பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / அரசு திட்டங்களும் கொள்கைகளும் / சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள்

சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் பற்றிய வரையறை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

காடழிப்பு

உண்ண உணவு, சுவாசிக்க காற்று, குடிக்க நீர் இந்த மூன்றும் மனிதன் சுகாதாரமாக உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதவை. இந்த மூன்றையும் பெற்றபின் நாகரீகமாக அதாவது விலங்குகள் மற்றும் பிற உயிர்களிலிருந்து மாறுபட்டு வாழ உடுக்க உடை, இருக்க இருப்பிடத்தைத் தேடி அலைந்தான் மனிதன். இயற்கையோடு இணைந்து வாழ்ந்தபோது நண்பனாக பாவித்து வந்த இயற்கை, நாகரீகமாக வாழ தொடங்கியபோது எதிரியாக மாறிவிட்டது. அதாவது ஆடம்பரமாக வாழ காடுகளிலிருந்து மரங்களை வெட்டி அடுப்பெரிக்கவும், வீடுகள் கட்ட கதவு, சன்னல், மேசை, நாற்காலிக்காகவும் வீடுகளைக் கட்டிக் கொள்ளவும், விவசாயத்திற்காகவும் வனங்களை அழித்தான். அத்தோடு நின்று விடாமல் மாமிசத் திற்காகவும், அதன் தோலிலிருந்து ஆடம்பர பொருட்கள் தயாரிக்கவும் மிருகங்களை வேட்டையாடத் தொடங்கினான். விளைவு காடுகள் பாலைவனமாகவும் அறிய வகை விலங்குகள் படிப்படியாக மறையவும் தொடங்கின.

மதங்கள் எடுத்த நடவடிக்கை

இப்படி அழிந்துவரும் காடுகளையும் விலங்குகளையும் மனிதன் நாகரீகமாக வாழத்தொடங்கிய நாள் முதலே நாட்டை ஆண்டவர்கள் சிலர் கட்டுபாடுகளை விதித்ததிற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. உதா: கி.மு.321 மற்றும் 300 ஆண்டுகளிலிருந்து காணப்படுகிறது. கெளடில்யரின் அர்த்த சாஸ்திரம் இது குறித்து விளக்குகிறது. ஒவ்வொரு மனிதனும் இயற்கையைப் பாதுகாப்பது அவனது தார்மீக கடமை என்று கூறுகிறது. மேலும் முக்கிய மரங்களை வெட்டினால் என்ன தண்டனை கிடைக்கும் என்றும் மரமே கடவுளின் அவதாரம் என்றும் கூறுகிறது. இந்து மதத்தை பொருத்த மட்டில் இந்தியாவின் பண்பாடு, மதம் சார்ந்த எழுத்துக்கள், வேதங்கள் மற்றும் பஞ்ச பூதங்களை வணங்க வேண்டும் என்று சொல்கிறது. மேலும் மனிதன் தாவரங்களையும் விலங்குகளையும் தனக்கென எடுப்பது அனைத்தையும் பூமிக்கே திருப்பிக் கொடுக்கவேண்டும். பசு மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்தும் வேதங்கள் கூறுகின்றன. காடுகளை பாதுகாப்பது மனித குலத்தின் சட்டக் கடமையாக்கும் என்று மனுநீதி கூறுகிறது. அப்படி காடுகளை அழித்தால் அதை அழிப்பவன் தண்டிக்கப்படுவான். இந்து மதம் மட்டுமல்ல புத்தம் இஸ்லாம், ஜைனம், கிருஸ்துவம் ஆகிய மதங்களும் உயிருள்ள மற்றும் உயிரற்ற விலங்கு நீரின் சுத்தம், தாவரம் மற்றும் விலங்களிடம் அன்பு, மரம் நடுதல் ஆகியவற்றால் சுற்றுசூழலைப் பாதுகாப்பது அவசியம் என்று கூறுகிறது. சுருக்கமாக சொல்லபோனால் பண்டைய காலத்தில் சுற்றுசூழல் பாதுகாப்பு தார்மீக கடமையாக இருந்ததே தவிர தண்டனை சட்டங்களாக இருக்கவில்லை.

ஆங்கிலேயர் கால வன மேலாண்மைச் சட்டம்

இப்படிபட்ட சூழலில்தான் இயற்கையை மனித குலத்திடம் இருந்து பாதுகாக்க இந்தியாவிற்குள் நுழைந்த காலத்தில் மெக்கேலேயால் இந்திய தண்டனைச் சட்டம் 1860 இயற்றப்பட்டு சுற்றுச்சூழலை பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டோருக்கு தண்டனை வழங்க வகை செய்தது. Fifth Indian Easements Act 1882ன் படி சுற்றுச்சூழல், காற்று, நீர் மாசுபடுவதை தடை செய்கின்றன. காடுகளை பாதுகாக்க இந்திய வனச்சட்டம் 1865ல் இயற்றப்பட்டு மீண்டும் 1894ம் ஆண்டு வணக்கொள்கை கொண்டுவரப்பட்டது. பின்பு 1927ல் கொண்டுவரப்பட்ட திருத்தப்பட்ட இந்திய வனச்சட்டம் காடுகளை ஒதுக்கப்பட்ட காடுகள், கிராமப்புர காடுகள், பாதுகாக்கப்பட்ட காடுகள், அரசு சாரா காடுகள் என நான்கு பிரிவுகளாக பிரித்து வனக் கொள்கைகளை கடைபிடிக்கவும், பாதுகாக்கவும், தேவையான விதிகளும் ஒழுங்கு முறைகளும் வகுக்கப்பட்டன. 1893ல் வட இந்திய கால்வாய் மற்றும் கழிவுநீர் சட்டம், 1923ல் இந்திய கொதி கலன் சட்டம், 1908ல் உரிமையியல் நடைமுறைச் சட்டம், தீங்கியல் சட்டம் போன்ற சட்டங்கள் மூலம் வனங்களையும் நீர், காற்று மாசுவை மீறுவோர் மீது தண்டிக்கவும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் வகை செய்திருக்கிறது.

சுதந்திர இந்தியாவின் சுற்றுச்சூழல் சட்டங்கள்

வாழும் சூழல் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மேலோங்கியதின் பயனாய் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் இந்தியா வலிமையான, சிறப்பான சுற்றுச்சூழல் சட்டங்களை இயற்றியது. அதாவது தொழிற்சாலைச் சட்டம் 1948, இந்திய சுரங்கங்கள் சட்டம் 1952, மிருகவதை தடுப்புச் சட்டம் 1960, அணுசக்தி சட்டம் 1962 மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972ல் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தியது. இச்சட்டங்கள் மூலம் சுற்றுச்சூழலை மீறுவோர்கள்மீது தண்டனை வழங்க வகை செய்யப்பட்டிருந்தது. சுற்றுச்சூழல் மாசு என்பது இந்தியாவை மட்டும் பாதிக்கும் ஒரு காரணியாக இல்லாமல் உலக நாடுகள் அனைத்திற்கும் சுற்றுச்சூழல் மாசு பரவி விபரீத விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதால் அனைத்து உலக நாடுகளும் ஐநா சபையின் வழிகாட்டுதலின் பெயரில் சட்டங்கள் இயற்ற ஐ.நா கதவைத் தட்டின. இதன் விளைவாக ஐ.நா சபை பல வழிகாட்டு நெறிமுறைகளையும், நிதி உதவிகளையும் வழங்கி உலக நாடுகள் சுற்றுச்சூழலைப் பேணிகாக்க பல்வேறு வகையான சட்டங்கள் இயற்ற உதவி புரிந்தன.

சுற்றுச்சூழல் மாசுவை இயற்கையே மாசுபடுத்துதல் ஒன்று, மற்றொன்று மனிதனால் ஏற்படும் மாசு, இயற்கையால் ஏற்படும் மாசு என்பது புயல், வெள்ளம், பூகம்பம், சுனாமி, எரிமலை, நிலச்சரிவு, பனிப்புயல் போன்றவைகள். இவை இயற்கையால் ஏற்பட்டாலும் பாதிப்பு மிகவும் குறைவுதான். இவை திரும்பவும் பழைய நிலையிலேயே கொண்டு செல்லக்கூடியவை. ஆனால் மனிதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பூமி வெப்பமயமாதல், நீர், காற்று, நிலம் மாசு ஏற்படுகிறது. இவற்றை மனிதனால் பழைய நிலைக்கு கொண்டு செல்ல முடியாது. அப்படி கொண்டு செல்ல வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் தேவைப்படும்.

பரிணாம வளர்ச்சி

மனிதனின் பரிணாம வளர்ச்சி இரண்டு அடுக்குகளை கொண்டு வளர்ச்சியடைந்துள்ளது. 1.பாரம்பரிய அல்லது மரபு வழி வளர்ச்சி, 2. நவீன தொழில் நுட்ப வளர்ச்சி.

மரபு வழி வளர்ச்சி 18ம் நூற்றாண்டில் தொடங்கி வளர்ச்சி அடைந்து 18ம் நூற்றாண்டிலேயே மறைந்தது. மனிதன் மரபு வழியாக வாழ்ந்த காலத்தில் மக்கள் தொகை குறைவு, தொழில்நுட்ப வசதி குறைவு, மக்கள் பரவலாக வாழ்ந்து வந்தனர். பெரும்பாலான மக்கள் கிராமப்புரங்களில் வசித்தனர். இவர்களைச் சுற்றி அபரீமிதமான இயற்கை வளங்களான காடுகள், நீர், திறந்தவெளி நிலம், அதிகப்படியான வேளாண் நிலம், சுத்தமான காற்று, இத்தகைய வளங்களை குறைவாக பயன்படுத்தினான். இன்னும் சொல்லப்போனால் இயற்கையை வணங்கும் பழக்கம் இவர்களிடம் இருந்தது. இதில் மனிதனால் சுற்றுச்சூழலுக்கு அவ்வளவு பாதிப்பு இல்லை. ஆனால் நவீன தொழில்நுட்ப மேம்பாடு வளர்ச்சி 19ம் நூற்றாண்டில் தொடங்கி இன்று வரை அபூர்வமான வளர்ச்சியை கண்டுகொண்டிருக்கிறோம். அதாவது இங்கிலாந்தில் தொடங்கிய தொழில் புரட்சி அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு அதிவிரைவாக பரவத்தொடங்கியதன் விளைவுதான் சுற்றுச்சூழல் மாசின் தொடக்கக்காலம் என்று கூறுகின்றனர்.

நவீன தொழில்நுட்பக் கால மனிதன்

நவீன தொழில்நுட்ப வாழ்க்கை வாழ மனிதன் தொடங்கியது முதல் மக்கள் தொகைப் பெருக்கம் வளர்ச்சியடையத் தொடங்கியது. அதாவது, நவீன தொழில்நுட்ப வளர்ச்சி தொடங்கிய 19ம் நூற்றாண்டில்தான் மக்கள் தொகை அதிகரித்தது. 20ம் நூற்றாண்டின் இறுதியில் உலக மக்கள் தொகையில் அளவு சுமார் 600 கோடி. அதாவது ஒவ்வொரு ஆண்டும் 98 மில்லியன் மக்கள் கூடுதலாக சேருகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மக்கள் தொகையில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில்தான் பாதி அளவு உள்ளனர். இப்படி வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் உள்ள மக்கள்தான் காடுகள், நிலம், கடல், திறந்தவெளி போன்றவற்றை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுவை இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகள்தான் பாதி அளவு பயன்படுத்துகின்றனர். ஒருபுறம் வளர்ந்த நாடுகளும் மறுபுறம் வளரும் நாடுகளும் இயற்கை வளங்களை போட்டி போட்டுக்கொண்டு அழிக்கின்றன. இதற்கெல்லாம் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் மக்கள் தொகை பெருக்கம்தான். அதாவது மக்கள் தொகைப் பெருக்கம் சூழலை அழிக்கின்றன. நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் காரணமாக கிராம மக்கள் நகரங்களை நோக்கியப் பயணிக்கின்றனர். விளைவு நகர மக்கள் தொகை பலூன் போன்று விரிவடைந்து வருகின்றன. இதன் காரணமாக இவர்களுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் உணவு தேவைப்படுகிறது. விளைவு உற்பத்தி தொடங்க தொழிற்சாலை தொடங்கப்படுகிறது.

தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கழிவுகள் சுற்றுப்புறங்களில் தூக்கி எரியப்படுகிறது. மனிதக் கழிவுகள், கால்நடைக் கழிவுகள், நகராட்சி கழிவுகள் என அனைத்தும் கால்வாய், கடல், ஆறுகளில் போடப்படுவதால் நீர், நிலம், காற்று மாசடைகிறது. இப்படி மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக நிலம், நீர், காற்று மாசடைவதைத் தடுக்க மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நடவடிக்கைக்கான நிதியம் அறிக்கையின்படி(UNFPA) 1993ல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது மக்கள் தொகையில் ஒவ்வொரு ஆண்டும் 98 மில்லியன் மக்கள் சேர்க்கப்படும் இதே நிலை நீடித்தால் 2025ல் உலக மக்கள் தொகை 850 கோடியும் 2050ல் 1000 கோடியாகவும் எட்டும் என அஞ்சப்படுகிறது. இதனால் உலகச் சூழலியல், பொருளாதார மற்றும் பல சமூக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது. இப்படி மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவாக உலக நாடுகள் இயற்கை வளங்கள் சுரண்டலிலிருந்து அன்னை பூமியைக் காக்க 1972ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 27வது கூட்டத்தில் ஸ்டாக் ஹோம் பிரகடனம் முடிவுகளையும் , பரிந்துரைகளையும் தீர்மானத்தின் மூலம் ஏற்றுக்கொண்டது (மனித சுற்றுச்சூழல் மாநாடு). இதன் பயனாக உலக நாடுகளுக்கு சுற்றுச்சூழல் மேலாண்மையைப் பற்றி அறிவுரை கூறவும், சட்டமியற்றவும், நிதி உதவி செய்யவும் 1973ம், ஆண்டு மெளரீஸ் ஸ்டிராங் என்பவரை நிர்வாக இயக்குனராக கொண்டு ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் ஜெனிவாவில் தொடங்கப்பட்டது. இந்த மனித சுற்றுச்சூழல் மாநாடுதான் உலக நாடுகள் சுற்றுச்சூழல் பற்றி சட்டம் இயற்ற அடித்தளமிட்டன. இந்த மாநாட்டில் இந்தியா உட்பட 13 நாடுகள் கலந்து கொண்டன. பிளவு படாத சோவியத் ரஷ்யா மற்றும் பிற கம்யூனிஸ்ட் நாடுகள் கலந்து கொள்ளவில்லை. காரணம் ஜெர்மன் குடியரசுக்கு அழைப்பு விடுக்காததுதான். இந்த மாநாட்டில் 7 உலகளாவிய உண்மைகளும் 26 கொள்கைகளும் இயற்றப்பட்டன.

ஸ்டாக்ஹோம் பிரகடனம்

ஸ்டாக்ஹோம் பிரகடனம் அடிப்படையாகக் கொண்டு உலகில் பல நாடுகள் தானாக முன் வந்து சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்களை வகுத்துக்கொண்டன. இந்திய நாடாளுமன்றமும் இதற்கு ஆதரவு தரும் பொருட்டு ஏற்கனவே இருந்த சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வந்ததுடன் பல புதிய சட்டங்களும் இயற்றின.

  • 1974ல் கொண்டுவரப்பட்ட தண்ணிர் (மாசு தடுத்தல் மற்றும் கட்டுப்பாடு சட்டம்) காற்று (மாசு தடுத்தல் மற்றும் கட்டுப்பாடு சட்டம்)
  • 1981, பொதுப்பொருப்பு காப்பீட்டுச் சட்டம்
  • 1991, வனப் பாதுகாப்புச் சட்டம்
  • 1980, சுற்றுச்சூழல் பாதிப்பு அளவிடல் சட்டம்
  • 1997, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம்
  • 1986ல் கொண்டுவரப்பட்டன. இந்தியா வலிமையான சிறப்பாக உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் சட்டத்தை கொண்டுள்ளது.

உலகின் சுற்றுச்சூழல் சட்டங்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டமும் ஒன்றாகும். 1976ம் ஆண்டில் 42வது அரசியல் சட்டதிருத்தத்தின்படி இந்திய அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்ட 48(A) மற்றும் 51Ag) பிரிவுகளின்படி சுற்றுச்சூழலை பாதுகாப்பது அரசு மற்றும் மக்களின் கடமை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விதி 48-A

விதி 48-A படி குடிமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வளர்ச்சியடையச் செய்யவும், வளம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாக்கவும் முயல வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

விதி 51-A (g)

இந்த விதி நாட்டின் இயற்கை சூழலான வனம், ஏரி, ஆறு மற்றும் வன விலங்குகள் ஆகியவற்றை பாதுகாக்கவும், வளர்ச்சியடையச் செய்யவும், உயிரினங்கள் மீது பரிவு காட்டுவது குடிமக்களின் கடமை என்று கூறுகிறது.

ஸ்டாக்ஹோம் பிரகடனம் 1972-ஐ தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குபின் 1982ல் நைரோபி பிரகடனம் பிரேசில் நாட்டின் தலைநகரமான ரியோ-டி-ஜெனிரோவில் நடத்தப்பட்டது. தொடர்ந்து 10 ஆண்டுகள் கழித்து 1992ல் பூமி உச்சி மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் 20,000 மேம்பட்ட உறுப்பினர்கள் 178 நாடுகளிலிருந்து வந்திருந்தனர். இந்த மாநாட்டில் பங்கு கொண்ட நாடுகள் வேறுபாடின்றி புவியின் தட்பவெப்பநிலை கட்டுபடுத்துவதில் உடன்பாடு, புவி வெப்பமயமாதலின் பொருட்டு ஒவ்வொரு நாடும் தங்கள் வாயுக்களை வெளியிடும் அளவை குறைத்து கொள்ள முயற்சிகளை எடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டன. எனினும் இதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை. இதனை அடுத்து பூமி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த தட்பவெப்பநிலை மாறுதல் மீதான உடன்படிக்கை 1992 கியோடோ மாநாடு மற்றும் புவி வெப்ப மடைதல் மீதான நடவடிக்கை 1997, இதில் 159 நாடுகள் கலந்து கொண்டன. இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொழில் வளர்ச்சியடைந்த நாடுகள் அனைத்தும் ஒரு ஆண்டில் சராசரியாக வெளியிடும் மீத்தேன் CO2, CFC என ஆறு பசுமையுள்ள வாயுக்களின் அளவை 1990ம் ஆண்டின் அளவான 5.2% 2008க்கும் 2012க்கும் இடையேயான ஆண்டுக்குள் கொண்டுவர வேண்டும். 1992 ஐ.நா பொதுச்சபை உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி குறித்து விவாதிக்க 1992ல் கூடியது. இதன் நோக்கமே வாயு வெளியேற்றம் கடுமையான சட்டங்கள் அமல் செய்வதும் மாசுபடும் வரம்புகள் குறித்து நிர்ணயம் செய்யவும் அதன்மூலம் உலக சூழலின் பேரிடரிலிருந்து காக்கவும் வகை செய்கிறது.

உயிரியல் பல்வகை சட்டம் (Biological Diversity Act - 2002)

1992ல் கையெழுத்தான ரியோ-டி-ஜெனிரோவில் உயிரியல் பல்வகை மீதான ஐ.நா. உடன்படிக்கையிலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதன் நோக்கம் உயிரியல் பல்வகை பாதுகாப்பு. அதாவது காடுகளில் உள்ள தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் அவற்றின் மரபு பொருட்கள், அவற்றின் இயல்பான வழித்தோன்றல்கள் மற்றும் அவற்றின் திறன் சார்ந்த அறிவு சமன்பாடு போன்றவைப் பாதுகாக்க இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டப்படி பிரிவு 3 அல்லது 4 அல்லது 6 ஆகியவற்றின் கீழ் கொண்டு வரப்பட்ட வகையங்களை மீறுகிறோர் அல்லது எவரையும் மீற தூண்டுகிறாரோ அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.10 இலட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். அவ்வாறு மீறுவதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் பொருட்டு அபராதம் வசூலிக்கப்படும். அல்லது இழப்பீடு மற்றும் அபராதம் சேர்ந்து வசூலிக்கப்படும். மேலும் தீவிரமாக சுற்றுச்சூழல் மாசை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகள் வாரியத்தை தண்ணீர் (மாசு தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம் 1974ன் படி அமைத்தது. அந்த வகையில்தான் தமிழ்நாடு அரசு மாசு கட்டுபாட்டு வாரியத்தை 1974ம் ஆண்டு நீர் மத்திய அரசு சட்டம் 6ம் படி 27.02.1982 அன்று அமைக்கப்பட்டது. இது 1974ம் ஆண்டு நீர் (மாசு தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம், 1997ம் ஆண்டு நீர் (மாசு தடுத்தல் மற்றும் கட்டுப்பாடு) மேல் வரி சட்டம், 1981ம் ஆண்டு காற்று (மாசு தடுத்தல் மற்றும் கட்டுபாடு) சட்டம் மற்றும் 1986ம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின்கீழ் அடங்கிய பின்வரும் விதிகளின்கீழ் செயல்படுகிறது. 1986ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) விதிகள், திருத்தப்பட்ட 2008ம் ஆண்டின் தீங்கு விளைவிக்கும் கழிவுகள் விதிகள், 1994ம் ஆண்டு மற்றும் 2000ம் ஆண்டுகளில் திருத்தப்பட்ட 1989ம் ஆண்டு அபாயகரமான இரசாயனங்கள் உற்பத்தி, சேமிப்பு மற்றும் இறக்குமதி விதிகள், 2000 மற்றும் 2003ம் ஆண்டில் திருத்தப்பட்ட 1998ஆம் ஆண்டு மருத்துவ நுண்ணுயிர் கழிவு விதிகள், 2011ம் ஆண்டு பிளாஸ்டிக் கழிவுகள் விதிகள், 2000ம் ஆண்டு ஒலி மாசு விதிகள், 2000ம் ஆண்டு நகர திடக்கழிவுகள் விதிகள், திருத்தப்பட்ட 2001ம் ஆண்டு மின்கலன்கள் விதிகள், 2011ம் ஆண்டு மின்னணுக் கழிவுகள் விதிகள் போன்ற சட்ட திட்டங்கள் மூலம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் மாசுவை தடுத்து ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள வழிவகுக்கிறது. இப்படி இந்தியா சுற்றுச் சூழல் சட்டங்களை சரியாக செயல்படுத்தியதன் விளைவுதான், உலகிலேயே மிக குறைந்த அளவு கரியமில வாயுக்களை வெளியேற்றுகின்றன.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

3.01818181818
Hip hop Nov 04, 2019 04:12 AM

Very nice

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top