பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சூழல் மாசு - ஓர் கண்ணோட்டம்

சூழல் மாசு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இந்த இனிய பூமி அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ உகந்த இயற்கையான சூழல் அமைப்பு கொண்டு விளங்குகிறது. சூரியனே இந்த இயற்கை அமைப்பின் தலைவன். நமது ஒட்டுமொத்த உயிர்க்கோளமும் சூரியன் எனும் ஆற்றலின் ஊற்றுக்கண்ணையே சார்ந்திருக்கிறது.

சூரியக் கதிர்களால் உயிர்க்கோளம் வெப்பமடைகிறது. இந்த வெம்மை உயிர்கள் குளிரில் குலைந்து போகாமல் காக்கிறது. சூரியனின் ஆற்றலை நமது வளிமண்டலம் வடிகட்டுகிறது. சுமார் 30 விழுக்காடு சூரியக்கதிர்கள் வளிமண்டலத்தால் விண்ணில் சிதறடிக்கப்பட்டுவிடுகின்றன. மீதமுள்ள ஆற்றலே புவியில் நுழைந்து நீரையும், காற்றையும், நிலத்தையும் வெப்பமூட்டுகிறது. இந்த ஆற்றலினாலேயே கடல் நீரோட்டம், காற்று மற்றும் காலநிலை மாற்றங்கள் நேரிடுகின்றன. கடல்நீர் மழைநீராகி வறண்ட நிலப் பகுதிகளையும் சோலைகளாக்கி நதிகளை உருவாக்கி நதிநீர் மீண்டும் கடல் சேரும் நீர்ச்சுழற்சியும் இந்த வெப்பத்தினால் தான் உருவாகிறது. சூரிய ஒளியாலேயே தாவரங்கள் உணவு தயாரிக்கின்றன.

காற்றிலுள்ள கரியமில வாயுவையும் நீரிலுள்ள ஹைட்ரஜனையும் கொண்டு கார்போ ஹைட்ரேட் எனும் உணவை உயிரினம் வாழ சமைத்துக் கொடுக்கும் பயிர்களின் செயல்பாடு சூரிய ஒளியாலேயே தூண்டப்படுகிறது. சூரியனால் பெறப்படும் ஆற்றல் உணவுச் சங்கிலியாக மாற்றமடைகிறது. பயிர்களை உண்ணும் விலங்குகள் முதன்மை நுகர்பவை (ஆடு, பூச்சிகள், எலிகள் போன்றவை) இவற்றை இரண்டாம் நிலை நுகர்பவைகளான விலங்குகள் கொன்று தின்கின்றன. இறந்த விலங்குகள் மற்றும் தாவர உடல்களை பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் சிதைத்து மீண்டும் மண்ணில் சேர்த்து அவற்றைத் தாவரங்களுக்கான ஊட்டச்சத்துப்பொருட்களாக மாற்றுகின்றன. இவற்றைப் பெற்று தாவரங்கள் வளர்கின்றன. இப்படி முழுமையான உணவுச் சங்கிலிச் சுழற்சி நேரிடுகிறது.

வேதியியல் சமநிலை

வேதிவினைகள் உயிர்க்கோளத்தை சம நிலையில் வைத்துப் பாதுகாக்க உறுதுணை புரிகின்றன. இந்த வேதிவினைகளும் சூரிய ஆற்றலையே நம்பியுள்ளன. நைட்ரஜன், கார்பன் மற்றும் ஆக்ஸிஜன் உயிர் வாழ்வைத்தக்கவைப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. காற்றில் சுமார் 78 விழுக்காடு நைட்ரஜன் உள்ளது. சுமார் 21 விழுக்காடு ஆக்ஸிஜனும் 1 விழுக்காடு கரியமிலவாயுவும் புற வாயுக்களும் உள்ளன. பசுந்தாவரங்கள் அனைத்திற்கும் கரியமிலவாயு தேவை. அவை கரியமிலவாயுவை எடுத்துக்கொண்டு உயிர்வளியை வெளியிடுகின்றன. மனிதர்களும் விலங்குகளும் வெளிவிடும் கரியமில வாயுவை தாவரங்கள் எடுத்துக் கொள்கின்றன. தாவரங்கள் வெளியிடும் உயிர்வளியை மனிதர்களும் விலங்குகளும் பயன்படுத்துகின்றன. இந்த சுழற்சியால் உயிர்வளியும் கரியமில வாயுவும் வளிமண்டலத்தில் சீராக இருந்து வந்தது. இது போல நைட்ரஜன் சுழற்சி, உயிர் வளி சுழற்சி, கரியமில வாயு சுழற்சி ஆகியவை முக்கியமான உயிர்கோள வேதி சுழற்சிகள்.

மனித இனம் விளைவிக்கும் சீர்கேடுகள்

 

தன்னைத்தானே சமநிலை செய்து கொள்ளும் இயற்கையின் ஒழுங்கமைவை மனித இனம் இப்போது குலைத்து புவியை வருங்காலங்களில் உயிர்வாழ்விற்குத் தகுதியற்றதாக செய்து வருகிறது. இதனைக் குறித்த விழிப்புணர்வைத் தோற்றுவித்து சூழலைக்காக்க வேண்டியது தற்போதைய அவசரத் தேவை.

முதலில் நாம் கண்ட இயற்கை சுழற்சிகளில் மனித செயல்பாடுகள் குறுக்கிடுகின்றன. உதாரணமாக பயிர்களை வளர்க்க அதிக அளவில் செயற்கை உரங்களை இடுகிறோம். அவை நைட்ரஜன் செறிந்தவை. மழை பெய்கையில் இந்த நைட்ரஜன் நீரில் கரைந்து நதிகளிலும் குளங்களிலும் சேருகிறது. இதன் பலனாக நீரில் நுண்ணுயிரிகள் அதிகமாகத் தோன்றி நீரிலுள்ள உயிர் வளியை உறிஞ்சி விடுகின்றன. இதனால் நீரில் வாழும் மீன் போன்ற உயிர்கள் குறைந்து வருகின்றன. பெட்ரோலிய எண்ணெய், நிலக்கரி போன்ற எரிபொருட்களை எரிப்பதால் உயிர்வளி மற்றும் கரியமில வாயு சுழற்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது. இவற்றை எரிப்பதால் சுமார் 990 கோடி டன் கரியமில வாயு ஆண்டுதோறும் வளிமண்டலத்தில் சேருகிறது. கரியமில வாயுவை அதிக அளவில் வெளியிடுவதில் முதலிடத்திலுள்ள நாடுகள் சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், இந்தியா, ஜெர்மனி, தென் கொரியா, கனடா, இங்கிலாந்து, இத்தாலி ஆகியனவாகும். இப்படி வெளியிடப்படும் வாயுக்களில் ஒரளவைத்தான் தாவரங்களும், கடலிலுள்ள ஃபைட்டோப்ளாங்டான் எனும் நுண்ணுயிர்களும் உறிஞ்ச முடியும். மேலும் ஒரு கணக்கீட்டின் படி ஆண்டுதோறும் 155000 சதுர கிலோ மீட்டர் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. நன்கு வளர்ந்த ஒரு மரம் ஓராண்டிற்கு சுமார் 100 கிலோ பிராண வாயுவை வெளியிட்டு 48 கிலோ கரியமில வாயுவை உறிஞ்சிக் கொள்ளும். காடுகளை அழிப்பதை நிறுத்துவது மட்டுமல்ல, காடுகளை வளர்ப்பதுவும் தற்போதைய தலையாய தேவை.

பசுங்குடில் விளைவு

குளிர் நிறை பகுதிகளில் வெப்ப மண்டலப்பயிர்களைக் காப்பாற்றி வளர்க்கவும், பொது மக்கள் கடுங்குளிரிலிருந்து தப்பி கதகதப்பான இடத்தில் இருக்கவும் அமைக்கப் படுவதே பசுங்குடில்கள். இவற்றின் கூரையும் பக்கவாட்டுச் சுவர்களும் ஒளி ஊடுருவும் நிறமற்ற கண்ணாடிகளால் இடைவெளியோ சாளரங்களோ இல்லாது அமைக்கப்பட்டிருக்கும்.

சூரிய ஒளி கண்ணாடிக்கூரை வழியே குழலினுள் புகுந்து அங்குள்ள காற்றை வெப்பப்படுத்தும். வெப்பமான காற்று சுற்றுப் புறக் குளிர்காற்றுடன் கலந்து விடாமல் கண்ணாடிக்கூரையும் சுவர்களும் தடுத்துவிடும். எனவே வெப்பக் காற்று குழலினுள் சூழலை கதகதப்பாய் வைத்திருக்கும். இது போன்ற ஓர் விளைவே பசுங்குடில் விளைவு. சூரிய ஒளி புவியின் வளிமண்டலத்தில் விழுகிறது. வளிமண்டலம், ஒரு பகுதி ரேடியோ கதிர்கள், நுண்ணலைகள், அகச்சிவப்புக் கதிர்கள், புற ஊதாக் கதிர்களின் பெரும் பகுதி, எக்ஸ் கதிர்கள், காமாக் கதிர்கள் எனப் பலவகை ஊறு விளைவிக்கும் கதிர்களை உறிஞ்சிக் கொண்டு ஒளியையும் ஒரு பகுதி ரேடியோ அலைகளையும் மட்டும் புவிப் பரப்பில் படச் செய்கிறது.

நிலமும், கடல்நீரும் சூரிய ஒளி ஆற்றலால் வெப்பப்படுத்தப்படுகின்றன. இந்த வெப்பத்தில் ஒரு பகுதி மீண்டும் விண்ணிற்கே திருப்பியனுப்பப்படுகிறது. இப்படித் திருப்பியனுப்பப்படும் கதிர் அலைநீளம் மிக்க அகச்சிவப்புக் கதிராக இருக்கும். புவியில் பட்ட ஒளிக்கதிரோ அலைநீளம் குறைந்த கண்ணுறு ஒளிக்கதிர்கள். திருப்பிச் செலுத்தப்படும் சூடான அகச்சிவப்புக் கதிர்களில் ஒரு பகுதி பசுங்குடில் வாயுக்களால் உறிஞ்சிக் கொள்ளப்படுகின்றன.

அகச்சிவப்புக் கதிர்கள் முழுதும் விண்ணில் கலந்து விடாமல் ஓரளவு வெப்பம் புவியை கதகதப்பாக வைத்துக்கொள்ளும்படி பசுங்குடில் வாயுக்கள் உதவுகின்றன. இது பசுங்குடிலிலுள்ள வெப்பமான காற்றுபோல செயல்படுவதால் இதனை புவியின் “பசுங்குடில் விளைவு" என்கிறோம். பசுங்குடில் விளைவு இல்லையேல் புவியில் கடுங்குளிர் நிலவி உயிர் வாழ்வு அடியோடு அழிந்து விடும். இயற்கையில் பசுங்குடில் வாயுக்களின் அளவு சீராகவும் தேவையான அளவிலும் பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. இதனால் புவி அளவான வெப்பத்துடன் இதமாக இருந்து வந்தது. ஆனால் மனித இனத்தின் சுயநலத் தேவைகளுக்காக பசுங்குடில் வாயுக்கள் பெருமளவில் வளிமண்டலத்தில் சேர்க்கப்படுவதால் வளிமண்டல வெப்பம் சீராக உயர்ந்து வருகிறது. கரியமிலவாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, குளோரோ ஃபுளுரோகார்பன்கள், ஹைட்ரோஃபுளோரோ கார்பன்கள், சல்ஃபர் டையாக்ஸைடு ஆகியவை பசுங்குடில் வாயுக்களில் குறிப்பிடத்தக்கவை. இவற்றில் கரியமில வாயுவே உலக வெப்பமயமாதலிற்கு சுமார் 26 விழுக்காடு வரை காரணமாக அமைந்துள்ளது. இது தவிர வளிமண்டலத்திலுள்ள நீராவியும் வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம். இது 36-70 விழுக்காடு காரணமாய் உள்ளது. நீராவியே நீர் சுழற்சிக்குக் காரணம். அதன் காரணமாகவே மழை பொழிகிறது. அது இயற்கையானது. மேலும் நீராவியின் அளவை நேரடியாக நம்மால் கட்டுப்படுத்த இயலாது. ஆனால் கரியமில வாயுவின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.

உலகின் சராசரி வெப்பநிலை

வானிலை ஆராய்ச்சியாளர்கள் சுமார் 30 ஆண்டுகால வெப்பநிலை அளவீடுகளை எடுத்துக் கொண்டு சராசரி வெப்பநிலையைக் கணிப்பர். ஆண்டு தோறும் நிகழும் வெப்ப நிலை பல காரணிகளால் மாறுபடும் என்பதால் நீண்டகால சராசரி அளவீடுகளைப் பயன்படுத்துவர்.

1961க்கும் 1990க்கும் இடைப்பட்ட காலத்தில் உலகின் வானிலையை ஆய்வு செய்து சராசரி வெப்பநிலை சுமார் 14 டிகிரி செல்சியஸ் எனக் கணக்கிட்டுள்ளனர். 2011 ஆம் ஆண்டு சராசரி வெப்பநிலை இந்த அளவிலிருந்து சுமார் 0.4 டிகிரி செல்சியஸ் அளவு உயர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த நூறு ஆண்டுகாலத்தில் உலகின் சராசரி வெப்பநிலை சுமார் 0.74 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. இதில் பாதியளவிற்கு மேல் (0.4 டிகிரி செல்சியஸ்) வெப்ப நிலை உயர்வு 1979 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிகழ்ந்துள்ளது. ஹவாய் தீவிலுள்ள மவுனாலோ வானாராய்ச்சி நிலையம் வளிமண்டலத்திலுள்ள கரியமிலவாயுவின் அளவை 1958 ஆம் ஆண்டு முதல் அளவீடு செய்து வருகிறது. இன்று இதன் அளவு வளிமண்டல வாயுக்களின் அளவில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு (ppm — Parts Per Million) என்ற அளவாக இருந்தது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2 ppm என்ற அளவில் இது வளர்ந்து வருகிறது. பசுங்குடில் விளைவைப் பற்றிய உண்மைகளை கி.பி. 1824ஆம் ஆண்டிலேயே முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜோசப் ஃபூரியர் என்ற ஃபிரான்சு நாட்டு அறிவியல் மேதையாவார். இப்போது உலக வெப்பமயமாதலை ஆய்வு செய்து வரும் அமைப்பின் கருத்துப்படி 21 ஆம் நூற்றாண்டில் உலக வெப்பம் 11 டிகிரி செல்சியஸ் முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை உயரும். தற்போதைய கரியமில வாயு வெளியேற்றத்தை நிறுத்திவிட்டால் கூட கடலின் வெப்பம் நீண்ட காலம் தணியாதென்பதாலும் கரியமில வாயுவின் ஆயுட் காலம் அதிகம் என்பதாலும் வெப்பநிலை உயர்வு தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

கரியமில வாயு செறிவும் விளைவுகளும்

நாம் தற்போது பயன்படுத்துவது போலவே பெட்ரோலிய, நிலக்கரிப் பொருட்களை பயன்படுத்தினால் 2100 ஆம் ஆண்டு வாக்கில் வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் செறிவு 540 - 970 ppm வரை சென்று விடும்.

கரியமில வாயுவின் அடர்வு மிகுவதால் உலக வெப்பம் அதிகரிக்கும். இதனால் கடலின் நீர் ஆவியாகி நீராவியின் செறிவு வளிமண்டலத்தில் அதிகரிக்கும். நீராவி புவி வெப்பமாதலுக்கு மிக முக்கிய காரணம். இது அகச்சிவப்பு வெப்பக்கதிர் சக்தியை ஈர்த்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. எனவே வெப்பம் மேலும் அதிகரிக்கும். மேலும் நீராவி அதிகமாக வளிமண்டலத்தில் சேரும். இதன் காரணமாய் மேகத்திரள்கள் உருவாகும். மேகங்கள் புவியிலிருந்து வெளிப்படும் வெப்பக்கதிர்களை பூமிக்கே திருப்பியனுப்பி மேலும் வெப்பப்படுத்தும். மறுபுறமோ சூரிய ஒளிக்கதிர்கள் புவிப் பரப்பில் படாமல் பிரதிபலிக்கச் செய்து குளிர்விக்கும். இவ்விரண்டு செயல்பாடுகளின் இணைந்த விளைவால் புவி வெப்பம் குறையுமா அதிகரிக்குமா என்பது குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. வெப்பநிலை உயர்வால் துருவப்பகுதிகளில் காணப்படும் வெண்பனியின் அளவு குறைந்துவிடும். வெண்பனி சூரிய ஒளியைப் பிரதிபலித்து குளிர்ச்சியை உண்டு பண்ணும். ஆனால் பனிமூடி உருகுவதால் அதிக சூரிய ஆற்றல் புவியை அடைந்து வெப்பநிலை உயர்வை உண்டுபண்ணும். மேலும் ஆர்க்டிக் பனிமூடி விலகுவதால் அங்கு உறைந்துள்ள மீதேன் வாயு வளிமண்டலத்தில் வெளிப்பட்டு புவி வெப்ப உயர்வை மேலும் அதிகரிக்கும்.

கரியமில வாயுவை உறிஞ்சிக் கொள்வதில் பெருங்கடல்கள் பெரும்பங்காற்றுகின்றன. கடல் வெப்பநிலை உயர்ந்தால் கரியமில வாயுவை உறிஞ்சும் ஆற்றல் குறைந்து விடும். எனவே வளிமண்டல கரியமில வாயு அதிகரிக்கும். 450 அல்லது 2 வளிமண்டலத்தின் கரியமில வாயு 450 ppm என்ற அளவைத் தொட்டாலோ அல்லது உலக வெப்பம் தற்போதுள்ள சராசரி அளவை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்தாலோ மேற்சொன்ன கட்டுப்படுத்த இயலாத வெப்பநிலை உயர்வு நேரிட்டு உலகிற்கு பேரிடர் நேரிடும். கரியமில வாயு செறிவின் தற்போதைய அளவு 398 ppm என்று பார்த்தோம். மனித இனம் உடனடியாக செயல்பட்டு பல தியாகங்களை செய்து கரியமில வாயு வெளியீட்டை நிறுத்தாவிடில் இருண்ட எதிர்காலம் நம்மை வந்தடையும்.

செய்யக்கூடியவை

  1. நமது வீட்டில் பயன்படுத்தப்படும் எரிபொருள் பசுங்குடில் வாயுக்களில் 16 விழுக்காடு அளவுக்கு வளிமண்டலத்தில் சேர்க்கிறது. தேவையில்லாத மின்விளக்குகள், மின்விசிறிகள், குளிர்சாதனப் பொருட்கள் ஆகியவற்றை அணைத்து விட வேண்டும்.
  2. டங்ஸ்டன் இழை மின்விளக்கில் பெரும்பகுதி வெப்ப ஆற்றலாக வீணாகிறது. எனவே குறுகிய நின்றொளிர் விளக்குகள் இவற்றில் 26 வாட் திறனுள்ள விளக்கு 100 வாட் திறனுள்ள டங்ஸ்டன் இழை விளக்குக்கு ஒளியைத்தரும். ஒளி (light Emiting Diode) மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் கரியமிலவாயு வெளியேற்றத்திற்கு 30 விழுக்காடு காரணமாக இருப்பது போக்குவரத்து வாகனப்புகைதான்.
  3. அலுவலகத்துக்கு அருகே குடியிருப்பை அமைத்துக் கொள்வதுவும் பொது போக்கு வரத்து வாகனங்களான பேருந்து, தொடர் வண்டி ஆகியவற்றைப் பயன்படுத்துவதும் நலம்.
  4. நான்கு சக்கர வாகனங்களில் காலியான இருக்கைகள் இல்லாது பயணிகளை ஏற்றிச் செல்வது எரிபொருளை மிச்சப்படுத்தும். முறையான வாகனப் பராமரிப்பு சக்கரங்களில் போதுமான காற்று அழுத்தம் ஆகியன மிக முக்கியம்.
  5. நமது இருப்பிடத்திற்கு அருகே விளையும் பொருட்களைப் பயன்படுத்துவதில் முன்னுரிமை தரவேண்டும். பல நாடுகளுக்கு அப்பாலிருந்து பெறப்படும் உணவுப் பொருட்கள் பழங்கள் ஆகியவற்றை எடுத்துவர பல டன் கரியமிலவாயு காற்றில் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

எரிபொருளைச் சேமிப்பது அரசின் கடும் சட்டம் எனக் கருதி காலம் தாழ்த்தாது உடனே செயல்படுவோம். இருண்ட எதிர்காலத்தைத் தவிர்ப்போம்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

முனைவர் ப. ஐயம்பெருமாள், செயல் இயக்குநர், தமிழ் நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், சென்னை - 600 025.

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top