பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உயிர்த் தோன்றலின் கோட்பாடு

உயிர்த் தோன்றலின் கோட்பாடு பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

உயிர்வழித் தோன்றல் (Biogenesis) என்றால் உயிர் அனைத்தும் ஏற்கனவே வாழ்கின்ற உயிரிகளிடமிருந்துதான் தோன்றியது என்று பொருள்படும், அதாவது உயிர் தானாகத் தோன்றக்கூடியதல்ல எனவும், உயிரற்ற பொருட்களிடமிருந்து கடவுளால் படைக்கப்பட்டதல்ல எனவும் அறியலாம். உயிரினங்கள் பெற்றோரிடமிருந்து அந்த இனத்தைப் போன்றே ஒத்த உயிரிகள் தோன்றுகின்றன. ஆனால், உயிரிகள் தானே உயிரற்ற வையினின்று தோன்றுதல் அல்லது ஸ்பான்டேனியஸ் உருவாக்கத்தில் போன்ற ஒன்றுக்கொன்று மாறுபட்ட பொருட்களிடமிருந்து உயிரிகள் தோன்றுகின்றன, என்ற கோட்பாடு பழங்காலத்தில் நிலவி வந்தது.

கற்களிடமிருந்து மனிதன் படைக்கப்பட்டான் என்ற கருத்தை அறவே புறக்கணித்தாலும், வெளியில் திறந்து வைக்கப்பட்ட உணவிலிருந்து புழுக்களும், பூச்சிகளும் தோன்றுவதை விளக்க இயலவில்லை. பிரான்சிஸ்கோ ரெடி (16-26-1697) (Francisco Redi) என்ற அறிஞர் இறைச்சி உள்ள குடுவையை ஒரு வலையினால் மூடிவைத்தார். இறைச்சியின் மணத்தால் கவரப்பட்ட பூச்சிகள் வலைமீது முட்டைகளை இட்டன. அவை இறைச்சியில் விழவில்லை புழுக்களும் தோன்றவில்லை. இதனைக் கண்டதும் திறந்து வைத்த இறைச்சியில் புழுக்கள் ஏற்படுவது இந்த பூச்சிகள் மூலம்தான் என நிரூபித்தார். ஆயினும் ஒரு சிலர் இறைச்சியில் தோன்றும் நுண்ணியிரிகள் (inicrobes) தானாகத் தோன்றுகின்றன என நம்பினர்.

ஜான் நீட்ஹாம் (John Needham 1749) இறைச்சியை வெப்பமான சாம்பலுக்கு காட்டிய பின்னும் அதிலிருந்து பாக்டீரியங்கள் தோன்றுவதையும் நிரூபித்தார். மாமிசத்தில் பாக்டீரியங்கள் ஏற்கனவே இல்லாத காரணத்தால், அவை தானே சுயமாக மாமிசத்திலிருந்துதான் தோன்றியதாக முடிவு செய்தார். இதே கால கட்டத்தில் லாசரோ ஸ்பாலன்ஜானி (LazarrO Spallain zani) என்பவர் மாட்டு இறைச்சி சாற்றை ஒரு மணி நேரம் காய்ச்சி, பிறகு அந்த பிளாஸ்கை காற்று நுழையாதபடி மூடிவிட்டால் அதில் நுண்ணுயிரிகள் தோன்றவில்லை என்று நிரூபித்தார். ஆயினும் இந்த கருத்து நீட்ஹாமை திருப்திப்படுத்தவில்லை. ஏனெனில், நீட்ஹாம் கருத்துப்படி பிளாஸ்கை மூடி விடுவதால், நுண்ணுயிரிகள் தாமாகத் தோன்றுவதற்கு இன்றியமையாத காற்று வெளியேறிவிடுவதுதான் நுண்ணியிரிகள் தோன்றாததற்கு காரணம் என்று வாதிட்டார்.

அறியாமை, மூட நம்பிக்கை மற்றும் பயம் காரணமாக ஆதிகால மக்கள் அனைத்து உயிரினங்களும் கடவுளால் படைக்கப்பட்டதாக நம்பினர். கிரேக்க இலக்கியத்தில் (Gaea) கயே என்னும் பெண்கடவுள் கற்கள் மற்றும் ஜடப்பொருட்களிலிருந்து மக்களைத் தோற்றுவித்ததாக நம்பப்பட்டது. மேலும் விலங்குகள் சுயமாக மண், தாவரங்கள் மற்றும் வேறுபட்ட விலங்குகளிடமிருந்து தோன்றியவை என்ற நம்பிக்கையும் இருந்தது. அரிஸ்டாடில் (384-322 BC) என்ற கிரேக்க தத்துவ ஞானியும் இதனையே கற்பித்தார். மற்றும் சிலர், காற்று மற்றும் வெப்பத்தில் மாமிசம் திறந்து வைத்திருந்த போது அதில் புழுக்கள் (maggots) தோன்றுவதைக் கற்பித்து அதன் அடிப்படையில், ஈக்கள் செயற்கை முறையில் தோன்றுகின்றன என்று கருதினர். கோதுமை ரவை, அழுக்கு படிந்த லினன் மற்றும் சீஸ் போன்றவற்றை ஒரு பாத்திரத்திலிட்டு அதனை சிறிது நேரம் வைத்திருந்தால் எலிகளைத் தோற்றுவிக்கலாம் எனவும் கூறினார்கள். உண்மையில், எலிகள் இந்த உணவால் கவரப்பட்டு வருகின்றனவேயன்றி, புதிதாகத் தோற்றுவிக்கப்படுவதில்லை. எனவே அறிவும் சிந்தனையும் கொண்டவர்கள் இந்த உயிரற்ற பொருட்களினின்று சுய உயிர் தோற்றத்தை (Abiogenesis) சந்தேகித்தனர். உயிரிகள் தோன்றும் முறை பற்றிய மாறுபட்ட கருத்துகளை கண்டறிய தொடங்கினர்.

ஏறத்தாழ 60-70 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்ஸ் ஷீல்ஸ் (Franz Schulze, 1815-1873) மற்றும் தியோடர் ஷ்வான் (Theodore Schwann 1810-1882) ஆகிய இரண்டு அறிஞர்கள் தனித்தனியாகச் செய்த ஆராய்ச்சிகள் மூலம் இதற்கான விடை கிடைத்தது. பிரான்ஸ் ஷல்ஸ் காற்றை அமிலத்தின் மூலமாகவும், தியோடர் ஷ்வான் காற்றை மிக வெப்பமான குழாய்கள் மூலமாகவும் செலுத்தியதால், நுண்ணுயிரிகள் தோன்றவில்லை. ஆயினும் அமிலமும், வெப்பமும் காற்றிலுள்ள முக்கியமான ஆற்றலை அழித்து விடுவதாகவும் அதனால் நுண்ணுயிரிகள் வளர்ச்சிக்கு துணை செய்ய முடியவில்லை என்றும் விவாதிக்கப்பட்டது. ஷ்ரோடர் மற்றும் (Schroder) வான் டஸ்க் (yon Dusch, 1850) காற்றைப் பஞ்சு வழியாக சூடான இறைச்சி திரவத்தில் செலுத்தி, இதனாலும் நுண்ணுயிரிகள் தோன்றவில்லை எனக் கண்டனர். ஏனெனில் காற்றிலுள்ள நுண்ணுயிரிகள் பஞ்சினால் வடிகட்டப்படுவதால், நுண்ணுயிர் வளர்ச்சி இல்லை .

இந்த கூர்மையற்ற ஊசிமீதுள்ள பொருட்களை, நுண்ணோக்கியில் உள்ள லென்சின் மூலம் தம் கண்களை வெகு அருகில் வைத்து உற்று நோக்குவார். அவரது நுண்ணோக்கி 50 முதல் 300 மடங்கு உருப்பெருக்கம் செய்யக் கூடியது. இதைப் போன்ற நூற்றுக்கணக்கான உபகரணங்களை இவர் உருவாக்கியுள்ளார். நுண்ணோக்கி செய்வது லீவென் ஹாக்கின் மகிழ்ச்சியான விருப்பார்வ வேலையாக இருந்தது. தன் வாழ்நாளின் பெரும் பகுதியை நுண்ணோக்கிகள் உருவாக்குவதிலும், அவற்றின் மூலம் உற்று நோக்குவதிலும், கண்டுபிடிப்புளை எளிய மொழியில் எழுதுவதிலுமே செலவழித்தார்.

ஆராய்ச்சிக்குப் பிறகுதான் நுண்ணுயிர் உயிரியல் ஆய்வுகூடங்களில் பஞ்சு அடைப்புகள் (cotton plug) பயன்படுத்தும் முறை தோன்றியது எனலாம். ஆன்டன் வான் லீவென்ஹாக்கும், அவரது மைக்ரோஸ்கோப்பும் ராபர்ட் ஹூக் காலத்தில் வாழ்ந்த ஆன்டன் வான் லீவென் ஹாக் (Anton van Leeuwen hoek, (1632-1723) ஹாலந்தில் டெல்ஃபில் பிறந்தார். (Delft, Holland) வெற்றிகரமான தொழிலதிபராக இருந்த அவர் சர்வேயர் ஆகவும், அரசாங்க ஒயின் சுவைமதிப்பீட்டாளராகவும் இருந்தார். 1660 இல், தலைமை நீதிபதி, ஷெரீப் மற்றும் டெல்ஃபி நகரத்தின் அரசின் சட்ட வல்லுனர்களுக்கு அரசின் உயர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 39 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருந்தார். அவர் முறையான கல்வியும் பெறவில்லை, பல்கலைக்கழகத்திலும் பயிலவில்லை. டச் (Dutch) மொழியைத் தவிர வேறு எந்த மொழியும் தெரிந்திருக்கவில்லை. ஆயினும் அவரது காலத்திலேயே அவர் பணிகள் பாராட்டுகளைப் பெற்றன.

இங்கிலாந்தில் ராயல் சொஸைட்டி என்ற சமுதாய அமைப்பு அறிவியல் வெளியீடுகளுக்காக நிறுவப்பட்டது. லீவென் ஹாக் அவர்கள் தன்னுடைய கண்டுபிடிப்புகளை ராயல் சொஸைட்டியின் பிரதிநிதிகளிடம் தெரிவிக்க அழைக்கப்பட்டார். 1680ல் ராயல் சொஸைட்டியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1723 ஆம் ஆண்டில் உயிர்நீத்த அவர் ஏறக்குறைய ஐம்பதாண்டுகள் தன்னுடைய கண்டுபிடிப்புகளை, டச் மொழியில் எழுதப்பட்ட நீண்ட கடிதங்களின் மூலம் ராயல் சொஸைட்டி உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டார். ராயல் சொஸைட்டியின் செயல்பாடுகள் மூலம் அவருடைய பல ஆராய்ச்சிகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன.

லீவென் ஹாக் கண்ணாடி லென்ஸ்களை உருவாக்கி பித்தளை தகடுகளில் நிறுத்தி வைத்துப் பயன்படுத்தினார். இதனை மைக்ரோஸ்கோப் என்று பெயரிட்டார். ஏறக்குறைய கோளவடிவ லென்ஸை (a) இரு சிறிய உலோகத்தகடுகளுக்கிடையே பொருத்தினார். லென்சுக்கு மேல் வைக்கப்பட்டுள்ள மாற்றியமைக்கக்கூடிய ஊசியின் மீது ஆராய்ச்சிப் பொருள் (specimen) வைக்கப்பட்டது. கூர்மையற்ற இந்த ஊசி இரண்டு திருகுகளை (c) and (d) பயன்படுத்தி உற்றுநோக்கப்படுகிறது. இந்த நுண்ணோக்கியில் உருப்பெருக்கத்தை மாற்ற வாய்ப்பில்லை. இதில் அமைந்துள்ள லென்சின் திறனைப் பொருத்துதான் உருப்பெருக்கம் அமைகிறது.

விதையின் அமைப்பு, தாவரங்களின் கருமுளை, விந்தணுக்கள் சிறிய முதுகெலும்பில்லா விலங்குகள், இரத்த சிவப்பணுக்கள் போன்றவற்றைப் பற்றி ஆராய்ந்துள்ளார். எனினும் நுண்ணுயிரி (அனிமல்க்யூல்) உலகுபற்றிய அவருடைய கண்டுபிடிப்பு மிகச் சிறந்தது. அக்டோபர் 9, 1676இல் தனது 18வது கடிதத்தை ராயல் சொஸைட்டிக்கு அனுப்பினார். அதில், ஒரு செல் விலங்குகளான புரோட்டோசோவா மற்றும் மிகச் சிறிய உயிரினமான பாக்டீரியா பற்றிய முதல் விளக்கம்  அளித்தார். ஆறு, கிணறு, கடல் மற்றும் மழை நீர் ஆகியவற்றைத் தம் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தினார்.

எண்ணற்ற கடிதங்களை லண்டனிலுள்ள ராயல் சொஸைட்டிக்கு எழுதினார். 1723 ஆம் ஆண்டு தமது 91வது வயதில் இயற்கை அடையும் வரை தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். லீவென் ஹாக்கின் கணக்கிடப்பட்ட 500 நுண்ணோக்கிகளில் 9 நுண்ணோக்கிகளும், அவர் வரைந்த படங்களும் இன்னமும் பாதுகாக்கப்படுகின்றன. லீவென் ஹாக் கண்டுபிடித்த நுண்ணோக்கிகளின் உருப்பெருக்கம் 266 x ஆகும். அவருடைய படங்கள் மற்றும் விளக்கங்கள் மூலமாக இன்னும் அதிக உருப்பெருக்கம் கொண்ட நுண்ணோக்கிகளை அவர் உருவாக்கியிருக்கக் கூடும் என்றும் அவை இழக்கப்பட்டுவிட்டன என்றும் அறிகிறோம்.

அனிமல்க்யூல் அவரது உற்றுநோக்கல் விளக்கம்

மனிதனின் வாய்ப்பகுதியிலுள்ள பாக்டீரியாக்களைப் பற்றியதாகும்.  குச்சிவடிவ பாக்டீரியாவை 'பேசில்லை' (Bacilli) என்றும், கோளவடிவ பாக்டீரியாவை 'காக்கை' என்றும் மற்றும் தக்கைத் திருகுகளைப் போன்று சுருண்ட பாக்டீரியாவை ஸ்பைரோகீட்ஸ் (Spiroketes) என்றும் பெயரிட்டார். 1670 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸில் வேதியியல் பேராசிரியாரான லூயிஸ் பாஸ்சர் தமது சுவான் கழுத்து பிளாஸ்க் சோதனை மூலம் (Swarn neck flask experiment) உயிர்கள் சுயமாகத் தோன்றுதல் (abiogenesis) கொள்கையை முறியடித்தார். நீண்ட, குறுகிய சுவான் கழுத்து துளை கொண்ட பிளாஸ்க்கில் சத்துகரைசல் திரவத்தைக் கொதிக்க வைத்தார். இதில் வடிகட்டப்படாத காற்று உள்ளே நுழைய முடியும்.

காற்றிலுள்ள நுண்ணுயிரிகள் கழுத்தில் தங்கிவிடுவதால், புதிய நுண்ணுயிரிகள் தோன்றவில்லை. மேலும் பஞ்சினால் வடிகட்டப்பட்ட காற்றை சத்துக்கரைசலில் செலுத்திய போதும், காற்றிலுள்ள நுண்ணுயிரிகள் வளரவில்லை எனக் கண்டார். எனவே காற்றில் நுண்ணுயிரிகள் உள்ளன எனவும் இவைதான் சத்துக் கரைசல்களில் சேர்ந்து அவற்றை சேதப்படுத்துகின்றன எனவும் தீர்மானித்தார். இவ்வாறு பாஸ்சரின் சோதனை மூலம் தானே தோன்றும் கொள்கை தவறு எனக் கைவிடப்பட்டது. ஜான் டிண்டல் (John Tyndall) தூசியில் நுண்ணியிரிகள் உள்ளன எனவும், தூசு இல்லாமல் இருந்தால், கொதித்து சேமிக்கப்பட்ட சாறு (broth) நுண்ணியிரிகள் வளர்ச்சி இல்லாமல் நீண்ட நேரம் கெடாமல் உள்ளது என்றும் கண்டார். நுண்ணியிரிகளின் வளர்ச்சியைப் பொறுத்து சுயமாகத் தோன்றுதல் கொள்கை கைவிடப்பட்டு (மறுக்கப்பட்டு) பயோ ஜெனிசிஸ் கொள்கை ஒத்துக் கொள்ளப்பட்டது. காக்னியார்ட் லேடோர் (CogniardLatour) ஈஸ்டு செல்களில் கிளைத்தல் ஏற்படுவதைக் கண்டு, செல்கள் ஏற்கெனவே உள்ள செல்களிலிருந்துதான் தோன்றுகின்றன என நிரூபித்தார்.

செல் கொள்கை

நுண்ணியிரிகளைப் பற்றி அறியும் முன்னர், தாவரங்கள் மற்றும் விலங்குகள் செல்களின் கூட்டமைப்பு என்றும் அவை ஒரு தனித் தொகுதி என்றும் கருதப்பட்டது. ராபர்ட் ஹூக் (1655) முதலில் செல் என்ற சொல்லைக் கூறினார். தக்கையின் அமைப்பில் துளையுள்ள உறைகள் உள்ளதை அறிந்தார். செல்கள் ஒரு செல் மற்றும் பலசெல் உயிரிகளை உருவாக்குகின்றான் என்ற செல் கொள்கையை மத்தியாஸ் ஸ்கிளிடன் (Mathias Schleiden) என்ற தாவரவியல் வல்லுனரும் தியோடர் ஷ்வான் என்ற விலங்கியல் வல்லுனரும் தனித்தனியே தோற்றுவித்தனர். செல் கொள்கையின்படி அனைத்து உயிரினங்களும் செல்களால் ஆனவை, அடிப்படை அமைப்பிலும் செயல்களிலும் ஒத்தவை, வளர்ச்சி செல்பெருக்கம் ஏற்படுத்தக்கூடிய திறன் படைத்தவை. ஒரு உயிரினத்தின் செயல்பாடு அதிலுள்ள ஒட்டுமொத்த செல்களின் செயல்களே ஆகும். செல் என்பது உயிரியின் மிகச் சிறிய பகுதியாகும். வெவ்வேறு வேதிப் பொருட்களாலான உணவைப் பயன்படுத்தி, இனப்பெருக்கம் செய்யும் சக்தி கொண்டது. ஒரு செல் உயிரிகள் பாக்டீரியா, ஈஸ்ட், முதலியன அமீபாவில் ஒரு தனி செல்லே ஒரு உயிரினமாக உள்ளது. ஆனால் பலசெல் தாவரங்கள், பலசெல் விலங்குகளில், செல்கள் ஒன்று சேர்ந்து வேறுவேறு திசுக்களை உருவாக்குகின்றன. இத்திசுக்கள் தாவரம் அல்லது விலங்கை உருவாக்குகின்றன.

வெவ்வேறு திசுக்கள் அளவு, வடிவம் ஆகியவற்றில் வேறுபடுகின்றன. ஆனால் அனைத்து செல்களும் சுவரையும், சைட்டோபிளாசத்தையும், உட்கருவையும் பெற்று செயல்படுகின்றன. இலையிலுள்ள எபிடெர்மல் செல், பாலிசேட் பாரன் கைமா மற்றும் கார்டிகல் செல்கள் அளவில் வேறுபட்ட போதிலும் அவை அனைத்தும் அமைப்பிலும், செயலிலும் ஒத்துள்ளன.

நொதித்தலில் நுண்ணியிரிகள்

நுண்ணியிரிகளால் பழங்கள், தானியங்கள் நொதிக்கும் போது ஆல்கஹால் தோன்றுவதாக லூயிஸ் பாஸ்சர் கண்டறிந்தார். பல்வேறு வகையான நொதிகளைச் சோதித்த அவர் பல்வேறு வகைப்பட்ட நுண்ணியிரிகள் உள்ளதைக் கண்டார். சிறந்த நொதித்தல் நிகழவும் பழரசம் மணம் குறையாமல் இருக்கவும். ஈஸ்டுகள் சிறந்தது எனவும் பழச்சாறு நொதிப்பதற்கு முன் குணம் மாறாமல் கொதிக்கவைத்து தேவையற்ற நுண்ணுயிரிகளை நீக்கவும் வேண்டும் என்று பாஸ்சர் கருதினார். பழச்சாற்றை 62.8°C (145°F) வெப்பநிலையில் ஒருமணி நேரம் வைத்திருந்தால் தேவையற்ற நுண்ணியிரிகளை நீக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டினார்.

இந்த நிகழ்ச்சி பாஸ்சரைசேஷன் என்று அழைக்கப்படுகிறது. இது இன்று மது மற்றும் பால் பதனிடும் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது. பாஸ்சரைசேஷன் என்பது ஒரு திரவ உணவை குறிப்பிட்ட வெப்பநிலையில் வெப்பப்படுத்தி தீமை செய்யும் தேவையற்ற நுண்ணுயிரிகளை அழித்து, தரத்தை உயர்த்த பயன்படுகிறது. ஒயின் தொழிற்சாலையில் தேவையற்ற ஈஸ்டு நுண்ணியிரிகள் பிரச்சினையை இவர் தீர்த்துவைத்தார்.

நுண்ணியிரிகளும் நோய்களும்

சில நோய்கள் பாக்டீரியாக்களால் தான் ஏற்படுகின்றன என்பதை பாஸ்சர் சோதனை மூலம் நிரூபித்தார். பிரான்ஸில் ஒயின் தொழிற்சாலைகளின் பிரச்சினைகளை பாஸ்சர் தீர்த்ததால், பிரான்ஸ் அரசு பட்டுப் புழுக்களில் ஏற்படும் பெப்ரின் நோய் (Pebrine) பற்றி ஆராய கேட்டுக் கொண்டது. பல ஆண்டுகள் ஆராய்ந்து, பெப்ரின் நோய் பரப்பும் நோய்க்கிருமியான ஓரணு ஒட்டுண்ணியான புரோட்டோசோவாவைப் பிரித்தெடுத்தார். மேலும் நோய்கிருமிகள் இல்லாத ஆரோக்கியமான பட்டுப்புழுக்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்த இயலும் என்றும் கண்டறிந்தார்.

கம்பள பிரிப்பான் நோய் (Wool sorters)

சாதாரணமாக ஆடுகள், ஆட்டு ரோமங்களுடன் வேலை செய்பவர்களைத் தாக்குகிறது. இதற்கு ஆந்தராக்ஸ் (Anthrax) நோய் என்று பெயர். மாடு ஆடு, சில சமயங்களில் மனிதனையும் இந்த நோய் தாக்குகிறது. இந்த நோயால் இறந்த விலங்குகளின் இரத்தத்திலிருந்து பேஸில்லஸ் ஆந்தராசிஸ் (Bacillus anthracis) என்ற பாக்டீரியத்தை பாஸ்சர் பிரித்தெடுத்து, ஆய்வு கூடத்தில் வளரச் செய்தார். அதே காலத்தில் (1843-1910) ஜெர்மனியில் ராபர்ட் காக் (Robert Koch) என்ற மருத்துவரும் ஆந்தராக்ஸ் நோயினால் இறந்த பசுவின் இரத்தத்திலிருந்து பேஸில்லஸ் பாக்டீரியாவைக் கண்டுபிடித்தார். இந்த பாக்டீரியாவைப் பிரித்தெடுத்து, ஆய்வகத்தில் வளரச் செய்து, இந்த ஒரு வகை பாக்டீரியா மட்டுமே இதில் உள்ளதை உறுதி செய்தார். ஆரோக்கியமான விலங்குகளில் இதனைச் செலுத்தி செயற்கை முறையில் நோய் ஏற்படச் செய்தார்.

நோய்வாய்ப்பட்ட விலங்குகளின் இரத்தத்திலிருந்து மறுபடியும் இந்த பாக்டீரியத்தைப் பிரித்தெடுத்தார். இது ஏற்கெனவே பிரித்தெடுத்த பாக்டீரியாவை ஒத்திருந்தது. இந்த சோதனைகள் காக்கின் கொள்கைகளைத் தோற்றுவிக்கப் பயன்பட்டன. ஒரு புதிய நோய்க்காரணி பிரித்தெடுக்கப்பட்டு அதன் நோயுண்டாக்கும் தன்மையை உறுதிப்படுத்த காக்கின் கொள்கை இன்றும் பின்பற்றப்படுகிறது. நுண்ணோக்கியில் தெளிவாக உற்றுநோக்கும் பொருட்டு ராபர்ட் காக் கண்ணாடித் தகட்டில் பூசுதல் மற்றும் சாயங்களைக் கொண்டு நிறமேற்றும் முறைகளை அறிமுகப்படுத்தினார். முதலில் ஜெலாடினைப் பயன்படுத்தியும் பின்னர் அகர் பயன்படுத்தி திடநிலையில் வளரும் தொகுதிகளை பிரித்தெடுத்தார். நுரையீரல் காச நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவைக் கண்டுபிடித்தார்.

பாஸ்சர் தனது தொற்று நோய்களைப்பற்றி ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தி கோழி காலரா பாக்டீரியத்தை பிரித்தெடுத்தார். தனது வெற்றியை நிரூபிக்க, மக்களைக் கூட்டி ஆரோக்கியமான கோழிகளுக்கு நோய்பரப்பும் பாக்டீரியங்களை செலுத்தினார். ஆனால் கோழிகளுக்கு நோய் பரவவில்லை. இதற்கான காரணத்தையும் பாஸ்சர் கண்டுபிடித்தார். புதிய வளர்ப்புகளுக்குப் பதிலாக பல வாரங்களுக்கு முன் தயாரித்த பாக்டீரிய வளர்ப்புகளைப் பயன்படுத்தியதால் நோய் உண்டாகவில்லை என அறிந்தார். எனவே மீண்டும் புதிய வளர்ப்புகளை புதிய கோழிகளுக்கும் ஏற்கெனவே செலுத்திய கோழிகளுக்கும் செலுத்தினார். புதிதாக செலுத்தப்பட்ட கோழிகள் நோய் ஏற்பட்டு இறந்தன. ஏற்கெனவே செலுத்தப்பட்டு நோயால் பாதிக்கப்படாத கோழிகள் நோய் வாய்ப்படாமல் உயிர் வாழ்ந்தன. இதனால் பழைய பாக்டீரியாவின் வீரியம் குறைவதால் நோய் ஏற்படுத்தும் தன்மையும் குறைந்துள்ளதென்று பாஸ்சர் விளக்கினார், நாள்பட்ட பாக்டீரியங்கள் வீரியத்தை இழப்பதை செயலிழந்த (attenuated) பாக்டீரியா என்று பாஸ்சர் அழைத்தார்.

இத்தகைய செயலிழந்த உயிரினங்கள் நோய் ஏற்படுத்துவதில்லை. ஓம்புயிரிகளில் எதிர்ப்பொருள் உண்டாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. இதைப்போன்று எட்வார்ட் ஜென்னர் மனிதர்களைத் தாக்கும் அம்மை நோய்க்குத் தடுப்பாக பசுவம்மையின் வைரஸ்களைப் பயன்படுத்தினார். பாஸ்சர் பயன்படுத்திய செயலிழந்த வளர்ப்புகளை வேக்சீன் என்றழைத்தார். வெறிநாய், பூனை, ஓநாய், கடிமூலம் மனிதனுக்கு தோன்றும் ரேபிஸ் என்ற நோய்க்கு வாக்சீன் தயாரிக்க பாஸ்சர் பாடுபட்டார்.

ரேபிஸ் மிகவும் சிறிய நுண்ணியிரியான வைரஸால் ஏற்படுகிறது. இத்தகைய வைரஸ் அவரது காலத்திலுள்ள நுண்மையான கருவிகளால் காண முடியவில்லை. ஆய்வுக் கூடத்திலும் வளர்க்க இயலவில்லை. எனவே வெறி நாய்களின் உமிழ் நீரை முயல்களுக்கு செலுத்தினார். இந்த முயல்களின் மூளை, தண்டுவடப் பகுதிகளை எடுத்து, உலர்த்தி, தூளாக்கி கிளசரின் கரைசலில் மிதக்கவிட்டார். இந்தக் கரைசல் நாய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கப்பயன்பட்டது. இதைப் போன்றே வெறி ஓநாயால் கடிபட்டு, ரேபிஸ் தாக்கப்பட்ட ஜோசப் மீஸ்டர் என்ற சிறுவனையும் காப்பாற்றினார் இவ்வாறு ரேபிஸ் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டது. மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கும் வேக்சின்களைச் செலுத்துவதன் மூலம் நோய்க்கு எதிரான தடுப்பாற்றலை உண்டாக்குகின்ற முறைக்கு வேக்சினேஷன் என்று பெயர். வேக்சின்கள் கொல்லப்பட்ட அல்லது செயலிழக்கச் செய்யப்பட்ட (attenuated) நுண்கிருமிகள் ஆகும். ஆன்டி டெட்டனஸ் ஸீரம் (ATS), டெட்டனஸ் டாக்ஸாயிடு போன்றவை டெட்டனஸ் நோய்க்கு எதிராக பயன்படுகின்றன.

ஜோசப் லிஸ்டர்(1827-1912)

காயங்களில் தோன்றும் புண்களுக்கு நுண்ணுயிரிகளே காரணம் என்று ஜோசப் லிஸ்டர் என்ற இளம் பிரிட்டிஷ் மருத்துவர் நிரூபித்தார். நொதித்தல் மற்றும் அழுகுதல் போன்ற செயல்களில் நுண்ணியிரிகளின் பங்கைப்பற்றிய பாஸ்சரின் ஆராய்ச்சிகளைப் பின்பற்றி லிஸ்டர் காயங்களில் நுண்ணியிரிகள் நுழையாமல் இருக்க நோய் நச்சுக்கள் பரவாத அறுவைசிகிச்சை முறையை உருவாக்கினார்.

அறுவை சிகிச்சையினால் ஏற்படும் அழுகுதல் நிலைக்கு திசுக்களை நுண்கிருமிகள் தாக்குவதே காரணம் என்றும் கருதினார். எனவே அறுவை காயங்களில் நுண்கிருமிகள் தாக்காமல் (நுழையாமல்) தடுக்கும் முறைகளை கண்டறிந்தார். 1862 ஆம் ஆண்டு ஆகஸ்டு 12 ஆம் தேதி, 11 வயதான ஜேம்ஸ் கிரீன்லீஸ் (James Greenlees) என்ற சிறுவன், ஜோசப் லிஸ்டர் சர்ஜனாகப் பணிபுரிந்த ராயல் இன்பர்மேரிக்கு கொண்டு வரப்பட்டான். ஜேம்ஸ் குதிரை வண்டியில் அடிபட்டிருந்தான்.

லிஸ்டர் உடைந்த எலும்புகளின் கீழ் 30% பீனால் கரைசலில் நனைத்த பாண்டேஜ்களைப் பயன்படுத்தி கட்டினார். ஆறு வாரங்களுக்குப்பின், உடைந்த எலும்புத் துண்டுகள் ஒன்று கூடியிருந்த நிலையில் ஜேம்ஸ் மருத்துவமனையிலிருந்து சென்றான். இந்த முறை வெற்றிகரமாக இருந்ததால், அறுவை சிகிச்சையில் ஒரு மாற்றம் ஏற்படுத்தியது. லிஸ்டர் கருவிகள் அனைத்தையும் வெப்பப்படுத்தினார். அறுவை செய்யும் இடத்தில் நீர்த்த ஃபீனால் கரைசலை தெளித்தார். இதன் மூலம் நுண்கிருமிகள் தாக்குவதை தடுக்க முடியும் என்று நிரூபித்தார்.

ரேபீஸ், காலரா நோய்களுக்கு வாக் சீன்கள் பற்றிய ஆராய்ச்சிகளின் மூலம் தடுப்பாற்றல் தோன்றுவதற்கு பாஸ்சரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஜென்னர், பாஸ்சருடன் எல்லி மிட்னிகாப் தடுப்பாற்றல் இயலில் முன்னோடியாக இருந்தார். இரத்தத்தில் உள்ள செல் சாராத பொருளால் தடுப்பாற்றல் ஏற்படுவதாக 1880 இல் நம்பப்பட்டு வந்தது. ரஷ்ய நாட்டு விலங்கியல் நிபுணரான எல்லி மிட்னிகாப் இரத்தத்திலுள்ள லியோகோசைட்டுகள் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியங்களை சூழ்ந்து விழுங்கிவிடுவதாகக் கண்டுபிடித்தார்.

அவற்றிற்கு ஃபாகோ சைட்டுகள் என்று பெயரிட்டார். தடுப்பாற்றலியலில் முதல் நிலை நுண்கிருமிகளைத் தாக்குகின்ற ஃபாகோசைட்டுகளை அடையாளம் காணுதல் ஆகும், தடுப்பாற்றல் இயல் மற்றும் ஃபாகோசைட்டுகளின் ஆராய்ச்சியில், 1908 இல் மிட்னிகாபிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

வினோகிராட்ஸ்கியின் பங்கு

பாஸ் சரின் ஈடு இணையற்ற கண்டு பிடிப்புகள் சாஜி நிக்கோலாவிச்சி வினோகிராட்ஸ்கியை நுண்ணுயிரியலில் வெகுவாக ஈர்த்தது. இந்த ரஷ்ய நாட்டு நுண்ணுயிரியல் அறிஞரின் கண்டுபிடிப்பு நன்மை செய்யும் பாக்டீரியங்களைத் தனிமைப்படுத்தவும், சுற்றுப்புற நுண்ணியிரியலைப் பற்றி அறியவும் பயன்படுகிறது. வினோ கிராட்ஸ்கி உண்டாக்கிய அணி வரிசை (column), ஒரு மிகச் சிறிய காற்றற்ற (anaerobic) சுற்றுச் சூழலை தோற்றுவிப்பதால் நுண்ணுயிரிகளின் சமுதாயத்தைப்பற்றி அறிய அது உதவும். சல்ஃபர், நைட்ரஜன் உயிரியல் சுழற்சி பற்றி நாம் அறிந்தவை அனைத்தும் வினோகிராட்ஸ்கியின் ஆராய்ச்சிகளிலிருந்துதான்.

ஆன்டிபயாடிக்ஸ்

நோய்களின் கிருமிகள் பற்றிய கோட்பாடு ஒப்புக் கொள்ளப்பட்ட பிறகு 1880ன் பிற்பகுதியில் ஆன்டிபயாடிக்ஸ் பற்றிய தேடுதல் தொடங்கியது. 1800 ஆம் ஆண்டின் மத்திய காலத்தில் ஹங்கேரி நாட்டு மருத்துவர் இக்னாட்ஸ் செம்மல்விஸ் மற்றும் ஆங்கில மருத்துவர் ஜோசப் லிஸ்டர் நுண்ணியிரி கட்டுப்படுத்தும் முறைகளைக் கண்டறிந்தனர். மனித உடல் இயற்கையான நோய் தடுப்பைப் பெறாமல், நோய் தடுக்க இயலாமல் இருந்தால் மருந்து கொடுக்கும் முறை பயன்படுகிறது. நுண்ணுயிரிகளின் வளர்ச்சிகளில் அவற்றிற்கு எதிரான மருந்துகள் வேலை செய்கின்றன. மேலும் இது அவை வாழும் ஓம்புயிரியிலேயே செயலாற்ற வேண்டியுள்ளது. ஆகவே ஓம்புயிரியின் செல்கள் மற்றும் திசுக்களில் இவற்றின் விளைவுகள் முக்கியமானவை.

சிறந்த ஆன்டிமைக்ரோபியல் மருந்துகள் ஓம்புயிரியை பாதிக்காமல் அதில் உள்ள நுண்ணியிரிகளைக் கொல்கின்றன. இந்த தடைகட்டினை (Inhibition) ஆன்டிபயோசிஸ் என்றும் இந்த வார்த்தையிலிருந்து தான் ஆன்டிபயாடிக் என்ற சொல் உண்டானதென்றும் அறிகிறோம். நுண்ணுயிரிகளால் உண்டாக்கப் படுகின்ற பொருளுக்கு ஆன்டிபயாடிக்ஸ் (உயிர் எதிரிகள்) என்று பெயர். ஒருசில மருந்துகள் விரிந்த செயல்பாடு பெற்று, கிராம் பாசிடிவ் கிராம் நெகடிவ் பாக்டீரியங்களைத் தாக்கும் திறனுள்ளவை. இவை பிராட் ஸ்பெக்ட்ரம் ஆன்டிபயாடிக்ஸ் எனப்படும்.

ஆன்டிமைக்ரோபியல் மருந்துகள் நுண்ணுயிரிகளை நேரிடையாகக் கொல்பவை அல்லது நுண்ணியிரிகளை வளர விடாது தடுப்பனவாகவோ இருக்கின்றன. 1929 ஆம் ஆண்டின் துவக்கத்தில், அலெக்சாண்டர் ஃபிளமிங் என்ற ஆங்கில அறிவியலாளர் பெனிசிலினை தற்செயலாகக் கண்டுபிடித்தார். 1939இல் ஹாவார்டு ஃபுளோரி, எர்னஸ்டு செயின் மற்றும் நார்மன் ஹிட்லி ஃபிளமிங்கிடமிருந்து பெனிசிலியம் பூஞ்சையைப் பெற்றனர். பல்வேறு துன்பங்களையும் தாண்டி, கச்சா மருந்தைக் கண்டுபிடித்தனர். 1946இல் இந்த மருந்து நோயாளிகளுக்கு பெருமளவில் பயன்படுத்தப்பட்டது.

1943 இல் செல்மன் வாக்ஸ்மென் (Selrman Walksman) மற்றும் அவரது குழு ஸ்டிரெப்டோமைசஸ் கிரிஸஸ் என்னும் பூஞ்சையிலிரந்து ஸ்டிரெப்டோமைஸின் என்ற ஆன்டிபயாடிக்கைக் கண்டுபிடித்தனர். ஏராளமான சாதாரண தொற்று நோய்களுக்கு ஸ்டிரெட்ப்டோமைசின் சிறப்பானதொன்றாக விளங்குகிறது.

ஆன்டிபயாடிக்ஸ் செல் சுவர் உருவாதலைப் பாதிக்கிறது. புரோட்டீன் தயாரித்தலைக் குறைக்கிறது. பிளாஸ்மா உறையில் சேதத்தை ஏற்படுத்துகிறது. உட்கரு அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் தேவையான வளர்சிதை மாற்றத்தின் பொருட்கள் தயாரிப்பைக் கட்டுப்படுத்துகிறது. சாதாரணமாகப் பயன்படுகின்ற ஆன்டிபயாடிக்ஸ் ஸ்டிரெப்டோமைசின், நியோமைசின், ஆம்பிசிலின், டெட்ராசைக்ளின் குளோராம்பினிகால், பேசிட்ரசின், எரித்ரோமைசின் போன்றவை ஆகும்.

நினைவில் கொள்ள வேண்டியவை

  1. பண்டைய மனிதர்கள் அறியாமையாலும், மூட நம்பிக்கையாலும், பயத்தினாலும் உயிர்கள் கடவுளால் படைக்கப்பட்டவை என்றும், தன்னைப்போல் அல்லாதவற்றினின்றும், பிற உயிரற்ற பொருட்களின்றும் சுயமாகத் தோன்றுவதாகவும் நம்பினர்.
  2. ஆன்டன் வான் லீவென்ஹாக் என்பார் கண்ணடிவில்லைகளை பித்தளை நிறுத்திகளில் பொருத்தி நுண்ணோக்கிகளைத் தயார் செய்து அவற்றின் மூலம், தண்ணீர், உமிழ்நீர் ஆகியவற்றை ஆராய்ந்து பாக்டீரியங்களின் உருவ அமைப்பை ஆராய்ந்தார்.
  3. லூயிஸ் பாஸ்சர் உயிர்களின் சுயதோற்ற கோட்பாடினை ஸ்வான் கழுத்து கொண்ட கண்ணாடி குடுவை ஆய்வுகளின் மூலம் தவறு என நிரூபித்தார்.
  4. மத்தியாஸ் ஸ்கிளிடன் மற்றும் தியோடர் ஷ்குவான் மேற்கொண்ட ஆய்வுகளினால் தனித்தனியே செல் கோட்பாட்டினை அறிவித்தனர். உயிர்களின் அடிப்படை உயிரணு எனப்படும் செல். ஒரு செல் உயிரினங்களில் ஒரு செல் ஒரு உயிராகின்றது. பல செல் தாவரம் மற்றும் மிருகங்களில் ஒத்த செல்கள் இணைந்து திசுக்களையும், திசுக்கள் சேர்ந்து உயிரினத்தையும் உருவாக்குகின்றன. எந்த உயிரினமாயினும் அனைத்து செல்களும் அமைப்பிலும், செயல்பாட்டிலும் ஒத்துள்ளன.
  5. லூயி பாஸ்சர் திராட்சை ரசத்திலிருந்து ஒயின் தோன்ற ஈஸ்டுகளே காரணம் என கண்டறிந்தார். தேவையற்ற பயன்படாத நுண்ணுயிர்களை பழச்சாறிலிருந்து அதன் மணம் மாறாமல் அழிக்க பாஸ்சரைசேஷன் என்ற முறையைக் கண்டார். அதனை ஒயின் மற்றும் பால் பதனிடும் தொழிற்சாலைகளில் பயன்படுத்துகின்றனர்.
  6. ஜோசப் லிஸ்டர் என்ற மருத்துவர் வெப்பத்தின் மூலம் உபகரணங்களை கிருமி நீக்கம் செய்யவும், நுண்மம் தடுப்பு பீனாலின் நீர்மக்கலவையை புண்களைக் கட்டப்பயன்படும் துணிகளிலும் அறுவை சிகிச்சை இடங்களையும் நோய்காரணிகளின் பெருக்கம் குறைக்கப் பயன்படுத்தினார்.
  7. ஆன்டிபயாடிக்ஸ் (உயிர் எதிரிகள்) மருத்துவத்தில் நோய் தடுக்கப்பயன் படுத்தப்படுகின்றன. 1929ல் அலெக்சாண்டர் பிளமிங் பென்சிலின் எனும் பூஞ்சையிலிருந்து பெனிசிலினைக் கண்டுபிடித்தார். 1943ல் செல்வன் வேக்ஸ்மேன் ஸ்டிரெப்டோமைசினை கண்டுபிடித்தார்.

ஆதாரம் : தமிழ்நாடு  ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
2.91666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top