பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

படைமாட்சி

படைமாட்சி எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அங்கவியல்

படைமாட்சி

761. உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல்படை-யானை முதலிய நான்கு உறுப்பானும் நிறைந்து போரின்கண் ஊறுபடுதற்கு அஞ்சாது நின்று பகையை வெல்வதாய படை; வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை-அரசன் செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் தலையாய செல்வம்.

விளக்கம்

(ஈண்டுப் 'படை' என்றது, அந்நான்கண் தொகுதியை, ஊறு அஞ்சியவழி வேறல் கூடாமையின், 'ஊறு அஞ்சா' என்றும், ஒழிந்த அங்கங்கட்கும் அரசன் தனக்கும் காவலாகலின் 'வெறுக்கையுள் தலை' என்றும் கூறினார்.) ---

762. தொலைவிடத்து உலைவிடத்து ஊறு அஞ்சா வன்கண்-தான் சிறியதாய வழியும் அரசற்குப் போரின்கண் உலைவுவந்தால் தன் மேலுறுவதற்கஞ்சாது நின்று தாங்கும் வன்கண்மை, தொல்படைக் கல்லால் அரிது-அவன் முன்னோரைத் தொடங்கிவரும் படைக்கல்லது உளதாகாது.

விளக்கம்

(இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்னும் அறுவகைப்படையுள்ளும் சிறப்புடையது மூலப்படை யாகலான், அதனை அரசன் 'வெல்பொறியும் நாடும் விழுப்பொருளும் தண்ணடையும்-கொல்களிறும் மாவும் கொடுத்தளிக்க' [பு.வெ.மா.தும்பை.-2] என்பது குறிப்பெச்சம். இப்படையை வடநூலார் 'மௌலம்' என்ப.) ---

763. எலிப்பகை உவரி ஒலித்தக்கால் என்னாம்-எலியாய பகை திரண்டு கடல் போல ஒலித்தால் நாகத்திற்கு என்ன ஏதம் வரும்? நாகம் உயிர்ப்பக் கெடும்-அந்நாகம் உயிர்த்த துணையானே அது தானே கெடும்.

விளக்கம்

(உவமைச்சொல் தொக்கு நின்றது. இத்தொழில் உவமத்தால் திரட்சி பெற்றாம். வீரரல்லாதார் பலர் திரண்டு ஆர்த்தால் அவற்கு வீரன் அஞ்சான்: அவன் கிளர்ந்த துணையானே அவர்தாம் கெடுவர் என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம். வீரரல்லாதார் பலரினும் வீரனொருவனை ஆள்தல் நன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் முறையே அரசனுக்குப் படை ஏனையங்கங்களுள் சிறந்தது என்பதூஉம், அதுதன்னுள்ளும் மூலப்படை சிறந்தது என்பதூஉம், அது தன்னுள்ளும் வீரன் சிறந்தான் என்பதூஉம் கூறப்பட்டன.) ---

764. அழிவு இன்றி-போரின்கண் கெடுதல் இன்றி; அறை போகாதாகி-பகைவரால் கீழறுக்கப்படாததாய்; வழிவந்த வன்கணதுவே படை-தொன்று தொட்டு வந்த தறுகண்மையை உடையதே அரசனுக்குப் படையாவது.

விளக்கம்

(அழிவின்மையான் மற மானங்கள் உடைமையும், அறை போகாமையான் அரசன்மாட்டு அன்புடைமையும் பெறப்பட்டன. வழி வந்த வன்கண்மை: கல்நின்றான் எந்தை கணவன் களப்பட்டான், முன்னின்று மொய்யவிந்தார் என்ஐயர்-பின்னின்று, கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி எய்போற் கிடந்தான் என ஏறு," [பு.வெ. மா. வாகை, 22] என்பதனான் அறிக. குற்றியலுகரத்தின் முன்னர் உடம்படுமெய் விகாரத்தான் வந்தது. இது வருகின்ற பாட்டுள்ளும் ஒக்கும்.) ---

765. கூற்று உடன்று மேல் வரினும். கூற்றுவன் தானே வெகுண்டு மேல் வந்தாலும்; கூடி எதிர்நிற்கும் ஆற்றலதுவே படை நெஞ்சு ஒத்து எதிர்நின்று தாங்கும் ஆற்றலையுடையதே படையாவது.

விளக்கம்

('மருந்தில் கூற்று' ஆகலின், [புற. நா.3] உம்மை சிறப்பும்மை. மிகப்பலர் நெஞ்சொத்தற்குக் காரணம் அரசன்மேல் அன்பு. ஆற்றல் - மனவலி.) ---

766. மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே-தறுகண்மையும், மானமும், முன் வீரராயினார் சென்ற நன்னெறிக்கண் சேறலும், அரசனால் தேறப்படுதலும் என இந்நான்கு குணமுமே; படைக்கு ஏமம்-படைக்கு அரணாவது.

விளக்கம்

(இவற்றான் முறையே பகைவரைக் கடிதிற் கொன்று நிற்றலும், அரசனுக்குத் தாழ்வு வாராமற் காத்தலும், "அழியுநர் புறக்கொடை அயில்வாளோச்சா'மை [பு.வெ.மா. வஞ்சி 20] முதலியனவும், அறைபோகாமையும், ஆகிய செய்கைகள் பெறப்பட்டன. இச் செய்கையார்க்குப் பகைவர் நணுகாராகலின், வேறு அரண் வேண்டா என்பதாம்.)

767. தலை வந்த போர் தாங்கும் தன்மை அறிந்து-மாற்றாரால் வகுக்கப்பட்டுத் தன்மேல் வந்த படையின் போரைவிலக்கும் வகுப்பு அறிந்து வகுத்துக்கொண்டு; தார் தாங்கிச் செல்வது தானை-அவர் தூசியைத் தன்மேல் வாராமல் தடுத்துத்தான் அதன்மேற்செல்வதே படையாவது.

விளக்கம்

(படை வகுப்பாவது: வியூகம். அஃது எழுவகை உறுப்பிற்றாய், வகையான் நான்காய், விரியான் முப்பதாம். உறுப்பு ஏழாவன; உரம் முதல் கோடி ஈறாயின. வகை நான்காவன: தண்டம், மண்டலம், அசங்கதம், போகம் என இவை. விரி முப்பதாவன: தண்டவிரி பதினேழும், மண்டல விரி இரண்டும், அசங்கதவிரி ஆறும், போக விரி ஐந்தும் என இவை. இவற்றின் பெயர்களும் இலக்கணமும் ஈண்டு உரைப்பின் பெருகும். அவை எல்லாம் வடநூல்களுள் கண்டுகொள்க. இவை நான்கு பாட்டானும் படையினது இலக்கணம் கூறப்பட்டது.) ---

768. தானை-தானை; அடல் தகையும் ஆற்றல் இல் எனினும்-பகைமேல் தான் சென்று அடும் தறுகண்மையும், அது தன் மேல் வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லையாயினும்; படைத்தகையால் பாடு பெறும்-தன் தோற்றப் பொலிவானே பெருமை எய்தும்.

விளக்கம்

('இல்லெனினும்' எனவே, அவற்றது இன்றியமையாமை பெறப்பட்டது. 'படைத்தகை' என்றது ஒரு பெயர் மாத்திரமாய் நின்றது. தோற்றப் பொலிவாவது அலங்கரிக்கப்பட்ட தேர் யானை குதிரைகளுடனும், பதாகை கொடி, குடை, பல்லியம், காகளம் முதலியவற்றுடனும் அணிந்து தோன்றும் அழகு. பாடு: கண்ட அளவிலே பகைவர் அஞ்சும் பெருமை.) ---

769. சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின்-தான் தேய்ந்து சிறிதாகலும், மனத்தினின்று நீங்காத வெறுப்பும், நல்குரவும் தனக்கு இல்லையாயின்; படைவெல்லும்-படை பகையை வெல்லும்.

விளக்கம்

(விட்டுப் போதலும் நின்றது நல்கூர்தலும் அரசன் பொருள் கொடாமையான் வருவன. செல்லாத் துனியாவது: மகளிரை வௌவல், இளிவரவாயின செய்தல் முதலியவற்றான் வருவது. இவையுள் வழி அவன் மாட்டு அன்பு இன்றி உதறுப் பொராமையின், 'இல்லாயின் வெல்லும்' என்றார்.) ---

770. நிலை மக்கள் சால உடைத்து எனினும். போரின்கண் நிலையுடைய வீரரை மிக உடைத்தே யாயினும்; தலைமக்கள் இல்வழித் தானை இல்-தனக்குத் தலைவராகிய வீரர் இல்லாத வழித் தானை நில்லாது.

விளக்கம்

(படைத்தலைவர் நிலையுடையரன்றிப் போவாராயின், காண்போர் இல்லெனப் பொராது தானும் போம் என்பார், 'தலைமக்கள் இல் வழி இல்' என்றார். இவை மூன்று பாட்டானும் முறையே படைத்தகையின்மையானும் அரசன் கொடைத் தாழ்வுகளானும், தலைவர் இன்மையானும் தாழ்வு கூறப்பட்டது.) --

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
2.83333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top