பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மருத்துவ நுண்ணுயிரியல்

மருத்துவ நுண்ணுயிரியல் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பாக்டீரியாவின் நோய்த் தோற்றுவிக்கும் தன்மைகள்

  1. பாக்டீரியா வளருவதற்குத் தேவையான சூழ்நிலைகளான, உணவு ஈரப்பதம், வெப்பம் ஆகியவற்றை மனித உடல் அளிக்கின்றது. பாக்டீரியா மனித உடலை ஊடுருவுவதற்கும், ஒட்டிக்கொள்வதற்கும் (காலனி) குடியேற்றம் செய்வதற்கும் ஏற்ற மரபு தகுதியைப் பெற்றிருக்கின்றது. விருந்தோம்பியின் திசுக்களை அழித்து உணவைப் பெறுவதற்கும் சிதைக்கும் நொதிகளையும், விருந்தோம்பியிடமிருந்து பாதுகாத்து கொள்ளும் தகுதியையும் பெற்றுள்ளது. அவை மனித உடலில் தங்கியிருக்கும்போது பாக்டீரிய வளர்ச்சியால் வெளியிடப்படும் உடன்வினை பொருள்களான (By products) வாயு, அமிலம் ஆகியவை மனிதனுக்கு இடையூறுகளையும், சிதைவையும் ஏற்படுத்துகின்றன, பாக்டீரியாவின் பெரும்பான்மையான மரபு பண்புகள் வீரிய காரணிகள் இவை பாக்டீரியாவின் நோய் உண்டாக்கும் தன்மையை அதிகரிக்கின்றது. பல பாக்டீரியாக்கள் திசுக்களை அழித்து நேரிடையாக நோய்களை உண்டாக்குகின்றன.
  2. சில பாக்டீரியாக்கள் நச்சு பொருள்களை வெளியேற்றி அவை இரத்தத்துடன் உடல் முழுவதும் பரவி நோயை உண்டாக்கும். பாக்டீரியாவின் மேலுள்ள அமைப்புகள் விருந்தோம்பியிடம், உதாரணமாக கடுமைநிலை புரதங்கள் (Acutephase proteins) இன்டர்லூக்கின்-1, இன்டர்லூக்கின்-6, கழலை அழுகல் பொருள் (humor necrosis factor) பாதுகாப்பு தன்மையைத் தூண்டும். ஆனால் அவை பெரும்பாலும் நோய் அறிகுறிகளையே உருவாக்கும் (எ.கா. சீழ் தொற்று).
  3. எல்லா பாக்டீரியாக்களும் நோய் உண்டாக்குவதில்லை. சில பாக்டீரியாக்கள் தொற்றுதல் ஏற்பட்டவுடன் நோய் உண்டாகும். மனித உடலில் பல நுண்ணியிர் கூட்டங்கள் சாதாரணமாக வசித்து வருகின்றன. இவை உணவைச் செரித்தல், வைட்டமின்கள் (வைட்டமின் K) உருவாக்குதல், நோய்க்கிருமிகளை சூழ்ந்து விருந்தோம்பிக்கு பாதுகாப்பு அளித்தல் ஆகிய பணிகளைச் செய்கின்றன. இத்தகைய பாக்டீரியாக்கள், உணவுப்பாதை, தோல், சுவாச பாதையின் மேல் பகுதி ஆகியவற்றில் காணப்படும். சாதாரணமாக உடலில் வசிக்கும் பாக்டீரியாக்கள் கிருமிகள் அற்ற பகுதிக்குச் செல்ல நேரிடும்போது நோய் உண்டாக்கும். வீரிய பாக்டீரியாக்கள், விருந்தோம்பியின் திசு அல்லது உடலுறுப்புகளின் செயல்களைத் தடுத்து அவைகளின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.
  4. சந்தர்ப்பவாத பாக்டீரியாக்கள், சுலபமாக பாதிக்கப்படும் தன்மையை உடைய மனிதர்களில் நோயை உண்டாக்கும். சூடோமோனாஸ் எருஜினோசா தீக்காயமடைந்தவர்களை எளிதில் தொற்றும், எய்ட்ஸ் நோயாளிகள் பல்வேறு விதமான நோய் தொற்றுகளுக்கு எளிதில் ஆளாவார்கள் குறிப்பாக செல்களுக்குள் வளரும் மைக்கோபாக்டீரியம் விரைவில் தொற்றும்.
  5. நோயின் அறிகுறியானது பாதிக்கப்பட்ட திசுவின் பணியைக் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. நோயின் கடுமையானது பாதிக்கப்பட்ட உறுப்பையும், அது எவ்வளவு அளவு தொற்றுதலினால் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதையும் பொறுத்தது. மத்திய நரம்பு மண்டலத்தில் தொற்றுதல் ஏற்படுதல் மிகவும் கடுமையாக இருக்கும். பாக்டீரியாவின் வகை (strain) மற்றும் அதன் அளவு (sizes of the innoculum) ஆகியவையும் நோய் ஏற்படுவதற்கான பெரிய காரணிகளாகும். சில தொற்றுதல் செய்யும் பாக்டீரியாக்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் தொற்றுதல் செய்யும் (ஷிகல்லோசிஸ் நோயை 200க்கும் குறைவான ஷிகல்லா பாக்டீரியா உண்டாக்கும்) பெரிய எண்ணிக்கையில் இருந்தால்தான் (109) விப்ரியோ காலரே அல்லது காம்பைலோபாக்டர் உணவு இரைப்பைப் பாதையில் நோய் உண்டாக்கும். விருந்தோம்பியின் நிலைபாடும் காரணிகளாகச் செயல்படும். நலமுள்ள மனிதனில் உண்வு இரைப்பைபாதை நோய் உண்டாக்க மில்லியனுக்கும் அதிகமான சாலமோனெல்லாக்கள் தேவை. ஆனால் அமிலமில்லாது நடுநிலைத்தன்மையுள்ள இரைப்பை உடைய ஒரு மனிதனில் சில ஆயிரம் பாக்டீரியாக்கள் மட்டும் போதும். பிறவிக்குறைபாடு மற்றும் எதிர்ப்பு சக்தி குறைந்த நிலை உள்ளவர்கள் எளிதில் தொற்றுதலுக்கு ஆளாவார்கள்.

வீரிய காரணிகள் (Virulence factor)

பாக்டீரியாவில் நோய் ஏற்படுத்தும் காரணிகள் பல உண்டு. பாக்டீரியாக்களில் உள்ளதும், அலைகள் உண்டாக்கும் பொருள்களும் அவற்றின் செயல்பாடுகளும் வீரிய காரணிகள் எனப்படும்.

நச்சுப் பொருள்கள்

ஆரம்ப நாட்களிலேயே (1884-90) டிப்தீரியா மற்றும் டெட்டனஸ் பாக்டீரியாக்கள் நச்சுப் பொருள்கள் உண்டாக்குவதையும், அந்த நச்சுப் பொருள்கள் விலங்குகளில் செலுத்தும் போது நோய் உண்டாக்குவதையும் கண்டறிந்திருந்தார்கள். விரைவில் இத்தகைய நச்சுப்பொருள்கள் அநேகம் என கண்டறியப்பட்டது. ஸ்ட்ரெப்டோகாக்கை, ஸ்டபைலோகாக்கை, க்ளாஸ்டீரிடியா பாக்டீரியாக்கள் சோதனை செய்யும் விலங்குகளைச் சேதப்படுத்தும் பல்வேறு புரதங்களையும், நொதிகளையும் உண்டாக்குவது கண்டறியப்பட்டது. பின்பு வயிற்றுப்போக்கை உருவாக்கும் வெளி நச்சுப் பொருள்கள் கண்டறியப்பட்டன. சில நோய் உண்டாக்கும் பாக்டீரியா வெளிநச்சு உருவாக்கவில்லை. எனினும் செல்லுடன் இணைந்து காணப்படும் உள்நச்சுப் பொருளை உருவாக்குவது கண்டறியப்பட்டது. இந்த உள் நச்சு லிப்போ சாக்ரைடால் ஆனது. இந்த நச்சுப் பொருள்கள் தான், கால்ச்சல், இரத்த குழாய்க்குள் குருதி உறைந்து அடைப்பு ஏற்படுத்தி, சைடோகின் உருவாக்குதல் மூலம் மரணத்தை ஏற்படுத்துகிறது என்பது அறியப்பட்டது. ஸ்டபைலோ காக்கஸ் பாக்டீரியாவின் வெளிநச்சு வெள்ளை செல்களை அழிப்பது விளக்கப்பட்டது. ஸ்டபைலோகாக்கஸ் ஆரியஸ் இவ்வாறு மூன்று வெளிநச்சுப் பொருட்களை உருவாக்குவது தெரியவந்தது. வெள்ளைச் செல்களை அழிக்கும் லுக்கோசைடின்கள் மேலும் பல பாக்டீரியாக்களில் கண்டறியப்பட்டன.

நச்சுப்பொருள் அல்லாத வீரிய காரணிகள்

பாக்டீரியாக்கள் தொற்றி நிலைப் பெற சில பொருட்கள் உதவும். இவை அஃரசின் (aggresins) எனப்படும். பாக்டீரியாவின் சில பொருள்கள் அவற்றின் தீவிரத்தன்மையை நிர்ணயிக்கும் திறன் உள்ளவை. ஆன்டி சீரம் தொற்றுதல் உண்டாக்கும் உயிரிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும்.

கேப்சூல் (உரை)

நியுமோ காக்கை பாக்டீரியாவின், பாலிசாக்ரைடு மேலுறை, ஸ்ட்ரெப்டோ காக்கஸ் பையோஜீன்ல் 'M' புரதம், இவை இரண்டும் பேகோசைட்டோசிஸ்ஸை (செல்விழுங்குதலை) தடை செய்யும். ஸ்டபைலோகாக்கஸின் உறை (capsule) பாக்டீரியாவின் மேற்புறத்தை அடைவதற்கு தடையாய் அமையும்.

'M' புரதம் மெல்லிய அடுக்காக பரவி செல் விழுங்குதலைத் தடுக்கும் : மற்றைய நோய்க்கிருமிகளில் மேற்புறத்தில் காணப்படும். பாலிசாக்கரைடு தீவிரத்தன்மையை அதிகரிக்கும். என்டரோ பாக்டீரியாவின் 'K' 'ஆன்டிஜென் ஹீமோபில்லஸ் இன்புளுயன்சா', மற்றும் நெய்சீரியா மெனிஞ்சைடிடிஸ் (Neisseria) இவற்றின் பாலிசாக்கரைடு உறை இதில் அடங்கும். செல் விழுங்குதலை தடை செய்வதுடன் விருந்தோம்பி திசுவின் அன்டிஜெனிக் பண்பைத்தான் கொண்டது போல் ஏமாற்றும்.

பாக்டீரியாவின் மேல்புறத்தே காணப்படாத வழுவழுப்பான செல் வெளிப்பொருள் நோய் உண்டாக்குவதில் ஆற்றும் பங்கு தற்போது அறியப்பட்டுள்ளது. வாயில் காணப்படும் ஸ்ட்ரெப்டோகாக்கை பாக்டீரியாக்களின் 'டெக்ஸ்ட்ரான்' பொருள் பற்களில் கறை (plaque) உண்டாக்கும். 'ஸ்லைம்' உருவாக்கும் குயாகுலேஸ் உண்டாக்காத ஸ்டபைலோகாக்கை பாக்டீரியாக்கள் உயிரற்ற பொருள்கள் மீதும் பாக்டீரியாக்களை உருவாக்கும் தன்மையுடையவை. 'சிஸ்டிக் பைபுரோசிஸ்' எனும் நோயுள்ள மனிதர்களில் அல்ஜினேட் ஸ்லைம் உருவாக்கும் சூடோமோனாஸ் எருஜினோசா சுவாச பாதையில் பாக்டீரியா காலனி உருவாக்குவதற்கு உதவும்.

ஒட்டும் பொருள் (Adhesins)

நோய் உண்டாக்குதலின் முதல் நிலையில் பாக்டீரியாக்கள், சுவாசபாதை, உணவுப்பாதை, சிறுநீரக, இனப்பெருக்க பாதைகளிலுள்ள எப்பிதீலிய செல்களின் கோழைப்படலத்துடன் ஒட்டும் பொருளால் ஒட்டிக் கொள்ளும். ஈ. கோலை பாக்டீரியா உணவுப் பாதையில் எப்பிதியியல் செல்களில் ஒட்டிக்கொள்வதால் அவற்றால் உள்நச்சுப் பொருள்களை உருவாக்கி உறுஞ்சிக் கொள்ள முடியும். இந்த ஒட்டுதலுக்கு பைலி அல்லது பிம்பிரியேவின் பங்கு முக்கியமானது. இது போன்று பிம்பிரியே ஒட்டுதல் மனிதன் மற்றும் பாலூட்டிகளில் வயிற்றுப் போக்கு உண்டாக்கும் பாக்டீரியாவில் கண்டறியப்பட்டது. பிம்பிரியல் ஒட்டுப்பொருள், கோனோகாக்கை, மற்றும் மெனின்ஜோகாக்கை பாக்டீரியாக்களில் கண்டறியப்பட்டுள்ளது. விப்ரியோ காலரேயின் நீளிழை கோழைப்படலத்தை துளைத்து எப்பீதிலியத்திற்குள் நுழைய உதவுவதால் நீளிழை வீரிய காரணியாக கருதப்படுகிறது. தீவிரத்தன்மையுள்ள மற்ற ஒட்டுப் புரதங்கள் தவிர செல்சவ்லின் மீது பாலிசாக்ரைடுகளுடன் நெருங்கிய தொடர்புடையதாய் காணப்படுகின்றன. உணவு பாதையின் எப்பிதீரிய செல்களுக்குள் ஊடுருவும் ஷீகலே மற்றும் ஷகலே போன்ற ஈ. கோலை பாக்டீரியாக்களில் இது உண்மையாகிறது. ஸ்ட்ரெப். பையோஜீன்ஸ் பாக்டீரியாக்கள் தொண்டைபுற எப்பிதீலியல் செல்களில் செல் ஜவ்வின் மீதுள்ள லிப்போ புரோடிக் அமிலத்தின் உதவியுடன் ஒட்டிக்கொள்ளும்

மாறுபடும் ஆன்டிஜென்கள் (Antigenic Variation)

சில பாக்டீரியாக்கள் விருந்தோம்பியின் நோய்தடுப்பாற்றலை மாறுபடும் ஆன்டிஜென்கள் மூலம் தடுக்கின்றன. முதலில் அசல் பொரிலியா பாக்டீரியா நுழைந்து உடலில் எதிர்ப்பொருள் உருவான பின்பு திடீர் மாற்றமடைந்த பொரிலியா உடலில் நுழைவதால் விட்டு விட்டு காய்ச்சல் வருகிறது. இது திடீர் மாற்றம் பாக்டீரியாவின் ஆன்டிஜன் வேறுபாடின் காரணமாகும். கோனோகாக்கை பாக்டீரியா இரண்டு விதங்களில் மேற்புற ஆன்டிஜென்னை மாற்றி அமைக்கின்றது.

அதிதீவிர காரணிகளின் செயல்பாடுகளின் ஒருங்கிணைப்பு

நுண்ணியிரிகளின் நிலையிலிருந்து பார்த்தால் நோய் உருவாக்குதல் என்பது நுண்ணியிரிகள் புதிய விருந்தோம்பிக்கு கடத்தப்படுத்தலும், துரிதப்படுத்துதலும் ஆகும். அதனால் அவை நீண்ட காலம் வாழும் தன்மையைப் பெறுகிறது. ஒரு சிறந்த வீரிய காரணியானது விருந்தோம்பியைக் கொல்லாமல் தொற்றுதலை நீண்ட காலத்திற்கு நீட்டிப்பதாகும். ஒரு எளிய வாழ்க்கை சுழற்சியில் பாக்டீரியா விருந்தோம்பியின் உள்ளே நுழைவது முதல், விருந்தோம்பியின் நோய்த்தடுப்பாற்றலை தோற்கடிப்பதும், பெருக்கமடைவதும் விருந்தோம்பியிடமிருந்து வெளிவருவதும், வெளி உலகில் உயிர் வாழ்ந்து மீண்டும் இதையே தொடர்தல் ஆகும். பல பாக்டீரியாக்களின் சுழற்சி இதைவிட சிக்கலானதாகும். பேசில்லஸ், இ.கோலை ஆகியவை உணவுப் பாதை மூலம் உடலுக்குள் நுழைபவையாகும்.

உட்சுவாசித்தல் (சுவாசபாதை)

மூக்கு, சுவாசபாதை வழியாக பாக்டீரியாக்கள் உடலுக்குள் நுழைந்து நோயை உண்டாக்குகின்றன. சுவாச பாதை மூலம் உடலுக்குள் புகும் சில பாக்டீரிய இனங்கள், மைக்கோபாக்டீரியா நோகார்டியா, மைக்கோபிளாஸ்மா, லீஜியோனெல்லா, பார்டெடெட்லா, கிளமைடியா, ஸ்ட்ரெப்டோகாக்கை, ஹீமோபில்லஸ் ஆகியவையாகும். சுவாசபாதையில் கோழை, குறு இழை எப்பிதீலியம், லைசோசைம் ஆகியவை இயற்கை தடுப்புகளாக செயல்படும். பாக்டீரியாக்கள் கோழைப் படலத்தில் சிக்கி உள்ளே நுழையாதவாறு தடுக்கப்படுகிறது. குறு இழை எப்பிதீலியத்திலுள்ள குறுஇழைகள் பாக்டீரியாக்களை வெளியே தள்ளும். லைசோசைம் கிராம் பாசிடிவ் பாக்டீரியாக்களின் செல் சுவரை சிதைத்து அவற்றை செயலற்றதாகிவிடும். ஆனால் பல பாக்டீரியாக்கள் இந்த தடுப்புகளிலிருந்து சில வழிகள் மூலம் தப்பி உள்ளே செல்லும்.

சுவாச பாதை மனித உடலில் நுழைதல்

தொற்றுதலை பலமாக நிறுவுவதற்கு முதலில் பாக்டீரியா மனித உடலில் நுழையும். சாதாரணமான எதிர்ப்புச் சக்தி தடைகளான தோல், கோழை, குறு இழை எப்பிதீலியம், பாக்டீரியல் எதிர்ப்பு காரணியான லைசோசைம் (Iysozyme) நிறைந்த சுரப்புகள் பாக்டீரியா உடலுக்குள் நுழைவதை பலமாக தடுக்கும். சில சமயம் இத்தடுப்புக்கள் உடைக்கப்படுவது (எ.காட்டு தோலில் வெட்டுக்காயம், மலக் குடல் புண், துப்பாக்கி குண்டு காயம்) பாக்டீரியாக்கள் உடலுக்குள் நுழைவதற்கு வழிவகுக்கிறது.

உணவு பாதை நுழைவு - உட்கொள்ளுதல்

உணவு, நீர் இவை வாய் வழியே உட்கொள்ளும் போது பாக்டீரியாக்கள் உணவு பாதைக்குள் நுழைகின்றன. சில பாக்டீரியா இனங்களான, சால்மோனெல்லா, ஷிகல்லா விப்ரியோ, யெர்சீனியா, காம்பைலோ பாக்டர், க்ளாஸ்டீரிடியா, லிஸ்ட்டீரியா, புரூசெல்லா, பூச்சிக்கடி மூலம் சிறுநீர், இனப்பெருக்க , சிறு இரத்தக்குழாய் பாதை கருப்பை மலக்குடல் தோலின் தடித்த மேற்பகுதி பாக்டீரியாக்களின் தொற்றுதலிருந்து உடலைப் பாதுகாக்கின்றது. சில சமயம் விபத்துக்களினால், தோலில் வெட்டுகாயம் ஏற்பட்டாலோ, அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சில கருவிகள் பொருத்தப்பட்டிருந்தாலோ, இவை தோலுக்கு அடியிலுள்ள தொற்றுதலுக்கு எளிதில் ஆளாகும் வகையில் திசுக்களுக்குள் பாக்டீரியா நுழைவதற்கு வழி வகுக்கும். ஸ்டபைலோகாக்கஸ் ஆரியஸ், ஸ்.எப்பிடெர்மிடிஸ் ஆகியவை எளிதில் தோலில் ஏற்படும் காயங்கள் மூலம் நுழையும் பாக்டீரியாக்கள் ஆகும்.

ஊசி காயம் மூலம்

எதிர்பாரத விதமாக, ஊசி அல்லது கூர்மையான முட்கள் மூலம் காயம் ஏற்பட்டால் அதன் மூலம் ஸ்ட்பைலோகாக்கஸ் ஆரியஸ், சூடோமோனாஸ் எருஜினோசா ஆகியவை உடலுக்குள் நுழையும்.

பூச்சிகள் கடித்தல் மூலம்

பல பாக்டீரியாக்கள் பூச்சிகள் கடிப்பதன் மூலம் உடல் உள்ளே நுழைகின்றன. எடுத்துக்காட்டாக, தெற்றுப்பூச்சியின் மூலம் பொரிலியா ஃபர்டார்பெரி, பேன் மூலம் பொரிலியா ரிகரண்டிஸ் மற்றும் தெள்ளுப்பூச்சி மூலம் எஸ்ர்சினியா பெஸ்டிஸ் உடலுக்குள் நுழைகின்றன.

பாலியல் மூலம்

நெய்சீரியா கொனோரியே டிரிப்போனிமா பாலிடம் மற்றும் கிளமைடியா ட்ராக்கோமாட்டிஸ் ஆகியவை உடலுறவின் மூலம் உடலுக்குள் நுழைகின்றன.

பிறவியிலிலேயே கடத்தப்படுதல்

சில உயிரிகள் தாய் சேய் இணைப்பு திசு மூலம் தாயிடமிருந்து சேய்க்கு கடத்தப்படுகிறது. டிரிபோனிமா பாலிடம் தாயிடமிருந்து குழந்தைக்குச் சென்று பிறவி சிபிலிஸ் நோய் ஏற்படுத்துகிறது.

நினைவில் கொள்ள வேண்டியவை

  • பாக்டீரியா நோய் உண்டாக்கும் வீரிய காரணிகள் கொண்டது.
  • பாக்டீரியாக்கள் வெளிநச்சு, உள்நச்சு ஆகிய நச்சுகளை உருவாக்குகிறது.
  • நச்சு தன்மையற்ற வீரிய காரணிகளான உறை (capsule) கோழை (Slime), பைலி, நீளிழை ஆகியவற்றை பாக்டீரியா கொண்டுள்ளது, உணவு உட்கொள்ளுதல், சுவாசித்தல் காயம், பூச்சிக்கடி, பிறவி கடத்துதல் மூலம் மனித உடலுக்குள் நுழைகின்றன,
ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்
Filed under:
2.875
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top