மார்பில் ஓர் அம்பு பாய்ந்து புறத்தே போயிற்று. குறுநில மன்னர் குன்று முட்டிய குருவிபோல் வீறு குன்றி ஓடினர். வளவன் வாகை மாலை சூடினான். கவிகள் பாமாலை சூட்டினர்.

நெடுஞ்செழியன்

தமிழ்நாட்டை அரசாண்ட மற்றொரு வீர மன்னன் நெடுஞ்செழியன். அவன் கருவிலே திருவுடையவன்; அஞ்சாத நெஞ்சினன்; செஞ்சொற் கவிஞன். இளமையிலே அவன் அரசாளும் உரிமை பெற்றான். இளமையை எளிமையாகக் கருதினர் மற்றைய இரு வேந்தரும்; படைத்திறமற்ற சிறுவன் என்று ஏளனம் பேசினர்.

அதனை ஒற்றர் வாயிலாக அறிந்தான் செழியன். பெருஞ் சீற்றமுற்றான். மாற்றார் என் நாட்டைப் பழித்தனர்; என்னையும் இழித்துரைத்தனர். சிறு மொழி பேசிய அவ்வரசரைச் சிதற அடிப்பேன்; சிறை பிடிப்பேன்; வெற்றி பெறுவேன். பெறேனாயின் என் குடிகள் என்னை இகழ்க; மாபெரும் புலவர்கள் என் நாட்டைப் பாடாதொழிக" என்று வஞ்சினம் கூறினான்; போர்க்கோலங்கொண்டு எழுந்தான்.

தலையாலங்கானப் போர்

தலையலங்கானத்தில் மாற்றாரைத் தாக்கினான்; வாகை மாலை சூடினான்.[5] "தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்" என்று தமிழகம் அவனைப் பாராட்டி மகிழ்ந்தது. புறநானூறு, 76. இந்தியர் வரலாறு (எஸ்.கே. கோவிந்தசாமி) ப. 96. "இருபெரு வேந்தரும் ஒருகளத் தவிய வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்தாள் கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்" - பொருநர் ஆற்றுப்படை, 145-147. "சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமம் சிதையத் தாக்கி முரசமொடு ஒருங்கு அகப்படே எனாயின் பொருந்திய என்னிழல் வாழ்நர் செல்நிழல் காணாது கொடியன்எம் இறையெனக் கண்ணீர் பரப்பிக் குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக" - புறநானூறு,72.. "தலையாலங்கானத்தில் தன்னொக்கும் இரு வேந்தரைக் கொலை வாளில் தலை துமித்து" என்று கி. பி. பத்தாம் நூற்றாண்டில் வரையப்பட்ட சின்னமனூர்ச் செப்பேடுகளில் இச் செய்தி கூறப்படுகின்றது.

மான வீரம்

மானங் காத்தான்

மானமே உயிரினும் சிறந்ததென்பது தமிழ்நாட்டார் கொள்கை. "மானங் கெடவரின் வாழாமை முன் இனிதே" என்றார் ஒரு தமிழ்ப் புலவர். எனவே, மானங் காத்த வீரனை மனமாரப் போற்றும் வழக்கம் தொன்று தொட்டுத் தமிழ் நாட்டில் உண்டு. நாட்டின் மானத்தைக் காத்தருளிய வீரன் ஒருவனுக்கு "மானங் காத்தான்" என்ற பட்டம் சூட்டிய நாடு தமிழ் நாடு. அவன் பெயரைத் தாங்கிய ஊர்கள் இன்றும் பாண்டி நாட்டில் நின்று நிலவுகின்றன.

விழுப்புண் புறப்புண்

போர்க்களத்தில் முகத்திலும் மார்பிலும் புண்பட்ட வீரனை எல்லோரும் போற்றுவர்; விழுப் புண் பெற்றான் என்று வியந்து பேசுவர்; வீரக்கல் நாட்டி வணக்கம் செலுத்துவர். ஆனால், புறத்திலே புண்பட்ட வீரனை எல்லோரும் இகழ்வர்; போர்க்களத்தில் புறங்காட்டி ஓடியதற்கு அடையாளமாகிய அப்புண்ணைப் பார்க்குந்தோறும் பழித்தும் இழித்தும் பேசுவர். ஆதலால் மான வீரர் ஒருபோதும் புறப் புண் தாங்கி உயிர் வாழ இசையார்.

புறப்புண் பட்ட சேரலாதன்

பெருஞ் சேரலாதன் என்னும் சேர மன்னன் வரலாறு இவ்வுண்மைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். வெண்ணிப் போர்க்களத்தில் புறப்புண் பட்டதாக எண்ணினான் சேரன். அப்போதே உயிரை வெறுத்தான்; உண்ணா நோன்பிருந்து உயிர் விடுத்தான்.

சேரனுக்குப் பாராட்டு

அப் போர் நிகழ்ந்த ஊரிலே ஒரு பெண்மணி விளங்கினாள். அவள் குயக் குலத்தில் பிறந்தவள்; கவிபாடும் திறம் பெற்றவள். போர்க்களத்தைக் கண்ணாற் கண்ட அம் மாது இருவகையில் இன்பம் உற்றாள். தன் நாட்டரசன் - திருமாவளவன் - வெற்றி பெற்றான் என்றறிந்த நிலையிற் பிறந்த இன்பம் ஒரு வகை. செருக்களத்தில் தோற்று ஓடிய சேரலாதன் மான வீரனாய் வடக்கிருந்து மாண்டான் என்று கேள்வியுற்றபோது பெற்ற இன்பம் மற்றொரு வகை. வாகை சூடிய வளவனை நோக்கி, "அரசே, வெண்ணிப் போர்க்களத்தில் மாற்றார்மீது சாடினாய்; வெற்றிமாலை சூடினாய்; வல்லவன் நீயே; ஆயினும் மானம் பொறாது உயிர் துறந்த சேரன் நின்னினும் நல்லவன்" என்று பாடினாள். எனவே வளவனது வீரத்தை வியந்து பாராட்டிய தமிழ் உலகம் சேரன் மானத்தையும் மதித்துப் புகழ்ந்த தென்பது நன்கு விளங்கும்.

மானங் காத்த சாமந்தர்

இரு வீரர்

ஆபத்து வேளையில் மாநில மன்னர்க்கு நேர்ந்த மானங்காத்து, மாயாப் புகழ் பெற்ற சிற்றரசரும் தமிழ் நாட்டில் உண்டு. காவிரி நாட்டை சோழ மன்னனுக்கு மீட்டுக் கொடுத்தான் ஒரு சிற்றரசன். தொண்டை நாட்டை யாண்ட பல்லவ மன்னனுக்கு நேர்ந்த பழி தீர்த்தான் மற்றொரு சிற்றரசன். இடுக்கண் களைந்த அவ்வீரர், இருவரையும் தமிழ் நாடு போற்றிப் புகழ்ந்தது.

உறந்தைப் போர்

பழங்காலத்தில் உறந்தையில் அரசாண்ட வளவன் ஒருவனைத் தாக்கினார் பகையரசர். பகல் முழுவதும் போர் நடந்தது. அந்தி மாலையில் சோழியப் படைநிலை குலைந்தது. போர்வீரர் புறங்காட்டி ஓடினர். சோழனைச் சிறை பிடிக்க மாற்றரசர் நாற்றிசையும் துருவித் திரிந்தார்கள். மாறு கோலம் புனைந்து, நழுவியோடினான் வளவன். காரிருள் அவனுக்குப் பேரருள் புரிந்தது. பொழுது புலருமுன்னே நடு நாட்டில் உள்ள முள்ளூர் மலையைச் சென்றடைந்தான் அம் மன்னன்.

திருக்கண்ணன் கோட்டை

மலையமான் மரபில் வந்த திருக்கண்ணன் என்ற குறுநில மன்னன் அப்போது முள்ளூர்க் கோட்டையை ஆண்டுவந்தான். அவன் தஞ்சமடைந்தோரைத் தாங்கும் தகைமை வாய்ந்தவன்; வருந்தி வந்தடைந்த வளவனை அவன் வரவேற்றான்; கோட்டையில் வைத்து ஆதரித்தான்.

காவிரி நாட்டின் நிலை

காவலனை இழந்த காவிரி நாடு கலக்கமுற்றது. குடிகள் கண்ணீர் வடித்தார்கள்; மாற்றார் கொடுமைக்கு ஆற்றாது துடித்தார்கள். அந் நிலையை அறிந்தான் திருக்கண்ணன்; மனம் வருந்தினான்; மன்னனுக்கு நேர்ந்த மானத்தையும், மாந்தர் படும் துயரத்தையும் ஒழிக்கத் துணிந்தான்.

திருக்கண்ணன் படையெடுப்பு

பெண்ணையாற்றங்கரையினின்று ஒரு நன்னாளில் புறப்பட்டது கண்ணன் சேனை. ஆங்காங்கு மறைந்திருந்த சோழிய வீரர் அப் படையில் சேர்ந்தார்கள். உறந்தையின் அருகே கண்ணன் சேனைக்கும் மாற்றார் சேனைக்கும் கடும்போர் நிகழ்ந்தது. பகையரசர் மனத்திட்பம் இழந்தனர்; பறித்த பொருளையெல்லாம் போர்க்களத்திற் போட்டு ஓட்டம் பிடித்தனர்.

பாராட்டும் பட்டமும்

வெற்றிபெற்ற கண்ணன், வளவனை உறையூருக்கு அழைத்து வந்தான்; அரியாசனத்தில் அமர்த்தினான். மழை முகங் காணாத பயிர்போல வாடியிருந்த குடிகள் எல்லாம் அரசன் வருகையால் இன்புற்று மகிழ்ந்தார்கள். மானங்காத்தான் மலையமான் திருக்கண்ணன் என்று பாராட்டினர் மாந்தரெல்லாம். ஆபத்துக் காலத்தில் அடைக்கலம் தந்து, அரசையும் மீட்டுக் கொடுத்த கண்ணனை மனமாரப் புகழ்ந்து ஏனாதிப் பட்டம் அளித்தான் வளவன். அன்றுமுதல் "மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்" என்று தமிழ் நாடு அவனைப் புகழ்வதாயிற்று.

பல்லவர்கோன் - நந்தி

பல்லவகுல மன்னனாகிய நந்திவர்மன் காஞ்சி மாநகரில் அரசு புரிந்தான். அவனுக்குப் பகைவர் பலராயினர். ஆயினும் படைத் திறமும் பண்பாடும் வாய்ந்த உதயசந்திரன் என்ற சாமந்தன் உற்ற துணைவனாக அமைந்தமையால் நந்திவர்மன் கவலையற்றிருந்தான். கும்பகோணத்திற்கு அருகே இப்போது நாதன் கோயில் என வழங்கும் ஊர் அப்போது பல்லவ நகரமாகச் சிறந்து விளங்கிற்று. நந்திபுரம் என்பது அதன் பழம் பெயர். அவ்வூரிலே கோட்டையும் கோவிலும் கட்டினான் நந்திவர்மன்.

தென்னவன் முற்றுகை

அப்பதியிலே தங்கியிருந்த நந்தி மன்னனைப் பாண்டியன் இராஜசிம்மன் பெருஞ்சேனை கொண்டு தாக்கினான்; கோட்டையை முற்றுகையிட்டான். நந்தியின் சிறு படை நலிவுற்றது.

உதயசந்திரன் உதவி

தொண்டை நாட்டில் இருந்த உதயசந்திரன் அதனை அறிந்தான்; தன் சேனையோடு விரைந்து போந்தான்; பாண்டியனது படையைத் தாக்கினான். நாற்புறமும் நந்தி புரத்தை வளைத்து நின்ற மறப்படை உலைந்து ஓடத் தொடங்கிற்று. உதயசந்திரன் அதனை விடாமல் தொடர்ந்து ஒறுத்தான்; நிம்பவனம், சூதவனம் முதலிய போர்க் களங்களில் மாற்றாரை முறியடித்தான்; பல்லவ வேந்தனுக்கு நேர்ந்த பழியை மாற்றினான்.

உதயசந்திரபுரம்

காலத்தில் வந்து மானங்காத்த சாமந்தனை நந்திமன்னன் மனமாரப் போற்றினான்; அவன் வீரப்புகழ் என்றும் நின்று நிலவும் வண்ணம் உதயசந்திரபுரம் என்று ஓர் ஊருக்குப் பேரிட்டான். இப்போது வடவார்க்காட்டில் உதயேந்திரம் என வழங்குவது அதுவே.

அவன் நாடும் பீடும்

இத்தகைய புகழ் அமைந்த வீரன் வேகவதியாற்றின் கரையிலுள்ள வில்லிவலம் என்ற ஊரிலே பிறந்தவன்; பெருமை சான்ற குலத்தைச் சேர்ந்தவன்;[6] அருந்திறலும் ஆன்ற குடிப்பிறப்பும் உடைய அவ்வீரன் பல்லவ மன்னனுக்கு ஆபத்தில் உதவி செய்து அழியாப் புகழ் பெற்றான்.

வடதிசை வணங்கிய வீரம்

புலிகேசன்

வடநாட்டில் உள்ளது வாதாபி நகரம். அந்நகரில் நெடுங்காலம் ஆட்சி புரிந்தனர் சளுக்கர் குல வேந்தர். அக் குலத்திலே தோன்றினான் புலிகேசன் என்னும் வீரன். அவனது படைத்திறங்கண்டு நடுங்கினர் பகைவரெல்லாம். மண்ணாசை பிடித்த புலிகேசன் கங்கரையும் கதம்பரையும் வென்றான்; அவர் ஆண்ட நாடுகளைக் கவர்ந்தான். மாளுவநாட்டு மன்னனும் அவனடி பணிந்தான். புலிகேசன் பெற்ற வெற்றிகளால் வாதாபி நகரம் ஏற்றமும் தோற்றமும் அடைந்தது.

நரசிம்மனும் புலிகேசனும்

அக்காலத்தில் நரசிம்மன் என்னும் பல்லவ மன்னன் காஞ்சி மாநகரில் அரசு புரிந்தான். அவனையும் வெல்லக் கருதிப் படையெடுத்தான் புலிகேசன். அப்போது பல்லவன் சேனை விரைந்து எழுந்தது; சாளுக்கியப் படையை மணி மங்கலத்திலே தாக்கிற்று. பல்லவப் படையின் வேகத்தைக் கண்ட புலிகேசன் பின்வாங்கினான்; வாதாபியை நோக்கித் திரும்பினான்.

படைத்தலைவர்-பரஞ்சோதியார்

மண்ணாசை பிடித்த புலிகேசனை நொறுக்கி, அவன் படைச் செருக்கை அழித்தாலன்றித் தமிழ் நாட்டார் அச்சமின்றி வாழுமாறில்லை என்பதை அறிந்தான் நரசிம்மன்; பரஞ்சோதி என்னும் பெருஞ் சேனாதிபதியுடன் கலந்தான். "காட்டைக் கலக்கி வேட்டையாடுதல் போன்று புலிகேசனை அவன் நாட்டிற்போந்து அடித்து முடித்தல் வேண்டும்" என்று பரஞ்சோதியார் கூறினார். 'அப்படியே செய்க' எனப் பணித்தான் அரசன். தமிழ்ப் படை திரண்டு எழுந்தது. பரஞ்சோதியார் அப்படையின் தலைவராகப் போர்க்களிற்றின் மீதேறிப் புறப்பட்டார்.

படையெடுப்பு

பல்லவன் படை தன் நாட்டை நோக்கி வரும் பான்மையை ஒற்றர் வாயிலாக அறிந்தான் புலிகேசன்; ஏளனம் பேசினன்; "மாமல்லன் மதியிழந்தான்" என்றான். "பல்லவக் காக்கைகள் பல்லாயிரம் வந்தாலும் வாதாபிக் கோட்டையின் ஒரு கல்லை அசைக்க முடியுமா?" என்று அசதியாடினான். அது கேட்ட அமைச்சர் முதலியோர் ஆரவாரித்தனர். வாதாபியில் வீரர் ஆடிப்பாடி அகமகிழ்ந்தார்கள்; கள்ளுண்டு களித்திருந்தார்கள்.

வாதாபி நகரின் புறத்து வந்திறுத்தது தமிழ்ச்சேனை. புலிகேசன் எதிர்த்தான். நெடும்பொழுது இருதிறத்தாரும் கடும்போர் புரிந்தார்கள். பரஞ்சோதியின் முன்னிற்க மாட்டாது சளுக்கர் சேனை பின்னிட்டது. அது கண்ட புலிகேசன் நால்வகைச் சேனையோடும் போர்க்களத்தை விட்டுக் கோட்டையினுள்ளே போயினான்.

வலிமைசான்ற வாதாபிக் கோட்டையை வளைத்தது தமிழ்ச் சேனை. பரஞ்சோதியார் அக்கோட்டையின் மதில்களைத் தாக்கித் தகர்க்கப் பணித்தார். மலை போன்ற யானைகள் திண்ணிய மரங்களைத் துதிக்கையால் எடுத்து நெடிய மதில்களை இடித்தன. எவ்வகைப் பண்டமும் கோட்டையின் உள்ளே செல்லாதபடி காலாட்படைகள் கண்ணும் கருத்துமாய்க் காவல் புரிந்தன. சில நாளில் கோட்டை இடிந்தது. உள்ளேயிருந்த புலிகேசனது மறப்படை கடுமையாக எதிர்த்தது. ஆயினும் மடைதிறந்த கடல்போல் தமிழ்ச் சேனை கோட்டையின் உள்ளே புகுந்து மாற்றாரைத் தாக்கி வென்றது. புலிகேசனும் போர்க்களத்தில் விழுந்துபட்டான்.

பரஞ்சோதியார் வெற்றி

தலைவனை இழந்த சேனை தள்ளாடத் தொடங்கிற்று. அதனை வளைத்துப் பற்றுமாறு பரஞ்சோதியின் ஆணை பிறந்தது. புலிகேசன் முப்பதாண்டுகளாகத் திரட்டி வைத்திருந்த பொன்னும் மணியும் பரஞ்சோதியார்க்கு உரியவாயின. அவற்றைக்கொண்டு அவர் தமிழ்நாட்டுக்குத் திரும்பினார்.

"பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும் இன்னனஎண் ணிலகவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார். [3]என்று அவர் வரலாறு கூறுகின்றது.

நரசிம்மன் மனமகிழ்ந்தான்; நெடும்பகை தொலைத்த பரஞ்சோதியை மனமாரப் பாராட்டினான். வாதாபி நகரத்தில் வெற்றித் தூண் நாட்டினான்; 'வாதாபி கொண்ட நரசிம்மன்' என்ற விருதுப் பெயர் பூண்டான். அது முதல் பன்னீராண்டு சாளுக்கிய நாடு அரசிழந்து அவலமாய்க் கிடந்ததென்றால் பரஞ்சோதியின் படைத்திறமைக்கு வேறு சான்றும் வேண்டுமோ?

பரஞ்சோதியே சிறுத்தொண்டர்

வாதாபியை வென்ற பரஞ்சோதியார் வீரத்தோடு சீலமும் வாய்ந்தவர். மாற்றார்முன் அடலேறுபோல் விளங்கிய அவ் வீரர் பெருமான் சிவனடியார் முன்னே தலைவணங்கித் தாழ்ந்து கைகுவித்துத் துவண்டு நின்றார். செற்றாரைச் செறுத்த வீரர், சிவனடியார் முன்னே சிறியராய் நின்று, அவர்க்கு திருஅமுது செய்வித்தலே சிறந்த அறமெனக் கொண்டார். ஆதலால் அப்பெரு வீரரைச் சிறுத் தொண்டர் என்று திருத்தொண்டர் புராணம் போற்றுகின்றது.

வாதாபி கணபதி

சோழ நாட்டிலுள்ள பழம்பதியாய திருச்செங் காட்டங்குடியிலே தோன்றினார் சிறுத்தொண்டர். அவர் சிவப்பணியைச் சிறப்பித்துத் தேவாரம் பாடிற்று. அவ்வூரில் ஒரு சின்னஞ்சிறு பிள்ளையார் கோவில் உள்ளது. அங்கு அமர்ந்தருளும் பிள்ளையார் வாதாபி கணபதி என்னும் பெயர் பெற்றுள்ளார். வாதாபி நகரத்தை நீறாக்கிய சிறுத்தொண்டரு அங்கிருந்த கணபதியை ஆதரித்தெடுத்து வந்து தம்மூரில் அமைத்தார் போலும்! இன்று வாதாபி கணபதியின் பெருமை இசையரங்கின் வாயிலாகத் தமிழ்நாடெங்கும் பரந்து நிலவுகின்றது. வாதாபி நகரத்தின் பொருட் செல்வத்தைப் பெற்றான் குலோத்துங்க வளவன்; வாதாபி கணபதியின் அருட்செல்வத்தைப் பெற்றார் சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார்.

கலிங்கம் வென்ற கருணாகரன் வட கலிங்கம்

பெருநில மன்னனாகிய குலோத்துங்க சோழன் ஒரு நாள் பாலாற்றங்கரையில் வேட்டையாடக் கருதிப் பரிவாரங் களோடு புறப்பட்டுக் காஞ்சிமாநகரை அடைந்தான்; அங்கு அரண்மனையின் ஒருபால் அமைந்த சித்திர மண்டபத்தில் சிறப்புற வீற்றிருந்தபோது சிற்றரசர் பலர் திறை செலுத்தி அவனடி பணிந்தார்கள். அந்நிலையில் வடகலிங்க நாட்டு அரசன் இருமுறை திறை செலுத்தத் தவறினான் என்பதை அறிந்தான் மன்னர் மன்னன்; உடனே படைத்தலைவரை நோக்கி,"வடகலிங்கன் வலிமையற்றவன்; ஆயினும் அவன் நாட்டு மலையரண் வலிமை சான்றது. நமது படை இன்றே எழுந்து அக்குன்றுக் கோட்டையை இடித்துக் கலிங்கனையும் பிடித்து வருக" எனப் பணித்தான்.

படைத்தலைவன் - கருணாகரன்

அப் பணி தலைமேற்கொண்டான் கருணாகரன் என்னும் தானைத் தலைவன். அவன் பல்லவ குலத்துதித்த பெருவீரன்; வண்டையர் கோமகன்; தொண்டைமான் என்ற பட்டம் பெற்றவன். அவன் தலைமையில் எழுந்தது தமிழ்ப் பெருஞ்சேனை; பல ஊரும் ஆறும் கடந்து கலிங்க நாட்டிற் புகுந்தது. சேனை சென்ற இடமெல்லாம் மதில் இடிந்தது; புகை எழுந்தது; பொழில் அழிந்தது; படை படையென்று குடிகள் பதறி ஓடினர்; "ஒருவர் ஒருவர்மேல் வீழ்ந்து வடநாடர் அருவர் அருவர்என அஞ்சி" அரசனிடம் சென்று முறையிட்டனர்.

கலிங்கப் போர்

அது கேட்ட அரசன் ஆவேசமுற்று எழுந்தான்; "குலோத்துங்கனுக்கு நான் எளியனேயாயினும் அவன் படைக்கு இளைத்தவனோ?" என்று கூறி நகைத்தான்; "என்னுடைய தோள்வலியும் வாள்வலியும் அறியாது இங்கு அமைந்த கடலரணும் கருதாது எழுந்த சேனையை இன்னே பொருதழிப்பேன்" என்று புறப்பட்டான்.

தமிழர் வெற்றி வெற்றி பெற்ற தமிழ்ச் சேனை வீர முழக்கத்தோடு மீண்டது. கலிங்க நாட்டிற் கவர்ந்த பொருள்களையெல்லாம் குலோத்துங்கன் அடிகளில் வைத்து வணங்கினான் கருணாகரன்.

"கடற்கலிங்கம் எறிந்துசயத் தம்பம் நாட்டிக் கடகரியும் வயமாவும் தனமும் கொண்டு சுடர்க்கதிர்வாள் அபயனடி அருளி னோடும் சூடினான் வண்டையர்கோன் தொண்டை மானே."[7]

இத்தகைய வீரப் புகழ் வாய்ந்த கருணாகரத் தொண்டைமானை ஈன்ற பெருமை சோழநாட்டு வண்டாழஞ்சேரி என்னும் சிற்றூருக்கு உரியது. அவ்வூர்ப் பெயர் வண்டை என மருவி வழங்கிற்று. ஆதலால், கலிங்க மெறிந்த கருணாகரனை 'வண்டையர் கோன் தொண்டை மான்' என்று தமிழ்க் கவிதை புகழ்ந்து மகிழ்ந்தது.

கடலாண்ட காவலர்

சேரன் காலாட்படை

தமிழ் நாட்டு மூவேந்தரும் நிலப்படையோடு கப்பற் படையும் உடையராய் இருந்தனர். சேரநாட்டை யாண்ட செங்குட்டுவன் கப்பற்படையின் வலிமையால் பகைவரை வென்று "கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்" என்று புகழ் பெற்றான். அவன் தந்தையாகிய நெடுஞ்சேரலாதன் கலப்படையெடுத்துக் கடம்பர் என்ற கடற்பகைவரை வென்றான்.

கடற் கடம்பர்

இப்பேரரசர் இருவரும் தமிழ் நாட்டு வாணிக வளத்தைப் பாதுகாக்கக் கருதியே கடற்போர் புரிந்தனர் என்று தோற்றுகின்றது. அவர் காலத்தில் கடல் வழியாக நிகழ்ந்த வர்த்தகத்தால் சேரநாடு சாலவும் வளமுற்றிருந்தது. அந் நாட்டில் அமைந்த முசிறி என்னும் துறைமுகம் உலகறிந்த நகரமாய் விளங்கிற்று. யவன நாட்டிலிருந்தும், அரேபியாவிலிருந்தும், எகிப்து நாட்டிலிருந்தும் வர்த்தகக் கப்பல்கள் வந்த வண்ணமாயிருந்தமையால், அத் துறை, "வளங்கெழு முசிறி" யாக விளங்கிற்று. ஆயினும், கடற்கொள்ளை அங்கு அடிக்கடி நிகழ்ந்துவந்தது. மேல் கடலின் இடையே அமைந்த வெள்ளைத் தீவைத் தம் இருப்பிடமாகக் கொண்டனர் இக் கொள்ளைக்காரர். அவர் அடித்த வழிப்பறியால் சேரமன்னர் ஆட்சிக்கு இழுக்குண்டாயிற்று. கலமேறிய சரக்கு கரை சேர வேண்டுமே என்ற கவலை வர்த்தகர் மனதைக் கலக்கியது. இவ்வாறு கடற் கொள்ளையடித்துச் சேர நாட்டுக்குக் கேடிழைத்தவர் கடம்பர். அக் கள்வரை ஒறுத்து, அவர் கலங்களை அறுத்துச் சேரலாதனும் செங்குட்டுவனும் வர்த்தக வளத்தினைப் பாதுகாத்தனர்.

சோழர் கடலாட்சி

சோழநாட்டுக் கப்பற்படையும் சாலப் பழமை வாய்ந்தது. கரிகால்வளவன் காலத்திற்கு முன்னே காவிரி நாட்டை யாண்ட சோழன் ஒருவன் கடலாட்சி புரிந்தான் என்பது ஒரு பழம்பாட்டால் விளங்குகின்றது. கடற்காற்றை ஏவல் கொண்டு கப்பலோட்டிய அக் காவலனை,

"நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன்" என்று புகழ்ந்தது தமிழ்க்கவிதே.

திருமாவளவன்

இமயமலையிற் புலிக்கொடியேற்றிப் புகழ்பெற்ற திருமாவளவன் இலங்கையிலும் அக்கொடியை நாட்ட விரும்பினான்; கலப்படை எடுத்தான்; கடல் கடந்தான்; இலங்கை அரசனோடு போர் புரிந்து வென்றான்; பன்னீராயிரம் சிங்களவரைச் சிறை செய்து தமிழ் நாட்டிற்குத் திரும்பினான் என்று இலங்கைப் பழங்கதை கூறுகின்றது.

சில நூற்றாண்டுகள் சென்றன. தஞ்சையைத் தலைநகராக்க் கொண்ட சோழர் குலம் தலை எடுத்தது. அவர்க்குரிய நிலப்படையும் கலப்படையும் வலுப்பட்டன. பராந்தகசோழன் இலங்கையின்மீது படையெடுத்தான்; சிங்களச் சேனையை வென்றான்; அரசனைக் கொன்றான்; சிங்களாந்தகன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றான்.

இராஜ ராஜன்

அச்சோழன் வழி வந்த பெருவேந்தன் இராஜராஜன். அவனும் கடலாட்சியில் கருத்தூன்றினான்; கப்பற் படையைச் செப்பம் செய்தான்; தமிழ்க்கடல் முழுதும் தானே ஆளக் கருதினான்; சேர மன்னனுக்குரிய கப்பற்படை நிலையத்தைக் கடல் வழியாகச் சென்று தாக்கினான். காந்தளூர்ச் சாலையின் அருகே இரு திறத்தார்க்கும் கடற்போர் நிகழ்ந்தது. சோழன் வெற்றி பெற்றான்; கடலாதிக்கத்திற்கு அடிகோலினான்.

இலங்கையில் வெற்றி

தமிழகத்தைச் சேர்ந்த குணகடல், குடகடல் ஆகிய இரு கடல் ஆட்சியும் பெற்ற இராஜ ராஜன் இலங்கையின் மீது சென்றான். அத் தீவகத்தின் தலைநகரம் அநுராதபுரம். அங்கிருந்து அரசு புரிந்தான் மகிந்தன் என்னும் மன்னன். அவனைத் தாக்கினான் தமிழ் வேந்தன். தமிழ்ப் படையின் முன்னிற்கமாட்டாது ஈழப்படை உலைந்து ஓடிற்று. இலங்கை வேந்தனும் மனங்கலங்கித் தலைநகரை விட்டு அகன்றான். ஆயிரம் ஆண்டுகளாக இலங்கையின் தலை நகராயிருந்த அநுராதபுரம் அழிவுற்றது. ஈழநாட்டிலே தமிழ்க் கொடியை நாட்டினான் சோழன்; அந்நாட்டுக்கு மும்முடிச் சோழமண்டலம் என்று பெயர் இட்டான். சோழர் ஆட்சிக்கு உட்பட்ட மாகாணங்களில் அம் மண்டலமும் ஒன்றாயிற்று. கேடுற்ற அநுராதபுரத்தைக் கைவிட்டு இராஜராஜன் பொலனருவை என்னும் ஊரைத் தலைநகராக்கினான்; அங்குத் தன் வெற்றியின் சின்னமாக ஒரு சிவாலயம் கட்டினான். தமிழ் நாட்டுக் கட்டுமான முறையில் அமைந்த அக் கற்கோவில் 'சிவ தேவாலயம்' என்ற பெயரோடு இன்றும் அவ்வூரில் விளங்குகின்றது.

இராஜேந்திரன்

இவ்வாறு சோழ மன்னன் இலங்கையைத் தமிழ் நாட்டுடன் இணைத்து ஆள விரும்பினானெனினும் ஈழத்தரசன் ஊக்கம் இழந்தானல்லன்; வாகைமாலை சூடிய தமிழ் வேந்தன் திரும்பிச் சென்றதையறிந்து கரந்திருந்த இடத்தினின்றும் வெளிப்பட்டான்; பெரும் படை திரட்டினான்; சோழனது நிலப் படையைத் தாக்கினான்.

அதையறிந்தான் இராஜேந்திர சோழன். இவன் இராஜ ராஜனுடைய வீரமைந்தன். தந்தையைப் போலவே அவனும் இலங்கையின் மேற் படையெடுத்தான்; சிங்களப் படையை வென்றான்; மகிந்தனுக்குரிய மணி முடியையும் பொன் னணியையும் கவர்ந்தான்; அவனையும் சோழ நாட்டிற்குக் கொண்டு சென்றான்.

ஆயினும், இலங்கைப் போர் ஒடுங்கவில்லை. நாட்டுரிமையில் வேட்கையுற்ற இலங்கையர், மகிந்தன் மகனாகிய இளம்பாலனை மறைவிடத்தில் வைத்து வளர்த்தார்கள்; மகிந்தன் தமிழ் நாட்டில் இறந்தான் என்றறிந்தபோது அம் மைந்தனை இலங்கையில் மன்னனாக்கினார்கள். அது முதல் ஈழப்படைக்கும் சோழப்படைக்கும் நெடும்போர் நிகழ்ந்த்து. ஈழத்தரசர் பாண்டிய மன்னரோடு உறவுகொண்டார்கள். ஆயினும் தமிழ் நாட்டில் சோழர் ஆதிக்கம் நிலைகுலையும் அளவும் இலங்கையில் புலிக்கொடி பறந்து கொண்டிருந்தது.

கடாரம் கொண்ட சோழன்

இன்னும், கடல் சூழ்ந்த பல நாடுகளையும் வென்று வீரப்புகழ் பெற்று விளங்கினர் சோழ மன்னர். இந்து மகா சமுத்திரம் என இந்நாளில் வழங்கும் பெருங்கடலில் வளமார்ந்த தீவங்கள் பல உண்டு. அவற்றுள் பன்னீராயிரம் பழந் தீவுகளை இராஜராஜன் கடற்படையால் வென்று கைப்பற்றினான். அவன் மைந்தன் இராஜேந்திரன் "அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்திய" பேரரசன். நிக்கபார் என்று இக்காலத்தில் வழங்கும் மாநக்கவாரம் அப்பொழுது தேனடைந்த சோலைத் தீவகமாய் விளங்கிற்று. அதைக் கைக்கொண்டான் இராஜேந்திரன். இன்னும் சாவக நாட்டை யடுத்துள்ள சுமத்திரா என்னும் தீவிலும் முற்காலத்தில் தமிழர் வாழ்ந்தார்கள் என்பதற்கு ஊர்ப் பெயர்கள் ஒரு சான்று. மலையூர் என்பது இங்கே சிறந்திருந்த ஓர் ஊர். அவ்வூரைத் தன்னகத்தேயுடைய நாட்டுப் பகுதியும் மலையூர் என்று பெயர் பெற்றது.

அந்நிலப் பகுதியில் ஓடிய ஆறும் மலையூர் எனப்பட்டது. எனவே, ஆதியில் தமிழர் ஊருக்கமைந்த பெயர், பின்னர் நாட்டுக்கும் நதிக்கும் முறையே அமைந்ததென்று தோன்றுகின்றது. அத்தீவகத்திலுள்ள மற்றோர் ஊரின் பழம் பெயர் பண்ணை என்பது. இப்பொழுது அச்சொல் பன்னி என்றும், பனி என்றும் மருவியுள்ளது. இவ்வூர்களையுடைய தீவகத்தை இராஜேந்திரன் கப்பற்படையால் வென்று கைக்கொண்டான்

மலைவளம் சுரக்கும் மலாய் நாட்டிலும் தமிழர் வாழ்ந்த இடங்களை அவற்றின் பெயர்களே காட்டும். காழகம் என்பது அந்நாட்டின் ஒரு பகுதி. பழங்காலத்தில் காழகத்தில் விளைந்த பொருள் கடல்வழியாகக் காவிரிப் பூம்பட்டினத்தில் வந்து இறங்கியது. அதுவே கடாரம் என்றும், கேடம் என்றும் நாளடைவில் மருவி வழங்குவதாயிற்று. இப்பொழுது கெடா என்ற பெயரால் குறிக்கப்படும் நாடு அதுவே. இன்னும், தக்கோலம் என்பது மலாய் நாட்டிலுள்ள ஓர் ஊரின் பெயர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அங்குத் தமிழர் வர்த்தக வளம் பெற்று வாழ்ந்தார் என்பது சாசனத்தால் விளங்கும். இவ்வூர் தக்கோபா என்று இக்காலத்தில் வழங்கும்.

இராஜேந்திரசோழன் கடாரம் முதலிய நாடுகளைக் கப்பற்படையால் வென்றான்; அவ்வெற்றிச் சிறப்பு விலங்கும் வண்ணம் 'கடாரம் கொணடான்' என்னும் விருதுப் பெயரும் பூண்டான். கலப்படைத் திறத்தால் கடலாண்ட அக் காவலனை,

"தேனக்க வார்பொழில் மாநக்க வாரமும் தொடுகடற் காவல் கடுமுரண் கடாரமும் மாப்பொரு தண்டாற் கொண்டகோப் பரகேசரி"என்று சாசனம் பாடிற்று.

ஆகாய விமானம்

ஆகாய விமானமும் தமிழ் இலக்கியத்திலே குறிக்கப்படுகின்றது. விமானத்தை வானஊர்தி என்றும், அதனைச் செலுத்தும் பாகனை வலவன் என்றும் அழைத்தனர் பழந் தமிழர். காட்சிக்கினிய மயில் வடிவத்தில் அமைந்த ஒரு விமானத்தின் மாட்சியைச் சிந்தாமணி கூறுகின்றது. அதன் விசையை வலப்புறமாகக் கைவிரலால் அசைத்தால் விமானம் கிளர்ந்தெழுந்து பறக்கும்; மேக மண்டலத்துக்கு மேலும் செல்லும்; இடப்புறமாக அசைத்தால் கால் குவித்து இறங்கித் தரையிலே நிற்கும்.

இத்தகைய விமானத்தை இயக்கக் கற்றிருந்தாள் ஒரு மங்கை; அவள் கணவன் ஓர் அரசன். அவனைத் தாக்கினார் பகைவர். கருவுற்றிருந்த அரசியை மயில் விமானத்தில் ஏற்றி வெளியேற்றினான் மன்னன். கணவன் கருத்தை மறுக்க மாட்டாமல் அப் பொறியை இயக்கினாள் அப் பாவை அவள் கரம் விசையில் இருந்தாலும் மனம் கணவனையே நோக்கிற்று. மயில் முன்னே இழுக்க, மனம் பின்னே இழுக்க, ஒருவாறு பறந்து கொண்டிருந்தாள் அவள். அந்நிலையில் பகைவரது வெற்றி முரசம் அதிர்ந்தது. மங்கை கலங்கினாள்; கை சோர்ந்தாள. இயக்கமிழந்த விமானம் கீழ்நோக்கிச் சென்றது' ஒரு மயானத்தில் விழுந்தது. அதிர்ச்சியால் மயக்கமுற்றுக் கிடந்த மாதரசி அங்கு ஓர் ஆண் மகவைப் பெற்றாள். அவனே சீவகன்; சிந்தாமணியின் கதாநாயகன்.

தூங்கெயில் ஆகாயத்தில் பறந்து செல்லும் கோட்டை போன்ற பெரிய விமானமும் அந்நாளில் இருந்ததாகத் தெரிகின்றது. தூங்கெயில் என்பது அதன் பெயர். தூங்கெயில் ஊர்ந்து துயர் விளைத்த கொடும் பகைவரை வென்றான் ஒரு சோழ மன்னன்; அவரது ஆகாயக் கோட்டையைத் தகர்த் தெறிந்தான்; "தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்" என்று தமிழகம் அவனை வியந்து புகழ்ந்தது. எப்படையால் அவன் ஆகாயக் கோட்டையைத் தகர்த்தான் என்பது இப்பொழுது தெரியவில்லை. எனினும், புலவர் பாடும் புகழுடைய பழந்தமிழ் வேந்தருள் அவன் தலைசிறந்தவன் என்பதில் ஐயமில்லை.

ஆசிரியர் - ரா.பி. சேதுபிள்ளை

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

3.25925925926
நெவிகடிஒன்
Back to top