பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இகல்

இகல் எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அங்கவியல்

இகல்

851. எல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை, பாரிக்கும் நோய் - எல்லா உயிர்கட்கும் பிற உயிர்களோடு கூடாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் குற்றம்; இகல் என்ப - இகல் என்று சொல்லுவர் நூலோர்.

விளக்கம்

(மக்களையும் விலங்குகளோடு ஒப்பிப்பது என்பது தோன்ற 'எல்லா உயிர்க்கும்' என்றும், பகுதிக்குணத்தை இடைநின்று விளைத்தலின் 'பகல் என்னும் பண்பு இன்மை' என்றும் கூறினார். நற்குணம் இன்மை அருத்தாபத்தியால் தீக்குணமாயிற்று. இதனான் இகலது குற்றம் கூறப்பட்டது.) ---

852. பகல் கருதிப் பற்றா செயினும் - தம்மொடு கூடாமையைக் கருதி ஒருவன் வெறுப்பன செய்தானாயினும்; இகல் கருதி இன்னாசெய்யாமை தலை - அவனொடு மாறுபடுதலைக் குறித்துத் தாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமை உயர்ந்தது.

விளக்கம்

(செய்யின் பகைமை வளரத் தாம் தாழ்ந்து வரலானும், ஒழியின் அப்பற்றாதன தாமே ஓய்ந்து போகத் தாம் ஓங்கி வரலானும், 'செய்யாமை தலை' என்றார். 'பற்றாத' என்பது விகாரமாயிற்று) ---

853. இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் தன் மனத்தினின்று நீக்குமாயின்; தவல் இல்லாத் தாவில் விளக்கம்தரும் - அவனுக்கு அந்நீக்குதல் எஞ்ஞான்றும் உளனாதற்கும் ஏதுவாய புகழைக் கொடுக்கும்.

விளக்கம்

(தகவல் இல்லாமை, அருத்தாபத்தியான் அப்பொருட்டாயிற்று. தாஇல்

விளக்கம்

வெளிப்படை. யாவரும் நண்பராவர்; ஆகவே, எல்லாச் செல்வமும் எய்திக் கொடை முதலிய காரணங்களால் புகழ் பெறும் என்பதாம்.) ---

854. இகல் என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க துன்பம் ஒருவனுக்கு இல்லையாயின்; இன்பத்துள் இன்பம் பயக்கும் - அவ்வின்மை அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தினைக் கொடுக்கும்.

விளக்கம்

(துன்பத்துள் துன்பம் - பலரொடு பொருது வலி தொலைதலான் யாவர்க்கும் எளியனாயுறுவது. அதனை இடையின்றியே பயத்தலின், 'இகல் என்னும்' என்றார். இன்பத்துள் இன்பம் - யாவரும் நட்பாகலின் எல்லாப் பயனும் எய்தியுறுவது.) ---

855. இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை - தம் உள்ளத்து 'மாறுபாடு தோன்றியவழி அதனை ஏற்றுக் கொள்ளாது சாய்ந்தொழுக வல்லாரை; மிகல் ஊக்கும் தன்மையவர்யார் - வெல்லக்கருதும் தன்மையுடையார் யாவர்?

விளக்கம்

(இகலை ஒழிந்தொழுகல் வேந்தர்க்கு எவ்வாற்றானும் அரிதாகலின், 'வல்லாரை' என்றும், யாவர்க்கும் நண்பாகலின் அவரை வெல்லக் கருதுவார் யாவரும் இல்லை என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் இகலாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.) ---

856. இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை - 'பிறரொடு மாறுபடுதற்கண் மிகுதல் எனக்கு இனிது' என்று அதனைச் செய்வானது உயிர் வாழ்க்கை; தவலும் கெடலும் நணித்து - பிழைத்தலும் முற்றக் கெடுதலும் சிறிது பொழுதுள் உளவாம்.

விளக்கம்

(மிகுதல் - மேம்மேல் ஊக்குதல். 'இனிது' என்பது தான் வேறல் குறித்தல். பிழைத்தல் - வறுமையான் இன்னாதாதல். முற்றக் கெடுதல் - இறத்தல். இவற்றால் 'நணித்து என்பதனைத் தனித்தனி கூட்டி, உம்மைகளை எதிரதும் இறந்தது தழீஇய எச்சவும்மைகளாக உரைக்க. பொருட்கேடும் உயிர்க்கேடும் அப்பொழுதே உளவாம் என்பதாம்.) ---

857. இகல் மேவல் இன்னா அறிவினவர் - இகலோடு மேவுதலையுடைய இன்னாத அறிவினையுடையார்; மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார் - வெற்றி பொருந்துதலையுடைய நீதி நூற்பொருளை அறியமாட்டார்.

விளக்கம்

(இன்னா - அறிவு - தமக்கும் பிறர்க்கும் தீங்கு பயக்கும் அறிவு. வெற்றி - வழி நின்றார்க்கு உளதாவது. காணப்படும் பயத்ததாகலின் 'மெய்ந்நூல்' னப்பட்டது. இகலால் அறிவு கலங்குதலின், 'காணார்' என்றார். இவை இரண்டு பாட்டானும் இகலினார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.) ---

858. இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் - தன் உள்ளத்து மாறுபாடு தோன்றிவழி அதனை எதிர்தலையொழிதல் ஒருவனுக்கு ஆக்கம் ஆம்; அதனை மிகல் ஊக்கின் கேடு ஊக்குமாம் - அது செய்யாது அதன் கண் மிகுதலை மேற்கொள்வானாயின் கேடும் தன்கண் வருதலை மேற்கொள்ளும்.

விளக்கம்

(எதிர்தல் - ஏற்றுக் கோடல். சாய்ந்த பொழுதே வருதலின், சாய்தல் ஆக்கம் என்றார். 'இகலிற்கு' எனவும், 'அதனை' எனவும் வந்தன வேற்றுமை மயக்கம்.) ---

859. ஆக்கம் வருங்கால் இகல் காணான்= ஒருவன் தன்கண் ஆக்கம் வரும்வழிக் காரணமுண்டாயினும் இகலை நினையான்; கேடு தரற்கு அதனை மிகல் காணும்= தனக்குக் கேடு செய்துகோடற்கண் காரணம் இன்றியும் அதன்கண் மிகுதலை நினைக்கும்.

விளக்கம்

இகலான் வரும் கேடு பிறரான் அன்று என்பது தோன்றத் 'தரற்கு' என்றார். நான்காவதும் இரண்டாவதும் ஏழாவதன்கண் வந்தன. ஆக்கக் கேடுகட்கு முன் நடப்பன, இகலினது இன்மை, உண்மைகள் என்பதாம்.

860. இகலான் இன்னாத எல்லாம் ஆம் ஒருவனுக்கு- மாறுபாடு ஒன்றானே இன்னாதன எல்லாம் உளவாம்; நகலான் நன்னயம் என்னும் செருக்கு ஆம் - நட்பு ஒன்றானே நல்ல நீதி என்னும் பெருஞ்செல்வம் உளதாம்.

விளக்கம்

(இன்னாதன - வறுமை, பழி, பாவம் முதலாயின. நகல் - மகிழ்தல். 'நகல்' என்பதூஉம் 'செருக்கு' என்பதூஉம் தத்தம் காரணங்கட்கு ஆயின. 'நயம் என்னும் செருக்கு' எனக் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். இவை மூன்று பாட்டானும் அவ்விருமையும் கூறப்பட்டன.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.08695652174
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top