অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

நன்றியில்செல்வம்

நன்றியில்செல்வம்

ஒழிபியல்

நன்றியில்செல்வம்

1001. வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல்.

விளக்கம்

(வைத்தான்' என்பது முற்றெச்சம். உண்ணுதல். அதனான் ஐம்புலன்களையும் நுகர்தல். 'வாய் சான்ற பெரும் பொருளை வைத்தானொருவன் அதனையுண்ணாது செத்த வழி, அதன்கண் அவனாற் செம்யக் கிடந்ததோர் உரிமையில்லை யாகலான், வையாது பெற்றபொழுதே நுகர்க', என்று உரைப்பினும் அமையும். இதற்குச் 'செத்தான்' என்பது எச்சம். இதனால் ஈட்டியானுக்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.)

1002 . பொருளான் எல்லாம் ஆம் என்று - பொருளொன்றும் உண்டாக அதனால் எல்லாம் உண்டாம் என்றறிந்து அதனை ஈட்டி; ஈயாது இவறும் மருளான் - பின் பிறர்க்கு ஈயாது பற்றுள்ளம் செய்யும் மயக்கத்தாலே; மாணாப் பிறப்பு ஆம் - ஒருவனுக்கு நிறைதலில்லாத பேய்ப்பிறப்பு உண்டாம்.

விளக்கம்

(இருமையினும் எய்தும் இன்பங்கள் பலவும் அடங்க 'எல்லாம்' என்றும், ஈட்டுதற்கு முன் உண்டாய அறிவு பின் மயங்குதலின், 'மருள்' என்றும், பொருளுண்டாயிருக்கப் பிறர் பசி கண்டிருந்த தீவினைபற்றி உணவுகள் உளவாயிருக்கப் பசித்து வருந்தும் பிறப்பு உளதாம் என்றும் கூறினார்.) ---

1003. ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர் தோற்றம் - யாம் பிறரின் மிக ஈட்டுதும் என்று பொருளினது ஈட்டல் மாத்திரத்தையே விரும்பி, அதன் பயனாய புகழை விரும்பாத மக்களது பிறப்பு; நிலக்குப் பொறை - நிலத்திற்குப் பாரமாம் அத்துணையே.

விளக்கம்

(இசை, இருமைக்கும் உறுதியாய அறமாகலின், ஈகையான் அதனையே வேண்டல் செய்யாது ஈட்டல் துன்பத்தையும், காத்தல் துன்பத்தையும் வேண்டிய அறிவின்மைபற்றி, 'நிலக்குப் பொறை' என்றார். பிறப்பு என்றது அதற்கு உரிய உடம்பினை.) ---

1004. ஒருவரான் நச்சப்படாதவன் - ஒரு பொருளும் ஈந்தறியாமையின் ஒருவராலும் நச்சப்படுதல் இல்லாதவன்; எச்சம் என்று என் எண்ணுங்கொல் - தான் இறந்தவழி ஈண்டு ஒழிந்து நிற்பதாக யாதனைக் கருதுமோ?

விளக்கம்

(ஈண்டு ஒழிந்து நிற்கும் புகழ் ஈவான் மேலன்றி நில்லாமையின், அவனுக்கு அதனோடு யாதும் இயைபு இல்லை என்பார், ' என் எண்ணுங்கொல்லோ'' என்றார். ஓகாரம் - அசை. இவை மூன்று பாட்டானும் பிறர்க்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.) ---

1005. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு - பிறர்க்கு ஈவதும் தாம் நுகர்வதுமாய இரண்டு செய்கையும் உடையரல்லாதார்க்கு; அடுக்கிய கோடி உண்டாயினும் இல் - பலவாக அடுக்கிய கோடிப் பொருளுண்டாயினும் ஒன்றும் இல்லை.

விளக்கம்

(இன்பத்தினும் அறம் சிறந்தமையின், கொடுத்தல் தொழில் முன்கூறப்பட்டது. 'அடுக்கிய கோடி' என்றது ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. ஒன்றுமில்லார் போலப் பயனிரண்டும் இழத்தலின், 'இல்' என்றார்.) ---

1006. தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பிலாதான் - தான் நுகரானாய் அதன்மேலும் தகுதியுடையார்க்கு அவர் வேண்டிய தொன்றனை ஈதலியற்கை இலனாயினான்; பெருஞ்செல்வம் ஏதம் - இரண்டும் செய்தற்கு இடனுடைத்தாய செல்வத்திற்கு ஒரு நோய்.

விளக்கம்

(தகுதி - தானம் கோடற்கு ஏற்புடைமை. ஏதம் - ஆகுபெயர். நுகரப்படுதலும் ஈயப்படுதலுமாகிய தொழிற்கு உரியதனை அன்றாக்கினமையின், 'நோய்' என்றார். 'ஈதல் இயல்பிலாதானது பெருஞ்செல்வம் அவனுக்கு ஈட்டல் காத்தல் முதலியவற்றால் துன்பமேயாம்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமையும் உடன் கூறப்பட்டன.) ---

1007. அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் - ஒரு பொருளும் இலராயினார்க்கு அவர் வேண்டியதொன்றனைத் கொடாதானது செல்வம் கொன்னே கழிதல்; மிகநலம் பெற்றாள் தமியள் மூத்தற்று - பெண்டிரின் மிக்க நலத்தினைப் பெற்றாளொருத்தி கொடுப்பாரின்மையின் கொழுநன் இன்றித் தமியளாய் மூத்த தன்மைத்து.

விளக்கம்

(நலம் - வடிவின் நன்மையும் குணத்தின் நன்மையும். இரண்டும் ஒருங்கு பெறுதல் அரிதாகலின், 'பெற்றாள்' என்றார். கொடுப்பாரும் கொழுநனுமேயன்றித் தானும் பயன் இழந்து கழிந்த குமரியோடு உவமை கூறினமையின், தானும் ஏற்பானுமேயன்றிச் செல்வமும் பயனிழந்து கழியும் என்பதாயிற்று.) ---

1008. நச்சப்படாதவன் செல்வம் - வறியார்க்கு அணியனாயிருந்தும் ஒன்றுங்கொடாமையின் அவரான் நச்சப்படாதவன் செல்வமெய்துதல்; ஊர் நடுவுள் நச்சுமரம் பழுத்தற்று - ஊரிடை நிற்பதோர் நச்சு மரம் பழுத்தாற் போலும்.

விளக்கம்

('நடுவூர்' என்பது பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. அன்மை உடைமைகளான் பயனில்லை என்பதாம்.) ---

1009. அன்பு ஒரீஇ - ஒருவன் கொடாமைப் பொருட்டுச் சுற்றத்தார் நட்டார்கண் அன்பு செய்தலையொழிந்து; தன் செற்று - வேண்டுவன நுகராது தன்னைச் செறுத்து; அறம் நோக்காது - வறியார்க்கு ஈதல் முதலிய அறத்தை நினைப்பதும் செய்யாது; ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர் - ஈட்டிய ஒள்ளிய பொருளைக் கொண்டுபோய்ப் பயன்பெறுவார் பிறர்.

விளக்கம்

(பயனாய அறனும் இன்பமும் செய்து கொள்ளாதானுக்குப் பொருளால் உள்ளது ஈட்டல் துன்பமே என்பது தோன்ற 'ஈட்டிய' என்றும், அவன் வழியினுள்ளார்க்கும் உதவாது என்பது தோன்றப் 'பிறர்' என்றும் கூறினார்.) ---

1010. சீர் உடைச் செல்வர் சிறுதுனி - புகழுடைத்தாய செல்வத்தினையுடையவரது நிற்கும் காலம் சிறிதாய வறுமை மாரி வறங்கூர்ந்தனையது உடைத்து - உலகத்தையெல்லாம் நிலை நிறுத்தும் மேகம் வறுமை மிக்காற் போல்வதோர் இயல்பினையுடைத்து.

விளக்கம்

(துனி - வெறுப்பு; அதனைச் செய்தலால், துனி எனப்பட்டது. யாவர்க்கும் பயன்பட்டார் அதனான் வறியராய வழியும், அவ்வறுமை கடிதின் நீங்குதலின், பின்பும் செல்வராய்ப் பயன்படுவர் என்பது உவமையால் பெறப்பட்டது. படவே, நன்றியில்லாத செல்வம் எஞ்ஞான்றும் பயன்படாது என்பதாயிற்று. இதற்கு, சீர் உடைச் செல்வர் இரவலரோடு வெறுக்கும் நிலையில் வெறுப்பு 'மாரி வறங்கூர்ந்தனைய தன்மையை உடைத்து' என அதிகாரத்தோடு பொருந்தாமை மேலும், ஓர் பொருள் தொடர்பு படாமல் உரைப்பாரும் உளர். இவை நான்கு பாட்டானும் அச்செல்வத்தது குற்றம் கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்



© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate