பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி சேமிப்பு / இந்தியாவின் கட்டிட சூழலில் எரிசக்தி சிக்கனத்தை மேம்படுத்துதல்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்தியாவின் கட்டிட சூழலில் எரிசக்தி சிக்கனத்தை மேம்படுத்துதல்

இந்தியாவின் கட்டிட சூழலில் எரிசக்தி சிக்கனத்தை மேம்படுத்துதல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மனித குல வரலாற்றில் மிக முக்கியமான சம்பவம் கடந்த 2008-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. உலகின் நகர்ப்புற மக்கள் தொகை, கிராமப்புற மக்கள் தொகையை விஞ்சியது தான் அது. உலகின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 0.05 விழுக்காடு அளவே உள்ள மாநகரங்களில் வசிக்கும் மக்கள் தொகையின் அளவு 21-ஆம் ஆண்டு நிறைவில் உலக மக்கள் தொகையின் அளவில் 80 விழுக்காட்டை தாண்டி விடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலும் நகரமயமாக்கல் வரலாறு காணாத அளவில் நடைபெற்று வருகிறது.

இப்போதுள்ள வணிக மற்றும் உயர்ந்த கட்டிடங்களின் எண்ணிக்கையைவிட இரு மடங்கு அதிக எண்ணிக்கையிலான கட்டிடங்கள் வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் கட்டப்படும் என்று மதிப்பிடப்பட்டிருகிறது. அதிவேகமான நகரமயமாக்கலால் இயற்கை சுற்றுச்சூழல் தொடர்பான தனித்துவமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக, வரும் பத்தாண்டுகளில் ஏற்படவிருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்காக நமது கொள்கை வகுப்பாளர்கள் புதுமையான முறையில் சிந்திக்க வேண்டியதும், பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்காக சூழலியல் மற்றும் எரிசக்தி பயன்பாட்டிலிருந்து ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக திட்டமிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

கட்டுமானத்துறையில் எரிசக்தி சேமிப்பு

நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் கட்டுமான நடவடிக்கைகளின் காரணமாக பெருமளவிலான வேலை வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த மின் நுகர்வில் 30 விழுக்காட்டிற்கும் அதிகமான அளவு கட்டிடங்களுக்கானது ஆகும். இந்தியாவின் கட்டுமானத்துறை 2005-ஆம் ஆண்டில் இருந்ததைவிட 2050-ஆம் ஆண்டில் 5 மடங்கு வளர்ச்சி அடைந்திருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இப்போது கட்டப்பட்டு வரும் கட்டிடங்களில் மின்சார சேமிப்பு உத்திகளை செயல்படுத்துவதன் மூலம் அடுத்து வரும் பல பத்தாண்டுகளில் மின்சாரத்தையும், அதன்மூலமாக மின்சார செலவையும் சிக்கனப்படுத்துவதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது.

கட்டிட உரிமையாளர்களும் கடைநிலை பயனாளர்களும் பயனடைவதற்கான தனிப்பட்ட மின்சார சேமிப்பை விட மின்சாரத்தை சேமிக்கும் வகையிலான கட்டிடங்களைக் கட்ட வேண்டியதன் அவசியம் மிகவும் முக்கியமானதாகும். ஆண்டுக்கு 9 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கிற்கு ஆதரவளிக்கும் வகையில், இந்தியாவின் ஒட்டுமொத்த எரிசக்தித் தேவை 2010-11 ஆம் ஆண்டிலிருந்து 2016-17 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் ஆண்டுக்கு 6.5 விழுக்காடு என்ற அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் தற்போது நிலவிவரும் எரிசக்தித் தட்டுப்பாட்டை சமாளித்து, இந்த இலக்கை எட்டுவது என்பது எரிசக்தி இறக்குமதி மற்றும் சர்வதேச எரிசக்தி விலையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்படும் வாய்ப்பு ஆகியவற்றை சார்ந்தே உள்ளது. அதுமட்டுமின்றி, தட்பவெப்ப நிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை சந்தித்துவரும் இந்தியா, உலகிலேயே அதிக அளவில் பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிக்க விருக்கிறது. இந்தியாவின் நீண்டகால வளர்ச்சித் திட்டமிடலில் எரிசக்தி சிக்கனத்தை மையக் கருத்தாக மாற்றுவதன் மூலம் இந்த சவால்கள் ஒவ்வொன்றையும் சிறப்பான முறையில் சமாளிக்க முடியும்.

இந்திய கட்டுமானத் துறையில் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பல்வேறு வகையான பொது மற்றும் தனியார் துறை முடிவெடுப்போரின் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இவர்களின் 2 பிரிவினர் மிகவும் முக்கியமானவர்கள். ஒன்று மாநில மற்றும் உள்ளாட்சிகள். இரண்டு ரியல் எஸ்டேட் துறையினர். முதலாவதாக தற்போதுள்ள கொள்கை சூழலில் மாநில அரசும் உள்ளாட்சிகளும் எரிசக்தியை சேமிக்கக் கூடிய முயற்சிகளை ஊக்குவிக்கத் தொடங்கி உள்ளன. கார்பன் வாயு வெளியேற்றத்தை தடுக்க கட்டிடங்களில் மின்சார சேமிப்பை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்று தட்பவெப்ப நிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான இந்தியாவின் தேசிய செயல் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எரிசக்தி சேமிப்பை அதிகரிப்பதற்கான பல்வேறு தேசிய இயக்கங்களும் தொடங்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய தேசிய மற்றும் மாநில அளவிலான கட்டிடங்களில் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதுதான் அவை வெற்றி பெறுவதற்கான முக்கிய தேவையாகும்.

எரிசக்தி சேமிப்பை அதிகரிப்பதற்கான தரங்களை நிர்ணயிக்கவும் சந்தைகளை ஆதரிக்கவும் மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மிகவும் முக்கியமானவையாகும். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்தை இந்தியா முழுவதுமுள்ள மாநில அரசுகள் அங்கீகரித்துள்ளன. எரிசக்தியை சேமிப்பதற்காக எரிசக்தி பராமரிப்பு கட்டிட விதிகள் என்ற புதிய விதியை கடந்த 2007ம் ஆண்டில் எரிசக்தி சேமிப்புக்கான அமைப்பு அறிவித்தது.

கட்டிட சந்தையை செலவு குறைக்கும் ஒன்றாக மாற்றவும் அதில் உள்ள தடைகளை களையவும் மாநில அரசு மற்றும் உள்ளாட்சிகளின் தலைமை மிகவும் முக்கியமானதாகும். எரிசக்தி பராமரிப்பு கட்டிட விதிகளை கட்டாயமாக்கி அதை சிறப்பான முறையில் செயல்படுத்துவதன் மூலம் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் மின் பயன்பாட்டை குறைக்க முடியும். எரிசக்தி பராமரிப்புக்காக கட்டிட விதிகளை ஏற்றுக் கொள்வது மட்டுமின்றி அதை செயல்படுத்துவதற்குரிய சூழலை உருவாக்க வேண்டியதும் முக்கியமானதாகும். குறிப்பாக இந்தியாவுக்கு இத்தகைய சூழல் மிகவும் முக்கியமானதாகும்.

மாநில அரசுகள் ஏராளமான சிறந்த நடை முறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் எரிசக்தி பராமரிப்பு கட்டிட விதிகளை அனைவரும் பின்பற்றுவதற்குரிய சூழலை ஏற்படுத்தலாம். உதாரணமாக, ஒரு மாநில அரசின் உள்ளூர் தட்பவெப்ப நிலை சூழலுக்கு ஏற்றவாறு இந்த விதிகளை பின்பற்றலாம்.

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகள்

  • எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகள் எங்கு செயல்படுத்தப்படுகின்றனவோ அங்குள்ள பூகோள தட்பவெப்ப நிலை சூழலுக்கு பொருந்தும். இந்த விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கவும் இந்த விதிகள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கான சட்டங்களில் சேர்க்கப்படுவதை உறுதி செய்யவும் உள்ளூர் அளவிலான வழிகாட்டு குழுக்களை மாநில அரசுகள் ஏற்படுத்தலாம். இந்த விதிகள் மற்றும் அதன் செயல்பாடுகளை பற்றி நன்கு அறிந்த பொறியாளர்களை விதி தொழிட்நுட்ப வல்லுநர்களாக நியமிக்கலாம்.
  • இதற்கான பயிற்சியை வழங்கி பல்கலைக்கழகங்கள் தொழிற் துறை நிறுவனங்கள் ஆகியவை பயனடையலாம்.
  • எரிசக்தியை சேமிக்கும் கட்டிடங்களை கட்டும்போது அவற்றின் எரிசக்தி பயன்பாடு உள்ளிட்ட அம்சங்களை விதி தொழிட்நுட்ப வல்லுநர்கள் கண்காணிப்பதற்கு வசதியாக எரிசக்தி பயன்பாட்டையும் விதிகள் நடைமுறைப்படுத்தப்படுவதையும் கண்காணிப்பதற்கான அமைப்புகளை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.
  • வணிகத் தரப்பில் கட்டிடங்களை கட்டுவதற்கான தேவையை ரியல் எஸ்டேட் துறையினர்தான் உருவாக்குகின்றனர். நிலத்தை வாங்குதல், நிதி பேரங்களை நடத்துதல், கட்டுமான ஒப்பந்தத்தை ஒப்பந்தத்தாரர்களிடம் வழங்குதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள்தான் செய்வார்கள். எனவே எரிசக்தி சேமிப்பு தன்மை கொண்ட கட்டிடங்களை கட்டுவதில் இவர்களால் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியும். எரிசக்தி சேமிப்பு கட்டிடங்களை கட்டி அது தொடர்பான தங்களின் முதல் அனுபவத்தை வெளிப்படுத்துவதன் மூலம் மற்ற கட்டுமான நிறுவனங்களையும் இவை பின்பற்ற வைக்கலாம். இதன் மூலம் எரிசக்தி சேமிப்புக்கான கட்டிடங்களை கட்டுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான செய்தி தொடர்பாளர்களாக ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் செயல்பட முடியும்.

காரணங்கள்

உலகம் முழுவதும் பசுமைக் கட்டிடங்களாக சந்தை தேவை அதிகரித்து வருவது மற்றும் எரிசக்தி சேமிப்பு ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் வாய்ப்புகளை உலகம் முழுவதுமுள்ள ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் அங்கீகரித்துள்ளனர். எரிசக்தி சேமிப்பு கட்டிடங்களில் முதலீடு செய்வதால் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுக்கும் பயன் கிடைக்கிறது. குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்தப்படுவதால் மின் கட்டணத்தில் ஏற்படும் சேமிப்பு, டீசல் ஜெனரேட்டர்களை அமைக்க வேண்டிய தேவை குறைவதால் எரிசக்தி சேமிப்பு கட்டிடங்களில் குடியிருக்க மக்கள் விரும்புவதால் கிடைக்கும் லாபம் அதிக வாடகை கிடைக்கும் வாய்ப்பு ஆகியவை ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுக்கு கிடைக்கும் பயன்களில் சிலவாகும். இப்போதைய நிலையில் உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுக்கு எரிசக்தி சேமிப்பு மற்றும் போட்டித் தன்மை தொடர்பான பயன்கள் குறித்த விழிப்புணர்வு முழுமையாக ஏற்படவில்லை. எரிசக்தி சேமிப்பு விதிகளை ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் தீவிரமாக கடைபிடிப்பதற்கு கட்டிடங்களால் கிடைக்கும் நிதி முட்டுக்கட்டையாக உள்ள விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். எரிசக்தி சேமிப்பு கட்டிடங்கள் சார்ந்த சந்தையை நோக்கி நாம் முன்னேற வேண்டுமானால் அத்தகைய கட்டிடங்களால் ஏற்படும் செலவு குறைவு குறைத்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மிகவும் அவசியமாகும். எரிசக்தி சேமிப்பு கட்டிடங்களை கட்டுவதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என்பதை உணர்ந்தால் அதிக எண்ணிக்கையிலான ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் இத்தகைய முறைக்கு மாறுவார்கள். இதற்கான விழிப்புணர்வை கூட்டு ஆய்வுகள் மூலம் ஏற்படுத்த வேண்டும். எரிசக்தி சேமிப்பு கட்டிடங்களை கட்டுவதற்காக தொடக்கத்தில் சற்று அதிக முதலீடு செய்ய வேண்டி இருப்பது இத்தகைய கட்டிடங்களை அமைப்பதில் ஒரு பெரும் தடையாக இருக்கலாம். ஆனால் தொடக்கத்தில் இதற்காக ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை முதலீடு செய்ய வேண்டியிருந்தாலும் அதனால் ஏற்படும் மின்சார சிக்கனம், அதன் மூலம் கிடைக்கும் லாபம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தொடக்கத்தில் செய்யப்பட்ட முதலீட்டை விட பெருமளவு லாபம் கிடைக்கும். எனவே எரிசக்தி சேமிப்பு கட்டிடங்களை கட்டுவதற்காக அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும் என்ற தயக்கத்தை போக்குவதற்கான முயற்சியில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து கட்டுமான நிறுவனங்கள் ஈடுபட வேண்டும்.

அடுத்த சில பத்தாண்டுகளில் இந்தியாவில் வரலாறு காணாத அளவில் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இதனால் எரிசக்தி பாதுகாப்பும், செலவு குறைவும் கொண்ட கட்டிடங்களுக்கான தேவை அதிகரிக்கும். அதே நேரத்தில் எரிசக்திக்கான தேவையும் அதிகரிக்கும் என்பதால் ஏற்கனவே பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் மின்சார கட்டமைப்பின் மீது அழுத்தம் அதிகரிக்கும். கோடைக் காலத்தின்போது இந்தியா அனுபவித்த மிகக் கொடுமையான மின் தட்டுப்பாட்டிலிருந்து கிடைத்த பாடங்களின் மூலம் மின்சார சேமிப்பு வசதி கொண்ட கட்டிடங்களை கட்டுவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் உதவி வழங்கி வருகின்றன. ஸ்மார்ட் வடிவமைப்பு அம்சங்கள் சிறப்பான ஒளி அமைப்பு, குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்கும் குளிரூட்டிகள் மற்றும் செலவை குறைக்கக் கூடிய தொழிற்நுட்பங்களை செயல்படுத்துவதன் மூலம் மின்சார கட்டணத்தை பெருமளவில் குறைக்கலாம் என்ற உணர்வை வீட்டு உரிமையாளர்களிடமும், வணிகர்களிடமும் ஏற்படுத்தலாம். இந்தியா போன்ற மின்சார தட்டுப்பாடு நிலவும் நாட்டில் மின்சார சேமிப்பு என்பது புதிய மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு இணையானதாகும். இவ்வாறு மின்சாரத்தை சேமிப்பதன் மூலம் இதுவரை மின்சாரத்தையே பார்க்காத கோடிக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் வழங்க முடியும். அது மட்டுமின்றி இந்தியாவை எரிசக்தி சேமிப்பின் மூலம் பொருளாதார வளர்ச்சியடையும் நாடாக மாற்றலாம். கண்ணுக்குத் தெரியாத மின்சார சேமிப்பு என்ற வளத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை அதிகரித்தல், பணத்தை சேமித்தல் ஆகியவற்றுக்கு மட்டுமின்றி தட்பவெப்பநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும் சமுதாயத்தையும் சுற்றுச் சூழலையும் பாதுகாக்கவும் நமக்கு உதவும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

ஆக்கம் : டாக்டர் ராதிகா கோஷ்லா, இந்தியா முன்முயற்சி, இயற்கை வள பாதுகாப்புக்குழு

2.72972972973
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top