பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அன்புடைமை

அன்புடைமை எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இல்லறவியல்

அன்புடைமை

71 அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ-அன்பிற்கும் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் உளதோ; ஆர்வலர் புன்கண் நீர் பூசல் தரும்-தம்மால் அன்பு செய்யப்பட்டாரது துன்பம் கண்டுழி அன்புடையார் கண்பொழிகின்ற புல்லிய கண்ணீரே உள் நின்ற அன்பினை எல்லாரும் அறியத் தூற்றும் ஆதலான்.

விளக்கம்

(உம்மை சிறப்பின்கண் வந்தது. ஆர்வலரது புன்மை., கண்ணீர்மேல் ஏற்றப்பட்டது. காட்சியளவைக்கு எய்தாதாயினும் அனுமான் அளவையான் வெளிப்படும் என்பதாம். இதனால் அன்பினது உண்மை கூறப்பட்டது.) ---

72 அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர்-அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானும் தமக்கே உரியர்; அன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர்-அன்புடையார் அவற்றானே அன்றித் தம் உடம்பானும் பிறர்க்கு உரியர்.

விளக்கம்

(ஆன் உருபுகளும் பிரிநிலை ஏகாரமும் விகாரத்தால் தொக்கன. 'என்பு' ஆகு பெயர். என்பும் உரியராதல் "தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்கோன்" (புறநா.43) முதலாயினார்கண் காண்க.) ---

.73 ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு - பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை; அன்போடு இயைந்த வழக்கு என்ப-அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்.

விளக்கம்

(பிறப்பினது அருமை பிறந்த உயிர்மேல் ஏற்றப்பட்டது. 'இயைந்த' என்பது உபசார வழக்கு; ஆகுபெயர். உடம்போடு இயைந்தல்லது அன்பு செய்யலாகாமையின், அது செய்தற் பொருட்டு இத்தொடர்ச்சி உளதாயிற்று என்பதாம். ஆகவே இத் தொடர்ச்சிக்குப் பயன் அன்புடைமை என்றாயிற்று.) --

74 அன்பு ஆர்வமுடைமை ஈனும் ஒருவனுக்குத் தொடர்புடையார் மாட்டுச் செய்த அன்பு அத்தன்மையால் பிறர் மாட்டும் விருப்பமுடைமையைத் தரும்; அது நண்பு என்னும் நாடாச் சிறப்பு ஈனும்-அவ்விருப்பமுடைமைதான் இவற்குப் பகையும் நொதுமலும் இல்லையாய் யாவரும் நண்பு என்று சொல்லப்படும் அளவிறந்த சிறப்பினைத் தரும்.

விளக்கம்

(உடைமை, உடையனாம் தன்மை. யாவரும் நண்பாதல் எல்லாப் பொருளும் எய்துதற்கு ஏதுவாகலின், அதனை 'நாடாச் சிறப்பு' என்றார்.) ---

.75 அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப-அன்புடையராய் இல்லறத்தோடு|க்ஷ் பொருந்திய நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்; வையகத்து இன்பு உற்றார் எய்தும் சிறப்பு-இவ்வுலகத்து இல்வாழ்க்கைக்கண் நின்று, இன்பம் நுகர்ந்து, அதன்மேல் துறக்கத்துச் சென்று எய்தும் பேரின் பத்தினை.

விளக்கம்

('வழக்கு' ஆகுபெயர். இல்வாழ்க்கைக்கண் நின்று மனைவியோடும் மக்களோடும் ஒக்கலோடும் கூடி இன்புற்றார் தாம் செய்த வேள்வித்தொழிலால் தேவராய் ஆண்டு இன்புறுவர் ஆகலின், 'இன்புற்றார் எய்தும் சிறப்பு' என்றார். தவத்தால் துன்புற்று எய்தும் துறக்க இன்பத்தினை. ஈண்டு இன்புற்று எய்துதல் அன்பானன்றி இல்லை என்பதாம்.) ---

76 அன்பு சார்பு அறத்திற்கே என்ப அறியார்-அன்பு துணையாவது அறத்திற்கே என்று சொல்லுவர் சிலர் அறியார்; மறத்திற்கம் அஃதே துணை-ஏனை மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது.

விளக்கம்

(ஒருவன் செய்த பகைமைப்பற்றி உள்ளத்து மறம் நிகழ்ந்துழி, அவனை நட்பாகக் கருதி அவன்மேல் அன்புசெய்ய அது நீங்குமாகலின், மறத்தை நீக்குதற்கும் துணையாம் என்பார், 'மறத்திற்கும் அஃதே துணை' என்றார்; 'துன்பத்திற்கு யாரே துணையாவார்' (குறள் 1299) என்புழிப்போல. இவை ஐந்து பாட்டானும் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.) ---

77 என்பு இலதனை வெயில் போலக் காயும்-என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக் காயும்; அன்பு இலதனை அறம்-அன்பில்லாத உயிரை அறக்கடவுள்.

விளக்கம்

('என்பிலது' என்றதனான் உடம்பு என்பதூஉம், 'அன்பிலது' என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம். வெறுப்பு இன்றி எங்கும் ஒரு தன்மைத்து ஆகிய வெயிலின்முன் என்பில்லது தன் இயல்பாற் சென்று கெடுமாறுபோல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின்முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம். அதனைக் 'காயும்' என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார், அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு ''அல்லவை செய்தற்கு அறம் கூற்றம்''(நான்மணிக்.83) எனப் பிறரும் கூறினார்.) ---

78 அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை-மனத்தின்கண் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல்; வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று-வன்பாலின்கண் வற்றல் ஆகிய மரம் தளிர்த்தாற் போலும்.

விளக்கம்

(கூடாது என்பதாம். வன்பால்-வல்நிலம். வற்றல் என்பது பால் விளங்கா அஃறினைப் படர்க்கைப் பெயர்.) ---

79 யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு-யாக்கை யகத்தின்கண் நின்ற (இல்லறத்திற்கு) உறுப்பாகிய அன்புடையர் அல்லாதார்க்கு; புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும்-ஏனைப் புறத்தின்கண் நின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ்செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்!

விளக்கம்

(புறத்து உறுப்பாவன: இடனும், பொருளும், ஏவல் செய்வாரும் முதலாயின. துணையொடு கூடாதவழி அவற்றால் பயன் இன்மையின், 'எவன் செய்யும்' என்றார். உறுப்புப் போறலின் 'உறுப்பு' எனப்பட்டன. 'யாக்கையின் கண் முதலிய உறுப்புகள் எல்லாம் என்ன பயனைச் செய்யும், மனத்தின்கண் உறுப்பு ஆகிய அன்பு இல்லாதார்க்கு' என்று உரைப்பாரும் உளர். அதற்கு இல்லறத்தோடு யாதும் இயைபு இல்லாமை அறிக.) ---

80 அன்பின் வழியது உயிர்நிலை-அன்பு முதலாக அதன் வழி நின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாவது; அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த-அவ்வன்பு இல்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலால் போர்த்தன ஆம்; உயிர் நின்றன ஆகா.

விளக்கம்

(இல்லறம் பயவாமையின், அன்ன ஆயின. இவை நான்கு பாட்டானும் அன்பு இல்வழிப் படும் குற்றம் கூறப்பட்டது.) --

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.35714285714
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top