பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தின் வரலாற்றுக்குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

வரலாறு

1968 ஜூலை ஆறாம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டது. பிறகு 1996 இல் செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் என்றும் திருவள்ளூர் மாவட்டம் என்றும் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தோடு பலகாலம் சேர்ந்தே இருந்ததால். காஞ்சிபுரம் மாவட்டத்தின் வரலாறு திருவள்ளுவர் மாவட்டத்திற்கும் பொருந்தும்.

திருத்தணி மீட்பு

சென்னை ராஜதானி என்பது தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம் இவைகளை உள்ளடக்கியப் பகுதியாகத் திகழ்ந்தது. இந்தக் கூட்டை விரும்பாத ஆந்திரர்கள் மொழிவழி மாகாணம் அமைக்கக் கோரி போராடத் தொடங்கினர். தெலுங்குப் போராளிகள் சென்னை, திருத்தணி, சித்தூர் இவைகளை அதிகம் தெலுங்கு பேசுவோர் பகுதி என்று அறிவித்து, இவற்றை ஆந்திரத்துடன் சேர்க்கவேண்டும் என்று கோரிய போதுதான் தமிழகம் விழித்துக் கொண்டது. தமிழகத்தின் வட எல்லை திருப்பதி வரை என்பதைச் சான்றுகளுடன் கூறி மறுப்புத் தெரிவிக்கவே, சென்னை தமிழகத்துடன் இணைந்தால் கோடிக் கணக்கில் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று ஆந்திரர்கள் வற்புறத்தினர். இதற்காக நேரு அரசால் அமைக்கப்பட்ட வாஞ்சுக் கமிட்டியும் இதையே வற்புறுத்தியது. இதை எதிர்த்து திருத்தணியில் தமிழ்ப்பெரியார் மங்கலங்கிழார் தலைமையில் வடக்கெல்லைப் போராட்டம் நடந்தது. வடக்கெல்லைப் போராட்டம் சென்னையையும் திருத்தணியையும் தமிழகத்திற்கு மீட்டுத் தந்தது. ஆந்திராவிற்கு நஷ்ட ஈடும் தரப்படவில்லை.

வழிபாட்டுத் தலங்கள்

திருத்தணிகை மலை

சென்னையிலிருந்து வடமேற்கில் 75 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த முருகன் கோவில். வள்ளிம்மையை முருகன் திருமணம் செய்து கொண்ட ஊர். போர் செய்யும் எண்ணம் நீங்கி, மனம் தணிந்து முருகன் தங்கிய இடம். (செரு=போர்) அதனால் செருத்தணி என்னும் பெயரும் இவ்வூருக்கு உண்டு. இங்குள்ள மலையை வேலவன் குன்று என்றும் அழைப்பர். ஆடிக் கிருத்திகையில் இங்கு நடைபெறும் திருவிழாவுக்குத் திரளான மக்கள் கூடுவர். இத்தலம் தமிழ் இலக்கியங்களில் சிறப்பாகப் பேசப்பட்டுள்ளது. இது சுற்றுலாத் தலமும் ஆகும்.

கூவம்

திருவிற்கோலம் என்னும் பெயரையும் கொண்ட இவ்வூர் இறைவன் திரிபுராந்தகர் தீண்டாத் திருமேணியாவார். அதிக மழை பெய்வதாய் இருந்தால் இறைவன் மீது வெண்மை படரும். போர் வருவதாய் இருந்தால் சிவப்பு நிறம் படரும். இறைவன் கையில் வில்லுடன் இருக்கிறார். கடம்பத்தூர் புகைவண்டி நிலையத்திலிருந்து தெற்கே 10 கி.மீ. தொலைவில் உள்ள இவ்வூரை சென்னையிலிருந்து பேருந்திலும் சென்றடையலாம்.

தக்கோலம்

இவ்வூர்க் கோயிலில் உள்ள நந்தியின் வாயிலிருந்து எப்பொழுதும் நீர் வழிந்துக் கொண்டிருப்பதால் இவ்வூருக்குத் திருவூறல் என்னும் பெயர் ஏற்பட்டது. இங்குள்ள தென்முகக் கடவுள் தெட்சிணாமூர்த்தி வடிவம் தனிச்சிறப்புடையது. பெரியபுராணத்தில் இவ்வூர் கலிகை மாநகர் என்று குறிக்கப்படுகிறது. செங்கற்பட்டு-அரக்கோணம் இருப்புப் பாதையில் உள்ள தக்கோலம் என்னும் நிலையத்திலிருந்து கிழக்கில் 5 கி.மீ. தொலைவில் உள்ள இவ்வூரை, திருவாலங்காடு புகைவண்டி நிலையம் வழியாகவும் சென்றடையலாம்.

திருவாலங்காடு

கூத்தப்பொருமான் காளியோடு ஊர்த்துவ தாண்டவம் ஆடும் தலம். இங்கு இறைவன் பணித்தபடி காரைக்கால அம்மையார் தலையால் நடந்துச் சென்றார். திருஞான சம்பந்தரும், சுந்தரரும் இவ்வூரைக் காலால் மிதிக்க அஞ்சினர். இறைவருள் கூடிய பின்னர் வந்து வழிப்பட்டனர். இவ்வூருக்கு வடாரணியம், பழையனுர், ஆலங்காடு என்னும் பெயர்களும் உண்டு. நீலியின் பொய்யுரையை நம்பிய வேளாளர் எழுபதின்மரும் நெருப்பில்வீழ்ந்து உயிர்விட்டு வாய்மை காத்த ஊர். இங்குள்ள கூத்தப்பெருமானை 'அந்தமுற நிமிர்ந்தருளிய நாயனார்' எனக் கல்வெட்டு கூறுகின்றது. சென்னை - அரக்கோணம் இருப்புப்பாதை வழியில், திருவாலங்காடு என்னும் நிலையத்திலிருந்து வடகிழக்கே 5 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. சென்னை- திருத்தணிகைச் செல்லும் மார்க்கத்தில் திருவள்ளூர், திருப்பாசூர் என்னும் ஊர்களைக் கடந்தும் சென்றடையலாம்.

திருவொற்றியூர்

இறைவன் மாணிக்கத் தியாகரின் ஆணைப்படி சக்கிலியாரை சுந்தரர் மகிழமரத்தடியில் திருமணம் செய்து கொண்டார். ஆண்டுதோறும் மாசிமாத மக நட்சரத்தித்தன்று மகிழடி சேவை என இது விழாவாகக் கொண்டாடப்படுகிறது. பட்டினத்தார் சமாதியும், அப்பரடிகள் கோயிலும் தனியே உள்ளன. ஆதிபுரியென்னும் பெயருள்ள இவ்வூரில் இறைவன் கோயிலைச் சுற்றி வரும்போது, வட்டப் பாறையம்மன் என்னும் துர்க்கை கோயிலை வடக்குப் பக்கத்தில் காணலாம். ஊழி வெள்ளத்தை மேலே வரவொட்டாது தடுத்தமையால் ஒற்றியூர் எனப் பெயர் ஏற்பட்டது. சென்னைக்கு வடக்கில் 8 கி.மீ. தொலைவில் திருவொற்றியூர் இரயில் நிலையம் உள்ளது.

திருவேற்காடு

வடவேதாரண்யம் என்றும் இவ்வூருக்குப் பெயர் உண்டு. சூதாடி பொருளீட்டிய செல்வத்தையெல்லாம் சிவனடியாருக்கு அமுது படைப்பதில் செலவிட்டு வாழ்ந்த மூர்க்கநாயனார் பிறந்த ஊர். அகத்தியருக்கு மணக்கோலம் காட்டிய பார்வதி, பரம சிவன் உருவங்கள் இலிங்க மூர்த்திக்கு பின்னால் உள்ளன. மாம்பொழில் சூழ்ந்துள்ளது. இவ்வூரில் அமைந்துள்ள கருமாரி அம்மன் கோயில் மிக்கச் சிறப்புடன் திகழ்ந்து வருகிறது. சென்னைக்கு மேற்கிலுள்ள பூவிருந்தவல்லி வழியாகவும், ஆவடி வழியாகவும் இவ்வூரை அடையலாம்.

திருவலிதாயம் (பாடி)

பாரத்துவாசர், வியாழகுரு, அனுமார் முதலியோர் வழிபட்ட தலம். இவ்வூர்க் கோயில் மிகவும் சிறியது. ஆனால் மிக்கச் சிறப்புடையது. சென்னைக்கு மேற்கே 13 கி.மீ. தொலைவிலும், கொரட்டூர் இரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சென்னையிலிருந்து வில்லிவாகம், கொன்னுர் வழியாகவும் செல்லலாம்.

திருப்பாசூர்

இறைவன் பாசூர்நாதர். சிவப்பெருமான் மூங்கிலடியில் தோன்றியதால் (பாசு=மூங்கில்) இப்பெயர் பெற்றார். கரிகால் சோழ மன்னனின் பகைவனனான குறும்ப அரசன் ஒருவனுக்கு உதவி செய்ய வேண்டிச் சமணர்கள் பெரும்பாம்பு ஒன்றைக் குடத்தில் இட்டுச் சோழனுக்கு அனுப்பினர். சிவப்பெருமான் இங்கு பாம்பாட்டியாக வந்து, சோழன் உயிரைக் காத்தார். இவ்வரலாறு அப்பர் தேவாரத்தில் சொல்லப் படுகிறது. பிள்ளையார் திருவுருவங்கள் மிகப்பல இவ்வூரில் உள்ளன. இவ்வூர் திருவள்ளூருக்கு வட மேற்கில் 7 கி.மீ. தொலைவிலும், கடம்பத்தூர் இரயிலடியிலிருந்து வடக்கில் 5 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

திருக்காளத்தி

வடக்கு நோக்கி ஓடும் சுவர்ணமுகி எனும் பொன்முகலி ஆற்றின் கீழ்க்கரையில் காளத்தி மலை அடிவாரத்தில் கோயில் இருக்கிறது. மிகப் பெரிய கோயில். கருவறையுள் இறைவர் முன்னிலையில் துண்டாமணி விளக்கு காற்றில் அசைந்து எரிந்தபடி இருக்கிறது. கண்ணப்பநாயனார் தன் கண்ணை எடுத்து இறைவன் கண்ணில் அப்பி அமைந்த சிறப்புடையது. கண்ணப்பத் திருவுருவம் ஆலயத்தினுள் உள்ளது. கைலைபாதி காளத்திபாதி அந்தாதி நக்கீரத் தேவரால் பாடப்பெற்றது. சிவப்பிரகாசர் காளத்திப் புராணம் பாடியுள்ளார். இக்கோயிலுக்கு வடக்காத் துர்க்கை மலையும், தெற்காகக் கண்ணப்பர் மலையும், கிழக்காகக் குமாரக் கடவுள் மலையும் உள்ளன. சிலந்தி (சீ), பாம்பு (காளம்), யானை (அத்திர) இம்மூன்றும் வழிப்பட்ட மையால் சீகாளத்தி எனப் பெயர் பெற்ற இவ்வூரை தென்கயிலாயம் எனவும் சொல்வர். காளத்தி இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், இரேணுகுண்டா நிலையத்திற்கு வடகிழக்கில் 24 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

திருவடமுல்லைவாயில்

தொண்டைமான் என்னும் அரசன் தன் யானையின் காலைச் சுற்றிக் கொண்ட முல்லைக் கொடிகளை வாளால் வெட்டியபோது இறைவன் (மாசிலாமணி ஈசுவரர்) மேலும் பட்டது. அதன் அடையாளமாக இறைவன் மேல் வாள் வடுவும் காணப்படுகின்றது. இது அம்மன்னன் அருள் பெற்ற இடம். இறைவன் அம் மன்னனுக்குத் துணையாக நந்தித்தேவரையும் போருக்கு அனுப்பியதாகப் புராணம் கூறும். நந்தி கிழக்கு நோக்கி இருக்கிறது. இறைவன் தீண்டாத் திருமேனி. சந்தனக் காப்பிடுவது வழக்கில் உள்ளது. இவ்வூருக்கு சண்பகராண்யம் என்னும் பெயரும் உண்டு. சண்பகச் சோலை சூழ் திருமுல்லைவாயில் என்று சுந்தரர் பாடியுள்ளார். சென்னைக்கு மேற்கில் உள்ள அம்பத்தூருக்கு வடமேற்கில் 2 1/2 கி.மீ. தொலைவிலும், ஆவடிக்கு வடகிழக்காக 4 கி.மீ. தொலைவிலும் இவ்வூர் உள்ளது.

திருவல்லம்

கோள்கள் ஒன்பதும், வல்லாள மன்னனும் இவ்விறைவனை (வல்லநாதர்) வழிப்பட்ட ஊர். நந்தி கிழக்கு நோக்கி உள்ளது. தீக்காலியென்னும் அவுணன் வழிபட்டதால், தீக்காலிவல்லம் எனவும் அழைக்கப்படுகிறது. திருவலம் என்ற பெயரும் உண்டு. சென்னை - காட்பாடி இருப்புப்பாதையில் திருவல்லம் இரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கில் 3 கி.மீ. தொலைவில் நீவா ஆற்றின் கரையில் இக்கோயில் உள்ளது.

திருக்கச்சூர் ஆலக்கோயில்

இறைவன் விருந்திட்ட வரதர். கோயில் மரம் ஆல் என்பதால் ஆலக்கோயில் என்னும் பெயர் எய்தியது. பசியால் வாடிய சுந்தரருக்கு இறைவன் பொதிசோறு அளித்தார். பின் இறைவன் மறைந்தருளியதால் வருந்தி சுந்தரர் திருப்பதிகம் பாடினார். அமிர்தம் திரண்டு வருதற்பொருட்டுத் திருமால் ஆமையாக இருந்து வழிப்பட்ட ஊராதலால் திருக்கச்சூர் (கச்சபம் = ஆமை) என்ற பெயர் வழங்குகிறது. இக்கோயிலுக்கு மேற்கில் மலைமருந்தீசர் திருக்கோயில், மேற்கில் இரந்திட்ட வரதர் கோயில், வழியில் கருக்கடிப் பிள்ளையார் கோயில்களும் உள்ளன. இது சிங்க பெருமாள் கோயில் இரயில் நிலையத்திற்கு வடமேற்கே 2 1/2 கீ.மீ. தொலைவில் உள்ளது.

திருவெண்பாக்கம்

இவ்வூருக்கு திருவிளம்யூர், திருவுளம் பூதூர் என்னும் பெயர்களும் உண்டு. சுந்தரமூர்த்தி சுவாமிகள் கண்ணிழந்த நிலையில் இங்கு வந்து பாடி ஊன்றுகோல் பெற்றார். சுந்தரர் இடக்கையில் கோலுடன் நந்தியின் பக்கத்தில் இருக்கின்றார். நந்தியின் வலக்கொம்பு சிறிது ஒடிந்துள்ளது. ஊன்று கோல்பட்டு அக்கொம்பு உடைந்தது என்பர். சுந்தரமூர்த்தி நாயனார் காஞ்சிபுரம் செல்லும் வரையிலும் அவர் முன் இறைவி மின்னல் போல் தோன்றித் தோன்றி ஒளி காட்டிச் சென்றமையால் 'மின்னல் ஒளியம்மை' என்னும் பெயர் வந்ததாகச் சொல்வர். இவ்வூருக்கு அருகில் கைகாட்டி நாதரும், பரமேஸ்வரி அம்மையும் இருக்கும் கோயிலும் உண்டு. திருவள்ளூர் இரயில் நிலையத்திலிருந்து 11 கி.மீ. சென்று பூண்டி தீர்த்தேக்கத்தை அடைந்தால் அங்கு இவ்வூர் உள்ளது. கோயில் இப்பொழுது பூண்டி நீர்த்தேக்கத்தினுள் மூழ்கியிருக்கிறது. வேறு புதிய கோயில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. பழைய கோயிலில் இருந்த திருவுருவங்களை வேறு இடத்திற்குக் கொண்டு போய் வைத்துள்ளனர்.

முக்கிய ஊர்கள்

எண்ணுர்

தென்னஞ் சோலைகள் சூழ்ந்த ஊர். படகோட்டிப் பொழுது போக்குவதற்கு ஏற்ற இடம். இங்கு உப்பளங்கள் நிரம்ப உள்ளன. பெருஞ்தொழிற்சாலைகள் பல இயங்கி வருகின்றன. எண்ணுரில் கடல்வாழ் உயிரினங்கள் நிலையம் உள்ளது. உயிரினங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், படகோட்டுவதற்கும், மீன் பிடித்தலுக்கும், நீச்சல் பழகுவதற்கும் ஏற்ற இடமாக அந்நிலையம் விளங்குகிறது. அனல் மின்னாக்கம், உரத்தொழில் ஆகியவற்றில் இவ்வூர் சிறப்புறுகிறது.

அம்பத்தூர்

இது சென்னையிலிருந்து 10 மைல் தொலைவில் உள்ளது. தொழில் நகரம். அருகில் ஆசியாவிலேயே பெரிய தொழிற்பேட்டைகளில் ஒன்றான அம்பத்தூர் தொழிற்பேட்டை இருக்கிறது. இவ்வூரிலிருந்து சென்னைத் துறைமுகத்துக்குச் செல்ல நெடுஞ்சாலை வசதி உண்டு. மண்பாண்டத் தொழில், செங்கல் அறுக்கும் தொழில் இவ்வூரில் சிறப்பாக நடைபெறுகிறது. டி.ஐ.சைக்கிள் தொழிற்சாலையும், டன்லப் டயர் தொழிற்சாலையும் இங்குள்ளன.

உத்திரமேரூர்

களப்பிர அரசன் ஒருவனது பெயரால் இவ்வூர் உத்திமேரூர் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஏரியும், கோட்டையும் சோழ அரசர்கள் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டவை. காஞ்சியிலிருந்து 27 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு கைத்தறி நெசவு பெருமளவில் நடைபெறுகிறது.

ஆவடி

ஆங்கிலேயர்கள் காலத்தில் படைத்தளமாக அமைக்கப்பட்டது. நேரு தலைமையில் இங்கு காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. தானியங்கி போர் ஊர்தி தொழிற்சாலை, படையுடை தயாரிப்பு தொழிற்சாலை இன்னும் பலத் தொழிற்சாலைகள் நிறைந்த ஊர்.

பழவேற்காடு

ஐரோப்பியர்களால் புலிகாட் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் டச்சுக்காரர்களின் வாணிப இடமாக இருந்தது. ஆங்கில-டச்சுப் போர்கள் பல இங்கு நடந்துள்ளன. இங்கு பறவைகள் சரணாலயம் உள்ளது.

பூண்டி

சென்னை நகரத்தில் பயன்பட்டு வரும் நீர்த்தேக்கம் பூண்டியில்தான் உள்ளது. இது பூண்டி ஏரி என்றும், சத்தியமூர்த்தி சாகரம் என்றும் அழைக்கப்படுகிறது. அரசாங்க நீர்ப்பாசன ஆராய்ச்சி நிலையம் உள்ளது. சென்னையின் முதல் ஷெரீப்பும், கல்லூரி பேராசிரியரும், சொற்பொழிவாளரும், கச்சித் கலம்பகத்தை இயற்றிவருமான அரங்கநாத முதலியார் இங்கு பிறந்தவராவார்.

பூவிருந்தவல்லி

பூலிருந்தவல்லி என்பதே பூந்தமல்லி என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆங்கிலேயரின் படைத்தளம் இருந்தது. இவ்வூரிலிருந்து சென்னைக் கடற்கரைக்குச் செல்லும். பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஆங்கிலேயர் அமைத்தனர். திருக்கச் சிரம்பியார் என்ற வைணவப் பெரியார் இவ்வூரில் பிறந்தவராவார். இங்கு குருடர் பள்ளியும், நீதிமன்றமும் உள்ளன. வயல்கள் சூழ்ந்த ஊர்.

செங்குன்றம்

சென்னையிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ளது இவ்வூர். இதன் பழைய பெயர் புழல் என்பதாகும். இது ஒருகாலத்தில் சமணர் மிகுதியாக வாழ்ந்த இடமாகும். பல பிரபல தொழில் நிறுவனங்கள் இவ்வூரில் நடைபெற்று வருகின்றன.

திருவள்ளூர்

திரு எவ்வுள்ளூர் என்னும் ஆதிப்பெயரே திருவள்ளூர் என மாறி வழங்கப்படுகிறது. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற இக்கோவிலில் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு காணப்படுகின்றது. பெரிய குப்பம் என்ற பகுதியில் அரசாங்கப் பெருநோய் மருத்துவமனை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தெப்பத் திருவிழாவுக்கு மக்கள் திரளாகக் கூடுவர்.

திருவொற்றியூர்

வாணிக நிலையங்களும், தொழிற்சாலைகள் பலவும் நிரம்பியது. மக்கள் நெருக்கம் அதிகம். மாட்டு வியாபாரம் இங்குச் சிறப்பாக நடக்கிறது. இதற்காக ஆந்திர மாநிலத்திலிருந்து பலரும் இங்கு இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பட்டினத்தார் சமாதியும் இங்குள்ளது. கே.சி.பி எனும் சிமெண்ட் மற்றும் கரும்பு ஆலைகளுக்கான இயந்திரங்களையும், உதிரிபாகங்களையும் செய்யும் தொழிற்சாலை இங்குள்ளது. மேலும் பல தொழிற்சாலைகள் இங்கு இருக்கின்றன.

போரூர்

ஹட்கோ தொழில் நிறுவனமும், டபிள்யூ.எஸ்.இன்சுலேட்டர் நிறுவனமும், அச்சடிக்க உதவும் மை தயாரிக்கும் ரெயின்போ நிறுவனமும் இங்குள்ளன.

வேளச்சேரி

சைதாப்பேட்டையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் வேளச்சேரி உள்ளது. இது வளர்ந்து வரும் தொழில் பகுதியாகும். புகழ்பெற்ற கிளாக்ஸோ, ரேட்டகாஸ் பிரெட் நிறுவனங்களும், சிட்டாடல் போன்ற மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும், பிளாஸ்டிக், பாலித்தீன் தயாரிக்கும் நிறுவனங்களும் நிறைந்த ஊர். சிறந்த இரு பெரிய அச்சகங்களும் உள்ளன. பல்லவர் காலத்து சிவன் கோயில் ஒன்று சற்றுச் சீரழிந்த நிலையில் உள்ளது. வேளச்சேரி-தாம்பரம் நெடுஞ்சாலையில் இன்னும் எண்ணற்ற தொழிலகங்கள் உள்ளன.

அலமாதி

பால்மாற்றப் பசுக்களுக்குச் சத்துணவு ஊட்டி அவற்றைப் பேணும் ஆனிலையம் இவ்வூரில் இருக்கிறது.

ஆரணி

சென்னையிலிருந்து இரு மைல் தொலைவில் உள்ளது. லுங்கி நெசவுக்கும், நெல், வாழை விளைச்சலுக்கும் பெயர் பெற்ற ஊர்.

திருப்பாலைவனம்

மீஞ்சூர் கடற்கரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூர்ச் சிவன் கோயிலில் 71 கல்வெட்டுகள் உள்ளன.

கம்மவார்பாளையம்

ஆந்திராவிலிருந்து வந்த கம்மவர் (உழவர்கள்) குடியேறியதால் கம்மவார் பாளையம் என்று பெயர் பெற்றது.

நந்தியம்பாக்கம்

நந்திவர்மன் என்ற பல்லவன் நினைவாக உண்டாக்கப் பெற்ற ஊர்.

வளூர்

சங்ககால வேற்குடி சிற்றரசர்களால் உண்டான ஊர்

கரிமணல்

இது பழவேற்காடு தீவிலுள்ள கடற்கரைச் சிற்றூர். 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் வந்த ஐரோப்பியர்கள் கடலைக் கடந்து அடைந்த முதல் ஊர் இதுவேயாகும்.

சேலை

திருவள்ளூருக்கும் கடம்பத்தூருக்கும் இடைப்பட்ட ஊராகும். சேலை சகாதேவ முதலியார் என்ற சிறந்த தமிழ்புலவர் இவ்வூரினர் ஆவார்.

திருப்பாசூர்

திருவள்ளூரிலிருந்து வடமேற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது. நெல், மணிலா, கேழ்வரகு முதலியன மிகுதியாக விளையும் ஊர். கிழக்கிந்திய கம்பெனியாரின் முக்கிய ராணுவத் தளமாக விளங்கியது. கத்தரிக்காயிற்குப் பெயர் பெற்ற ஊர். சோழ, விஜய நகர அரசர்களின் கல்வெட்டுக்கள் பல இவ்வூர் சிவன் கோயிலில் காணப்படுகின்றன.

பெரியபாளையம்

இவ்வூர் மாரியம்மன் கோயில் பிரசித்திப் பெற்றது. ஆடி மாதத்தில் சிறப்பாக உற்சவங்கள் நடைபெறும்.

மப்பேடு

இவ்வூரில் தோன்றிய அரிய நாயக முதலியார் 15, 16-ஆம் நூற்றாண்டுகளில் அடுத்தடுத்து நாய்க்க மன்னர் நால்வரிடம் பிரதானியாகவும், தளவாயாகவும் இருந்து பாளையங்களை அமைத்தும், மதுரை நகருக்கு கோட்டை கட்டியும், பல கோயில்களுக்குத் திருப்பணி செய்தும் புகழ் பெற்றவர்.

புத்தவேடு

சென்னையிலிருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ளது. குன்றத்தூர் வழியாகச் செல்ல வேண்டும். கெளதம புத்தர் ஞானம் எய்திய போது இங்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

மணப்பாக்கம்

சரியான பெயர் மணற்பாக்கம். இவ்வூர் மணற்பாங்கானது.

சுங்குவார் சத்திரம்

சுங்குவார் என்ற வைசிய சமூகத்தினர் ஆங்கிலேய வணிகர்களிடம் தொழில் தொடர்பு கொண்டு செல்வாக்குடன் இருந்தனர். இவர்களுள் ஒருவரான சுங்குராமச் செட்டி பெயரால் சென்னையில் ஒரு தெரு உள்ளது. இவ்வூரில் பஸ், லாரி போக்குவரத்தால் வியாபாரம் சிறப்பாக நடைபெறுகிறது.

இராமகிருஷ்ணராசுப்பேட்டை

இவ்வூரில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மிகுதி. இவற்றின் மூலம் நெய்யப்படும் துணிகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், அமொரிக்காவிற்கும் ஏற்றுமதியாகின்றன.

பள்ளிப்பட்டு

ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு மாற்றப்பட்ட பகுதியில் மிகவும் பிற்பட்ட பகுதியாகும்.

தொழில்

மதராஸ் ரிபைனரிஸ் லிமிட்டெட்

இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகள் பன்னிரண்டில் ஒன்பதாவதாக மணலியில் தொடங்கப்பட்டது. நாட்டின் மொத்த எண்ணெய் சுத்திகரிப்புத் திறனில் எட்டில் ஒரு பங்கை இந்த ஆலை பெற்றுள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு என்ஜினியரிங் பயிற்சிப் பள்ளி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பல கச்சா எண்ணெய் வகைகளை ஆராயவும், உற்பத்தியை இன்னும் சிக்கனமான முறையில் பெருக்கவும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 28 இலட்சம் டன் உற்பத்தியை ஓராண்டுக்குத் தருகிறது. நாட்டின் இரண்டாவது மெழுகு ஆலையான பாரபின் மெழுகு ஆலை 1984 முதல் இங்கு செயலாற்றுகிறது. ரூ.18 கோடி செலவில் 20,000 டன் உற்பத்தித் திறன் கொண்ட இந்த ஆலை நவீன சாதனங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மணலியில் உரத் தொழிலகங்களும் உள்ளன.

அசோக் லேலண்டு

எண்ணுரில் உள்ள இத்தொழிற்சாலையில் டீசல் பஸ்களும், லாரிகளும், தொழிற்சாலைகளுக்கு வேண்டிய இயந்திரப் பொருட்களும் செய்யப்படுகின்றன. இங்கு தயாராகும் வாகன அடித்தளங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. வார்ப்பு வேலைப் பணிகளில் இத்தொழிற்சாலை மிக்கத் திறன் பெற்று விளங்குகிறது. இங்கிலாந்திலுள்ள லேலண்டு நிறுவனத்தின் கூட்டு இணைப்போடு இயங்கும் இது புகழ்பெற்ற நிறுவனமாகும். எண்ணூர் பவுண்டரீஸ் இதன் துணைத் தொழிற்சாலையாகும். அசோக் லேலண்டின் கிளைத் தொழிற்சாலை ஒன்று ஓசூரில் நடந்து வருகிறது.

கார்பொரண்டம் யுனிவர்சல் லிமிட்டெட்

1955 இல் இத்தொழிற்சாலை திருவொற்றியூரில் அமைக்கப்பட்டது. உப்புத்தாள்கள் செய்வதற்காக பிரிட்டன் தொழில் நுட்ப உதவியுடன் தொடங்கப்பட்டு செயலாற்றி வருகிறது. ஆண்டுதோறும் 1000 டன்களுக்கு மேற்பட்ட பாண்டர் அப்ரசிவ்சும், 60,000 ரீம்கள் கோட்டட் அப்ரசிவ்சும் இதன் உற்பத்தியாகும். மரச்சாமான்களைப் பளபளப்பாக்குவதற்கும், இரும்பு, எஃகுக் கருவிகளைத் தீட்டுவதற்கும், கண்ணாடி, கத்தி முதலியவற்றை தேய்ப்பதற்கும் இந்த உப்புத்தாள்கள் இன்றியமையாதவை. பென்சில், பேனா, தோல், பிளாஸ்டிக், மின்சார விசிறி, சைக்கிள், வானொலிப்பெட்டி, வாகனங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இப்பொருட்களை மிகுதியாக வாங்குகின்றன.

என்பீல்டு இந்தியா

1958 இல் திருவொற்றியூரில் தொடங்கப்பட்டது. ஆசியாவில் ஏற்பட்ட முதல் மோட்டார் சைக்கிள் தொழிற்சாலை இதுவே. பிரிட்டனில் உள்ள என்பீல்டு கம்பெனியின் கூட்டு முயற்சியுடன் தொடங்கப்பட்ட இத்தொழிற்சாலையில் ஆண்டுதோறும் சுமார் 10,000 மோட்டார் சைக்கிள்களும், 10,000 ஸ்கூட்டர்களும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. தேவைப்படும் உறுப்புகளில் 80 சதவீதம் இங்கேயே தயாராகிறது. இரயில்வே இலாக்காவுக்கும், வேறுபல நிறுவனங்களுக்கும் தேவைப்படும் இயந்திர பாகங்களும் இங்கே உற்பத்தியாகின்றன. வெளிநாடுகள் பலவற்றிற்கும் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் முதலியன ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தொலைக்காட்சிப் பெட்டிகளும் இந்நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன.

மெட்டல் பாக்ஸ் கம்பெனி

திருவொற்றியூரில் அமைந்துள்ள இத்தொழிற்சாலையில் எல்லா வகையான பொருட்களையும் அடைப்பதற்கான அலுமினியப் பெட்டிகளும், தகரப் பெட்டிகளும் செய்யப்படுகின்றன. அத்துடன் இந்த உலோகப் பெட்டிகளின் மேல் அழகிய வண்ண அச்சு வேலைகளும் செய்து தரப்படுகிறது. இதன் கிளைகள் இந்தியாவில் பம்பாய், கல்கத்தா முதலிய பெருநகரங்களிலும் செயல்பட்டு வருகின்றன.

டன்லப் இரப்பர் கம்பெனி

அம்பத்தூரில் பெரும் நிலப்பரப்பு ஒன்றில் இக்கம்பெனி நடைபெற்று வருகிறது. இதன் கிளைகள் பல இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ளன. இங்கு சைக்கிள், மோட்டார், சைக்கிள் மோட்டார், எந்திர உழவு வண்டி, விமானம் ஆகியவற்றிற்குத் தேவையான இரப்பர் குழாய்கள், டயர்கள் முதலியவற்றைத் தயாரிக்கிறார்கள். இவை உள்நாட்டுத் தேவைக்குப் போக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பிற இரப்பர் பொருள்களும் இங்கே தயாராகின்றன.

டி.ஐ.சைக்கிள் தொழிற்சாலை

அம்பத்தூரில் இயங்கி வரும் இத்தொழிற்சாலை இந்தியாவில் மட்டுமின்றி, உலகிலேயே சிறந்த தொழிற்சாலையாகக் கருதப்படுகிறது. இங்கு பி.எஸ்.ஏ ஹெர்குலிஸ், பிலிப்ஸ் பிராண்ட் சைக்கிள்கள் உற்பத்தியாகின்றன. சைக்கிள்களுக்குத் தேவையான செயின்கள், இருக்கைகள் போன்ற பிற உறுப்புகளும் தயாரிக்கப் படுகின்றன.

டியூப்ஸ் இந்தியா

1961 இல் ஆவடியில் இத்தொழிற்சாலை தோன்றியது. கொதிகலங்கள், மின்சாரக் கருவிகள், நாற்காலி மேசைகள் செய்யப் பயன்படும் உருக்குக்குழாய்கள் இங்குத் தயாராகின்றன. மேலும் இக்குழாய்கள் சைக்கிள் தொழிற்சாலைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் தேவைப்படுகின்றன. இத்தொழிற்சாலை டி.ஐ.தொழிற்சாலையின் இன்னொரு பிரிவாகும்.

சதர்ன் ஸ்ட்ரச்சுரல் லிமிடெட்

ஆவடியை அடுத்த பட்டாபிராமில் இத்தொழிற்சாலையில் பெரும் தொழிற் நிறுவனங்களுக்குத் தேவையான உருக்குக் கூடாரங்கள் தயாராகின்றன.

இராணுவ கவச மோட்டார் தொழிற்சாலை

ஆவடியில் பெரும் நிலப்பரப்பில் 1962 இல் இது அமைக்கப்பட்டது. தென்னகத்தில் உள்ள மிகப்பெரும் தொழிற்சாலைகளில் இதுவும் ஒன்று. இத்தொழிற்சாலையின் முழுவளர்ச்சிக்கும் ஏறத்தாழ 50 கோடி செலவாகியுள்ளது. இது இந்திய அரசாங்கப் பாதுகாப்பு அமைச்சகத்தைச் சேர்ந்தது.

சூப்பர் பாஸ்பேட் தொழிற்சாலைகள்

எண்ணுரில் புளூமவுண்டன் எஸ்டேட் நிறுவனத்தாரின் தொழிற்சாலை உள்ளது. ஆவடியில் ஷாவாலஸ் நிறுவனத்தாரின் தொழிற்சாலை ஒன்றும் நடைபெறுகிறது.

டிராக்டர் தொழிற்சாலை

இத்தொழிற்சாலை எண்ணூரில் உள்ளது. ஜப்பானியத் தொழில்நுட்ப உதவியுடன் இங்கே இயந்திரக் கலப்பைகளும் மண்வெட்டும் பெரிய இயந்திரங்களும் உற்பத்தியாகின்றன.

மதராஸ் பர்டிலைசர்ஸ் லிமிடெட்

பெரிய நிலப்பரப்பில் பல கோடி ரூபாய் முதலீட்டுடன் மணலியில் நடைபெற்று வரும் இத்தொழிற்சாலை, தரமான உரங்கள் மற்றும் பாஸ்பேட் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. தென்னகத்தோடு இந்தியாவின் பல பாகங்களுக்கும் உரங்கள் இங்கிருந்து அனுப்பப்படுகின்றன.

தீப்பெட்டித் தொழிற்சாலை

இத்தொழிற்சாலை திருவொற்றியூரில் அமைந்துள்ளது. தீக்குச்சிகள், தீப்பெட்டி மர அட்டைப் பெட்டிகள் தயாராகின்றன. ஆண்டுக்கு 60 இலட்சம் மதிப்புக்குரிய தீக்குச்சிகள் இங்கு தயாராகின்றன.

கண்ணாடித் தொழிற்சாலைகள்

செம்பியத்திலும், திருவொற்றியூரிலும் கண்ணாடித் தகடுத் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. செம்பியத்தில் பெல்ஜிய நாட்டுத் தொழில் கூட்டுறவோடு நடைபெறுகிறது.

சிறுதொழில்கள்

இம்மாவட்டத்தில் சிறு தொழில்கள் பல மிகுந்த அளவில் நடைபெறுகின்றன.

  • திருப்பெரும்புதூர் - தச்சு, கொத்து வேலைகள்
  • நந்தம்பாக்கம் - ஊசி மருந்து உற்பத்தி ஆலை
  • கும்மிடிப்பூண்டி - பாய் முடைதல்
  • பழவேற்காடு - பனை ஓலைப் பொருட்கள்
  • மீஞ்சூர் - பூவேலைத் தொழில்கள்
  • திருவள்ளூர் - செங்கற் சூளைகள்.

இம்மாவட்டத்தில் ஆண்டுதோறும் புதுப்புதுத் தொழிற்சாலைகள் பெருகிய வண்ணம் உள்ளன. எண்ணற்ற தொழிற்சாலைகளைக் கொண்ட இம்மாவட்டம் வேலைவாய்ப்பில் ஓரளவு தன்னிறைவு பெற்று விளங்குகிறது. இம்மாவட்டத்திலும், இம்மாவட்டத்தைச் சுற்றிலும் பெரிய, நடுத்தர, சிறிய தொழிற்சாலைகள் ஆயிரக்கணக்கில் இருப்பதால், இங்கு தயாராகும் முக்கியப் பொருட்களுக்குத் தேவையான சிறிய பாகங்கள் செய்யும் தொழிற்சாலைகள் அமைவதே சிறப்புடையதாகும்.

குறைந்த முதலீட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் என்னென்னத் தொழில் தொடங்கலாம் என்று தமிழக அரசு சிறுதொழில் மையம் விளக்கம் தந்துள்ளது. தொழில் முனைவோரும் வேலையற்றோரும் இப்புதியத் தொழில்களில் ஈடுபடலாம். அவையாவன :

1) அட்டைத் தயாரித்தல்

2) மணிலா எண்ணெய் தயாரித்தல்

3) அரிசி தவிட்டு எண்ணெய் தயாரித்தல்

4) கையால் பேப்பர் தயாரித்தல்

5) மல்லிகைப் பூ எஸென்ஸ் தயாரிப்பு

6) மாட்டுத் தீவனம் தயாரித்தல்

7) சேமியா தயாரித்தல்

8) பழரசம், ஜாம், ஜல்லி தயாரித்தல்

9) மருத்துவப் பயனுக்கான பஞ்சுத் தயாரித்தல்

10) மிட்டாய் வகைகள் தயாரித்தல்

11) வாழைப்பழம், உருளைக் கிழங்கு வறுவல் தயாரித்தல்

12) மரப்பொம்மைகள், மரநாற்காலிகள், மேஜைகள், மரக்கதவுகள், ஜன்னல்கள் தயாரித்தல்

13) விசைத்தறிகள் தயாரித்தல்

14) தோல் பொருட்கள் : செருப்புகள், பெட்டிகள், பைகள், பெல்டுகள், தொழிலாளர் அணியும் கையுறைகள் தயாரித்தல்

15) விவசாயிகளுக்குத் தேவையான கலப்பை, கொழு மற்ற உபகரணங்கள் தயாரித்தல்

16) சைக்கிள்களுக்குத் தேவையான பெடல்கள், பிரேக்குகள், ஹப்புகள், ஸ்டாண்டுகள், பைகள், சிறியப் பெட்டிகள், காரியர்கள் தயாரித்தல்.

17) டியூப்லைட் பட்டிகள் தயாரித்தல்

18) டி.வி. பூஸ்டர்/ஆம்ளிபையர் தயாரித்தல்

19) உலோகக் குழாய்களால் ஆன நாற்காலிகள், மேஜைகள் தயாரித்தல்.

20) பஸ் லாரிகளுக்குப் பாடி கட்டுதல்

21) அலுமினியப் பாத்திரங்கள், உபகரணங்கள் செய்தல்

22) ரேடியோ, டி.வி, டேப்ரிகார்டர்கள் (பல உபப் பொருட்களை கொண்டு பெட்டிகள் தயாரித்தல்)

23) மின்சார மோட்டார் ரீவைண்டிங், ரிப்பேர் செய்தல்

24) மைக்காப் பொருட்கள் செய்தல்

25) பிளாஸ்டிக் பொருட்கள் செய்தல்

26) சோபாக்களுக்கு வேண்டிய போம் இரப்பர் மெத்தைகள் செய்தல்

27) பினாயில், சுத்தம் செய்யும் பவுடர் செய்தல்

28) கிரீஸ், தார் இவைகளைத் தயாரித்தல்

29) வீடுகளுக்குத் தேவைப்படும் பெயிண்டுகள், வார்னிஷ் தயாரித்தல்

30) மருந்துகள் தயாரிக்கத் தேவைப்படும் அடிப்படை மருந்துப் பொருட்கள் தயாரித்தல்

31) விவசாயத்திற்குத் தேவைப்படும் உரங்கள் தயாரித்தல்.

மேற்கண்ட தொழில்களை நகர்புறங்களில் அல்லாமல், பின்தங்கியப் பகுதிகளில் தொடங்கினால் இம்மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியுற்று, வேலை வாய்ப்பும் பெருகும். பின்தங்கியப் பகுதிகளில் தொழில் தொடங்கினால் அரசு வழங்கும் சில சலுகைகள் பின்வருமாறு :

- தேவையான இடம்

- வேலை செய்யத் தேவையான ஆட்கள்

- குறைந்த வட்டி வீதத்தில் அரசுக் கடன் வசதி

- குறைந்த அடிப்படைக் கூலி

இவற்றை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ), சிறுதொழில் வளர்ச்சி கழகம் (சிட்கோ) மற்றும் சிப்காட் மூலம் அரசு வழங்குகிறது.

ஆதாரம் : மாவட்ட நிர்வாகப்பிரிவு

2.97959183673
முருகன். க Oct 03, 2018 05:11 PM

என் மாவட்டம் எனக்கு பெருமையா இருக்கு

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top