பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கேள்வி

கேள்வி எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அரசியல்

கேள்வி

411. செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் - ஒருவருக்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வரும் செல்வம்; அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை - அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றினும் தலையாகலான்.

விளக்கம் (செவியான் வரும் செல்வம் - கேள்வியால் - எல்லாப் பொருளையும் அறிதல். பிற செல்வங்கள் - பொருளால் வருவன. அவை நிலையா ஆகலானும், துன்பவிளைவின ஆகலானும், இது தலையாயிற்று. அவற்றை ஒழித்து இதனையே செய்க என்பது குறிப்பெச்சம்.) ---

412. செவிக்கு உணவு இல்லாத போழ்து - செவிக்கு உணவாகிய கேள்வி இல்லாத பொழுது; வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும் - வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.

விளக்கம் (சுவை மிகுதியும் பிற்பயத்தலும் உடைய கேள்வி உள்ளபொழுது வெறுக்கப்படுதலான் 'இல்லாத போழ்து' என்றும், பெரிதாயவழித் தேடல் துன்பமே யன்றி நோயும் காமமும் பெருகுதலான் 'சிறிது' என்றும், அதுதானும் பின்இருந்து கேட்டற்பொருட்டாகலான் 'ஈயப்படும்' என்றும் கூறினார். ஈதல், வயிற்றது இழிவு தோன்ற நின்றது. இவை இரண்டு பாட்டானும் கேள்வியது சிறப்புக் கூறப்பட்டது.) ---

413. செவி உணவின் கேள்வி உடையார் - செவியுணவாகிய கேள்வியினை உடையார்; நிலத்து அவியுணவின் ஆன்றாரொடு ஒப்பர் - நிலத்தின்கண்ணர் ஆயினும் அவியுணவினையுடைய தேவரொடு ஒப்பர். விளக்கம் (செவி உணவு: செவியான் உண்ணும் உணவு. அவ்வழிக்கண் வந்த இன் சாரியையது னகரம் வலிந்து நின்றது. அவியாகிய உணவு - தேவர்க்கு வேள்வித் தீயில் கொடுப்பன. அறிவான் நிறைந்தமையான் 'ஆன்றார்' என்றும், துன்பம் அறியாமையான் 'தேவரொடு ஒப்பர்' என்றும் கூறினார். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.) ---

414. கற்றிலன் ஆயினும் கேட்க - உறுதி நூல்களைத் தான் கற்றிலன் ஆயினும், அவற்றின் பொருள்களைக் கற்றறிந்தார் சொல்லக் கேட்க; அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை - அக்கேள்வி ஒருவனுக்குத் தளர்ச்சி வந்துழிப் பற்றுக் கோடாம் துணை ஆகலான்.

விளக்கம் ('உம்மை' கற்க வேண்டும் என்பது பட நின்றது. தளர்ச்சி - வறுமையானாதல் அறிவின்மையானாதல் இடுக்கண்பட்டுழி மனம் தளர்தல். அதனைக் கேள்வியினானாய அறிவு நீக்கும் ஆகலின், 'ஊற்றாம் துணை' என்றார். 'ஊன்று' என்னும் ஆகுபெயரின் னகரம் திரிந்து நின்றது.) ---

415. இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்று - வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்றுகோல் போல உதவும்; ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் - காவற் சாகாடு உகைப்பார்க்கு ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள்.

விளக்கம் (அவாய்நிலையான் வந்த உவமையடையால் பொருள் அடை வருவிக்கப்பட்டது. ஊற்றாகிய கோல் போல உதவுதல் - தளந்துழி அதனை நீக்குதல். கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார் அறிவிலராகலின், அவர் வாய்சொல் கேட்கப்படாது என்பதுதோன்ற, 'ஒழுக்கமுடையார் வாய் சொல்' என்றார். 'வாய்' என்பது தீச்சொல் அறியாமையாகிய சிறப்புணர நினறது. 'அவற்றைக் கேட்க' என்பது குறிப்பெச்சம்.) ---

416. எனைத்தானும் நல்லவை கேட்க - ஒருவன் சிறிதாயினும் உறுதிப் பொருள்களைக் கேட்க; அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் - அக்கேள்வி அத்துணையாயினும் நிறைந்த பெருமையைத் தரும் ஆகலான்.

விளக்கம்

('எனைத்து', 'அனைத்து' என்பன கேட்கும் பொருள்மேலும் காலத்தின்மேலும் நின்றன. அக்கேள்வி மழைத் துளைபோல வந்து ஈண்டு எல்லா அறிவுகளையும் உள ஆக்கலின், 'சிறிது' என்று இகழற்க என்பதாம்.) ---

417. பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்வார் - பிழை உணர்ந்த வழியும், தமக்குப் பேதைமை பயக்குஞ் சொற்களை சொல்லார்; இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர் - பொருள்களைத் தாமும் நுண்ணியதாக ஆராய்ந்தறிந்து அதன்மேலும் ஈண்டிய கேள்வியினை உடையார்.

விளக்கம்

('பிழைப்பு' என்பது திரிந்து நின்றது. பேதைமை: ஆகுபெயர். ஈண்டுதல்: பலவாற்றான் வந்து நிறைதல். பொருள்களின் மெய்ம்மையைத் தாமும் அறிந்து, அறிந்தாரோடு ஒப்பிப்பதும் செய்தால் தாமத குணத்தான் மயங்கினர் ஆயினும், அவ்வாறல்லது சொல்லார் என்பதாம். இவை நான்கு பாட்டானும் கேட்டார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.) ---

418. கேட்பினும் கேளாத் தகையவே - தம் புலமாய ஓசை மாத்திரத்தைக் கேட்கும் ஆயினும் செவிடாம் தன்மையவேயாம். கேள்வியால் தோட்கப்படாத செவி - கேள்வியால் துளைக்கப்படாத செவிகள்.

விளக்கம்

(ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. ஓசை மாத்திரத்தான் உறுதி எய்தாமையின் 'கேளாத்தகைய' என்றும், மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு வழியாக்கலிற் கேள்வியைக் கருவியாக்கியும் கூறினார். 'பழைய துளை துளையன்று' என்பதாம்.) ---

419. நுணங்கிய கேள்வியர் அல்லார் - நுண்ணியதாகிய கேள்வியுடையார் அல்லாதார்; வணங்கிய வாயினர் ஆதல் அரிது - பணிந்த மொழியினை உடையராதல் கூடாது.

விளக்கம் (கேட்கப்படுகின்ற பொருளினது நுண்மை கேள்விமேல் ஏற்றப்பட்டது. 'வாய்' ஆகுபெயர். பணிந்தமொழி - பணிவைப் புலப்படுத்திய மொழி. கேளாதார் உணர்வு இன்மையால் தம்மை வியந்து கூறுவர் என்பதாம். 'அல்லால்' என்பதூஉம் பாடம்.) --

420. செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் - செவியான் நுகரப்படுஞ் சுவைகளை உணராத வாய் உணர்வினையுடைய மாந்தர்; அவியினும் வாழினும் என் - சாவினும் வாழினும் உலகிற்கு வருவது என்ன?

விளக்கம் (செவியால் நுகரப்படும் சுவைகளாவன: சொற்சுவையும் பொருள்சுவையும். அவற்றுள் சொற்சுவை குணம், அலங்காரம் என இருவகைத்து; பொருட்சுவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பது வகைத்து. அவையெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். 'வாயுணர்வு' என்பது இடைப்பதங்கள் தொக்கு நின்ற மூன்றாம் வேற்றுமைத் தொகை; அது வாயான் நுகரப்படும் சுவைகளை உணரும் உணர்வு என விரியும். அவை கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என ஆறு ஆம். செத்தால் இழப்பதும் வாழ்ந்தால் பெறுவதும் இன்மையின், இரண்டும் ஒக்கும் என்பதாம். 'வாயுணர்வின் என்று பாடம் ஓதுவாரும் உளர். இவை மூன்று பாட்டானும் கேளாதவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.21052631579
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top