பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / மாசுபாடு / ஒலி மாசும் அதை தீர்ப்பதற்கான வழிகளும்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஒலி மாசும் அதை தீர்ப்பதற்கான வழிகளும்

ஒலி மாசும் அதை தீர்ப்பதற்கான வழிகளும் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

இன்றைய உலகில் சுற்றுப்புறச் சூழல்கள் பல்வேறு வகையிலான மாசுக்களினால் அசுத்தம் அடைந்துள்ளது. மாசுக்களில் வளிமண்டலத்தில் பரவும் மாசு, பூமியின் நிலப்பரப்பு மற்றும் நீர் நிலைகளில் பரவும் மாசு என்று பல வகைகள் உள்ளன. இன்றைய நவீன உலகில் ஒலி மாசும் மற்ற மாசுக்களை போல் பல பிரச்சினைகளை உயிரினங்களுக்கு உண்டாக்குகிறது. இம் மாசு மனிதனின் வாழ்க்கை முறையிலும் குறிப்பிடத்தக்க அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒலி மாசின் தாக்கம் உடல் நலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று உலக சுகாதார நிறுவனமும் அறிவித்துள்ளது.

சப்தம் (Noise) என்பது விரும்பத்தகாத ஒலி. Noise என்பது லத்தின் மொழி வார்த்தையான நெளசி (Nausea) என்பதிலிருந்து தோன்றியது. இதன் பொருள் கடல் பயணத்தின்போது ஏற்படும் குமட்டல் நோய் என்பதாகும்.

அமெரிக்க தேசிய தரக் கட்டுப்பாட்டு மையம் ஒலிமாசின் விரும்பத்தகாத ஒலி அல்லது தேவையற்ற ஒலி அல்லது எந்த மதிப்பும் அற்ற ஒலி என்று வரையறுக்கச் செய்துள்ளது. ஒலி மாசுவை தேவையற்ற ஒலி அல்லது மனித இனம் மற்றும் பிற உயிரினங்களை மனரீதியாகவும் உடற்கூறு ரீதியாகவும் கடுமையாக பாதிக்கக்கூடிய சப்தம் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும், இதுவே சரியான பொருளாகவும் இருக்கும்.

ஒலி மாசுவைப் பற்றிய சில உண்மைகள்

 • அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ஒலி மாசுவினால் இரண்டு கோடியே எண்பது லட்சம் மக்களின் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.
 • ஒலி மாசு கல்வி மற்றும் மனிதனின் நடத்தையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
 • பள்ளிகளில் வகுப்பறையில் எழுப்பப்படும் கூச்சல் கூட ஒரு வகை ஒலி மாசுதான். இதனால் குழந்தைகளின் கற்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

ஒலி உயிரினங்களின் வாழ்க்கை முறையில் பல வகையில் பயன்படுகின்றன. ஒவ்வொரு வகை விலங்குகள் அதன் இருப்பிடத்தை தங்களது இனத்திற்கு தெரிவிக்கவே குரலை பயன்படுத்துகின்றன. இனப்பெருக்கத்திற்கும் சில வகை உயிரினங்கள் அதன் குரலை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றன. சில உயிரினங்கள் குறிப்பாக வெளவால்கள் அது செல்லும் பாதை, உணவு இருக்கும் இடம் ஆகியவற்றை அறிந்து கொள்ள அதிவேக ஒலி அலைகளையே பயன்படுத்துகின்றன.

மனிதன் உட்பட ஒவ்வொரு உயிரினமும் அதன் ஆபத்தை உணர்ந்து கொள்ள ஒலி முக்கியமாக பயன்படுகிறது. ஆனால், இந்த ஒலி செவியால் கேட்க முடியாத அளவுக்கு செல்லும் போது அது ஒலி மாசுவாக மாறி உடலுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. செவியின் மூலம் ஒலியை உணர்ந்து அதன் பொருளை புரிந்து கொள்ளக் கூடிய உயிரினங்களுக்குதான் குறிப்பாக மனிதனுக்குத்தான் ஒலி மாசு ஒரு பிரச்சினையாக உள்ளது.

ஒலி - ஒரு மாசுவா | (Is Noise - A Pollution)

ஒலி மாசு மனித வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒலி மாசு உடல் நலத்தை பாதிக்கும் ஒரு பிரச்சினை என்று உலக சுகாதார நிறுவனம் வரையறை செய்துள்ளது. இது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒலி மாசுபற்றி, 1971- ஆம் ஆண்டு ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனக் குழு, இது மனிதன் மனநலத்திற்கு ஒரு மாபெரும் அச்சுறுத்தல் என்று தெரிவித்தது.

சாலை போக்குவரத்து நெரிசல்கள், அதிவேக ஜெட் விமானங்கள், பழைய வாகனங்கள் சிதைக்கப்படுதல், கட்டுமான பணியில் பயன்படுத்தப்படும் வாகனங்கள், தொழிற்சாலைகள், பட்டாசு வெடித்தல், வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகளில் மிதம் மிஞ்சிய ஒலி வைத்தல் போன்றவற்றின் மூலம் ஒலி மாசு தோன்றுகின்றன. செவிக்கு தேவையற்ற இந்த ஒலிகள் தினமும் ஏராளமான அளவில் வளிமண்டலத்தில் கலக்கின்றன.

நீளம், அகலம் போன்றவற்றை அளவீடு செய்வது போல ஒலியின் கடுமையையும் அளவிட முடியும். ஒலியை அளவிடும் அளவுகோலுக்கு Decibal Scale அதாவது டெசிபல் அளவீடு என்று பெயர். ஒலி அலைகளால், காற்றின் அழுத்தத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் கடுமையை இந்த டெசிபல் அளவீடு மூலம் கணக்கிடமுடியும். அதாவது பெருக்கல், வகுத்தல் கணக்குகளை எளிமையாகச் செய்ய உள்ள சில அளவீடுகள் போன்றது இந்த டெசிபல் அளவுகோல்.

பொதுவாக பூஜ்யம் டெசிபல் கொண்ட ஒலி அழுத்தத்தை ஆரோக்கியமான இளம் காதின் மூலம் கேட்கமுடியும். ஆனால் 130 முதல் 140 டெசிபல் கொண்ட ஒலி அலைகளை செவியால் கேட்கமுடியாது. மேலும் இது போன்ற ஒலி அலைகள் செவியில் வலியை ஏற்படுத்தும். ஒலியின் தாக்கம், அது தோன்றும் இடத்தில் இருந்து தூரம் செல்ல, செல்ல குறைந்து கொண்டே வரும். திறந்த வெளியில், அருகில் ஒலியை பிரதிபலிக்கக் கூடிய தடுப்புகள் இல்லாத பட்சத்தில், ஒலியின் அளவு, தாக்கம் குறையும்.

ஒலி மாசுவின் விளைவுகள்

 • ஒலி மாசுவினால், செவியின் கேட்கும் திறன் குறையும். அதிக மன அழுத்தம் ஏற்படும். உடலில் ரத்த அழுத்தம் அதிகமாகும். தூக்கமின்மை ஏற்படும். செய்யும் பணியில் கவனம் சிதறுவதால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும். மனதில் அமைதி இல்லாத நிலை தோன்றும். பொதுவாக வாழ்க்கை முறையிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இவை தவிர கடுமையான பணியை மேற்கொள்ள மனிதனிடம் உள்ள செயல் திறனையும் ஒலி மாசு பாதிக்கும். தொடர்ந்து கவனத்துடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளும் ஒலிமாசுவினால் பாதிக்கப்படும்.
 • அதேசமயம், ஒலி, சில நேரங்களில் விழிப்புடன் பணியை மேற்கொள்ளவும் உதவி செய்கிறது. சலிப்படையச் செய்யக் கூடிய பணிகளை விட சில சமயங்களில் மென்மையான ஒலி, ஓசைக்களுக்கு இடையே சிறப்பாக செய்ய முடியும். ஒலியின் அளவு; உயிரினங்கள் கேட்கக் கூடிய அளவில் இருந்தால் அதை தொடர்ந்து கேட்க முடியும். ஆனால், ஒலியின் அளவு கடுமையாக இருந்தால், அது செவியின் உற்புறத்தில் காயத்தை ஏற்படுத்தி விடும். தொடர்ந்து 15 நிமிடங்கள் பலத்த ஒலியை கேட்க நேர்ந்தால் அது செவியை தற்காலிகமாக கேட்கும் திறனை இழக்கச் செய்து விடும். இந்த பலத்த ஒலியை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தால் அது செவியில் கேட்கும் திறனை முற்றிலுமாக பாதித்துவிடும். அதாவது காது கேட்காமலேயே போய்விடும்.
 • இசையைக் கூட அதை கேட்கக் கூடிய அளவில் வைத்துக் கேட்டால் தான் ரசிக்க முடியும். ஆனால் ஆசை மிகுந்த ஓசையுடன் கேட்டுக்கொண்டிருந்தால், காது கேட்காமலேயே போய்விடும். தொடர்ந்து பலத்த ஒலியுடன் கூடிய இசையைக் கேட்டுக் கொண்டிருந்தால் காது முற்றிலும் கேட்காமலே யே போய்விடும்.
 • அளவுக்கு அதிகமான சப்தத்தை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தால், அது தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, தூக்கமின்மையையும் ஏற்படுத்திவிடும். அத்தோடு மட்டுமின்றி, வழக்கமாக தூங்கும் நேரம், விழித்தெழும் நேரங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
 • இச்செயலுக்கு ஆரம்பகால தூக்க இடையூறு விளைவுகள் என்று பெயர். தூக்கத்தில் இருக்கும் போது எழுப்பப்படும் ஒலியால் உடற்கூறு ரீதியாக பாதிப்பு உண்டாகிறது. ரத்த அழுத்தம் அதிகமாவதோடு, இரத்தக் குழாய்கள் சுருங்குகிறது. சுவாசத்திலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

உடல்நலத்தில் ஒலி மாசுவின் தாக்கம்

மன அழுத்தத்தால் ஏற்படும் அதிக ரத்த அழுத்தம், ரத்த குழாய் சம்பந்தப்பட்ட நோய், குடற் புண், ஒற்றை தலைவலி போன்றவற்றை ஒலி மாசு அதிகப்படுத்தும். ரத்த குழாயில் ஏற்படும் நோய்களுக்கும் ஒலி மாசுக்கும் இடையில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் பெருகி வருகிறது. குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பது, எடைகுறைந்து பிறப்பதற்கும் ஒலி மாசுவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. வைரஸ் நோய்க்கிருமிகள், மற்றும் நச்சுப்பொருட்களின் தாக்கத்தை எதிர்க்கும் உடலின் எதிர்ப்பு சக்தியை ஒலிமாசு குறைக்கிறது என்றும் கருதப்படுகிறது.

ஒலிமாசு தகவல் பரிமாற்றத்தையும் பாதிக்கிறது. தகவல் பரிமாற்றத்தின் போது, செவிப்பறையைத் தாக்கும் வேறு சில ஒலிகளினாலும், தகவல் பரிமாற்றம் பாதிப்புக்கு உள்ளாகிறது. இது போன்ற சப்தங்கள், உரையாடலின்போது முக்கியமான ஒலி அலையை சில சமயம் தடுத்து விடுவதால், கருத்துப் பரிமாற்றம் தடைப்படுகிறது. இந்த சப்தங்கள் நேரடி உரையாடலை மட்டுமின்றி, தொலைபேசி உரையாடலைக் கூட பாதித்து விடுகிறது. ரேடியோ, தொலைக்காட்சிப் பெட்டிகளில், இனிய இசை ஒலிக்கும் போது, சில நேரங்களில் உண்டாகும் சத்தத்தால் இசையை கேட்க முடியாமல் போய்விடும். பள்ளிகளில் ஆசிரியர் மாணவர்களுக்கு கற்பிக்கும் போது அக்கம்பக்கத்தில் இருந்து எழும் ஒலி ஆசிரியர் மாணவருக்கு இடையேயான கருத்துப் பரிமாற்றத்தை பாதிக்கிறது.

ஒலி மாசுவினால் ஏற்படும் பிற பிரச்சினைகள்

 • ஒவ்வொருவர் வீடுகளிலும், ஏதாவது ஒரு வகையில் ஒலி எழுப்பப்படுகின்றன.
 • இது பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு இடையூறாக அமைகிறது. வீடுகளில் அளவுக்கு அதிகமான சத்தத்தில் வானொலி, தொலைக்காட்சிகளை வைப்பது வீடுகளில் நாள் முழுவதும் நாய் குரைப்பது சில வகையான ஒலிகள், பலருக்கு அனுபவிக்கும் வகையில் இருந்தாலும், அது பிறரால் தாங்கிக் கொள்ள முடியாததாகவும் உள்ளது. அதாவது, ஒருவர் சத்தமாக கேட்கும் இசை, அடுத்தவருக்கு, அது ஒலி மாசுவாக இருக்கும்.
 • நவீன உலகின் புதிய கண்டுபிடிப்புக்களான நவீன இசை ஒலிப்பான்கள், பல வகைகளில் ஒலி மாசு சம்பந்தமான பிரச்சினைகளை எழுப்புகிறது.
 • இன்றைய இளைய தலைமுறையினர், வானொலி தொலைக்காட்சிகளில் குறைந்த அலை வரிசையில் அதிக ஓசையுடன் கூடிய இசையைக் கேட்பதையே விரும்புகின்றனர். இதுகூட ஒரு வகையில், ஒலி மாசுதான். இது அண்டை வீட்டாருக்கும் பிரச்சினை ஏற்படுத்தும். - நாளுக்கு நாள் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரித்து வருவதாலும், நகரங்கள் அபரிமிதமாக வளர்ச்சியடைந்து, விரிந்து கொண்டே போவதாலும், ஒலி மாசு பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு, முற்றிலும் தீர்வுகாண, ஒலி மாசுவை கட்டுப்படுத்த வேண்டும். அதோடு, விரும்பத்தகாத ஒலிகளை பயன்படுத்தக்கூடாது.
 • அமெரிக்காவில், ஒலி மாசுவைக் கட்டுப்படுத்த, அந்நாட்டு நாடாளுமன்றம் "ஒலிமாசு கட்டுப்பாட்டுத் திட்டம் ஒன்றை கொண்டுவந்தது. இந்தத் திட்டத்தின் படி பொது மக்களுக்கும், உள்ளூர் நீதிமன்றங்களுக்கும், ஒலி மாசு பற்றி, தொழில்நுட்ப ரீதியாக உதவிகளை செய்ய முடியும்.

தனிநபர் மற்றும் அரசு நிறுவனங்களின் குறிப்பிட்ட வேண்டுகோளுக்கு இணங்க, ஒலி மாசுப் பிரச்சினையால் இந்தத் திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். இதற்கு கீழ்கண்ட நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

 1. ஒலி மாசு சம்பந்தமாக ஒரு குறிப்பிட்ட நபருக்கு எதிராக வந்த புகார் குறித்து, பிரச்சினையை விளக்கி அவருக்கு முறைப்படி கடிதம் எழுத வேண்டும். அதே சமயம், புகார் கொடுத்தவரின் பெயர் ரகசியமாக வைக்கப்பட வேண்டும்.
 2. ஒலி மாசுவினால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு குறிப்பேட்டில் எப்போதெல்லாம் ஒலி மாசு ஏற்படுகிறது, அது எவ்வாறு அவர்களைப் பாதிக்கிறது என்பதை குறித்து வைக்க வேண்டும்.
 3. மக்கள் வசிக்கும் இடங்களில் ஒலிமாசுவை கண்காணிக்கும் உபகரணங்களை அமைக்க வேண்டும்.
 4. ஒலி மாசுவின் தாக்கம் உள்ள போது, அதிகாரிகள் அதைப் பார்வையிட்டு, அதன் தாக்கம் குறித்து மதிப்பிட வேண்டும்.
 5. ஒலி மாசு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அதைக் குறைப்பதற்கு, சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
 6. எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியும் ஒலிமாசுவைக் குறைக்க சம்பந்தப்பட்ட நபர் நடவடிக்கை எடுக்காவிட்டால், மீண்டும் ஒருமுறை, அதிகாரிகள் அந்த இடத்திற்குச் சென்று அதனை மதிப்பிட வேண்டும்.
 7. பின்னர் அந்த நபரிடம் உள்ள ஒலி மாசுவை ஏற்படுத்தும் உபகரணங்களை பறிமுதல் செய்ய அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.
 8. இறுதிக் கட்டமாக, ஒலிமாசு கட்டுப்பாட்டு சட்டத்தில், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும்.
 9. நீதிமன்றம் விசாரணை நடத்தி, புகாருக்கு உள்ளானவருக்கு அபராதம் விதிப்பதோடு, ஒலிமாசு ஏற்பட காரணமான உபகரணத்தைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிடமுடியும்.

வளர்ந்த நாடுகள்

 • இந்தியா போன்ற பல வளரும் நாடுகள், ஒலிமாசுவை ஒரு சுற்றுச்சூழல் பிரச்சினையாக பார்ப்பதைவிட, இது மக்களுக்கு ஒரு பெரும் இடையூறு என்ற கோணத்திலேயே பார்க்கின்றன. இதுபோன்ற அணுகுமுறையினால் ஒலி மாசுவை கட்டுப்படுத்தும் பல நெறிமுறைகள் இன்னமும் உள்ளாட்சி அமைப்புக்களிடமே உள்ளது.
 • உள்ளாட்சி அமைப்புகளின் ஒலி மாசுவை கட்டுப்படுத்தும் சட்டங்கள், அவசர சட்டங்களில் பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. உண்மையாகச் சொல்லப் போனால் பல நகரங்களில் ஒலி மாசுவைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் நடைமுறையில் இல்லை. பல உள்ளாட்சி அமைப்புக்களிடம், ஒலி மாசு சம்பந்தமான புகார்களை விசாரித்து, நடவடிக்கை எடுக்க போதுமான நிதி வசதிகள் கூட கிடையாது.

சில உள்ளாட்சி அமைப்புக்களில் ஒலிமாசுவைக் கட்டுப்படுத்தும், விதிமுறைகள்

செயல்பாட்டில் இருந்தாலும், அது பற்றி செய்வதோடு விட்டு விடுகிறார்கள். விதியை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை நடவடிக்கை எடுக்க செலவு அதிகம் ஆகும் என்பதால் நடவடிக்கை எடுப்பதில்லை .

காவல்துறையினர் ஒலி மாசு பற்றிய சில புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அவர்களும் இதற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. தொடர்ந்து ஒலி மாசுவினால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்கள், சிவில் நீதிமன்றங்களை அணுகி நஷ்டஈடு கோரலாம். ஆனால், இதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கு நீண்டகாலம் பிடிக்கும் என்பதோடு அதிக செலவும் ஆகும். பொதுவாக, ஒலி மாசுவைக் கட்டுப்படுத்த, தேவையான சட்டப்பாதுகாப்பு, வளரும் நாடுகளில் போதுமானதாக இல்லை.

ஒலிமாசுவில் இருந்து பாதுகாப்பு தொழிற்சாலை பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் கடுமையான சத்தத்தில் இருந்து, செவியைப் பாதுகாக்க கவச உறைகளை அணிய வேண்டும்.

பெரிய இசைக் கச்சேரிகளுக்கு செல்லும் போது, காது அடைப்பான்களைப் பொருத்திக் கொள்ள வேண்டும்.

தலையில் அணியும் ஹெட்போன் (Head Phone) மூலம் இசையைக் கேட்கலாம் என்றாலும், அதிலிருந்து வரும் ஒலி கேட்கக்கூடிய அளவில் மட்டும் இருத்தல் வேண்டும். மற்றும், இவ்வாறு இசையைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது, அவ்வப் போது இடைவெளி இருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து Head Phone மூலமாக இசையைக் கேட்டு வந்தால், அது செவியின் கேட்கும் திறனை பாதித்துவிடும். வீடுகளில் மின் சாதனங்கள் மிக்சி போன்றவற்றின் மூலம் எழுப்பப்படும் ஒலி கூட கேட்கும் திறனில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒலி மாசுவில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான சில குறிப்புகள்

 1. ஒலி மாசுவுக்கு எதிராக சமுதாய குழுக்களை ஏற்படுத்த வேண்டும்
 2. அதிக ஒலி உள்ள இடங்களில், காதடைப்பானை (Ear Plug) பயன்படுத்த வேண்டும்.
 3. வீட்டில் ஓய்வு எடுக்கும் போது, சத்தம் வரும் பகுதியில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

வீட்டில் ஒலி மாசுவைக் கட்டுப்படுத்த சில வழிகள்

 1. ஜன்னல்களில் தடிமனான திரைச்சீலைகளை பயன்படுத்த வேண்டும்
 2. வீட்டின் மேற்கூரை, சுவர்கள், மற்றும் தரையில் ஒலியை தடுக்கும் ஒடுகளைப் பயன்படுத்த வேண்டும்.
 3. வெளியில் இருந்து வரும் ஓசைகள்/ இரைச்சல்களைத் தடுக்க, வீட்டில் உள்ள சிறு, சிறு துவாரங்களை அடைக்க வேண்டும்.
 4. வானொலி, தொலைக்காட்சிகளில் ஒலியை குறைவாக வைத்து நிகழ்ச்சிகளைக் கேட்க வேண்டும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

Filed under:
3.0
சரவணன் Apr 16, 2020 11:59 PM

ஜயா வணக்கம், எங்கள் ஊர் குக்கிராமத்தில் அமைந்துள்ளது எங்கள் வீட்டு முன்பு மருந்து கம்பெனி அனுமதி வழங்கப்பட்டுள்ளது அந்த கம்பெனியில் இருந்து அதிகபடியான ஒலி மாசு,காற்று மாசு, அதிகபட்சமாக உள்ளது, இதன் சம்பந்தமாக மனு அளித்தும் முறையாக விசாரணை செய்ய வில்லை இதனால் அதிகப்படியான மன உடைச்சல் தூக்கமின்மை ஏற்பட்டுள்ளது .ஜயா தீர்வுகாண வேண்டும் வழிமுறைகள் கூருங்கள் ஐயா.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top