பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சிற்றினஞ்சேராமை

சிற்றினஞ்சேராமை எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அரசியல்

சிற்றினஞ்சேராமை

451. பெருமை சிற்றினம் அஞ்சும் - பெரியோர் இயல்பு சிறிய இனத்தை அஞ்சாநிற்கும்; சிறுமை தான் சுற்றமாச் சூழ்ந்துவிடும் - ஏனைச் சிறியோர் இயல்பு அது சேர்ந்த பொழுதே அதனைத் தனக்குச் சுற்றமாக எண்ணித் துணியும்.

விளக்கம்

(தத்தம் அறிவு திரியுமாறும், அதனால் தமக்கு வரும் துன்பமும் நோக்கலின், அறிவுடையார் அஞ்சுவர் என்றும், அறிவு ஒற்றுமையான் பிறிது நோக்காமையின், அறிவிலாதார் தமக்குச் சுற்றமாகத் துணிவர் என்றும் கூறினார். பொருளின் தொழில்கள் பண்பின்மேல் நின்றன. இதனான் 'சிறிய இனம் பெரியோர்க்கு ஆகாது' என்பது கூறப்பட்டது.) ---

452. நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்றாகும் - தான் சேர்ந்த நிலத்தினது இயல்பானே நீர் தன் தன்மை திரிந்து அந்நிலத்தின் தன்மைதாம்; மாந்தர்க்கு இனத்து இயல்பு அறிவு (திரிந்து) அதாகும் - அதுபோல மாந்தர்க்ருத் தாம் சேர்ந்த இனத்தின் இயல்பானே அறிவும் தன் தன்மை திரிந்து அவ்வினத்தின் தன்மைத்தாம். --

விளக்கம்

(எடுத்துக்காட்டு உவமை. விசும்பின்கண் தன் தன்மைத்தாய நீர் நிலத்தோடு சேர்ந்த வழி, நிறம், சுவை முதலிய பண்புகள் திரிந்தாற்போல, தனி நிலைக்கண் தன் தன்மைத்தாய அறிவு, பிற இனத்தோடு சேர்ந்தவழிக் காட்சி முதலிய தொழில்கள் திரியும் என, இதனான் அதனது காரணங் கூறப்பட்டது.) ---

453. மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தான் ஆம் - மாந்தர்க்குப் பொது உணர்வு தம் மனம் காரணமாக உண்டாம்; இன்னான் எனப்படும்சொல் இனத்தான் ஆம் - 'இவன் இத்தன்மையன்' என்று உலகத்தாரான் சொல்லப்படும் சொல்இனம் காரணமாக உண்டாம்.

விளக்கம்

(இயற்கையாய புலன் உணர்வு மாத்திரத்திற்கு இனம் வேண்டாமையின், அதனை 'மனத்தான் ஆம்' என்றும், செயற்கையாய விசேட உணர்வுபற்றி நல்லன் என்றாகத் தீயன் என்றாக நிகழும் சொற்கு இனம் வேண்டுதலின், அதனை 'இனத்தான் ஆம்' என்றும் கூறினார். உவமையளவை கொள்ளாது. 'அத் திரிபும் மனத்தான் ஆம்' என்பாரை நோக்கி, இதனான் அது மறுத்துக் கூறப்பட்டது.) ---

454. அறிவு - அவ் விசேட உணர்வு; ஒருவற்கு மனத்து உளது போலக் காட்டி - ஒருவற்கு மனத்தின் கண்ணே உளதாவது போலத் தன்னைப் புலப்படுத்தி; இனத்து உளதாகும் - அவன் சேர்ந்த இனத்தின்கண்ணே உளதாம்.

விளக்கம்

(மெய்ம்மை நோக்காமுன் மனத்துளது போன்று காட்டியும், பின் நோக்கிய வழிப் பயின்ற இனத்துளதாயும் இருத்தலின், 'காட்டி' என இறந்த காலத்தால் கூறினார். 'விசேட உணர்வுதானும் மனத்தின்கண்ணே அன்றேயுளதாவது?' என்பாரை நோக்கி, ஆண்டுப் புலப்படும் துணையே உள்ளது; அதற்கு மூலம் இனம் என்பது இதனான் கூறப்பட்டது.) ---

455. மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் - (அவ்விசேட உணர்வு புலப்படுவதற்கு இடனாய) மனம் தூயனாதல் தன்மையும் செய்யும் வினை தூயனாதல் தன்மையும் ஆகிய இரண்டும்; இனம் தூய்மை தூவா வரம் - ஒருவற்கு இனம் தூயனாதல் தன்மை பற்றுக் கோடாக உளவாம்.

விளக்கம்

(மனம் தூயனாதல் ஆவது, விசேட உணர்வு புலப்படுமாறு இயற்கையாய அறியாமையின் நீங்குதல். செய்வினை தூயனாதல் ஆவது, மொழிமெய்களால செய்யும் நல்வினை உடையனாதல். தூவென்பது அப்பொருட்டாதல் "தூவறத் துறந்தாரை" (கலித். நெய்த. 1) என்பதனானும் அறிக. ஒருவன் இனம் தூயனாகவே அதனோடு பயிற்சி வயத்தான் மனம் தூயனாய் அதன்கண் விசேட உணர்வு புலப்பட்டு, அதனால் சொல்லும் செயலும் தூயனாம் என, இதனான் இனத்து உள்ளவாம் ஆறு கூறப்பட்டது.) -

456. மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் . மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்று ஆகும்; இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை - இனம் தூயார்க்கு நன்றாகாத வினையாதும் இல்லை.

விளக்கம்

(காரியம் காரணத்தின் வேறுபடாமையின் 'எச்சம், நன்று ஆகும்' என்றும், நல்லினத்தோடு எண்ணிச் செய்யப்படுதலின் 'எல்லா வினையும் நல்லவாம்' என்றும் கூறினார்.) ---

457. மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம் (தரும்) - நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும்; இனநலம் எல்லாப் புகழும் தரும் - இனத்தது நன்மை அதனோடு எல்லாப் புகழையும் கொடுக்கும்.

விளக்கம்

('மன் உயிர்' என்றது ஈண்டு உயர்திணைமேல் நின்றது. 'தரும்' என்னும் இடவழுவமைதிச்சொல் முன்னும் கூறப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்சஉம்மை. மனம் நன்றாதல்தானே அறம் ஆகலின், அதனை 'ஆக்கம் தரும்' என்றும், புகழ் கொடுத்தற்கு உரிய நல்லோர்தாமே இனமாகலின், 'இனநலம் எல்லாப் புகழும் தரும்' என்றும் கூறினார். மேல் 'மனநன்மை இனநன்மை பற்றி வரும்,' என்பதனை உட்கொண்டு, அஃது இயல்பாகவே உடையார்க்கு அவ்வின நன்மை வேண்டா என்பாரை நோக்கி, 'அதுவேயன்றி அத்தன்மைய பலவற்றையும் தரும்' என, அவர்க்கும் இது வேண்டும் என்பது, இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.) ---

458. மனநலம் நன்கு உடையராயினும் - மன நன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும்; சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து - அமைந்தார்க்கு இனநன்மை அதற்கு வலியாதலையுடைத்து.

விளக்கம்

('நன்கால்' என்னும் மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது. அந் நல்வினை உள்வழியும் மனநலத்தை வளர்த்து வருதலின், அதற்கு ஏமாப்பு உடைத்தாயிற்று.) ---

459. மனநலத்தின் மறுமை ஆகும் - ஒருவற்கு மனநன்மையானே மறுமை இன்பம் உண்டாம்; மற்ற அஃது இனநலத்தின் ஏமாப்பு உடைத்து - அதற்கு அச் சிறப்புத்தானும் இன நன்மையான் வலி பெறுதலை உடைத்து.

விளக்கம்

(மனநலத்தின் ஆகும் மறுமை' என்றது, பயப்பது மனநன்மைதானே, பிறிதொன்று அன்று', என்னும் மதத்தை உடம்பட்டுக் கூறியவாறு. மற்று - வினைமாற்று. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. ஒரோவழித் தாமத குணத்தான மனநலம் திரியினும், நல்லினம் ஒப்ப நிறுத்தி மறுமை பயப்பிக்கும் என நிலைபெறச் செய்யுமாறு கூறப்பட்டது. இவை ஐந்து பாட்டானும் சிற்றினம் சேராமையது சிறப்பு நல்லினம் சேர்தலாகிய எதிர்மறை முகத்தால் கூறியவாறு அறிக.)

460. நல்லினத்தின் ஊங்கு துணையும் இல்லை - ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை; தீயினத்தின் (ஊங்கு) அல்லல் படுப்பதூஉம் இல் - தீய இனத்தின் மிக்க பகையும் இல்லை.

விளக்கம்

(ஐந்தன் உருபுகள் உறழ்பொருளின்கண் வந்தன. 'ஊங்கு' என்பது பின்னும் கூட்டி உம்மை மாற்றி உரைக்கப்பட்டது. நல்லினம் அறியாமையின் நீக்கித் துயர்உறாமல் காத்தலின் அதனைத் 'துணை' என்றும், தீயினம் அறிவின் நீக்கித் துயர் உறுவித்தலின் அதனைப் 'பகை' என்றும் கூறினார். 'அல்லல் படுப்பது' என்பது ஏதுப்பெயர். இதனான் விதி எதிர்மறைகள் உடன் கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top