பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / பொதுவான தகவல்கள் / உயிரின் சூழ்வாழிடங்கள் - இயற்கை மற்றும் வேளாண் பயிர்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உயிரின் சூழ்வாழிடங்கள் - இயற்கை மற்றும் வேளாண் பயிர்கள்

இங்கு நிலத்தின் மீது காணப்படுகின்ற இயற்கை தாவரங்கள் மற்றும் வேளாண் பயிர்களைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

பத்தாயிரம் வருடங்களுக்கு முன் வரை நம் முன்னோர்கள் தங்களின் சுற்றுச்சூழலை சிறிதளவே மாற்றியமைத்தனர். இருப்பினும் இன்றைய சூழ்த்தொகுதிகளை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு பெருமளவில் மாற்றியமைக்க வழி செய்கின்றது. அதன் விளைவாக நிலப்பரப்பில் பெரும்பங்கு பயிர்நிலமாகவும் கால்நடைப் பண்ணைகளாகவும் மாற்றப்பட்டு விட்டன. காடுகளில் தானாகவே கீழே விழுந்து முளைத்த தாவரங்களில் பல இன்று வேளாண் நிலங்களில் மனிதர்களால் விளைவிக்கப்படும் பயிர்களாக மாறி விட்டன.

உயிரின் சூழ்வாழிடங்கள் (Biomes)

புவியின் மேற்பரப்பில் காணப்படும் தாவரங்களும் நில அமைப்பு, மண், சிற்றோடைகள் மற்றும் ஏரிகள் போன்ற உயிரற்ற பகுதிகளைப் போலவே ஓரிடத்தில் நிலைத்து விடுகின்றன. தாவரங்கள் நுகர்பொருளாகவும் உணவு, மருந்துகள், எரிபொருள், இருப்பிடம், மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான இதர பல பொருள்களாகவும் புதுபிக்கப்படுகின்ற ஒரு வளமாகும். தாவர வளங்களை மனிதர்கள் தங்களின் நன்மைக்காக பயன்படுத்துகின்றனர் அல்லது அவர்களின் வளர்ச்சிகளில் தடைகளாக இருக்கின்றன என்பது போன்ற பல கருத்துக்களை புவியியலாளர்கள் தங்களின் புத்தகங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தாவர புவியியலாளர்கள், தாவரங்களை அவற்றின் கட்டமைப்பு, அளவு மற்றும் உருவம் ஆகியவற்றின் அடிப்படையில் மரங்கள், புதர்கள், கொடிகள் மற்றும் மூலிகைகள் என்று வகைப்படுத்துகின்றார். இவற்றில் பல புவிபரப்பில் அதிக ஆண்டுகள் வாழக் கூடியவை.

ஒரு மலைப்பகுதியில் நாம் பயணம் செய்கின்ற பொழுது அப்பகுதிகளில் காணப்படும் இயற்கை தாவரங்கள், தட்பவெப்பநிலை, நில அமைப்பு, மண் முதலிய காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதை கண்கூடாகப் பார்க்கின்றோம்.

நில அமைப்பு

நில அமைப்பு என்பது குன்றுகள், பள்ளத்தாக்குகள், மலைத்தொடர்கள், ஓங்கல்கள் போன்ற புறவெளித்தோற்றங்களை உள்ளடக்கிய நிலமேற்பரப்பு தோற்றங்களாகும். தடிப்பான மண் அடுக்குடன் நல்ல வடிநிலமும் கொண்ட உயர்நிலத்தில் காணப்படும் தாவரங்கள் அதை அடுத்துள்ள பள்ளத்தாக்குகளில் காணப்படுகின்ற தாவரங்களை விட மாறுபடுகின்றன. ஏனெனில் பள்ளத்தாக்குகளில் பெரும்பாலான நேரங்களில் அதன் மேற்பரப்பிற்கு வெகு அருகாமையிலேயே நீர் அமைந்துள்ளது. பாறைத் தொடர்களிலும் செங்குத்தான ஒங்கல்களிலும் நீர் வெகு சீக்கிரத்தில் வடிந்துவிடுகின்றது. மேலும் இப்பகுதிகளில் மண் மிக மெல்லிய அடுக்காகவோ அல்லது முழுமையாக அரிக்கப்பட்டோ காணப்படும். ஆகையினால் இப்பகுதிகளில் மீது வளருகின்ற தாவரங்கள் வேறுபடுகின்றன.

அதுபோலவே, தாவர சமுதாயங்களின் செயல்பணிகளான ஒளிச்சேர்க்கை, பூத்தல், காய்த்தல், பழமாதல், அல்லது விதை பரவுதல் போன்றவை ஓரிடத்தில் கிடைக்க கூடிய உச்ச வெப்பநிலையைப் பொறுத்து அமைகின்றன. அதாவது ஒரு தாவரத்தின் வளர்ச்சி அவ்விடத்தில் கிடைக்கக் கூடிய வருடாந்திர உச்ச வெப்பநிலையைப் பொறுத்து அமைகின்றன எனலாம். பொதுவாக காலநிலை எவ்வளவு குளிர்ச்சியாக இருக்கின்றதோ அதற்கு ஏற்றார் போலவே தாவர இனங்களும் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படும். பெருவாரியான தாவரங்கள் உறைபனிக்கும் கீழே பிழைத்திருக்க இயலாது. ஆதலால் உயர் அட்சங்கள் மற்றும் உயரமான இடங்களில் காணப்படும் ஆர்டிக் மற்றும் ஆல்பைன் சுற்றுச்சூழல்களில் மிக சொற்பமான தாவரங்களே காணப்படுகின்றன. இதன் மூலமாக நிலநடுக்கோட்டில் அமைந்துள்ள காடுகள் பல தாவர இனங்களையும் துணை ஆர்டிக் பகுதிகளில் அமைந்துள்ள காடுகள் ஒரு சில தாவர இனங்களை மட்டுமே கொண்டிருப்பது ஏன் என்பதற்கு அப்பகுதிகளில் நிலவுகின்ற உச்ச வெப்பநிலைகளே காரணமாகிறது என்பது தெளிவாகிறது.

ஓரிடத்தில் பெருவாரியாக காட்சியளிக்கின்ற தாவர இனத்தை அப்பகுதியில் காணப்படும் மண்ணின் ஈரம் மற்றும் வெப்பம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நான்கு உயிரின சூழ்வாழிடங்களாக கண்டறிந்து கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன:

காடுகள் (Forest)

நிலப்பரப்பில் சுமார் 420 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தாவரங்கள் தோன்றின. இத்தாவரங்கள் வளர்ச்சிப் பெற்று பெருகி நிலப்பரப்பில் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ள மில்லியன் கணக்கான ஆண்டுகளாயின. அவ்வாறு பெருகும்பொழுது அவை புதிய வாழிட சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொண்டன. இவை புவித்தொகுதியின் முதல் காடுகளாகும். இக்காடுகளில் குதிரைவால் போன்ற நீண்ட கொடிகளும், கள்ளிச்செடிகளும், பிரண்டைகளும் காணப்பட்டன. இந்த தாவரங்கள் ஏறக்குறைய 12 மீட்டர் உயரம் வரை வளரலாயிற்று. பின்னர் உறையில்லாவிதைத் (Gymnosperm) தாவரங்கள் தோன்றின.

சுமார் 144165 மில்லியன் வருடங்களுக்கு முன்னர்தான் பூத்து குலுங்கும் மரங்கள் தோன்றி வளரலாயிற்று. இந்த தாவரங்களுடன் பூச்சிகளும், பறவைகளும், பாலூட்டிகளும் நிலப்பரப்பில் தோன்றிப் பெருகலாயிற்று. தற்சமயம் புவிதொகுதியின் நிலப்பரப்பில் காடுகள் 1/3 பங்கினை வகிக்கின்றது. காடுகளை அவற்றின் வாழிட காலநிலையின் அடிப்படையில் பசுமைமாறாக் காடுகள், இலையுதிர் காடுகள் மற்றும் டைகா காடுகள் என்று பிரிக்கப்படுகின்றன.

பசுமைமாறாக் காடுகள் (Ever Green Forest)

நிலநடுக்கோட்டைச் சுற்றி இக்காடுகள் காணப்படுகின்றன. இம்மண்டலத்தில் ஏராளமான வெப்பமும் கனத்த மழைப்பொழிவும் இருக்கின்றது. ஆதலால் தாவரங்கள் துரிதமாகவும் அடர்த்தியாகவும் அதிக எண்ணிக்கையிலும் வளருகின்றன.

மேலும் பருவகாலங்கள் கிடையாது. ஆதலால் இந்த மண்டலத் தாவரங்கள் பசுமை மாறாமல் செழிப்பாக காணப்படுகின்றன. நூற்றுக்கணக்கான தாவரயினங்களும் செடிகளும் பசுமைமாறாக் காடுகளில் காணப்படுகின்றன. சில இனங்கள் புதர்கள் (Orcids) முட்செடிகள் (thorny plants), கொடிகள் (creepers) ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இக்காடுகளில் மரங்கள் சராசரியாக 25-35மீ, உயரத்துடன் விழுதுகளால் ஆன அகன்ற அடிபாகத்தையும் கொண்டவை அம்மரங்களைத் தவிர செடிகளும் கொடிகளும் புதர்களும் வெவ்வேறான உயரங்களுடன் நெருக்கமாகவும் தொடர்ச்சியாகவும் வளர்ந்துள்ளன. ஆதலால் இந்த காடுகள் பல அடுக்குகளைக் (multi layers) கொண்ட தோற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த அடுக்குகளை சூரியஒளி கூட ஊடுருவ முடிவதில்லை.

இலையுதிர் காடுகள் (Decediuos forests)

இக்காடுகள் துணை வெப்ப மண்டலத்திலும் மிதவெப்ப மண்டலத்திலும் அமைந்துள்ளன. இம்மண்டலங்களில் கோடைகாலம் வெப்பமாகவும் குளிர்காலம் மிகக் குளிர்ச்சியாகவும் இருக்கும். இவ்விரண்டு மண்டலங்களிலும் ஓராண்டில் ஒரு சில மாதங்களில் மட்டுமே மழைப்பொழிகிறது. எனவே இந்த இரண்டு மண்டலங்களிலும் பருவக்காலங்கள் ஏற்படுகின்றன. ஆதலால் துணைவெப்ப மண்டலத்தில் கோடைகாலத்திலும் மிதவெப்ப மண்டலத்தில் குளிர்காலத்திலும் இந்த தாவரங்கள் தங்களின் இலைகளை உதிர்த்து விடுகின்றன. இந்தியா போன்ற பருவகாற்று நாடுகளில் கோடை காலத்தில் நீண்ட வறண்ட காலநிலையின் காரணமாக அனைத்து தாவரங்களும் இலையை உதிர்த்து விடுகின்றன. இத்தகைய துணைவெப்ப மண்டல காடுகளை பருவ காற்றுக்காடுகள் என அழைக்கிறோம்.

ஊசியிலைக் காடுகள் (Coniferous forest)

50° முதல் 60° வட அட்சகோடுகளுக்கு இடையில் அமைந்துள்ள இந்த காடுகளே மிகப் பெரிய உயிரின சூழ்வாழிடங்கள் ஆகும். இவை யூரேஷியா மற்றும் வட அமெரிக்காவின் கண்டப்பரப்புகளில் பெருவாரியாக அமைந்துள்ளன. இரண்டில் ஒரு பங்கு தாவரங்கள் சைபீரியாவிலும் மற்றுமொரு பங்கு ஸ்காந்துநேவியா, அலாஸ்கா மற்றும் கனடாவிலும் காணப்படுகின்றன. இப்பகுதிகளில் நிலவும் பருவகாலங்களை ஈரமான மிதமான வெப்பத்தைக் கொண்ட கோடைகாலமாகவும் நீண்ட குளிரான வறண்ட குளிர்காலமாகவும் பிரிக்கலாம். தூந்திர காடுகளில் தாவரங்களின் வளர்ச்சி காலம் 130 நாட்கள் மட்டுமேயாகும். இப்பகுதிகளில் குளிர்காலத்தில் பனி பொழிகிறது. இக்காடுகளில் மரங்கள் ஊசி வடிவ இலைகளைக் கொண்டிருக்கின்றன. இக்காடுகளில் ஏறக்குறைய 1700 வகையான மரவகைகள் காணப்படுகின்றன. இவை கடுங்குளிரையும் தாங்கக் கூடிய அமைப்பைப் பெற்றிருக்கின்றன.

புல்வெளிகள் (Grass lands)

புல்வெளிகள் பரந்து விரிந்த பெரும் பரப்பாகும். புவியின் பரப்பில் நான்கில் ஒரு பங்கு புல்வெளிகளாகும். இவற்றில் புதர் செடிகள் அதிகமாக இருக்காது. ஓடைகள் அல்லது ஆறுகள் காணப்படக் கூடிய இடங்களில் மட்டுமே மரங்கள் காணப்படுகின்றன. புல்வெளிகள் பார்பதற்கு முடிவடையாத கடல்பரப்புளைப் போன்று காட்சி அளிக்கின்றன. புல்வெளிகள் வருடத்திற்கு 20 லிருந்து 60 செ. மீ வரை மழைப்பொழிவை பெறுகின்றன. இதை விட அதிக மழையை பெறுமேயானால் புல்வெளிகள் காடுகளாக மாறிவிடும். குறைவாக பெறுமேயானால் பாலைவனமாக மாறிவிடும். புல்வெளிகள் பெரும்பாலும் பாலைவனத்திற்கும் காடுகளுக்கும் இடையில் அமைந்துள்ளன. புல்வெளிகளில் மண் ஆழமாகவும் வளமாகவும் உள்ளன. நிரந்தரமாக ஒரே பகுதியில் நிலைத்திருக்கும் புற்களின் வேர்கள் மண்ணில் வெகு ஆழம்வரை ஊடுருவியுள்ளன. புல்வெளிகள் தென் அமெரிக்காவில் பாம்பாஸ் எனவும் ஐரோப்பாவில் ஸ்டெப்பி எனவும், ஆப்பிக்காவில் சவானாஸ் எனவும் கனடா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ப்ரெய்ரி எனவும் அழைக்கப்படுகின்றன. புல்வெளிகள் இரண்டு வகைப்படும்.

அவையாவன: சவானா புல்வெளி மற்றொன்று மிதவெப்ப மண்டல புல்வெளிகள்.

சவானா புல்வெளிகள்

சவானா புல்வெளிகளில் ஆங்காங்கே மரங்கள் சிதறி காணப்படுகின்றன. சவானா வகை அல்லது வேறு ஏதாவது ஒரு வகையைச் சார்ந்த புல்வெளி ஆப்பிரிக்காவின் மேற்பரப்பில் சரிபாதியில் காணப்படுகின்றன. மேலும் ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் பரப்பிலும் புல்வெளிகள் காணப்படுகின்றன. சவானா தோன்றுவதற்கு காலநிலை முக்கிய காரணியாக அமைகிறது. உயர் வெப்பமும் வருடத்திற்கு 50-127 செ.மீ. மழையளவும் கொண்ட மிக வெப்பமான காலநிலைப் பகுதிகளில் சவானா புல்வெளிகள் அமைந்துள்ளன.

இவ்வகை புல்வெளிகளுக்கு குறைந்தது ஒரு ஆண்டில் 6 அல்லது 8 மாதங்களுக்கு செறிந்த மழையும் அதை அடுத்து நீண்ட வறட்சியும் மிக அவசியமானது. புல்வெளிகள் வறட்சியினால் தீப்பற்றிக் கொள்கின்றன. மழைப்பொழிவு வருடம் முழுவதும் பரவலாக பொழிந்தால் இப்புல்வெளிகள் வெப்ப மண்டல காடுகளாக மாறிவிடலாம்.

சவானாவில் வறட்சியும் மழைக்காலமும் காணப்படுகின்றன. பருவகாலங்களில் ஏற்படும் தீ விபத்துகள் சவானாவின் உயிரின் பன்மையில் பெரும் பங்கு வகிக்கின்றன. அக்டோபர் மாதங்களில் இடியுடன் கூடிய மழை பொழிகின்றது. இதை தொடர்ந்து வரப்போகின்ற வறட்சியான பருவகாலத்தை வீசுகின்ற வறண்ட காற்று சுட்டிக்காட்டுகிறது. வறட்சியான காலத்தின் உச்சத்தில் குறிப்பாக ஜனவரி மாதங்களில் புல்வெளிகள் தீப்பற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி மேலோங்கி இருக்கும். வேட்டையாடும் மனிதர்கள் விலங்குகளை பிடிப்பதற்கு எளிதாக காய்ந்து போன புற்களை தீயிட்டு கொளுத்துகின்றனர். இத்தகைய தீயினால் உயிரின சமுதாயங்கள் முழுமையாக அழிந்து போவதில்லை. குறுகிய காலமே வாழக் கூடிய சில பூச்சியினங்கள் மட்டுமே இந்த தீயில் பொசுங்கி விடுகின்றன.

பொதுவாக பெரிய விலங்குகள் வெகுவேகமாக ஓடிச்சென்று தீயிலிருந்து தப்பித்து விடுகின்றன. புற்களின் வறண்டு போன தண்டுகளும் இலைகளும் தீயில் கருகினாலும் வெகு ஆழத்தில் காணப்படும் அந்த புற்களின் வேர்கள் மட்டும் சேதமடையாமல் இருக்கின்றன. இந்த வேர்கள் மண் ஈரமானதும் உடனடியாக புதிதாக வளர்ச்சி அடைய ஏதுவாக ஸ்டார்ச்சை சேமித்து வைத்திருக்கின்றன. அங்கும் இங்குமாக சிதறி கிடக்கின்ற புதர்களும் மீண்டும் வளரும் வரை வேர்களில் சேமித்து வைத்திருக்கின்ற உணவினை பயன்படுத்திக் கொள்கின்றன.

தீயினால் எரிக்கப்பட்ட புற்களின் சாம்பல் ஒரு மெல்லிய படலமாக புல்வெளிகளில் படிந்து விடுகின்றது. அடுத்து வரும் மழைக்காலத்திற்கு அறிகுறியாக மார்ச் மாதத்தில் இடியுடன் கூடிய கனத்த மழை பொழியத் துவங்கும். உடனடியாக சவானா புற்கள் மீண்டும் வெகு வேகமாக வளர்கின்றன. சில வகை புற்கள் 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே 30 செ. மீ வரை வளர்ந்து விடுகின்றன. இக்காலத்தில் சவானா மீண்டும் புத்துயிர் பெற்று விடுகின்றன.

மித வெப்ப மண்டல புல்வெளிகள் (Temperate Grass lands)

மித வெப்ப மண்டல புல்வெளிகளில் நீண்ட புற்களே பெருவாரியாக காணப்படுகின்றன. மரங்களும் பெரிய புதர்களும் காணப்படாது. கோடை காலத்திலிருந்து குளிர்காலம் வரை வெப்பநிலை வேறுபடுகின்றது. இப்புல்வெளிகள் தென்ஆப்பிரிக்காவில் வெல்ட்ஸ் எனவும் ஹங்கேரியில் புஸ்ட்தா எனவும் அர்ஜன்டீனா மற்றும் உருகுவேயில் பாம்பாஸ் எனவும் முந்தைய சோவியத் யூனியனில் ஸ்டெப்பீஸ் எனவும் மத்திய வட அமெரிக்காவில் பிரெய்ரி எனவும் அழைக்கப்படுகின்றன. சவானா புல்வெளிகளில் கோடைகாலம் வெப்பமாகவும் குளிர்காலம் மிகக் குளிராகவும் இருக்கின்றன. மழை அளவு மிதமாக இருக்கும். மழை அளவு புற்களின் உயரத்தை நிர்ணயிக்கின்றன. மழை அதிகமாக பொழியும் இடங்களில் புற்கள் நீண்டு உயரமாக வளருகின்றன.

சவானாவில் இருப்பதைப் போலவே வறண்ட பருவகாலமும் திடீரென ஏற்படும் தீயும் பன்மைத் தோற்றத்திற்கு அவசியமாகும், ஆனால் இவை சவானாவில் காணப்படும் அளவிற்கு மிதவெப்ப மண்டல புல்வெளிகளில் காணப்படுவதில்லை. மிதவெப்ப மண்டல புல்வெளிகளில் காணப்படும் மண் மிக ஆழமாகவும் அடர்த்தியாகவும் வளமான மேல் அடுக்கினையும் கொண்டுள்ளது. புற்களின் வளர்ச்சியினால் சத்துமிக்கதாகவும் சிதைந்து போன பல கிளைகளைக் கொண்ட ஆழமான வேர்களையும் கொண்டுள்ளது. இவ்வாறு வேரூண்றிய புற்களினால் பாதுகாக்கப்படும் மண் வளருகின்ற தாவரங்களுக்குத் தேவையான உணவினை அளிக்கிறது.

பாலைவனங்கள் (Deserts)

புவி மேற்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கு பாலைவனமாக உள்ளது. இவை வருடத்திற்கு 50 சென்டிமீட்டருக்கும் குறைவாக மழைப்பெறும் பகுதிகளில் காணப்படுகின்றன. பெருவாரியான பாலைவனங்கள் தாழ் அட்சகங்களில் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக வட ஆப்பிரிக்காவில் சகாரா, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தென்மேற்கு பாலைப்பகுதிகள், மெக்ஸிகோ ஆகியனவாகும். ஆஸ்திரேலியா உடா, நவேடா மற்றும் மேற்கு ஆசியா பகுதிகளில் குளிர் பாலைவனம் அமைந்துள்ளது.

பாலைவனங்களில் பெரும்பாலும் ஆண்டு முழுவதும் வெப்பமாக இருக்கும். மேலும் கோடைகாலத்தில் அதிக வெப்பமாக இருக்கும். குளிர்காலத்தில் சிறிதளவு மழைப் பொழிகின்றது. பொதுவாக மழை அளவு குறைவாக இருக்கின்றது அல்லது நீண்ட மழையற்ற காலங்களுக்கு இடையே திடீரென மழை பொழியக் கூடும். மழை அளவை விட நீராவியாதல் அதிகமாக காணப்படுகிறது.

சில்லியில் அமைந்துள்ள அடகாமா பாலைவனம் மிக குறைவான மழையைப் பெறுகின்றது. இங்கு சராசரியாக 1.5 செ. மீட்டருக்கும் குறைவான மழையைப் பெறுகின்றது உள்நாட்டில் அமைந்துள்ள சகாரா பாலைவனமும் வருடத்திற்கு 1.5 செ. மீட்டருக்கும் குறைவான மழையைப் பெறுகின்றது. அமேரிக்காவில் அமைந்துள்ள பாலைவனத்தில் வருடத்திற்கு 28 செ. மீ, மழைப்பொழிகிறது. பாலைவனங்களில் மிகச் சிறந்த இயல்புகளைக் கொண்டிருக்கும் தாவரங்கள் அமைந்துள்ளன.

தூந்திரம் (Tundra)

உயிர்கோளத்தின் மிக குளிரான உயிரின சூழ்வாழிடம் தூந்திரம் ஆகும். தூந்திரம் என்றால் மரங்கள் அற்ற சமவெளி எனப் பொருள்படும் ஃபினிஸ் (Finnish) சொல்லாகும். இந்த உயிரின சூழ்வாழிடத்தில் மிக குளிர்ந்த காலநிலையையும், குறைந்த உயிரியல் பன்மை, குறைந்த வளர்ச்சி, குறைந்த இனப்பெருக்கம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். தூந்திர பகுதிகளில் மிகக் கடுமையான குளிர், மிகக் குறைந்த வெப்பம் நிலவுவதால் அங்கு மடிந்து போன உயிரினப் பொருள்கள் அழுகுவதில்லை (குளிர்சாதன உறைநிலைப்பெட்டியில் வைக்கப்பட்ட காய்கறி, இறைய்ச்சியைப் போல). எனவே அங்குள்ள மண்ணிற்கு மடிந்துபோன உயிரினப் பொருள்களில் இருந்து சத்துக்கள் சேருவதில்லை.

வடதுருவத்தைச் சுற்றி வட அரைக்கோளத்தில் ஆர்க்டிக் தூந்திரம் அமைந்துள்ளது. இது தெற்கில் ஊசியிலை காடுகளான டைகா வரை பரவியுள்ளது. ஆர்க்டிக் தூந்திரப்பகுதி குளிர் காலநிலைக்கும் பாலைவனம் போன்ற தோற்றத்திற்கும் பெயர் போனது. இத்தாவரங்களின் வளர்ச்சிப்பருவம் 50 முதல் 60 நாட்கள் வரை நீடிக்கின்றன. குளிர்காலத்தில் 30 செல்ஸியஸ்க்கும் கீழே காணப்படும். ஆனால் கோடைக்காலத்தில் 12° செல்ஸியஸ் வரை நிலவுகின்ற வெப்பத்தால் இந்த உயிரின சூழ்வாழிடத்தில் உயிரினங்களின் வாழ்க்கைப் பேணப்படுகிறது. ஆர்க்டிக் மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்கின்ற மழை அளவு வேறுபடுகின்றது. உருகுகின்ற பனியையும் சேர்த்து வருடாந்திர மழையளவு 15 முதல் 25 செ. மீ வரையாகும்.

தூந்திரப் பகுதிகளில் மண் மிக மெதுவாக உருவாகிறது. இங்கு காணப்படும் மண்ணின் கீழ் அடுக்கில் அமைந்துள்ள பரல்களும் நுண்ணிய பொருட்களும் நிரந்தரமாக உறைநிலையில் உள்ளன. மேற்பரப்பில் நீர் உருகி சதுப்புகளோ குளங்களோ தோன்றுகின்றன. இவை தாவரங்களுக்குத் தேவையான ஈரத்தை தருகின்றன. மேலும் குளிர் காலநிலையை தாங்குகின்ற திறனைக் கொண்டவை. ஆர்க்டிக் மற்றும் துணை ஆர்க்டிக் பகுதிகளில் ஏறக்குறைய 1700 வகையான தாவரங்கள் வளருகின்றன.

உலகில் காணப்படும் மிக உயர்ந்த மரங்களே வளராத மலைகளின் உச்சிகளில் ஆல்பைன் தூந்திரம் அமைந்துள்ளது. இந்த தாவரங்களின் வளர்ச்சி காலம் ஏறக்குறைய 180 நாட்களாகும். இரவு நேரங்களில் உறை நிலைக்கும் கீழே வெப்பநிலைக் காணப்படுகிறது. ஆர்டிக் தூந்திரம் போலன்றி ஆல்பைன் பகுதிகளில் மண் சிறந்த வடிகாலமைப்பைக் கொண்டுள்ளது. இத்தாவரங்கள் ஆர்டிக் தூந்திர தாவரங்களை ஒத்து காணப்படுகின்றன.

மேற்கூறிய ஐந்து உயிரின சூழ்வாழிடங்களுக்கும் இடையில் நீர் பொதுவான பிணைப்பாக அமைந்துள்ளது. மேலும் உயுர்கோளத்தின் மிகப் பெரிய பகுதியாகவும் நீர்த் திகழ்கிறது. நீர்பகுதிகள் ஏராளமான பெரிய மற்றும் சிறிய அளவு தாவரயினங்களையும் விலங்கினங்களையும் கொண்டுள்ளன. நீர்பரப்பில்தான் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அமினோ அமிலங்கள் ஒன்று சேர்ந்து உயிரினங்கள் உருவானது. நீரில்லையெனில் புவி முழுவதும் பாலைவனம் போன்று ஒரு வெற்றிடமாக இருக்க நேரிடும்.

வேளாண் பயிர் சூழ்வாழிடங்கள்

புவியின் மொத்த மேற்பரப்பில் பெரும்பகுதி செறிந்த வேளாண்மை, மேய்ச்சல் மற்றும் மரம் வெட்டுதல் போன்ற மனித நடவடிக்கைகளினால் தாக்கப்படுகின்றன. தற்சமயம் காடுகளிலிருந்து அதிகமாக மரங்களை வெட்டுதல் மற்றும் இயற்கையாக அமைந்த புல்வெளிகளை மாற்றுதல் போன்ற நடவடிக்கைகளினால் எண்ணற்ற உயிரினங்களின் வாழிடங்கள் அழிந்து வருகின்றன. மற்ற எந்த உயிரின சூழ்வாழிடங்களைக் காட்டிலும் புல்வெளி உயிரின் சூழ்வாழிடங்களில் மனித செயல்பாடுகளினால் ஏற்பட்டுள்ள தாக்கங்களின் விளைவுகள் நமக்கு நல்ல பாடத்தை புகட்டியுள்ளன. புல்வெளிகளின் மொத்த பரப்பில் பெரும்பான்மையான பரப்பு வேளாண் பயிர் நிலங்களாக மாற்றப்பட்டு விட்டன. இந்த பயிர் நிலங்களே உலக தானிய களஞ்சியங்களாக மாறியுள்ளன. வேளாண்மை மற்றும் தொழிற்சாலை போன்றவற்றின் வளர்ச்சி காரணமாக இயற்கை வளங்கள் சீரழிந்து வருகின்றன. மேலும் இயற்கை சூழ்தொகுதிகளும் மாற்றமடைந்து வருகின்றன.

உயிர்க்கோளத்தில் மனிதர்கள் தோற்றுவித்த சூழ்தொகுதிகளில் மிகப்பெரியது வேளாண் சூழ்தொகுதியாகும். வேளாண் சூழ்தொகுதிகள் மிகவும் எளிதான அமைப்பையும் பணிகளையும் கொண்டுள்ளன. பெரும்பாலும் ஓரினத்தைச் சார்ந்த மரபணுக்களை மட்டுமே கொண்டிருப்பவைகளாகும். மிகக் குளிர்ந்த வெப்பநிலையையும் குளிர்காலத்தில் விழுகின்ற பனியையும் தாங்குவதற்கு ஏதுவாக வேளாண் பயிர்கள் குட்டையாகவும் கூட்டமாகவும் இருக்கின்றன. குறைந்த வெப்பநிலையிலும் வெளிச்சத்திலும் கூட இவற்றால் ஒளிச்சேர்க்கை செய்ய இயலும்.

வேளாண் பயிர் சூழ்வாழிடங்கள் எளிமையானதாக இருப்பதினால் நன்கு வளர்ச்சியடைந்த ஒன்று அல்லது இரண்டு பூச்சிகளால் இவை தாக்கத்துக்கு உள்ளாகின்றன. இந்த பூச்சிகள் அபரிமிதமான உணவு கிடைப்பதன் காரணமாக துரிதமாக பன்மடங்காகின்றன. ஆதலால் பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்க பூச்சிக்கொல்லிகள் இடைவிடாமல் தேவைப்படுகின்றன. அதுபோலவே, களைகளும் ஒரு பிரச்சனையாக இருக்கின்றன. இவை பயிர்களின் உற்பத்தியை பெருமளவிற்கு குறைத்து விடுகிறது. இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வாக களைக்கொல்லிகள் அமைகின்றன.

மொத்த உற்பத்தியைப் பெருக்குவதற்கு வேளாண் வேதியியல் பொருள்களை ஆற்றல் இடுபொருள்களாக மனிதர்கள் பயன்படுத்துவது ஒரு வழிமுறையாகும். பொதுவாக மண்ணில் குறைவாக காணப்படும் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களின் கூறுகளையும் கூட்டுப்பொருள்களையும் போடுவதன் மூலமாக உற்பத்தியை பெருமளவு அதிகரிக்க முடிகிறது.

இயற்கை சூழ்தொகுதியில் இத்தகைய கூறுகளை சேமித்து வைத்திருக்கும் தாவரங்கள் மடிந்து மக்கும்பொழுது மண்ணில் அவை மீண்டும் சேர்ந்து விடுகின்றன. ஆனால் வேளாண் சூழ்த்தொகுதியில் நமது பயன்பாட்டிற்காக பயிர்கள் அறுவடை செய்யப்படுவதால் சத்துக்களின் மறுசுழற்சியில் தடை ஏற்படுகின்றது. ஆகையினால் ஒவ்வொரு ஆண்டும் சத்துக்கள் உரமாக நிலத்தில் சேர்க்கப்படுகின்றது. இந்த உரங்கள் படிம எரிபொருட்களில் இருந்து பெறப்படுகின்றன. மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்ட சூழ்த்தொகுதியில் வேளாண் வேதியியல் பொருட்கள், உரங்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களும் ஆற்றல் இடுபொருட்களாக போடப்படுகின்றன. இதனால் நிலத்திலிருந்து பெறப்படும் மொத்த உற்பத்தி அதிகமாக பெருகுகின்றது. குறிப்பிட்ட ஒரு பயிரின் மொத்த உற்பத்தி ஐந்து மடங்காக அதிகரிக்க இரண்டு வகையான ஆற்றல் இடுபொருள்கள் போடப்படுகின்றன.

அவையாவன:

  • இயற்கை ஆற்றல் இடுபொருள்கள்
  • செயற்கை ஆற்றல் இடுபொருள்கள்

இயற்கை ஆற்றல் இடுபொருள்கள்

எல்லாவிதமான சூழ்தொகுதிகளுக்கும் இயற்கை ஆற்றல் மூலமாக சூரிய ஒளி திகழுகின்றது. சூரிய ஒளியிலிருந்து ஒளிச்சேர்க்கை, வளிமண்டலத்திலிருந்து கார்பன்-டை-ஆக்ஸைடும் மழைப்பொழிவும் தாராளமாக கிடைக்கின்ற இயற்கை இடுபொருட்களாகும். இருப்பினும் இந்த இயற்கை ஆற்றல் இடுபொருள்களைத் தவிர உணவுபயிர் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் பிற ஆற்றல் செயற்கை ஆற்றல் என அழைக்கப்படுகிறது.

செயற்கை ஆற்றல் இடுபொருள்கள்

தாவர சத்துக்கள் (Plant Nutrients)

வேளாண் பயிர்களுக்கு நன்கு வளர்ச்சியடைய தாவர சத்துகள் தேவைப்படுகின்றன. குறிப்பாக, நைட்ரஜன், பொட்டாசியம் பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் மற்றும் சல்பர் ஆகியன முக்கிய தாவர சத்துகளாகும். மண்ணில் கால்சியம் அபரிமிதமாக உள்ளது. ஆனால் பயிர்களின் உற்பத்தி நைட்ரஜன், பொட்டாசியம், மற்றும் பாஸ்பரஸ் ஆகிய வளங்கள் கிடைப்பதைப் பொறுத்து அமைகின்றது. ஆதலால் செயற்கை இடுபொருட்களான உரங்கள் பயன்படுகின்றன. உணவு பயிர்களின் உற்பத்தியும் பெருகுகின்றன. உலகளவில் 1950ம் ஆண்டுகளுக்கு பிறகு செயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரித்தது. எனவே பயிர்களின் உற்பத்தியும் பெருமளவு பெருகின.

விதைகள் (Seeds)

மனிதர்கள் தோற்றுவித்த சூழ்தொகுதியில் நெல், கம்பு, சோளம், காய்கறிகள் எண்ணெய் வித்துக்கள் போன்ற பயிர்கள் தாமாக முளைப்பதில்லை. இப்பயிர்கள் நிலத்தை உழுது விதைகளை விதைத்தால் மட்டுமே வளருகின்றன. ஆகையினால் பயிர்களுக்கும் விதைகளுக்கும் பாதுகாப்பு தேவைப்படுகிறது.

இதை ஒரு எடுத்துக்காட்டுடன் ஆராய்வோம் முனைவர் நார்மன் போர்லாக் மற்றும் அவருடன் பணிப்புரிந்தவர்களும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியின் பயனாக உறுதியான தண்டுடன் குட்டையான கோதுமை பயிர் வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புதிய வகை கோதுமையை, மெக்ஸிகோ கோதுமை ஏற்றுமதி செய்யும் முன்ணனி நாடுகளின் பட்டியலுக்கு கொண்டு சென்றது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய வகை கோதுமையினால் ஒரு ஏக்கருக்கு 7-8 புஷல்ஸ் லிருந்து 60 - 70 புஷல்ஸ் வரை விளைச்சல் கூடியது. பசுமை புரட்சிக்கு தலைமை தாங்கிய முனைவர். நார்மன் போர்லாக் அவர்களுக்கு நோபல் அமைதி பரிசு வழங்கப்பட்டது. பிலிபைன்ஸ் நாட்டில் அமைந்துள்ள பன்னாட்டு அரிசி ஆராய்ச்சி நிலையத்தில் பசுமை புரட்சி விரிவாக்கப்பட்டு அடுத்ததாக நெல் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏறத்தாழ 20,000 நெல் வகைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு புதிய வகை கண்டுபிடிக்கப்பட்டு விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தப்பட்டது.

நீர் (Water)

எல்லா தாவரங்களுக்கும் நீர் அவசியமாகிறது. உலகளவில் நீர் பயன்பாட்டில் வேளாண்மை தனித்ததொரு பங்கினை வகிக்கிறது. ஆறுகள், ஏரிகள் மற்றும் நிலத்தடி நீர் போன்ற நன்னீர் நிலைகளில் 73 சதவீதம் நீர்ப்பாசகனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. உலகளவில் மதிப்பீடுகள் மாறுபட்டாலும் ஏறக்குறைய 18 சதவிகித பயிர் நிலங்கள் நீர்பாசன வசதி கொண்டவை. சில நாடுகள் நீர் வளம் மிக்கவை. அத்தகைய நாடுகளால் பயிர்நிலங்களுக்குத் தேவையான நீர்ப்பாசனத்தை அளிக்க இயலும். சில நாடுகள் நீர் வளம் அற்றவை. இந்நாடுகள் நீரை மிக கவனமாக பயன்படுத்த வேண்டும். பெரும்பாலான நாடுகளில் நீரை பயன்படுத்தும் ஆற்றல் திறன் மிகவும் குறைவாக இருக்கின்றது. நீர்ப்பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் நீர்ப்பாசனக் கால்வாய்களில் இருந்து நீராவியாதல் மற்றும் நீர்க்கசிவு போன்றவற்றால் ஏறக்குறைய 80 சதவிகித நீர் அதன் இலக்கை சென்று அடைவதில்லை. விவசாயிகளும் தேவைக்கு அதிகமாகவே நீரை பாய்ச்சுகின்றனர். ஏனெனில், விவசாயிகள் நீரை ஒழுங்காக தேவையான அளவில் பயன்படுத்தும் தொழில்நுட்ப திறன் அற்றவர்களாக இருக்கின்றனர்.

நீரை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகளை அந்நீரை முழுவதுமாக பாதுகாக்கும் நுட்பங்களின் மூலமாக குறைக்கலாம். சொட்டு நீர்பாசன முறையின் மூலமாக பயிர்களுக்கு நீரை அளிப்பது மிகவும் பயனுடைய ஒன்றாகும். சொட்டு நீர்பாசனத்தில் வயல்களின் குறுக்கே மண்ணில் கீழ் அடுக்குக்கு அருகில் அல்லது அதற்கும் கீழே துளையிடப்பட்ட குழாய்கள் அமைக்கப்படுகின்றன. இத்தகைய குழாய்கள் ஒவ்வொரு செடிக்கும் தேவையான அளவு நீரை நேரடியாக அவற்றின் வேர்களுக்கு அளிப்பதால் நல்ல பயனைத் தருகிறது. மேலும், குறைந்த அளவில் நீராவியாதல் நடைபெறுகிறது. மண்ணில் நீர் அதிகமாக தேங்குவதும் இல்லை.

வேளாண் வேதியல் பொருள்கள் (Agricultural chemical products)

நமது வீடுகளில் கரப்பான், கொசு போன்ற பூச்சிகளைக் கொல்ல பூச்சி மருந்துகளை (insecticides) பயன்படுத்துகின்றோம். அதுபோல வேளாண் துறையிலும் பயிர்களை நாசப்படுத்தக் கூடிய வேளாண் கூறுகள் அல்லாதவைகளை கட்டுப்படுத்த பலவிதமான உயிர்க்கொல்லிகள் (Pesticides). பூச்சிக்கொல்லிகள் (insecticides) மற்றும் களைக்கொல்லிகள் (Herbicides) போன்ற வேதியியல் பொருள்களை மருந்துகளாக பயன்படுத்துகிறோம். இவற்றை வேளாண் வேதியியல் பொருள்கள் என்று அழைக்கிறோம். சில குறிப்பிட்ட பூச்சிக்கொல்லிகள், பயிர்களை சீரழிக்கின்ற கூறுகளை அழிப்பது மட்டுமின்றி அந்த பரப்பில் காணப்படுகின்ற ஏனைய உயிரினங்களையும் அழித்து விடுகின்றன, எடுத்துக்காட்டாக DDT போன்ற உயிர்க்கொல்லிகள் உணவுச்சங்கிலி வழியாக மனிதர்களையும் சென்றடைகின்றன. இவற்றை அதிகமாக பயன்படுத்துவதற்கும் புற்றுநோய், பிறப்பு கோளாறுகள், மரபியல் நோய்கள், இனவிருத்தி குறைபாடுகள் மற்றும் இதர நீண்ட கால உடல்நலக் குறைவுகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே ஒரு வேளாண் சூழ்த்தொகுதிக்கு அளிக்கப்படும் ஆற்றல் இடுபொருட்களின் அளவைப் பொருத்து பயிர்களின் உற்பத்தி அளவு நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு வேளாண் சூழ்த்தொகுதியில் பலவகையான பயிர்கள் விளைவிக்கப்பட்டு தொலைவான மற்றொரு இடத்தில் நுகர்வதற்காக அறுவடை செய்யப்படுகின்றன. இந்த பயிர்கள் அனைத்தும் தானியங்களாகவோ மாவாகவோ, பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களாகவோ நுகரப்படுகின்றன. புவித்தொகுதியில் பல பகுதிகளில் கச்சாப்பொருள்கள் கிடைக்கின்றன. மேலும் புவித்தொகுதி வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பலவிதமான இயக்க செயல்களையும் தாங்கி நிற்கும் நிலப்பரப்பையையும் அளிக்கின்றது. இதிலிருந்து புவியும் அதன் உயிர்க்கோளமும் ஒருங்கிணைந்து பல கூட்டமைப்புகளுடன் கூடிய இயக்கத் தொகுதிகளை தோற்றுவிக்கின்றன.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியல் கல்வியியல் ஆராய்ச்சி மையம்.

Filed under:
2.9375
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top