பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சிவில் சர்வீஸ் தேர்வு (குடிமைப்பணி தேர்வு)

சிவில் சர்வீஸ் தேர்வு (குடிமைப்பணி தேர்வு) பற்றிய குறிப்புக்கள்

அறிமுகம்

நம் நாட்டின் எல்லா துறைகளிலும் உயரிய பதவிகளில் நியமனம் செய்யப்பட்டு நிர்வாகத்தைத் திறம்பட நடத்துவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிற நபர்கள்தான் குடியுரிமைப் பணியாளர்கள் (Civil Servants).

இந்த நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுத்துக் கொள்ள விரும்புகிறவர்களும், நிறைந்த அனுபவத்தைப் பெற நினைப்பவர்களும் இப்பணியில் மகிழ்ச்சியடைகிறார்கள்.

இன்று உலகமயமாக்கம் (Globalisation) தாராளமயமாக்கம் ஆகியவை பரவலாக்கப்பட்ட சூழலில் குடியுரிமைப் பணிகளின் முக்கியத்துவம் உண்மையில் குறைந்திருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள். வருடாவருடம் எழுதுபவர்கள் எண்ணிக்கையில் கூடிக்கொண்டே போகிறது.

குடியுரிமைத் தேர்வுகள் என்பவை வெறும் ஐ.ஏ.எஸ். பணிக்காக மட்டுமல்ல. மொத்தம் 25 பணிகளுக்காக நடத்தப்படுகிற ஒருங்கிணைந்த தேர்வு. ஐ.ஏ.எஸ் பணிக்கு விருப்பமில்லை என்றால் அரசியலுடன் சிறிதும் சம்பந்தமில்லாத அமையப் பணிகள் (வருமான வரி, சுங்கம், ஆடிட் அண்ட் அக்கவுண்ட் சர்வீஸஸ்)

பணிகள்

மத்திய தேர்வாணைக்குழு (UPSC-Union Public Service Commission) நடத்துகிற குடியுரிமைத் தேர்வுகள் மொத்தம் 23 பணிகளுக்காகத் தகுதி வாய்ந்த நபர்களை நியமனம் செய்யும் நோக்கில் நடத்தப்படுகிறது.

i.) Indian Administrative Service (I.A.S.)

ii.) Indian Foreign Service (I.F.S.)

iii.) Indian Police Service (I.P.S.)

iv.) Indian P&T Accounts & Finance Service Group - A

v.) Indian Audit & Account Service (I.A.A.S.) Group - A

vi.) Indian Customs and Central Excise Service - GP-A

vii.) Indian Revenue Service GP-A

viii.) Indian Ordinance Factories Service GP-'A'

ix.) Indian Postal Service - GP - 'A'

x.) Indian Civil Accounts Service GP-'A'

xi.) Indian Railway Traffic Service GP-'A'

xii.) Indian Railway Accounts Service GP-'A'

xiii.)Indian Railway Personal Service GP-'A'

xiv.) Posts of Asst. Security Officer GP-'A' in Railway Protection Force

xv.) Indian Defence Estates Service, GP-A

xvi.) Indian Information Service (Junior Grade) GP-A

xvii.) Indian Trade Service GP-A

xviii.) Posts of Asst. Commandent GP-A in Central Industrial Security Force

xix.) Central Secrateriat Service GP-B

xx.) Railway Board Secretariat Service GP-B

xxi.) Armed Forces Head Quarters Civil Service GP-B

xxii.) The Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service GP-B

xxiii.) Pondicherry Police Service, Group - B

செலவுகள்

ஐ.ஏ.எஸ். படிக்க பணம் நிறைய வேண்டுமே! ஏகப்பட்ட செலவாகுமே! எங்களுக்கு முடியுமா? என்று தன்னிரக்கப்படுபவர்களுக்கு சிவில் சர்வீஸஸ் எழுத UPSC வசூலிக்கும் கட்டணம் மிகவும் குறைவு. நாம் எப்போதுமே வாங்குகிற செய்தித்தாள், மாதம் மூன்று, நான்கு முக்கியப் பத்திரிகைகள், சில புத்தகங்கள், முக்கியமான சில நோட்டீஸ்கள் எல்லாம் சேர்த்து ரூ. 5000/- போதும். இன்னும் கொஞ்சம் தாராளமாக இருந்தால் 10,000/- போதும்.

இந்த தொகையைக் கூட அரசு அளிக்கும் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தால் ஊக்கத்தொகையிலேயே ஈடுகட்டிவிடலாம்.

ஒரு நல்ல நூலகத்தைத் தேர்ந்தெடுத்து புத்தகங்களை தேர்வு செய்வதன் மூலம் தகவல்களை திரட்டலாம். எல்லாப் புத்தகங்களையும் வாங்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒரு சில புத்தகங்கள் விரல் நகங்களைப் போல வேண்டியவை. விழியிமைகளைப் போல தேவையானவை. உதாரணத்திற்கு வேளாண்மையை விருப்பப் பாடமாகக் கொண்டவர்கள் வேளாண்மைக் கையேடு (Hand Book of I.C.A.R.) நிச்சயம் வாங்க வேண்டும்.

4 நண்பர்களுக்கு மிகாமல் குழு அமைத்துப் படிப்பதன் மூலம் சில புத்தகங்களையும் , கையேடுகளையும் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளலாம் (Exchange)

எவ்வளவு ஆண்டு தயாரிப்பு?

கல்லூரியிலிருந்தே இத்தேர்வுக்குத் தயார் செய்பவர்கள் கூட ஒரு வருடகாலம் படிப்பு முடிந்ததும் இந்த தேர்வுக்காக ஒதுக்கி முழு மூச்சாகத் படிப்பது நல்லது.

கல்லூரிப் படிப்பை முடித்த பிறகுதான் இந்தத் தேர்வை எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுபவர்கள் இரண்டு வருடங்களாக மும்முரமாகப் படித்துத் தேர்வை எழுதுவது முதல் முறையிலேயே ஏதேனும் ஒரு பணியில் சேர உதவலாம்.

ஒரு நாளைக்குப் பத்து முதல் பன்னிரண்டு மணி நேரம் படிக்க வேண்டும். அதற்குக் குறைவாகப் படிப்பவர்கள் பாடத்திட்டத்தை நிறைவு செய்ய முடியாது. நல்ல தயாரிப்பு நமக்குத் தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் அதிகப்படியான உந்து சக்தியையும் அளிக்கும்.

எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பது மட்டும் முக்கியமல்ல; எவ்வளவு தீவிரமாகப் படிக்கிறோம் என்பது தான் அவசியம். அந்த நொடியில் முழுவதுமாகத் தன்னை அந்த பணியில் கரைத்துக் கொள்வதே படிப்பு.

பயிற்சி (Coaching)

இப்பொழுது குடியுரிமைப் பணிகள் வளர்ச்சி அடைவதைப் பார்த்ததும், பலர் கோச்சிங் ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் நடத்தும் பயிற்சியும் பார்வையற்றவர்கள் யானையைத் தடவிய மாதிரி இருக்கின்றது.

எல்.கே.ஜி முதல் ஐ.ஏ.எஸ் வரை வகுப்புகள் என்று சில வரிசை வீடுகளின் நெற்றியில் பெயர்ப்பலகைத் தொங்குவதைப் பார்க்கலாம். பரபரப்பாகப் நடிகரை வைத்துப் படம் செய்வதைப் போலத்தான் இதுவும்.

 • முதலில் இத்தேர்வுக்கு யாரும் பயிற்சியளிக்க முடியாது. வேண்டுமானால் வழிகாட்டலாம். என்ன படிக்கலாம்? எந்தெந்தப் புத்தகங்கள் வாங்கலாம்; எப்படிப் படிப்பதை ஒழுங்குபடுத்தலாம் என நமக்குச் சுட்டுவிரலை நீட்ட மட்டுமே பிறரால் முடியும்.
 • கோச்சிங் போனால் தேர்வாகிவிடலாம் என்ற நெருப்புக் கோழி பார்வையிலிருந்து விடுபட வேண்டும். கோச்சிங் போய் தோல்வியுற்றவர்கள் சதவிகிதம் வெற்றி பெற்றவர்கள் சதவிகிதத்தைவிட அதிகம்.
 • இந்நிறுவனங்கள் தரும் குறிப்புகளை வழிகாட்டுதலுக்காக மட்டும் ஒருமுறை புரட்டுவது நல்லது. அவற்றையே நம்பி இருப்பது மின்மினிப் பூச்சியின் வெளிச்சத்தில் படிக்க நினைப்பது போல.
 • இது போன்ற நிறுவனங்களுக்குச் செல்பவர்கள் மற்றவர்களைப் பார்த்துக் குழம்பி விடுவது உண்டு. அவர்கள் தோற்றமும் தோல் நிறமும் நமக்கு ஒருவித ஏற்றத்தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதும் உண்டு.

தோல்விக்குக் காரணங்கள்

இந்தத் தேர்வில் தோல்வியுற்றவர்கள் ஏன் தோல்வியுறுகிறார்கள் என்பதையும் உற்று நோக்க வேண்டும்.

 • அடிப்படையான ஆர்வமும், போதுமான தேடலும் இல்லாதவர்கள்.
 • இந்தத் தேர்வை எதிர்கொள்ளத் தகுதியில்லாதவர்கள் (புலியைப் பார்த்த பூனைகள்).
 • மற்ற தேர்வுகளைப் போல தேர்வு அன்றைக்கு மட்டும் புத்தகங்களைப் புரட்டிவிட்டுச் செல்பவர்கள்.
 • பிரிலிமினரி தேர்வானதும் ஐ.ஏ.எஸ். ஆஃபிஸரானதைப் போல காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு நடப்பவர்கள்.
 • இத்தேர்வையும் வேலை வாய்ப்பு தேடும் இன்னொரு களமாகக் கருதிக் கொள்பவர்கள்.
 • கல்லூரித் தேர்வு அணுகுமுறை.
 • எளிய முறையில் / குறுக்கு வழியில் இத்தேர்வை அணுகமுடியுமா என எதிர்பார்த்து அவற்றில் சக்தியை இழப்பவர்கள்.
 • முதல் முறை தோல்வியடைந்ததும், மரவட்டை குச்சியால் குத்தியதும் சுருங்குவது போலத் தன்னைச் சுருக்கிக் கொள்பவர்கள்.
 • தன் தோல்விக்கான காரணங்களை அலசி அவற்றை சரி செய்து கொள்ளாதவர்கள்.
 • ஒவ்வொரு முறையும் விருப்பப்பாடங்களை விருப்பம் போல மாற்றுபவர்கள்.
 • விருப்பமில்லாத பாடங்களை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுப்பவர்கள்.
 • சரியான யுக்திகளுடன் அணுகாமல் வெறுமனே கடின உழைப்பு உழைப்பவர்கள்.

தமிழில் எழுத சில தடைகள்

 • நான் ஆங்கில மீடியத்தில் படித்தேன். எனக்குப் பாடங்களெல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே பரிச்சயம் என்று சொல்பவர்கள் தமிழில் எழுதினால் ஒருவேளை இனமான உணர்வினால் அதிக மதிப்பெண்கள் கிடைக்குமோ என எண்ணித் தமிழில் எழுத வேண்டியதில்லை.
 • தங்கள் பட்டப்படிப்பைத் தமிழிலேயே படித்தவர்கள், தமிழ் தனக்கு ஆங்கிலத்தைக் காட்டிலும் சரளம் என்கிற தன்னம்பிக்கை மேலிடுகிறவர்கள் மட்டும் தமிழில் இத்தேர்வை எழுதலாம்.
 • நான் படித்த பாடம் என் விருப்பப் பாடமல்ல, நான் புதிய பாடத்தை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுக்கப்போகிறேன் அதைப் படிக்க எனக்குத் தமிழ் வசதியான மொழி என எண்ணுபவர்கள் தமிழைத் தேர்ந்தெடுக்கலாம்.
 • தமிழ் ஊடகமாக இருந்தால் அதிக மதிப்பெண்கள் கிடைக்கவோ, அதனால் மட்டுமே மதிப்பெண்கள் குறையவோ வாய்ப்பு இல்லை.
 • தமிழில் எழுதினால் கேள்வித்தாள்கள் தமிழில் இருக்குமா? இது ஒரு கேள்வி. கேள்வித்தாள்கள் ஆங்கிலம் / இந்தி மொழிகளில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. கேள்வியைப் புரிந்து கொண்டு நாம் விடையைத் தமிழில் எழுத வேண்டும்.
 • தமிழில் எழுதுவதாக இருந்தால், பொது அறிவுக்கும் வேறு சில விருப்பப்பாடங்களுக்கும் குறிப்புகள், உபகரணங்கள் தமிழில் கிடைப்பது மிகவும் சிரமம். ஆங்கிலத்தில் தான் அதிகமான பொருட்கள் கிடைக்கும். ஏனென்றால் விற்பனை பெரும்பான்மையைக் குறிவைத்து தான் நிகழ்த்தப்படும். எனவே ஆங்கிலத்தில் உள்ள தகவல்களை நாம்தான் தமிழில் மொழி பெயர்த்துக் கொள்ள வேண்டும். மொழி பெயர்க்க முடியாத சில பதங்களை ஆங்கிலத்தில் அப்படியே எழுதவும் செய்யலாம். தமிழில் எழுதுவது எளிது அல்ல; அதற்கு நிறைய உழைப்புத் தேவை.

ஆங்கில அறிவு அவசியமா?

 • ஆங்கில அறிவே பிரதானம் என்ற கூற்றுக்கும் ஆங்கில அறிவு அவசியம் என்ற வாக்கியத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு.
 • ஆங்கில அறிவின் முக்கியத்துவத்தை நாம் ஒருகாலும் மறுதலிக்க முடியாது. தமிழ் குறித்து நாம் எவ்வளவு உணர்ச்சிவசப்பட்டாலும், பல இடங்களில் ஆங்கிலத்தின் மூலம் தான் தொடர்ப்பு கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
 • சரியாக ஆங்கிலம் தெரியாது எனச் சொல்வது ஒரு விதமான முயற்சியின்மையின் வெளிப்பாடுதான். தொடர்ந்து வாசிப்பதன் மூலமும் எழுதுவதின் மூலமும் மற்றவர்களுடன் பேசுவதன் மூலமும் தான் ஆங்கில அறிவை விருத்தி செய்ய முடியும்.
 • Language is the functioning of our subconscious mind. மொழி நம் ஆழ்மனச் செயல்பாட்டின் வெளிப்பாடு. நாம் நம் தாய்மொழியில் / பரிச்சயமொழியில் பேச யோசிக்க வேண்டியது இல்லை. ஏனென்றால் அது நம்மில் ஓர் அங்கம்.
 • தினமும் ஆங்கிலத் தினசரிகளை வாசிப்பது. வார்த்தை திறன் (Vocabulary) வளர்க்க உதவும் புத்தகங்களை வாசிப்பது. தொலைக்காட்சியில் ஆங்கிலச் செய்திகளைக் கேட்டல், மற்றவர்களுடன் ஆங்கிலத்தில் பேசிப் பழகுதல், ஒரு தனியறையில் அமர்ந்து ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு ஆங்கிலத்தில் பேசிப் பார்ப்பது. அதைப் பதிவு செய்து திரும்பக் கேட்டு எந்த இடத்தில் தவறி இருக்கிறோம் எனப் பரிசீலனை செய்வது. வார்த்தை திறனில் குறைவா, வாக்கிய அமைப்பில் பிரச்சனையா எனக் கண்டறிதல் போன்றவை மொழியறிவை வளர்க்க உதவுகிற உத்திகள்.

இந்தியக் குடிமகன்கள்

 • ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பணிகளை அடைய விரும்புகிறவர்கள் இந்தியப் ப்ரஜா உரிமை (Citizen of India) பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
 • மற்ற பணிகளுக்கு நேபாளத்திலும், பூடானிலும் குடியுரிமை பெற்றவர்களும், திபெத்திலிருந்து 01.01.1962 க்கு முன்பு இந்தியாவில் தஞ்சம் அடைந்து இங்கு நிரந்தரமாகக் குடியேறியவர்களும், இந்தியாவில் பூர்வீகம் இருந்து பாகிஸ்தான், பர்மா போன்ற நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து இந்தியாவில் நிரந்தரமாகக் குடியேறியவர்களும் கூட எழுதத் தகுதி பெற்றவர்கள்தாம்.

வயது வரம்பு

ஒவ்வொரு வருடமும் Employment News செய்தித்தாளில் நவம்பர், டிசம்பர் மாதவாக்கில் இத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகிறது.

குறைந்த பட்ச வயது

அந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதலாம் தேதி 21 வருடங்கள் நிரம்பப் பெற்றவர்கள்தான் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்

மேலும் விவரங்களுக்கு : ஐ.ஏ.எஸ் பயிற்சி விளக்க கையேடு

ஆதாரம் : அகில இந்திய சிவில் சர்வீஸ் பயிற்சி மையம், சென்னை

3.28571428571
மணிகண்டன் Jan 30, 2018 08:37 PM

தகவல் மிக அருமை ...... நன்றி விகாஸ்பீடியா

மணிகண்டன் Jan 28, 2018 12:18 PM

அருமையான புரிதல்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top